Skip to main content

பருத்தித்துறையும் கள்ளத்தீனும்.



                          
எனக்குத் தெரிஞ்ச மட்டில ஒரு காலத்தில, அதாவது 1996க்கு முன் பருத்தித்துறை கூட எங்களுக்கு ஒரு வெளியூர் மாதிரி இருந்தது. அப்பா சைக்கிளில அல்லது ஏதேனும் அவசரம் எண்டால் மோட்டார் சைக்கிளில் பருத்தித்துறைக்குப் போவார். யாழ்ப்பாணம் போறது வெளிநாடு போறமாதிரி (எல்லாம் வெடிவால் முளைக்கும் வரைதான்). நான் அப்போ ஒருமுறைக்குமேல் போன அதிகதூரம், மந்திகை ஆஸ்பத்திரி. தம்பி பிறந்த போது ஒருக்கால், அக்காவுக்கு மகன் பிறந்த போது ஒருக்கால், மச்சளுக்கு மகள்கள் பிறந்தபோது இரண்டுதரம் என்று பத்து வயதுக்குள்ளாகவே நான்கு தரம் போய்வந்த இடம் மந்திகை ஆஸ்பத்திரிதான். அப்பா பருத்தித்துறையில இருக்கிற காணிக்கந்தோருக்குப் போய் வரும் நாட்களிலெல்லாம் அப்பாவின் வரவை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கும். ஏனெண்டால், அவர் வாங்கிவரும் கள்ளத்தீனுக்காக.
கள்ளத்தீன் எண்டால், கடையில வாங்கிச் சாப்பிடுற வடை, போண்டா, வாய்ப்பன் முதலான வீட்டில் செய்யப்படாத பொருட்கள். எங்கள் ஊரில் கடையில் வாங்கிச் சாப்பிடுகிற இடியப்பம், பிட்டு எல்லாமே கள்ளத்தீன் தான். இதனால அப்பா பருத்தித்துறையிலிருந்து என்ன வாங்கிவந்தாலும் அது கள்ளத்தீன் என்றே அழைக்கப்பட்டது. அப்பா பருத்தித்துறையிலிருந்து வாங்கிவரக்கூடிய கள்ளத்தீன்களில் சிறப்பானவை தோசை, வெள்ளையப்பம், தட்டவடை ஆகிய மூன்றும். உழுந்துவடை, பருப்புவடை, போளி போன்றன யாழ்ப்பாணம் போய்வரும்போது வாங்கிவருவார். வல்வெட்டித்துறைப் பக்கம் போனால் எள்ளுப்பா. இந்த உணவுகளைப் பற்றி கொஞ்சம் கதைப்போமே.

பருத்தித்துறை தோசையின் புகழுக்குக் காரணம், அதன் அளவு. சின்னவயதில் எனக்கெல்லாம் ஒரு தோசை சாப்பிட்ட இரண்டு நாளைக்கு நிற்கும். அநேகமாக இரண்டு வகை சம்பல் தருவார்கள். பச்சை மிளகாயில் அரைத்த பச்சைச் சம்பல் அல்லது வெள்ளைச் சம்பல் என்று அழைக்கப்படும் சம்பல் ஒன்று, மற்றது செத்தல் மிளகாயில் அரைக்கப்பட்ட உருது சம்பல் அல்லது சிவத்த சம்பல். இதோ, எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அதே போல் பருத்தித்துறை வெள்ளையப்பமும் ஒரு சிறப்பான விஷயம். எங்கள் அம்மா எத்தனை முறை முயன்றும் அந்த மென்மையும், சுவையும் வரவில்லை. வெள்ளையப்பத்துக்கான ஸ்பெஷலான சம்பலோடு ஒரு பதினைந்து வெள்ளையப்பம் உள்ளே இறங்கினாலும் வயிறு நிரம்பாது. அப்படி பூ போல இருக்கும் வெள்ளையப்பம். 

தட்டவடையும் அப்படியே. அந்த ருசியை எங்கள் வீட்டுப் பெண்களால் ஏனோ கொண்டுவர முடிவதில்லை. 2002க்குப் பின்னான சமாதான காலத்தில் ஊருக்குவந்த பெரிசுகள் எல்லாரும் கேட்டு வாங்கி வெளிநாட்டுக்குக் கொண்டு போனது பருத்தித்துறைத் தட்டவடையை தான். இதுவும் கணக்கில்லாமல் சாப்பிடத் தூண்டும் ஒரு போதை வஸ்து என்றே சொல்லலாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இரவில் சாப்பாட்டுக்குப் பின் இரண்டு பருத்தித்துறைத் தட்டவடையைக் கொறித்துவிட்டுப் படுத்தால் காலையில் வயிறு அற்புதமாகச் சுத்தமாகும். நம்வீட்டுப் பெண்கள் சுடும் தட்டவடையைச் சாப்பிட்டால்...ம்ஹூம் அதை எல்லாம் இங்க சொல்லமுடியாது. 
இந்த உணவு வகைகள் பருத்தித்துறையில் பரவியிருந்த பல உணவகங்களில் கிடைத்தன. ஆனால் வெள்ளையப்பமும், தோசையும் உணவகங்களில் வாங்கிச் சுவைப்பதை விட, பருத்தித்துறையின் குறுக்குத் தெருக்களிலுள்ள வீடுகளின் மதில்களில் சின்னதாக ஓட்டை போட்டு, சின்னச் சின்ன கதவுகள் போட்டு பெரும்பாலும் காலை அல்லது மாலையில் கடைவிரிக்கும் அந்த ஊர்ப் பெண்களின் கையால் கிடைக்கும் தோசை அல்லது அப்பம்தான் சிறப்பானது. என்ன இவர்களின் சில கடைகளின் முன்னால் சாக்கடை ஓடும். அப்படியான கடைகளைத் தவிர்க்க வேண்டும். என்னுடைய ஊர் வாழ்க்கையின் கடைசிக் காலங்களில் அங்கே ராஜா' உணவகம் என்று ஒருவரின் கடையில் இவையெல்லாம் சுத்தமாகக் கிடைத்தன. 
ராஜாவும் இன்னும் சில உணவகத்தாரும் காலையிலேயே தோசை, வெள்ளையப்பம் விற்க ஆரம்பித்தார்கள். அப்போ அதிகாலையில் ரியூசனுக்குப் போகிறபடியால் வீட்டில் தரும் காசில் பருத்தித்துறையில் வாங்கி உண்ண ஆரம்பித்தோம் (பள்ளியும், ரியூசனும் பருத்தித்துறையில்தான் அமைந்திருந்தன). நாங்கள் காலையிலேயே வெள்ளையப்பம். தோசை எல்லாம் இறுக்கிவிட்டுப் போவது வழக்கம். அப்படியான நாட்களில் வகுப்பில் தூங்காமல் இருப்பதற்குப் படும் பாடுதான் அதிகம். ஒருமுறை நூலகத்தில் தூங்கி ரகுவரன் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் அதிகம். கொஞ்சக் காலம் போனதும் புரிந்தது, அந்தத் தூக்கம் பருத்தித்துறை தோசை அல்லது வெள்ளையப்ப மகிமை என்று. என்னதான் வாத்திமாரிடம் அடிவாங்கும் அபாயம் இருந்தாலும், தோசை, வெள்ளையப்பம் சாப்பிடும் அந்த அபாரமான அனுவத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் இன்னொருமுறை ஊர் மீளும்போது அந்த அபார அனுபவம் கிடைக்குமா என்பது சந்தேகம். யாராவது சமீபத்தில் பருத்தித்துறைப் பக்கம் போயிருந்தால் சொல்லுங்களேன்... தோசையும், வெள்ளையப்பமும், தட்டவடையும் இன்றைக்கும் விற்கிறார்களா??




July 31, 2009

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...