Skip to main content

அவுஸ்திரேலியா - மெல்பனில் (05-12-2015) நான்கு நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு லெ .முருகபூபதி



கல்லிலிருந்து கணினி வரையில் அனைத்து மொழிகளும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இனிவரும் யுகத்தில் மொழிகள் எதில் பதிவாகும் எனக்கூறமுடியாது. ஆனால் மொழிகள் வாழும். மறையும்.

வாசகர்களிடத்தில்தான் மொழியின் வாழ்க்கை தங்கியிருக்கிறது. அதனால்தான் வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்று எமது முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால், இந்த நூற்றாண்டில் மக்கள் வாசிப்பதற்காக தேர்ந்தெடுத்துள்ள சாதனங்கள் இலகுவாகிவிட்டது. அவற்றில் படிக்கலாம். பார்க்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம், கோபிக்கலாம். உடனுக்குடன் பதில்களையும் பதிவேற்றலாம். ஆயினும் அச்சில் வெளியாகும் படைப்புகளுக்கும் பத்திரிகை இதழ்களுக்கும் மதிப்பு இன்னமும் குறையவில்லை. இணையத்தளங்கள் , வலைப்பூக்கள் வந்தபின்னரும் அவற்றில் எழுதுபவர்கள், பின்னர் நூலுருவாக்குவதற்கு விரும்புவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இன்றும் கணினி அறிவு அந்நியமாகியிருக்கும் வாசகர்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கும் மூத்ததலைமுறையினருக்கும் அச்சுப்பிரதிகள்தான் வாசிப்புத்தாகத்தை தணித்துவருகின்றன. தமிழ் சமூகத்தில் புத்தகசந்தைகள் - கண்காட்சிகள் நடப்பது போன்று ஆங்கிலேயர்கள் உட்பட வேறு இனத்தவர்களிடம் வாசகர் வட்டம், புக்கிளப் (Book Club) முதலான அமைப்புகள் இயங்கிவருகின்றன.

தமிழ் மக்கள் மத்தியில் நூல்வெளியீடுகள் தற்காலத்தில் சடங்காகிவிட்ட காட்சியை யும் காணமுடிகிறது. மங்கல விளக்கேற்றல், வரவேற்புரை, தலைமையுரை, ஆசியுரை, வாழ்த்துரை, பாராட்டுரை, பிரதம விருந்தினர் உரை, வாழ்த்துப்பா, மாலை அணிவித்தல், பொன்னாடை போர்த்துதல், முதல் பிரதி, சிறப்பு பிரதிகள் வழங்கல், பதிலுரை, நன்றியுரை முதலான சம்பிரதாய சடங்குகளில் வெளியிடப்படும் நூலின் உள்ளடக்கம் - மதிப்பீடு என்பன இரண்டாம் பட்சமாகிவிடும்.

விழா முடிந்து வெளியாகும் பத்திரிகைகள் - இதழ்களில் தமது படம் வெளியாகியிருக்கிறதா...? என்பதில் ஆர்வமும் அக்கறையும் காண்பிக்கும் சிறப்பு பிரதிகள் பெறும் பிரமுகர்கள், வாங்கிய நூலை வாசிப்பதில், வாசித்துவிட்டு நூலாசிரியருக்கு தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் காண்பிப்பதில்லை. நூலாசிரியரும் அச்சிட்ட செலவு வந்தால் போதும் என்று ஆறுதலடைந்துவிட்டு, அடுத்த நூலை அச்சிடத் தயாராவார். மீண்டும் அதே கதைதான் தொடரும்.

இந்தப்பின்னணிகளுடன்தான் அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தனது வளர்ச்சியில் அனுபவப்பகிர்வு என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடத்திவருகிறது. இதன்மூலம் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்ளும் மரபை வளர்த்துவருகிறது.

கடந்த காலங்களில் சிறுகதை, கவிதை, நாவல், மற்றும் தமிழ் விக்கிபீடியா பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வுகளையும் சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியையும் நடத்தியுள்ள இச்சங்கம், அண்மையில் மெல்பனில் நடந்த 15 ஆவது எழுத்தாளர் விழாவில் ஏழு நூல்களின் விமர்சன அரங்கையும் நடத்தியது.

குறிப்பிட்ட நூல்களை எழுதியவர்கள் அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னியில் வசிக்கும் படைப்பாளிகள். சிறுகதை, கவிதை, நடனக்கலை, அகராதி, புனைவுக்கட்டுரைகள் முதலான வகைகளில் அவை இடம்பெற்றிருந்தன.

எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் நடைபெறவிருக்கும் வாசிப்பு அனுபவப்பகிர்வு சற்று வேறுவிதமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக தெரிவுசெய்யப்பட்ட நூல்களின் படைப்பாளிகள் எவரும் அவுஸ்திரேலியாவில் இல்லை. அதனால் அவர்களின் பிரசன்னமும் இல்லை. ஏற்புரைகளும் இல்லை.


பிரான்ஸில் வதியும் ஷோபா சக்தியின் பொக்ஸ் - BOX ( நாவல்) சாத்திரியின் ஆயுதஎழுத்து ( நாவல்) கோமகன் எழுதிய கோமகனின் "தனிக்கதை" (சிறுகதை) இலங்கையிலிருக்கும் வடகோவை வரதராஜனின் நிலவு குளிர்ச்சியாக இல்லை ( சிறுகதை) முதலான நூல்களே வாசிப்பு அனுபவப்பகிர்வில் இம்முறை இடம்பெறும் நூல்கள்.

ஷோபா சக்தியின் படைப்புமொழி தனித்துவமானது. நீண்ட காலத்திற்கு முன்னர் பிரான்ஸ_க்குச் சென்றவர். படைப்பிலக்கியம், பத்தி எழுத்து, விமர்சனம் மற்றும் திரைப்படத்துறை என்பன இவருடைய ஆளுமையை வெளிப்படுத்தி வருபவை. இலங்கையின் போர்க்கால வன்முறைகளையும் அவற்றை எதிர்கொண்டவர்களின் அகப்புற எழுச்சிகளையும் பதிவுசெய்து வாசகர் மத்தியில் கவனிப்புக்குள்ளானவர். அவருடைய புதிய நாவல் பொக்ஸ் (BOX) நீடித்த போருக்குப்பின்னர் வன்னியில் மீள்குடியேறிய மக்களின் வெளிப்புற பாதிப்புகளை தகவலாக வெளியிட்டு ஆவணப்படுத்தாமல், அவர்களின் அகப்புற மனவிகாரங்களையும் போரின் சுவடுகள் அவர்களின் ஆழ்மனத்தை எவ்வாறு தாக்கியிருக்கிறது என்பதையும் பதிவுசெய்கிறது.

இதன் மீதான தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்ளவிருப்பவர் இன்றைய தமிழ் இலக்கிய இணையத்தளப்பரப்பில் வீச்சுடன் எழுதிவரும் ஜே.கே. ஜெயக்குமாரன். அண்மையில் இவருடைய கொல்லைப்புறக்காதலிகள் என்ற நூலும் வெளியானது. படலை (www.padalay.com) என்ற வலைப்பூவில் இவருடைய ஆக்கங்களை காணலாம்.




இலங்கையில் கோப்பாய் வடக்கில் வதியும் வடகோவை வரதராஜன் 1980 - 1990 காலப்பகுதியில் இலங்கை இதழ்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நிலவு குளிர்ச்சியாக இல்லை. வாரவாரம் அல்லது மாதாமாதம் பிரசுரத் தேவைகளின் அவதியில் எழுதி நிரப்பிய கதைகள் அல்ல. நிலவு ஏன் குளிர்ச்சியாக இல்லாமல் போனது என்பதை தான் வாழும் கிராமத்தின் மண்வாசனையுடன் பதிவுசெய்கிறார். இந்த நூலின் மற்றும் ஒரு சிறப்பு இதற்கு அணிந்துரை எழுதியிருப்பவர் மறைந்த மூத்த கவிஞர் கலாநிதி இ.முருகையன். ஆனால் இந்நூலைப் பார்க்காமலேயே விடைபெற்றுவிட்டார்.

நிலவு ஏன் குளிர்ச்சியாக இல்லாமல் போனது என்பதை தமது வாசிப்பு அனுபவத்தின் ஊடாக சொல்லவருபவர் எழுத்தாளர் டொக்டர் நடேசன். வெளிநாடுகளில் வதியும் நான்கு படைப்பாளிகளின் அண்மைக்கால நூல்கள் நான்கின் வாசிப்பு அனுபவப்பகிர்வுக்கு வித்திட்டதும் அவர்தான். தனது தொழில் வாழ்க்கை அனுபவங்களையும் - சமூகம், மனிதர்கள், பிராணிகளின் உளவியல் சார்ந்த நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்திருப்பவர். வலைப்பூவில் இவருடைய வலைப்பூ - www.noelnadesan'sblog.com



சாத்திரியின் ஆயுதஎழுத்து நாவல், ஈழப்போரில் நேரடி சாட்சியாக இருந்தவரின் அனுபவமும் சுயவிமர்சனமும் பதிவாகிய படைப்பு. உண்மைகளை மறுதலித்துக்கொண்டு முன்னே செல்லமுடியாது என்பதை துல்லியமாகச்சொல்லும் இந்நாவல், வாசகர்களுக்கு அதிர்வை ஏற்படுத்தும். இப்படியெல்லாம் நடந்திருக்குமா...? என்ற கேள்விகளுடன்தான் பக்கங்களை புரட்டுவார்கள். உண்மைகள் கலந்த பொய்மைக்கும் பொய்கள் சங்கமித்த உண்மைகளுக்கும் இடையில் நின்று ஆயுத எழுத்து மனச்சாட்சிகளை உலுக்குகிறது.

இந்த நாவல் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை சமர்ப்பிக்கவிருப்பவர் சிறுகதை, பத்தி எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மறுவளம் என்னும் கட்டுரைத்தொகுதி சிலவருடங்களுக்கு முன்னர் வெளியானது. உதயம் பத்திரிகையில் சினிமா விமர்சனங்களும் எழுதியிருப்பவர்.ஈழப்போராட்டத்தை நேரடியாக சந்தித்த அனுபவம் பெற்றவர்.


கோமகன் எழுதியிருக்கும் கோமகனின் "தனிக்கதை" - புகலிட வாழ்வின் வலிகளையும் சந்திக்கும் தரிசனங்களையும் சித்திரிக்கின்றன. மண்வாசனை, பிரதேச மொழிவழக்கு, சோஷலிஸ யதார்த்தப் பார்வை, முற்போக்கு என்ற வாய்ப்பாடுகளையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், புகலிட வாழ்வின் கோலங்களை படைப்பு இலக்கியத்தில் அழுத்தமாக்குபவர்கள் வரிசையில் இணைந்திருப்பவர் கோமகன்.


அவருடைய தொகுப்பினைப்பற்றிய தமது வாசிப்பு அனுபவத்தை பகிரவிருப்பவர், தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுள்ள அறவேந்தன். தேர்ந்த வாசகர். சில இலக்கிய அமைப்புகளில் அங்கம் வகிப்பவர். மெல்லினம் மாத இதழின் முதன்மை ஆசிரியர்.

குறிப்பிட்ட நான்கு நூல்களில் இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் பதிப்பித்திருப்பவர் கிளிநொச்சியில் வதியும் கவிஞர் கருணாகரன். அவருடைய மகிழ் பதிப்பகத்தினால் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட வாசிப்பு அனுபவப்பகிர்வு போன்ற நிகழ்ச்சிகள் இலங்கையிலும் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, கனடா உட்பட அய்ரோப்பிய நாடுகளிலும் நடைபெறவேண்டும். பெரும்பாலான நூல் விமர்சன அரங்குகளில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு பார்க்கும் மனப்போக்கும் மலிந்திருக்கிறது.

இந்நிலையும் மாறவேண்டும். ஒரு படைப்பாளியின் படைப்பை சக படைப்பாளி படித்து கருத்துச்சொல்லும் பண்பும் குறைந்து வருகிறது.

முன்னர் இலங்கையில் வருட ரீதியில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் என்ற அடிப்படையில் விரிவான தகவல் பதிவுகள் விமர்சனப்பாங்கில் வெளியாகின. இதுவிடயத்தில் இலங்கையில் ஆக்கபூர்வமாக உழைத்தவர் மூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான். அவர் அத்துடன் நில்லாமல் சிற்றிதழ்களில் வெளியான சிறுகதைகளையும் தனித்தனித் தொகுப்புகளாக வெளியிட்டு சிறந்த பணியாற்றியவர். அவரைப்போன்று கலாநிதி ந. சுப்பிரமணியன் மற்றும் கைலாசபதி, சிவத்தம்பி , தெளிவத்தை ஜோசப் ஆகியோர் இலங்கையிலும் சிட்டி சுந்தரராஜன், சோ. சிவபாத சுந்தரம், ஜெயமோகன் முதலானோர் தமிழகத்திலும் ஒவ்வொரு காலகட்டத்தையும் ஆவணப்படுத்தினர்.

ஆனால், இணையத்தளங்களின் பெருக்கத்திற்குப்பின்னர் இந்நிலை இல்லை. இதனால் தேர்ந்த வாசிப்பு ரசனையிலும் தேக்கம் வந்துவிட்டது.

தேக்கத்தை அகற்றி வாசிப்பு அனுபவப் பயிற்சிகளை எழுத்தாளர் -வாசகர் - இலக்கிய மாணவர்கள் மத்தியில் வளர்க்கவேண்டியது இன்றைய தலைமுறையினரின் கடமையாகும்.

குறிப்பிட்ட நான்கு நூல்களின் வாசிப்பு அனுபவத்தைத் தொடர்ந்து போருக்குப்பின்னர் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற தலைப்பில் மெல்பனுக்கு வருகைதந்துள்ள இலக்கியத்திறனாய்வாளர் சி. வன்னியகுலம் உரையாற்றுவார்.

இவர் ஏற்கனவே ஈழத்துப்புனைகதைகளிற் பேச்சு வழக்கு, புனைகதை விமர்சனம் முதலான நூல்களை எழுதியிருப்பவர்

அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிக்கு, தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கலை, இலக்கிய ஆர்வலர்களை அழைக்கின்றது.




லெ முருகபூபதி

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...