Skip to main content

சாத்திரியின் பார்வையில் கோமகனின் "தனிக்கதை"



கோமகனின் தனிக்கதை என்கிற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறு கதைகளை உள்ளடக்கி 157 பக்கத்தில் மகிழ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே அதனை எழுதியவரை மட்டும் மனதில் வைத்து விமர்சனங்கள் எழுதித் தள்ளுகின்ற காலகட்டத்தில் நான் படித்துவிட்டு எனது பார்வையை வைக்கிறேன். இந்த சிறுகதைத்தொகுப்பானது பெரும்பாலானவை ஒருவன் தனது சொந்த மண்ணிலிருந்து சொந்த பந்தங்களையும் சொத்துக்களையும் விட்டு ஊரையும் விட்டு வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் எறியப்பட்டு அவன் அங்கே மீண்டும் பதியமாகி அனைத்தையும் இழந்த அகதியாக பதிந்த வலியை தொட்டுச் செல்கிறது. வெளிநாட்டில் அதியுயர் வாசனை திரவியத்தை தடவினாலும் மண்ணின் வாசத்தை சுவாசிக்கத் துடிக்கும் நேசம் .அதுக்காகவே அவர் பெரும்பாலான கதைகளில் கோப்பி குடித்தும் சிகரெட்டை பற்றவைத்து அதன் புகையை ஆழ உள்ளே இழுத்து ஆகாயத்தை நோக்கி விட்டு தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறார். சமுக ஆர்வலர்கள் யாராவது சூழல் மாசடைதல் ஓசோனில் ஓட்டை என்று வழக்கு போடாதவரை அவரால் தொடர்ந்து எழுத முடியும் .

புலம்பெயர் வாழ்வின் சிக்கல்களை அதன் வேதனைகளை அவன் யார், கிளி அம்மான், மலர்ந்தும் மலராத, மனிதம் தொலைத்த மனங்கள், ஆகிய கதைகள் சொல்லிச் செல்கின்றன. இதில் கிளியம்மான் என்கிற கதை பிரான்சில் வாழ்ந்த ஒரு முன்னை நாள் போராளியின் உண்மைக்கதை என்பது மட்டுமல்ல அந்தக் கதையின் நாயகன் எனது நண்பனும் கூட. மக்களுக்காக போரடப்போய் யுத்தத்தில் காயமடைந்து அங்கவீனமாகி வெளிநாடு வந்த பின்னரும் தனது சொந்த வாழ்வை தொடர முடியாது மன உளைச்சலுக்கு உள்ளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்ட ஒருவனின் கதை.

தனியாக புலம் பெயர் வாழ்வின் சோகங்களை மட்டும் சொல்லாது வெளிநாடுகளில் தமிழர்கள் தங்களை நிலை நிறுத்தவும் நிதந்தர வதிவிட உரிமையை பெறவும் தகிடுத் தனங்கள் விசாகன். அவன் யார், தோலுரித்துச் செல்கிறது. தமிழன் அனைத்தையும் கைவிட்டு அகதியாகி வெளிநாடுகளில் புதுவாழ்வை பதியமிட்டபோதும் சாதியை மட்டும் கைவிடாது காவிச்சென்று இரத்தத் துணிக்கைகள் போலவே இன்னமும் அவர்களது உடலில் உணர்வுகளோடு அடுத்த தலைமுறைக்கும் கடத்தியுள்ளான் என்பதை மறுக்க முடியாது. கோமகனின் கதைகளும் இந்த சாதியத்தை சாடாமல் பயணிக்கவில்லை. அதில் சின்னட்டி, அவர்கள் அப்படிதான் என்கிற கதைகள் முக்கியமானவை. இதில் சின்னட்டி என்கிற கதையைப் படித்தபோது உண்மையிலேயே ஊரில் நடக்கும் மரணச் சடங்கு ஒன்றிற்கு என்மனதை அழைத்துச் சென்றுவிட்டார் கதாசிரியர்.

அடுத்ததாக ஊர் திரும்புதல். நீண்ட கால வெளிநாட்டு அகதி வாழ்வின் பின்னர் ஊர் திரும்பியதும் தனது ஊரை சுற்றி வந்து பழைய நினைவுகளை மீட்டுகிறான். அவன் படித்த பாடசாலை ஊர் கோவில். முடி திருத்திய கடை குட்டி பாபரிலும். காதலித்து கலியாணம் செய்யமுடியாமல் கை விட்டு விட்டுப் போன முன்னை நாள் காதலியை தேடுதல் பாமினியிலும். வெளிநாட்டில் இருந்தபோதே இறந்து விட்டிருந்த அம்மாவின் தொடுகைக்காக ஏங்கியபடி நோய் வாய்ப்பட்டிருந்த அம்மா வளர்த்த நாயை கருணைக்கொலை செய்தலை றொணியனிலும் அழகாக உணர்வோடு கதைகளாக்கியிருக்கிறார்.

கோமகனின் தனிக்கதையை பொதுக்கதையாக படித்து முடித்த போது, கீதையிலிருந்தோ குரானிலிருந்தோ பைபிளில் இருந்தோ ஒரு வசனத்தை உருவி உதாரணம் காட்டி நகர்த்தாமல் சொந்த வாழ்வை சம்பவங்களை உதாரணங்களாக காட்டி நகர்த்தியதற்கு ஒரு கை தட்டு. ஆனால் எல்லாக் கதைகளையும் படிக்கும் போது எழுபது எண்பது கால உத்திகளே பெரும் பாலும் பயன் படுத்தியிருக்கிறார். அதிக வர்ணனைகளும் ஆலாபனைகளும் உள்ளதாக எனக்குப் படுகின்றது. காலையில் கதிரவன் கண்விழித்தான் என்று கதை தொடங்கினால் காலையில கந்தசாமி கூடத்தான் கண் விழிக்கிறான் அதை விட்டிட்டு விசயத்துக்கு வா ... என்கிற இன்றைய இளம் தலை முறையினரின் வாசிப்பையும் கவரக்கூடிய முறையில் கோமகன் இனிவரும் காலங்களில் தனது கதைகளில் புதிய உத்திகளை புகுத்த வேண்டும் என்பது கட்டளையல்ல வேண்டுகோள்.

நன்றி : http://eathuvarai.net/?p=4864

July 09, 2015


Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில