அடிகளார் விழித்த விழிப்பு அடிவயிற்றைக் கலக்கியது இருவருக்கும்.கூர்வேலுக்கும் கொடுவாளுக்கும் அஞ்சாத இளங்கோ கூட அந்தக் கண்களை உற்றுப் பார்க்க முடியாமல் வேறுபுறம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
வீரமல்லன் தோள்மீது மெல்லத் தன் கையை வைத்து வெளியே அழைத்தான். அந்தப் பாறையைத் தாண்டிக் கொண்டு அப்பால் செல்வதற்கு வேறு வழிகள் இருக்கின்றனவா என்று இருவரும் பார்த்தார்கள். சுற்றிலும் செங்குத்தான பாறைகளும் முட்புதர்களுமே சூழ்ந்திருந்தன. அடிகளாருக்குப் பின்னால் சிறிது ஒளி தெரிந்ததால், அவரைத் தாண்டித்தான் பாறைகளுக்குள் புகுந்து செல்ல வேண்டும். அவராகவே வழி விடவேண்டும்; அல்லது அப்புறப்படுத்திவிட்டு உள்ளே நுழைய வேண்டும். வீரமல்லன் ரகசியமாக இளங்கோவேளிடம் கேட்டான், “பாண்டி நாட்டில் இன்னுமா சமணர்கள் இருக்கிறார்கள்? இவரைப் பார்த்தால் சமணத்துறவியைப் போல் தோன்றுகிறதே?”
“இன்னும் சமணர்கள் சிலர் இல்லாமலில்லை. பாண்டியர்களால் அழிக்கப்பட்டவர்களையும் அவர்களுக்குப் பயந்து வடக்கே குடி பெயர்ந்தவர்களையும் தவிர, எஞ்சியவர்கள் இந்தப் பகுதிகளில் அஞ்சி வாழ்கிறார்கள். நாடு நம்முடையதாகிவிட்ட பிறகு, அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கிறது, என்றாலும் பழைய பயம் அவர்களை ஆட்டிக் கொண்டிருக்கிறது.”
“இப்போது நாம்தான் இவரைக் கண்டு பயப்படுகிறோம்” என்றான் வீரமல்லன். அடுத்தாற்போல் அவனே இந்த அடிகளாரை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளி விட்டு “நாம் குகைக்குள் புகுந்து போனால் என்ன?” என்று
கேட்டான்.
“அபசாரம்! அபசாரம்!” என்றான் இளங்கோ. “இவரிடமே போய் வழி கேட்டுப் பார்ப்போம். இதற்காக இவரை நாம் துன்புறுத்த வேண்டாம். மாமன்னர் நமக்கு இட்டிருக்கும் கண்டிப்பான கட்டளையை நாம் மறந்துவிடக் கூடாது. யாருடனும் எதற்காகவும் சண்டை நேருமென்று தெரிந்தால் அந்த
இடத்தை விட்டு விலகச் சொல்லியிருக்கிறார் வீரமல்லா! கை தவறிக்கூட உடைவாளைத் தொட்டு விடாதே!”
மீண்டும் குகை வாயிலுக்குப் போய் எட்டிப் பார்த்தார்கள் இருவரும். அடிகளாரோ அடித்து வைத்த கற்சிலைபோல் இருந்த இடத்தைவிட்டு நகாராமல் இருந்தார். ஒருவேளை அவர் வடக்கிருந்து வீடு பெறுவதற்காக அந்தத் தனி இடத்துக்கு வந்திருக்கிறாரோ என்று இளங்கோ நினைத்தான்.
சமணத் துறவிகளில் சிலர் தம்முடைய கடைசி நாட்களை அன்னம், தண்ணீர், ஆகாரமின்றியே கழிப்பார்கள். தியானித்துக் கொண்டே, கட்டையைத் தரையில் கிடத்திவிட்டு; உயிரை அருகதேவனின் திருவடி நிழலுக்குக் கொண்டு செல்வார்கள். இப்படி உயிர் துறப்பதற்கு வடக்கிருத்தல் என்று சொல்வது சமண மரபு. ஆனால் அவர் வடக்கிருக்க வந்தவராகவும் இளங்கோவுக்குத் தோன்றவில்லை. வைரம் பாய்ந்திருந்த அவர் உடற்கட்டை நோக்கியபோது, ஆண்டு ஒன்றுக்கு அவர் பட்டினி கிடந்தாலும் அருகரின் அருள் அவருக்குக் கிட்டாதென்று தோன்றியது. மழிக்கப் பெறாத சடை முடிகளுடன் அவர் விசித்திரமாகக் காட்சியளித்தார். நல்ல வேளை, அவர் திகம்பரக் கோலத்தில் இல்லை; இடுப்பில் கோவணம் தெரிந்தது. கால மாறுதலுக்கேற்ப சமணர்களும்
மாறிக்கொண்டு வந்தார்கள்.
இளங்கோ தன் தொண்டையை மெல்லக் கனைத்தான். இடையில் மூடியிருந்த விழிகள் மீண்டும் திறந்தன.
“அடிகளாரின் அமைதியைக் கலைக்க வேண்டியிருக்கிறது; அதற்காக எங்களை மன்னிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான் இளங்கோ.
“அமைதியைத்தான் குலைத்து விட்டீர்களே!” என்று சிம்ம கர்ஜனை செய்தார் துறவி. “நீங்கள் யார்? எங்கே வந்தீர்கள்? உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?”
“அவரைச் சிறிது சாந்தமாகப் பேசச் சொல்” என்று இளங்கோவின் காதுகளில் கூறினான் வீரமல்லன். இளங்கோ தன் நண்பனை அசட்டை செய்துவிட்டு அவரிடம் பணிவுடன் கூறினான். “நாங்கள் வழிப்போக்கர்கள். மலையைத் தாண்டிச் செல்வதற்கு எங்களுக்கு வழியைச் சொன்னால் உதவியாக
இருக்கும்.”
“வழிப்போக்கர்களுக்கு இங்கு வேலையே இல்லை. ஏன்? மலைக்கு அடுத்தாற்போல் பத்து சமணக் குடும்பங்கள் பதுங்கி வாழ்வது உங்கள் கண்களை உறுத்துகிறதோ? பாண்டியத் தொல்லைகள் மாண்டுபோன பிறகுமா இந்த அக்கிரமம்? உங்கள் வரவைக் கண்டாலே ஊரிலுள்ளவர்களெல்லாம்
ஓடிப்போய்க் காட்டில் ஒளிந்து கொள்வார்களே!”
“நாங்கள் இருவரும் சோழநாட்டைச் சேர்ந்தவர்கள்.”
“யாராயிருந்தால் என்ன?”
“அடிகளே! வெள்ளாற்றங் கரையிலும், கோனாட்டிலும் கானாட்டிலும் உங்களுக்குப் புகலிடம் கொடுத்துப் பாதுகாப்பளித்தவர்கள் நாங்கள். மதுரையிலிருந்து காஞ்சிக்குப் புறப்பட்டவர்களுக்கு வரவேற்பளித்து, நார்த்தா மலையையும் சித்தன்ன வாயிலையும், குன்றாண்டார் கோயிலையும் கொடுத்தவர்கள் நாங்கள். சோழர்களிடம் கூடவா உங்களுக்குச் சீற்றம்?”
அவருடைய சீற்றம் இன்னும் அடங்கியபாடில்லை.
“நீங்கள் திரும்பிப் போகிறீர்களா, இல்லையா?” என்று கத்தினார். கத்திவிட்டு, “நீங்கள் திரும்பாவிட்டால் என்னைக் கொன்றுபோட்டு, என் உடல்மேல் நடந்து செல்லுங்கள்” என்றார். இளங்கோவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வீரமல்லன் அவன் காதருகில் சென்று, “அடிகள் சொல்கிற படியே செய்துவிட்டுப் போனால் என்ன?” என்று கேட்டான். அடிகளின் காதுகளிலும் இந்தப் பேச்சு விழுந்திருக்க வேண்டும்.
அவர் தம்முடைய குரலைச் சற்றுத் தாழ்த்திக்கொண்டு கூறினார். “சோழ நாட்டுச் சேனாபதி கிருஷ்ணன் ராமனை உங்களுக்குத் தெரியுமா? பத்து நாட்களுக்கு முன்பு அவர் இங்கு தரிசனத்துக்கு வந்துவிட்டுப்போனார். அவர் சமணராகையால் அவரை யாம் தடுக்கவில்லை. சைவர்களாகிய உங்களுக்கு இங்கு என்ன வேலை? கொலை செய்வதைப் பற்றி இவ்வளவு எளிதாகப் பேசுகிறீர்களே!”
சேனாபதி கிருஷ்ணன் ராமனுடைய பெயரைக் கேட்டவுடன் வீரமல்லன் நடுநடுங்கினான். இருவரும் பல முறைகள் துறவிக்குச் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்திவிட்டு வந்த வழியே திரும்பினார்கள். சேனாபதி கிருஷ்ணன் ராமனுடைய பெயர் அவர்களிடம் மந்திரம்போல் வேலை செய்தது. சமணராக இருந்தாலும் இல்லறவாசி அவர். அவர் புதல்வர் மாராயன் அருண்மொழியும் சோழர்களின் பெருந்தனத்து அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றினார்.
சற்றுத் தூரம் நடந்தவுடன் சுற்றும்முற்றும் திரும்பிப் பார்த்தான் இளங்கோ. வலதுபுறம் புதர்களுக்கப்பால் ஒரு மண்மேடு தெரிந்தது. ஒற்றைப் பனைமரம் அந்த மேட்டின் உச்சியில் தலைவிரித்து நின்றது. அதையே கண்
கொட்டாமல் நோக்கிய இளங்கோ, “வீரமல்லா! எனக்குப் பசி எடுக்கிறது. வருகிறாயா, அந்தப் பனைமரத்தடிக்குப் போய் நுங்கு கிடைக்குமா என்று பார்த்துவிட்டு வருவோம்?” என்றான்.
“அது ஆண் பனையோ, பெண் பனையோ தெரியாது. பெண்பனையானால் அதில் நுங்கு இருக்குமோ, முற்றிய காய் இருக்குமோ தெரியாது. நீ வேண்டுமானால் போய்ப் பார்த்துவிட்டு வா; நான் இங்கு காத்திருக்கிறேன்” என்றான் வீரமல்லன்.
இதே பதிலை விரும்பியவன்போல் இளங்கோ செடிகளை விலக்கிக் கொண்டு புதருக்குள் சென்றான்.
“பசிக்குப் பனம் பழமாக இருந்தாலும் விட்டுவிடாதே” என்று வீரமல்லனின் குரல் பின்னாலிருந்து ஒலித்தது.
நல்ல வேளையாக குலைகுலையாய் நுங்கு தள்ளிக் கொண்டிருந்த பெண்மரம் அது. விறுவிறுவென்று மரத்தில் ஏறிய இளங்கோ உடனே குலைகளை வெட்டாமல் அதன் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். நான்கு
புறங்களிலும் தன் பார்வையை அலையவிட்டான். சமணத் துறவி தங்களுக்கு வழிவிட மறுத்த திசையில் ஓர் பள்ளத்தாக்குத் தெரிந்தது. அங்கே அவன் கண்ட காட்சியால் அவன் நெஞ்சு ஒரு கணம் நின்றுவிட்டு மீண்டும் துடித்தது.
ஆட்டு மந்தையைப்போல் அந்தப் பள்ளத்தாக்கில் குதிரைகள் மேய்ந்தன. எறும்புச் சாரைகளைப்போல் மனிதர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். சூரியன் ஒளிக்குத் தன் கையால் நெற்றியை மறைத்துக் கொண்டு நன்றாக உற்றுப் பார்த்தான் இளங்கோ. எதேச்சையாக அவன் பார்வை மலைக்குகைக்குள் திரும்பியபோது அங்கே வெளியில் வந்து, அந்தத் துறவி நின்று கொண்டிருந்தார். அவர் தன்னையே பார்க்கிறார் என்பதையும் இளங்கோ கண்டு கொண்டான். வேகமாக இரண்டு குலைகளை வெட்டிக் கீழே தள்ளிவிட்டுச் சரசரவென்று இறங்கினான்.
குலைகளும் கையுமாக வரும் நண்பனை வீரமல்லன் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றான்.
“எங்கே மரத்தின் உச்சியிலேயே குடியிருக்கத் தொடங்கி விட்டாயோ என்று நினைத்தேன். சோலைமலைக் குரங்குகளுக்கு விவரம் தெரிய வந்தால் உன்னுடைய கொடும்பாளூர்க் கோட்டையை அதமாகிவிடும்!”
மரத்தின் மேலிருந்து தான் கண்ட காட்சியை அவன் தன் நண்பனிடம் சொல்லவில்லை. பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிவிட்டு, “உம், விரைந்து சாப்பிட்டு எழுந்து வா!” என்று எதிரிகளின் தலைகளைச் சீவுவதுபோல் பனங்காய்களைச் சீவி வைத்தான் இளங்கோ. வீரமல்லனோ மற்றவனுடைய பசியைப்பற்றி லட்சியம் செய்யாமல் சீவிப் பெற்ற பனங் காய்களின் கண்களில் கட்டை விரலை விட்டு வாயால் சுளைகளை உறிஞ்சித் தள்ளினான். வீரமல்லனின் விலாப் புடைத்து அவனுக்குக் களைப்பு ஏற்பட்ட பிறகே இளங்கோவுக்கும் பாதிப் பசி ஆறியது.
குதிரைகளை அவர்கள் அவிழ்க்கப் போகும் சமயம் அங்கே காய்ந்த சருகுகளின் சலசலப்புச் சத்தம் கேட்டு இருவரும் திடுக்கிட்டார்கள். அருவிக்கு அப்பால் நின்ற கடம்ப மரத்தின் மறைவிலிருந்து யாரோ ஒரு மனிதன் வெகு வேகமாக ஓடினான். எலும்புக்கூடு உயிர்பெற்றெழுந்து ஓடுவதுபோல் அத்தனை ஒல்லியாக, விகாரமாக இருந்தான் அந்த மனிதன். கவிழ்த்த சட்டியைப்போல் ஒட்டிக் கொண்டிருந்தது அவனுடைய பரட்டைத் தலை.
வீரமல்லன் அவனுடைய முதுகுக்குக் குறிபார்த்துத் தன் உடைவாளை ஓங்கினான். இளங்கோவின் கரம் அதைப் பற்றிப் பிடுங்கிக் கொண்டது. என்றாலும் வீரமல்லன் சும்மாயிருக்கவில்லை. தன் இடுப்பில் சொருகியிருந்த வளை எறியை எடுத்துச் சுழற்றி வீசினான். குறி தவறாத அந்த வளை எறி அந்த எலும்பு மனிதனின் கணுக்காலில் பாய்ந்தது. “ஆ!” என்ற அலறலுடன் அவன் கீழே விழுந்து புரண்டு துடித்தான்.
அவனை நோக்கிப் பாயப்போன வீரமல்லனை இளங்கோ தடுத்து நிறுத்தி, “நீ புறப்படப் போகிறாயா இல்லையா?” என்று அதட்டினான். “வந்த வேலையை மறந்துவிட்டு வீண் கலவரத்தில் அகப்பட்டுக்கொள்ளாதே!”
“அவன் சுந்தரபாண்டியனுடைய ஒற்றனாக இருந்தால்? அவனை இப்படியே விட்டுவிட்டு நாம் கிளம்பலாமா?”
“நாம் விழிப்போடிருக்கிறோம் என்பதை அவன் தெரிந்து கொண்டு போய்ச் சொல்லட்டும். வா! இனிமேல் நாம் இங்கே தங்கக்கூடாது.”
இளங்கோவுக்கு, தன்னைப் பனைமரத்தின் மேல் அந்தத் துறவி பார்த்துவிட்ட பிறகு விவரிக்க முடியாத பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
“என்னுடைய வளை எறியையாவது எடுத்துக் கொண்டு போகலாம் வா” என்று அழைத்த வீரமல்லனிடம் “உனக்கு அதைப்போல் ஆயிரம் தருகிறேன், குதிரை மேல் ஏறு” என்று பதில் அளித்தான் இளங்கோ.
வளைந்த மரக்கட்டையாலான சிறிய ஆயுதம் அந்த வளை எறி. தூரத்தில் மறைந்து செல்லும் மனிதர்களையோ பிடிக்கு அகப்படாமல் ஓடுபவர்களையோ அதனால் தடுத்து நிறுத்த முடியும். தொலைவில் செல்பவன் நண்பனா எதிரியா என்று தெரியாத சமயம், அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் அவன் போக்கைத் தடுக்க, சோழ வீரர்கள் இந்த வளை எறியை வைத்திருந்தனர். வீரமல்லனின் வளை எறி என்றைக்குமே தன் குறிதவறியதில்லை.
தொடரும்
Comments
Post a Comment