Skip to main content

கோமகனின் "தனிக்கதை " முன்னுரை -தாட்சாயணி



எழுத்து என்பது எப்படி சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது? எழுத்தை நேசிப்பவர்கள் வாசிப்பின் மூலம் தம் நேசத்தைக் காட்டுபவர்களாகவும், எழுதுவதன் மூலம் அதை வசப்படுத்துபவர்களாகவும் இருக்கின்ற வேளைகளில் எழுத்து சிலரை இளம் பருவத்தில் ஆகர்சித்துக் கொள்வதாகவும், சிலருடைய வாழ்வில் நடுப்பகுதியில் வந்தமர்வதாகவும், இன்னும் சிலருக்கு அவர்களின் ஓய்வுக்காலத்தில் அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாவதாகவும் அமைந்து விடுகின்றது. சிறு சோம்பலுணர்வு, எழுத்துச்சூழலின் கிறுக்குத்தன்மை பல பேனாக்களுக்கு ஓய்வு கொடுத்ததுண்டு. எழுதாத பேனாக்கள் இன்னுமிருக்கின்றன.எழுதக்கூடாத பேனாக்கள் எழுதிக் கொண்டுமிருக்கின்றன. எவ்வகையிலோ எழுத்துக்கள் நகர்கின்றன. தக்கன நிலைக்கின்றன. அல்லன காலப்போக்கில் காணாமல் போகின்றன.

இவ்வகையிலேயே கோமகனின் எழுத்துக்கள் அவரது நடுவயதில் அவரைத் தேடி வந்து சேர்ந்திருக்கின்றன. வாழ்க்கையில் போராடி ஈழத்தின் யுத்தச் சூழலுக்குள் அலைக்கழிந்து, புலம் பெயர் தேசமொன்றில் கரையேறிய அவரது உணர்ச்சிப் பெருக்குகள் சொற்சித்திரங்களாகியிருக்கின்றன. கோமகனை நான் முதலில் அறிந்து கொண்டது அவரது வலைப்பூக்கள் வழியாகத்தான். இயற்கை மீதான நேசத்தின் விளைவாக விருட்சங்கள், பறவைகள் பற்றிய தேடலொன்றின் போது காணக் கிடைத்ததே அவரது வலைப்பூப் பக்கம். அதன் வழியே நீண்டு, நீண்டு போன தேடலில் கோப்பாயின் மண்வாசனை கலந்த எழுத்துக்கள் வாசிப்பினூடே நெருக்கத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர் எழுத்தாளர் வடகோவை வரதராஜனுடனான ஒரு உரையாடலின் போதே கோமகன் அவருடைய சகோதரர் என்பதையும் அறிந்து கொண்டேன். இந்தப் பின்கதை இருந்ததனால் தான், முன்னுரைக்கான தகுதி என்னிடம் இருக்கிறதோ இல்லையோ கோமகன் முன்னுரை எழுதித் தரமுடியுமா எனக் கேட்டபோது மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்.

செம்மண்ணும், வியர்வையும் கலந்த விவசாய பூமியாய், வெங்காயப்பூ மணமும், வாழைச் சலசலப்பும் நிறைந்த கோப்பாயில் மாலைப் பொழுதுகளில் தரவைக்கு ஓட்டிச் செல்லப்படுகின்ற மாடு,கன்றுகளின் கலகலப்பும் கோப்பாய்-கைதடி நீரேரியில் நீரோட்டம் அதிகரிக்க அங்கு வந்தமரும் எண்ணிறந்த பறவைகளின் இரைச்சலும் மனதுக்கு நெருக்கமாயிருக்கும் போது, கோமகனின் கதைகளின் ஊர்வாசம் என் மனதில் எளிதில் ஒன்றிப் போவதற்கு வேறு காரணம் தேவையில்லை.

இந்தத் தொகுப்பில் அவரது பதினாறு கதைகள் இருக்கின்றன. ஏற்கனவே வேறு,வேறு இணையங்களில் தொட்டந்தொட்டமாக அவற்றைப் படித்திருந்தாலும், இந்த முன்னுரைக்காக வேண்டி அவற்றைத் திரும்பவும் படித்தேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஈழத்தின் சமூக, அரசியல் காரணிகள் கதாசிரியரது வாழ்விலும், எழுத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறன. நாட்டை விட்டுப் புலம் பெயரல், அதைத் தொடர்ந்த தனித்த இயந்திரகதியான வாழ்க்கை, பாதுகாப்பான இடத்தைச் சென்றடைவதற்கான உத்தரவாதமின்மை, இராணுவத்தாலும், இயக்கத்தினாலும் தொடர்ச்சியாக மக்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள், இராணுவத்தின் அட்டூழியங்கள்,புலம் பெயர் வாழ்வின் மீதான அக,புற அழுத்தங்கள், தாய்மண் மீதான ஏக்கம் என உணர்ச்சிகளுக்கு வடிகால் கட்டியிருக்கிறார் கோமகன். இத்தனைக்குள்ளும் இயல்பான எள்ளலும்,கிண்டலும் தொனிக்கும் எழுத்துக்கள் இவ்வளவு பிரச்சினைகளையும் எவ்வாறு கடக்கலாம் என்பதையும் உள ஆற்றுப்படுத்தலுக்கு நகைச்சுவையும் பங்களிக்கும் என்பதையும் தம் வழியில் சொல்லிப் போகின்றன. இந்தப் பதினாறு கதைகளையும் ஒருங்கே பார்க்கிறபோது அவற்றை மூன்று வகைகளுக்குள் அடக்கிவிட முடிகிறது.

ஒன்று, புலம் பெயர்வதற்கு முன் சொந்த மண்ணில் அவர் கண்ணுற்ற சாதீய அடக்குமுறைகள், சமூகப் போக்குகள் மற்றும் போராட்டச்சூழல்.

இரண்டு, புலம் பெயர்ந்த சூழலின் சுற்றாடல், அங்கு வாழ்கின்ற எம்மவரின் நெருக்கடிகள், முற்றிலும் புதிய வாழ்க்கைக் கோலங்கள்.

மூன்று,புலம் பெயர்ந்த நிலையிலிருந்து மீள ஊர் சென்ற பின் காண்கின்ற அவலங்கள்,தாய் மண் மீதான பற்றுக்கு அப்பால் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனம்.

இம்மூன்று நிலையிலும் நின்று கொண்டு கோமகன் தன்னால் புரிந்த, புரியப்பட்ட உலகத்தை ஏனையவர்களுக்கும் இனங்காட்டியுள்ளார்.

புலம் பெயர்தலின் இன்னொரு விளைவு என்னவெனில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுவிட்டு நாடு காண் பயணங்களை நம்மவர்க்கு சாத்தியமாக்கியுள்ளது. ஒரு காலத்தில் மணியன், சிவசங்கரி போன்றோரின் பயணக் கட்டுரைகள் தோற்றுவித்த ஆவலையும், வியப்பையும் இன்று நம்மவர்களின் புலம் பெயர்வுப்படைப்புக்கள் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. அவ்வகையில் கோமகனின் சில குறிப்பிட்ட கதைகளும் புதிய தேசங்களை எமக்கு அருகாமையில் கொண்டு வருகின்றன.
இனப்பிரச்சினை வேர் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில் கோமகனின் புலம் பெயர்தல் நிகழ்ந்திருந்தமை அவரது கதைகளை ஒருசேர வாசிக்கின்ற போது புலப்படுகின்றது. நேரடியாக ஒரு சம்பவத்தை உணர்வதற்கும் அதையே இன்னொருவர் வாயிலாகக் கேட்பதற்குமிடையே நுண்ணிய வேறுபாடுகளேனும் இருக்கத்தான் செய்யும். இந்தக் கதைகளைப் படித்தபோது எனக்குத் தெள்ளெனத் தெளிந்த விடயங்களிலிருந்து ஊகிக்க முடிந்தது, அவரது நேரடித் தரிசனங்களையும், மறைமுகப் பார்வைகளையும். எனினும் கோமகன் எந்தக் காலத்தில் நின்று கதையை எழுதினாலும் தான் ஊரில் வாழ்ந்த காலப் பகுதிக்கு கதையை எப்படியோ நகர்த்திச் சென்று விடுகிறார்.அதனால் கதையின் சில பலவீனங்கள் காணாமல் போகின்றன.

இயக்கங்களுக்கு அலையலையாய் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களும், அதற்கு சற்று முற்பட்ட காலத்தில் சாதியின் பெயரால் நலிவுற்றோர் மீது ஏற்படுத்தப்பட்ட கொடுமைகளும் சகிக்க முடியாத துவேஷத்தின் துர்நாற்றங்களும் கோமகனின் எழுத்தில் பிரதிபலிக்கின்றன. (சின்னாட்டி, அவர்கள் அப்படித்தான்) தீர்ப்பினைக் கையிலெடுக்கும் அதிகாரத்தைத் தாமே எடுத்துக் கொண்டபின் சமூகக் குற்றங்களுக்கான மரண தண்டனையை இயக்கங்களே வழங்கிய கதை 'அவர்கள் அப்படித்தான்'. பல இயக்கங்கள் முகிழ்த்தெழுந்த காலத்தில் மாற்று இயக்கத்தவர்கள் துரோகிகளாகவும்,காட்டிக் கொடுப்பாளர்களாகவும் மின் கம்பங்களில் கட்டப்பட்டு துரோகிகளாய் அடையாளப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட ஒரு அவலம் எங்கள் மண்ணுக்கிருக்கிறது. இன்று சம்பந்தப்பட்டவர்கள் அது தொடர்பான மன உளைச்சல்களும்,சுய பரிசோதனையுமாக இருக்கும்போது, சாதீயம் என்ற காரணத்திற்காக அந்தக் கொலை இக்கதையில் நியாயப்படுத்தப்படுகிறது போலத் தோன்றுவதை என்னால் மறுக்க இயலவில்லை.

மேலும் 'பாஸ்போர்ட்' கதை மூலம் அரசாங்கத்தின் பாஸ்போர்ட் நடைமுறைக்கு மேலதிகமாக இயக்கத்தின் பாஸ் நடைமுறையால் மக்கள் அலைக்கழிந்தமையையும், மக்களிடம் நல்லபேர் எடுப்பது போல் பாஸ் கொடுத்து அனுப்புவதும், பின்னர் இன்னொருவர் மூலம் தடுத்து நிறுத்தி மேலும் பணம் அறவிடுதல் பற்றியும் சற்று எள்ளல் தொனியோடு விளக்கப்படுகின்றது. இக்கதையிலேயே அப்துல் ஹமீது புட்டான் எனும் போலிப் பெயரில் ஏஜென்டினால் அனுப்பப்படுவதைச் சுட்டிக்காட்டும் எழுத்துக்கள் கடல் தாண்டிய ஏராளம் பேரின் அனுபவத் தெறிப்பாக வந்து வீழ்கின்றன.

இந்திய அமைதிப்படையின் வரவால் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட அவலங்கள் கோமகனின் கதைகளில் ஆங்காங்கே தொனிக்கின்றன. அதனொரு தொனிப்பாகவே 'சொக்கப்பானை' தன்னை வெளிப்படுத்துகிறது. இதில் போராளிகளின் மன உணர்வுகள் துல்லியமாய் வெளிப்படுத்தப்பட்டிருப்பது போலவே, புலம் பெயர் தேசங்களில் புலிகளின் பெயரைச் சொல்லிப் பிரகாசித்துக் கொண்டிருப்பவர்கள் அவ்வாறு போராடிய ஒரு போராளி கெட்டு நொந்த காலத்தில் அவனைத் தெருவில் நிற்க வைத்து விட்டுப் பின்னர் அவன் இறந்த பின்னர் போஸ்டர் அடித்து ஓட்டுகின்ற கேலிக் கூத்தினை ‘கிளி அம்மான்’ கதையில் சிறப்பாக விளக்கியிருக்கின்றார். இக்கதையிலும் கதாசிரியரின் மனதினுள் இழையோடுகின்ற மனிதாபிமானத்தின் நுண்ணிழையை நம்மால் தரிசிக்க முடிகின்றது.

மேலும் 'அவன் யார்?','விசாகன்' போன்ற கதைகள் வெளிநாட்டில் எம்மவர் தம் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் 'தகிடுதித்தங்'களைப் பற்றிப் பேசுகின்றன. சில செயல்கள் சட்டவிரோதமானவையாகவே இருப்பினும் இங்கிருந்து சென்றவர்களின் மனஉளைச்சல்கள், தொடர்ச்சியாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றிலிருந்து அவர்கள் மீளவேண்டிய தேவைப்பாடு போன்றன காரணமாக இயல்பாகவே அவர்களின் முறையற்ற செயற்பாடுகளின் மீதான நியாயத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இருப்பினும் 'விசாகன்' கதையின் மூலம் இக்கட்டான நிலையில் ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தத்தின் ஊடாக தனது தேவையைப் பூர்த்தி செய்ய முயலும் விசாகன் தனது தேவையைப் பூர்த்தி செய்வதுடன் உதவி செய்த பெண்ணுக்கும் அநியாயம் இழைத்து (அவளுடைய உடன்பட்டுடனே ஆயினும்) அவளுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தன்னோடு எடுத்துக் கொள்வதானது, நம்மவர்க்கு ஏன் மற்றவர்கள் உதவ மறுக்கின்றனர் என்பதற்குத் தக்கதொரு சான்றாகிறது. கூடவே அவர்கள் நம்மவர்கள் எனும் எண்ணம் நம்மை நாணித் தலை குனியவும் வைக்கிறது.

'குட்டி பார்பர் ', 'பாமினி', 'றொனியன்' போன்ற கதைகள் நீண்ட காலத்தின் பின் புலம்பெயர் தேசத்திலிருந்து ஊருக்குப் போகின்ற போது ஏற்படுகின்ற எதிர்பார்ப்புக்க்களையும், அந்த எதிர்பார்ப்புக்களின் மீது ஏற்படுத்தப்படும் ஏமாற்றங்களையும் கதாசிரியரின் உணர்வுகளோடு எடுத்துச் சொல்கின்றன. இதிலே கதாசிரியர் நேரடியாகவே தொடர்புபடுவதால் இயல்பான உணர்வோட்டங்களோடு அதனை எழுத்தில் தர முடிந்திருக்கின்றது. போராட்டம் வலுப்பெற்ற காலத்தில் ஊரை விட்டுப் புலம் பெயர்ந்து பல்வேறு காலகட்ட அரசியல் பிரிவுகளதும் கருத்து மோதல்களை அவதானித்த வகையில், போர் முடிவுற்று அதனால் நேரடிப் பாதிப்புற்ற பெண்ணின் வாக்குமூலமாக பாமினியைப் பேச வைத்திருக்கிறார். போர் முடியும் வரை ஒரே நேர்கோட்டுப் பார்வையிலிருந்தவர்களின் பார்வைக் கோணம் போர் முடிந்தபின் சற்றே திரும்பி ஆராயத் தலைப்பட்டிருக்கிறது என்பது காலமாற்றத்தின் சாட்சி ஆகும்.

'மனிதம் தொலைத்த மனங்கள்', 'வேள்விக்கிடாய்', 'ஊடறுப்பு', 'தனிக்கதை' என்பன சராசரி யாழ்ப்பாணத்து மனங்களிடையே காணப்படக்கூடிய பலவீனங்களைச் சுட்டிக் காட்டும் கதைகளாகும். திரும்பத் திரும்பப் பலவகைகளில் இந்தக் கதைகள் சொல்லப்பட்டு விட்டாலும் ஒவ்வொரு பேனாவாலும் எழுதப்படும் போதும் அவை அவற்றுக்குரிய தனித்துவத்தோடு வெளிவருவதை மறுக்க முடியாதுதான்.

'மலர்ந்தும் மலராத' சிறுகதை குழந்தையை எதிர்நோக்கும் தம்பதியினருக்கு குழந்தை கிடைக்கிறபோது ஏற்படும் மகிழ்ச்சி அதிகநாள் நீடிக்காமலே அந்தக் குழந்தை பிறக்க முதலே கருணைக்கொலை செய்யும் நிலைக்குள்ளாகும் தம்பதிகளின் மனவுணர்வுகளைப் பேசுகிறது.

மொத்தத்தில் எளிய கிராமியச் சொற்கள் இவரின் பலம். அதே போல புலம்பெயர்ந்த நாடுகளின் நவீன பாவனைச் சொற்களும் இவரது தமிழோடு குழைந்து விளையாடுகின்றன. சாதீய ஆதிக்கம் பிடித்தோரால் நலிவுற்றோர் மீது பிரயோகிக்கப்படுகின்ற தடித்த, இழிந்த வார்த்தைப் பிரயோகங்கள் மனத்தை என்னமோ செய்தாலும் கதையின் உயிர்ப்புக்கு அவை அத்தியாவசியமாகலாம்.

மேலும்,கால,தேச வர்த்தமானங்களை உத்தேசத்தில் கொள்ள வேண்டியது எந்த ஒரு படைப்பாளிக்கும் அத்தியாவசியமான ஒரு விடயமாகும். 1985 இற்கு முந்திய 25 ஆண்டுகளுக்கு முன்னம் நெக்டோ சோடா பருகிய சம்பவத்தைப் படித்தபோது எனக்கு அதிசயமாயிருந்தது. எனக்குத் தெரிந்தவரை எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் 'யானை'ச்சோடாவை மட்டும்தான் கண்ட ஞாபகம்.

இது கோமகனின் முதலாவது தொகுதி.அந்த வகையில் அவர் தனது எழுத்தை மெருகூட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கு அடுத்த தொகுதி ஒன்று வரும்போது அதைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இன்னும் கூடவாக இருக்கும். இத்தொகுப்பின் தரத்தை விட மேலானதான சிறுகதைகளைத் தர வேண்டிய கடப்பாடு அவருக்கு இருக்கும். எனவே, எழுத்துலகில் புதிதாகக் கால் பாதித்திருக்கின்ற இந்த எழுத்தாளர் தொடர்ந்து வரக்கூடிய விமர்சனங்களை எதிர்கொண்டு தன் பாதையைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதே என் வேணவாவாகும்.



- தாட்சாயணி –

07/03/2015

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...