மூன்று மாதங்கள் முன்பாக வெளிவந்த இந்த சிறுகதைத் தொகுப்பை உங்களுக்கு புலம்பெயர்ந்த இலக்கியத்தின் வடிவமாக நான் அறிமுகப்படுத்த விரும்புகிறேன் .
அதற்கு முன்பாக ஒரு சிறிய கதையை உங்களுக்கு சொல்ல வேண்டும் . ஒரு விவசாயி ஒரு குரங்கை வளர்த்து வந்தான். அந்தக் குரங்கு அவனது விவசாய வேலைகளில் அனுமாராக பல உதவிகள் செய்தது .புராதன இலங்கையில் வாரத்தில் ஒரு நாள் இராஜகாரியம் செய்யவேண்டும். அதற்காக ஒரு வாரம் வெளியூர் சென்றபோது சமீபத்தில் ஏற்கனவே நட்ட மிளகாய் கன்றுகளுக்கு வேர் விடும்வரை ஒவ்வொரு நாளும் நீர் ஊற்றச் சொன்னான் . ஏற்கனவே குரங்கை இந்த வேலையில் பழக்கியிருந்ததால் நம்பிக்கையுடன் சென்றான். மீண்டும் ஒரு கிழமை கழிந்து வீடு திரும்பியபோது அந்த மிளகாய்ச் செடிகள் கருகியிருந்தன .
குரங்கிடம் கேட்டான் “என்ன நடந்தது? ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றவில்லையா”?
“ஊற்றினேன்”
“அப்ப உன்ன நடந்தது?” “
குரங்கு மனிதர்கள்போல் பொய் சொல்லாது
கன்றுகளின் அடியில் மண் குழம்பியிருந்து.
“ஏன் இப்படியிருக்கு? என மண்ணைக்காட்டிக் கேட்டான் அந்த விவசாயி.
“வேர் வருகிறதா என ஒவ்வொரு நாளும் பிடுங்கிப் பார்த்து விட்டு மீண்டும் நட்டு தண்ணீர் ஊற்றினேன் “ என்றது குரங்கு.
அப்பாவியாகச் சொன்ன குரங்கை அனுதாபத்துடன் பார்த்தான் அந்த விவசாயி.
அதேமாதிரி தமிழர்கள் மத்தியில் புத்தகம் வெளிவந்து சில நாளில் அறிமுகம் விழா நடக்கும்போது சிலரை வந்து புத்தகத்தைப் பேசும்படி அழைத்தால் நான்கு நாள் பட்டினி கிடந்த ஓநாய்கள் மணலில் புதைத்திருந்த அழுகிய சடலத்தை இழுத்துக் குதறுவதுபோல் குதறுவார்கள்
காரணம் பெரும்பாலும் புத்தகமாயிராது. எழுதியவரை- அரசியல் சமூக காரணங்களால் பிடிக்காது இருக்கலாம் அல்லது காழ்ப்புணர்வு காரணமாக இருக்கலாம். எழுதியவரை விட நான் பெரியவன் எனக்காட்ட நினைக்கலாம்.
இது இது நாவலே அல்ல
சிறுகதையே அல்ல எனக் கூவுவார்கள்.
கடந்த தைமாதத்தில் யாழ்ப்பாணத்தில் இப்படி எனக்கு நடந்தபோது ஜோர்ஜ் ஓவலின் விலங்குப் பண்ணை நினைவுக்கு வந்தது. அனிமல் பாமில், சினோபோல் என்ற பெயரிடப்பட்டு ஸ்ரொஸ்கியாகிக உருவகப்படுத்திய பன்றி காற்றாலையின் படம் வரைந்து இப்படி மின்சாரம் பெறலாம் என மற்றைய மிருகங்களின் முன்வைத்தது . அப்பொழுது நெப்போலியன் என்று என ஸ்ராலினாக உருவகப்படுத்திய பன்றி அந்த இடத்தில் தனது காலை தூக்கி சிறுநீர் அடித்தது .
இந்த நெப்போலின்கள் யாழ்பாணத்தில் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கிறார்கள் .
100 வருடங்கள் பின்பாகவும் ஜோர்ஜ் ஓவலின் தீர்க்க தரிசனத்தை நினைத்து மெய்மறந்தேன். அழியாத இலக்கியமாக விலக்குப் பண்ணை இருப்பதன் காரணத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.
விமர்சனம், திறனாய்வு- புத்தகம் வெளிவந்து சிலரால் வாசித்த பின்பே செய்யமுடியும். இதை எப்பொழுது எமது சமூகம் புரிந்துகொள்ளுமோ அப்பொழுதே புத்த வாசிப்பு எம்மிடையே ஏற்படும் .
சிறுகதை என்பது காட்டுப்பிரதேசத்தில் இருட்டில் நடந்து செல்லும் ஒருவனிடம் திடீர் மின்னல் சுற்றுப்பிரதேசத்தில் எப்படியான காட்சியை உருவாக்கும் என்பது போன்றது .
பெரும்பாலான சிறுகதையாசிரியர்கள் அவர்களின் ஒரு கதையாலே கொண்டாடப்படுவார்கள் . கு ப ராவின் கதைகளில் நான்கு சிறுகதைகள் சிறந்தது என ஜெயமோகன் எழுதினார் . 695 பக்கங்கள் கொண்ட அவரது தொகுப்பில் “சிறிது வெளிச்சம்” என்ற கதை மட்டுமே எனக்குப்பிடித்தது . அந்தக் கதை மட்டுமே எனக்கு கு பா ராவை நினைக்கப் போதுமானது
“த லாட்டரி “ என்ற கதையை படித்தபின் ஷேர்ளி ஜாக்சன் எனது மனத்தில் இடம் பெற்று விட்டார். அதேபோல தமிழினியின் “ மழைக்கால இரவு “ என்ற கதையை வாசித்த பின்பு தமிழினியுடன் தொடர்பு கொண்டு எனது முகநூல் நண்பராகினேன்.இரண்டு கதைகளும் இறுதிவரையும் உணவுப்பண்டத்தை கைகளுக்குள் மறைத்து குழந்தையைத் தேடவைப்பதுபோல் கதையின் உச்சத்தை தேடவைத்தவை.
அதேபோல்ஜேம்ஸ் ஜெய்சின் “தடெத் “ என்ற கதையை வாசித்துவிட்டு அதைத் தழுவி நான் ஒரு கதை “அந்தரங்கம்” என்ற பெயரில் எழுதினேன் .
கோமகனின் முரண் சிறுகதைத்தொகுப்பில் அப்படி சுண்டி இழுத்த கதை ஒன்றிற்காக நான் அவரை கொண்டாடமுடியும்.
ஏறு தழுவுதல்
கதையின் ஆரம்பம் ஜோச் ஓர்வலின் விலங்கும்பண்ணையில் விலங்குகளின் புரட்சியாகத் தெரிந்தது .
அங்கு கறுப்பனின் பேச்சு ஏதென்சில் ,இளவரசர் பிலிப்புக்கு ( அலக்சாண்டரின் தந்தை) எதிராக பேசிய டெமொஸ்தனிஸ்யும்( Demosthenes) அல்லது ரோமரது அவையில் பேசிய சிசிரோவையும்( Cicero) நினைவுக்குக் கொண்டு வருகிறது
இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்னைப் போன்ற ஒவ்வொரு மிருக வைத்தியரும் எப்படி மாடுகளிலிருந்து அதிக மாமிசத்தையும் பாலையும் எப்படிப் பெருக்குவது என்ற சிந்தனையில் வாழ்கிறோம். செய்கிறோம். நாம் எந்த ஒரு காலத்திலும் காளை பக்கத்திலோ இல்லை பசுமாட்டின் தரப்பிலோ சிந்திப்பதில்லை.
அவைகளுக்கு நலமடிப்பது – சூடு வைப்பது – மூக்கில் ஓட்டை போடுவது என எவ்வளவு வதைப்பான விடயங்களைச் செய்கிறோம்?
பெண் மிருகங்களுக்கு செயற்கையாகக் கருத்தரிக்கப்பண்ணும்போது எந்தத் தொடர்புமில்லாத காளையின் விந்தைத் திணிப்பது என்பது கொடுமை .
அது மட்டுமா ?இயற்கையாகப் படைக்கப்பட்ட புல், இலை,தழைகளை மறுத்து செயற்கையான உணவைத் தருவது.
மிருக வதையின் உச்சமாக இறுதியில் ஏறுதழுவுதலைக் காட்டுவது இந்த கதை .
நாம் மிருகங்களுக்கும் எமது பிள்ளைகள் போல் பெயர் சூட்டி வளர்ப்போம் . ஆனால் இறுதியில் ?
இங்கே இரண்டு பசுக்கள் லட்சுமி நந்தினி அழகான பெயர்கள்
பலருக்கு இந்தக் கதை சாதரணமாத் தெரியலாம் ஆனால் எனக்கு ஒருவித புரிதலை உருவாக்கியது.
என்னைப் பாதித்த இன்னுமொரு கதை ஆக்காட்டி . இது யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை காலத்தில் நடந்த உண்மைச் சம்பங்களின் பிரதிபலிப்பு . அந்தமாதிரியான சம்பவங்கள் பல கேள்விப்பட்டிருப்பதால் சிறுகதை என்பதற்கப்பால் நெஞ்சில் முள்ளாகத் தைத்தது.
கோமகனின் சில கதைகளின் சம்பவங்கள் சிறுகதைகளாக அப்படியே அந்தரத்தில் தொங்குகின்றன. அந்தக் குறையை மறந்து புத்தகத்தை ரசித்தபடி தொடர்நது படிக்க நம்மை கைபிடித்து அழைத்துச் செல்வது கோமகனின் புனைவு மொழி.
நொயல் நடேசன்
Comments
Post a Comment