Skip to main content

சொக்கப்பானை-சிறுகதை-கோமகன்




காலம் 1987. எமது தாயகத்து காற்று வெளியிலும் , வயல் வரப்புகளிலும், வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் எமது சனங்களின் கதறலின் கண்ணீரை துடைத்து சமாதானம் பேசுகின்றேன் என்று வந்த சமாதானப்புறாக்கள் தங்கள் முகங்களை மாற்றி ஆயுததாரிகளான ஓர் இரவின் இருட்டும் காலம் பிந்திய கார்த்திகை மாதத்து பனிப்புகாரும் அந்த ஊரில் மண்டியிருக்க. அவைகளை விரட்டும் பணியை கதிரவன் எடுத்துக்கொண்டிருந்தான். அது அவ்வளவு சுலபமாக அவனுக்கு இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனது கையே ஓங்கியிருந்தது. படுதோல்வியை தழுவிய இருட்டும்மண்டியிருந்த பனிப்புகாரும் மெதுமெதுவாக அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டிருந்தன. ராமசாமிக்குருக்களின் வீட்டு மா மரத்தில் குடியிருந்த பக்கத்து வீட்டு சேவல் ஒன்று தனது முதல் கூவலை ஓங்கி ஒலித்தது. அதனைத் தொடர்ந்து அந்த ஊரில் இருந்த சேவல்கள் முறைவைத்து தங்கள் கூவலை தொடங்கிக்கொண்டிருந்தன. தூரத்தே கிழக்கில் வானமகள், கதிரவன் அவள் மீது கொண்ட காதலினால் தன் முகத்தை மெதுவாக சிவக்கத்தொடக்கினாள். அந்த முகத்திலே ஒரு கூட்டம் அந்நியப்பறவைகள் ஆரை வடிவில் சத்தமிட்டவாறே பறந்து சென்றன. ராமசாமி குருக்களின் வீட்டு பட்டியில் இருந்த மாடுஒன்று பால் முட்டிய வேதனையில் அழுதது. புல்லுப்பாயில் படுத்திருந்த ராமசாமிக்குருக்கள் எழுந்து கிணற்றடிப்பக்கம் சென்றார். அங்கு அவரின் மனைவி நீலதாட்சாயினி குளித்து முழுகி நீண்டு வளர்ந்திருந்த கூந்தலில் ஓர் சிறிய முடிச்சைப் போட்டு தான் துவைத்த உடுப்புகளை கொடியில் காயப்போட்டுக்கொண்டிருந்தாள். அவளின் நீண்ட கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டுசொட்டாக இறங்கிக்கொண்டிருந்தது. முகத்தில் பூசியிருந்த மஞ்சள் இன்னும் அவளின் அழகைக் கூட்டியிருந்தது. கணவரைக்கண்டதும் முகம் மலர்ந்த புன்னகையுடன்மாட்டில் பால் எடுப்பதற்கு மாட்டுப்பட்டிப் பக்கம் சென்றாள்.காலைக்கடன்ளைமுடித்துக்கொண்ட ராமாரசாமிக்குருக்கள் கிணற்றில் இருந்த குளிர்ந்த நீரை தலையில் அள்ளி அள்ளி வாத்துக்கொண்டிருந்தார்.அவை அவரின் சிவந்த உடலில் திட்டுத்திட்டாக பரவிக் கீழே வழிந்தன. அவரின் உதடுகள் சிவசிவா என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அவர் குளித்து முடிய காலை ஆறுமணியாகி நிலம் வெளுக்கத்தொடங்கி இருந்தது.

சுவாமி அறையினுள் நுழைந்த ராமசாமி குருக்கள் திருநீற்றை நீரில் குழைத்துநெற்றியிலும் மார்பிலும் கைகளிலும் மூன்று குறிகளை இட்டு நெற்றியில் குங்குமப்பொட்டின் நடுவே வட்டவடிவமாக ஓர் சிறிய சந்தனப்பொட்டையும் இட்டுக்கொண்டார்.தனது வெண்ணிறப் பூனூலை அணிந்து கொண்டு ஓர் கும்பாவில் தண்ணியையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்த அவர், முற்றத்தில் காயத்திரி மந்திரங்களை சொல்லிக்கொண்டு ஒற்றைக்காலை மடித்து ஒருகாலில் நின்றவாறே மேலே எழுந்து கொண்டிருந்த சூரியனை நோக்கி கும்பிடத்தொடங்கினார். அவருக்கு எல்லாவற்றையும் அள்ளி வழங்கிய பிள்ளையார் ஏனோபிள்ளைச் செல்வத்தில் மட்டும் கஞ்சத்தனத்தையே காட்டிக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர் பிள்ளையாருக்கான தனதுகடமைகளை பிரதிபலன் பாராது செய்து கொண்டிருந்தார்.நீண்ட காலப்பிரார்த்தனையின் பின் அவருக்கு பிறந்த மகன் பிள்ளையாரை விட நாடே பெரிது என்று நாடுகாக்கப் போய் விட்டான்.ஆரம்பத்தில் அவர் உடைந்து போய் இருந்தாலும்,அவருக்கு ஊட்டப்பட்ட புராண இதிகாசக்கதைகளால் அவர் உடைந்த மனதை தேற்றிக்கொண்டார்.ஆனால் அவரை விட மனைவி நீலாதாட்சாயினி தான் மகனால் மிகவும் பாதிக்கப்பட்டாள். அவர் கும்பிட்டு முடிய நீலதாட்சாயினி அவருக்காக சுண்டக்காச்சிய பாலில் கற்கண்டைப் போட்டுக்கொண்டு வந்து தந்தாள்.பாலைப் பருகிய ராமசாமிக்குருக்கள் அருகே இருந்த பிள்ளையார் கோவிலுக்கு காலை நேரப்பூசைக்காக கிளம்பினார்.

000000000000000000000

பிராம்பத்தை சித்திவிநாயகர் கோயிலில் ராமசாமிக்குருக்களின் முன்னோர்கள் தான் பரம்பரை பரம்பரையாக பூசை செய்துகொண்டு வந்திருக்கிறார்கள். இப்பொழுது ராமசாமிக்குருக்கள் ஐந்தாவது தலைமுறையில் முன்னோர்களின் பணியை செய்துகொண்டிருக்கின்றார்.அவர் பூசை செய்து கொண்டிருக்கும் பிள்ளையார் பணக்காறன் இல்லை.கர்ப்பக்கிரகம்,அர்த்தமண்டபம் மகாமண்டபம்,வசந்த மண்டபத்துடனயே அந்தக் கோயில் இருந்தது.பிராம்பத்தைக்கு என்ன குறை வந்தாலும் அந்தப் பிள்ளையாரே தீர்த்து வைப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அந்த பிராம்பத்தை மக்களுக்கும்,ராமசாமி குருக்களுக்கும் இருந்தது.பிள்ளையார் கோவிலின் முன்பு சிறிய தூரத்தில் அடர்காடு ஒன்று தொடங்குகின்றது. பிராம்பத்தையில் இருப்பவர்களுக்கு வேட்டையாடலும், விவசாயமும் தான் பிரதான தொழில்.அவர்களுக்கு பிள்ளையாரே சகல வினைகளையும் அறுக்கும் காவலன்.இதனால் ராமசாமிக்குருக்களும் வளமாகவே இருந்தார்.கோவிலில் மூன்று நேரப்பூசையும் விசேட பூசைகள் என்றும் பிள்ளயார் ராமசாமிக்குருக்களையும் தனது தொடர்பில் என்றும் வைத்திருந்தார்.பிள்ளையார்கோவிலுக்கு ராமசாமிக்குருக்கள் வரும்பொழுது காலை ஆறுஅரை மணியாகிஇருந்தது.பிள்ளையார் கோவிலினுள் நுழைந்த ராமசாமிக்குருக்கள் நேரடியாகமடப்பள்ளிக்குச் சென்றார்.அங்கே நைவேத்தியம் செய்வதற்கு பானையில் தண்ணியை வைத்து விட்டு அரிசியைப் பார்த்தார். அது இரண்டு நாளுக்கே போதுமானதாக. இருந்தது மடப்பள்ளியில் இருந்து வந்த குருக்கள் கோவிலின் பின்பக்கம் இருந்த நந்தவனத்துக்குள் நுழைந்தார்.அங்கே நந்தியாவட்டையும் அலரியும் செவ்வரத்தையும் மொக்கவிழ்ந்திருந்தன.அவைகளைச் சுற்றி தேன் வண்டுகள் மொய்த்துக்கொண்டிருந்தன. ராமசாமிக்குருக்கள் ஒவ்வரு பூக்களாக பூக்கூடையில் ஆய்ந்து போட்டுக்கொண்டிருந்தார்.பூக்களை ஆய்ந்து முடிந்ததும் மகாமண்டப பக்கமாக வந்த ராமசாமிக்குருக்களின் கண்கள் வாசல் பக்கமாக நோக்கின.

கோவிலின் முன்புறமாக சிறிய வயல் வெளிகளினூடாக மெதுவாக ஆரம்பமாகும் அடர்காடு ஏறத்தாள இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு பரந்து விரிந்திருந்தது.அதன் இறுதியில் ஓர் வீதியும் அதையொட்டி அடுத்த கிராமமும் ஆரம்பமாகின்றன.காட்டின் மேற்குப்பக்கமாக இருந்து ஆறு பேர்கொண்ட குழுவொன்று பிராம்பத்தைப் பக்கமாக நடந்து கொண்டிருந்தது.குமணன் அவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தான். மிகுதி ஐந்து பேரும் அந்த இடத்துக்கு புதியவர்கள்.அவர்கள் அந்த காட்டை எச்சரிக்கையாகவே கடக்க வேண்டியிருந்தது.எல்லோர் முகத்திலும் பசியும் நடந்த களையும் அப்பட்டமாகவே தெரிந்தன.அவர்கள் அப்பொழுதுதான் காட்டின் இறுதில் இருந்த வீதியால் வந்து கொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் சிறிய தொடரணி ஒன்றைத் தாக்கியழித்து விட்டுத்திரும்புகின்றார்கள்.எல்லோரும் ஆயுதபாணிகளாகவே இருந்தார்கள்.பல நாட்கள் வேவு பார்த்து அங்குலம் அங்குலமாக திட்டமிட்டு அந்தத் தொடரணியைமுற்றாக தகர்த்தெறிந்து விட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் திரும்புகின்றார்கள்.நித்திரையின்மை அவர்களின் கண்களில் தெரிந்தது. குமணன் விறுவிறுவென முன்னே சென்றுகொண்டிருந்தான் இறுதியாக வந்தவன்குமணனை நோக்கி ஓர் சிறிய விசில் சத்தம் எழுப்பினான்.குமணன் திரும்பி என்ன என்பது போலப் பார்த்தான்.சிறிது இருந்து விட்டு போவோம் என்று சைகையால் காட்டினான்.குமணன் அதை அனுமதிக்கவில்லை அவர்கள் தாமதிக்கும் ஒவ்வரு செக்கனும் அவர்களுக்கு வினையாகவே முடிந்து விடும். தொடரணி தாக்கப்பட்டதன் செய்தி இந்திய அமைதிப்படைகளின் வேறு முகாமுக்கு தெரியமுதல் அவர்கள் அந்த காட்டை கடந்துவிட வேண்டும் என்பது அவர்களுக்கு கொடுத்த கட்டளை.அவர்களுக்கு குமணனில் சிறிது எரிச்சல் வந்தாலும் அவனது சொல்லை மீறாது அவனைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காடு முடிவடைவதற்கு அறிகுறியாக வெட்டையும்,அதனூடே ஊர் மனைகளும் பிள்ளையார் கோவில் மனிக்கூண்டுக் கோபுரமும் தெரிந்தன.அவர்கள் வெட்டையைக் கடந்து பிள்ளையார் கோவிலடிக்கு வந்து விட்டார்கள்.எல்லோர் முகங்களிலும் பசியும் தண்ணீர் விடாயும் அதிகமாக இருந்தன.

அவர்கள் வந்த நேரம் காலை ஏழுமணியாகியிருந்தது.பெடியளைக் கண்ட ராமசாமிக்குருக்களின் முகம் துணுக்குற்றது.குமணனே அவருடன் பே ச்சை தொடங்கினான் 

“ஐயா நாங்கள் ஒரு அலுவலாய் வந்தம்.செரியாய் தண்ணி விடாய்க்குது. பசியாயும் இருக்கு. ஏதாவது சாப்பிட இருக்கோ ஐயா?” என்றான்.

அவர்களைப் பார்த்த உடனேயே அவரின் மகனின் முகம் மனதில் ஓடியது. ராமசாமிக்குருக்கள் முகத்தில் எதையும் காட்டாது,

“சப்பாத்துகளை கழட்டிப்போட்டு உள்ளுக்கை வாங்கோ தம்பியவை .இண்டைக்கு கார்த்திகை விளக்கீடு கடைசி நாள். சொக்கப்பானை வேறை எரிக்கவேணும். கொஞ்சம் உதவி செய்யுங்கோ. வெளியிலை நிண்டால் பிரச்சனையாய் போடும். நான் பிரசாதத்துக்கு அரிசி போட்டுட்டு வாறன்.” என்றவாறே குருக்கள் மடப்பள்ளிப்பக்கமாக சென்றார்.

குமணன் எல்லோரது சப்பாத்துக்களையும், ஆயுதங்களையும் மடப்பள்ளிக்கு கிட்டவாக அவதானமாக உருமறைப்புச் செய்தான். எல்லோரும் தாங்கள் கொண்டுவந்த வேறு உடுப்புகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர்.இப்பொழுது அவர்கள் சனத்துடன் சனமாக கலக்கத் தயாராக இருந்தனர்.அவர்கள் கோயில் கிணற்றில் தண்ணீரை வேண்டிய அளவுக்கு அள்ளி அள்ளிக் குடித்தார்கள்.கோயில் கிணற்றில் அவர்கள் தண்ணீர் குடிப்பதை ராமசாமிக்குருக்கள் விகற்பமாகப் பார்க்கவில்லை.இயற்கை தந்த தண்ணீரை பிரித்து பார்க்கும் மனிதரது செயல்கள் அவரை கடுப்பேற்றியது.ராமசாமிக்குருக்கள் பிறப்பால் பிராமணராயினும் அவரது மகன் இயக்கத்துக்குப் போனது அவரைப் பலவழிகளில் பண்படுத்தியிருத்தது. அவர் இயக்கப்பெடியளைத் தனது மகனின் ஊடாகவே பார்த்தார்.ஆனால் கோயில் தர்மகர்த்தா வில்லங்கம் விநாசித்தம்பி பார்த்தால் ஊரையே இரண்டாக்கி விடுவார் என்பது அவருக்குத்தெரியும்.ஏனெனில் அவர் பிராம்பத்தையில் ஓர் கொழுத்த சாதிமானாகவும் பரம்பரைப் பணக்காரனாகவும் இருந்தார்.அவரது நல்ல காலம் அப்பொழுது கோயிலில் யாரும் இருக்கவில்லை.

குமணனின் தலமையில் வந்தவர்கள் கோயில் முன்பக்கத்தில் சொக்கப்பானை கட்டத்தொடங்கினார்கள்.அறு கோணத்தில் கமுக மரச்சிலாகைகள் நட்டு அதனைச்சுற்றி தென்னைமர ஓலைகளினால் வேய்ந்து அதன் மேலே காய்ந்த வைக்கோலைத் தூவி ஒருபக்கம் சிறிய வாசல் வைத்தார்கள்.அப்பொழுது குமணனுடன் வந்தவன் அதிகமாக தென்னோலைகளை சுற்றிவர மூன்றடுக்கில் வைத்து அதன் மீது வைக்கல்களை தூவினான்.குமணன் ஏன் இப்படி செய்கின்றாய் என்று கேட்டதற்கு 

“செய்யிற வேலையை ஒழுங்காய் செய்யவேணும். அப்பத்தான் சொக்காப்பானை நல்லவடிவாய் பெரிசாய் எரியும்” என்றான். 

எல்லோரும் கலகலவென்று சிரித்தார்கள்.அவர்கள் சொக்கப்பானை கட்டுவதை விடுப்பு பார்க்க சின்னன் பொன்னன்கள் கூடிவிட்டார்கள்?அவர்கள் சொக்கப்பானை கட்டினாலும் அவர்களது மூக்கு என்னவோ மடப்பள்ளியில் இருந்து வரும் பச்சையரிசி புக்கை வாசத்திலேயே லயித்து இருந்தது.பசி அவர்களது கவனத்தை அப்படி திருப்பியிருந்தது.தங்களது பசிக்கு கடைசி பிள்ளையாருக்கு படைக்கும் புக்கையாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் சொக்கபபானையை பசிவெறியில் கட்டிக்கொண்டிருந்தார்கள்.அவர்களை மடப்பள்ளிக்கு அழைத்த ராமசாமிக்குருக்கள் 

“தம்பியவை நீங்கள் முதல் சாபிடுங்கோ. செரியாய் களைச்சு போனியள்.பிள்ளையாருக்கு படைக்க நான் கொஞ்சம் எடுத்து வைச்சிருக்கிறன்.”

அவர்கள் குருக்களை சங்கடத்துடன் பார்த்தார்கள்.” எப்பிடி ஐயா பிள்ளையாருக்கு படைக்க முன்னம் நாங்கள் சாப்பிடிறது ?? இன்னும் கொஞ்ச நேரம் தானே நாங்கள் போருக்கிறம் “. என்றான் குமணன்.

"தம்பியவை கடவுளை எல்லாரும் ஒவ்வருமாதிரி பாப்பினம். வடிவாய் பாத்தியள் எண்டால் மனுசர்தான் கடவுள். மனுசர்தான் எல்லாத்தையும் செய்யினம்.ஆனால் அதாலை வாற வினையளை தாங்கள் பொறுப்பெடுக்காமல் கல்லாய் இருக்கிற கடவுளின்ரை தலையிலை வலு சிம்பிளாய் போட்டுவிடுவினம். ஏனெண்டால் சனங்கள் மனுசரைவிட கல்லாய் இருக்கிற கடவுளைத்தான் கூட நம்பிதுகள்.பிள்ளையாருக்கு சாத்திற பட்டுசால்வையையும்,பஞ்சாமிர்தத்தையும், நைவேத்தியத்தையும் விட உங்கடை பசிச்ச வயிறு நிறைஞ்சாலே அதிலை பிள்ளையார் இருப்பார்.அதாலை நீங்கள் ஆரும் பாக்காமல் இந்த மூலையிலை இருந்து சாப்பிடுங்கோ.எனக்கு வேறை வேலையள் கிடக்கு”. என்றவாறே ராமசாமிக்குருக்கள் நகர்ந்தார்.

 அவர் நகர்ந்ததும் எல்லோரும் வட்டவடிவமாக இருந்து வெறும் புக்கையை ஆவலுடன் எல்லோருக்கும் பகிர்ந்து சாப்பிட்டார்கள் .அவர்களது பசித்த வயிறு ஓரளவு குளிர்ந்தது.

கோயிலுக்கு சனங்கள் வரத்தொடங்கி விட்டார்கள்.கோவில் மேளகாரர்கள் வந்து தங்கள் கச்சேரியை தொடங்கினார்கள்.வில்லங்கம் விநாசித்தம்பியர் தனது பிரசன்னத்தை கோயில் எங்கும் காட்டிக்கொண்டு இருந்தார்.குமணன் குழுவினர் சனங்களோடு சனங்களாக கலந்து இருந்தார்கள் பஞ்சாமிர்தம் செய்யும் பொறுப்பை விநாசித்தம்பியர் பொறுப்பெடுத்திருந்தார்.பஞ்சாமிர்தம் செய்வதில் விநாசித்தம்பியர் ஒரு விண்ணன்.அதிலும் அவர் பஞ்சாமிர்தம் செய்யும் பொழுது யாரும் உதவிக்கு போகக்கூடாது. மீறிப்போனால் அவர் நாயாகிவிடுவார்.மற்றையவர்கள் சுத்தம் சுகாதாரமாக செய்யமாட்டார்கள் என்பது அவரது கணிப்பு. ஆனால் அவர் பஞ்சாமிர்தம் போடும்பொழுது உடம்பெல்லாம் வியர்த்துவழிந்து பஞ்சாமிர்தத்தில் கொஞ்சம் கலப்பது வேறுகதை.வாழைப்பழம்,மாம்பழம்,பிலாப்பழம்,முந்திரிகைவத்தல்,பேரீச்சம்பழம் விளாம்பழம் என்று எல்லாவற்றையும் சின்ன துண்டுகளாக வெட்டி அதனுடன் கொம்புத்தேனையையும் பழுப்பு சீனியையும் ரெண்டு கரண்டி நெய்யையும் ஏலக்காய் பொடியையும் சேர்த்து அரை நொருவலாக பிசைந்தார் விநாசித்தம்பியர்.இப்பொழுது பிள்ளையாருக்கு சாத்த பஞ்சாமிர்தம் தயாராகி இருந்தது.

அடுத்து என்ன செய்யவேண்டும் என்று கட்டளைப் பீடத்தில் இருந்து வரும் தகவலுக்காக கோயிலிலேயே சனங்களுடன் சனங்களாக நின்றனர் குமணணன் குழுவினர்.கோயிலின் கர்ப்பக்கிரகத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் ராமசாமிக்குருக்கள்.அவர் மனமெங்கும் பிள்ளையார் உருவமே வியாபித்து இருந்தது.அரை விழியில் மூடிய கண்கள் மந்திரத்தை ஓங்கி உச்சாடனம் செய்து கொண்டிருந்தன.அவரை சுற்றி இருந்த தேங்காய் எண்ணை விளக்கு வெளிச்சத்தில் அவர் ஜொலித்தார் வெளியே மகா மண்டபத்தில் திமிறிய பக்தர்கள் அரோகரா அரோகரா என்று ராமசாமிக்குருக்களின் மந்திரத்தில் பக்திப் பரவசமாகினார்கள்.பிள்ளையாரின் விக்கிரகத்தில் பாலும் அதன் பின்னர் பஞ்சாமிர்தமும் வழிந்தன. பிள்ளயாருக்கு சாத்திய பஞ்சாமிர்தத்தை வில்லங்கம் விநாசித்தம்பியே எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டு வந்தார்.எல்லோரும் வரிசையில் நின்று பஞ்சாமிர்தத்தை வாங்கிக்கொண்டிருந்தனர்.சனங்கள் தன்னிடம் வரிசையாக நின்று சாப்பாடு வாங்குகின்றார்களே என்று ஓர் அற்ப சந்தோசம் விநாசித்தம்பிக்கு. பஞ்சாமிர்தத்துடன் குமணனுக்கு கிட்ட வந்த விநாசித்தம்பி,அவனது உயர்ந்த தோற்றத்தையும், திரண்ட கைகளையும், ஆயுதப்பயிற்சியில் அகன்ற மார்பையும் கண்டு விநாசித்தம்பியின் வில்லங்கமான மூளை வில்லங்கமாக யோசித்து அவனை யார் எவர் என்று விநாசித்தம்பி குடையத்தொடகிங்னார்.சனங்களுக்கு முன்னால் தன்னை அவமானப்படுத்தியதால் கடுப்பான குமணன்,

” ஏன் நாங்கள் இன்னார் எண்டு சொன்னால் தான் பஞ்சாமிர்தம் குடுப்பியளோ?” என்று கோபமாக எகிறினான்.

இதனால் விநாசித்தம்பி சூடாகி பஞ்சாமிர்த சட்டியை அப்படியே வைத்துவிட்டு விறுவிறுவென்று கோயிலை விட்டு வெளியேறினார்.வீட்டிற்கு வந்த விநாசித்தம்பி பிராம்பத்தைக்கு அடுத்த ஊரில் இருந்த இந்தியப்படையின் முகாமுக்கு இயக்கம் கோயிலில் இருப்பதாக செய்தியை அனுப்பிய பொழுதுதான் அவரின் கோபம் தணிந்தது.

வினாசித்தம்பியர் கோபமாக கோயிலை விட்டு வெளியேறியதைக் கண்ட குமணனும் அவன் குழுவினரும் உசாராகித் தாங்கள் கொண்டு வந்து உருமறைப்புச் செய்த ஆயுதங்களையும் எடுத்துகொண்டு கோயிலின் பின்புறமாக சனங்கள் அசந்த வேளையில் வேறு திசையை தெரிவுசெய்துகொண்டு வெளியேறி விட்டார்கள். சப்பாத்தி மணத்தையும் கடலை எண்ணை மணத்தையும் மோப்பம் பிடித்துக்கொண்ட பிராம்பத்தை நாய்கள் குலைக்கத்தொடங்கி விட்டன.ஆனால் அவைகளின் குலைப்பு காலங் கடந்துவிட்டது.அமைதிப்படை இராணுவம் மெதுவாக முன்னேறி பிரம்பத்தையை சுற்றி வளைத்துப் பிள்ளையார் கோயிலைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து விட்டது.அவைகள் குலைத்த குற்றத்துக்காக சமாதான புறாக்களினால் பரலோகம் போயின.சமாதானப்புறாக்கள் பெண்பிரசுகளை கோயிலினுள் வைத்துவிட்டு ஆண்களை கோயிலின் முன்னால் வைத்து விசாரணை செய்துகொண்டிருந்தன.விசாரணைப் பொறுப்பை அமர்சிங் என்ற படையதிகாரி எடுத்துக்கொண்டான்.அடிஅகோரத்தில் எல்லோரும் இந்திரா காந்தியின் பெயரைச் சொல்லிகுளறி அழுதனர்.எல்லோருமே குமணன் குழுவினரைத் தெரியாது என்றே சாதித்துக்கொண்டிருந்தனர்.அமர்சிங் வெறியநாயானான்.மேலும் சித்திரவதைகள் தொடர்ந்துகொண்டிருந்தன.இவகளைப்பார்த்த ராமசாமிக்குருக்கள் கலவரப்பட்டுப்போனார்.அவரின் முகமாற்றத்தை அவதானித்த ஓர் சீக்கியன் அமர்சிங்கின் காதுக்குள் குசுகுசுத்தான்.ராமசாமிக்குருக்கள் எல்லோர் முன்னிலையிலும் கொண்டுவரப்பட்டார்.இயக்கம் வந்ததா என்று கேட்டுக்கேட்டு குருக்களைத் துவட்டி எடுத்தார்கள்.குருக்களின் முகமெல்லாம் காயமாகி ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அமர்சிங்குக்கு அந்த விபரீதமான யோசனை தோன்றியது.உண்மையை சொல்லாத ராமசாமிக்குருக்களை கோயிலின் முன்னே கட்டியிருந்த சொக்கப்பானையின் நடுவில் கட்டி வைத்து விட்டு சொக்கப்பானையை கொழுத்திவிட்டான் அமர்சிங்.சொக்கப்பானையின் தீச்சுவாலைகள் உடல்கருகிய வாசத்துடன் கொழுந்து விட்டு எரிந்தன.

கோமகன் 
மலைகள் 
02 மாசி 2015


Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02

11 ஊசிப்பாரை - big eye trevally  இந்த மீனுக்குரிய தூயதமிழ் " ஊசிப்பாரை மீனாகும் ".எல்லோருமே பாரை மீன் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் ஊசிப்பாரை (dusky trevally, big eye trevally,) ,கட்டாப் பாரை ( leather skin fish, leather jacket fish, queenfish ) , கூனிப்பாரை ( cleftbelly trevally ) , தோல் பாரை (Malabar trevally ) , மஞ்சள் கிள்ளுப் பாரை ( giant trevally, yellowfin trevally) , வெங்கடைப் பாரை ( horse mackerel ) என்று பாரைமீனில் பலவகை உள்ளன. நான் போட்ட படம் ஊசிப்பாரை மீனாகும். இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள். http://en.wikipedia.org/wiki/Trevally 000000000000000000000000000000 12 எலிச்சூரை மீன் - frigate tuna- Auxis thazard thazard  இந்த மீனுக்குரிய தூயதமிழ்ப்பெயர் " எலிச்சூரை மீன் " ஆகும். இந்தச் சூரை மீனில் சூரை ( Choorai Little Tunny), நீலத் துடுப்புச் சூரை ( Blue fin tuna ), சூரை கீரை மீன் (Keerai, Kerai Yellow Tuna, Yellowfin Tuna ), எலிச்சூரை மீன் (frigate tuna) என்று பலவகைப்படும் . இந்த மீன்பற்றிய மே

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில