Skip to main content

நெருடிய நெருஞ்சி-25






பஸ் மட்டுநிறுத்தியதும் எனக்கும் முகத்தில் கலவரரேகைகள் என் முகத்தில் எட்டிப்பார்க்கக் கொடுக்குக் கட்டின . நான் அணிந்திருந்த கருங்கண்ணாடி அவைகளை ஓரளவு மறைத்துக் கொண்டிருந்தது . பஸ்சினுள் ஏறிய படைவீரன் , எல்லோரையும் இறங்கி சோதனைச்சாவடிக்குப் போகச்சொல்ல முதலே , நானும் மனைவியும் எமது முக்கிய கோப்புகளை எடுத்துக்கொண்டு பஸ் நடத்துனருடன் சோதனைச் சாவடியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.அங்கே அடையாளத்தைத் தொலைத்தவர்களிடம் அடையாளம் பார்பதற்காக பச்சை உடைகள் இருந்தார்கள் . மக்கள் வரிசைகட்டி நின்றார்கள் . ஒருவேளை இவர்களுக்கு வரிசைகட்டி நின்று பழகிவிட்டதோ . மக்கள் வரிசை சிற்ரெறும்பாக ஊர்ந்தது . எனக்கு வெய்யில் வெக்கையும் , மனவெக்கையும் , சேர்ந்து உடல் கொதித்தது . எங்களை ஏற்றி வந்த பஸ் சோதனைச் சாவடியின் மறுபக்கம் போய் , வவுனியா போகும் பக்கம் தனது முகத்தைத் திருப்பியவாறு நின்றது . எங்கள் முறை வந்ததும் என் மனைவி தனது எம்ஓடி பாஸ் ஐக் காட்டிவிட்டு பாதுகாப்பு சோதனைக்குப் போய்விட்டா . நான் எனது கடவுச்சீட்டையும் , எம்ஓடி பாஸ் ஐயும் கொடுத்தேன் . அந்த அதிகாரி எனது கடவுச்சீட்டை நோண்டுவதிலேயே குறியாக இருந்தான் . இவன் எனது கடவுச்சீட்டில் பூராயம் பார்த்துக்கொண்டிருக்க , எமது பஸ் என்னை விட்டு விட்டு ஓடி கண்டிவீதியில் தாவியது . நான் கோபத்தில் அந்த அதிகாரியிடம் பஸ வெளிக்கிடுவதை சொல்லி என்னை விடும்படி சொன்னேன் . அவனோ வீதி தடையில் நின்ற மந்திக்கு பஸ்சை நிப்பாட்டும்படி தொலைதொடர்புக் கருவியால் செய்தி அனுப்பினான் . பஸ்சினுள் மனைவியும் , இங்கு நானும் அல்லாதுப் பட்டோம் . ஒருவாறு எனது பாதுகாப்பு பரிசோதனைகளை முடித்துக்கொண்டு நொந்த மனதுடன் பஸ்சை நோக்கி நடந்தேன் . எல்லோரும் என்னையே பார்த்தார்கள் . இதே மண்ணில் பிறந்து வளர்ந்து , வெளிநாட்டுக்காறன் என்ற முத்திரையுடன் பஸ்சைநோக்கி மனம் முட்ட வலியுடன் விரைந்தேன் . அங்கு நான் முன்பு கொழும்பில் இருந்து வந்தபொழுது , அந்த தனியார் பஸ்சில் இருந்த எல்லோரும் வெறுப்புடன் பார்த்தது போல் இல்லாமல் , இந்த பஸ்சில் எல்லோரும் அனுதாபத்துடன்,

"ஏதும் பிரச்சனையே தம்பி "?

என்று கேட்டார்கள் . நான் சிரிப்புடன் அவர்களை மினைக்கெடுத்தியதிற்கு மன்னிப்புக் கேட்டவாறே , எனது இருக்கையில் இருந்தேன் . எனக்கு நாக்கு வறட்டியது . மனைவியிடம் இருந்த தண்ணிப் போத்தலை வாங்கி வாயில் கவிட்டேன் . பஸ்சும் இந்தக் கிரகங்களின் பிடியில் இருந்து விடுபட்ட புழுகத்தில் கண்டி வீதியில் கடுகியது . பஸ்சினுள் மீண்டும் எண்பதுகள் ஒலிக்கத்தொடங்கியது . என்மனம் அதில் லயிக்கவில்லை எனது கண்கள் என் மண்ணைக் களவெடுத்தது . வீதியின் இருமருங்கிலும் கண்ணுக்கெட்டியதூரம் வரை வறண்ட பூமியில் சிறு சிறு திட்டுக்களாகப் பசுமை எட்டிப்பார்த்தது.எல்லோருக்குமே உலை பொங்கப்பண்ணிய பூமி இன்று மீட்பாரின்றி அனாதையாக நின்ற காட்சி என்னுள் ஏதோ செய்தது . ஓருகாலத்தில் வேலையற்றோருக்கான ஐந்தேக்கர் திட்டத்தில் ஒருசிலரே ஆர்வப்பட்டார்கள் . வெள்ளை உடுப்புகளின் வழித்தோன்றல்களான தாங்கள் காடுகள் வழியே போய் கஸ்ரப்படுவதா என்ற மிதப்பு . அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் , வன்னியின் மைந்தர்களுமே எல்லையில் இருந்த காட்டைக் களனியாக்கி சிங்கங்களின் சீண்டலுக்கும் பதில் சொல்லி , மற்றையவர்களையும் வாழவைத்தார்கள் . ஆனால் இன்று அந்த மைந்தர்களையே வியாபாரப்பொருளாகவும் , காட்சிப்பொருளாகவும் , மாற்றியவர்களை நினைக்க , எரிகின்ற மனதிற்கு விறகு எடுத்து வைத்த மாதிரி இருந்தது . பஸ் வவுனியாவை நெருங்குவறகு அறிகுறியாக வீதியின் இருபக்கமும் அடர்ந்த குடிமனைகள் போட்டி போட்டு முத்தமிட்டன . நானும் அவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு வந்தேன் . எனது உடைகள் வியர்வையினால் மணக்கத்தோடங்கினாலும் , மண்ணின் வெக்கை தந்த மணமானதால் அது எனக்கு சந்தோசத்தையே தந்தது . பஸ்சில் இருந்தவர்கள் தாங்கள் இறங்குவதற்கு இப்போதே ஆயத்தப்படுத்தத் தொடங்கி விட்டார்கள் . எனக்கு அவர்களின் பரபரப்பு வேடிக்கையாக இருந்தது . பஸ் நகருக்குள் வந்தாலும் தனது குணத்தை நிப்பாட்டவில்லை . நகரின் மையத்தைத் தொட்டு , அதனூடே ஊடறத்து மிதந்து வவுனியா பஸ் நிலையத்தில் தன்னை நிறுத்தும்பொழுது நேரம் பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது . நெருப்புக்கோளம் தலைமீது ஏறி அனலைக் கக்கியதால் , உடம்பில் வியர்வை மழை பெருக்கெடுத்தோடியது . நாங்கள் இறங்கியதும் எங்கள் அருகே ஓட்டோ ஒன்று வந்து நின்றது . அதை ஓட்டிவந்தவர் சின்னக்காவின் மகனைப் பள்ளிக்கூடம் ஏற்றுபவர் . யாழ்பாணத்தில் நன்றாகப்படித்து நல்ல நிலையில் இருந்த அவர் , இடப்பெயர்வினால் அல்லல் பட்டு வவுனியா வந்திருந்தார் . வவுனியாவில் அவர் கௌரவம் பார்க்காது கிடைத்ததைக்கொண்டு ஓட்டோ வாங்கி ஓடிய அவரது உளப்பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது . எங்களை ஏற்றிக் கொண்டு ஓட்டோ அக்காவின் வீட்டிற்குப் போனது .வவுனியாவின் பரபரப்பில்லிருந்து சற்றே விலகி அக்கா இருக்கும் வீட்டிற்கு ஓட்டோ வேகமெடுத்தது . வீதியின் இருபக்கத்து வீட்டு மதில்களின் பின்பு மயில்கொன்றை , போகைன் வீலா , அலரி ,மற்றும் நொச்சி பூக்களும் அணிவகுத்து நின்றன .நாங்கள் அக்கா வீட்டை அடைந்தபொழுது , எனது மருமகன் பள்ளிக்கூடத்தால் வந்திருந்தான் . ஓடிவந்து மாமா என்றவாறே என்னைக் கட்டிக்கொண்டான் .

அக்காவின் அன்பும் சந்தோசமும் முகத்தில் தெரிந்தது . நான் அக்கா தந்த கோப்பியுடன் வீட்டிற்குப் பின்பக்கம் சிகரட்டுடன் போனேன் .அங்கு மாவும் , தென்னைகளும் வெய்யிலுக்கு நிழல் பரப்பி இருந்தன . மாமரத்தில் மாங்காய்கள் பெரிய அளவில் காய்த்துக் குலைகளாக தொங்கின பாரம் தாங்குவதற்காக அக்கா ஒரு தடியால் அவைகளுக்கு முண்டு கொடுத்து வைத்திருந்தா . முன்பு நான் கண்ட தூக்கணாங் குருவிக்கூட்டில் நான்கு புதுவரவுகளால் அந்தப்பகுதி கிலுமுலுவென்று சங்கீதமேடையாக இருந்தது . அம்மா அப்பா குருவிகள் இரையைக் கொண்டு வருவதும் போவதுமாக இருந்தன . இந்தக் குஞ்சுகளக்காவது அப்பா அம்மா இருக்கின்றார்கள் . ஆனால் , இப்ப எங்களுக்கு....... நான் சிகரட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டேன் . வீட்டு மதிலைத் தாண்டிப் பரந்து விரிந்திருந்த இரம்பைக்குளத்தினால் காற்று சிறிது குளிர்சியாக வந்தது . அதன் சிறிய அலைகள் மெதுவாகக் கேட்டன . அக்கா சாப்பிடவரும்படி கூப்பிட்ட குரல் என்னைக் கலைத்தது . நான் குளிப்பதற்கு குளியலறைக்குள் உள்ளட்டேன் . எனக்குப் பருத்தித்துறையில் கடைத்த கிணற்றுக் குளியல் இங்கு இல்லை . நாகரீகமான காகக் குளியல் எனக்கு வெறுப்பாக வந்தது . நான் கொண்டுவந்த சாம்பல் புழுதியும் நான் குளிக்கும்பொழுது , சொல்லாமல் சொல்லி என்னிடமிருந்து விடைபெற்றது . நான் வெளிக்கிட்டு சாப்பிட வெளியில் வரும் பொழுது , அங்கே மேசையில் எனது இரண்டு அத்தான்களும் எனக்காகச் சாப்பிடக் காத்திருந்தார்கள் . அக்கா என்மீது உள்ள அன்பைச் சாப்பாட்டில்க் காட்டி மேசையெங்கும் பரத்தியிருந்தா . அங்கு எனது விருப்பமான பன்குளம் முட்டித்தயிரும் காத்திருந்தது . நான் குறைவாகச் சாப்பிட்டு முட்டித்தயிரை சீனியுடன் சேர்த்து முட்டக் குடித்தேன் . சாப்பிட்டு முடிந்தவுடன் எல்லோரும் வீட்டு முன் போர்ட்டிக்கோவில் இருந்து பல கதைகளைக் கதைத்த பொழுது எனக்கு நித்திரை சொக்கியது . நான் மனைவியை அவர்களிடம் கதைக்க விட்டு விட்டுப் போய்ப் படுத்துக் கொண்டேன் . விடிய எழும்பி பஸ்சில் வந்த களைப்பு என்னை விரைவிலேயே கனவு நிலைக்குக் கொண்டு போய் விட்டது . என் கனவில் நான் கண்ட இடங்களும் , மனிதர்களும் , மீண்டும் நலம் விசாரித்தார்கள் .

மாலை நான்கு மணியளவில் விழிப்பு நிலைக்கு வந்த நான் , மீண்டும் முகங்கழுவி என்னைப் புத்தணர்வு நிலைக்கு எடுத்துக்கொண்டேன் . நான் குசினிக்குள் போய் அக்கா போட்டுத் தந்த தேத்தண்ணியை எடுத்துக்கொண்டு , எமது அன்றய இரவு பயணம் சம்பந்தமாகப் பேச்சுக் கொடுத்தேன் . தான் அன்று இரவு யாழ் தேவியில் முதலாம் வகுப்பில் கொழும்புக்கு இரண்டு இடம் பதிவு செய்திருப்பதாக அக்கா சொன்னா . எனக்கு கடைசியாக பக்கத்தில் இருந்த இறம்பைக் குளத்திற்குப் போகவேண்டும் போல இருந்தது . எனது மருமகனைக் கூட்டிக் கொண்டு குளத்திற்கு நடையைக் கட்டினேன் . மருமகனும் எனக்கு வழிகாட்டும் புழுகத்தில் என்னுடன் கூட நடந்தான் . வழியில் தனது பள்ளிக்கூடக் கதைகளைக் கதைத்தவாறே என்னுடன் அவன் நடந்தான் . இடையில் நின்ற அவன் , றோட்டில் இரண்டு மூன்று கல்லுகளைப் பொறுக்கத் தொடங்கினான் . நான் என்ன என்பது போலப்பார்த்தேன் . அவன் ,

"அங்கை பாருங்கோ மாமா , இவைக்கு இண்டைக்கு ஒரு வழிபண்ணவேணும்".

அவன் காட்டிய திசையில் எனது கண்கள் அளவெடுத்தது . அங்கே , ஒரு வேலியின் பின்னால் இருந்த சீமைக்கிழுவை மரக்கொப்பில் ஓர் அழகான பெரிய தேன் வதை தொங்கியது . அதில் இருந்த தேன் வெய்யில் வெளிச்சத்தில் மின்னியது . தேனீக்கள் வருவதும் போவதுமாக தமது வேலையில் கண்ணுங்கருத்துமாக இருந்தன . நான் அவனை கல்லால் எறியவேண்டாம் என்று தடுத்தேன் .

"ஏன் மாமா ?"

அவனது குரலில் ஏமாற்றம் தெரிந்தது .

"நீ இப்பிடியோரு வீடு கட்டுவியா ?"

"இல்லை மாமா . மண்ணில கட்டுவன் அது உடைஞ்சுபோகும்".

"இந்த தேனியள் எவ்வளவு கஸ்ரப்பட்டு இந்த வீட்டை கட்டுது . ஒவ்வொரு சின்ன அறைக்கையும் தாங்கள் எடுத்த தேனை கொண்டுவந்து வைக்கினம் . அங்கை பார் தேன் எப்பிடி மின்னுது எண்டு . இப்ப நீ கல்லாலை எறிஞ்சியெண்டால் , அவையள் கோபத்தில உன்னைக் குத்திப் போடுவினம் . உப்பிடித் தான் நாங்களும் ஒரு நல்ல பெரிய தேன்கூடு கட்டின்னாங்கள் . பெரிய கறடியள் எல்லாம் ஒண்டாய் வந்து எங்கடை தேன்கூட்டை கலைச்சு, தேனையும் குடிச்சுப் போட்டுதுகள் . இப்ப தேன் கூடும் இல்லை . தேனும் இல்லை ".

அவன் விளங்கியமாதிரி ,

" நீங்கள் மாமா ஆமி எங்களுக்கு அடிச்ச கதையைத்தானே சொல்லுறியள் ".

நான் அவனை அணைத்தவாறே குளத்திற்கு போக முயற்சித்தேன் . சிறுவனாக இருந்தாலும் அவனது மனதையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை . சிறிது தூரம் நாங்கள் போனதும் ,

"மாமா இதிலை நில்லுங்கோ , உடனை வாறன் ".

என்றவாறே , ஒரு வீட்டினுள் ஓடினான் . அந்த வீட்டில் அவனது வயதை ஒத்த பல பிள்ளைகள் விழையாடிக்கொண்டிருந்தனர் . நான் வீட்டின் முகப்பைப் பார்த்தேன் < முல்லை சிறுவர் காப்பகம் > என்று பெயர்பலகை போட்டிருந்தது . மருமகன் ஒரு சின்னப்பெடியனுடனும் , பெட்டையுடனும் என்னைக் காட்டியவாறே கதைத்துக் கொண்டிருந்தான் . நான் அவனைக் கூப்பிட்டதும் , அவர்கள் கையில் எதையோ திணித்து விட்டு ஓடிவந்தான் .

"என்னடா அவையோடை கதைச்சனி "?

அது மாமா , அவை என்னோடை படிக்கிறவை . உங்களுக்கு தெரியுமே ? அவைன்ர அம்மா அப்பாவை ஆமிக்காறன் முல்லைத்தீவில சுட்டுப்போட்டான் . எங்கடை அம்மாவும் , அப்பாவும் இவையளை இங்கை விட்டு படிப்பிக்கினம் . நான் ஒவ்வொரு நாழும் எனக்கு கிடைக்கிறதை இவைக்கும் கொண்டு வந்து தாறனான் . இண்டைக்கு நீங்கள் தந்த ரொபியள் கொண்டு வந்து குடுத்தன். என்றான் சிரித்தவாறே நாங்கள் இருவரும் கதைத்தவாறே குளைத்தை அடைந்தோம் . என்னுடன் குளத்து அணைக்கட்டில் ஏற மருமகன் கஸ்ரப்பட்டான் . நான் அவனைத் தூக்கிக் கொண்ட்டு ஏறினேன் . நான் அங்கே போனபொழுது என் கண் முன்னே இறம்பைக் குளம் அகன்று விரிந்து பரந்திருந்தது . குளத்தின் நடுவே இருந்த மண் புட்டிகளில் வாத்துகள் சில ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன . சில பரந்த நீரில் மிதந்தன . தூரத்தே வானத்தின் முகம் வெட்கத்தால் சிவந்து கொண்டிருந்தது . குளத்தின் நடுவே மொட்டையான மரங்கள் வானத்தை நோக்கி நீட்டிக்கொண்டு இருந்தன , எனது மக்களைப்போல . எங்கிருந்தோ வந்த நாரையொன்று சர்ர்ர் என்று தலைகீழாக வந்து நீரில் மூழ்கி எழும்பியபோது , அதன் வாயில் ஒரு மீன் ஒன்று துடித்துக் கொண்டிருந்தது . மருமகன் வாயைப் பிழந்து பாத்துக் கொண்டிருந்தான் . சிறிது தூரம் தள்ளி கட்டில் இருந்து இறங்கி சில எருமைகள் இறங்கித் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தன . இருள் மங்கியதால் அவை சிறு கருங்குன்றுகளாகவே தென்பட்டன . மருமகன் போவதற்கு அரையண்டப்படுத்தவே , அரைமனதுடன் குளத்தை நிதானமாகப் பார்த்துக் குளக்கட்டில் இருந்து அவனுடன் இறங்கி வீடு நோக்கி நடந்தேன் . நாங்கள் வீட்டை அடைந்தபொழுது நன்றாக இருட்டிவிட்டிருந்தது . இரண்டாவது அக்கா கேற் வாசலில் எங்களைப் பாத்துக்கொண்டு நின்றா .

நான் வீட்டினுள் நுளைந்த பொழுது தோசையின் வாசம் மூக்கைத் துளைத்தது . நான் பினபக்கம் போய் முகம் கழுவி வந்தபொழுது , அக்கா தேத்தண்ணி வந்து எடுக்கும்படி குசினிக்குள் நின்று குரல்தந்தா . நான் தேத்தண்ணியைப் போய் எடுத்துக்கொண்டு போர்ட்டிக்கோவில் வந்து இருந்தேன் . எனது மனைவி பயணப் பொதிகளை எல்லாம் போர்ட்டிக்கோவில் அடுக்கி வைத்திருந்தா . நன்றாக இருட்டியதால் வெளிச்சத்திற்கு ஈசல்களும் , மின்னி மின்னிப் பூச்சிகளும் பறந்து திரிந்தன . சிறிது நேரம் எல்லோரும் குடும்பக்கதைகளை இரைமீட்டிக்கொண்டிருந்தோம் . நேரம் ஒன்பது மணியைக் கடந்து கொண்டிருந்தது . மருமகன் களைப்பால் நித்திரையாகி விட்டிருந்தான் . எங்களுக்குப் பத்தரைக்குப் புகையிரதம் என்றபடியால் நானும் மனைவியும் வெளிக்கிட்டுக்கொண்டு சாப்பிட இருந்தோம் . சிவப்புச் சம்பலில் உறைப்புத் தூக்கியது . மனது கனத்ததால் , நாலு தோசைக்கு மேல் இடங்கொடாது வயிறும் கனத்தது . நாங்கள் கதைத்துக் கொண்டிருந்தபொழுது எங்களை ஏற்ற ஓட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது . நான் பயணப் பொதிகளை ஓட்டோவுக்குள் வைத்துவிட்டு எல்லோருடனும் விடைபெற்றேன் . அக்கா என்னைக் கட்டிப்பிடித்து ,

"அடுத்த வரியமும் வா , என்ன "?

என்று கண்ணீருடன் சொன்னா . நான் கலங்கிய முகத்தைத் திருப்பிக் கொண்டேன் . ஒட்டோ எங்களை ஏற்றிக்கொண்டு புகையிரத நிலையத்திற்கு விரைந்தது . எங்களுக்குப் பின்னால் இரண்டு அத்தான்களும் தங்கள் மோட்டசைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர் . சிறிது நேரத்தில் எங்கள் படையணி வவுனியா புகையிரத நிலையத்தினுள் நுளைந்தது .






December 07, 2011 

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...