பட உதவி : கருணாகரன்
மழைக்காலம் என்பது ஓர் சமூகத்தின் வசந்தகாலம். இந்த மழைக்காலத்திலேயே ஓர் சமூகம் தமது இருத்தலுக்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்யும். விவசாய நிலங்கள் மழையினால் மீண்டும் எழுச்சி பெறும். மாந்தர்களிடையே காதல், காமம், ஊடல், கூடல், இனப்பெருக்கம் என்று உச்சம் பெறும் காலமே மழைக்காலம். அதுவும் கோடை வெய்யில் காலத்தில் வெக்கை வாட்டி எடுக்க, திடீரென வானம் கருமையாகி சிறிய துளிகளாகத் தொடங்கி சோவென்று மழைத்துளிகள் நிலத்தை அணைக்கும் அடைமழையை யாருமே விரும்பாமல் இருக்க மாட்டார்கள். மழையின் ஆரம்பத்தில் மூக்கை அடைக்கும் புழுதிவாசமும், மழை விட்டதன் பின்னர் வரும் தவளைகளின் ஒலியும், ஈசல்களின் படையெடுப்பும், நுளம்புக்கு போடும் வேப்பங்கொட்டைப் புகையும், நிலத்திலே வெள்ளம் வடிந்து அந்த ஈரலிப்பான மண்ணில் நெளியும் சரக்கட்டைகளும், நாக்கிளிப் புழுக்களும், கம்பளிப் பூச்சிகழும், என்று கோடை காலத்தின் இறுதி பகுதிகளில் இந்த உணர்வுகள் அத்தனையையுமே கொண்டு வரும் மழைக்காலத்தை யாருமே விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட ஓர் மழைக்கால வேளையொன்றில் வேலணையூர் தாஸ் எழுதிய "மழைக்காலக் குறிப்புகள் " வாசிக்க கிடைத்தது. அதிலிருந்து நான் என்ன கிரகித்துக் கொண்டேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.
இந்த மழைக்காலக் குறிப்புகளில் பல கவிதைகள், கவிஞரின் ஆற்றாமைகளையும், ஏக்கங்களையும் பாடுபொருளாகக் கொண்டு இருக்கின்றன. என்னைப்பொறுத்த வரையில் கவிதைகளில் ஆற்றாமைகள் , ஏக்கங்கள் என்ற பாடுபொருள்கள் இருப்பதில் தப்பில்லை. அதுவும் ஒர்வகையான சுவையே .ஆனால்,அவைகள் ஓர் கவிதைத் தொகுதியில் அதிக அளவில் நிரம்பி வழியுமானால் வாசகனுக்கு ஒருவித சலிப்புத்தன்மையை உருவாக்கும் என்பது எனது கருத்தாகும். இன்றைய வாழ்வியல் யதார்த்தத்தில் சோகத்தையும் ஆற்றாமையையும் சொல்லி இறுதியில் வாழ்வு மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வரு கவிதை சொல்லிகளினதும் சமூகம் சார்ந்த பொறுப்பாகின்றது. அதை ஒரு சில கவிஞர்கள் செய்திருப்பதை நான் பார்த்திருக்கின்றேன் .இன்றைய எமது சமூகம் வாழ்வியல் இயங்கு நிலைகளில் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்படைந்து இருக்கின்றது . அவர்களுக்கு தேவையானது வாழ்வின் மீதான நம்பிக்கைதரும் எழுத்துக்களே. உதாரணமாக கவிஞர் வ செ ஐ ஜெயபாலன் தனது உயிர்த்தெழுந்த நாட்கள் கவிதையில் ,வாழ்வின் மீதான இருத்தல் பற்றிய நம்பிக்கையை இவ்வாறு வெளிபடுத்துகின்றார் ...........
"இப்படியாக, உயிர் பிழைத்தவர்கள்
பின்புற மண்ணையும் தட்டியபடிக்கு
எழுந்தோம்.
வெறுங்கைகளோடு -
உடைந்த கப்பலை விட்டு அகன்ற
ரொபின்சன் குரூசோவைப் போல,
குலைந்த கூட்டை விட்டு அகன்ற
காட்டுப் பறவையைப் போல.
நாம் வாழவே எழுந்தோம்.
சாவை உதைத்து.
மண்ணிலெம் காலை ஆழப் பதித்து
மரண தேவதை இயற்கையாய் வந்து
வருக என்னும் இறுதிக் கணம்வரை,
மூக்கும் முழியுமாய்
வாழவே எழுந்தோம்! "
என்றும் ,
"நெய்தல் பாடல்" கவிதையில் .................
"வாழிய தோழி கடலின்மேல் அடிவானில்
கரும்புள்ளியாய் எழுதப்படும்
புயற் சின்னம்போல
உன் முகத்தில் பொற்கோலமாய்
தாய்மை எழுதப்பட்டு விட்டது.
உனக்கு நான் இருக்கிறேனடி.
இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை
உப்புக் கடலாக்காதே.
புராதன பட்டினங்களையே மூடிய
மணல் மேடுதான் ஆனாலும்
தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட
இங்கு தன் முட்டைகள
நெடுநாள் மறைக்க முடியாதடி.
விரைவில் எல்லாம்
அறியபடா திருந்த திமிங்கிலம்
கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும்
அதனால் என்னடி
இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே.
அஞ்சாதே தோழி
முன்பு நாம் நொந்தழ
மணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான்.
ஆனாலும் காதல் அவனை
உன் காலில் விழ வைத்ததல்லவா.
ஆளரவமுள்ள சவுக்குத் தோப்புக்குள்
முதல் முயக்கத்தின்போதுகூட அவனிடம்
குஞ்சுக்கு மீன் ஊட்டும் தாய்ப் பறவையின்
கரிசனை இருந்ததல்லவா.
ஆறலைக் கள்வர்போல
சிங்களர் திரியும் கடற்பாலைதான் எனினும்
நீர்ப் பறவைகள் எங்கே போவது.
இனிச் சோழர்காலம் திரும்பாது என்பதுபோல
அவன் நகரக்கூலி ஆகான் என்பதும்
உண்மைதான் தோழி.
ஆனாலும் அஞ்சாதே
அவன் நீருக்குள் நெருப்பையே
எடுத்துச் செல்லவல்ல பரதவன்.
அதோ மணல் வெளியில்
முள்ளம் பன்றிகளாய் உருழும்
இராவணன்மீசையை
சிங்களக் கடற்படையென்று
மீனவச் சிறுவர்கள் துரத்துகிறார்கள்.
இனிக் கரைமாறும் கடல்மாறும்
காலங்களும் மாறுமடி."
என்றும் குறிப்பிடுகின்றார். இங்குதான் ஓர் கவிஞரின் வாழ்வு பற்றிய இருத்தலின் ஓர்மம் இருக்கின்றது. ஆனால் இந்தக் கவிதைத் தொகுதியில் இவை சிறிது குறைவாகவே காணப்பட்டது. அத்துடன் மழைக்காலக் குறிப்புகளை வாசிக்கும் பொழுது என்னால் ஓர் மரபுக்கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இல்லை பின் நவீனத்துவமாகவோ என்று எதுவித சட்டகத்துக்குளும் அடக்க முடியாது, மிகவும் எளிமையான சொற்களைக் கோர்த்து சாதாரணப்பட்ட வாசகனையும் தன்னுள் இழுத்திருப்பது இந்த மழைக்காலக் குறிப்புகளின் வெற்றி என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இன்றைய காலத்தில் கவிதையில் விஞ்ஞான எதிர்வு கூறல்களை பலர் செய்யாது விடுகின்றனர் ஆனால் பல ஈழத்து கதைசொல்லிகள் விஞ்ஞான எதிர்வு கூறல்களை திறம்பட செய்துள்ளார்கள் அதில் இளைய தலைமுறையை சேர்ந்த அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே கே படலை முக்கியமானவர் அவரின் "கந்தசாமியும் கலக்சியும்" நாவல் புகழ் பெற்றது இந்த மழைக்காலக் குறிப்புகள் கவிதை தொகுதியில் ஓர் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது அதில் 3060 ஆம் ஆண்டில் நோவா தனது இறந்து போன தந்தையுடன் எண்ணங்களால் உரையாடிவிட்டு கவிதையின் இறுதி முத்தாய்ப்பாக ................
" ஜன்னல்களைத் திறந்து பார்த்தேன்
வெளியே
இரு வேற்றுக்கிரக வாசிகள்
மிதந்து கொண்டு சென்றனர்"
முடித்திருப்பது கவிஞரின் பன்முகப்பட்ட பாடுபொருளுக்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் ஒருசில கவிதைகள் கவிஞரின் தனி முத்திரை பதிந்து காணப்படுகின்றன. குறிப்பாக "மழை அனுபவங்களில்" …………………
"நடு நிசி நேரம்
வெளியே ஷெல் விழும்
உயிர் நடுங்கும்
மழை கொட்ட ஆரம்பிக்கும்
பங்கருக்குள் வெள்ளம்
குளிர் உயிர் கொல்லும்
உருண்டையாய் நீளமான
ஐந்து ஒன்று காலில் சுற்றி
மேலே நகரும் "
என்ற மழைக்கால அனுபவத்தைக் குறிப்பிட்டுவிட்டு தான் வாழ்ந்து வந்த போர்க்காலத்தின் சம்பவம் ஒன்றுடன் இறுதி முத்தாய்ப்பாகக் கவிதையை கோர்க்கும் பொழுது எனது காலில் பாம்பு ஊருவது போன்ற ஓர் உணர்வையே எனக்கு ஏற்படுத்தியது. இறுதியாக, வேலணையூர் தாஸின் தரமான ஆரோக்கியமான கவிதைகளை இணையங்களில் வாசித்த எனக்கு, மழைக்காலக் குறிப்புகள் சிறிது ஏமாற்றத்தை தந்திருந்த போதிலும் அவர் வார்த்தைகளால் தோரணம் கட்டாது எழிமையான சொல்லாட்சிகளினால் சாதாரண வாசகனையும் கவரதத்தக்க விதமாகக் கவிதைகளை இதில் தொகுத்திருப்பது உண்மையான மழைக்காலமாகவே எனக்குப் படுகின்றது. இவர் வருங்காலங்களில் மேலும் பல காத்திரமான கவிதைகளை வாசகர்களுக்குத் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு .
கோமகன்
மலைகள்
25 பங்குனி 2015
Comments
Post a Comment