Skip to main content

அறத்துப்பால்-பாயிரவியல்-நீத்தார் பெருமை-The Greatness of Ascetics -Grandeur de ceux qui ont renoncé au monde 21-30





ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பணுவல் துணிவு. 21


ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று விட்டவரின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் முடிவாகும்.

எனது பார்வை:

மனுசனாய் பிறந்தவன் சுயநலம் இல்லாமல் இருக்கறது தான் திறமான சீவியம். அதைத்தான் வரலாறுகளும் நூல்களும் கியாதியாய் சொல்லும் கண்டியளோ. இப்ப நீங்களும் இப்பிடிச் சீவிச்சியளெண்டால் , உங்களைப்பற்றியுமெல்லே நாலைஞ்சு பேர் கதைச்சுகதைச்சு உங்களைப்றி யூனியிலேயே ஒரு பாடத்திட்டமாக்கிப் போடுவங்கள் எண்டால் பாருங்கோவன். இல்லாட்டில் ஒரே ஒரு புத்தகம் படத்தோடை உங்களைப் பற்றி வரும், அதுதான் கல்வெட்டு. வசதி எப்பிடி?

The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood.

Les Ecritures exaltent au dessus de tout autre Bien la grandeur de ceux qui ont renoncé au monde et mènent une vie de discipline.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22


பற்றுக்களை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வது என்பது , உலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றது அதாவது இயலாததாகும்.

எனது பார்வை:

உலகத்திலை இப்ப எவ்வளவு சனம் இருக்கு? மண்டைகாயிற வேலையெல்லோ? இதுக்குள்ளை செத்தவங்களின்ர தொகையைக் கணக்கெடுக்கேலுமே? இப்ப எங்கடை நாட்டை எடுத்தியளெண்டால், கணாமல் போனவங்கடை கணக்கு வேறை சொல்லி அடங்காது. இதுகளை எல்லாம் கட்டுக்குள்ளை கொண்டு வந்து கணக்கு எடுக்கிறது எண்டது மினைக்கெட அம்பட்டன் பூனையைச் சிரைச்சானாம் எண்டமாரிப் போடும். அதால மற்றவைன்ர நலத்துக்காகச் சீவிச்சவையின்ர பெருமையளை அளந்து சொல்லிறது எண்டது ஒரு கஸ்ரமான வேலை பாருங்கோ.

As counting those that from the earth have passed away,'Tis vain attempt the might of holy men to say.

Tenter d’évaluer la grandeur de ceux qui ont renoncé au monde, c’est tenter de dénombrer les morts ici-bas.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23


இம்மை , மறுமை இரண்டின் கூறுகளை ஆராய்ந்து அறிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே மிக உயர்ந்ததாகும் .

எனது பார்வை:

எங்கடை யோகர் சுவாமிகளிட்டை ஆரும் போனால் அடிக்கடி ஒரு வசனம் , "சும்மாஇரு" எண்டு சொல்லுறவர் . சில சனம் குளம்பிப் போய் சொல்லுவினம் உந்தாளுக்கு நட்டுக்கழண்டு போச்சுதெண்டு. அவர் ஏன் சும்மா இரு எண்டு சொன்னார் எண்டால், ஆசைகளை விட்டு பற்று அற்ரு இருந்தாலே நல்லது கெட்டது, சந்தோசம் துக்கம், வசதி, ஏழ்மை, எண்டு எது வந்தாலுமே சந்தோசமாய் இருக்கலாம். இது எங்கடையாக்களுக்கு விளங்கேல. நீங்களும் கண்டகடியளுக்கெல்லாம் ஆசைப்படமால் நல்ல பிள்ளையளாய் இருந்தால் உங்களால மற்றவைக்கும் ஒரு பாதுகாப்பு. நீங்கள் இல்லாத இடத்திலை உங்களைப்பற்றி நாலுபேர் கெப்பராய் எல்லோ கதைப்பினம்.

Their greatness earth transcends, who, way of both worlds weighed,In this world take their stand, in virtue's robe arrayed.

La grandeur de ceux qui, après avoir pesé et compris l’essence des deux attributs (plaisir et douleur) de la vie, ont embrassé l’ascétisme l’emporte sur tout ici-bas.

உரன் எனும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து. 24


அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன் மேலான வீடுபேறு அடைவான்.

எனது பார்வை:

ஆசையை அடக்குங்கோ எண்டு பெரிய பருப்பு மாதிரிச் சொல்லிப்போட்டன். ஆசை மட்டும் எண்டில்லை உங்கடை ஐஞ்சு புலன்களையும் அடக்கி ஆளுறது தான் ஆசையை விடுறதுக்கு அரிவரிப்பாடம். ஆனால் அது வில்லண்டம் பிடிச்ச கயிட்டம் பாருங்கோ. அதைத்தான் ரெண்டெழுத்து ஐய்யாவும் சொல்லுறார், யானை எண்ட பெரிய மிருகத்தை எப்பிடி அங்குசத்தால பாகன் அடக்கிறானோ அப்பிடி ஐம்புலனை அடக்கோணும் எண்டு. இந்த ஐம்புலனுகளை வைச்சுக்கொண்டு எங்கட சனம் செய்யிற அரையண்டங்களை நாங்களும் பாக்கிறம் தானே.

He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains.

Celui qui, grâce au croc de l’energie, protège les cinq (sens) est une semence pour le champ meilleur du Ciel.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 25


ஐம்பொறிகளின் வழியாக எழுகின்ற ஆசைகளை ஒழித்தவனுடைய வலிமைக்கு வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே சான்று

எனது பார்வை:

மனுசனாய் பிறந்தவன் ஆகமிஞ்சி ஒரு அறுபது வயசு மட்டும் இருப்பான். அதிலையும் அவன்ரை பகுத்தறிவு வேலைசெய்யிறது ஒரு இருபது வயசுக்கு மேலதான். ஆக கூட்டிக்கழிச்சுப் பாத்தால் ஒரு நாப்பது வரியம்தான் அவன் வாழ்கையை அனுபவிக்கிறது. இதிலை போய் ஐம்புலன்களை அடக்கி இருங்கோ எண்டால் அவன் என்ன பாவைப்பிள்ளையே? ஆனால் இதில எனக்கு ஒரு விசயம் இடிக்குது. வள்வளுவர் ஐய்யா ஏன் போய் இந்திரனுக்கு உவ்வளவு சேர்ட்டிபிக்கற் குடுக்கிறார்? இந்திரன் வில்லண்டம் பிடிச்ச ஆள். நெடுக தன்ரை ஏரியாவில ரம்பை,மேனகை, ஊர்வசி,திலோத்தமை எண்டு அவையின்ரை டான்ஸ்சுகளை பாத்துக்கொண்டு இருக்கிறவர். அந்த இந்திரன் போய் எப்பிடி ஐம்புலனை அடக்கினவர் எண்டு இவர் சொல்லுறார் ?

Their might who have destroyed 'the five', shall soothly tellIndra, the lord of those in heaven's wide realms that dwell.

La puissance de celui qui détruit en lui les cinq (passions produites par les sens) q été attestée par Indra lui-même, Roi des vastes régions célestes.

செயற்கரிய செய்வார் பெரியர் ; சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26


செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவரே பெரியோர் ; செய்பவற்கு அரிய செயல்களைச் செய்ய முடியாதவர் சிறியோர்.

எனது பார்வை:

இது உண்மைலையே எல்லாருக்கும் ஒரு தேவையான பாடம் பாருங்கோ. சும்மா சாப்பிட்டம் , படுத்தம் , முகநூலிலை வந்து ரெண்டு லோ எடுத்தம் எண்டு இருக்காமல். எவன் தன்னைச் சுத்தி இருக்கிற ஆக்கள் தன்னாலை பிரையோசனப்படவேணும் எண்டு நினைச்சு தன்ரை அலுவலுகளைக் கொண்டு போறானோ அவன் பாருங்கோ சரித்திரத்தில ( பெரியவனாய் ) நிலையா நிக்கிறான். இதுக்கு எதிர்மாறாய் நிக்கிறதுககளை என்னத்தைச் சொல்ல, ஐஞ்சுசதத்துக்கும் உதவாத ( சிறியோர் ) கோஸ்ரியள். இனிமேலாவது பிள்ளையள் ஒரெப்பன் துரும்பையாவது எடுத்துப்போடப் பாருங்கோ என்ன....... ?

Things hard in the doing will great men do;Things hard in the doing the mean eschew.

Les grands d’entre les hommes font seuls, ce qu’il est difficile de faire (le domptage des sens) ; les faibles en sont incapables.

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 27


சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் , என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் தான் உலகம் உள்ளது .

எனது பார்வை:

அப்பிடி ஆராவது இருந்தால் சொல்லுங்கோப்பா கேப்பம். அப்ப இந்த விஞ்ஞானியள் எல்லாம் இந்த ஐம்புலனுகளை பகுத்தறியாதவையே? இவையளால எவ்வளவு வில்லண்டம் உலகத்துக்கு? ஒரு சின்னப்பெடியனைக் கண்டுபிடிச்சதும் ஒரு விஞ்ஞானிதானே!? எவ்வளவு சனம் அப்பவே செத்த்து. இப்ப ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அணுகுண்டுக்கு மேலை குந்திக்கொண்டிருக்கினம்.

Taste, light, touch, sound, and smell: who knows the way Of all the five,- the world submissive owns his sway.

Le monde appartient à celui qui examine et connaît la nature des cinq (sensations) qui sont appelés : la saveur, la lumière, l’attouchement, le son et l’odeur.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28


பயன் நிறைந்த மொழிகளையே பேசும் பற்றற்ர துறவியரின் ( சான்றோரின் ) பெருமையை அவருடைய ஆணையாக வழங்கும் மந்திரங்களே உலகிற்கு உணர்த்திவிடும்.

எனது பார்வை:

இதில எனக்கு ஐமிச்சம் இல்லை. ஏனெண்டால் , உலகத்தின்ர சரித்திரத்தை பிரட்டிப்போட்ட ஆக்களைப் வடிவாய் பாத்தால் , இந்தப்பூனையும் பால் குடிக்குமோ எண்டமாரி வலு சாதாரணமய் ( பற்றற்று ) இருப்பினம். ஆனால் அவையின்ரை செய்கை இல்லாட்டில் வினை எண்ட உராய்வு தான் சரித்திரத்தை சுத்த வைச்சிருக்கு .

The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.

La grandeur des ascètes dont les paroles sont riches de sens est mise en évidence par l’efficacité même des prières récitées en leur honneur.

குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 29


நல்ல பண்புகளாகிய குன்றின் மேல் ஏறி நிற்கும் சான்றோரின் சினத்தை ஒருகணமேனும் சமாளித்தல் முடியாததாகும் .

எனது பார்வை:

பெரிசுகள் சும்மாவே சொன்னவை சாது மிரண்டால் காடு கொள்ளாது எண்டு ஐம்பத்தெட்டு கலம்பகத்தை பாத்து கேள்வப்பட்ட ஒரு சிறிய சாது தொடராய் மிரண்டதால தானே ஒருபெரிய தேசியப்போராட்டதை கொண்டெழுப்பினது

The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure.

Il est impossible de résister même une seconde, à la colère des réligieux qui se tiennent sur la colline des qualités, (renoncement,vraie connaissance et absence du désir).

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30


எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகும் அறிவோரே அந்தணர் என்பவராவர்.

எனது பார்வை:

இதில ஐயா சத்தியமாய் சாதி பாக்கேலை எல்லாச் சீவனிலையும் அன்பும் பரிவையும் கொண்டு ஒழுக்கமாய் இருக்கிற எல்லாக்கோஸ்ரியளுமே அந்தணர் தான் எண்டு ஒரு நிறுவல் போடுறார் பாருங்கோ அங்கைதான் ஐயா நிக்கறார்.

Towards all that breathe, with seemly graciousness adorned they live;And thus to virtue's sons the name of 'Anthanar' men give.

Ceux qui sont appelés andanars, à cause de leur conduite, pleine de vraie compassion pour tout ce qui a vie, ne sont autres que les ascètes.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம