பஸ் நின்றதும் எல்லோரும் இறங்கும்வரை பார்த்துக் கொண்டிருந்தோம்.கடைசியாக நாங்கள் எமது சாமான்களுடன் இறங்கினோம். எனக்குப் பின்பக்கம் நன்றாகப் புளித்து விட்டது, அவ்வளவு குலுக்கல். பருத்தித்துறை பஸ்நிலையம் அந்த மத்தியானத்திலும் களைகட்டி இருந்தது. பஸ்நிலையத்தில் நவீனசந்தைக் கட்டிடத்தை திரும்பவும் கட்டிக் கொண்டிருந்தார்கள். சந்தையை தற்காலிகமாக பஸ்வந்து நின்ற இடத்துக்குப் பக்கத்திலேயே வைத்திருந்தார்கள். மீன் சந்தையையும் முனைக்கு போகும் வழியில் வைத்திருந்தார்கள். நான் இறங்கிய புழுகத்தில ஒரு சிகரட்டை எடுத்து பற்றவைத்தேன். எங்கள் நகரங்களில் இது முக்கியமானதொரு துறைமுகப்பட்டினம். தமிழர்களின் புகழை ஆழப்பதித்து வைத்தநகரம். பல அறிஞர்களையும் ,பல கடலோடிகளையும் எமக்குத் தந்த நகரம். யோசனையில் நின்றிருந்த என்னை மனைவியின் குரல் இடைமறித்தது,
"உங்களுக்கு எங்கையாவது முனியடிச்சுப்போட்டுதோ"
"என்ன சொல்லுறீர் ?? விளப்பமாய் சொல்லுறது"
" இல்லை கொழும்பில இருந்து வெளிக்கிட்ட தொடக்கம் ஒரு மார்க்கமாத்தான் நிக்கிறியள்."
"அதுசரி, உமக்கெங்கை தெரியப்போகுது என்ர வலியள்?. நான் என்ன உம்மைப்போல வரியத்துக்கு ஒருக்கா வாறனானே?"
"இதில நில்லுங்கோ .நான் ஓட்டோ பாக்கிறன்."
" ஏன் பிள்ளை கனதூரமோ?"
அவாவின் பார்வை என்னைச் சுட்டது.
" இந்த நக்கல் எல்லாம் வேண்டாம் நில்லுங்கோ வாறன்".
நானும் புகையைத் தொடர்ந்தேன். கோப்பாய் என்றால் நான்தான் ராசா, வழிகாட்டி. இது எனக்கு புதிய இடம் அவாசொல் கேட்டு நல்லபிள்ளையாக நின்றேன். ஒரு ஓட்டோ ட்றைவருடன் மனைவி வந்தா. நான் ஓட்டோவிற்கு எவ்வளவு என்று கேட்டேன். ட்றைவர் என்னைப்பார்த்துச் சிரிக்க, நான் முழித்தேன்.
"இவையின்ர குடும்பம் எனக்கு தண்ணிபட்டபாடு தம்பி. உள்ளுக்கை ஏறுங்கோ. நான்முந்தி இவையுக்கு கார் எல்லாம் ஓடின்னான், இப்ப கார் ஓட்டோவாய் சுருங்கீட்டுது. நீங்கள் எவ்வளவு காசு எண்டு கேட்டது எனக்கு துண்டாய் பிடிக்கேல".
தேவையில்லாமல் வாயை குடுத்திட்டனோ?
"தம்பி முதல்தரம் வாறிங்களோ."
"ஓம், உங்களுக்கு எப்படித்தெரியும்"?
என்னில ஏதாவது எழுதி ஒட்டி இருக்கோ?
"இல்லைதம்பி முந்தி இவா தனிய வாறவா. இப்ப ரெண்டுபேரும் வாறியள், அதுதான் கேட்டனான்".
மனைவி சிரிச்சுக்கொண்டே,
"அண்ணை விட்டால் இவர் கதைச்சுக் கொண்டு இருப்பர் .நீங்கள் ஓட்டோவை எடுங்கோ".
ஓட்டோ எங்களை சுமந்து கொண்டு அம்மன் கோயில் அடியால் திரும்பியது. அந்தவீதி மிகவும் ஒடுக்கமாக இருந்தது. ஓட்டோ சனத்திற்குள் மெதுவாகவே போனது. பருத்தித்துறைக்கு பெருமை சேர்பதில் அதன் வடையும், தோசை, தோசைக்கறி, எள்ளுப்பா, அப்பம், போன்றவையும் அடங்கும். எல்லோரும் தான் இவைகளைச் செய்வார்கள். ஆனால், இவர்களின் தொழில்நுட்பம் யாருக்கும் வராது. இன்றும் அப்பத்தட்டிகள் இங்கு பிரபல்யம். அப்பத்தட்டி என்பது, ஒவ்வொரு வீட்டு மதிலிலும் நிலமட்டத்துடன் ஒரு சிறிய ஓட்டை செய்திருப்பார்கள். இரண்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கும் முகம் தெரியாது. வாங்குவதும் விற்பதும் ஓட்டை வழியால் தான். காலையிலும் மாலையிலும் வியாபாரம் சூடுபறக்கும். சில வீடுகளில் பேப்பரும் காலையில் விற்பார்கள். பல வீடுகளில் இப்பொழுது அப்பத்தட்டிகளை காணவில்லை. ஆனால் அவை இருந்ததிற்கான அடையாளங்கள் இருந்தன. சிலவீடுகளில் நாங்கள் போன வீதியில் அப்பத்தட்டி வைத்திருந்தார்கள். இடத்தை வடிவாகப் பாத்துக் கொண்டு வந்தேன், பின்பு தனிய வந்து வாங்கி சாப்பிட. பருத்தித்தறையின் கலாச்சாரத்தில் இந்த "அப்பத்தட்டி" ஊறிப்போன விடையம். அப்பம் தோசை சுட்டு விற்பதை இவர்கள் இழிவாக நினைப்பதில்லை. மாறாக, தங்களது பாரம்பரியமாகவும், பெண்களுக்குப் பொழுதுபோக்குடன் கூடிய, தங்கள் சிறிய போருளாதரத் தேவைகளை நிறைவேற்றும் முறமையாகவே பார்க்கின்றார்கள். ஓட்டோ கல்லூரி வீதிசந்தியைக் கடந்தது.
"இதால போனால் காட்லிக் கல்லூரிக்குப் போகலாம். அங்கால போனால் மெதடிஸ் கல்லூரிக்கும் போகலாம்"
"அப்ப நீர் படிச்ச வடஇந்து மகளிர் கல்லூரி?"
"அதுக்கு இடப்பக்கம் திரும்பிபோகவேணும்".
ஓட்டோ சந்தியை கடந்து ஒழுங்கையில் இறங்கியது. ஒழுங்கையின் இரண்டு பக்கமும் கிடுகுவேலியும், மதிலும் மாறிமாறி வந்தன. வழியில் ஆடுகளும், குட்டிகளும் இப்பிலிப்பில் குழையைக் கடிச்சடியே வந்தன. அவைகள் பொட்டுக்குள் போகமல் இருக்கக் கழுத்தில் முக்கோணத் தடி கட்டி இருந்தார்கள். அதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அந்த ஆடுகள் உயரமான பெரிய செவிகளுடன் மேய்ந்தன. எனக்குக் கனகாலத்திற்குப் பிறகு ஊர் ஆடுகளைப் பார்க்கப் புதினமாக இருந்தது. ஓட்டோ ஆவோலை பிள்ளையார் கோயிலடியால் திரும்பியது.
"என்னம் கனதூரம் போகவேணுமோ?"
"இல்லை வீடு கிட்டீட்டுது."
எனக்கு மாமி, அன்ரி, மாமாவைப், பாக்கிற அவதி. மாமாவையும் அன்ரியையும் இப்பொழுதுதான் முதன்முதலாகப் பார்கப்போகின்றேன். அவர்களுக்கு நான் மனைவியைக் கலியாணம் செய்தது செய்தியாகத்தான் தெரியும். அத்துடன் மனைவியின் தங்கைச்சி பிள்ளைகள் குடும்பத்துடன் குன்னூரில் ( இந்தியா ) இருந்து பள்ளிவிடுமுறைக்கு வந்திருந்தார்கள். அந்தப் பிள்ளைகளும் இப்பொழுதுதான் முதன்முதலாக அம்மாச்சியைப் பார்க்கப்போகின்றார்கள். சிந்தனையில் இருந்த என்னை ஓட்டோ நின்ற ஒலி நிஜத்திற்கு கொண்டு வந்தது. அப்போது நேரம் மதியம் 1 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் ஓட்டோவிலிருந்து இறங்கி சாமான்களை இறக்கினேன்.
July 26, 2011
தொடரும்
Comments
Post a Comment