"இலக்கியங்களில் உண்மைகள் இருக்கலாம். ஆனால் எல்லா உண்மைகளும் இலக்கியமாகிவிட முடியாது." -ஆதவன் கதிரேசர்பிள்ளை.
ஆதவன் கதிரேசர்பிள்ளை என்று பலரால் அறியப்படும் ஆதவன் தாயகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆதவன் கதிரேசர்பிள்ளை இப்பொழுது தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார். இவர் 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் தமது பன்முக ஆழுமையை வெளிப்படுத்தியவர். ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக ஆதவன் கதிரேசர்பிள்ளை எம்மிடையே இருக்கின்றார். 1980 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் இவரின் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகி இருந்தது. ஆதவன் கதிரேசர்பிள்ளை தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த பின்னர் நோர்வேயில் இருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில் ஒன்றாகிய "சுவடுகள்" சஞ்சிகையில் "மண்மனம்" என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் சிறுவர் அரங்கு தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது இங்கே குறிப்படத்தக்கது. அத்துடன் தாயகத்தில் விடுதலைப் போராளிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் நிலவிய காலங்களில் இவர் இயக்கிய "ஒரு இராஜகுமாரியின் கனவு" என்ற சிறுவர் தொடர்பான குறும்படமும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. முதுமையிலும் ஓர் இளைஞனுக்கே உரிய உற்சாகத்துடன் ஸ்கைப் தொடர்பாடல் மூலம் பல்வேறு கட்டங்களில் என்னுடன் நடத்திய நேர்காணல் உங்களுக்காக…………………
கோமகன்
00000000000000000000000
உங்கள் இளமைக்காலம் பற்றியும் , குறிப்பாக உங்கள் பல்துறை சார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள் இளமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?
எனது இளமைக்காலத்தையிட்டு தாராளமாகவே சொல்லலாம். கலையும் எழுத்தும் சார்ந்த ஓர் கிராமமான அளவெட்டியில் பிறந்தேன். நீங்கள் அறிந்திருக்ககூடும். அளவெட்டியில் மிகப்பெரிய நாதஸ்வர வித்துவான்களும் , தவில் வித்துவான்களும் நிறைந்த சூழலும்,அதிக பிரசங்கிகள் நிறைந்த சூழலும், அருகே அருணோதயாக்கல்லூரி மகாஜனாக்கல்லூரி என்று எல்லாமே இலக்கியமும் கலையும் சார்ந்த ஓர் சூழலில் நான் சிறு வயதில் வளர்ந்தேன். அத்துடன் எனது தந்தை ஓர் மிகப்பெரிய தமிழ் ஆசான். அவரிடம் கல்வி பெற்ற மாணவர்கள் உலகெங்கும் பரந்து இருக்கின்றார்கள். அவர் கவிஞர் கதிரேசர்பிள்ளை என்றே எல்லோராலும் அறியப்பட்டிருந்தார். அவரை பண்டிதர் கதிரேசர்பிள்ளை என்றும் அழைப்பார்கள். அவருடைய தமிழ் ஊற்றுத்தான் என்னிடம் வளர்கின்றது. அத்துடன் எனது தந்தை ஓர் நாடகாசிரியரும் சைவப்பிரசங்கியுமாவார். அதனால் எனது தந்தையிடமிருந்தே இந்த தமிழும் நாடகமும் எனக்கு வந்தது என்று சொல்வேன். அத்துடன் எனது வீட்டுக்கு முன்புதான் நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன் வீடு இருக்கின்றது. எப்பொழுதும் அவரின் நாதஸ்வர சாதகத்தில் பூபாள இசையில் தான் எனது விடியல் விடிந்து இருக்கின்றது. இந்த இசையில் கவர்ந்து அவரிடம் சிறுவயதில் புல்லாங்குழல் பயின்றும் இருக்கின்றேன். இவ்வாறு எனது பல்துறை சார் திறமைகள் வெளிப்பட்டதிற்கான ஆரம்ப சூழல் எனது கிராமமான அளவெட்டியும், எனது தந்தை கதிரேசர்பிள்ளையும்தான் காரணம் என்று சொல்வேன் .
நாடகத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள் எவை ?
நான் நாடகத்துறையில் நுழைவதற்கு எனது தந்தையே முழுமுதல் காரணியாக இருந்திருந்தார். எனது தந்தையின் "பாரதம் தந்த பரிசு" என்ற புத்தகம். அதில் ஐந்து நாடகங்கள் இருந்தது. மஹாபாரத்ததில் இருந்து ஐந்து வெவ்வேறு கட்டங்களை வைத்து ஐந்து நாடகங்கள் எழுதியிருந்தார் . இந்த ஐந்து நாடகங்களும் அகில இலங்கையில் தொடர்சியாக மேடையேற்றப்பட்டன. அதற்கு சாகித்திய மண்டல விருதும் கிடைத்தது. அதைவிட எனது தந்தையின் சைக்கிள் பார் தான் எனக்கு அதிக பாடங்களைத் தந்தன என்று சொல்லலாம் . என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது பல கதைகளை சொல்லிக்கொண்டு வருவார். எனது 4 ஆவது வயதிலேயே நாடகம் நடிக்க எனது தந்தை பழக்கி விட்டார். நான்கு வயதில் இருந்து இன்று வரை நாடகமே எனது மூச்சுக்காற்றாகியது. அத்துடன் அவர் நாடக வசனங்கள் எழுதும் பொழுதும், காட்சிகளை மற்றயவர்களுக்கு விபரிக்கும் பொழுதும் என்னையே முன்மாதிரியாக வைத்து மாறுபட்ட பரிசோதனைகளை செய்வார் . இதனால் எனது நாடகம் பற்றிய பார்வைகள் கூர்மையடைந்தன.
அந்த நாடக அரங்கமானது பாரம்பரிய மேடையரங்கமாக இருந்தனவா? இல்லை ஏதாவது நவீனத்துவங்கள் இருந்ததா ?
அவை நவீன நாடக முறையில் இருந்தாலும் கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடக மரபும் கலந்தே இருந்தன. நீங்கள் வி வி வைரமுத்துவின் மேடைகளைப் பார்த்தால் அதில் பெரும்பாலும் இசை நாடக மரபைக் கொண்டிருக்கும். பின்னர் டி கே சண்முகம் சகோதரர்கள் "படச்சட்டக அரங்கம்" என்று சொல்லப்படும் மேடை நாடகத்தை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சரித்திர நாடகங்களை படச்சட்டக அரங்கு என்று அழைக்கப்படும் மேடை நாடக வடிவத்தில் எனது தந்தையார் கொடுத்தார். இதே காலகட்டத்தில் தான் தமிழகத்தில் மனோகரின் நாடகங்கள் உச்சம் பெற்றன .
நீங்கள் யாழ்ப்பாணத்தில் விரிவுரையாளராக இருந்தபொழுது யாழ் பல்கலைக்கழகம் நாடகத்துறையில் எந்தவிதமான களத்தை உங்களுக்கு உருவாக்கித்தந்தது ?
நான் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவே கடமையாற்றினேன். 1980 களில் என எண்ணுகின்றேன்,பேராசிரியர் கா.சிவத்தம்பியினால் நுண்கலைப் பீடம் முதன் முதலாக யாழ் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்டது . அந்த நுண்கலைப் பீடம் இராமநாதன் கல்லூரியில் இயங்கிக் கொண்டு இருந்தது. பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு, பின்னர் யாழ் பல்கலைகழகத்திலேயே உருவாக்கப்பட்டது. நான் யாழ் பலகலைகழகத்தை விட்டு வெளியேறிய பின்னர்தான் நாடக அரங்கத்துறை 84-85களில் உருவாக்கப்பட்டது. இது பேராசிரியர் சிவத்தம்பியின் பின்னர், சிதம்பரநாதன் போன்றோரால் கொண்டு நடாத்தப்படடது. எனவே நான் வெளியேறிய பின்னரே யாழ் பலகலை கழகத்தில் நாடக துறையும், நாடக அரங்கும் வந்ததால் எனக்கு அதில் போதிய அனுபவங்கள் இருக்கவில்லை என்பதே உண்மையாகும் .
திரைப்படங்களில் இருந்து நாடகம் தன்னை எப்படி வேறுபடுத்திக் கொள்கின்றது ?
நாடகம் பார்வையாளர்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டது. பார்வையாளர்கள் இல்லாமல் நாடகம் இல்லை. பார்வையாளரையும் பிரதியில் பங்காளராக்கும் சாத்தியங்களைக் கொண்டது நவீன நாடகம் .திரைப்படங்களில் அந்தச் சாத்தியங்கள் இருப்பதில்லை. அதனால்த் தான் ஒரு அறிஞர் சொன்னார் "நாடகம் ஒருமுறை நிகழ்த்தப்பட்டாலும் செத்து விடுகின்றது என்று ". உண்மைதான் அது திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பட்டாலும் தன்னை புதிது புதிதாகப் புதுப்பித்துக்கொள்ளும் சாத்தியம் நாடகத்தில் இருக்கின்றது. அச்சாத்தியம் திரைப்படங்களில் இருப்பதில்லை. ஒருமுறை நாடகம் நடித்ததும் அது செத்து விடும். பின் நாளைக்கே அந்த நாடகத்தைப் போட்டாலும் அது புதிய களம், புதிய பார்வையாளர்கள் என்று புதிய உணர்வுகளைக் கொடுக்கும். இதனால்த்தான் ஒரு நாடகம் மூவாயிரம் ,நான்காயிரம் தடவைகள் மேடையேற்றப்பட்டாலும் ஒவ்வரு தடவையும் அது புதிய உணர்வுகளையே கொடுக்கும் .
தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த பின்னர் நாடகத்துறையில் உங்கள் நோக்கம் வெற்றியடைந்ததாக எண்ணுகின்றீர்களா ?
அதற்கு முதல் சில விடையங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் இந்த கேள்வி முதலாவது கேள்வியுடன் தொடர்புபட்டு இருப்பதால் தாயகத்தில் அளவெட்டியில் இருந்தே ஆரம்பிக்கின்றேன். அளவெட்டியில் எனக்கு மூத்த தலை முறையினரான எனது தந்தையார் கதிரேசர்பிள்ளை, மஹாகவி அதன் பின்னரான இளைய தலைமுறையினரான எனது அயல் வீட்டைச் சேர்ந்த சேரன், நான், கனடாவில் இருக்கும் புராந்தகன் ஆகியோர் ஒன்று சேர்ந்து "ஞாயிறு படைப்பாளிகள் வட்டம்" ஒன்றை உருவாக்கியிருந்தோம். அதில் "ஞாயிறு" என்ற கையெழுத்து சஞ்சிகை ஒன்றை நடாத்தினோம். அதன் விரிவாக்கமாக பல கலை நிகழ்ச்சிகளை செய்யத்தொடங்கினோம். அதில் இப்பொழுது இருக்கின்ற இளவாலை விஜேந்திரன், இரவி அருணாச்சலம், பாலசூரியன் , லண்டனில் வாழும் சிறந்த இசையமைப்பாளர் பராபரன் போன்றோர் எனது நாடகப்பட்டறையில் இருந்தார்கள். அப்பொழுது "சுமைகள்" என்றதொரு நாடகத்தை போட்டோம். அது ஓர் குறியீட்டு வகையிலான நாடக வடிவம். அது அப்பொழுது பெரும் வெற்றியீட்டி பலரால் பேசப்பட்ட ஓர் நாடகமாகும். அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருக்கும் மாவை நித்தியானந்தன் எழுதிய "திருவிழா" என்ற அரசியல் நாடகத்தைப் போட்டோம். அதில் தமிழர் விடுதலைக்கூட்டணியையும் பாராளுமன்றத்தையும் அவர்களின் பொட்டுக்கேடுகளையும் சனங்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக மிகவும் காரசாரமாக விமர்சிக்கப்படுவதே அந்த நாடகத்தின் கருப்பொருளாகும். அது ஓர் தெருநாடக வகையைச் சேர்ந்தது. முதன் முதலில் தாயகத்தில் "திருவிழா" தெருநாடகத்தை உருவாக்கியது நான் தான். அதன் பின்னரே "மண் சுமந்த மேனியர்" தெருநாடகம் போடப்பட்டது.
புலம் பெயர் சூழலில் நவீன நாடகங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளனவா ?அவற்றின் பாதிப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?
நாடகங்கள் பார்வையாளர்களுடன் நேரடியான தொடர்புகள் இருப்பதால் அது அன்றாட பிரச்சனைகளின் வடிகாலாகும் தன்மை இருக்கின்றது எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை நேரடியாக மக்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.போறம் தியேட்டர், இன்சிவில் தியேட்டரில் பார்வையாளர்களும் நாடகத்தில் பங்கேற்பார்கள். ஆகவே இறுக்கமான புலம் பெயர் சூழலில் நாடகங்கள் இதனால் அவசியமாகின்றன .
இன்றைய புலம் பெயர் நாடகங்களின் போக்கு எப்படி இருக்கின்றது ?
நாடகங்கள் மிகக் குறைவாகவே மேடையேறுகின்றன. அண்மையில் கனடாவில் வெளிவந்த அரங்காடல், மற்றும் மனவெளி நாடகங்களின் செயற்பாடுகள் நம்பிக்கையளிபனவாக இருக்கின்றன .
தெரு நாடகத்துக்கும் பாரம்பரிய நாடகத்துக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசங்கள் உள்ளன ?
இதை சற்று விரிவாகப் பார்த்தால், "தெருக்கூத்து" என்பது வேறொரு வகையானதாகும். அது கூத்தின் அடிப்படையில் உருவாவது. ஆனால் தெருநாடகத்தில் நாங்கள் போறம் தியேட்டர் (Forum Theater) வடிவில் நேரடியாக வீதியில் இறங்கி எங்கள் செய்திகள் அல்லது சங்கதிகளை சனங்களுக்கு சொல்லுவோம். அதை, நவீன முறையாகவோ, இசை வடிவாகவோ, ஆடல் பாடல் மூலமாகவோ, சிலை போல் நிற்றல் மூலமாகவோ, நாங்கள் எந்த வடிவத்திலும் சொல்லலாம். இதன் அடிப்படை செய்தி என்னவென்றால், சனங்களுக்கு ஓர் விழிப்புணர்வை அல்லது எச்சரிக்கையை கொடுப்பதாகும். இதை நாங்கள் தெல்லிப்பளை சந்தி, மருதனாமடம் சந்தி போன்ற சனங்கள் கூடும் இடங்களில் செய்தோம்.
தமிழகத்தை சேர்ந்த நாடகத்துறையை சேர்ந்தவரும் நடிகருமான நாசர் உடனான உங்கள் தொடர்பு பற்றி சிறிது கூறுங்கள் ?
1985 களில் நான் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தமிழ் நாட்டில் இருந்தபொழுது பிரச்சாரத்துக்கும் நிதி திரட்டுவதற்கும் என்னை நாடகம் போடும்படி தேசியத்தலைவர் பிரபாகரன் என்னுடன் நேரிடையாக பேசியிருந்தார். அப்பொழுது கவிஞர் விக்கிரமாதித்தன் உடாக பரிக்க்ஷா ஞானியின் தொடர்பு கிடைத்தது. அப்பொழுது அவர் தான் நாசர், பாலாசிங், ப்ரீதம் சர்க்கரவர்த்தி ஆகியோர் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்வார்கள் என்று எனக்கு கூறியிருந்தார். நான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் மூலமாகவே நான் "சங்காரமே என் று…….." மூன்று மணித்தியால நாடகத்தைப் போட்டேன். அதுவும் பலரால் பேசப்பட்ட ஓர் நாடகமாகும். அப்பொழுது நாசர் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முயன்று கொண்டிருந்த காலம். அப்பொழுது கே.பாலச்சந்தரின் "கலியாண அகதிகள் " என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அவர் தனது திரைப்படப் படப்பிடிப்புகளை முடித்து விட்டு, செங்கல்பட்டில் இருந்து எனது நாடகத்துக்கு ஒத்திகை பார்க சென்னைக்கு வருவார். அவர் அந்த நாடகத்திற்காக முழு ஈடுபாட்டுடன் பங்காற்றினார். அதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் குடும்ப நண்பர்களாகவும் இருக்கின்றோம் .
இன்றைய நாட்களில் சிறுவர் இலக்கியம் என்பது முதன்மை பெறுகின்றது. இதில் சிறுவர் அரங்கு எத்தகைய இடத்தை பிடிக்கின்றது?
சிறுவர் அரங்கம் பற்றி நிறைய ஊடகவியலாளர்களுடன் கதைத்திருக்கின்றேன். அத்துடன் பாரிஸில் இருக்கும் அரியநாயகம் அவர்களால் நடாத்தப்படும் "உடல்" சஞ்சிகையில், "உலகமயமாதலும் சிறுவர் அரங்கு எதிர்நோக்கும் சவால்களும்" என்ற தலைப்பில் ஓர் கட்டுரை தொடர்ச்சியாக எழுதிவந்தேன். என்னைப்பொறுத்தவரையில் சிறுவர் அரங்கு தமிழர் மத்தியில் மிக மிகப் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழர் மத்தியில் சிறுவர் அரங்கில் நவீன உலக ஒழுங்குகளை தெரியாதவர்களும், நவீன அரங்கு பற்றிய சரியான புரிதல்கள் இல்லாதவர்களும் தான் சிறுவர் அரங்கை செய்துகொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக ஓர் உடல் பருத்த சிறுவனாக இருந்தால் அவனை "பீமன்" கதாபாத்திரத்துக்குப் போடுகின்றார்கள். அத்துடன் உலகமயமாதலினால் சிறுவர்களுக்கு கூடுதலாக ஊடகங்கள், கணணி விளையாட்டுக்கள், ஸ்பைடர் மான், ஹரி போட்டர், சுப்பர் மான் போன்ற நிகழ்சிகளை தொடர்ச்சியாக வழங்கி சிறுவர்களை உடற் பயிற்சியற்றவர்களாக்குகின்றன. இப்படியான சிறுவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கான உடற்பயிற்சிகளை கொடுப்பது என்பது மிகப் பெரும் சவால்களைக் கொண்டது. அந்தப் பணியை பெரும்பாலும் சிறுவர் அரங்கை நடாத்துபவர்கள் செய்வதில்லை. இதை தமிழர் சமூகத்தில் மிகப்பெரிய பின்னடைவு என்றே தான் சொல்வேன். நான் சிறுவர் அரங்கை ஓர் சவாலாக எடுத்து முன்னெடுப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுப் பல சிறுவர் அரங்கை தமிழர்களுக்கும் இங்கு வாழும் டெனிஷ் சிறுவர்களுக்கும் நிகழ்த்தியிருக்கின்றேன். அத்துடன் நோர்வேயிலும், பாரிஸில் சுபாசுடன் சேர்ந்தும், சுவிஸில் பல சிறுவர் அரங்குகளையும் நிகழ்த்தியிருக்கின்றேன். ஆனாலும் தமிழர் சூழலில் சிறுவர் அரங்கமானது மிக மிகப் பின்தங்கிய நிலையில் இருப்பது கவலைக்குரியதுதான் இந்த நிலமைக்கு இன்னுமோர் முக்கிய காரணமுண்டு அது என்னவென்றால் சிறுவர் அரங்கு பற்றிய விழிப்புணர்வானது கடும் வறட்சி நிலையிலேயே சிறுவர் அரங்க ஆசிரியர்களுக்கு உள்ளது.
சிறுவர் அரங்காடலை எவ்விதமாக நிகழ்த்துகின்றீர்கள் ?
சிறுவர்களின் மன ஆழுமையை விருத்தி செய்யும் படச்சட்டக அரங்கைத் தவிர்த்து அரங்கம் பார்வையாளர்களையும் உள்ளடக்கிய அரங்கமாகவே இருக்கும். உதாரணமாக காடு இருக்கின்றது என்றால் அந்த அரங்கம் முழுவதையுமே காடாக்கி வைத்திருப்பேன். பார்வையாளரிடைடேயும் மரங்கள் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் தாயகத்திலோ இல்லை புலம்பெயர் தேசங்களிலோ நாடகத்துறை வளர்ச்சியடைந்துள்ளதா ?
உண்மையாக தாயகத்தில் தமிழர் நாடக அரங்கத்துறைக்கு உண்மையான அரச அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இங்குள்ள அரசுகள் நாடக அரங்குகளுக்கு அரச அங்கீகாரத்தையும் கொடுத்து அதற்கு வேண்டிய நிதி உதவிகளையும் செய்கின்றன என்பது முக்கியமான விடயம். அத்துடன் இங்குள்ள அரசுகள் நாடகத்துறைக்கென்றே பிரிவுகளை உருவாக்கி நிதிஉதவிகளையும் செய்கின்றன. இது ஒருபுறமிருக்க புலம் பெயர் தேசங்களில் ஒரு சிலரின் முயற்சியினால் நாடகக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக சுவிஸில் தமிழர் நாடக அரங்கக் கல்லூரி உருவாக்கப்படாது. இக்கல்லூரியை அன்ரன் பொன்ராஜாவே உருவாக்கினார் பின்னர் நானும் அவருடன் இணைந்து கொண்டேன். அதில் பன்னிரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு மூன்று வருட நாடக அரங்கக் கற்கை நெறி வழங்கப்பட்டது. இந்தக் கற்கை நெறியை ஓர் பெரும் சவாலாக எடுத்து மேலைத்தேய நாடக அரங்குகளுக்கு ஈடான ஓர் பயிற்சிப்பட்டறைகளாக தமிழர் நாடக அரங்கக் கல்லூரியினால் வழங்கப்பட்டது. தாயகத்தில் விடுதலைப்புலிகளின் ஆழுகை மேலோங்கியிருந்த காலத்தில் நாடக அரங்கானது மிகவும் உச்சநிலையடைந்து காணப்பட்டது என்றுதான் சொல்வேன். இதை வேறுவடிவமாகச் சொல்வதானால், இந்த உச்ச நிலையை, " மண்சுமந்த மேனியருக்கு முற்பட்ட காலம்". " மண்சுமந்த மேனியருக்கு பிற்பட்ட காலம்" என்று வரையறை செய்துகொள்ளலாம். அந்த நேரங்களில் 4 வருடங்களாக வன்னியில் இருந்தேன். அரங்கச் செயற்பாடுகளிலும், சிறுவர் அரங்கங்களையும் இந்தக்காலங்களில் அங்கு நடாத்தினேன். ஆனால் இங்கு புலம்பெயர் நாடுகளில் தமிழர் சமூகத்திற்கு தியேட்டர்கள் பெரிதாக இல்லையென்றே சொல்லலாம். அதுவும் சுவிஸ் நாடக அரங்கு கல்லூரிக்குப் பின்னர் அழிந்து விட்டன என்றுதான் சொல்வேன். ஆனால் சுவிஸில் உள்ள விஜயன், பற்றிக் போன்றவர்கள் முன்னெடுத்துச் செய்கின்றார்கள். இதில் பற்றிக் நாடக அரங்கில் முதுகலை மானிப்பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாயகத்தில் திருமறைக்கலாமன்றம், கனடாவில் மனவெளியரங்காடல், லண்டனில் பாலேந்திரா போன்றார் செய்தாலும் விஜயன், பற்றிக் போன்றோர் போல "சீரியஸ் நாடக அரங்காடலை" செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
தாயகத்தில் அவைக்காற்றுக் கலை கழகத்தின் செயற்பாடுகள் நாடக அரங்கில் எப்படியான மாற்றத்தை உருவாக்கியிருந்தன?
தாசியஸ், பேராசிரியர் சண்முகலிங்கம் மாஸ்ரர், பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் "நாடக அரங்க கல்லூரி" என்று ஒரு குழுவாகவும், நிர்மலா நித்தியானந்தன், நித்தியானந்தன், பாலேந்திரா ஆகியோர் "அவைக்காற்றுக் கலை கழகம் " என்று இன்னுமொரு குழுவாகவும் இயங்கினார்கள். அவைக்காற்றுக் கலை கழகம் பல மொழிபெயர்ப்பு நாடகங்களை தந்தது. அத்துடன் அவைக்காற்று கலை கழகத்தின் முக்கிய பங்களிப்பு என்னவென்றால், நன்கு அறியப்பட்ட அரங்கத்தையும், பல மொழி பெயர்ப்பு நாடகங்களையும், நாடக அரங்கில் நவீன உத்திகளையும் தமிழுக்குக் கொண்டுவந்தது மிகப்பெரிய விடயமாகும் .
முன்னய காலங்களில் இருந்த நாடக வடிவத்துக்கும் இப்போதுள்ள நாடக வடிவத்துக்கும் இடையில் ஏதாவது வித்தியாசங்களை உணருகின்றீர்களா?
ஆம்…….. நிச்சயமாகப் பாரிய வித்தியாசங்களை உணருகின்றேன். அரங்க வகைகளில் பாரிய வளர்ச்சி இப்பொழுது வந்துள்ளது. தமிழர்களுக்கு மிகப்பரிச்சயமான கூத்து, வடமோடி, தென்மோடி போன்ற பாரம்பரிய அரங்க வகைளும். பின்னர் வந்த வி.வி. வைரமுத்துவின் இசை நாடக வடிவும், அதன் பின்னர் வந்த மேலைத்தேய நாடக அரங்குகள் நவீன உத்திகளுடன் இறக்குமதியாக்கப்பட்டன. அதில் முக்கியமாக நவீன நாடக அரங்க உத்திகள் அவைக்காற்று கலை கழகத்தின் வழியாகவும்,தாயசிஸ் , பேராசிரியர் சண்முகலிங்கம் மாஸ்ரறினுடாகவும் தமிழர் மத்தியில் நுழைந்தன. இப்பொழுது பேராசிரியர் மௌனகுரு இதை மேலும் வழிநடாத்தி செல்கின்றார்.
விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து கடமையாற்ரியாதாக குறிப்பிட்டீர்கள் அது பற்றிய உங்கள் அனுபவங்களை விளக்கமாக சொல்ல முடியுமா?
விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகட்டங்களில் எனக்கு சகல விடுதலை அமைப்புகளினுடனும் தொடர்புகள் இருந்தன. அனைத்து விடுதலை அமைப்புகளையும் ஓர் அணியினுள் கொண்டுவர வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன். நான் முழுமையாக விடுதலைப்புலிகள் அமைப்பில் நுழைந்த காலகட்டம், திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொண்ட 13 இராணுவத்தினரின் கண்ணிவெடிதாக்குதலின் பின்னரே. அப்பொழுது நான் அந்த தாக்குதல் சம்பவத்தில் 17 ஆவது சந்தேகநபராக இலங்கை குற்றப்புலனாய்வுத்துறையால் தேடப்பட்டேன். ஏறத்தாழ ஐந்து தடவைகள் பலாலி வீதியில் இருந்த எனது வீடு சுற்றிவளைக்கப்பட்டதன் பின்னர் நான் தலைமறைவாகி விட்டேன். அப்பொழுது யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த பண்டிதர், வண்டி மூலம் என்னை சென்னைக்கு அனுப்பி விட்டார். பின்னர் அங்கிருந்து இயங்கினேன். இவைகள் எனது ஆரம்பகால அனுபவங்கள். அதன் பின்னர் தொடர்ந்து அமைப்பில் கடமையாற்றினேன்.
இன்றைய இலக்கிய உலகில் உண்மை பேசுவோர் தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்படுகின்ற ஓர் சூழல் காணப்படுகின்றது. இது பற்றிய உங்கள் பார்வை என்ன ?
இந்தக் கேள்விக்கான விடையை நான் தத்துவார்த்த ரீதியாகவே அணுக விரும்புகின்றேன். முதலாவதாக இலக்கியம் என்பது உண்மையானதா ? அல்லது புனைவு என்பது உண்மையானதா? புனைவுக்கும் இலக்கியத்துக்கும் இடையிலான இடைவெளியை, ஓர் நூல் இடைவெளிதான் வேறுபடுத்துகின்றது. கண்ணுக்குத்தெரியாத சில எல்லைகளினால் புனைவும், இலக்கியமும் பின்னிப்பிணைந்து இருக்கின்றது. இலக்கியங்களில் உண்மைகள் இருக்கலாம். ஆனால் எல்லா உண்மைகளும் இலக்கியமாகிவிட முடியாது. உண்மைகள்தான் சொல்லப்படவேண்டுமென்றால் எல்லா உண்மைகளையும் ஓர் ஆவணமாக நாங்கள் சொல்லிவிட்டுப் போகலாமே ? எனவே இங்கு இலக்கியத்துக்கு ஓர் புனைவு என்பது அத்தியாவசிமாகின்றது. ஆனால் நவீன இலக்கிய வரலாற்றில் எல்லாவற்றையும் சேர்த்து ( உண்மை, புனைவு ) பின்நவீனத்துவத்தின் கட்டுடைத்தல் மூலம் நிகழ்கின்றது. ஆனால் நாங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும். புனைவு இல்லாமல் இலக்கியம் இருக்க முடியுமா? அல்லது உண்மை இல்லாமல் இலக்கியம் இருக்க முடியுமா? யதார்த்த இலக்கியம் என்றால் என்ன? புனைவு இலக்கியம் என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு நாங்கள் தத்துவார்த்த ரீதியாக மிகச்சரியான பதில்களை தேடாது உங்கள் கேள்விக்கான விடையென்பது மிகவும் கடினமானது .
போரியல் இலக்கியம் பற்றிய உங்கள் பார்வை என்ன ?
போரியல் இலக்கியம் என்ற சொல்லாடல் தவறுதலாக புரிந்து கொள்ளப்படலாம். போரை எப்படி நடாத்துவது என்பது ஒருவகை (மில்ட்டரி ரைற்றிங்ஸ் , military writings), அடுத்தது போர் பற்றிய இலக்கியம் (The literature of war ). இங்கே நீங்கள் எதைப்பற்றிக் கேட்கின்றீர்கள் என்று எனக்கு சரியாக விளங்கவில்லை. எனினும் சில விடையங்களை சொல்கின்றேன். போராளிகள் எல்லோரும் எழுதுவது எல்லாம் போரியல் இலக்கியமாகாது. போரியல் இலக்கியம் எழுதுவதற்கு போராளியாகத்தான் இருக்கவேண்டும் என்ற சிறப்புத்தகமை தேவையில்லை. யுத்தத்தின் விழுமியங்களையும், அதனால் வருகின்ற சோகங்களையும், அது கூறும் இலட்சியத்தையும் எழுதுவதான் போரியல் இலக்கியம் என்று போரியல் இலக்கியவாதிகள் கருதினால், மார்க்சிம் கோர்க்கியின் " தாய் " நாவலை எந்த வகையில் சேர்ப்பது? அதுவும் ஓர் போரியல் இலக்கியமே. ஆனால் சில பரபரப்புக்களுக்காக, ஒரு பஷனுக்காக, அல்லது தங்களை எல்லோரும் வித்தியாசமாகக் கவனித்து முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு சிலர் போரியல் இலக்கியம் எழுதுகின்றார்கள். ஆனால் அது போரியல் இலக்கியமாக இருக்குமா? என்பது எனக்குத் தெரியவில்லை. அதேவேளையில் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகின்றேன். அநேகமான போரியல் இலக்கியங்கள் போலிகளின் இலக்கியமாகவே எனக்குத்தெரிகின்றது .
ஈழத்திலும் சரி புகலிடத்திலும் சரி உங்கள் பார்வையில் குறும்படத்துறை வளர்ச்சியடைந்துள்ளதா ?
தாயகத்திலும் சரி புகலிடத்திலும் சரி மிக நன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளது என்றுதான் சொல்வேன். அதிலும் தாயகத்தில் விடுதலைப்புலிகள் உச்சநிலையில் இருந்த பொழுது குறும்படத்துறை நவீன உத்திகளுடன் அதி உயர் உச்சநிலையை அடைந்து இருந்தது. அதிலும் குறிப்பாக "செவ்வரத்தம் பூ" என்ற குறும்படம் பிரபல்யமானது. அடுத்தது எனது இயக்கத்தில் வந்த "ஒரு ராஜகுமாரியின் கனவு" பேசப்பட்ட குறும்படமாகும். அத்துடன் பிரபல இயக்குனர் மகேந்திரன் தாயகத்தில் வந்து நின்ற காலகட்டங்களில் அவர் இயக்கத்திலும் பல குறும்படங்கள் வெளிவந்தன. இப்பொழுது புகலிடத்தில் குறும்படத்துறை மிகவும் வளர்ச்சியடைந்த நிலையிலேயே இருக்கின்றது.
நீங்கள் தாயகத்தில் "ஒரு இராஜகுமாரியின் கனவு"என்ற குறும்படம் எடுத்துள்ளீர்கள் அது பற்றிய உங்கள் அனுபவங்களை கூறமுடியுமா ?
விடுதலைப்புலிகளின் நிதர்சனம் மகளிர் பிரிவுக்காக "ஒரு இராஜகுமாரியின் கனவு" குறும்படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்குப் பொறுப்பாக நிதர்சனம் மகளிர் பிரிவில் இருந்த இசைப்பிரியா இருந்தார். அப்பொழுது இசைப்பிரியா என்னிடம் ஆங்கிலம் பயின்று கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து இந்த படத்தை செய்தேன். ஆனால் அந்தக்குறும்படத்தில் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றின. நான் எதை எதிர்பார்த்து அந்த படத்தை செய்தேனோ அது முழுமையாக நடைபெறவில்லை என்றுதான் சொல்வேன். உதாரணமாக அதன் கதாநாயகி ஓர் சிறுவயதுப்பிள்ளை. அவர் படப்பிடிப்பின் பொழுது பூப்படைந்து விட்டார். அதனால் அவருக்கு ஏலவே நான் தயாரித்த சில வசன அமைப்புகளை மாற்ற வேண்டியதாகிப் போய் விட்டது. அத்துடன் நான் நின்றதற்கான விசா அனுமதி தாயகத்தில் முடிவடைந்து விட்டது. நான் மீண்டும் டென்மார்க் திரும்ப வேண்டிய சூழ்நிலை. இப்படியான நடைமுறை சிக்கல்கள் அந்தப் படத்துக்கு இருந்தன. சுருக்கமாக சொன்னால், நானும் சரி இசைப்பிரியாவும் சரி எதிர்பார்த்த அளவுக்கு செம்மையாக அந்த படத்தை முடிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன்.
"ஒரு ராஜகுமாரியின் கனவு " குறும்பட உருவாக்கத்தில் நாடகத்தின் பாதிப்பு அதிகமாகத் தெரிகின்றது. குறும்படம் காட்சி ஊடகமல்லவா?
ஒரு ராஜகுமாரியின் கனவை குறும்படமாக எடுத்திருந்தாலும் மேலோடி டிராமா தன்மையே அதிகமாக வெளிப்பட்டிருக்கின்றது என்றுதான் சொல்வேன். அதை எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் அது நல்ல குறும்படத்துக்கான சாத்தியத்தைக் கொடுக்கவில்லை .
நடந்து முடிந்த ஒஸ்லோ இலக்கிய சந்திப்பில் உங்கள் அனுபவங்கள் எப்படி இருந்தது ?
நடந்து முடிந்த ஒஸ்லோ இலக்கிய சந்திப்பு என்னைப் பொறுத்தவரையில் மிக நன்றாகவே இருந்தது. அதில் என்னால் பலதரப்பட்ட ஆக்களைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது. அந்தச்சந்திப்பில் பலதரப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. சுருங்கக் கூறின் ஒஸ்லோ இலக்கிய சந்திப்பு எனக்குப் பயனுள்ளதாகவே இருந்தது.
இந்த இலக்கிய சந்திப்புக்கள் ஓர் ஸ்தாபனமயப்டுத்தப்பட்ட ஓர் குழும செயல்பாடாகவும் எல்லாத்தரப்பையும் உள்வாங்கி செயற்படவில்லை. என்ற காட்டமான விமர்சனம் உண்டு. இது பற்றிய உங்கள் கருத்து என்ன ?
முதலில் நான் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். இந்த இலக்கியச் சந்திப்பின் ஆரம்ப காலப்பகுதிகள் எனக்குப் பரிச்சயமில்லாதவை. பதினாறாம் இலக்கியச் சந்திப்பிலும், பின்னர் லண்டனிலும், அதன் பின்னர் பேர்ளினிலும் இப்பொழுது ஒஸ்லோவிலும் நேரடியாக கலந்து கொண்டிருக்கின்றேன். இதில் இருக்கின்ற நண்பர்கள் எல்லோருமே எனக்கு ஏலவே பரிச்சயமானவர்கள் என்ற போதிலும் எனது கருத்துக்களை முன்வைப்பதற்கு நான் தயங்கியது கிடையாது. இந்த இலக்கியச் சந்திப்பில் உள்ளவர்கள் பல குழுக்களாக உடைந்துபோனார்கள் என்று அறிகின்றேன். இவர்களுக்குள்ளேயே நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால் இவர்களால் வருங்காலத்தில் காத்திரமான முன்னெடுப்புகளை முன்னெடுப்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும் என்றே எண்ணுகின்றேன். அத்துடன் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்பவர்கள் ஓர் திறனாய்வை செய்து முடித்தன் பின்னர் வருகின்ற கலந்துரையாடல்களில் அவர்களின் திறனாய்வை முன்னிலைப்படுத்தாது அவர்களின் பின்புலங்களை மனதில் வைத்துக்கொண்டே (துணைக்குறிப்பு, sub text ) திறனாய்வு செய்தவரை நோக்கி கேள்விகள் வருகின்றன. இப்படியான போக்குளால் இந்த இலக்கியச் சந்திப்புகள் இலக்கிய வெளியில் ஓர் காத்திரமான முன்னெடுப்புகளை முன்னெடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எமது தாயகவிடுதலைப்போராட்டம் ஏறத்தாள முப்பது வருடங்களைக் கொண்டது. அந்த விடுதலைப்போராட்டம் வரலாறுகாணாத வகையில் தோல்வி அடைந்தமைக்குக் காரணம் "விடுதலைப்புலிகளின் அணுகு முறையே " என்றவோர் காட்டமான விமர்சனம் உண்டு. இது பற்றி உங்கள் கருத்து என்ன ?
இதுவும் ஓர் காரணமே ஒழிய, விடுதலைப்புலிகளின் அணுகுமுறைதான் முழுமுதல் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். மாற்றமடைந்த சர்வதேச ஒழுங்குகள், அமெரிக்க அரசின் இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் விடுதலை அமைப்புகுகளுக்குக் கிடைத்த பயங்கரவாத முத்திரை குத்தல்கள், இந்தியாவின் பிராந்திய நலன்கள், அத்துடன் சீனாவின் சந்தைப்படுத்தல் விஸ்தரிப்புகள் என்று பல முக்கிய காரணிகள் எமது முப்பதுவருடகால தேசிய விடுதலைப் போரின் தோல்விக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் (இந்தியா, சீனா, அமெரிக்கா ) சதியினாலேயே எமது தேசிய விடுதலைப்போராட்டம் தோல்வியடைந்தது.
இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றீர்களா ?
தமிழர்களுக்கு ஓர் நிரந்தரமான தீர்வு இப்போதுள்ள அரசியல் சூழலில் கிடைக்கும் என்று நான் நிச்சயமாக நம்பவில்லை. வெளிப்படையாகச்சொன்னால் தமிழகத்தில் இருக்கின்ற குப்பைவாளி அரசியல்கள் தான் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரசியலை முன்னெடுப்பவர்களால் தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் ஓர் தீர்வை ஏற்படுத்தி தரமுடியாது. அப்படி ஓர் தீர்வை ஏற்படுத்திக்கொடுத்தால் அது அவர்களுக்கான அரசியல் இருப்புகளை இருட்டடிப்பு செய்து விடும் என்பதே உண்மையானது. வேறுவகையில் சொன்னால் ஒரு கன்னை அடிக்கிற மாதிரி அடிக்க, மறு கன்னை அழுகின்ற மாதிரி அழுகின்றது அவ்வளவே. இதனால் பயனடைவது அடக்கபடும் அல்லது நசுக்கப்படும் தேசிய இனம் அல்ல.
" they don't want to loose the problem they want to use the problem"
ஆக்காட்டி - பிரான்ஸ்.
18 சித்திரை 2015
Comments
Post a Comment