Skip to main content

மற(றை)க்கப்பட்ட லெனின் சின்னத்தம்பி



தாயகத்தில் குடும்பம் சுற்றம் சூழல் என்று உன்னதமான வாழ்வைக் கொண்ட ஓர் இனக்குழுமம் தங்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தின் கோரப்பிடியால் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள விருப்பமின்றிப் புலம்பெயர்கின்றது. அதன் இறுதி இலக்கானது, எதிலி என்ற முத்திரையும், தங்கள் வாழ்நாளில் எண்ணியே பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட வாழ்வியல் கோலங்களையும்  இந்த எதிலிகளை எதிர்கொண்டன. வாழ்வியலிலும் சரி சொல்லாடலிலும் சரி மிகவும் கொடுமையான உளவியல் தாக்கத்தைக் கொண்டு வருவது இந்த எதிலி என்ற இருப்பு ஆகும். ஈழத்தவர்களது புலப்பெயர்வையும் அவர்களது வாழ்வியில் விழுமியங்களையிட்டுப் பல படைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு  கோணத்தில் கதைக்களங்களையும் கதை மாந்தர்களையும் கொண்டுள்ளன. அந்தவகையில் ஜேர்மனியில் வசிக்கும் ஜீவமுரளியின் "லெனின் சின்னத்தம்பி " நாவல் உயிர்மை வெளியீடாக கடந்த ஆண்டு வெளியாகியது. ஆனாலும் இந்த நாவல் புலம்பெயர் இலக்கிய உலகில் மறக்கப்பட்டது என்பது கவலைக்குரிய விடயம்.

பனியும் அதன் வீரியமும் ஐரோப்பா கண்டத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுபவன. அப்பொழுது மனிதர்களுக்கு ஏற்படுகின்ற மனஅழுத்தங்கள் சொல்லில் வடிக்கமுடியாதவை. ஒரு சிலர் தம்மைத்தாமே அழித்துக்கொள்வதும் இந்தப்பனிப்பொழிவு நாட்களில்தான். ஓர் இலையுதிர் காலமொன்றின் ஊடாக மெதுமெதுவாக நாவல் விரிகின்றது. ஓர் இலையுதிர் காலமும் பனிப்பொழிவும் , மனித வாழ்க்கையை அதன் போக்கில் வாழவிடாத கடிகாரங்களால் சிறைப்பிடிக்கப்பட்டு  ஒரு மனிதனை எப்படியெல்லாம் உளவியல் ரீதியாக வாட்டிவதைக்கின்றது என்பதை முதல் பதினைந்து பக்கங்கள் நாவலின் பிரதான கதைசொல்லியாகிய லெனின் சின்னத்தம்பியூடாக சொல்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே லெனின் என்ற பெயர் அடைமொழியாக ஏன்  சின்னதம்பிக்கு வந்தது என்ற எதுவித விபரணங்கழும் இல்லாது நாவல் விரிகின்றது. ஆனாலும் லெனின் என்ற சொல்லாடல் ஆனது  நாவலின் தொடர்ச்சியில் ஒன்றுமே அறியாது நிறத்தால் மட்டுமே வெள்ளைகளாக இருந்த தொழிலாளர்களுக்கு, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள வேறுபாடுகளையும், வர்க்க சிந்தனைகளையும் சின்னத்தம்பி அங்காங்கே சொல்லியதால் "லெனின்" என்ற அடைமொழிப் பெயரானது  மார்க்ஸிய சித்தாந்தங்களுக்கு ஓர் இடுகுறிப்பெயராக வந்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது . அதே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புரைகள் நூலுக்கு இல்லாது தங்களது எழுத்துக்களில் பரிபூரண நம்பிக்கை வைத்து வெளிவந்த படைப்புகளில் லெனின் சின்னத்தம்பியும் அடங்குவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

பின்னர் லெனின் சின்னத்தம்பி நேரடியாக கதைக்களமான உணவகத்துக்கு வருகின்றார். ஓர் உணவகத்தில் உணவுகள் எப்படி எப்படியெல்லாம் தயார்ப்படுத்தப்படுகின்றது. அங்குள்ள அதிகார மட்டங்கள் என்னென்ன. அந்த அதிகாரவர்க்கத்தின் பழக்க வழக்கங்கள் என்ன ? இந்த பழக்கவழக்கங்களுக்க்கு ஏற்றவாறு லெனின் சின்னத்தம்பி எப்படி இசைவாக்கம் பெறுகின்றார் ? என்பதனை நாவலின் பெரும்பகுதி தொடுகின்றது.

நண்பர் ரிஷான் ஷெரீப் தனது துன்புறுத்தல்கள் தொடர்பான திறனாய்வில் இவ்வாறு கூறுகின்றார்,  

"ஒரு மனிதனை எப்படியெல்லாம் துன்புறுத்தலாம். சொற்களால் வார்த்தைகளால் நடத்தைகளால் செய்கைகளால் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஓர் மனிதனை மிக இலகுவாகத் துன்புறித்திவிடலாம் ஆனால் அந்த துன்புறுத்தலை எல்லோராலும் மிக இலகுவாக தாங்கி விட முடியாது. துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மனிதனின் உணர்வுகளும் உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. இந்த துன்புறுத்தலைச்  செய்பவன் சகமனிதனே. துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்டுபவனைப் போன்றே ரத்தமும் நரம்புகளும் அவையவங்களை கொண்டவனே. இந்த துன்புறுத்துபவனும் அவனுக்கு மட்டும் அந்த மனநிலை எப்படி வாய்கின்றது? அதிகாரமும் ஆணவமும் பழிவாங்கலும் இந்த துன்புறுத்தலுக்கு மனிதனைத் தூண்டுகின்றன. இந்த வகையான துன்புறுத்தல்களை " சித்திரவதை " எனப் பொதுப்பெயர் கொண்டு அழைக்கலாம். இந்த சித்திரைவதைகள் இருப்பிடங்கள் வேலையிடங்கள் போன்றவற்றில் சகமனிதர்களால் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றன. எனினும் இந்த மனித உரிமை மீறலானது எந்தவித கேள்விகளுக்கும் உட்படாதவாறு நடைபெற்று வருகின்றது. இந்த நடைமுறையானது ஓர் அதிகார அமைப்புக்கு எதிராக இருப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கும் அடக்கி வைப்பதற்கும் வைப்பதற்கும் இந்தவகையான சித்திரவதைகள் அதிகார வர்க்கத்தால் பிரையோகப்படுத்தப்பட்டு வருகின்றது " 

இதையே நூலாசிரியர் லெனின் சின்னத்தம்பி மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

லெனின் சின்னத்தம்பியில் ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள உறவு நிலையை நகைச்சுவையாக கைக்கோ என்ற தொழிலாயின் பாடல் மூலம் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.........

"ஜோ ஒரு பட்டன் செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்தார்.

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் என்றான் முதலாளி .

நான் வலக்கையால் வேலை செய்கின்றேன் முதலாளி.

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் .நான் வலக்கையாலும் 

இடைக்கையாலும் வேலை செய்கின்றேன் முதலாளி .

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் .நான் வலக்கையாலும் இடக்கையாலும் வலக்காலாலும் வேலைசெய்கின்றேன் முதலாளி .

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய். .நான் வலக்கையாலும் இடக்கையாலும் வலக்காலாலும் இடக்காலாலும் வேலை செய்கின்றேன் முதலாளி .

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் நான் வலக்கையாலும் இடக்கையாலும் வலக்காலாலும் இடக்காலாலும் குண்டியாலும் வேலை செய்கின்றேன் முதலாளி ."

(பக்கம் 68)

இந்தப்பாடல் வரிகள் நகைச்சுவையாக இருந்தாலும், ஒரு முதலாளி எப்படி ஓர் தொழிலாளியை சக்கையாகப் பிழிகின்றான் என்பது தெளிவாகின்றது. இதைப்படிக்கும் பொழுது பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்பிளின் ஓர் தொழிற்சாலையில் உதிரிப்பாகங்கள் பொருத்தும் வேலையில் தான் படும் கஸ்ரத்தை தனதுபாணியில் நடித்துக்காட்டிய படமே நினைவுக்கு வந்தது .
வேலைத்தலத்தில் கடைநிலை ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளால் எப்படி நிந்திக்கப்பட்டும் பழிவாங்கப்படுகின்ரார்கள் என்பதை பக்கம் 133 இல் நூலாசிரியர் மனதில் தைக்கும் படி சொல்கின்றார்......................

" லெனின் சின்னத்தம்பி அக்சல் குறுப்பவின் வார்த்தைகளுக்கு மறுவார்த்தை பேசுவதை எப்பொழுதுமே அவனால் தங்கிக் கொள்ள முடிவதில்லை .அந்த உணர்வு ஒரு பாத்திரம் கழுவும் கடைநிலைத் தொழிலாளி தன்னை எதிர்த்துப் பேசுகின்றான் என்ற அவமரியாதை உணர்விலிருந்து வந்திருக்கலாம் .அல்லது தொழிலாளர்களின் படிநிலைகளில் உயர்வையும் ,தாழ்வையும் கோருகின்ற ஒரு நிர்வாகியப் பார்த்துப் ,பிறப்பால் ஐரோப்பியர் அல்லாத ,கருத்த முடியும்,சாம்பல் நிறத்தோலைகொண்ட ஒருவர் ,வார்த்தைக்கு மறுவார்த்தை பேசுவதென்பது நிந்தனைக்குரிய குற்றமாகவே இருந்திருக்கலாம் .எது எப்படியாயினும் ,இப்படிப்பட்ட நிந்தனைக் குற்றங்களைச்  செய்வோர் நிர்வாகிகளாலும் ,முதலாளிகளாலும் தக்க தருணம் பார்த்து பழிவாங்கப்பட்டு வந்தனர் .
(பக்கம் 133)

இந்த இரண்டு பந்திகளும் வாசகர்களை கட்டிப்போட்ட இடங்களாகும்.

18ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு உலகம் எங்கும் அடிமைகள் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. அன்றைய காலகட்டங்களில் பல அடிமைகள் பொருகாட்சிகளில் கூடுகளில் அடைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு விடப்பட்டு பெரும் முதலாளிகளால் வாங்கப்பட்டார்கள். அதன் பின்னர் மேற்குலகம் அடிமை முறை தங்கள் நாடுகளில் இல்லை என்று மார்தட்டியது. ஆனால் அது வடிகட்டிய சுத்தப்பொய். காலப்போக்கில் அடிமை முறைமையின் வடிவங்கள் மாறின. மேற்குலகில் அந்தந்த நாடுகளில் அதன் மக்கள் செய்யத் தயங்குகின்ற இழி நிலை வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். மேற்குலகு வலு குறைந்த நாடுகளில் போர்களை உருவாக்கி அதன் மூலம்  குறைந்த செலவில் விசுவாசமான அடிமைகளை  அரசியல் அகதிகள் என்ற போர்வையில் உள்வாங்கியது. இதனால் மேற்குலகிற்கு இரட்டை இலாபம் கிடைத்தது. ஒன்று சர்வதேசத்தின் முன்பாக தன்னை ஓர் மனிதநேயமுள்ளவனாக காட்டிக்கொள்வதும். இரண்டாவதாக, அதி உயர் விசுவாசமுள்ள அடிமைகள் குறைந்த ஊழியத்தில் கிடைத்ததும் எம்முன்னே வரலாறாக  சொல்லி நிற்கின்றது. அதில் ஒருவர் தான்  லெனின் சின்னத்தம்பி. அவர் வேலை செய்கின்ற உணவகத்தில் நிறம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக அவர் சக தொழிலாளர்களால் நடத்தப்பட விதம் கொடுமையானது. இந்த இடத்தில் ஓர் கேள்வி எழுவது இயல்பாகின்றது. தான் தீண்டத்தகாதவனாக சக தொழிலாளர்களால் நடத்தப்படும் பொழுது ஓர் ஜெர்மன் பிரஜையாக இருந்தும் அவர்களுடன் சமரசப்போக்குக்கு ஏன் லெனின் சின்னத்தம்பி செல்லவேண்டும் ? அடுத்ததாக இந்த சமரசங்கள் என்பது லெனின் சின்னத்தம்பிக்கு தனது தொழிலில் உள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கின்றது. அதே போல ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கென்றே தொழிலார்கள் சட்டங்களும் தொழில் சங்கங்களும் உள்ளன. தங்களது முதலாளியினால் தாங்கள் ஏமாற்றப்படும் பொழுது இவர்கள் தொழில் சங்கங்களின் உதவியினை ஏன் நாடவில்லை என்றதோர் கேள்வி இயல்பாக எழுகின்றது. தான்பட்ட கடன்களுக்காக  தனது நிறுவனத்தை வேண்டுமென்றே நட்டத்தில் இயங்க வைத்து அனைத்து தொழிலார்களையும் நடுத்தெருவில் விட்ட முதலாளிக்கு, லெனின் சின்னத்தம்பி தவிர்ந்த ஏனைய தொழிலார்கள் சட்ட நடவடிக்கை எடுக்காது தொடர்ந்து தங்கள் முதலாளியின் நடவடிக்கைக்கு துணை போனதை நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நாவலில் நூலாசிரியர் ஒன்றிற்கு மேற்பட்ட வகையில் சம்பவங்களின் விவரணங்களையும் விபரிப்புகளையும் தவிர்த்து இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. உதாரணாமாக உணவுத்தட்டுக்கள் அலங்காரம் செய்யும் முறைகள் மற்றும் சண்டைக்காரனின் பிரோ ( அலுவலகம் ) ஆகியவற்றின் விபரணங்கள் மறுபடியும் மறுபடியும் நாவலில் வந்ததினால் வாசகன் வாசிக்கும் பொழுது ஒருவித சலிப்புத்தன்மை  ஏற்பட்டதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது . இவைகளைத் தவிர்த்துப் பார்க்கும் பொழுது லெனின் சின்னத்தம்பி பேசப்படவேண்டிய நாவலாகும் இதன் நூலாசிரியர் மேலும் பலபடைப்புகளை தரவேண்டும் என்பதே வாசகர்களது வேணவா ஆகும் .

கோமகன் 
மலைகள் சஞ்சிகை - இந்தியா  

18 மாசி 2014 

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...