பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர். இன்னும் சிலர் கடவுளே இல்லை இதில் சொர்க்கம் எங்கே நரகம் எங்கே என்று வாய்ப்பேச்சு பேசுவர். ஆக எவருமே அறியாத எவருக்கும் புரியாத ஒரு மாய உலகமே மரணத்திற்கு பின்னால் நம்மை தொடர வைக்கிறது. எதற்குமே அஞ்சாத மனிதன் கூட தன் மரணத்திற்கு நிச்சயம் அஞ்சுவான். மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத வேளையில் நாம் ஏன் மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? இந்த பூமியில் நாம் தானம்,தர்மங்களை செய்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே மரணத்திற்கு பின்னால் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் இன்னொரு உலகத்தை அடைய முடியும் என்று கற்பனைக் கதைகளை நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர். எவ்வளவோ அறிவியல் வளர்ந்திருக்கிறது. பல தொழில் நுட்பங்களை கண்டறிந்து விட்டோம். ஆனால் மரணத்திற்கு பின்னர் மனிதன் என்ன ஆகிறான் என்பதை மட்டும் எவராலும் அறிய முடியவில்லை. இது பிரபஞ்சத்தின் உண்மையாகக் கூட இருக்கலாம். "சாகின்ற நாள் தெரிந்து விட்டால் வாழுகின்ற நாள் நரகமாகிவிடும் என்பார்கள்". அது உண்மை தான். வாழும் வரை நாம் மகிழ்ச்சியாக ஒவ்வொரு நொடியையும் வாழக் கற்றுக் கொள்வோம். நாம் ஏழையோ, பணக்காரனோ எப்படி இருந்தாலும் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்வோம். இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதருக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு தீர்வு காண முடியாத பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும். சிலர் பிரச்சனைகளின் மேலே ஏறி ஓடிக்கொண்டிருப்பர். இன்னும் சிலர் மூளையிலே முடங்கி எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை மேல் சோதனை என இடிந்து விடுவர். இவர்களைப் போன்றவர்களுக்கு நான் கூறிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இந்தப் பிறவி , இந்த உடல் எதுவுமே நமக்கு நிரந்தரம் இல்லாதவை, நமது பிரச்சனைகளும் கூட அப்படித்தான் நமக்கு நிரந்தமானவை அல்ல. நீங்கள் அளவுக்கதிகமான பிரச்சனையில் சிக்கித் தவிப்பதாக நினைத்தால் அதற்கு ஒரே தீர்வுகாக உங்கள் மரணத்திற்கு பின்னால் எதுவுமே இல்லை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் ஏழையோ, பணக்காரனோ அல்லது அறிவாளியோ, முட்டாளோ எப்படி இருந்தாலும் மரணத்திற்குப் பின் ஒரு வெற்றிடமே. பலர் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து மீள முடியாமலோ, வேறு செயல்களில் ஈடுபாடு செலுத்த முடியாமலோ இருப்பார்கள். நீங்கள் அந்த வேளையில் அதை மறப்பதற்கு உங்கள் மரணத்திற்கு பின்னால் உள்ள ஒரு யூகிக்க முடியாத வாழ்க்கையை யோசித்து பாருங்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து, போராடி பல பிரச்சனைகளை கடந்து இறுதியில் மரணத்திற்கு பின்னால் நாம் அனைவரும் மாயமாய் மறைந்துவிடத்தானே போகிறோம். ஆகவே எதையும் பெரிதென நினைக்காமல் வாழ்க்கை செல்லும் பாதையில் செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமாக அமைத்துக் கொள்ளுங்கள்.
http://ennavazhkai.b...og-post_18.html
Comments
Post a Comment