01 ஆண்ட பரம்பரைக்கு
எமதூதன்
மன்னவரை எங்கேனும் கண்டீரோ?
வான முகட்டில்
வழி தெரியாச் சேனைப் புலத்தில்
காடுகளில்
ஊர்ப் புறத்துத் திண்ணைகளில்
அவருலவும் அந்தப் புரங்களில்.
பாவம்,
ஊர் முழுக்கக் குலுங்கியதில்
ஒப்பாரி வைத்தழுது
பிறகும், வீசுகிற எலும்புக்காய்
விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும்
சாகாமல் உயிர் வாழ்ந்தார்.
கோடிப் புறமிருக்கும்
குதிரை லாயங்களில்
இரவுகளில் வந்து தங்குவாரோ?
பிடியும்,
சேணம் இட்டுவையும்.
தொலைநீளக் கடற்பரப்பில்
நீந்தித் தொலைத்தாரோ?
மறுகரையில்,
இன்னும் ஒருதடவை
அழுது தொலைத்தாரோ?
பொழுதின் இருட்டோடு
இராவணனின் புஷ்பகத்தில்
போய்ச் சேர்ந்து விட்டாரோ?
சிம்மாசனம் அமர்ந்த
மாபெரிய மன்னவனின் படையெடுப்பை
விழிபதிக்க நாதியற்றுப் போனோரோ?
பாவம்தான்.
அக்கரையின் அரண்மனையில்
வீசும் சாமரையில் உடல் குளிர்ந்து
வேர்வையற்று,
உண்டு களித்து வாழ்கிறாரோ?
ஓய்வுக்கு,
வில்லெடுத்து வெளிக்கிளம்பிக்
காடுகளைத் திணறடித்து
(அவர் வீரம் தொலையாதா?)
வேகவைத்த பறவைகளை ருசிக்கிறாரோ?
மன்னவன் தேரோடிய
வீதிகளில் கோடையிலோ
பாளம் வெடிக்கிறது.
வெடிப்புகளில் எங்களது
பச்சை ரத்தம் உறைகிறது.
கடல் குடைந்து மீன்தேடும்
மனிதர்களே!
அக்கரையில் அவருடைய தலைதெரிந்தால்
உரத்துச் சொல்லுங்கள்,
'உங்கள் கிரீடம் எங்களிடம் இருக்கிறது.
தின்று கொழுத்தும், சிந்தித்தும்
உம்முடைய மண்டை பெருத்திருக்கும்
வரவேண்டாம்,
அளவுள்ளவன் சூடிக்கொள்ளட்டும்.'
(1985)
நன்றி : இளவாலை விஜேந்திரன்
00000000000000000000000000000
02 ரயர் தின்ற கொலை நகரம்
அம்மாவின் மடிக்குள் பயத்தில்
குழந்தைப் போல் ஒடுங்கிக் கொள்கின்றவனை
வலுகட்டாயமாய் இழுத்து செல்லும் போது
கண்களிலிருந்து வடியும் கண்ணீர்த் துளி அவனது
அனுதாபத்தை மௌனமாய் எழுதி செல்லுகின்றன
அம்மாவினால் செய்ய முடிந்த காரியம்
நீண்ட ஒப்பாரியை விதியெல்லாம் அழுது வைத்தது.
சந்தேக நபராக அழைத்து வரப்பட்டவனின்
உயிர் உடலை ரயர் நெருப்பு மடுவுக்குள்ளே
இறுக உடல் கயிறு கட்டி தள்ளுகின்ற போது
கடைசிக் குரல் அழுத்தமாய் உரத்து எழும் சப்தம்
உயர்ந்து வளரும் தீச்சுவாலையில் அடங்குகின்றன.
எரிந்து பொசுங்கும் ரயர் புகை வாசம் காற்று
வெளியில் எஞ்சிய மூக்கு துவாரம் வழி நுழைகிறது.
துயரின் சொற்களைக் பெருக்கிய வாழ்வு
கரும் புகை வான்மண்டலம் பரப்பில்
ஒரு பெரும் துயரை அச்சம் கொணர்கையிலே
பெரும்பலிபீட தோற்றம் பெற்ற குழிகளுடன்
ஒவ்வொரு உயிராய் மரிப்பில் இறக்குகிறது.
எல்லா சிதையின் வடிவங்களை மாற்றியிருந்த
பிணங்களில் நிறைவேற்றி கொண்டிருக்கின்றது
பிணக்கின் அதியுன்னதாய் முளையிடும் துவேசம்.
அரையும்,குறையுமாக எரிந்து இருக்கின்ற
எச்சங்களின் மிச்சங்களை கடித்து குதறும் நாய்களும்
சாம்பல் மேட்டிலிருந்து ஒருக்களித்து உறங்குகின்றது.
மிகுதிகளை ஊரின் எங்கும் இழுத்து
சமாதில்லாத சுடுகாடாய் நிலத்தினை புதைக்கின்றன.
நகரத்தின் தெருமுனை விளக்கின் வெளிச்சத்தை
இருள் தின்று அச்சத்தை சாக்குருவியின் அலறலில்
நீள் தெருக்களுாடாக எரிக்கன்,கள்ளி
பூக்களிலிருந்து சிதறும் வாசங்களை பேய்கள்
சாவகாசமாய் காற்றின் வெற்றிடத்தில் அறைகின்றது.
கடவுளும் நிராகரித்த கொலை நகரம் சாவுகளால்
வழிகின்ற துயரின் பிரகடனத்தினூடாக
குழந்தை தகப்பனையிழந்திருந்தது
மனைவி கணவனையிழந்திருந்தது,
தாய் மகனையிழந்திருந்தது,
சகோதரி சகோதரனையிழந்திருந்தது..
கோ.நாதன்
16/12/2013
நன்றி : http://eathuvarai.net/?p=4235
00000000000000000000000000
03 மண் மேடு
மணல் மேட்டு நிலத்திலமர்ந்த
நிலவொளி திருநாளொன்றில் எனது
குழந்தைகளும் ஓர் அணிலை போலவே
ஓடித் துள்ளி மணலில் உருண்டு
மணல் வீடு கட்டி மண்ணை
உடம்பெல்லாம் அப்பி விளையாடி
மகிழ்ந்த நிலம் பறிபோயிற்று…..
இரவெல்லாம் நாய்கள் தெருவை
கடித்து கனத்த குரைப்பில் நக்கி துடைத்தது.
புதிதாக வந்திறங்கி குவிந்த படைகள்
கருப்பு பேய்களாய் தான் உலாவுகின்றனர்.
இயற்கை கோபத்துடன்
மழையையும்.மின்னலையும், இடியையும்,
உரத்த குரலில் ஊரை உலுக்கிக் கொண்டிருந்தது.
காலைப் பொழுதினில்
வாகனங்கள் ஓடவில்லை,
மனிதர்கள் நடமாடவில்லை,
சந்தைகளில் கருவாடும் காயவில்லை
பெருந்தெருக்கள் வெறிஞ் சோடி நீள…
பழங்காலத்து சிதைந்த
கல்லொன்று இருநூறடியுயரத்துக்கு
வானெழுந்து சிலையாகி முளைத்தது
அங்கு வாழ்திருந்த காகங்களை
சகாடித்து காகத்தின் இறகினை
கிலி கோதி துரத்தி
அதிவேகத்துடன் மண் மேடு மரத்தோடு
தங்கிய அதீத தங்கப் பறவைகள்
கூடு கட்டி புனித நிலத்தினை ஆக்கிரமித்து….
தெரு முனைச் சந்தியெல்லாம் மின்
விளக்குகள்வெளிச்சத்தில் பிரகாசித்தது.
மீசை மழித்த காவி நிறப் பூனைகளும்
ஒற்றைத்தூணில் தாங்கும் கிழட்டு
துறவியை பாடலாகி உரியானப் படுத்தும். .
மொழியினை விழுங்கி நறுக்கி கிழித்த
கிளி சொண்டிலிருந்த ஆயுதம் கடவுள்.
நன்றி : http://eathuvarai.net/?p=3453
0000000000000000000000000000000
04 நிலம் மிதித்தவனின் வதை
என்னதான் மார்பு பால் சுரந்து
மடியறங்கம் திரண்டிருக்க
மழலை முகம் புதைத்து மகிழ்ந்த
அதர சிறு புன்னகையினை பிடுங்கி
பெரும் நிலத்தினை மிதித்தவன்
தலை வெட்டி திருகித் தூக்கி வீசியிருந்தான்.
என் கால்களையும்,கைகளையும்
பல பூட்ஸ்க் கால்கள்
மண்ணிலழுத்தி மல்லாந்து கிடத்திய போது
எனதான வெள்ளைத் தோலின் மார்புகளை
கடைவாய்களும் கடித்து குதறி உமிழ..
இரத்தமும், காயமும் உடம்பெல்லாம்
வழிந்து உறைந்தது.காமப் பிசாசுகள்
முலையறுத்து முலைக்
காம்பினை குழந்தையின் குதத்தில் திணித்து.
மொத்த இயக்கங்களுமற்ற
சின்ன யோனித் துவாரங்கள் வழியே
எண்ணிக்கையற்ற பெருத்த ஆண்குறிகள்
வக்கிரம் தீர்த்து கொண்டிருந்தது.
விந்துத்துளிகளின்
மகாவலி கங்கை பெருக்கம்
எனது தொடைகளிடைய வடிந்து ஓழுகும்.
சில தினங்கள் பதுங்கு குழிக்குள்
என் பிணத்தின் துர்நெடி புணர்ந்த கணம்
சிதைவடைந்திருந்த உடலகத்திலிருந்து
இன்னுமின்னும் பாலியலின் வன்மம்.
புழுக்களின் படையெடுப்பு…
வீச்சின் வாசம் மோப்பம் ஊர்ந்து பரவுகின்றது.
யசோதரவின் பரம்பரையிலிருந்து
உதித்தவனின் கரங்களுள் வந்த துவக்கு
யோனியினை குடைந்து கருப்பைக்குள் நீண்டு .
யோனிக்குள்ளே குண்டழுத்தி வெடிக்க வைத்தான்.
போரின் உக்கிர வெற்றியின் அடையாளம்
சிகிரியா உளுத்த நிர்வாண ஓவியத்தின்
நிழலினை மிஞ்சியிருந்தது
தமிழிச்சிகளின் நிஜ நிர்வாணப் படங்களும்,
நிலம் கிழித்த ரத்த ஓவியங்களும்.
நன்றி : http://eathuvarai.net/?p=3453
000000000000000000000000000
05 பாலைவன லாந்தர்
கண்ணிவெடிகள் புதைந்த நஞ்சை புஞ்சை
நிலங்களில் வாலறுந்தக் காத்தாடியை
தேடிய காலடித் தடங்களின் குருதியை
நக்கிக் குடல் சரிந்தது மலட்டு ஓநாய்
உடல் பாகங்களை பிடுங்கி
விற்பனைச் செய்யும் அரக்கனின்
உயிர் அவனது முன்நெற்றியில் முட்டும்
மகனின் இருதயக் கூட்டுக்குள்
சப்பாத்திக் கள்ளியை விளைவிக்கும்
பூமி எந்தவித பிரதிபலனையும் paal
எதிர்பார்க்கவில்லை
ஓய்வு பெற்ற பிரேதஅறைக் காவலருக்கு
உண்ணவும் பருகவும்
ஒரு பிணத்தின் வாடை
தேவைப்பட்டது
மனித இனம் தோன்றியது
அமீபாவிலிருந்தா
குரங்கிலிருந்தா
ஆதாமின் வாரிசாகவா
கேள்விகள் மட்டும் ஒலிக்கும் அறையில்
சுவர்க்கோழியின் சத்தம்
மனப்பிறழ்ந்து அலைகிறது
அடிமைப்பட்டிருந்த ஒவ்வொரு
கேவலமான பாவத்திற்குப் பின்னும்
இறந்த பின் இருக்கும்
உலகத்திற்கும் நரக நெருப்பிற்கும்
சில நிமிடங்கள் மட்டும்
நடுங்கிக்கொண்ட கைகள் புனித நூலின்
பழுத்த தாள்களைத் தடவியது
புரோட்டோபிளாசத்தை வைத்து
நிர்ணயிக்கப்படும் வாரிசுப் பத்திரங்களில்
கழிவிரக்கமான உணர்வுகள்
பெருத்த மானைத்தின்ற சர்ப்பம் என
செரித்துக்கொள்ளத் துணிகிறது
பஞ்சடைந்தக் கண்களின் வழியே
பாதரசம் போன கண்ணாடியில்
தேடுகிறாள் கடைசியாய் சிரித்த
சுதந்திரப் புன்னகையை
ஓட்கா பருகும் பதின்வயதுச் சிறுமி
உச்சகட்ட நாகரீகமாக
மேலாடையை கழட்டி எறியும் வீதியில்
கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறான்
தகவல் பரிமாற்றும் தேவதூதன்
நன்றி : http://eathuvarai.net/?p=4590
000000000000000000000000000000
06 பிடாரனின் உலகினை நோக்கி …
பல்லி இட்ட எச்சத்தின் மீது
நெளிகின்றன புழுக்கள் .
நினைவறுக்கப்பட்ட
காலங்களின்
கடைசி யுகத்தின்
இறுதி இரவாய்
கழிகிறது இந்த நிமிடம் .
வனப்பு மிகுந்த
ஓவியத்தின் வர்ணங்கள்
களவாடப்பட்ட
ஓர் இரவில்
லியனடாவோ டாவின்சியின்
விம்பம் சிரிக்கிறது
சலனங்கள் ஏதுமற்று …………
காலங்கடந்தும்
நினைவுகள் அறுந்தும்
தூசேறிப்போன
சித்திரங்களில்
பல்லி இட்ட எச்சத்தில்
இன்னும்
நெளிகின்றன புழுக்கள் .
கடைசி இரவின் வினாடிகள்
நகர்கின்றன …
ஒரு பிடாரன்
நடமாடும்
உலகினை நோக்கி …
யாத்திரீகன்
நன்றி : http://eathuvarai.net/?p=2388
00000000000000000000000000000
07 பாராளுமன்ற பாம்புகள்
மகுடிக்காரர்கள்
பாம்பாட்டிகள் போல
மகுடிகளோடு வந்தமர்தார்கள்
பொய்களும் நயவஞ்சகங்களும்
மாறி மாறி மகுடி ஊத ஊத
பாராளுமன்ற பாம்புகள் படமெடுத்தாடின
மகடிக்காரர்களின் அரசியல் மடிக்குள்
மகுடிகள் வைக்கப்பட்டதும்
கொடிய அரவங்கள் ஆவிகளாய்
ஊருக்குள் சீறிப்பாய்ந்தன
கண்கொத்திகள் கண்களை கொத்தின
நாகங்கள் தவளை பிடிப்பது போல
நாக்குகளை பிடித்துத் தின்றன
புடையன்கள் அடிவயிறுகளை கடித்தன
நல்லபாம்பு காதுபுற்றால் புகுந்து
மூளைக்குள் படுத்துக்கொண்டது
மலைப்பாம்புகள் அச்சமின்றி எழுகின்றவர்களை
வெள்ளை வேன்கள் போல முழுசாய் விழுங்கின
போராயுதங்கள் போன்ற மகுடிகளால்
பாம்புகள் அட்டகாசமாய் ஆட்டம்போட்டன
மக்கள் மரமண்டைகளாய்
மகடிக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்
28/10/2012 மாலை 5.45
ஈழக்கவி
September 24, 2015
Comments
Post a Comment