Skip to main content

சுவைத்(தேன்) -பாகம் 06


01 நேற்றைய மாலையும் இன்றைய காலையும்



நேற்று மாலை
நாங்கள் இங்கிருந்தோம்.

சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்
வாகன நெரிசலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.

பூபால சிங்கம் புத்தகநிலைய
முன்றலில் நின்றோம்.
பத்தி¡ரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம்.

பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப்
பார்த்தவா றிருந்தோம்.
பலவித முகங்கள்
பலவித நிறங்கள்
வந்தும் சென்றும்
ஏறியும் இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்.

சந்தைவரையும் நடந்து சென்றோம்.
திருவள்ளுவர் சிலையைக் கடந்து
தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி
பண்ணை வெளியில் காற்று வாங்கினோம்.
'றீகலின்' அருகே
பெட்டிக் கடையில்
தேனீர் அருந்தி - சிகரட் புகைத்தோம்.

ஐ¡க் லண்டனின்
'வனத்தின் அழைப்பு'
திரைப்படம் பார்த்தோம்.

தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில்
சைக்கிளில் ஏறி
வீடு திரும்பினோம்.

இன்று காலை
இப்படி விடிந்தது.
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் தி¡ரிந்தன.
குண்டுகள் பொழிந்தன.
உடலைத் துளைத்து
உயிரைக் குடித்தன.

பஸ்நிலையம் மரணித் திருந்தது.
மனித வாடையை நகரம் இழந்தது.
கடைகள் எரிந்து புகைந்து கிடந்தன.
குண்டு விழுந்த கட்டடம் போல
பழைய சந்தை இடிந்து கிடந்தது
வீதிகள் தோறும்
டயர்கள் எரிந்து கா¢ந்து கிடந்தன.

இவ்வாறாக
இன்றைய வாழ்வை
நாங்கள் இழந்தோம்.
இன்றை மாலையை
நாங்கள் இழந்தோம்.

(1977 / அலை-10)

நன்றி : எம்.ஏ.நுஃமான்

0000000000000000000000000

02 இன்று இல்லெங்கிலும் நாளை



எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்து  போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

(1984 / அலை-24)

நன்றி : சண்முகம் சிவலிங்கம்

000000000000000000000000000000000

03 அவர்களுடைய இரவு



நிழலே இன்றி
வெயில் தகிக்க
நீளும் பகல் பொழுதில்
தனியாக ஒரு காகம்
இரங்கி அழும்.

வேலி முருங்கையும்
மெளனமாய் இலையுதிர்க்கும்
அரவமொடுங்கிய
நள்ளிரவுகள்.
ஆள்காட்டி மட்டும்
ஒற்றையாய்க் கூச்சலிடும்
சேலைக் கொடியில்
அவனது வேட்டி ஆடும்...
நெஞ்சில் திகில் உறையும்
விழித்தபடி தனித்திருத்தலில்
மனம் வெந்து தவிக்கும்.

அன்றைய முன்னிரவில்
நெஞ்சில் ஆழப் பதிந்தவை
மீண்டும் கருக் கொள்ளும்;
அச்சம் சுண்டியிழுக்கும்.
அந்த இரவில்
இருள் வெளியே
உறைந்து கிடந்தது
ஐந்து ஜீப்புகள்
ஒன்றாய்ப் புழுதி கிளப்பின
சோளகம் விசிறி அடித்தது
என் ஆழ்மனதில்
அச்சம் திரளாய்
எழுந்து புரள
அவனை இழுத்துச் சென்றனர்.

பல்லிகள் மட்டும்
என்னவோ சொல்லின
கூரைத்தகரமும் அஞ்சி, அஞ்சி
மெதுவாய்ச் சடசடத்தது.
காலைச் சுற்றிய குழந்தை
வீ¡ரிட்டழுதது.
விடுப்புப் பார்க்க
அயலவர் கூடினர்.

நீட்டிய துவக்குகள்
முதுகில் உறுத்த அவன்
நடந்தான் அவர்களுடன்
அந்த இரவில்
ஐம்பது துவக்குகள்
ஏந்திய கரங்கள்
என்னுள் பதித்த சுவடுகள்
மிகவும் கனத்தவை.

அந்த இரவு
அவர்களுடையது.

(1982 / புதுசு-6)

நன்றி : ஊர்வசி

0000000000000000000000000000000

04 சொல்லாமற் போகும் புதல்வர்கள்



மார்கழி மாதத்தின் முன் இரவில் ஓர்நாள் -
அவன்
நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
வழமையாக கோயில் மணி ஒன்பதடிக்க
வாசலில் அவன் வருவது தெரியும்.
எழுந்து சென்று
கதவைத் திறந்து
அவனை அழைத்து
உணவு போடவும் அப்போதும்
அவன் மெளனம்தான்.
எப்பொழுதும் அவன் அப்படித்தான்
சாப்பிடும்போது எதுவும் பேசான்.
என்மகன் -
நள்ளிரவாகியும் வரவேயில்லை
எங்கே போனான்?

அன்று
தங்கை அயர்ந்து தூங்கியிருந்தாள்
நானும் அவனைத் தேடி இருந்தேன்
அதன் பின் வரவேயில்லை.
நீ எங்கு போனாய் என்பதை அறியேன்.

ஆனால், இன்று
அறிந்தேன் வேறொரு கதை
உனது நண்பன் சொன்னான்
மீசை அரும்பும் இந்த வயதில்
நாட்டுப்பற்று வந்ததா உனக்கு!
அப்படியானால்
கடமைகள் இருக்கும்
வீரனாய் இருந்து வீடு திரும்பு.

(1984 / புதுசு-9)

நன்றி : ஒளவை

00000000000000000000000000000000

05 மரணம்



எங்கே இருக்கின்றாய்?
எம் உண்மைத் தோழ!

முகம் தெரியாத கரிய இருளில்
திசை தெரியாத சம வெளிகளில்
உன் முகத்தை எங்கே என்று
கால்களை இழந்த நாம் தேடுவது?

நசுக்கப்பட்டவைதான் எம் குரல்கள்
பால்நிலவு தெறிக்க
குமுறி எழுந்துவரும் கடல் அலையாய்
சடசடத்து இலை உதிர்க்கும்
பசுமரங்களை அதிரவைத்து
அசைந்து செல்லும் காற்றாய்
எங்கள் குரல்வளைகள் அறுக்கப்படும்வரை
உண்மைக்காக
குரல் கொடுப்போம்!

தோழ!
மரணத்தின் நாட்களை
நாங்கள் எண்ணுகிறோம்
இப்போதெல்லாம்
உணர்கிறோம்
மரணம் -
கடினமானதல்ல.

மரணத்தைக் கண்டு
நாம் அஞ்சவில்லை
ஒரு அனாதைப் பிணமாய்
ஒரு அடிமையாய்
புதிய எஜமானர்களுக்காக
தெருக்களில் மரணிப்பதை
நாம் வெறுக்கிறோம்!

மகிழ்ச்சிக்காய்ப் போராடி
மக்களுக்காக மரணிப்பதற்கு
நாம் அஞ்சவில்லை.

தோழ!
நம்பிக்கையோடு
நாங்கள் இருக்கிறோம்.
துளிர் விட்டு வளரும்
பூச்செடியில் புதிதாய் அரும்பும்
பூக்களுக்காக.

சிறகு முளைத்த இளம் பறவைகள்
சிறகடித்துப் பறக்கும்
ஒலிகளுக்காக.

எங்களை நெருங்கி வருகின்ற
மரணத்துக்காக
நம்பிக்கையோடு
நாங்கள் காத்திருக்கிறோம்!

(1985)

நன்றி : செழியன் 


September 02, 2015

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...