அண்மையில் பாரிஸில் வெளியிடப்பட்ட குணா கவியழகனின் "விடமேறிய கனவு" நாவல் வாசித்தேன் .நாவல் சொல்ல வந்த செய்தி , "இறுதி யுத்தத்தில் ஓர் போராளி சரணடைந்து அதன் தொடராக ஓமந்தை, செயின் ஜோசெப் படைத்தளம், மெனிக் பார்ம் முகாம்களில் நடைபெற்ற சித்திரவதைகளையும் ,அங்கிருந்த அவனைப் போன்ற சிறைக்கைதிகளின் வாழ்வு நிலை பற்றியும் நாவல் விபரிக்கின்றது. சிறுவயதில் தமிழகத்தைச் சேர்ந்த ரா.கி ரங்கராஜன் மொழி பெயர்த்த "பட்டாம் பூச்சி" (Papillon ) என்ற பிரெஞ் நாவல் இரண்டு முறை படித்திருக்கின்றேன். இது பிரெஞ் நாவலாசிரியரான ஹென்றி ஷாறியே (Henri Charrière) என்பவரால் 1969 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சுயசரிதை நாவலாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கியம், மானுடத்தின் கௌரவம் என்ற கருவை பட்டாம் பூச்சி அதிகம் பேசியது. மனிதனின் தாக்கு பிடிக்கும் ஆற்றலுக்கும், விடா முயற்சிக்கும், சுதந்திர தாகத்திற்கும் ஒரு மகோன்னதமான வாழும் எடுத்து காட்டாக இந்தக் கதையை அப்பொழுது வாசித்து உணர்ந்தேன். பின்னர் இந்த "பட்டாம்பூச்சி" நாவல், அமெரிக்காவை சேர்ந்த பிறாங்கிளின் ஜே .ஷஃபைனர் ( Franklin J. Schaffner ) இயக்கி "பப்பியோன்" (Papillon) என்ற ஆங்கிலத் திரைப்படமாக 1973 ஆண்டு வெளி வந்தது. அதில், "ஸ்டீவ் மக்வீனும், ஹாஃப்மெனும்" அற்புதமாக நடித்திருப்பார்கள்.
1931 -ம் ஆண்டு கொலையொன்றை செய்ததாக கதையின் நாயகன் மீது குற்றம் சாட்டப் பட்டு ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டது . கொலை செய்யவில்லை என்பது நாவலின் நாயகனின் வாதம். ஒன்றல்ல இரண்டல்ல பதின் மூன்று தடவைகள் சிறை சிறையாக கதையின் நாயகன் தப்பி கொண்டிருந்தான் . இறுதியில் பிரெஞ் கயானவை சேர்ந்த "இல் து டியாபிள்" ( l'île du Diable ) என்ற மனித சஞ்சாரமற்ற தீவில் கதையின் நாயகன் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு மரணமாகின்றான். "பப்பியோன்" நாவலில் ஓர் சிறை வாழ்க்கையும் அதன் கொடூரங்களும் எப்படி இருக்கும் என்று மிகவும் தத்துரூபமாக விவரிக்கப்பட்டிருக்கும். நான் "விடமேறிய கனவு" நாவலைவாசிக்கும் பொழுது எனது வாசிப்பு மனநிலையில் "பட்டாம் பூச்சி ( பப்பியோன் )" நாவலின் அரைப்பக்கத்தை தான் நூலாசிரியர் எட்ட முயற்சி செய்திருக்கின்றார் என்பது தெளிவாகியது .நாவலில் தத்துவ மழைகளைக் குறைத்து, சிறை வாழ்வின் அல்லது சித்தரவதை முகாமின் கொடூரங்களை நூலாசிரியர் இன்னும் அதிகமாக விபரித்திருப்பாரேயானால், ஈழத்து போர் இலக்கிய சூழலில் "பப்பியோனை" விட ஓர் படி மேல் சென்று காத்திரமானதோர் இடத்தைப் நூலாசிரியர் பிடித்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
"எணைப்பிறை ( நஞ்சுண்ட காட்டில்)" இருந்த சொல்லாடலில் நெகிழ்வுத்தன்மையை நான் "விடமேறிய கனவு" வாசிக்கும் பொழுது என்னால் உணர முடியவில்லை. விடமேறிய கனவின் சொல்லாடல்களில் ஒருவிதமான வறட்சித்தன்மைகளே அதிகமாகக் காணப்பட்டன . நாவலின் தொடக்கத்தில் இருந்து நாவலின் நடுப்பகுதி வரை ஒரே தத்துவ மழையாக இருந்தது . அதாவது ஜெயகோவாவின் நூல்களான "காவல் கோபுரம் " மற்றும் "நம்பிக்கை ஒளி " போன்று இருந்தது. ஓர் படைப்பாளி தனது படைப்பில் அளவுக்கு அதிகமாக தத்துவங்கள் அல்லது போதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை .அதற்கு "மதபோதகர்கள்" இருக்கின்றார்கள். இப்படியான அதிக தத்துவ மழைகள் அல்லது போதனைகள் வாசகரின் மனதில் ஒருவிதமான சலிப்புத்தன்மையை உருவாக்குமே ஒழிய வாசகரை நாவலுடன் ஒன்றிணைய விடாது தடுத்து விடும் என்பது எனது அவதானிப்பு ஆகும் .
நூலாசிரியர் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் இருந்த படியால், நாவலின் புலி எதிர்ப்பு கருத்தியலை மிகவும் நுணுக்கமாக நாவலில் நகர்த்தி இருக்கின்றார் என்றே எண்ண இடமளிக்கின்றது .அதாவது தீவிர தேசியவாதிகளால் தன்னில் "துரோகிப்பட்டம்" விழாமலும், அதே வேளையில் மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில் "புலி ஆதரவாளர்" என்ற கருத்து விழாமலும் தனது கருத்துக்களை நுணுக்கமாக நாவலினூடாக நகர்த்தி இருக்கின்றார். என்னைப்பொறுத்த வரையில் தற்போதுள்ள "குழுமவாதப் போர் இலக்கிய சூழலில்" இத்தகைய நகர்வு பாராட்டப்பட வேண்டியதொன்று என்றாலும் , மறுதலையாக இந்த வகையான நகர்வு நூலாசிரியரின் நேர்மைத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நான் பார்த்த அல்லது எனது வாசிப்பு மனநிலையில், ஈழத்துப் போரியல் இலக்கியத் துறையில் இருக்கும் எழுத்தாளர்கள் எல்லோருமே தங்கள் தளங்களை நேர்மையாக வெளிக்காட்டியே தங்கள் படைப்புகளை வாசகர்களுக்குத் தந்தார்கள். அதில் ஆயிரம் விமர்சனங்கள் வாசகர்களுக்கு இருக்கலாம் . அனால் அதில் அவர்களது தளங்களை தெட்டத் தெளிவாக வாசகர்களுக்கு உணர்த்தியிருந்தார்கள் . ஆனால் விடமேறிய கனவு நாவலைப் பொறுத்த வரையில் நூலாசிரியர் "நடுவில் வாய்க்கால் வெட்டுவதாகவே" எண்ண இடமளிக்கின்றது.
ஒரு நாவலுக்கு காலதேசவர்த்தமானங்கள் முக்கியமானது. அதன் அடிப்படியில் இந்த நாவலைப் பார்த்தால் .நாவலின் ஒருசில இடங்களில் நூலாசிரியர் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வகையில் கதையை கொண்டு சென்று இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. உதாரணமாகக் கதையின் நாயகன் தனது வாயில் உள்ள கொடுப்புப் பற்களின் அடியிலும், ஆசன வாயிலிலும் சயனைட் குப்பியை தொடர்சியாக மறைத்து வைத்திருந்ததைக் குறிப்பாகச் சொல்லலாம் . சாதரணமாக சயனைட் குப்பி 2 சென்ரி மீற்ரர் நீளமுள்ளது. உடலின் இந்த இரண்டு பாகத்திலும் ஏற்படுகின்ற உடல் வெப்ப மாற்றங்களினால் இவை இலகுவில் உடையக்கூடிய வாய்புகளே அதிகம் இருக்கின்றன. உதராணமாக போதைவஸ்துக் கடத்துபவர்கள் தங்கள் ஆசனவாயிலில் வைத்துக் கடத்தும் பொழுது உள்ளே ஏற்பட்ட உடல் சூட்டினால் போதைவஸ்து ஆசனவாயிலின் உள்ளே வெடித்து பல மரணங்கள் ஏற்பட்டதை நாங்கள் செய்திகளில் படித்திருக்கின்றோம் . அத்துடன் ஆசனவாயிலில் ஓர் பொருளை அடையும் பொழுது குடலின் சுற்றுச் சுருங்கல் முறைகளினாலும், மனிதன் உட்கொண்ட உணவினாலும் அந்தப் பொருள் இருக்கும் இடத்தை விட்டு கீழ் நோக்கி வரவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆசனவாயில் ஓர் பொருளை மறைத்து வைத்திருப்பது என்பது ஒருசில மணிநேரங்களுக்கே சாத்தியமானது. ஆனால் நூலாசிரியர் தொடர்ச்சியாக வாயின் பல்லுக்கு அடியிலும், ஆசனவாயிலிலும் சயனைட் குப்பியை வைத்திருப்பதாக சொல்வது உணர்ச்சி பூர்வமாக வாசகரைக் வசப்படுத்துமே ஒழிய உணர்வு பூர்வமாக ஒருபோதுமே அவர்களை வசப்படுத்தாது .அத்துடன் இந்த சயனைட் குப்பி விடயமாக என் மனதிலே தோன்றியது என்னவென்றால் , சமாதான காலங்களின் பின்னர் சர்வதேசத்தின் பூரண ஆசியுடன் தனது பாதுகாப்பு நிலைகளைப் பலப்படுத்தி ஆசியாவிலேயே அதிஉயர் பாதுகாப்புகளைக் கொண்ட இலங்கை அரசின் இராணுவ சித்திரவதை முகாம்களின் பாதுகாப்பு நிலைகள் பற்றிய பெரிய கேள்வி ஒன்று இங்கே தொக்கி நிற்கின்றது. இன்றைய காலகட்டங்களில் எந்த இடத்திலுமே , ஒருவர் தனது உடலின் எந்தப்பகுதியிலும் ஓர் பொருளை மறைத்து வைத்திருந்தால் அதனைக் கண்டுபிடிக்கத்தக்க தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்து விட்டன. நூலாசிரியர் "தான் சித்திரவதை முகாம்களில் சயனைட் குப்பியை மறைத்து வைத்திருந்தேன்" என்று சொல்வது வாசகர்களை முட்டாள்களாக்குவதுடன் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயமாகும் .
இந்த நாவலின் ஊடாக நாவலாசிரியர் இலங்கைக்கு வெளியே இருந்த மக்களின் பார்வையில் இருந்த "இலங்கை அரசின் நலன்புரி முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள் " என்ற விம்பத்தை உடைத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமே . குணா கவியழகன் விடமேறிய கனவின் மூலம் தனது இரண்டாவது படைப்பை வாசகர்களாகிய எங்களுக்குத் தந்திருக்கின்றார். அவர் மேலும் தனது வாசிப்பு மனநிலையை விசாலப்படுத்தி பல இலக்கிய நயமுள்ள காத்திரமான படைப்புகளைக் கொண்டுவருவார் என்பதே என்போன்ற வாசகர்களது வேணவாவும் நம்பிக்கையும் ஆகும். இறுதியாக நான் இந்த நாவலை வாசித்து முடித்தபொழுது ஓர் தினக்குறிப்பு படிக்கின்ற உணர்வையே எனக்கு ஏற்படுத்தியது.
மலைகள் இலக்கிய சஞ்சிகைக்காக
கோமகன்
15 ஆடி 2015
Comments
Post a Comment