Skip to main content

என் பார்வையில் ஃ -ஆயுத எழுத்து - வாசிப்பு அனுபவம்



"உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை.அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம்"?

என்று ஓர் கேள்வியை நான் எழுதிய " சின்னாட்டி " என்ற சிறுகதையில் எழுப்பியிருந்தேன். நாங்கள் எப்பொழுதுமே உண்மையைவிடக்  கற்பனையில்  மிகுந்த ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றோம் . உண்மையைவிடப் பொய்தான்  மிகவும்  உண்மையாகத் எங்களுக்குத் தெரிகிறது. கற்பனைகள் என்றுமே  பலவகைகளில்  எங்களுக்கு திருப்தியைக் கொடுக்கின்றன .எங்களுடைய கற்பனைகள்  எங்கள் அகங்காரத்திற்கு  திருப்தியை  அளித்துக் கொண்டிருகின்றது. இன்றைய இலக்கிய  வெளியில் பெரும்பாலானவர்கள் உண்மைகளை பேசாது விடுகின்றனர். உண்மை பேசுவோர் பேசுவது உண்மை என்று தெரிந்திரிந்தும், இந்தப் பெரும்பாலானவர்கள் வெறும் கற்பனை வடிவங்களுக்கே   முண்டு கொடுக்கின்றனர் . இவர்கள் உண்மைகளைப் பேசுவோரை கள்ளத்தனமாக ரசித்து அவர்களை  ஓர் செப்படிவித்தைக்காரர்கள் போல் பார்க்கின்றார்கள். ஆனால் உண்மை பேசுவோரை ஓர் பேசுபொருளாக இவர்கள் அங்கீகாரம் கொடுக்கத்தயாரில்லை. இந்த உண்மைகள் பேசுவோரை பெரும்பாலானவர்கள் இழிசனங்களாக, தீட்டுப்பட்டோராக கருதுகின்ற வேளையில், பிரான்ஸின் தென்கிழக்கு மூலையில் இருந்து உண்மைகளின் சத்தியாவேசம் ஆயுத எழுத்தாகப் பீறிட்டுப் பாய்கின்றது. உலகாளாகிய அளவில் ஆயுத மொழிக்கு ஒரேயொரு மொழி தான் உண்டு. அதுதான் கொலை. ஆயுத மொழிகள் என்றுமே கொலைகளுக்கான காரண காரியங்களை பொதுவெளிகளில் ஆராய முற்படுவதில்லை .ஆனால் காலம் எப்பொழுதுமே ஒரே திசையிலும் ஒரே நேர் கோட்டிலும் பயணம் செய்வதில்லை .அதன் சுழற்சியில் அகப்பட்ட ஆயுத மொழிகள் கடந்து வந்த பாதையில் இருந்த உண்மைகளை பேச ஆரம்பிக்கின்றன. அதன் தொடர்ச்சியே சாத்திரி எழுதிய ஆயுத எழுத்து என்று எண்ண இடமுண்டு.

எமது இனம் கடந்து வந்த விடுதலைப் பாதையில் யாழ்ப்பாணியம் தனது வசதிக்கேற்ப ஏறத்தாழ 35 க்கும் மேற்பட்ட போராளிக்குழுக்களை உருவாக்கியிருந்தது. ஆரம்பத்தில் பல கணக்குத்தீர்ப்புகளின் பின்னர்  அவன் சார்ந்த போராளி அமைப்பே தமிழினத்தின் விடுதலைக்காக ஏகபோக உரிமையை எடுத்துக்கொண்டது.   இந்த  அமைப்பின் போராளிகள் தாய் மண்ணிலும் உலகின் பல பாகங்களிலும் நீக்கமறக் கலந்து இருந்தனர். இவர்கள் விட்ட தவறுகள், சீர்கேடுகள் சகலதும் எவ்வாறு  அதன் தலைவரை மட்டுமல்ல, தமிழ் இனத்தின் தலைவிதியை தமிழின் இறுதி எழுத்தான அகேனத்துக்கு  கொண்டு சென்றது என்பதை சல்லடை போட்டு விபரிக்கின்றது ஆயுத எழுத்து. இந்த நாவலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம்.

01 தாயகத்தில் நடைபெற்ற ஆரம்பகால நடவடிக்கைகளும் அதன் தொடர்ச்சிகள்.

02 சர்வதேச வலைப்பின்னலில் நடைபெற்ற இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்கள் .

முதல் பகுதியில்  தாயகத்தில் இருந்த போராளிகள்  எவ்வாறு சனங்களுடன் நடந்து கொண்டார்கள் ?? சனங்கள் எவ்வாறு அவர்களுக்கு ஆதாரசுருதியாக இருந்தார்கள்??  பின்னர் அதே சனங்கள் எப்படி அவர்களுக்கெதிராகத் திசை மாறினார்கள் ?? என்பதைக் குறிப்பாக இஸ்லாமியர்களது "ஓர் இரவு புலப் பெயர்வு" உரைகல்லாக நாவலில் ஓடுகின்றது. அந்த பகுதி மனத்தைக் கனக்க வைக்கின்றது. நாங்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றோம் என்று என்மீதே எரிச்சல் பட வைத்தது. அன்றைய புலப்பெயர்வு தங்களுக்கும் வருங்காலத்தில் நடைபெறும் என்பதையும்,  போராளிகளின் இந்த நடவடிக்கைக்கு முண்டு கொடுத்துக்கொண்டும் அந்த அப்பாவி  இஸ்லாமியர்களை வேடிக்கை பார்த்த அந்த சனங்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நாவல் மறைமுகமாகச்  சுட்டி நிற்கின்றது. மேலும் இந்திய அமைதிப்படை வருகையும் அதனுடனான முறுகல் நிலையும்,  அதனுடைய  செயற்பாடுகள் பற்றியும் வரும் பகுதியானது நாவலுடன் ஒட்டாது கட்டுரைத்தனமையாக துருத்திக்கொண்டு இருக்கின்றது.  இருந்த போதிலும் ,

 " ஈழத்தில் பல்லாயிரம் குடும்பங்கள் யாரோ ஒருவரை இழந்து கதறினார்கள். எங்கள் கதறல்கள் யாவுமே அவர்களின் தேசத்தின் காற்றிலேயே  கரைந்து போனது ; யார் காதிலும் விழவில்லை. " (பக்கம் 182)

என்று  இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகளைப்  நாவலாசிரியர் ரத்தினச் சுருக்கமாக வாசகர் மனதில் பதியவிட்டிருப்பது நாவலாசிரியரின் சொல்லாட்சியை படம் பிடித்துக்கட்டுகின்றது.

நான் ஏலவே கூறிய முதல் பகுதியில், யதார்த்தங்களை அறியாது மனநோய் பிடித்த நிலையில் இயக்க முரண்பாடுகள் எவ்வாறு போராளிகளால் கணக்குத் தீர்க்கப்பட்டது என்பதை விபரிக்கின்ற இடத்தில் என்னையறியாது கண்கள் கலங்குவது தவிர்க்க முடியாது போகின்றது. அதிலும் ஓர் இடம் என்னை மிகவும் பாதித்தது. அந்த இடம் பின்வருமாறு நாவலில் விரிகின்றது,

"அதுவரை அவன் கிச்சானின் செய்கைகளை உற்றுப்பார்த்து கொண்டிருந்தவன் அவனது பேச்சு ,சுட்டித்தனம் ,எதையாவது சொன்னால் பட்டென்று பதில் சொல்லும் திறமை பிடித்திருந்தது.சைகைமூலம் ஜும்கலியிடம் "யாரது" ? என்று கேட்டான்.அவனின் பெயர் இஸ்மாயில்.அப்பா ஆரோ பாக்கிஸ்தான் வியாபாரியாம். இவன் பிறந்ததோடை அவன் விடுட்டுப்போய்விட்டான் ?அவன்ரை அம்மா வேறை கலியாணம் கட்டிப் போயிட்டாளாம் .இவனைத்துரத்தி விட்டுட்டாங்கள் .இவன் போய் ஒரு தேத்தண்ணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான்.ஒருநாள் இவன்ரை குளப்படி தாங்காமல் முதலாளிக்காரன் இவனுக்குப் பிடரியிலை ஒண்டு போட,இவனும் சுடுதண்ணியாலை முதலாளிக்கு எத்தி போட்டு  ஓடியந்து எங்களோடை வந்து சேந்திட்டான்.இப்பதான் 11 வயதாகுது டிரெயினிங்குக்கும் அனுப்பேலை இங்கே முகாமிலை வேலையள் செய்யட்டும் எண்டு விட்டிருக்கிறன்.நல்ல கெட்டிக்காரப் பெடியன் .அதை விட நல்லாய் டீ போடுவான்.இங்கேயிருந்தே படிக்கிறான் " என்று சொல்லி முடித்தான் ஜும்கலி. பக்கம் ( 289 - 290 ).

சில விசையங்களைக் கதைத்துவிட்டு ஜும்கலி புறப்படும் போதுதான் அவனுக்குக் கிச்சானின் ஞாபகம் வந்ததால் அதைப்பற்றி விசாரித்தான் " அது வேறை கதையடா !" என்றபடி தொடங்கினவன் , தெரியும்தானே மச்சான் .இயக்கம் உள்ளை ஜிகாத் புகுந்துட்டுதெண்டு எல்லா சோனகரையும் களையெடுப்பு நடத்தினது.அண்டைக்கு கரிகாலன் முகாமுக்கு வந்தவன். அவனுக்கு கிச்சான் டீ கொண்டு போய் குடுத்தவன் " என்று சொல்லத் தொடங்கினான்.

டீ யை வாங்கிய கரிகாலன் அவனை உற்றுப் பார்த்திட்டு " டேய் நீ துலுக்கன் தானே ?" கிச்சான் பேசாமல் தலையை குனிந்தபடி நிக்க , முகாம் பொறுப்பாளராக இருந்த குமணனை கூப்பிட்ட கரிகாலன் , டேய் இவனை கொண்டு போ ........... கொண்டுபோய் போடு " என்று கத்தினான் .


அவன் தயங்கியபடி " அண்ணை கிச்சான் சின்ன வயசிலை இஞ்சை வந்துட்டான். அதைவிட அவன் இஞ்சை வந்ததிலை இருந்து வெளியாலை ஊருக்குள்ளை போறேல்லை .இவனுக்கும் ஜிகாத்துக்கும் தொடர்பு ஒண்டும் இருக்காது எண்டு எங்களுக்கு நல்லாய் தெரியும் .அதுதான் அவனை ஒண்டும் செய்யேலை .பாவம் சின்னப் பெடியன் .வேணுமெண்டால் அவனை வெளியாலை அனுப்பி விடலாம்" என்றான்.



கோபத்தில் கரிகாலன் " டேய் நான் சொன்னதை செய் என்று கத்தினான். ஆனால், குமணன் கிச்சானுக்காக  மீண்டும் வாதாடிப்பார்த்தான் .ஒரு பிரயோசனமும் இல்லை ." அவனைக் கொண்டு போய் கிடங்கு வெட்டச் சொல்லு , நானே வந்து போடுறன் " என்று கரிகாலன் கறாராகச் சொல்லி அனுப்பி விட்டான் .அதுவரை பேசாமல் தலையைத் தொங்கப் போட்டபடி நின்று கொண்டிருந்த  கிச்சான் ,பேசாமல் குமணனுக்கு பின்னாலை நடந்து போனான் . பிக்கானையும் மண்வெட்டியையும் எடுத்த குமணன் முகாமுக்குப் பின்புறம் இருந்த பற்றைப் பகுதியில் கிச்சானிடம் கிடங்கை வெட்டச் சொன்னவன் , அவனுக்கு உதவியாக இன்னொருவனையும் அழைத்து கிடங்கை வெட்டச் சொன்னான். கிடங்கை வெட்டி முடித்த வியர்வையோடு மூச்சு வாங்க குமணனை கிச்சான் பார்க்க, மௌனமாக நின்ற குமணன், கரிகாலனை அழைத்துவரப் புறப்படும்போது, “அண்ணோய் ..!” கிச்சானின் குரல் கேட்டுத் திரும்பியவனிடம், “அண்ணே... எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா. பிறகு எங்கேயெல்லாமே அலைஞ்சு திரிஞ்சன். ஆனா, நான் இஞ்சை வந்தாப் பிறகு உங்களைத்தான் ஒரு சகோதரமா நினைச்சு பழகியிருக்கிறன். சரியான தாகமா இருக்கு. கடைசியா உங்கடை கையாலை கொஞ்சம் தண்ணி தாங்கண்ணே” என்றதும் குமணன் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்தவன், ‘‘அண்ணே, நான் இங்கே வந்தபிறகு தொழுறதைக்கூடக் கைவிட்டிட்டன். நான் ஒரு முஸ்லிம் எண்டதைக்கூட மறந்தேபோயிற்றுது. அதாலைதான் இது அல்லா தந்த தண்டனையா இருக்கும். நான் தொழுகை நடத்துறன். அண்ணே, நீங்கள் போய்க் கரிகாலன் அண்ணையைக் கூட்டி வாங்கோ" என்றுவிட்டுக் கிடங்கின் முன்னால் முழந்தாளிட்டுத் தொழுகை நடத்தத் தொடங்கினான். குமணன் கரிகாலனிடம் போய் விஷயத்தைச் சொன்னதும், அங்கு வந்த கரிகாலனின் பிஸ்டல் தொழுகைநடத்திவிட்டு நிமிர்ந்த கிச்சானின் பிடரியில் அழுத்தியது. கிச்சானின் கண்கள்  மூடிக்கொள்ளத் துப்பாக்கி குண்டைத் துப்புகின்றது. கிச்சான் கிடங்கினுள்  தலைகுப்புற விழுந்தான்."  ( பக்கம் 320 - 321 ).


இந்தப் பகுதி நாங்கள் நிறையவே வினைகளை விதைத்திருக்கின்றோம் என்பதை அப்பட்டமாகக் காட்டி நிற்கின்றது. இன்று அரபு தேசங்களில் ஜிகாதிகள் மேற்கொள்ளும் கொடுமைகளை காணொளிகளில் கண்டு மனம் பதறியும், இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் அவன் சார்ந்த நிறுவனத்தின் தலைவரின் அதேவயதையொத்த சிறுவயது மகனைக் கொன்ற பொழுது பொங்கி எழுந்த சனங்கள்  எமது தாயகத்தில் பல கிச்சான்கள் காரணமின்றி ஆயுத மொழிக்கு இரையான பொழுது கள்ள மௌனம் சாதித்ததை நாவல் எள்ளி நகையாடுகின்றது. மொத்தத்தில் முதலாவது பகுதி எனக்கு கிளீன் எஸ்ட் வூட்டின் " கௌபோய் " படங்களையே நினைவு படுத்தியது.

இரண்டாவது பாகம் பிரபல கொலிவூட் படமான ஜேம்ஸ் பொண்ட் தொடர்களையே நினைவு படுத்தியது.இரண்டாவது பாகத்தில்,  இரத்தத்தை உறைய வைக்கும் கணக்குத்தீர்க்கும் காட்சிகளும், சர்வதேச ஆயுதப் பேரங்களும் ,அதனூடாக படுக்கையறைக் காட்சிகளும் தாராளமாகவே அள்ளித்தெளிக்கின்றது. இந்த கதை சொல்லும் உத்தியானது முதல் பாகத்தில் கட்டுரைகளை வாசித்த வாசகர்களின் மனநிலையை மாற்றியமைத்து கிளுகிளு சம்பவங்களினூடாக தான் சொல்ல வந்த செய்தியினை கச்சிதமாக நாவலாசிரியர் நகர்த்தியிருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. ஆனாலும் படுக்கையறைக் காட்சிளைத் தவிர்த்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் அவைகள் சொல்ல வந்த செய்திகளின் வீரியத்தை இரட்டடிப்புச்  செய்து தூக்கலாகாக நிற்கின்றன. பாரிஸில் நான் வாழ்ந்த காலப்பகுதிகளில் பங்கு பிரிப்புகளில் ஏற்பட்ட முரண்களில் நடைபெற்ற இரட்டைப் படுகொலைகளை விலாவாரியாக விபரித்த ஆயுத எழுத்து, தான் சார்ந்த நிறுவனத்தின் ஆரம்ப கால உறுப்பினர் ஒருவரின் படுகொலையை எடுத்துச் சொல்லாது கள்ள மௌனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றது. ஏனெனில் அந்த உறுப்பினர் செய்த ஒரேயொரு குற்றம் தான் சார்ந்த நிறுவனத்தை விமர்சித்தது ஒன்றே .இந்த சம்பவம் நான் வாழ்ந்த காலப் பகுதியில் நடைபெற்று என்னை உலுக்கிய சம்பவமாகும் அதே வேளையில் ஆயுத எழுத்தானது இந்தியாவில் நடைபெற்ற இந்தியப்பிரதமரின் கணக்குத்தீர்ப்பு மர்மமுடிச்சுகளையும் அவிழ்க்கத் தவறிவிட்டதாகவே  எண்ண இடமளிக்கின்றது.

இறுதியாக நாவலில் வருகின்ற கதை சொல்லியான " அவன் "  இறுதியில் கார் விபத்தில் அகால மரணமானதை இரண்டு விதமாகப் பார்க்கத் தோன்றுகின்றது. ஒன்று இன்றைய அரசியல் சூழலில் (அவன் சார்ந்த நிறுவனத்தின் தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்பது போல ) அவன் தனது வாழ்க்கையை முடித்திருக்க வேண்டும். இரண்டாவதாக, அவன் தவிர்க்க முடியாத கார்விபத்தில் அகாலமாக  இறந்திருக்க வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஆயுத எழுத்து என்பது பலரின் வயிற்றில் புளியைகரைக்கும் ஆயு(த்)த எழுத்தாகவே இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.




கோமகன் 
அம்ருதா 
06 மார்கழி 2014


Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02

11 ஊசிப்பாரை - big eye trevally  இந்த மீனுக்குரிய தூயதமிழ் " ஊசிப்பாரை மீனாகும் ".எல்லோருமே பாரை மீன் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் ஊசிப்பாரை (dusky trevally, big eye trevally,) ,கட்டாப் பாரை ( leather skin fish, leather jacket fish, queenfish ) , கூனிப்பாரை ( cleftbelly trevally ) , தோல் பாரை (Malabar trevally ) , மஞ்சள் கிள்ளுப் பாரை ( giant trevally, yellowfin trevally) , வெங்கடைப் பாரை ( horse mackerel ) என்று பாரைமீனில் பலவகை உள்ளன. நான் போட்ட படம் ஊசிப்பாரை மீனாகும். இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள். http://en.wikipedia.org/wiki/Trevally 000000000000000000000000000000 12 எலிச்சூரை மீன் - frigate tuna- Auxis thazard thazard  இந்த மீனுக்குரிய தூயதமிழ்ப்பெயர் " எலிச்சூரை மீன் " ஆகும். இந்தச் சூரை மீனில் சூரை ( Choorai Little Tunny), நீலத் துடுப்புச் சூரை ( Blue fin tuna ), சூரை கீரை மீன் (Keerai, Kerai Yellow Tuna, Yellowfin Tuna ), எலிச்சூரை மீன் (frigate tuna) என்று பலவகைப்படும் . இந்த மீன்பற்றிய மே

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில