Skip to main content

சோபசக்தியின் BOX நாவல் -வாசிப்பு அனுபவம்.



அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் "பெட்டி" நாவல் வாசிக்க நேர்ந்தது. அந்த வாசிப்பின் பொழுது என்மனதில் வந்த தீர்மானங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.


பொதுவாகவே கதை சிருஷ்டிகர்த்தாக்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX ("பெட்டியை ") வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது கதை சொல்லியாக வானத்தில் இருக்கும் நிலாவும், இரண்டாவது கதைசொல்லியாக ஓர் குழந்தையும் நாவலினூடாக கதைசொல்லிகளாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. இதற்காக நூலாசிரியருக்கு ஓர் கைதட்டல் கொடுக்கலாம். நாவல் ஒருபக்கத்தில் இருந்து மட்டும் வாசகரை நோக்கிச் சுழலாது, கதைக்களத்திலே இருந்த பலதரப்புக் கதைமாந்தர்களினூடாக, அவர்களினுடைய பார்வையில் இருந்துகொண்டே கருத்தியல் வாதங்களை முன்வைக்கின்றது. இதுவும் நூலாசிரியரின் புதிய கதைசொல்லும் பாணியாக என்னால் உணரமுடிந்தது. அத்துடன் வாய் பேச முடியாத குழந்தைக்கு அந்தக்கதை மாந்தர்கள், யுத்தத்தின் வலியையும் இராணுவத்தின் கொடுமைகளையும் போரம் தியேட்டர் (Forum Theatre) நாடக அரங்க முறையில் அந்தக்குழந்தைக்கு விளக்கிக் கொண்டு சென்றதும் நூலாசிரியரின் புதிய அணுகுமுறை என்றே எண்ண இடமுண்டு.

"பெட்டியின்" ஆரம்பமான காணிக்கைப்பத்திரம் பின்வருமாறு வருகின்றது " இரத்த சாட்சியான பாலச்சந்திரனையும், ஈழப்போரில் மாண்ட ஆயிரமாயிரம் குழந்தைகளையும் நினைவுகொள்கின்றேன். எங்களது சந்ததியைக் காக்க நாங்கள் தவறியிருந்தோம். அந்த மாசில்லாக் குழந்தைகளின் இரத்தப்பழி நம்முடனேயே இருக்கின்றது ". இந்தக் காணிக்கைப்பத்திரம் தாயகத்தின் விடுதலைப்போரில் பங்கு பற்றிய அனைத்துத் தரப்பு போராளிகளின் வலியாகவே என்னால் உணரமுடிந்தது. இந்த வரிகளைத் தட்டிக்கழித்துவிட்டு யாருமே ஈழத்துப் போரியல் வரலாறு பற்றிப் பேசமுடியாது.

251 பக்கங்களில் பல பெட்டிகளுடன் நாவலாக விரிந்த "பெட்டியை" ஒரு பெட்டியாகச் சுருக்கினால் " சிங்களக் கிராமமான மதவாச்சியில் "ஸ்வஸ்திக பண்டார தென்னக்கோன்" என்ற பெரும் செல்வந்தரின் ஒரேயொரு மகனாகப் பிறக்கும் சந்த, அந்தக்கிராமத்தில் இருக்கும் புத்த விகாரைக்கு துறவியாக வருவதற்குப் பெற்றோரால் நேர்ந்து விடப்படுகின்றான். செல்வச்செழிப்பில் வளர்ந்த சந்தவுக்கு மடாலயத்தின் கட்டுப்பாடுகள் குடைச்சல்களை ஏற்படுத்துகின்றன. இறுதியில் அங்கிருந்து தப்பி கால் போன போக்கில் சென்று வன்னியில் உள்ள " பெரிய பள்ளன் குளம் " என்ற குக்கிராமத்துக்கு வருகின்றான். அங்கு சந்த ," கார்த்திகை" என்று அந்த மக்களால் அழைக்கப்பட்டு, அவர்களின் செல்லப்பிள்ளையாக பெரிய பள்ளன் குளத்து அணைக்கட்டில் இருந்த ஆதாம் சுவாமியின் கல்லறை வீட்டில் வாழ்ந்து வருகின்றான்.அங்கு அவன் கூடுதலாக "அமையாள் கிழவியின்" அரவணைப்பில் இருந்தான். பசிக்கு அந்த கிராம மக்கள் போடும் சோற்றை யாசகமாக பெற்று உண்கின்றான். அவன் அந்த மக்களின் செல்லப்பிள்ளையாக மாற வேண்டிய முக்கிய காரணமாக கார்த்திகை வாய் பேசமுடியாத ஊமையாக இருந்ததே . சிறிய கால ஓட்டங்களின் பின்னர் இலங்கை இராணுவம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பெரிய பள்ளன் குளம் கிராமத்தை பிரகடனப்படுத்தி அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு சொல்கின்றது. அமையாள் கிழவியையும் கார்த்திகையையும் தவிர எல்லோருமே அந்த கிராமத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். இராணுவம் இறுதியாக ஆதாம் சுவாமி கல்லறை வீட்டை பெட்டியடித்து சுற்றி வளைத்த பொழுது, கார்த்திகை அந்த ராணுவத்துடன் சிங்களத்தில் உரையாட ஆரம்பித்து தனது பூர்வீகத்தை சொல்கின்றான். குளத்திலே இறந்த அமையாள் கிழவியின் நிர்வாண உடலை துறவிகளுக்குரிய போர்வையைப் போர்த்தி இராணுவ உதவியுடன் சந்த ஸ்வஸ்திக தேரர் அடக்கம் செய்ய செல்வதுடனும் , பின்இணைப்பு ஒன்றுடனும் "பெட்டி" ( box) நிறைவடைகின்றது .

நாவலை வாசிக்கும் பொழுது பல "உபபிரதிகள்" நாவலினூடாகச் செல்கின்றன. பிரான்சிலே இருந்து பெரிய பள்ளன் குளத்துக்குச் செல்லும் சகோதரர் டைடஸ் லேமுவேல் "உபபிரதியை" விட மற்றைய உபபிரதிகள் பெட்டியின் வாசிப்புச் சுவாரசியத்துக்கு இடைஞ்சல் தந்து மனதில் ஒருவித அயர்சியை ஏற்படுத்துகின்றன. அதாவது வாசகன் பல பெட்டிகளைக் கடந்து மெயின் பெட்டிக்கு வரவேண்டியிருக்கின்றது. நாவலின் இரண்டாவது கதை சொல்லியாகிய கார்த்திகை என்ற குழந்தை ஒரு கட்டத்தில் அதனது நண்பர்கள் மத்தியில் நிர்வாணமாக நின்று " சுயஇன்பம்" செய்கின்றது. பெரிய பள்ளன் கிராமத்து மக்களால் வாய் பேசமுடியாதவன், யாருமற்ற அநாதை என்ற அனுதாப அலைகளால் வளர்ந்து கொண்டிருந்த ஓர் குழந்தை சுயஇன்பம் செய்வதை என்னால் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் காணிக்கைப்பத்திரத்தில் போரில் மரணித்த குழந்தைகளின் இரத்தப்பழிக்கு கசிந்துருகிய நூலாசிரியர் இந்த இடத்தில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக எதையும் செய்வதற்கு பச்சைக்கொடி காட்டுவதன் மூலம் தனது குழம்பிய மனநிலையை வாசகர்களுக்குக் கொடுப்பதாகவே எண்ணுகின்றேன். 

இருந்தபோதிலும் இன்னுமோர் கோணத்தில் இந்த சூழ்நிலையைப் பார்த்தால், குழந்தை மனது என்பது கார்பன் பிரதி போன்றது என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். பெற்றோரால் மடாலயத்துக்கு நேர்ந்துவிடப்பட்ட குழந்தைமீது மடாலயத்தில் இருந்த பௌத்த பிட்சுக்கள் தங்கள் பாலியல் வக்கிரங்களை தீர்த்திருப்பதாலும் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்க வாய்புகள் உண்டு. இந்தக்கோணத்தில் பார்த்தால் நூலாசிரியர், புனிதங்களை இறுக்கமாகக் கட்டிக்காக்கும் இலங்கையின் பௌத்தமத மடாலயங்கள் மீதான தனது காட்டமான விமர்சனம் ஒன்றைப் பதிந்திருக்கின்றார் என்றே எண்ண இடமளிக்கின்றது.

நாவலின் ஆரம்பத்தில் அமையாள் கிழவி செத்து மிதந்து கொண்டிருந்த காட்சியின் வர்ணனை ஏறத்தாழ மூன்று வருடங்களிற்கு முதல் எதுவரை இலக்கிய சஞ்சிகையில் வெளியாகிய "அங்கையற்கண்ணி " சிறுகதையினை எனக்கு நினைவு படுத்தியது. இதில் அமையாள் கிழவியின் இறந்த உடலைப் பற்றிய வர்ணனை வாசிக்கக் கூசுகின்றது. அத்துடன் நாவலின் சில இடங்களில் இழி சொற்கள் ( தூசணங்கள் ) தாராளமாகவே வந்திருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளைப் பற்றியே வசைபாடுகின்றன. நூலாசிரியரின் தொடர்சியான பெண்களையிட்ட இழிபார்வைக்கு எந்தவொரு பெண்ணியவியலாலர்களும் கண்டனம் தெரிவிக்காதது ஆச்சரியமான விடயமாகவே எனக்கு தெரிகின்றது . நாவலில் இப்படியான இழி சொல்லாடல்கள் நாவலின் இலக்கியத்தரத்துக்கு இடைஞ்சல் தருகின்றன. இத்தகைய இழிசொற்கள் ஒருவேளை மலிவான இலக்கிய ரசனை உள்ளவர்களை சென்றடையலாம். ஆனால், நாகரீகமான வாசகர்களை சென்றடையாது. நாகரீகமானவர்கள் என்றால் என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பானதே. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பான வாழ்கை நடைமுறைகளையும், பேச்சு நடைகளையும் கொண்ட மனிதர் குழுமத்தை நாகரீகமானவர்கள் என்று பொருள் கொள்ளலாம்.

நாவலில் நூலாசிரியர் வரலாறு சம்பந்தமான இடங்களில் தனது நுண்ணிய ஏகடியங்களைப் பரவி புலித் தேசியவாதிகளை கவர முயற்சித்து இருக்கின்றார் என்றே எண்ணுகின்றேன். நாவலின் பக்கம் 106 இல், "காலையில் யுத்தம் முடிந்திருந்தது. நூற்றுக்கணக்கான கருத்த உடல்களை வெள்ளையப்படை புரட்டிப் புரட்டிப் பார்த்தது .அங்கே கிடந்த பல உடல்கள் அடையாளம் தெரியாமல் சிதைந்திருந்தன .அவற்றிடையே கால்களைப் பரப்பி முகம் முற்றாகக் கருகி நிர்வாணமாகக் கிடந்த குள்ளமும் பருமனுமான உடலொன்றை "பண்டார வன்னியன்" என ஆங்கிலேயப்படைகளுடன் வந்திருந்த "நெடும்மாப்பாணமுதலி" அடையாளம் காட்டினான் .

அந்த உடல் அந்த இடத்திலேயே புதைக்கப்பட்டு அந்தப்புதைகுழியின் மேலே "இங்கே பண்டார வன்னியன் கப்டன் வொண் ட்ரிபோர்க்கால் தோற்கடிக்கப்பட்டான் " என்ற நினைவு கல்லும் நாட்டப்பட்டது. அதனால் அந்த இடம் பின்னர் கற்சிலைமடு என்றாயிற்று.

ஆனால் பண்டாரவன்னியனும் அவனது படைவீரர்கள் எண்மாரும் அந்தப் பெட்டி வடிவ நெருப்பு முற்றுகையை உடைத்துக்கொண்டு ஏற்கனவே வெளியேறி வவுனியாவை நோக்கி காட்டுக்குள்ளால் நடந்துகொண்டிருந்தனர் .

அதற்குப் பின்பாக வன்னி ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் முழுமையாக வந்தது .பண்டாரவன்னியன் கற்சிலைமடு சண்டையில் இறந்து போய்விட்டதாகத்தான் வன்னி மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். பண்டாரவன்னியனோ அதற்குப்பின்பும் ஏழு ஆண்டுகள் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். அவனிற்கும் கண்டி அரசனுக்கும் உறுதியான நட்பு இருந்ததினால் அவன் கண்டி இராச்சியத்துக்கும் வன்னிக்கும் இடையில் மாறி மாறி நடமாடிக்கொண்டிருந்தான். ஆங்கிலேயர்களை விரட்ட ஒரு படையைத் திரட்டக் கடுமையாக அவன் முயற்சித்துக்கொண்டிருந்த போதும் அது சாத்தியமில்லாமலேயே இருந்தது ".

இங்கு நூலாசிரியர் இரண்டு விதமான செய்திகளை சொல்லி நந்திக்கடலில் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும், ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கு முயற்சி செய்தாலும் அது நடை பெறவில்லை என்றும் புலித்தேசியவாதிகளைக் குளிர்மைப்படுத்துகின்றார் . இது நூலாசிரியரின் வழமையான புலியெதிர்ப்பு பார்வையை விட்டு விலகிச் செல்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. இதை வேறுவகையில் பார்த்தால் இதுவரைகாலமும் கடும் புலியெதிர்ப்பு வாதங்களை தனது படைப்புகளில் வைத்து "துரோகி" ப் பட்டம் பெற்றுக்கொண்ட நூலாசிரியர், அதை துடைக்க முயற்சிக்கின்றாரா? என்று எண்ணவும் இடமளிக்கின்றது. மனிதர்கள் என்னதான் ஆட்டம் ஆடினாலும் பரிநிர்வாணம் ஒன்றினாலேயே ஆன்ம ஈடேற்றம் பெறலாம் என்ற பௌத்தத்தின் தத்துவங்களை கதையில் ஆங்காங்கே தூவி இருக்கின்றார். இறுதியாக, பல சிறுகதைகள் மூலம் வாசகர்களிடையே பலத்த அதிர்வுகளை ஏற்படுத்திய நூலாசிரியர் நாவல் என்று வரும்பொழுது தழும்பல் நிலையையே ஏற்படுத்துகின்றார். BOX (பெட்டி) நாவலில் சில குறைபாடுகள் இருந்தாலும் அது ஓர் காற்றடைத்த கனதியான பெட்டியாகவே என்னால் தீர்மானிக்க முடிந்தது. அத்துடன் இறுதிப்பகுதியான "முற்றுப்பகுதி " ( நாற்பதாம் கதை ,பின் இணைப்பு பக்கம் 245-251) நாவலுடன் ஒட்டாமல் துருத்திக்கொண்டு இடைஞ்சலாகவே இருக்கின்றது. மாறாக, நூலாசிரியர் அமையாள் கிழவியின் இறுதி யாத்திரையில் சந்த ஸ்வஸ்திக தேரர் இராணுவத்தின் திரை மறைவுப் பெட்டிக்குள் நிர்வாணமாக நடந்து செல்வதுடன் நாவலை முடித்திருந்தால் கதை வாசகர்களிடையே அதிக அதிர்வுகளைப் பெற்றிருக்கும் என்பது எனது எண்ணமாகும் .




வல்லினதுக்காக 
கோமகன்
30 ஆனி 2015

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02

11 ஊசிப்பாரை - big eye trevally  இந்த மீனுக்குரிய தூயதமிழ் " ஊசிப்பாரை மீனாகும் ".எல்லோருமே பாரை மீன் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் ஊசிப்பாரை (dusky trevally, big eye trevally,) ,கட்டாப் பாரை ( leather skin fish, leather jacket fish, queenfish ) , கூனிப்பாரை ( cleftbelly trevally ) , தோல் பாரை (Malabar trevally ) , மஞ்சள் கிள்ளுப் பாரை ( giant trevally, yellowfin trevally) , வெங்கடைப் பாரை ( horse mackerel ) என்று பாரைமீனில் பலவகை உள்ளன. நான் போட்ட படம் ஊசிப்பாரை மீனாகும். இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள். http://en.wikipedia.org/wiki/Trevally 000000000000000000000000000000 12 எலிச்சூரை மீன் - frigate tuna- Auxis thazard thazard  இந்த மீனுக்குரிய தூயதமிழ்ப்பெயர் " எலிச்சூரை மீன் " ஆகும். இந்தச் சூரை மீனில் சூரை ( Choorai Little Tunny), நீலத் துடுப்புச் சூரை ( Blue fin tuna ), சூரை கீரை மீன் (Keerai, Kerai Yellow Tuna, Yellowfin Tuna ), எலிச்சூரை மீன் (frigate tuna) என்று பலவகைப்படும் . இந்த மீன்பற்றிய மே

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில