Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம்01 அத்தியாயம் 4





மாதம் மூன்று மழையுள்ள நாடு’ என்று கொடும்பாளூர்க் கோட்டை பற்றிப் புலவர்கள் பெருமையுடன் பாட முடியாது. ஆண்டுக்கு மூன்று முறை மழை பெய்வதே அங்கு அபூர்வம். கொடும்பாளூருக்குத் தெற்கே அரைக் காத தூரத்தில் ஓடும் ஆற்றுக்கு வெள்ளாறு என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக மணலாறு என்றே அவர்கள் பெயர் வைத்திருக்கலாம். சங்க காலத்துக்கு முன்பே வேளிர்கள் அதன் கரையில் வந்து தங்கியதால் அந்தப் பெயர் பெற்றது என்று வரலாறு கூறுகிறது.

வேளிர்கள் மிகவும் பொல்லாதவர்கள்; உழைப்புக்கு அஞ்சாதவர்கள். அந்த வெள்ளாற்றின் வெள்ளத்தையும் அவர்கள் வீணாக்கவில்லை. மழைக் காலங்களில் முரட்டுத்தனமாய்ப் பாய்ந்தோடும் அந்தக் காட்டாற்றைக்
கட்டுப்படுத்தி, தங்கள் நாட்டின் ஏரி குளங்களில் அவர்கள் நிரப்பிக் கொண்டார்கள். கொடும்பாளூரைச் சுற்றியிருந்த பெரிய பெரிய ஏரிகளும் கண்மாய்களும் குளங்களும் அந்த நாட்டின் பசுமையை வளர்த்தன.

வெறிகொண்ட வேகத்தோடு கடலுக்குச் செல்லவிருந்த வேழமலை வெள்ளம்கோனாட்டுச் சாலை மரங்களாய் பூஞ்சோலைகளாய், நெற்கதிர்களாய் உருப்பெற்றுச் சிரித்தன. அது வேனிற்காலமாதலால் அப்போது கானல் நீரும் மணலும்தான் ஓடிக்கொண்டிருந்தன வெள்ளாற்றில். தென்னவன் இளங்கோவேளும் வீரமல்ல முத்தரையனும் அதன் வடகரையைக் கடந்து கொடும்பாளூரை நெருங்கி விட்டனர். மேலை வானில் இறங்கிக் கொண்டிருந்த மாலைச் சூரியன் மண்ணைப் பொன்னாக்கும் மந்திர ஜால வித்தைகளைச் செய்து கொண்டிருந்தான்.

கொடும்பை நகரின் தெற்கு வாயில் காவல் மண்டபம் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது. மண்டபக் கலசத்தின் உச்சியில் அசைந்தாடிக் கொண்டிருந்த புலிக்கொடி அவர்களை வரவேற்றது. காவல் மண்டபம் நெருங்க நெருங்க அதை வியப்போடு உற்றுப் பார்த்தான் இளங்கோ. இரண்டு குதிரைச் சேவகர்களும் ஐந்தாறு காவலாளிகளுமே அங்கு நிற்பது வழக்கம்.

இப்போதோ வீரர்களும் பொது மக்களுமாகச் சேர்ந்த சிறு கூட்டமொன்றே அங்கு காத்திருந்தது. ஒரு குதிரைச் சேவகன் மட்டிலும் முன்னால் விரைந்து வந்து, இளங்கோவை இனம் கண்டு கொண்டு மற்றவர்களுக்குக் கையசைத்தான்.

காவல் மண்டபத்தின் முரசுகள் அதிர்ந்தன. பல்வகை வாத்தியங்களும் ஒன்றாக முழங்கின. காரணம் புரியாமல் இளங்கோ திகைப்படைந்தபோது, கூட்டத்தினர் வானை முட்டும் குரலில் வாழ்த்தொலி வழங்கினர்.

“கொடும்பாளூர்க் குலக்கொழுந்து இளவரசர் இளங்கோ வாழ்க!”

“மதுராந்தகப் பரகேசரி மூவேந்த வேளாரின் திருக்குமரர் வாழ்க!”

“தென்னவன் இளங்கோவான பூதி விக்கிரமகேசரியின் பெயர் தாங்கும் வீர சோழப் படைத் தலைவர் வாழ்க!”

கூட்டத்தினரைக் கையமர்த்திய இளங்கோவேள், மக்கள் அங்கு குழுமியிருப்பதன் காரணத்தைக் குதிரைச் சேவகனிடம் கேட்டான்.

“போர்க்களத்திற்குப் போய் வெற்றியுடன் திரும்பும் போதல்லவா இது போன்ற வரவேற்பிருக்கும்? அப்படி ஒரு செயலும் நான் செய்துவிட்டு வரவில்லையே! நான் இன்றைக்கு இங்கே வரப்போவதாக உங்களுக்கு யார் சொன்னது?”

“இளவரசே! சக்கரவர்த்திகள் தஞ்சை மாநகரிலிருந்து நம் நகருக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்!”

“என்ன! என்ன! பெரிய உடையார் இராஜேந்திரதேவரா?”

“ஆமாம்; அவர்கள் தாம் தாங்கள் இன்று மதுரையிலிருந்து திரும்பக் கூடுமென்று கூறினார்கள்.”

இராஜேந்திரரின் வரவு தெரிந்தவுடன் இளங்கோவேளின் பிரயாணக் களைப்பு எங்கோ மறைந்து விட்டது. வந்தவர் அவன் வரவேண்டிய நாளையும் மறந்துவிடவில்லை. இளங்கோ உடனடியாக அரண்மனைக்குப் பறந்து போகத் துடித்தான்.

“அவர்கள் மட்டிலும் தான் வந்திருக்கிறார்களா? உடன் கூட்டமும் வந்திருக்கிறதா?”

‘உடன் கூட்டம் வரவில்லை; வீரமா தேவியாரும் இளவரசிகள் இருவரும் வந்திருக்கிறார்கள்.”

உடன் கூட்டத்து அதிகாரிகள் யாரும் வரவில்லை யென்பதால், பெரிய உடையாருடன் தனித்துப்பேச வாய்ப்புக் கிடைக்கும் என்று மகிழ்ந்தான் இளங்கோவேள். விருந்தினர் என்ற முறையில் அவர் வருகை தந்திருப்பது அவன் மகிழ்ச்சியை இரண்டு மடங்காக்கியது.

“வீரமல்லா! புறப்படு!” என்றான் தன் நண்பனிடம். குதிரைச் சேவகர்கள் சிலர் முன்னும் பின்னும் செல்ல, நண்பர்கள் இருவரும் நகருக்குள் நுழைந்தார்கள். திருவிழாக் காலத்து அலங்காரங்களுடன் கொடும்பாளூர் நகரமே புதுமை பெற்று விளங்கியது. எங்கு பார்த்தாலும் மாவிலைத்
தோரணங்களும், ஈச்சங்குலைகளும், தென்னங்குருத்துகளும், குலை தள்ளிய வாழைகளும் வீதிகளை அழகு செய்து கொண்டிருந்தன. விளக்கு வைத்த நேரமாதலால் நகரம் முழுவதும் ஒரே ஒளி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. அரண்மனைக் கோட்டை வாயில் அவர்களை அன்புடன் வரவேற்றது.

முதலில், விருந்தினர் மாளிகைக்கு வீரமல்லனை அழைத்துச் சென்று அவனுக்கு வேண்டிய வசதிகளைக் கவனித்தான் இளங்கோ; ஏவலாட்கள் இருவரைத் தன் நண்பனின் குரலுக்குக் காத்திருக்கச் சொன்னான்.
“வீரமல்லா!

நன்றாகச் சாப்பிட்டு விட்டுக் களைப்பாற உறங்கு. பெரிய உடையார் வந்திருப்பதால் அரண்மனைக்குள் ஒரே பரபரப்பாக இருக்கும். நாம் போய் வந்த விஷயங்களை இந்த நேரத்தில் அவர் கேட்க விரும்பமாட்டார். அதிகாலையில் உன்னை வந்து அவரிடம் அழைத்துக் கொண்டு போகிறேன்” என்றான்.

வீரமல்லன் சிரித்துக் கொண்டே, “ஆமாம், இனிமேல் என்னைக் கவனிப்பதற்கு உனக்கு எங்கே பொழுதிருக்கப் போகிறது? நீ போய் உன் முக்கிய விருந்தாளியான இளவரசியை நன்றாகக் கவனித்துக்கொள்” என்றான்.

இளங்கோவின் வரவு சேவகர்கள் வாயிலாக அவன் அன்னையார் ஆதித்த பிராட்டிக்குத் தெரிந்து விட்டது. அந்தப்புரத்தின் முன் வாயிலில் தன் குமாரனின் வரவு நோக்கி அவர் காத்து நின்றார். அவரோடு இராஜேந்திரசோழரின் மனைவியார் வீரமாதேவியும், அவர் சிறிய பெண் அம்மங்கை தேவியும் சேர்ந்து கொண்டனர். அம்மங்கை தேவிக்கு இளங்கோவைக் கண்டவுடன் குதூகலம் தாங்கவில்லை; அறிவறியாப் பருவத்தினளாக இருந்ததால் இளங்கோவேள் அவளிடம் மட்டும் எப்போதும் கலகலப்பாகப் பேசுவான். அவனை அவன் தாயாரிடம்கூடப் பேசவிடாதபடி வளைத்துக் கொண்டாள் அம்மங்கை. குளித்துவிட்டு, மாற்றுடை உடுத்திக்கொண்டு, மேல்மாடக் கூடத்திலிருந்த தன் தந்தையாரையும் சக்கரவர்த்தியையும் பார்க்கச் சென்றான் இளங்கோ.அந்தப்புரத்தில் அருள்மொழியைக் காணவில்லை. வீரமல்லன் பேசிய பேச்சால் அவளுடைய நினைவு அவனிடம் எழுந்து கொண்டிருந்தது. அதை எண்ணிப் புன்னகை செய்து கொண்டே படிகளில் ஏறிக் கூட்டத்தின் வாயிலை அடைந்தான். மேல்மாடக் கூடத்தில் அலங்காரத் தூண் விளக்கு தும்பைப்பூக்கொத்தைப் போல் தன் எண்ணற்ற சுடர்களால் ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. சேரநாட்டு வேழம் பதித்த தேக்குமரக்கட்டிலில் திண்டுகளின் மீது கம்பீரமாய்ச் சாய்ந்து கொண்டிருந்தார் இராஜேந்திரர் அருகே மற்றொரு ஆசனத்தில் மதுராந்தக வேளார் அமர்ந்திருக்க, அருள்மொழி தன் தந்தையாருக்குப் பக்கத்தில் துவளும் முல்லைக் கொடியைப் போல் நின்றிருந்தாள்.

பெரிய உடையார் இராஜேந்திரருக்கும் தன் தந்தையாருக்கும் வணக்கம் தெரிவித்தான் இளங்கோ. அருள்மொழி அங்கிருப்பது தெரிந்தும்கூட அவன் அவளை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அவள் அவனை “வாருங்கள்” என்று மெல்ல அழைத்து விட்டு அங்கிருந்து விரைந்து வெளியேறப் போனாள்.

“வா இளங்கோ! இப்படி வா” என்று அவனுக்குத் தம் அருகிலிருந்த ஓர் இருக்கையைச் சுட்டிக் காட்டினார் இராஜேந்திரர். பிறகு அருள்மொழியையும் அழைத்தார். “அருள்மொழி! நீயும் வா. பிறகு போகலாம்.”

அருள்மொழி திரும்பி வந்து, தூண் விளக்கில் தீபங்களைத் தூண்டிவிடும் பாவனையில் தன் தந்தையின் அருகில் நின்றாள். ஒளியில் புத்தெழில் பெற்ற அவள் முகம் உயிர் துலங்கும் பொற்சிலையின் முகமெனத் திகழ்ந்தது.

“என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்?” என்று எடுத்த எடுப்பில் வினவத் தொடங்கினார் சக்கரவர்த்தி.

இராஜேந்திரரின் உடல் எந்த இடத்திலிருந்தாலும் அவர் உள்ளம் எங்கே இருக்கிறதென்பதைத் தெரிந்து கொண்ட இளங்கோ, அருள்மொழி அருகில் இருந்ததால் மறுமொழி கூறத் தயங்கினான். ‘அரசியல் அந்தரங்கச் செய்தியை அருள்மொழியின் முன்னிலையில் கூறலாமா?’ என்று கேட்பதைப் போல், அவளைப் பார்த்துவிட்டு அவரை நோக்கினான்.

“தாராளமாய்ச் சொல்லலாம்! அருள்மொழியும் தெரிந்து கொள்ளட்டுமே!” என்றார் மாமன்னர். பிறகு “அருள்மொழி எந்த ரகசியத்தையும் காப்பாற்றுவாள்; அவள் தங்கை அம்மங்கையோ எதையும் மனத்தில் வைத்துக் கொள்ள மாட்டாள்” என்றார்.

தான் கண்ட காட்சிகளையும், கேள்வியுற்ற செய்திகளையும் இடையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் விவரமாகக் கூறினான் இளங்கோ.

அந்தச் செய்தியின் சாரம் இதுவே!-

சுந்தரபாண்டியன் தலைமையில் மற்ற இரு பாண்டிய மன்னர்களான மானாபரணனும் வீரகேரளனும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மதுரையைச் சுற்றியுள்ள மலைச் சாரல்களிலும், தெற்கே பொதிகை மலைப் பக்கத்திலும் படைவீரர்கள் திரட்டப்படுகிறார்கள். எலிமலை நாட்டுச் சேரன் மூவர் திருவடிகளும் பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கு எதிராக நட்புறவு -ஏற்பட்டிருக்கிறது. இரவோடு இரவாகச் சேரநாட்டு வீரர்கள் ஈழ மன்னர் மகிந்தனின் படைப் பெருக்கத்துக்காக அனுப்பப்படுகிறார்கள். மேலைச்
சளுக்கரைத் தூண்டிவிடும் முயற்சியிலும் பாண்டியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரே சமயத்தில் தெற்கிலிருந்து ஈழப்படையும், வடக்கிலிருந்து மேலைச் சாளுக்கப்படையும், உள்நாட்டில் பாண்டிய சேரப்படைகளும் போர் துவக்கிச் சோழப்பேரரசைப் பணிய வைக்க வேண்டுமென்பது அவர்கள் திட்டம்.

“நம்முடைய தெரிந்த படைத் தலைவர்கள் என்ன கூறினார்கள்?” என்று கேட்டார் சக்கரவர்த்தி.

“தெரிந்தும் தெரியாததுபோல் நடந்து கொள்ள வேண்டுமென்பது நமது பேரரசின் கட்டளையாம். அப்படியே செய்து வருகிறார்கள். தவிரவும் நமது மண்டலச் சேனாதிபதியின் ஆணைப்படி நம் வீரர்கள் பலர் பாண்டிய சேரப்படைகளில் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் போல் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்துள்ள விவரங்களை நோக்கினால், நம்முடைய மண்டலத்துக்கு இன்னும் ஆறு மாத காலத்தில் நான்கு திசைகளிலிருந்தும் ஆபத்துச் சூழலாம் என்று தெரிகிறது.” இராஜேந்திரர் இது கேட்டுத் தமக்குள் நகைத்துவிட்டு “சோழநாட்டுத் தமிழர்களை ‘வடதேசத்தவர்கள்’ என்று கூறிச் சுந்தரபாண்டியன் தென் மண்டலத் தமிழர்களிடம் வெறியூட்டி வருவது மெய்தானா?” என்று வினவினார்.

மாமன்னரின் இந்தக் கேள்வியைச் செவியுற்ற கொடும்பாளூர் மதுராந்தக மூவேந்த வேளார் பயங்கரமாகச் சிரித்தார். “மணிமுடியைப் பறித்துக்கொண்டு துரத்தி விட்ட ஈழ நாட்டார் அவர்களுக்கு உறவினர்களாகி விட்டார்கள். முடி கொடுத்து அவர்களை நாடாளவிட்டிருக்கும் நாம் வடவர்களாகி விட்டோம்! அப்படியானால் தென்பாண்டித் தமிழர்களுக்கு மதுரைத் தமிழர்கள் வடவர்களா?” -மதுராந்தகரின் சிரிப்பு அடங்கவில்லை.

மணிமுடி என்ற சொல்லைக் கேள்வியுற்றவுடன் பெரிய உடையார் இராஜேந்திரரின் முகத்தில் உணர்ச்சி மின்னல்கள் பாய்ந்து நெற்றி நரம்புகளாய்ப் புடைத்தெழுந்தன. கட்டிலிலிருந்து கீழே குதித்து, தீபச்சுடர்களில் அருகே போய் நின்று கொண்டு பயங்கரமாய் விழித்தார்; அவருடைய மீசை துடித்த துடிப்பும், விழிகள் கக்கிய நெருப்பும், தேகம் பதறிய பதற்றமும் அங்கிருந்தவர்களைத் திகிலடையச் செய்தன.மாமன்னருக்கு, அவர் தம் தந்தையாரிடம் ஆணையிட்டுச் சொன்ன சொல் நினைவுக்கு வந்து விட்டதா? வேங்கைகள் உலவும் தமிழகத்தின் மானம் ரோகணத்துக் காட்டில் நரிப்புதருக்குள் சிறையிடப்பட்டிருப்பதை அவர்
நினைத்துப் பார்க்கிறாரா? மதுராந்தக வேளார் மெல்ல எழுந்து சென்று பேரரசருக்குப் பின்புறமாக வந்து நின்றார்.

தீபச் சுடரொளியைப் பார்த்தவாறே வேங்கையின் மைந்தன் உறுமினார்:

“ஈழத்திலுள்ள தமிழ் முடியை நாம் வென்று வராவிட்டால், இத்தனை பெரிய சோழ சாம்ராஜ்யத்தை நாம் கட்டி ஆள்வதில் பொருளே இல்லை மதுராந்தகரே! இந்தச் சோழ மண்டலத்தை மேலைச் சளுக்கரும் பாண்டிய சேரரும் ஒன்றுகூடி அழித்தாலும் அழித்துக் கொள்ளட்டும், நம்முடைய முதல் போர் தமிழன் ஒருவனுடைய மணி முடிக்காக!”

“சோழ மண்டலத்து வீடுதோறும் பாசறைகள்; கடல் போன்ற பெரும் படையுடன் கடலைக் கடப்போம்” என்றார் மதுராந்தகர்.

இராஜேந்திரரின் உணர்ச்சிக் குமுறல் அடங்கி, அவர் சிந்தனைத் தெளிவோடு மேலே பேசினார்: “நமக்கு ஈழநாட்டுப் பெருமக்களிடம் விரோதமுமில்லை; வெறுப்புமில்லை. நம்முடைய ஆட்சியில் இப்போது ரோகணத்தைத் தவிர மற்ற ஈழப் பகுதிகள் முழுமையும் அடங்கியிருக்கின்றன. ஆனால் ஈழநாட்டு மக்களின் விருப்பப்படியே அவர்களைக் கொண்டு ஆட்சி செய்து வருகிறோம். ஜனநாதமங்கலம் என்று நாம் அதன் தலைநகருக்குப் பெயர் சூட்டியிருப்பதிலிருந்தே, குடிமக்களாட்சியில் நம் தலையிடாத தன்மை அவர்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் தொடுக்கும் போரால் ஈழநாட்டு மக்களுக்கு இன்னல் ஏதும் நேரக் கூடாது. ஏன் ரோகணத்தரசர் மகிந்தர் மீது கூட நமக்கு விரோதமில்லை. மீண்டும் ஒரு முறை அவருக்குத் தூது அனுப்பி நமக்குரிய பொருளை நட்பு முறையில் கேட்டுப் பார்ப்போம்.”

“ஒருக்காலும் கொடுக்க மாட்டார் சக்கரவர்த்தி. சென்ற போரில் நாட்டை நம்மிடம் கொடுத்துவிட்டு, அந்த முடியை எடுத்துக் கொண்டு, காட்டில் ஓடி ஒளிந்தவர் அவர்.”

“இம்முறையும் முடி கிடைக்காவிட்டால். . .” என்று பற்களை நறநறவென்று கடித்தார் இராஜேந்திரர்.

இளங்கோ, மாமன்னருக்கு முன் போய்ப் பணிவுடன் நின்றுகொண்டு,அவர் முகத்தைப் பயபக்தியுடன் ஏறிட்டுப் பார்த்தவாறே, “சக்கரவர்த்திகளிடம் ஓர் விண்ணப்பம்” என்றான்.

“என்ன?!”

“ஈழத்துக்குச் செல்லும் பாக்கியம் எனக்கும் கிடைக்க வேண்டும்;

“நீயும் வருகிறாய்” என்றார் பேரரசர்.

இதைக் கேட்டட இளங்கோவின் தலை அவன் கழுத்தில் பெருமை தாங்காமல் சுற்றத் தொடங்கியது. “நீயும் வருகிறாய்” என்று கூறியதிலிருந்தே, அவரும் வருகிறார் என்பது உறுதியாகிவிட்டது. அவனுக்குத் தரையில் நிற்பது போலவே தோன்றவில்லை.

ஓர் இரும்புக்கரம் இப்போது அவன் தோளின் மீது விழவே, அந்தக் கரத்திற்குரிய தன் தந்தையாரைத் திரும்பிப் பார்த்தான் அவன். கருங்காலிச்சிற்பம்போல் துண்டு துண்டாகத் தெரிந்தன மதுராந்தாக வேளாருடைய உடற்கட்டின் தசைநார்கள்.

நெடிதுயர்ந்து நின்ற அவர் தம்முடைய ஒரே மைந்தனான இளங்கோவேளின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டு கூறலானார்:

“நீ ஈழத்துக்குப் புறப்படுவதால் கொடும்பாளூர்க் குலமே பெருமையடைகிறது. ஆனால் அந்தப் பெருமை எங்கேயிருக்கிறது என்பதை மட்டிலும் மறந்துவிடாதே! நீ மணிமுடியோடுதான் திரும்ப வேண்டும். வெற்றியோடு தான் இந்த மண்ணை வந்து மிதிக்கவேண்டும். ஈழத்துப் பட்ட உன் பெரிய பாட்டனார் கொடும்பாளூர்ச் சிறிய வேளாளரின் இரத்தம் உன் உடலிலும் ஓடுகிறது. வெற்றி அல்லது வீர மரணந்தான் நமக்கு வேண்டும் தெரிகிறதா, இளங்கோ? நீ திரும்பாவிட்டாலும் முடி திரும்ப வேண்டும்.”

இராஜேந்திர சோழரே மதுராந்தக வேளாரின் இந்தச் சொற்களைக் கேட்டு அதிர்ச்சியுற்றுப் போனார். அரசுரிமை பெறவிருக்கும் தம்முடைய ஒரே புதல்வனிடம் தந்தை பேசுகிற பேச்சா இது? கொடும்பாளூர் வேளார் கொடுமை நிறைந்தவராக இப்போது மாமன்னரின் கண்களுக்குக் காட்சியளித்தார், என்றாலும் அவர் போக்கில் இராஜேந்திரர் தலையிடத் துணியவில்லை.

“ஆ!” என்ற கூக்குரல் விளக்கு அருகிலிருந்து எழுந்தது. அருள்மொழியின் குரல் தான் அது.

“என்ன அருள் மொழி?”- தந்தை வினவினார்.

“சுடரில் விரலைச் சுட்டுக்கொண்டேன்” என்றாள் அவள். அப்போது அவள் இளங்கோவைப் பார்த்த பார்வை கடலின் ஆழத்தை விடக் கொடிய ஆழம் நிறைந்ததாகத் தோன்றியது. விரலை அவள் சுட்டுக் கொள்ளவில்லை என்பதையும், மதுராந்தக வேளாரின் சொற்களால் நெஞ்சையே சுட்டுக் கொண்டாள் என்பதையும் இளங்கோ கண்டுகொள்ளவில்லை. இவற்றையெல்லாம் கண்டு கொள்ளதவர் போல் கவனித்துக் கொண்டிருந்தார் மாமன்னர் இராஜேந்திரர்.

கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு அருள்மொழி அந்த இடத்தை விட்டு விரைந்து சென்றாள். போகும்போது அவள் விட்ட பெருமூச்சின் சீற்றம் இளங்கோவின் செவிகளுக்கு மட்டும் எட்டியது.

அதற்கு மேலும் அவள் தங்குவதை விரும்பமாட்டாள் என்பதை அறிந்த இராஜேந்திரர் அவளைத் தடுத்து நிறுத்த முற்படவில்லை.

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...