ஈகோ
ஈகோ அல்லது – நான் – என்பதை சுயகற்பனை பிம்பம் என்று சொல்வது மிகவும் பொருந்தும்.பிறக்கும் குழந்தை வெளியே பார்க்கிறது. அவைகளைப் பதிவு செய்துகொள்ள தன்னைப் பற்றிய ஒரு அடையாளம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைச் சுற்றிப் பதிந்து வைத்தால்தான் மீண்டும் எடுத்தாள முடியும். ஆகவே பயன்பாடு கருதி ஒரு -நான் – குழந்தைக்கு அவசியமாகிறது. அந்த சூழலைப் பயன்படுத்தி குழந்தைக்கு நாம் விரும்புகிற விதமாக அடையாளம் கொடுத்து சுய கற்பனை பிம்பம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறது சமூகம். அன்பு காட்டும் தாய், அரவணைக்கும் குடும்பம், கொஞ்சும் கூட்டம், விளையாட தோழர்கள் என வளரும் குழந்தை தன் உணர்வுகளை மூடிய ஒரு சுயகற்பனை பிம்பத்தை, பொய்யான ஒரு அக உலகத்தை உருவாக்கிக் கொள்கிறது.வளர வளர வாழ்க்கையே சுயகற்பனை பிம்பத்திற்காக போராடும் போராட்டமாக ஆகிவிடுகிறது.
சுய கற்பனை பிம்பத்தை பெரிதாக ஏற்படுத்தி காப்பாற்றக் கற்றுக்கொடுக்கிறது சமூகம். தனது திறமைகள் ஈகோ – வாகின்றன. தனது இயலாமைகள் தாழ்வு மனப்பான்மையாகின்றன. எல்லாம் சேர்ந்ததுதான் – நான்.
சுயகற்பனை பிம்ப கோட்டை கட்டி காப்பாற்ற முடியாதவர்கள் தோல்வியாளர்களாக பயத்தில் துவண்டு பதுங்கி வாழ ஆரம்பிக்கின்றனர். அவர்களது நானை நியாயப்படுத்தும் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை என விரிகிறது அவர்கள் உலகம்.
வெற்றி பெறுபவர்கள் அந்த வெறியூட்டும் போதையான சுயகற்பனை பிம்பத்திலிருந்து வெளிவராமலிருக்க அதிகாரம், சூழ்ச்சி, ஆளுமை, அடிமைப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர்.
00000000000000000000000
"நீ உன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும்போது நீ யாரையும் அடிமை படுத்த மாட்டாய். நீ வெறுமனே கொடுக்கிறாய். நீ அதற்காக ஒரு நன்றியையோ ஒரு நன்றியுணர்வையோ கூட எதிர்பார்க்க மாட்டாய். ஏனெனில் நீ எதையும் பெறுவதற்காக கொடுக்கவில்லை. நீ நிரம்பி வழிவதால்தான் கொடுக்கிறாய், நீ கொடுத்துத்தான் ஆக வேண்டும். எனவேதான் கொடுக்கிறாய். எனவே நன்றியை எதிர்பார்க்க மாட்டாய், பதிலாக அவர்கள் வாங்கிக் கொள்வதால் நீதான் நன்றியோடு இருப்பாய்."
00000000000000000000000000
பொறுப்புணர்வு
பொறுப்புணர்வு என்பது திறந்திருத்தல், தயாராக இருத்தல், பதிலுணர்வுடன் இருத்தல். யாராவது உன்னை அழைக்கும்போது நீ பதிலளிக்கவில்லையென்றால், நீ திறந்தவனாக இருக்க மாட்டாய். யாராவது உன்னை நேசிக்கவரும்போது நீ அதற்கு உதவி செய்ய மாட்டாய், நீ அதற்கு இசையமாட்டாய். பதிலாக நீ தடைகளை உண்டாக்குவாய். நீ இதுபோல செய்தால் – மற்றவர் அழைக்கும்போது நீ பதிலளிக்கவில்லையென்றால் – நீ அழைக்கும்போது அடுத்தவர் அதை மதிக்க மாட்டார். காதலிப்பவர்களில் அனேகர் பேர் இது போலத்தான் செய்கின்றனர். ஏனெனில் மற்றவர் அழைக்கும்போது பதிலளிக்காமல் இருப்பது ஆணவத்திற்கு மிகவும் உகந்த செயலாக இருக்கிறது. பதிலுணர்வு கொள்ளாமல் இருப்பது. அப்போது நீ உனக்கு எஜமானனாக இருக்கிறாய், நீ தயாராக இல்லாதபோது யாரும் உன்னை இழுக்க முடியாது,. யாரும் உன்னை தள்ள முடியாது. நீ யாரையும் பின்பற்றுவதில்லை என்று உனக்கு தோன்றுகிறது. எனவே அடுத்தவர் அழைக்கும்போது தயாராக இரு. முழுமையாக பதிலுணர்வு கொள். கஞ்சனாக இருக்காதே. அதுதான் பொறுப்புணர்வோடு இருப்பது என்பதன் பொருள்.
0000000000000000000000000
தனித்தன்மை
ஒரு குறிப்பிட்ட விதமாக வாழ வேண்டும் என்பது பழைய கருத்து. பழைய முறை தனித்தன்மை கொண்டவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அது குறிப்பிட்ட விதமாக வாழ்வதற்க்கே ஆனது. அது ஒருவிதமான அடிமைத்தனத்தை உருவாக்குகிறது.
நான் தனித்தன்மையை போதிக்கிறேன், தனித்துவமான தனித்தன்மையை சொல்கிறேன். உன்னை நேசி, உனக்கு மரியாதை கொடு. ஏனெனில் உன்னைப் போன்ற ஒருவன் இதுவரை இருந்தது இல்லை, இருக்கப் போவதுமில்லை. பிரபஞ்சம் ஒருபோதும் மறுபடி செய்வது இல்லை. நீ தனித்துவமானவன். ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானவன். நீ அடுத்தவரைப் போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ காப்பியடிப்பவனாக இருக்க வேண்டிய தேவையில்லை. நீ உன்னைப் போலவே, உனது இருப்பில் இருக்க வேண்டும். நீ உனது விஷயங்களைத்தான் செய்ய வேண்டும்.
நீ உன்னை ஏற்றுக் கொண்டு உன்னை மதிக்க ஆரம்பித்தால் நீ முழுமையடைவாய். பின் அங்கே உன்னை பிரிக்க ஏதுமிருக்காது. அங்கே பிளவை உண்டாக்க எதுவுமில்லை.
000000000000000000000000000000
ஒப்பீடும் கோபமும்
நீங்கள் ஒப்பீட்டை விட்டுவிடுங்கள். இயற்கையில் புல்லும் நட்சத்திரமும் சம அளவு முக்கியமானவையே என்று ஓஷோ கூறுகிறார். ஆகவே நீங்கள் புதர் என்றால் புதர், புல் என்றால் புல், அரசமரம் என்றால் அதுதான். எல்லாமும் இயற்கையில் கொண்டாடப்படுகிறது. ஆகவே யாரையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒப்பீட்டை விட்டுவிட்டால் மன ஓட்டம் பெட்ரோல் போடாத கார் போல ஓடமுடியாமல் ஆகிவிடும். ஒப்பீடு ஒரு மனிதனை சிதைத்துவிடுகிறது, குலைத்துவிடுகிறது. அவன் அதன் பின் ஒருமையாய் முழுமையாய் இருப்பதற்கே இயலுவதில்லை.
மற்றொன்று கோபம், பொறாமை, பேராசை, வன்முறை, காமம், தந்திரம், சுயநலம், உடமைகொள்ளல், போன்ற விலங்குணர்ச்சிகளை அமுக்கி வைத்துக்கொண்டு வேஷம் போடாதீர்கள். விலங்குணர்ச்சிகளில் தவறோ, அவை குற்றமோ அல்ல. அந்த உணர்ச்சிகளுடன்தான் நாம் பிறக்கிறோம். அவை ‘உயிர் பிழைத்திருத்தல்’ என்ற அடிமட்ட உணர்விலிருந்து அதற்காக பிறந்தவைதான். ஆகவே அவை பாவமல்ல. தாழ்ந்ததல்ல.
000000000000000000000000000000000
பலம்
ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தான். ஏனெனில் ஒவ்வொருவரும் இறைமை பொருந்தியவர்கள்தான். எல்லோரும் பிரபஞ்சத்தில் இறைவனில் வேர் கொண்டவர்கள்தான். அதனால் எல்லோரும் ஆற்றலுடையவர்கள்தான். இதை நினைவில் கொள். மனித மனம் இதை மறந்துவிடத்தான் நினைக்கும். இதை நீ மறந்துவிட்டால் நீ பலமிழந்துவிடுவாய். நீ பலமிழந்துவிட்டால் பின் நீ பலமடைய ஏதாவது செயற்கைவிதமான முயற்சிகளை மேற்கொள்வாய். இதைத்தான் கோடிக்கணக்கான மக்கள் செய்து வருகிறார்கள். பணத்தைத் தேடும்போது உண்மையிலேயே நீ எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தைத் தேடும்போது நீ உண்மையிலேயே பலத்தைத்தான் தேடுகிறாய். கௌரவத்தைத் தேடும்போது, அரசியல் பதவியைத் தேடும்போது எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தை, பலத்தை, ஆற்றலுக்காக தேடுகிறாய் – ஆனால் ஆற்றல் எப்போதும் கதவு மூலையில் காத்துக் கொண்டிருக்கிறது. நீ தவறான இடங்களில் தேடிக் கொண்டிருக்கிறாய்..
00000000000000000000000
கவனம்
அன்பின் சுவை அறியாமல் போலியான இந்த கவனிப்பு சுவையில் விழுந்து வருந்துபவர்களையே நான் பார்க்கிறேன். கவனிப்பு அதிகமாகும் பக்கம் மனம் சாய்வதால் உறவுகளில் விரிதல், நட்பில் விரிசல், வாழ்க்கையே தடம் புரளுதல் என எல்லாம் நடக்கிறது. இந்த கவனிப்பு போதையை பயன்படுத்தி குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் ஏராளமான தீய பழக்கங்கள் மற்றவர்களால் ஏற்றப்படுகின்றன. இதற்குத் தடுப்புச் சுவர்களும் எழுப்பபடுகின்றன. ஆனால் உண்மையான இயல்பான வழி அதுவல்ல. ஒரு குழந்தைக்கு வளர வளர மற்றவர் கவனிப்பில் நாட்டம் குறைய வேண்டும். மற்றவர் கவனம் தேவை என்பதை தாண்டி அது வளர வேண்டும்.
தனக்காக, தன் தன்மையை வாழ்ந்து அனுபவித்து அது ஆனந்தப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள் கிடைப்பார்கள். இல்லாவிடில் புகழுக்கும் பெருமைக்கும் அலையும் கவனிப்பு போதையில் ஆழ்ந்து கிடக்கும் கும்பலே மிஞ்சும்.
000000000000000000000000
மனித மனம்
ஒரு மனிதனின் உயர்வு அவன் எத்தனை பேரால் கவனிக்கப்படுகிறான் என்பதைப் பொறுத்தே உள்ளது இன்றைய சமூகத்தில். ஆனால் அது உண்மையா அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா தலைவர்களும் புகழ் பெற்றவர்களாய் இன்று உள்ளவர்களும் எவ்வளவு மனவளர்ச்சி குன்றியவர்களாய் உள்ளனர் என்பதை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். அவர்களிடம் எவ்வளவு பேராசை, பொய், கீழ்மை, ஏமாற்றுத்தனம், நடிப்பு, வியாபாரம். ஆனாலும் அவர்களை மக்கள் வழி காட்டும் தலைவர்களாய், குருவாய், தனது மானசீக எதிர்காலமாய் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் இவர்கள் தேடும் போதையில் திளைப்பவனாய், அதிகம் கவனிக்கப்படுபவனாய் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே. புகழ், அந்தஸ்து, கௌரவம் என்று மனிதனுக்கு போதையூட்டும் எல்லாவற்றின் அடித்தளமும், அதனில் ஆட்பட்டுவிட்ட மனித மனம்தான்.
July 28, 2015
Comments
Post a Comment