Skip to main content

மகிழடி வைரவரும் அப்பாகுட்டியரும்



வைரவர் உக்கிர மூர்த்தி. முந்தி வைரவருக்கு ஒரு தகர கொட்டகையும் இடைக்கிடை மடையும் விளக்கும் ஏத்தினால் காணும்.உப்பிடித்தான் கோப்பாயிலை மகிழடி வைரவர் எண்டு இருந்தார் .அவற்றை அட்ரஸ் வந்து குறிப்பாய் சொல்லுறதெண்டால் கோப்பாய் ஏ ஜி ஏ ஒபிசுக்கு பக்கத்தில் ஒழுங்கையிலை இருக்கிறார் .முந்தி ஆள் வலு சிம்பிளான ஆள். நான் ஊருக்கு போகேக்கை ஒருக்கால் மகிழடி வைரவரை ஒரு எட்டு பாத்திட்டு போவம் எண்டு போனன். இப்பத்தையான் மகிழடி வைரவர் றிச்மான். கோபுரம் என்ன. இப்பீக்கர் என்ன. டெய்லி அய்யர் என்ன. எண்டு சொல்லி வேலையில்லை .

அந்த நேரம் ஊரிலை அப்பாக்குட்டியர் எண்டு ஒருத்தர் இருந்தவர் அவர் கொஞ்சம் கைவைத்தியமும் பாப்பார். அதோடை என்னமொருத்தர் குளறி சின்னத்தம்பியர் எண்டும் ஒருத்தர் இருந்தவர்; ஆள் கொஞ்சம் கைப்பார்ட் பார்ட்டி .இவரை ஏன் குளறி எண்டு சொல்லுறதெண்டால் செத்தவீடு, நல்லது கெட்டதுகளுக்கு எல்லாம் முன்னுக்கு நிக்கிற அருமையான சீவன் .என்ன எந்தநேரமும் மெல்லமாய் கதைச்சு நான் பாக்கேலை . கதைக்க தொடங்கினால் காதுகன்னம் எல்லாம் வெடிக்கும் அனால் கருட்டு சுருட்டு இல்லாத சீவன் . இவை தண்ணியிலைதான் கூட்டாளிமார். மத்தும்படி ரெண்டுபேரும் கீரியும் பாம்புத்தான் . 

அப்பாக்குட்டியருக்கு மகிழடி வைரவர் கடைசி திருவிழா நேரத்திலை கலை வரும். அப்ப பெரிசுகள் சொல்லுவினம் அவருக்கு வைரவர் வாலாயம் இருக்கெண்டு எங்களுக்கு அந்த நேரத்திலை உதுகள் விளங்கேலை. எண்டாலும் அதுக்கு முதலே அப்பாக்குட்டியர் சுதியும் ஏத்திபோடுவார் . கலை முத்தி காலிலை சலங்கை கட்டி சன்னதம் ஆடி கடைசியிலை அப்பாக்குட்டியர் வைரவருக்கு பக்கத்திலை இருக்கிற மகிழமரத்திலை ஏறிப்போய் இருத்திண்டுவர். இந்த நேரம் பாத்து நம்ம குளறி சின்னத்தம்பியர் வந்து, ஆ .......ஆ ... சரி ..........சரி ..............அப்பாக்குட்டி காணும் காணும் இறங்கு எண்டு சொல்ல, மச்சான் தன்ரை அலப்பலை குறைச்சு பம்மிக் கொண்டு இறங்குவர். அந்த நேரம் அப்பாக்குடியரை பாக்கவேணும் பாவமாய் இருக்கும். அப்பாக்குட்டியரும் சரி குளறியரும் சரி இப்ப உயிரோடை இல்லை .ஆனால் இவையின்ர காலத்திலை நான் சீவிச்சு இருக்கிறன் எண்டதே எனக்கு சந்தோசமாய் இருக்கு .ஏனெண்டால் அவையள் பம்பலாய் நாலு பேரை சிரிக்க வைச்சு தங்களாலை நாலு பேருக்கு உதவி ஒத்தாசை செய்து போய் சேர்ந்த சீவனுகள். இப்பத்தையானுகளை பாத்தால் அவையள் சிரிக்கிறதே பெரிய விசயமாய் கிடக்கு .

யாவும் உண்மையே

கோமகன்

February 13, 2016

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...