கோண்டாவில் கதிரவேலருக்கும் அன்னபூரணிக்கும் பிறந்த சிவகுமாரன் என்ற சிவாவை எல்லோருமே மறந்து விட்டிருந்தார்கள். "பருப்பு" என்ற அவனது பட்டப்பெயரே எல்லோருக்கும் தெரிந்திருந்தது. சிறு வயதில் சிவாவாக இருந்த அவன் மைனராகி மேஜராகும் பொழுது வகுப்பறையிலும் சரி, ஊரின் கோயில் திருவிழாக்களிலும் சரி அவன் ஓர் பருப்பாகவே இருந்தான். ஒருமுறை அவனது வகுப்பறை தோழன் இவனது அலப்பரை தாங்காமல், "நீ………. என்ன பெரிய பருப்பா?" என்று கேட்டதற்கு அந்த வகுப்பறைத் தோழனை சிவா துவட்டி எடுத்து விட்டிருந்தான். இந்த நிகழ்சியினால் சிவாவிடம் ஓர் சண்டியன் என்ற ஹீரோ தன்மையும் அவனுடன் கூடுதல் தகுதியாக ஒட்டிக்கொண்டது. அன்றிலிருந்து சிவாவுக்கு "பருப்பு" என்ற பட்டபெயரும் நண்பர்களால் இலவசமாக கொடுக்கப்பட்டது. பள்ளிக்கூடத்தில் நடக்கின்ற எல்லா விளையாட்டுப்போட்டிகளிலும் சிவாதான் பருப்பு. புட்போல் விளையாட்டில் சிவா ஓர் சூரன். அப்பொழுது இளைஞர்களிடம் கராட்டி பழகுகின்ற மோகம் இருந்தது. சிவா கராட்டியையும் விட்டு வைக்காது அதிலும் பருப்பாக இருந்தான் . கராட்டியில் சிவா கறுப்பு பட்டி வாங்கியிருந்தான். இப்படி எல்லா விளையாட்டுகளிலும் சிவா பருப்பாக இருந்து அவனது உடம்பு ஓர் பொலி காளை போல் அழகாக இருந்தது . சிவா எப்பொழுதும் தனது கை கட்ஸ்சுகளை காட்ட சேர்ட்டு கையை தோள்மூட்டு வரை நன்றாக சுறுட்டி விட்டிருப்பான். விரிந்த மார்பை பெட்டையளுக்கு காட்ட மூன்று பட்டின்களை திறந்து விட்டிருப்பான்.அத்துடன் சிவா சிறுவயதில் பருப்புக்கறிப் பிரியன். மூன்று வேளையும் பாணும் பருப்புக்கறியும் கொடுத்தால் எதுவும் சொல்லாது அளவுக்கு மீறி சாப்பிடக்கூடியவன். அதுவும் அவனது அம்மா அன்னபூரணியின் கைப்பக்குவத்துக்கு நிகராக யாருமே பருப்புக்கறி வைக்கமாட்டார்கள் என்ற எண்ணப்பாடே அவனுக்கு அவன் மண்டையில் ஒட்டி இருந்தது . சிவா பருப்பாக இருந்ததுக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அவனது தந்தை கதிரவேலர் கோண்டாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் ஆங்கில வாத்தியாராக இருந்தார். அத்துடன் இயக்கம் அமைத்திருந்த பிரஜைகள் குழு தலைவராகவும் கதிரவேலர் தான் இருந்தார் .கதிரவேலரின் இந்த தகுதி நிலைகளும் சிவாவுக்கு எல்லாவற்றிலும் பருப்பாக இருக்க வைத்தது .
0000000000000000000000000000000
குரங்கு அப்பம் பிரித்த கதையாக சமாதானம் பேசவந்தோம் என்று அந்நியப்படைகள் ஈழ மண்ணில் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்த காலத்தில் எல்லரோரையும் போல பருப்பின் வாழ்கையிலும் இரண்டு பெரிய சூறாவளிகள் அடித்து பருப்பின் வாழ்கையையே புரட்டிப்போட்டன. கோண்டாவிலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெடியளுக்கு கதிரவேலர் ஓர் கடவுளாகவே இருந்தார். அந்த நேரத்தில் அமைதிப்படைகள் நடத்தும் சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகும் பெடியளை, கதிரவேலர் தனது ஆங்கில அறிவாலும், பிரைஜைகள் குழுவின் தலைவர் என்ற முறையிலும் அமைதிப்படை முகாம்களுக்கு சென்று கைதான பெடியளை மீட்டு வருவதுண்டு. இந்த தொடர்பால் அமைதிப்படைக்கும் கதிரவேலருக்கும் ஓர் சிநேகபூர்வமான தொடர்புகள் இருந்தது. கதிரவேலர் மீது முன்பு நடந்த காணிப்பிரச்சனையில் கறள் வைத்திருந்த விநாசித்தம்பி இயக்கத்துக்கு கதிரவேலரைப்பற்றி அண்டிவிட, ஒருநாள் மாலை கதிரவேலரை இயக்கம் "விசாரணைக்கு" என்று கூட்டிசென்றது. "ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ. நாங்கள் விசாரணைக்குத்தான் கூட்டிக்கொண்டு போறம். உங்கடை அவரை திருப்பி கொண்டுவந்து விடுவம்" . என்று இயக்கம் அழுது குழறிய அன்னபூரணியை சமாதனப்படுத்தியது. "எங்கடை பெடியள் தானே. அவருக்கு ஒண்டும் செய்யமாட்டாங்கள்" . என்று அன்னபூரணி இயக்கத்தின் கதையை மனதார நம்பினாள். விசாரணைக்கு சென்ற கதிரவேலர், மறுநாள் அதிகாலையில் உப்புமடச்சந்தியில் இருந்த லைற் போஸ்ற்ரில் "நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிக்கு நாங்கள் கொடுத்த தண்டனை" என்ற வாசகத்துடன் நெற்றியில் குண்டு பட்டு ரத்தம் வடிந்த நிலையில் உயிரில்லாமல் தொங்கினார். அன்னபூரணி துயரம் தாங்காமல் இயக்கத்துக்கு மண்ணை அள்ளி எறிந்து சாபம் கொடுத்தாள். இப்படி பல அன்னபூரணிகளின் வயித்தெரிவுகழும் சாபங்களும் வருங்காலத்தில் இயக்கத்துக்கு வேட்டு வைக்கும் என்பதை இயக்கம் அப்பொழுது உணரவில்லை. கதிரவேலருக்கு இயக்கம் செய்த அடாத்தான வேலையால் பருப்பின் அம்மா அன்னபூரணியை நிலைகுலைந்தாள். இயல்பு நிலைகள் குழம்பிய அந்தக்காலத்தில் கதிரவேலரின் ஒய்வூதியம் எட்டாக்கனியாகவே இருந்தது. சாரைப்பாம்பு மெதுவாகத் தன் இரையை விழுங்குவது போல வறுமை பருப்பையும் அன்னபூரணியையும் தன் பிடியினுள் கொண்டுவந்தது. வறுமையை போக்க பருப்பும் அவனது அம்மாவும் நிறையவே போராட வேண்டியிருந்தது. வெளியில் போய் அறியாத அன்னபூரணி இப்பொழுது பீடி சுற்ற சென்றாள். பருப்பு தொடர்ந்து படிக்க முடியாத நிலையில் தோட்டம் கொத்த வெளிக்கிட்டான். தொடர்ச்சியான தோட்ட வேலையினால் பருப்பின் உடல் முறுக்கேறி உருண்டு திரண்டிருந்தது. காலப்போக்கில் அதுவே அவனுக்கு வினையாகும் என்று அவன் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.
000000000000000000000000000000
ஒருநாள் அதிகாலையில் மருதனாமடச்சந்தியில் அருகே வந்துகொண்டிருந்த இந்திய அமைதிப்படை கவசவாகனத் தொடரணிக்கு இயக்கம் வைத்த கண்ணி வெடியினால் கோண்டாவிலும் அதன் சுற்றுப்புறமும் அல்லோலகல்லோலப்பட்டது. பருப்பையும் அவனையொத்த பல இளைஞர்களும், அவனது பள்ளித்தோழர்களும் அமைதிப்படையால் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடியில் பெண்டருடன் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள். பருப்புக்குத் தான் எல்லோருக்கும் முன்னால் அரை நிர்வாணமாக படுத்திருந்தது அவன் வாழ்வில் பெரும் அவமானமாக இருந்தது. எல்லோரையும் இயக்கம் எங்கே என்று கேட்டு அடித்த அடியில் மனரீதியாக பலர் குழம்பிப் போய் இருந்தனர். விசாரணையில் தாங்கள் என்னென்ன சொல்லித் தப்பிக்க வேண்டும் என்று தங்களுக்குள் ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். பருப்போ எதுவும் நினைக்கத் தோன்றாமல் எல்லோருடனும் வரிசையாக படுத்திருந்தான். விசாரணைகள் ஆரம்பமாகின. மொழிபெயர்ப்புக்கு மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த ஓர் படையதிகாரி ஒத்தாசையாக இருந்தான். பருப்பின் முறை வந்த பொழுது படையதிகாரியின் முன்னால் பருப்பு குந்தி இருக்க வைக்கப்பட்டான். எதற்கும் பயப்படாத பருப்பு முதன்முறையாகப் பயத்தின் சிலீரிடலை உணரத்தொடங்கினான். அவனது முறுக்கேறிய உடம்பைப் பார்த்து படையதிகாரிக்கு சந்தேகம் என்ற பூ மொக்கவிழ்க்கும் பொழுது, வினை அவனது பள்ளிக்கூட வகுப்பறைத்தோழன் மூலம் வந்தது." நீ என்ன பெரிய பருப்போ ?" என்று கேட்டு பருப்பிடம் அடிவாங்கிய அந்த வகுப்பறைத்தோழன், அமைதிப்படையின் அடிஅகோரம் தாங்காமல் இப்பொழுது சரியான நேரம் பார்த்து பருப்புக்குத் தன் கணக்கை தீர்த்து விட்டான்.
0000000000000000000000000000
கொழுத்த புலி மாட்டி விட்ட நிலையில் கைகள் பிணைக்கப்பட்டு பருப்பு அமைதிப்படையால் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டான். பலாலி படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பருப்புக்கு அவன் வாழ்க்கையிலேயே பார்த்திராத வேறொரு உலகம் அங்கு இருந்தது. இயக்கம் என்று சந்தேகப்படுபவர்கள் குற்றும் குலையுயிருமாக அங்கு செல்களில் இருந்தார்கள். சிலருக்கு அமைதிப்படை அடித்த அடியில் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. பருப்பு, வேள்விக்கு வெட்டக் கொண்டு வந்த செம்மறி ஆடு போல மிரட்சியுடன் அந்த இடத்தைப் பார்த்தான். பருப்பு ராணுவ வண்டியில் கீழே படுக்க வைக்கப்பட்டு பருப்பின் மேல் ராணுவ சப்பாத்துக்கள் உழக்கியதால் தோல்களில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவன் பின்னால் இறுக்கி கட்டிய கைகள் ரத்தம் கண்டி வலித்தன. மீண்டும் அங்கு விசாரணைகள் ஆரம்பமாகின. படையதிகாரிக்கு முன்னால் நிலத்தில் குந்தியிருக்கவைக்கப்பட்ட பருப்பு ஓர் அப்பாவித்தனமான முகபாவனையை வரவழைத்துக்கொண்டான். படையதிகாரியின் முகம் இறுகிக்காணப்பட்டது. படையதிகாரி எந்த மனநிலையில் இருக்கின்றான் என்று பருப்பால் மட்டுக்கட்ட முடியவில்லை .படையதிகாரி ஆரம்பத்தில் நட்புடன் தனது விசாரணையை ஆரம்பித்தான். பருப்பு எல்லா கேள்விக்கும் தனக்கும் இயக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்று சாதித்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்துக்கு மேல் படையதிகாரியின் ராச்சறினால் மூக்கின்மேல் கோபம் வந்த பருப்பு படையதிகாரியின் முகத்தின் மேல் காறித்துப்பி விட்டான். பருப்பு படையதிகாரியின் முகத்தில் காறித்துப்பியதைக் கண்ட படையதிகாரிக்குப் பாதுகாப்புக்காக பக்கத்தில் நின்ற அமைதிப்படையினர் பருப்பை நன்றாகவே வேகவைத்து விட்டார்கள். அடித்த அடியில் பருப்பின் அழகிய முகம் ரணகளமாகிவிட்டது. அடித்தவர்களை தனது அதிகாரத்தால் நிறுத்திய படையதிகாரி பருப்பை செல்லில் அடைக்கும் படி சொல்லிவிட்டு சென்று விட்டான்.
0000000000000000000000000000
அன்றைய பகல் முடிந்து இரவு வந்துகொண்டிருந்தது. வெளியே ஒரே இருட்டாக இருந்தது. அடிவலியினால் செல்லில் பருப்பு அனுங்கி கொண்டு இருந்தான். அன்றைய பொழுது அவனுக்கு நரகவேதனையாக இருந்தது. அந்த முகாம் எதுவித சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இடையிடையே படையினர் நடக்கும் பூட்ஸ் ஒலிகள் மட்டுமே அந்த முகாமின் அமைதியை குலைத்தன. சிறிது நேரத்தில் அவையும் அடங்கின. பருப்பு எப்படி நித்திரையானான் என்று அவனுக்கே தெரியவில்லை. திடீரென செல்லின் கதவு மெதுவாக திறக்கும் சத்தம் கேட்டு பருப்பு முழித்துப் பார்த்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை . அவனது முகத்தில் ரோச் லைற் வெளிச்சம் வந்து விழுந்தது. எதிரே பகலில் விசாரணை செய்த படையதிகாரி சீருடையில் இல்லாது கம்பீரமாக நின்றது பருப்புக்கு மங்கலாகத் தெரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பருப்பின் பின்னே வந்த அந்தப் படையதிகாரி பருப்பின் கைகளை இறுக்கப் பிடித்தவாறே பருப்பை பின்புறமாக வன்புணர்வு செய்ய ஆரம்பித்தான்.பருப்பு வலிதாங்க முடியாது ‘வேண்டாம் சேர்…… வேண்டாம் சேர்……..’ என்று குழறத்தொடங்கி விட்டான். பருப்பின் குழறல் அங்கு எடுபடவில்லை. அந்தக் குழறல் ஒலி பலாலி படைத்தளத்தின் காற்றில் கரைந்து விட்டிருந்தது. இறுதியில் பருப்பு கிழிந்த நாராக பின்புறம் ரத்தம் கசிந்த நிலையில் செல்லில் கிடந்தான் .அன்னபூரணி ,கோண்டாவில் சமாதான நீதவான் கந்தவனம் ஆகியோரது முயற்சியில் பருப்பு பலாலி படைத்தளத்தில் இருந்து விடுவிக்கப்பட்டான்.
பருப்பு விடுவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த பொழுதும் அவனால் படைத்தளத்தில் நடந்த அந்த கேடுகெட்ட சம்பவத்தை இலகுவாக மறந்து விடமுடியவில்லை. அந்த அவமானத்தை பருப்பால் தாங்க முடியவில்லை. இரவில் நித்திரை வராது எழும்பி இருந்தான். மகனின் மாற்றங்களை அவதானித்த அன்னபூரணி அவனின் பாதுகாப்புக்காக வெளிநாடு போக வற்புறுத்தத் தொடங்கினாள். ஆனால் பருப்புக்கு அம்மாவை தனிய விட்டு போக அவன் மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. அவன் மறுத்துவிட்டான். இதனால் வீட்டில் இருவருக்கும் பேச்சு குறைந்தது இறுதியில் அன்னபூரணியின் கண்ணீரே வென்றது. பருப்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பிரான்ஸ் செல்ல முடிவெடுத்தான்.
000000000000000000000000000
சைபருக்கும் ஒன்றுக்கும் இடையில் குளிர் நடனமாடிய 1989 ஆம் ஆண்டின் ஓர் பனிக்காலத்தின் நடுப்பகுதியில் பருப்பு எழுமலைதாண்டி பிரான்ஸ் வந்து சேர்ந்திருந்தான். மந்தையில் துலைந்த செம்மறி ஆடு போல பாரிஸ் பருப்பை ஆரம்பத்தில் மிரள வைத்தது. அன்னபூரணியின் தூரத்து உறவினன் ஒருவன் பருப்பு இருப்பதற்கு இடம் கொடுத்தான். முப்பத்திஐந்து சதுரமீற்றர் பரப்பளவைக் கொண்ட அந்த அறையில் இருந்த பதின்நான்கு பேருடன் பதினைந்தாவது ஆளாகப் பருப்பு சேர்ந்து கொண்டான். அந்த அறையில் எல்லோருமே முறை வைத்து படுத்து எழும்பி வந்தார்கள். ஒரு சிலரே வேலைக்குச் சென்றார்கள். சமையல் முறை வைத்து சமைக்கப்பட்டது. பெரிய பானையில் சோறும், ஒரு இறைச்சி கறியும் ஒரு மரக்கறியும் தினசரி உணவாகின பருப்பின் சமையல் முறை வரும் பொழுது கோழிக்கறியும் பருப்புக் கறியும் வைப்பான். ஆனாலும் அவனால் அன்னபூரணி போல் பருப்புக்கறி வைக்க முடியவில்லை. ஒரு நாள் அவன் பருப்புக்கறி வைக்கும் பொழுது பருப்புக்கு ஏனோ அவன் அம்மாவின் நினைவுகளே மண்டையில் சுழண்டடித்தது. அவன் அம்மா பருப்பு கறி செய்வதில் விண்ணியோ விண்ணி .பயத்தம் பருப்பை தண்ணியிலை போட்டு கொதிச்சு வர. சின்ன வெங்காயம், பிஞ்சு மிளகாய், உப்பு, கொஞ்சம் மஞ்சள் தூள் எல்லாம் போட்டு, கொஞ்ச நேரத்தாலை மிளகும் உள்ளியும் அம்மியிலை போட்டு நல்லாய் விழுதுபட அரைச்சு அதையும் போட்டு. மூண்டு நாலு கறிவேப்பம் இலையை கிள்ளி போட்டு. பருப்பை நல்லாய் அவிய விடாமல் அரை அவியலில் அம்மா செய்யும் பருப்புக்கறியுடன் பாண் தின்ற நினைவு வந்து கண் விழித்திரையை மங்கலாக்கியது.
பரிசுகெட்ட ஊரான பாரிஸில் பருப்பு தனது இருப்புக்கு நிறையவே போராட வேண்டி இருந்தது. அப்பொழுது அவனுக்கு பிரான்ஸ் உள்துறை அமைச்சு சிவப்பு விசாவே வழங்கியிருந்தது. அதில் அவன் வேலை செய்யலாம் ஆனால் அவனது அகதி அந்தஸ்து கோரிக்கை பிரான்சினால் அங்கீகரிக்கப்படவில்லை. அவனது அம்மாவையிட்ட கவலைகளில் இருந்து மீள முடியவில்லை. அது கறையான் புற்றுப்போல அவனுள் வளர்ந்து கொண்டிருந்தது. அவன் இருந்த அறையில் இருந்த சுகாதாரக்குறைபாடு அவனுக்கு சிறுவயதில் இருந்த கிரந்தியான சொறியை கொண்டு வந்திருந்தது. அந்த அறையில் இருந்தவர்களில் பாதிப்பேருக்கு இந்த சொறி வியாதி இருந்தது. எல்லோருமே கடலை வறுத்துக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் அவனது நண்பன் சொறிந்தபடி பருப்பை பார்த்து சொன்னான், " சொறிஞ்சால் நல்ல ரேஸ்ற்ராய் இருக்கும் மச்சான். "ஏன் ?" என்ற பருப்புக்கு "உனக்கு இப்பத்தானே சொறி வந்திருக்கு. சொறிஞ்சு பார் பேந்து தெரியும்" என்றான் அறை நண்பன் .அவனது சொல்லை பருப்பின் மனம் நம்ப மறுத்தது. உண்மையில் சொறிதலுக்கும் அதனால் வரும் இன்பத்துக்கும் என்ன சம்பந்தம்?? என்று அவனது மனம் அலைபாய்ந்தது. தோலில் வந்த சிறு கொப்பளங்கள் நமைச்சலை கொடுக்கும். அதனால் சொறிய வேண்டும் என்ற உணர்வை கொடுக்கும்.ஆனால் அவன் சொறிந்தால் இறுதியில் வலியே மிஞ்சியது. ஏன் அதை இன்பம் என்று அறை நண்பர்கள் சொல்கின்றார்கள்?? பருப்புக்கு ஏனோ சொறிக்கும் இன்பத்துக்கும் முரணாகவே தெரிந்தது.
00000000000000000000000000000
காலம் உருண்டோடி பருப்பின் பாரிஸ் வாழ்க்கையை வருடம் மூன்றிற்குத் தள்ளியிருந்தது. இந்த மூன்று வருட ஓட்டம் பருப்பை நன்றாகவே அலைக்களித்திருந்தது. தொடர்ந்த அம்மாவையிட்ட கவலைகளும். பலாலி படை முகாமில் நடந்த அந்த வன்புணர்வு சம்பவமும் மனதில் ஆழ வேரூன்றி, அதன் எதிர்வினையாக வலிப்பு என்ற புது வியாதியை அவனுக்கு ஏற்படுத்தியிருந்தது. இந்த வலிப்பால் அவனது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பருப்பால் தொடர்ந்து ஓரிடத்தில் வேலை செய்ய முடியவில்லை. பருப்பு பல இடங்களில் வேலை செய்து இறுதியில் வலிப்பு வியாதியால் வேலையே செய்ய முடியாத அளவுக்கு வந்தது. அத்துடன் அறையில் வழமை போல் எல்லாத்திலும் பருப்பாகவே இருந்தான். இதனால் ஒரு கட்டத்தில் அறை நண்பர்கள் பருப்பின் அலப்பரைகள் தாங்க முடியாது பருப்பை பிடித்து வெளியே விட்டு விட்டார்கள். நொண்டிக்குதிரையில் யார்தான் காசு கட்ட விரும்புவார்கள்? இப்பொழுது பருப்பு றோட்டுக்கு வந்து ஆறு மாதங்கள் முடிவடைந்து விட்டிருந்தன. இப்பொழுது பருப்பின் வாழ்விடம் றோட்டுக்கு மேலே போகும் மெட்ரோ ஜூறஸ் தண்டவாளத்துக்கு கீழே உள்ள இடமாக மாறியிருந்தது. குளிப்பதற்கு பொது குளிப்பறையை பாவித்தான். இயற்கை கடன்களையும் பொதுக்கழிப்பறையில் கழித்துக்கொண்டான். தனது வாழ்க்கை இப்படி தடம் மாறும் என்று பருப்பு நினைத்தே பார்த்திருக்கவில்லை.
கோடைக்கால இரவு ஒன்றில் பருப்பு மெட்றோ "ஜூறஸ்" க்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் இருந்து தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். தனது வாழ்க்கை இப்படி இருண்டதை அவனால் தாங்க முடியவில்லை. அவன் திரும்பி எழுவதற்கான சாத்தியங்கள் தூரத்தே தெரியும் நட்ச்சத்திரங்களாக கண்ணாம்மூஞ்சி காட்டிக்கொண்டிருந்தன . வாழ்கையில் எதுவுமே வெற்றி இல்லை. வெற்றியின் எங்கோ ஓர் அடிமூலையில் தோல்வி என்ற கரையான் எப்பொழுதுமே ஒட்டிக்கொண்டிருக்கும். காலப்போக்கில் அது வளர்ந்து வெற்றியை பெயரற்றது ஆக்கிவிடும். நாம் கடந்து வந்த காலடிச்சுவடுகள் எம்மைப்பார்த்து ஓர் எள்ளல் நகை நகைக்கும். இதற்கா இவ்வளவு அற்பத்தனமாய் நடந்து கொண்டாய் என்று ஓங்கி மனதில் ஓர் கொத்து கொத்தும். அப்பொழுது எமக்கு வயது போயிருக்கும். அனுபவம் மட்டுமே மிஞ்சி இருக்கும். ஆனால் அதில் மனநின்மதியும் வெறுமையும் கேள்விக்குறியாகி இருக்கும். பருப்பும் ஒருவகையில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருந்தான் . இதுவரை அவனிடம் சந்தோசமாக குடியிருந்த நின்மதி எதோ ஒருவகையில் அவனை விட்டு ஓர் எட்டு தள்ளியே நிற்கின்றது. அவன் ஒழுங்காக சாப்பிட்டு நாட்கள் மூன்றாகியிருந்தன.
00000000000000000000000000000000
அந்த ஆற்றங்கரையோரத்தில் மனித நடமாட்டம் படிப்படியாகக் குறைந்து பருப்பு மட்டுமே தனிய இருந்தான். வானத்தில் நட்சத்திரங்கள் பூக்கத்தொடங்கிவிட்டன. மூன்றாம் பிறை வானத்தின் மேலே எழுந்தது. ஆற்றில் மிதந்து கொண்டிருந்த வாத்துக்களின் க்ராக் ...........க்ராக் .............ஒலியே அப்பொழுது கேட்டுக்கொண்டிருந்தது. அந்த இடத்தில் சிறிய அளவில் குளிர்காற்று வீசத்தொடங்கியது. ஆற்றங்கரைக்கு அருகே ஓர் ஆடம்பரக்கார் ஒன்று வழுக்கியபடியே வந்து நின்றது. அதிலிருந்து ஓர் பிரெஞ் பெடியன் இறங்கினான். " ஹாய் ஷெரி ........ " என்று சிறிது பெலப்பாக குரல் வந்த திக்கை தலையை குனிந்து இருந்து யோசித்தவாறே இருந்த பருப்பு ஏறிட்டுப்பார்த்தான். அங்கே இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க பிரெஞ் பெடியன் ஒருத்தன் நின்றிருந்தான். இப்படி ஒரு அழகான பெட்டியனை பருப்பு தனது பாரிஸ் சீவியத்தில் பார்த்ததில்லை. நெடுநெடுவென்ற உயர்ந்த தோற்றமும், சிறிய வாயும், அளவான உயரத்தை கொண்ட கழுத்தும், அகன்று விரிந்த மார்புகளும், மிதப்பான கட்ஸ்சுகளைக் கொண்ட கைகளும் என்று காலக்கடவுள் அவனை வஞ்சகமில்லாமல் மிக நேர்த்தியாக வரைந்து இருந்தான். அவனின் வாயினில் விஸ்கி மணம் வெளிவந்து கொண்டிருந்ததால் அவன் நன்றாக குடித்திருந்தான் என்பதை பருப்பால் ஊகிக்க முடிந்தது. எதோ வில்லங்கம் வரப்போகின்றது என்று மட்டும் உள்மனம் பருப்புக்கு உணர்த்தியது. அவனது கால்கள் கலவியில் கலந்த பாம்புகள் பின்னிப் பிணைவது போல காற்றில் அலை பாய்ந்தன. அந்த பிரெஞ் பெடியனது முகத்தை அழகான கறுப்புக்கண்ணாடி அலங்கரித்திருந்தது. அவன் பருப்பை நோக்கி வரத்தொடங்கினான் .பருப்பின் அருகே அமர்ந்துகொண்ட அவன் சினேகபூர்வமாக ஓர் சிகரட்டை எடுத்து பருப்பிடம் எடுத்து நீட்டினான். பருப்பு மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான். பருப்பு அப்போதிருந்த மனநிலையில் அவனுக்கு ஓர் சிகரட் தேவைப்பட்டது.
“ஆமா உனது பெயர் என்ன”?
பருப்பு சிறிது நேரம் யோசித்து விட்டு,
“பருப்பு………..பருப்பு” என்றான்.
“நீ புதுசா?”
“இல்லை பழசு”
பருப்பு சற்றே மறந்து போயிருந்த பசி சட்டென்று அடிவயிற்றில் குபுக்கென்னு மூண்டு கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
பிரெஞ் பெடியன் பருப்பின் அருகே தேய்த்துக்கொண்டு அவன் தோளில் கை போட்டு அமர்ந்தான். மது வாடை பருப்பின் மூக்கை அறுத்தது.
“நீ அழகாய் இருக்கின்றாய்” என்று பருப்பின் காதில் குசுகுசுத்தவாறே கைகளில் இரண்டு இருனூறு யூறோ தாள்களை திணித்தான்.
பருப்பு பாதி சாம்பலாகிவிட்ட சிகெரெட்டை தூர வீசிவிட்டு ” உன்னைவிடவா?” என்றான்.
கோமகன்
வல்லினம்
07 சித்திரை 2015
Comments
Post a Comment