Skip to main content

"படித்தோம் சொல்கின்றோம்" குரலற்றவரின் குரல் மீதான லெ.முருகபூபதியின் ஒரு பார்வை






கோமகன் தொகுத்திருக்கும் "குரலற்றவரின் குரல்" 

பல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறக்கும் கருத்துப்போராட்டத்தை தூண்டும் நூல்



முருகபூபதி

" எழுத்தாளர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. எப்பொழுதும் சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள்." என்று ஒரு நண்பர் சொன்னார். இத்தனைக்கும் அவர் எழுத்தாளர் அல்ல. எழுத்தாளர்கள் பலரை நண்பர்களாகக்கொண்டவர்.

கோயில்கள் மற்றும் பல்கலாசார பொது அமைப்புகளில் அங்கம் வகித்து கசப்பான அனுபவங்களினால் நொந்து நூலாகிப்போனவர்.

கசப்பான அனுபவங்களை சுமந்துகொண்ட, தொடர்ந்தும் பல அமைப்புகளில் ஈடுபாடு காண்பித்துக்கொண்டிருப்பவர்.

" நீங்கள் சொல்வது உண்மைதான். எழுத்தாளர்களிடையே ஒற்றுமை இருக்காதுதானே...? பாண்டியன் சந்தேகம் தீர்ப்பதற்காக அவன் மனைவி கூந்தலில் வரும் வாசனை இயற்கையானதா..? செயற்கையானதா..? என ஆராய்ந்து சண்டை பிடித்தவர்கள் சிவனும் நக்கீரனும். கம்பரும் ஒட்டக்கூத்தரும் பிடிக்காத சண்டையா...? என்னதான் சண்டை பிடித்தாலும் சிவன், நக்கீரனை எரித்தவாறு எமது தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் உயிரோடு எரிக்கமாட்டார்கள். ஆனால், எழுத்தால் எரிக்கப் பார்ப்பார்கள்!!!

தத்தம் எழுத்துக்களினாலேயே கருத்தியல்களை எதிர்ப்பார்கள். அரசியல் மற்றும் பொது அமைப்புகள், கோயில்களில் பொலிஸ் வருமளவுக்கு சண்டைகள் நடக்கின்றன. எமது எழுத்தாளர்கள் அந்தளவிற்குச் செல்லமாட்டார்கள்" என்று எமது எழுத்தாளர் வர்க்கத்தின் மகிமை பற்றிச்சொன்னேன்.

யாழ்ப்பாணத்தில் 1960 களில் கூழ்முட்டை எறிந்த எழுத்தாளர்கள் மறைந்துவிட்டார்கள். புகலிடத்தில் சமகால எழுத்தாளர்கள் வேறு வழிகளில் தமது எதிர்ப்புகளை காண்பிக்கிறார்கள். 

பிரான்ஸில் வதியும் கோமகன் தொகுத்திருக்கும் நேர்காணல் நூலான குரலற்றவரின் குரல் பற்றி எழுத முற்பட்டபோதுதான் மேற்கண்ட உரையாடல் நினைவுக்கு வந்தது.

எழுத்தாளர்கள் அனைவருமே ஒரேநேர்கோட்டில் பயணிக்கமுடியாது. மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய சாதனைதான்.

அச்சாதனையை நிகழ்த்தியிருப்பவர் கோமகன். இவரது இயற்பெயர்: இராஜராஜன். 'இராஜ ராஜா' வுக்குரிய கம்பீரத்தோற்றம் கொண்டவர். அவர் எழுத்தாளர்களிடத்தில் முன்வைத்திருக்கும் கேள்விகளிலும் கம்பீரம் தெரிகிறது. 

குரலற்றவரின் குரல் பற்றி சொல்வதற்கு முன்னர் கோமகன் பற்றிய சிறிய அறிமுகத்தை தருகின்றோம்.



எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒரு பேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலான இதழ்கள், இணைய இதழ்களில் எழுதிவரும் கோமகன், இதுவரையில் சுமார் முப்பது சிறுகதைகளைப் படைத்திருப்பவர். கோமகனின் தனிக்கதை என்ற சிறுகதைத்தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.

நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் எழுதியிருப்பவர். 

சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து 'நடு' என்னும் இணைய இதழை வெளியிட்டுவரும் அதன் பிரதம ஆசிரியர். 

சினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் என்று மொத்தம் மூன்று சிறப்பிதழ்களை இதுவரையில் 'நடு' வரவாக்கியிருக்கிறது.

பிரான்ஸிலிருந்து வெளிவரும் ஆக்காட்டி இதழில் கோமகன், இலங்கையிலிருக்கும் எழுத்தாளர் யோ. கர்ணனின் நேர்காணலை பதிவுசெய்த முதல் அனுபவத்தின் தொடர்ச்சியாக மேலும் 13 பேரைத்தொடர்புகொண்டு இந்த நேர்காணல் தொகுப்புக்காக உழைத்திருக்கிறார்.

நூலின் பின்புற அட்டையில் இதன் உள்ளடக்கம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. 

" உலகத்திசைகளில் வாழும் இலங்கையின் தமிழ்மொழிச்சமூக ஆளுமைகள் 14 பேருடன் கோமகன் நடத்திய இந்த நேர்காணல்களில், அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம், மதம் என இடையீடு செய்யும் படிகளிடையே பல்வேறு திறப்புகள் நிகழ்கின்றன. அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம் போன்றவற்றில் எப்போதும் சர்ச்சைகக்கும் விவாதங்களுக்குமான இடங்களிருப்பதுண்டு. இந்த நேர்காணல்களிலும் அத்தகைய இடங்களும் புள்ளிகளும் நிறைய உள்ளன. இந்த நேர்காணல்களை வாசிக்கும்போது, பல்வேறு வகையான ஆளுமைகளோடு தனியே நின்று களமாடுவதாகத்தோன்றும். அவரே மையமாக நின்று ஏனையவர்களுடன் வாள் சுழற்றுகிறார். ஊன்றிக்கவனித்தால், நேர்காணல் என்பது ஒரு சமர்க்கலையே. எழுப்பப்படும் கேள்விகளே எதிராளுமையைத் திறப்பது என உணரலாம். கேள்விகளின் மூலமாக வரலாற்றையும் சமகாலத்தையும் திறந்து எதிர்காலத்தின் மீது ஒளிபாய்ச்சுவதற்கு கோமகன் முயற்சிக்கிறார். கலை, இலக்கியத் துறையில் செயற்படும் ஆளுமைகளின் நேர்காணல்களாக இவை இருந்தாலும் அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம், மதம் எனச் சகலவற்றைப்பற்றியும் இந்த நேர்காணல்கள் பேசுகின்றன."

கோமகன், மின்னஞ்சல் - தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கேள்விகளை முன்வைத்து தகவல்களையும் கருத்தியல்களையும் சேகரித்திருக்கிறார்.

அவர்களில் யோ.கர்ணன், அ.யேசுராசா, கருணாகரன், சோ. பத்மநாதன், ஆர்.எம். தீரன் நௌஷாத் , கேசாயினி எட்மண்ட் , க. சட்டநாதன், சோலைக்கிளி ஆகியோர் இலங்கையிலும் - பொ. கருணாகரமூர்த்தி, 'புலோலியூரான்' டேவிட் யோகேசன் ஆகியோர் ஜெர்மனியிலும் - லெ. முருகபூபதி அவுஸ்திரேலியாவிலும் புஷ்பராணி சிதம்பரி பிரான்ஸிலும் இளவாலை விஜயேந்திரன் நோர்வேயிலும் - நிவேதா உதயராஜன் பெரிய பிருத்தானியாவிலும் வசிப்பவர்கள். 

இவர்களின் வாழ்வையும் பணிகளையும் கருத்தியல்களையும் தெரிந்துகொண்டிருக்கும் தேர்ந்த வாசகருக்கு " சண்டைபிடிக்கும் எழுத்தாளர் வர்க்கம்" பற்றியும் நன்கு தெரிந்தேயிருக்கும். 

இந்நூலுக்காக இணைக்கப்பட்டுள்ள பின்னிணைப்பில் இந்தியாவில் ஒசூரில் வதியும் ஆதவன் தீட்சண்யா எழுதியிருக்கும் குறிப்புகள் நேர்காணல்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

சமகாலத்தில் இதுபோன்ற நேர்காணல்கள் தொகுப்புகள் பல வெளியாகியிருக்கின்றன. ஆனால், அவற்றிலிருந்த பொதுத்தன்மைகளிலிருந்து வேறுபட்டு வேறு ஒரு கோணத்திலும் இந்நூல் தொகுக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது.

ஏற்கனவே இந்த நேர்காணல்கள் இதழ்கள், இணைய இதழ்களில் வெளியானதையடுத்து உடனுக்குடன் எழுந்த எதிர்வினைகளையும் சேகரித்து பதிவுசெய்துள்ளார் கோமகன்.

சுகன்( பாரிஸ்) கருணாகரன் (இலங்கை) ந.கிரிதரன் (கனடா) தமயந்தி சைமன் ( நோர்வே) ராகவன் (பெரியபிருத்தானியா) பேராசிரியர் சிவசேகரம்( இலங்கை) ஶ்ரீரங்கன் விஜயரட்ணம் (ஜெர்மனி) ஆகியோரின் எதிர்வினைகள் நீளமாகவும் சுருக்கமாகவும் இடம்பெற்றுள்ளன.

அதனால் கோமகனின் கேள்விகள் தருவித்த பதில்களுக்கு நேர்ந்த எதிர்வினைகளையும் வாசகர்கள் அறியமுடிகிறது. கோமகன், சார்பு நிலையெடுக்காமல் கருத்தியலின் ஜனநாயகத்தன்மையையும் பேணியிருக்கிறார். தெளிவைத்தேடும் வேலையை வாசகர்களிடத்தில் விட்டுவிட்டார்.






" கருத்தியல் தளத்தில் தொடங்கி ஆயுதப்போராட்டமாக உருமாறி எதிர்த்தரப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தனி ஈழத்திற்கான இந்தப்போராட்டக்காலத்தினூடாக அந்தச்சமூகம் என்னவாக மாறியிருக்கிறது, அது தன்னை தக்கவைத்துக்கொள்ள கையாண்ட வழிமுறைகள் யாவை, புலப்பெயர்வுக்கான அக - புறகாரணிகள், புலம்பெயர் வாழ்வின் இடர்ப்பாடுகள் எத்தகையவை - அவற்றை அது எவ்வாறு எதிர்கொள்கிறது, புதிய வாழ்விடத்தில் ஏற்படும் கலாச்சார சிக்கல்கள், அவற்றை கடந்தோ உள்வாங்கியோ பொருந்துவதற்கான பாடுகள், தாய்நிலத்திலேயே தங்கிவிட்டவர்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையேயான உறவுக்கும் முரணுக்குமான காரணங்கள், அரசுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் இடையிலான மோதல் - அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான மோதல் - ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான மோதல் போன்றவற்றை வெளிக்கொணர்வதற்கு நேர்காணல் என்பது ஓர் உகந்த வடிவம்தான்" என்று ஆதவன் தீட்சண்யா இந்நூலில் பதிவுசெய்திருப்பது கவனத்தில்கொள்ளத்தக்கது.

தாயகத்திலிருப்பவர்களும் - அங்கிருந்த நெருக்கடிகளினால் அந்நிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களும் - புலம்பெயர்ந்த பின்னர் தாயகத்திற்கு செல்லமுடியாத சிக்கலுக்கு ஆளாகியிருப்பவர்களும் - தாயகத்தில் இனி வாழமுடியாது எனச்சொல்லி நிரந்தர வதிவிட அனுமதி பெற்றதன் பின்னர், பூகோளமயமாதலின் விளைவால் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களும் - பாதிக்கப்பட்டவர்களினால் புலம்பெயர்ந்தவர்கள், இனி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏதாகிலும் செய்யவேண்டும் என விரும்புபவர்களும் கடந்துவரும் காலத்தையும் கருத்தியல்களையும் இந்த நேர்காணல் தொகுப்பு உரத்துப்பேசுகிறது.

அதனால் ஈழத்தமிழர்தம் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக்கூறுகள் மீதான உரத்த சிந்தனைக்கும் வழிகோலுகின்றது. ஆதலால்தான், வழக்கமான நேர்காணல் தொகுப்புகளிலிருந்து இந்த "குரலற்றவரின் குரல்" வேறுபடுகிறது என்று இந்தப்பதிவின் தொடகத்தில் சொன்னோம்.

விடுதலைப் போராளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும் (புத்திஜீவிகளுக்கும்) வாசகர்களுக்கும் இடையே தொடரும் உறவு - பிணக்குகள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது.

" படைப்பாளிக்குச்சார்பு நிலை இருப்பதைப்போல விமர்சகனுக்கும் இருக்கவே செய்யும். அத்தகைய விமர்சகர்கள் தங்கள் பக்கச்சார்பான விடயங்கள் படைப்பில் இல்லாத பட்சத்தில் நல்ல படைப்பாக அவை இருந்தபோதும் அவற்றைச்சீண்டுவதில்லை. தவிர்த்துவிடுவதை நானறிவேன்" எனச்சொல்கிறார் க. சட்டநாதன்.

" தமிழ்புத்திஜீவிச் சூழல் என்பது எப்பொழுதும் சுயநலமானதும், வசதி வாய்ப்புகளிற்காக வளைந்து கொடுப்பதுமாகத்தான் இருந்தது. வசதிகளைப்பெறத்தான் அவர்களின் அறிவு பயன்பட்டதே தவிர, பொதுச்செயற்பாட்டிற்கு பயன்பட்டதில்லை. அரசன் அம்மணமாக ஓடிய சமயங்களில் ஆடை அழகாக இருந்ததாக கவிதை எழுதிய வரலாறுதான் நமது புத்திஜீவி வம்சங்களின் வரலாறு. இதனால்தான் புத்திஜீவிகளை புலிகள் ஒரு எல்லையுடன் நிறுத்திவைத்திருந்தார்கள்." எனச்சொல்கிறார் யோ. கர்ணன்.

" ஒரு முறை கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள், " புலம்பெயர்ந்த படைப்பாளிகள் எவருமே படிப்பாளிகள் கிடையாது. ஆதலால் அவர்களால் என்றுமே உயர்வான படைப்புகளைத்தந்துவிட முடியாது" என்று சொல்லியிருக்கிறார். அப்போ புதுமைப்பித்தன் எந்தப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாராம்? இலக்கியத்தில் இப்படி பார்வைகள் இருப்பதெல்லாம் இயல்பு, சகஜம்" என்று சொல்கிறார் பொ. கருணாகரமூர்த்தி.

("புதுமைப்பித்தன் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றவர்." என்ற தகவலை இங்கு தெரிவிக்க விரும்புகின்றோம். )

கருணாகரமூர்த்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கும் பேராசிரியர் சிவசேகரம், " புலம்பெயர்ந்த படைப்பாளிகள் எவருமே படிப்பாளிகள் கிடையாது. ஆதலால் அவர்களால் என்றுமே உயர்வான படைப்புகளைத்தந்துவிட முடியாது" என்று சொன்ன சுப்பிரமணியனின் தவறான புரிதல் குறித்து எதுவும் சொல்லவில்லை. 

புலம்பெயர்ந்த படைப்பாளிகளிடமிருந்துதான், கசகரணமும், வெள்ளாவியும், ஆதிரையும், கொரில்லாவும், Box உம், அசோகனின் வைத்தியசாலையும், கனவுச்சிறையும், ஒரு அகதி உருவாகும் நேரமும் முத்துலிங்கம் உட்பட பலரின் சிறந்த கதைகளும் வெளியாகியிருக்கின்றன.

இவ்வாறு இந்த நேர்காணல் தொகுப்பு பல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறந்திருக்கிறது.

14 பேரின் நேர்காணல் தொகுப்பில் எட்டுப்பேர் இலங்கையிலிருப்பவர்கள். அதனால் இந்த நூல் பற்றிய முழுமையான அறிமுகம் இலங்கையிலும் இடம்பெறல்வேண்டும். 

தலித்தியம் குறித்து யேசுராசா யோ.கர்ணன் ஆகியோரின் கருத்துக்களும் அவற்றுக்கு வந்துள்ள எதிர்வினைகளும் மேலும் விவாதிக்கப்படவேண்டியவை. 

இலங்கையில் தலித் இலக்கியம் படைத்த தெணியான், செ. கணேசலிங்கன், முதலானோரின் பார்வைக்கும் இந்த நூல் சென்றிருக்கவேண்டும். 

படைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்வலைகளை எழுப்பும் குரலற்றவரின் குரல், நேர்காணல்களுக்கு தயாராகும் படைப்பாளிகளுக்கும் கேள்விகளை தொடுப்பவர்களுக்கும் வழிகாட்டும் நூலாகவும் விவாதங்களின் ஊற்றுக்கண்ணாகவும் திகழுகின்றது.

கோமகனுக்கு எமது வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com









Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...