நேற்று இரவைக்கே என்ரை மனிசி சொல்லிப்போட்டா,நாளைக்கு வேலையால வரேக்கே வோட் பண்ணவேணும் எண்டு.நான் போவம் எண்டு சொல்லிப் போட்டு யாழ் இணையத்தை நோண்டிக் கொண்டிருந்தன்.விடிய எழும்பி ரெண்டு பேரும் வேலைக்கு போகேக்கை என்ரை வாக்காளர் அட்டையை மறக்காமல் மனிசி தந்தா.நான் வேலை செய்யேக்கை என்ரை மண்டையுக்கை சுருள் சுருளாய் வட்டம் போச்சுது .
அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கறன்.எங்கடை கோப்பாய் தொகுதிக்கு கதிரவேற்ப்பிள்ளை ஐய்யா தான் கூட்டணி வேட்பாளர். லெக்சன் கிட்டிது. கண்ட றோட்டில எல்லாம் நோட்டிசும் பசைவாளியோடையும் நோட்டிஸ் ஒட்டிக் கொண்டிருந்திச்சினம் பேரவை அண்ணைமார். நாங்கள் சின்னப்பெடியள் எண்டபடியால விடுப்பு மட்டும் தான் பாப்பம். லவுஸ்பீக்கர் வேற வாத்தியாற்ரை பாட்டுகளை போட்டு சனங்களை குசி ஏத்தீச்சிது.சில பேர் கள்ளைப் போட்டிட்டு வாத்தியார் மாதிரி அபினயிச்சு பாடீச்சினம்.நான் வாயைப் பிளந்து கொண்டு நிண்டு லவுஸ்பீக்கறையும் கட்டின தோறணங்கள்,கடுதாசிப் பேப்பர் அலங்கரிப்புகளை எல்லாம் பிராக்கு பாத்தன்.லெக்சன் தொடங்க முதல் நாளைக்கு முதல் நாள் கோப்பாய் கந்தசாமி கோயலடியில பெரிய கூட்டம். செல்வநாயகம்,அமீர், யோகேஸ் எல்லாரும் வந்தீச்சினம்.மங்கையக்கா தமிழ்தாய் பாட்டு பாடி கையில பிளேட்டால வெட்டி அதால வந்த ரத்தத்தை அமீருக்கு பொட்டு வைச்சா. சனம் எல்லாம் உரு ஏறி ஏங்கடை வோட்டு உங்களக்குத் தான் எண்டு கத்தீச்சிது.பக்கத்தில நிண்ட அப்பாவும் சனத்தோடை சேந்து கத்தினார். எனக்கு ஒரு கோதாரியும் அந்த வயசில விளங்கேல.
பேந்து அங்கை இங்கை ஓடி எண்பத்தி ஆறில இங்கை வந்தன்.அப்பவும் எனக்கு உந்த சின்னப்பிள்ளை குணங்கள் போகேல.லெக்சன் எண்டால் கொஞ்சம் விளங்கத் தொடங்கீச்சுது. ஆனால் என்னால வோட் பண்ணேலாமல் போச்சு. ஒவ்வரு முறையும் இங்கை லெச்சனுக்கு முதல் கேக்கிற ரெண்டு பாட்டியளும் ரீவீயில நேரை வந்து ரீவி காறங்களின்ரை கேள்வியளுக்கு மறுமழி சொல்லுவீனம். நான் அப்பவும் விடுப்பு பாப்பன். ஆனால் லவுஸ்பீக்கர்,தோறணங்கள்,எடுபிடியள் இல்லாமல் போனது எனக்கு பெரிய குறையா போச்சுது.
இப்பிடியே போய் இண்டைக்கு முதல்தரம் கலியாணம் கட்டின மதிரி வோட்போட திறில்லங்கா இருக்கிறன். வேலையை கெதியா முடிச்சு கொண்டு ஒரே ஓட்டமாய் வந்து வீட்டுக்கு கிட்ட ஒரு பள்ளிகூடத்தடியல வோட் போடுற இடம் கிடந்திது. நான் அங்கை போனால் ஒரு அசுமாத்தத்தையும் காணேல.பாட்டுகள் தோறணங்களை காணேல. வேணுமெண்டு அட்ரசை மாறித் தந்து போட்டாளோ எண்டு எனக்கு மனிசீல ஐமிச்சம்.
வாசலில ஒரு கறுவல் உயரமாய் நிண்டான்.நான் அவனிட்டை வோட்டு போட வந்தன் எண்டு சொன்னன். அவன் என்ரை ஐடியை பாத்திட்டு உள்ளுக்கை விட்டான். நான் பதகளிச்சுக் கொண்டு உள்ளுக்கை உள்ளட்டன்.அங்கை ரெண்டு மூண்டு வெள்ளையள் இருந்தீச்சினம்.நான் அவையிட்டை பயந்து கொண்டு விசயத்தை சொன்னன்.அவை சார்கோசியின்ரை பேரையும் பிரான்ஸ்சுவா ஹோலண்ட் இன்ரை துண்டுகளையும் ஒரு என்வலப்பையம் தந்தீச்சினம். எனக்கு என்னன செய்யிறது எண்டு தெரியேல.பேந்து மற்றர சனத்தை பாத்தன்.அவை உடுப்பு மாத்தற அறை போல ஒண்டுக்குள்ளை போய் வெளியில வந்து அங்கால வோட்டு போடிற பெட்டிக்கு கிட்ட நிண்டீச்சினம். நான் அறைக்கை போய் சார்க்கோசியின்ரை பேர் துண்டை எடுத்து என்வலப்புக்குள்ளை வைச்சு துப்பலாலை ஒட்டினன்.அங்கால போனா ஒரு வெள்ளைப் பொம்பிளை என்ரை என்வல்ப்பை பெட்டிக்குமேலை வைக்கச்சொன்னா.நான் வைக்க ஒரு இரும்பு பிடியை பிறென்ஜ் சில "வோட்தே " எண்டு சொல்லி தன்ரை பக்கம் இழுத்தா.என்ரை என்வலப் பெட்டீக்கை போய் விழுந்திது.நான் பேந்தும் நிண்டன்.என்ன எனபது போல அவா பாத்தா. நீங்கள் எனக்கு கையில மை போடேல எண்டன். அவா சிரிச்சுக் கொண்டு சொன்னா,இங்கை அப்படியெல்லாம் செய்யிறேல போட்டு வா எண்டு. எனக்கு சப்பெண்டு போச்சிது.
May 06, 2012
Comments
Post a Comment