தொள்ளாயிரத்து நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை மாதத்தில் ஒரு நாள் முற்பகல் பொழுது.
கிளையொடு கிளை பின்னிப் பிணைந்து காட்டு மரங்கள் நிழலும் மலரும் உதிர்த்திருந்த சோலைமலைச் சாலையில் குதிரைகள் இரண்டு விரைந்து சென்று கொண்டிருந்தன. பாதை கரடுமுரடான மலையடிப் பாதை; குதிரைகளும் அரபு நாட்டு முரட்டுக் குதிரைகள். அந்தக் குதிரைகளைச் சோழவள நாட்டின் காவேரித் தண்ணீரும், காவேரிக் கரையை ஒட்டி மண்டிக் கிடந்த பசும்புல்லும் நன்றாகக் கொழுக்க வைத்திருந்தன. குழந்தைகளை வளர்ப்பது போலவே குதிரைகளை வளர்த்தார்கள் சோழ நாட்டினர். மனிதர்களுக்காக அங்கு நெல் விளைந்தது. குதிரைகளுக்காகக் கொள் விளைந்தது.
ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு முன்னால் தஞ்சைமா நகரை விட்டுக் கிளம்பிய அந்தப் புரவிகள், சேர நாட்டிலும் தென்பாண்டிய நாட்டிலும் சுற்றி அலைந்துவிட்டு, இப்போது மதுரைக்கு அருகே உள்ள சோலைமலைக்கு வந்திருக்கின்றன. வைகறையில் வைகையாற்றங்கரை மண்டபத்தை விட்டுப் புறப்பட்டவை, இன்னும் எங்கெல்லாம் சுற்றியலைய வேண்டுமோ? அவைகளுக்குக் காவேரிக் கரைப் பசும் புல்லின் நினைவு அடிக்கடி எழுவதுண்டு.
“எப்படியும் இன்றைக்கு நாம் கொடும்பாளூர் அரண்மனைக்குப் போய்விட வேண்டும்” என்றான் முதற் குதிரையின் மேல் வீற்றிருந்த இளைஞன்.
“என்ன சொன்னாய், இளங்கோ? கொடும்பாளூருக்கா? சொந்த ஊரின் நினைவு வந்துவிட்டது போலிருக்கிறது.”
“வந்த வேலையெல்லாம் ஒரு வழியாக முடிந்து விட்டதே!
சோலைமலைப் பகுதிகளில் கண்ணோட்டம் விட்டுவிட்டு, குதிரைகளை வேகமாகத் தட்டிவிட வேண்டியதுதான்.”
“அடடா! இந்தச் சோலை எவ்வளவு செழிப்பாயிருக்கிறது, பார்த்தாயா? பாண்டிய நாட்டுக்குள்ளேயும் இப்படி ஓர் அழகு பதுங்கியிருக்கிறதே!”
“பாண்டிய நாடு என்று சொல்லாதே வீரமல்லா!” என்றான் முதற்
குதிரையில் சென்ற இளங்கோவேள். “குமரியிலிருந்து வேங்கி வரையில் இப்போது நம் புலிக்கொடி பறப்பதை மறந்துபோய் விட்டாயா? தென் சோழ மண்டலம் என்று சொல்.”
வீரமல்லன் சிரித்தான்.
“என்ன சிரிக்கிறாய்?” என்று சினந்து கேட்டான் இளங்கோ.
“பாண்டிய நாடு என்ற பெயரைக் கேட்டவுடன் உனக்குக் கோபம் வருகிறதே; ஆனால் பாண்டியநாடு இன்னும் நம்மோடு ஒட்டவில்லையே என்று சிரித்தேன்” என்றான் வீரமல்லன். “பாண்டியர்கள் நம்மோடு ஒட்டிக்கொள்வதற்குப் பதிலாக வெட்டிக்கொள்ள முயல்கிறார்கள். இதைத்தானே நாம் இவ்வளவு நாட்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம். சேரனும் பாண்டியர்களோடு சேர்ந்து நம்மைப் பதுங்கித் தாக்க நினைக்கிறான்.”
இளங்கோவேள் அலட்சியமாய்ச் சிரித்துவிட்டுக் கூறினான்: “சோழர்களின் தயவால் நாடாளும் உரிமை பெற்ற இந்தப் பாண்டிய மீன்கள் புலியிடம் துள்ளப் பார்க்கின்றன. சேரனின் ஒடிந்துபோன வில் தன்னை நிமிர்த்திக்கொண்டு புல்லின் மீது அம்பெய்யப் பார்க்கிறது. வீரமல்லா! மீன்களால் புலியை விழுங்கவும் முடியாது. ஒடிந்த வில் இனி என்றுமே நிமிரப் போவதும் இல்லை. இவற்றைக் கண்டு அஞ்சும் அளவுக்கு நீ கோழையாகி விட்டாயா?”
“வீரமல்லன் ஒருபோதும் கோழையாக மாட்டான்” என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டான் அவன். “இளங்கோ! நமக்கு வீரமும் வேண்டும்;ராஜதந்திரமும் வேண்டும். எனக்கென்னவோ சோழர்களின் ராஜதந்திரத்தில் அவ்வளவு நம்பிக்கையில்லை. வீரத்தால் வெற்றிக்கு மேல் வெற்றி பெறுகி றார்கள், வென்ற நாடுகளைக் கட்டி ஆளத் தெரிவதில்லை.”
“சோழ சாம்ராஜ்யத்தின் ஆட்சியையே குறை கூறும் அளவுக்கு உன் அறிவு வளர்ந்துவிட்டதா, வீரமல்லா? இது போன்ற நினைவுகளை நீ முளையிலேயே கிள்ளிவிடுவது நல்லது. பெருந்தன்மையோடு கூடிய பரந்த மனப்பாங்குள்ள ராஜதந்திரம் நம்முடையது. வென்ற நாடுகளையெல்லாம் அழித்து அடிமைப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் நம் மன்னர்களுக்கு இல்லை. தாங்களே உலகத்தைக் கட்டி ஆள வேண்டுமென்ற பேராசையும் அவர்களுக்குக் கிடையாது. பாண்டியர்களை அவர்களுடைய பகுதிகளில் ஆளவிட்டிருப்பதும், சேரனுக்கு அவன் நாட்டைக் கொடுத்திருப்பதும் ராஜதந்திரமல்லவென்றா நீ நினைக்கிறாய்? நம்முடைய தலைமையை ஏற்றுக்கொண்டு அவர்கள் திறை செலுத்துகிறார்கள். ஆங்காங்கே உள்ள நமது தெரிந்த படைகள் அவர்களைக் கண்காணித்து வருகின்றன.”
“தெரிந்த படையினருக்கே தெரியாமல் நடைபெறும் ரகசிய
ஏற்பாடுகளைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டான் வீரமல்லன்.
“தெரிந்த படைகள் இருக்கும்போது ஏன் நம்மை அனுப்புகிறார் சக்கரவர்த்தி?”
“தெரிந்த படைகள் தெரிந்து சொல்லியதால்தான் நம்மை அனுப்பியிருக்கிறார். இன்னும் நம்மைப் போல் பலர் பல இடங்களுக்குப் புறப்பட்டிருக்கிறார்கள். விரைவில் இந்தப் பாண்டியர்களின் கதி அதோகதியாகப் போகிறது பார்!”
“பாண்டியர்கள் என்ற பெயரே உனக்கு வேம்பாயிருக்கிறது, இளங்கோ!”
வீரமல்லன் சிரித்தான்.
“முற்காலப் பாண்டியர்கள் இந்நாட்டின் பண்பைக் காத்தவர்கள். கண்ணகிக்குத் தீங்கிழைத்ததால் தன்னுயிரையே மாய்த்துக் கொண்ட நெடுஞ்செழியனும் பாண்டியன்தான். இப்போது தங்கள் மணிமுடியை ஈழத்தவர்களிடம் விட்டு விட்டு, தமிழ் மன்னருக்கெதிராகச் சதி செய்கிறார்களே இவர்களும் பாண்டியர்கள்தாம்! தமிழ் நாட்டில் மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை மட்டும் இருந்திருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிருப்போம், ஒற்றுமை கெட்ட குலம் நம் தமிழ்க்குலம்.”
“ஈழத்துமன்னர் மகிந்தனைச் சோழநாட்டின் மீது சேரரும்
பாண்டியர்களும் ஏவி விடுவார்கள் போலிருக்கிறதே!” என்றான் வீரமல்லன்.
“பாவம்! ஈழ மன்னர் ஐந்தாம் மகிந்தன் ஒரு கோழை. தம்முடைய படை வீரர்களைப் பராமரிக்க முடியாமல் அவர்களுக்கு அஞ்சி ரோகணத்தில் ஓடி ஒளிந்தவர் அவர். சேரரும் பாண்டியர்களும் சேர்ந்து அவரை வீரராக்கப் பார்க்கிறார்கள். தமிழர்களான சோழர்களிடம் என்றைக்குமே பாண்டியர்களுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. வெகுநாட்களாக ஈழத்து மன்னர்களோடு ஒட்டி உறவாடிக் கட்டிப் புரண்டு வருகிறார்கள். தாங்கள் பெற்றெடுத்த பெண்ணரசிகளை அனுப்பி ஈழத்து மன்னர்களின் அந்தப்புரங்களை அலங்கரிக்கும் மகிஷி களாக்குகிறார்கள். இவ்வளவு தூரம் அவர்கள் உறவாடிய பிறகும் ராஜசிம்ம பாண்டியன் காலத்தில் ஈழத்துக்கு அவன் எடுத்துச் சென்ற மணிமுடியை இன்னும் ஈழத்து மன்னர்கள் பாண்டியனிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. இந்த முடியைப் பெறுவதற்காகச் சோழர்கள் நடத்திய போர்கள் எத்தனை தெரியுமா?”
பேசிக் கொண்டிருக்கும் போதே இளங்கோவேளின் முகம் கோபத்தால் சிவந்தது. வியர்வைத் துளிகள் முத்து முத்தாக அவன் முகத்தில் அரும்பின. கூரிய வாள் முனைகள் போல கோடிட்ட மீசை மெல்லத் துடித்தது.
தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, கோபத்தை அடக்கிக்கொண்டு, அவன் மேலே தொடர்ந்து பேசினான்.
“சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு முதற் பராந்தக சோழர்
ஈழத்துக்குத் தூது அனுப்பி அந்த முடியைத் திருப்பித் தரும்படி நட்பு முறையில் கேட்டனுப்பினார். ஈழத்து மன்னன்
நான்காம் உதயன் அதை மறுத்துவிடவே சோழப் பெரும்படை ஈழத்துக்குள் புகுந்தது; மன்னன் உதயன் நாட்டைவிட்டு ரோகணத்துக் காட்டுக்குள் ஓடி ஒளிந்தானே தவிர, முடியைத் தரவில்லை. அடுத்தாற்போல் இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாம் பராந்தக சுந்தர சோழர் அதற்காகவே படை யெடுத்தார். அந்தப் போரில் வீர மரணம் எய்திய என் பெரிய தாத்தா கொடும்பாளூர்ச் சிறிய வேளாரைப் பற்றி நீ கேள்விப் பட்டிருக்கிறாயா? சுந்தர சோழரின் வலது கை அவர். தமது வலது கை ஈழத்தில் இப்படி முறிந்து விடவே, சுந்தர சோழரும் மனமுடைந்து திரும்பினார். மூன்றாம் முறையாக நான் பிறப்பதற்குச்சில ஆண்டுகளுக்கு முன்னால் இராஜராஜர் காலத்தில் இதே ஐந்தாம் மகிந்தன் மீது இராஜேந்திரரே படை திரட்டிச் சென்றார். மகிந்தனும் தம் முன்னோர்களைப் போலவே நாட்டை விட்டுவிட்டுக் காட்டுக்குள் ஓடி ஒளிந்தாரே தவிர, பாண்டியரின் தமிழ் முடியைத் திருப்பிக் கொடுக்கவில்லை.”
“மூன்றாம் முறை போர் தொடுத்துமா முடியைத் திரும்பப் பெற
முடியவில்லை?”
“ஆமாம், வீரமல்லா! பாண்டியன் ஒருவன் தன் அறியாமையால் செய்த பெரும் பழியைத் துடைக்க மூன்று போர்கள் போதவில்லை நண்பா! கொடும்பாளூர்ச் சிறிய வேளாரின் ரத்தத்தையும், ஆயிரக்கணக்கான சோழ வீரர்களின் உயிரையும் குடித்த முடி அது. இன்னும் அது அங்கேதான் இருக்கிறது.”
“நீ சொல்வதெல்லாம் சரி இளங்கோ! ஆனால் சோழர்கள் ஏன்
பாண்டியர்களுடைய மணிமுடியைப் பற்றி இவ்வளவு அதிகமாகக் கவலைப்படுகிறார்கள்? பாண்டியர்களுக்கே இல்லாத அவமானம் இவர்களுக்கு என்ன வந்து விட்டது? எதற்கு இத்தனை போர்கள்?” என்று கேட்டான்
வீரமல்லன்.
“வீரமல்லா! நீ நம்முடைய அரசரின் தந்தை வீரவேங்கையான
இராஜராஜரின் மரணத் தருவாயில் அவருக்குப் பக்கத்தில் இருந்திருக்கிறாயா? இருந்திருந்தால் இப்படி ஒரு கேள்வியை இவ்வளவு அலட்சியமாகக் கேட்டிருக்க மாட்டாய். ஆ! அந்தக் காட்சியை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் என் நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்துக் கொள்ளுகிறது நண்பா!”
இளங்கோவின் கண்கள் கொவ்வைக் கனிகளாகச் சிவந்தன. “அது தமிழ் முடி வீரமல்லா! தமிழ் மன்னனின் முடி!” என்று உறுமினான். “தமிழ் நாட்டுக்குள்ளே வேண்டுமானால் நாம் சோழர், சேரர், பாண்டியர் என்று பிரித்துப் பேசிக் கொள்ளலாம். தமிழ் நாட்டுக்கு வெளியே நாமெல்லோரும் தமிழர்தாம். யாருக்கு அவமானம் நேர்ந்தாலும் அது தமிழ்க் குலத்துக்கு நேர்ந்த அவமானம். இதைத்தான் இராஜராஜர் தம் மைந்தரிடம் வற்புறுத்திக் கூறிவிட்டு, அவரிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு, தம் ஆட்சிக் காலத்தில் அந்தப் பெரும் பழியைத் துடைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு கண்களை மூடினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இராஜேந்திர மாமன்னர் தம் தந்தைக்குக் கையடித்துக் கொடுத்த அதே நேரத்தில் நானும் என் கொள்ளுப் பாட்டனார் கொடும்பாளூர் சிறிய வேளாரின் ஆவியிடம் கையடித்துக் கொடுத்தேன். ‘மன்னருடன் நானும் ஈழத்துக்கு வருவேன். முடியைக் கொண்டு வர முடியாவிட்டால் நானும் உங்களைப் போலவே போர்க்களத்தில் வீர மரணம் எய்துவேன்’ என்று கூறிச் சபதம் செய்தேன். பாண்டியர் முடியென்றா நீ அதைச் சொல்கிறாய்? இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே! அது தமிழ் முடி!” என்றான் உறுதியான குரலில்.
இளங்கோவின் துடிப்புமிக்கப் பேச்சு வீரமல்ல முத்தரையனுக்கு
வியப்பையும் பிரமிப்பையும் தந்தது. இந்த இளம் வயதில் எவ்வளவு விஷயங்களை அவன் தெரிந்து வைத்திருக்கிறான்! ‘சோழர்களுக்கென்றே வாழும் தியாக உணர்ச்சி எப்படியெல்லாம் அவனிடம் கொழுந்து விட்டெரிகிறது!’ அவனுடைய தந்தை மதுராந்தக வேளார் வளர்த்த வளர்ப்பின் பலனா இது? கொடும்பாளூர் வேளிர் குலத்தின் மீதே வீரமல்லனுக்கு ஒரு பெரும் மதிப்பு உண்டாயிற்று. அதோடு அவனுக்கே விளங்காத ஓர் அசூயையும் திடீரென்று இளங்கோவின் மீது ஏற்பட்டது.
இளங்கோவைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டு
மென்பதற்காகவே, “நண்பா! இன்னொரு விஷயம்...” என்று மெல்ல இழுத்தான் வீரமல்லன்.
“என்ன வீரமல்லா?” என்று வினவினான் இளங்கோ.
“பாண்டியர்கள் ஈழத்து மன்னர்களுக்குப் பெண் கொடுத்திருப்பதைப் போலவே சோழர்களும் வேங்கி மன்னனுக்குப் பெண் கொடுத்திருக்கிறார்கள். ராஜேந்திரரின் தங்கை சிறிய குந்தவைதான் வேங்கி மன்னன் விமலாதித்தனின் பட்டத்தரசி என்பதை மறந்துவிடாதே. அரசர்கள் ஒருவருக்கொருவர் அரசியல் உறவுக்காகப் பெண் கொடுத்துக் கொள்வதும், எடுத்துக் கொள்வதும் எப்போதும் உள்ள பழக்கம்தான். வேங்கி மன்னர்களைச் சோழர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஈழத்து மன்னர்களைப் பாண்டியர்களுக்குப் பிடித்திருக்கிறது; அது அவரவர்கள் சொந்த விஷயம்.”
“பாண்டியர்களுடைய உறவுமுறையில் உண்மையிருந்தால் ஏன் பாண்டியர்களாலேயே தங்கள் முடியைத் திரும்பப் பெற முடியவில்லை; சோழர்களை எதிரிகளாக நினைக்கும் ஈழத்தவர்கள் தங்கள் உறவினர்களான பாண்டியர்களிடமாவது அதைக் கொடுத்திருக்கலாமே” என்று கேட்டான் இளங்கோ.
“பாண்டியர்களிடமிருந்து சோழர்கள் மணிமுடியைக் கைப்பற்றிக் கொண்டால் என்ன செய்வதென்று ஈழத்தவர்கள் நினைத்திருக்கலாம்.”
“நன்றாகப் பேசுகிறாய், வீரமல்லா! அதிலும் பாண்டியர்களுக்காக நீ பரிந்து பேசுவதைப் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கிறது. விளையாட்டாக என்னிடம் பேசியதைப்போல் நம் வீரர்கள் வேறு யாரிடமும் பேசிவிடாதே. நான் உன் வாதத்திறமையைக் கண்டு நகைத்து விட்டுச் சும்மாயிருப்பேன். மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள்.”
வீரமல்லன் இதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.
பிறகு இருவரும் சிறுபொழுது மௌனமாகவே குதிரைகளை அவற்றின் போக்கில் விட்டுவிட்டு இயற்கையழகை ரசித்தவாறு சென்றனர். இரண்டு குதிரைகள் ஒன்றி நடக்கும் அளவுக்கு விசாலமாகச் சென்று கொண்டிருந்த பாதை, ஒரு திருப்பத்துக்கு வந்தவுடன் குறுகலாக மாறியது. குதிரைகள் முன்னும் பின்னுமாகச் சென்றன. அடுத்தாற்போல் பாதை இன்னும் குறுகியது.
நெருக்கமான செடி கொடிகள் பாதையை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு மண்டிக் கிடந்தன. இருவரும் கீழே இறங்கிக் குதிரைகளைப் புதர்களுக்குள்ளே அழைத்துச் சென்று ஒரு சரக்கொன்றை மரத்தில் கட்டிவிட்டு நடக்கத் தொடங்கினார்கள். உயர்ந்துசென்ற ஒற்றையடிப் பாதையில் இளங்கோவேள் முன்னே சென்றான். போகும்போதே அவனுடைய கூர்மையான விழிகள் இருபுறங்களிலும் இருந்த புதர்களை ஊடுருவிக் கொண்டு சென்றன. குதிரை மீது அவன் பேசிக்கொண்டே வந்தபோதுகூட அவன் கண்கள் இந்த வேலையில்தான் முனைந்திருந்தன. அதை அப்போதும் வீரமல்லன் கவனிக்க வில்லை; இப்போதும் கவனிக்கவில்லை.
தொடரும்
Comments
Post a Comment