Skip to main content

நெருடிய நெருஞ்சி-19




அன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் பஸ் தூங்கி வழிந்தது . நானும் மனைவியும் பஸ்சின் முன்னே சென்று முன்பகுதி சீற்ரில் இருந்தோம் . எனது மச்சினிச்சியும் பிள்ளைகளும் எமக்கு அடுத்த சீற்ரில் இருந்தார்கள் . பஸ் ஆளில்லாத பரித்தித்துறை வீதியில் தனிக்காட்டு றாஜாவாக மூசிப் பாய்ந்தது . வழக்கம் போலவே தேர்ந்த பாடல்கள் பஸ்சை நிரவின . எனக்கு என்றும் இல்லாதவாறு மனமும் உடலும் களைத்து , நித்திரையைக் கடன் கேட்டுக் கொண்டு இருந்தது . நான் மெது மெதுவாக நித்திரையிடம் மண்டியிட்டேன் . பலவிதமான கனவுகள் சம்பந்தமில்லாமல் மெதுவாக எட்டிப்பார்த்தன . மூசிக்கொண்டு சென்ற பஸ் திடீரென தனது வேகத்தைக் குறைத்து தன்னை நிறுத்தியதும் , கனவில் மிதந்த எனது மனது நிஜத்தில் தொப்பென்று விழுந்தது. நேரம் மாலை 4 மணியைக் கடந்து இருந்தது . பஸ்சில் வந்தவர்கள் எல்லோரும் இறங்குவதில் கிளித்தட்டு விளையாடினார்கள் . நாங்கள் எல்லோரும் இறங்கும்வரை காத்திருந்து விட்டு இறங்கினோம் . என்முகத்தில் கடல் காத்து பட்டு வெக்கையைக் குறைக்க முயன்றது . பரித்தித்துறை பஸ்நிலையம் அன்று அமைதியாகவே இருந்தது . நாங்கள் எல்லோரும் அம்மன் கோயிலடி றோட்டால் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினோம் . எனது பெறாமகன் எனது கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தான்.நாங்கள் இருவரும் முன்னே நடக்க , மற்ரயவர்கள் எமக்குப் பின்னே வந்தார்கள் . வீதியில் தோசை அப்பம் வியாபாரம் சூடுபிடித்திருந்தது . அப்பம் , தோசையின் வாசம் வீதியெங்கும் நிறைந்திருந்தது . கல்லூரி வீதி கழிய வந்த ஒழங்கைக்கு றோட்டுப்போட சல்லிக்கல்லுகள் பரவியிருந்தார்கள் . யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான அவசரக்கோலங்களாக அவை இருந்தன . எங்களுக்குச் சல்லிக் கல்லின் ஊடாக நடப்பது சிரமமாக இருந்தது . ஓடக்கரை தாண்டச் சாதாரண ஒழுங்கை வந்தது . வீட்டு வாசல்களில் பெண்கள் முகத்திற்குப் பவுடர் பூசிப் பூராயம் பேசிக் கொண்டிருந்தார்கள் . நாங்கள் எல்லோரும் வியர்த்து ஒழுக , ஒழுக வீட்டை அடைந்தோம் . எங்களைக் கண்ட புழுகத்தில் எங்கள் வீட்டு நாய் பிள்ளைகளின் மீது புரண்டு விளையாடியது . நான் முகத்தைக்கழுவி உடுப்பை மாற்ரிக்கொண்டு எங்கள் வீட்டின் முன்னால் இருந்து கொண்டேன் . அன்ரியும் , மாமாவும் நிலத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள் . அன்ரி பாக்கு உரலில் வெத்திலை , பாக்கைப் போட்டு இடித்துக் கொண்டிருந்தா . மாமி நான் கேட்காமலேயே பிளேன் ரீயும் , பரித்தித்துறை வடையும் கொண்டு வந்து தந்தா . எனக்கு இருந்த தலையிடிக்குப் பிளேன் ரீ இதமாகவே இருந்தது . இரவுச் சமையலுக்கான அடுக்குகள் மாலின் ஊடே வந்த புகையில் தெரிந்தது . நான் பிளேன் ரீ ஐ அனுபவித்துக் குடித்தேன் பறுக்கும் ரீ புகையினூடே எனது மன வெக்கையும் சிறிது சிறிதாகக் கரைந்து என் மனது இயல்பு நிலைக்குத் திரும்பியது . அன்ரி வெத்திலையை இடித்து முடிந்து குழைவான வெத்திலையை இரு சகோதரங்களுக்கும் கொடுத்து தானும் போட்டுக் கொண்டிருந்தா . மாமா தொண்டையைச் செருமிக் கொண்டே ,

"ஏன் தம்பி போன கையோட திரும்பீட்டிங்கள் , நிண்டு ஆறுதலா வரலாம் தானே " ?

"இல்லை மாமா நீங்கள் இங்கை மூண்டுபேரும் தனிய , எனக்கு அங்கை அம்மா இல்லாத வீட்டைப் பாக்கேலாமல் கிடக்கு ".

"நீங்கள் அப்பிடிச் சொல்லக்கூடாது , அவைக்கு நீங்கள் தானே ஆறுதல் ".

"ஏன் மாமா இந்த சுப்பர்மடம் சுனாமி வீடமைப்பு திட்டம் வீடுகள் எல்லாம் ஒடக்கரைக்கை கிடக்கு ". கிடக்கு ? கடல் அங்கை வர வந்ததோ ? எனக்கு தெரிஞ்சு சுப்பர்மடம் கரையில அல்லோ

நான் பேச்சை மாற்ரினேன்

"ஓ...... ஓ...... அது பெரய கதை உங்களுக்குத் தெரியாது . முந்தித் தம்பசிட்டியார் கரைப்பக்கத்தில போய் கெஸ்ற் கவுஸ் கட்டியிருந்தவை . இப்ப மாறி சுப்பர் மடத்தாக்கள் சுனாமியைச் சாட்டி இங்கை கெஸ்ற் கவுஸ் கட்டீட்டினம் ".

என்றார் சிரித்தவாறே ,

"அப்ப தண்ணி சுபர்மடம் மட்டுமே வந்தது ? ஓ........ ஒ...........அதிலையும் , விடுப்புப் பாக்கப் போனதுகள் தான் அல்லாதுப் பட்டதுகள் . அது கனகதையள் சொல்லியடங்காது ".

மாமாவுடன் பகிடியாகக் பம்பல் அடித்ததும் , அவரின் விகற்பமில்லாத கதையளும் எனது மனதைப் பஞ்சாக்கின . மாலின் ஊடாக வந்த புகையின் ஊடாக உப்புமா வாசம் மூக்கைத் துளைத்தது . இந்தியா மச்சினிச்சி தன்ரை வித்தையைக் காட்டுறா என்று ஊகித்துக் கொண்டேன் . பிள்ளைகள் தகப்பனுடன் சுட்டி ரீவீ க்குக் கட்டிப் புரண்டார்கள் . முழு நிலவு தங்கத் தாம்பாளமாக வானை நிறைத்தது . பக்கத்து வீடுகளில் லைற்ருகள் மினுக்கின. எங்கள் வீட்டு நாய் நாங்கள் கதைப்பதை குந்தி இருந்து காதை மடக்கி கேட்டுக் கொண்டருந்தது . எனக்கு றொனியனின் நினைவு வந்து தொலைத்தது .மாமாவின் வீட்டைப் பார்த்தேன் , செல் அடியில் சிவர்கள் பாழாகி இருந்தன . அவர் அவைகளை தனியாளாகத் திருத்திய கைவண்ணமும் அதில் தெரிந்தது . நேரம் 9 மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது .

"அண்ணை உந்த பே சிரிப்பை நிப்பாட்டு . அவர் தெரியாமைத் தானே கேக்கிறார் ? அவர் இங்கை வந்து எவ்வளவு காலம் "?

எனக்குப் பக்கத்தில் இருந்த எனது கைத்தொலைபேசி சிணுங்கியது . அதில் அண்ணையின் பெயர் தெரிந்தது . அழைப்பை அழுத்தினேன் .

"எப்படியடா இருக்கறாய் ? சுகமாய் வந்து சேந்தியே "?

அண்ணை என்னை இன்னும் சின்னப்பிள்ளையாகப் பாவிக்கும் முறை எனக்கு சிறிது எரிச்சலை மூட்டியது .

"சொல்லண்ணை ".

"நான் இங்கை ஏழாலைக்கு வந்திட்டன்ரா . தோட்டத்துக்கு தண்ணி மாறிப் போட்டு வந்து உன்னோட கதைப்பம் எண்டு எடுத்தன் . மற்ரது , நீ எப்ப இங்கை வாறாய் ? நான் லீவு எடுக்கவேணும் ."

"நாளைக்கு இங்கை ரெண்டு மூண்டு வீட்டை போகக் கிடக்கு . பேந்து பின்னேரம் முனைக்குப் போறம் . நான் நாளையிண்டைக்கு உங்கை வாறன் ".

"வரேக்கை ஓட்டோ பிடிச்சுக் கொண்டு வா . பஸ்சிலை கஸ்ரப்படாதை ."

"சரி அண்ணை நீ லீவை எடு ".

எனக்கு எரிச்சல் எட்டிப் பார்த்தது . வெளிநாட்டு யூரோக்களும் டொலர்களும் இவர்களையும் அல்லவா புரட்டிப் போட்டு விட்டன . எங்கள் கமத்து ஒவ்வொரு போகத்து முதல் புது நெல்லுடன் சிறு வயதில் அப்பா அம்மாவுடன் , வில்லுப் பூட்டின திருக்கை மாட்டு வண்டில்லை சன்னதி கோயிலுக்கு வந்து மடத்தில அன்னதானம் குடுத்தது இப்பொழுதும் பசுமையாக மனதில் பசுமையாக ஓடியது . சிங்கத்தின் பிடியில் சன்னிதியானும் ஒட்டாண்டியாகப் போய் விட்டான் . நாங்கள் குளிரில் விறைத்து உளைக்கும் யூரோக்களின் பெறுமதியும் , வலியும் , இவர்களுக்கு உண்ணமையிலேயே விளங்கவில்லையா ? எனது மனம் வலித்தது . குறிப்பால் உணர்ந்த மாமா என்னைத் திருப்ப ,

"நீங்கள் உதைக்கேக்கிறியள் , ஒப்பறேசன் லிபறேசனைக்கையே நாங்கள் மூண்டுபேரும் , என்ர அம்மாவும் இங்கை இருந்து அரக்கேல . செல் அடி அனல் பறத்துது . எங்கடை பெடியளும் நெம்பிக் கொண்டு நிக்கினம் . சனம் எல்லாம் அங்கை இங்கை எண்டு அல்லாது படுதுகள் . ஆமிக்காறன் கிட்ட வந்திட்டான் . எங்கடை ஒழுங்கைக்கால கொஞ்ச ஆமிக்கறார் வந்தாங்கள் . அதில ஒருத்தன், இப்பவும் என்ர கண்ணுக்கை நிக்குது . நல்ல நெடுவல் சிவலையா வாட்டசாட்டமா இருந்தான் . எங்கடை இந்த வீட்டில இருக்கப்போறம் எண்டு சொன்னான் . நான் வாங்கோ எண்டு சொன்னன் . அண்டு இரவு எங்கழுக்கு மற்ர ஆமிப்பிள்ளையள் எல்லாம் ராச மரியாதை . பிசுக்கோத்து , பால் பைக்கற் , எல்லாம் தந்து சமைச்சு தந்தீச்சினம். தங்கைச்சி ஆக்களை சமைக்க விடேல . நெடுவல் ஆமி சொன்னான் நாங்கள் தன்ர ஐயா , அம்மே மாரிக் கிடக்கெண்டு . நான் அவரை ஒரு சமசியத்தில கேட்டன் , மாத்தையா நீங்கள் ஆரெண்டு . அப்ப சொன்னான் , தான் தான் டென்சில் கொப்பைக்கடுவா எண்டு . எனக்கு ஐஞ்சுங் கெட்டு அறிவுங் கெட்டுப் போச்சுது . இதுக்குள்ள , எங்கடை வீரவானுகள் தங்கடை சாமானுகளை பொலித்தீன் பையால சுத்தி , உர பாக்குக்கிள்ளை போட்டுக் கண்ட கண்ட கிணறுகளுக்குள்ளை போட்டுத் தகடு குடுத்திட்டீனம் ."

மாமா கிராமியப் பாணியில் சொல்லச் சொல்ல என் மனதில் காட்சிகள் படமாய் விரிந்தது . எவ்வளவு தூரத்திற்குத் துன்பப் பட்டிருப்பார்கள் ? ஆனால் , வந்த துன்பங்களைத் துன்பங்களாக எண்ணாது , அதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று எடுக்கும் அவர்களது உளப்பாங்கு என்னை மிகவும் ஈர்த்தது . மாலின் உள்ளே இருந்து வந்த மனைவியின் கையில் உப்புமா தட்டு இருந்தது . நான் மனைவியிடம் ,

"எல்லாரும் மாலுக்குள் இருந்து சாப்பிடுவம்".

"மால் எல்லாருக்கும் இடம் காணது ".

"நான் அங்கை தான் சாப்பிடப் போறன் ".

" சரி வாங்கோ ".

நான் மாலுக்குள் நுளைந்தேன் . நான் மாலுக்குள் நிலத்தில் இருந்தேன் . உப்புமாவும் , செத்தல் மிளகாய்ச் சம்பலும் இருமுறை சாப்பிடத் தூண்டியது . ஆனால் , எனது கட்டுப்பாடு தடுத்தது . சப்பிட்டு விட்டு எல்லோரும் சிறிது நேரம் கதைத்து விட்டுப் படுத்து விட்டோம் . பண்டாரி அம்மன் கோயில் மணியோசை என்னை அதிகாலையிலேயே எழுப்பி விட்டது . மச்சான் பால்போத்திலை எடுத்துக்கொண்டு சைக்கிளில் , மந்திகைச் சந்தி கிட்ட உள்ள பால் கூட்டுறவுப் பண்ணைக்குப் போனார் . நான் அன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசிச்சுக்கொண்டிருந்தேன் . மனைவி எழும்ப முதல் விளக்கு மாத்தால் முத்தத்தை கூட்டினேன் . நான் மோட்டரைப் போட்டுத் தண்ணித் தொட்டியை நிரப்பிய சத்தம் கேட்டு மனைவி எழும்பி வந்த பொழுது, நான் வியர்வையில் குளித்திருந்தேன் . தொட்டியில் நிரம்பிய தண்ணியை வாளியில் அள்ளி முத்தம் எல்லாம் தெளித்தேன் . முத்தத்தில் தண்ணி பட்டதும் புழுதி வாசம் மூக்கைத் தொட்டது . நீண்டகாலம் இதுகளை நான் செய்யாததால் எனக்குப் பெரிய புதினமாக இருந்தது . வீட்டு வாசலுக்கும் தண்ணியைத் தெளித்தேன் . தண்ணீரில் குளித்த குறோட்டன்களில் சூரிய வெளிச்சம் பட்டு வர்ணஜாலம் காட்டியது . எனக்கு அதைக் காணப் புத்துணர்சியாக இருந்தது . மச்சான் பால்போத்திலும் உதயன் பேப்பருடன் வந்து இறங்கினார் . மச்சினிச்சி கோப்பி போடப் பால்போத்திலுடன் மாலுக்குள்ப் போய்விட்டா . நான் உதயன் பேப்பரை மேய்ந்தேன் . அது தேர்தல் செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தது . மச்சாள் சுடச்சுடக் கோப்பியுடன் வந்தா . நான் கோப்பியை விரைவாக் குடித்து முடித்து விட்டு குளித்து வெளிக்கிட்டேன் . மாமாவிடம் நான் பொழுது போக பம்பலடிக்க போனேன் . மச்சான் எங்கள் பம்பலை புன்சிரிப்புடன் பாத்துக்கொண்டிருந்தார் . நாங்கள் மனைவியின் உறவுகள் இரண்டு வீட்டுக்குப் போனோம் . பின்பு , எல்லோரும் மத்தியானம் வந்து வீட்டில் சாப்பிட்டோம் . நாங்கள் பின்னேரம் போல முனைக்கு வெளிக்கிட்டோம் . நாங்கள் கல்லூரி வீதிவழியாக வந்து பொழுது , யுத்தத்தின் கோரவடுவாக கட்டிடங்களின் சாட்சியங்கள் கட்டியங் கூறிக்கொண்டிருந்தன . முன்பு இந்த இடங்கள் ஆளரவம் அற்ர சூனியப் பகுதிகள் . இப்பொழுது தான் மக்கள் பாவனைக்கு திறந்து விட்டுள்ளார்கள் . நாங்கள் காட்லிக் கல்லூரியையும் , மெதடிஸ் சேர்ச்ஐயும் தாண்ட , முனைக் கடல் அகண்டு விரிந்தது .






September 21, 2011 

தொடரும்

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...