அறத்துப்பால்- இல்லறவியல் பொறைஉடைமை-The Possession of Patience, Forbearance -Supporter les injures 151 - 160
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151
தன்னைத் தோண்டுகின்றவர்களையும் விழாமல் தாங்கும் நிலத்தைப் போலத் தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்து ஆதரித்தலே முதன்மையான அறமாகும்.
எனது கருத்து :
குற்றம் பார்க்கில் சுற்ரம் இல்லை எண்டு சொல்லுவினம் . தோட்டக்காறர் தோட்டம் செய்ய மண்ணைக் கிண்டி சாறுவினம். ஆனால், மண் அவையளை தடுக்கி விழாமல் தாங்கி அவைக்கு நல்ல பயிர் விளைச்சலையும் குடுக்குது .அதே மாதிரி ஆராவது உங்களை கதையால காயப்படுத்தினால் தாங்கித் தரியுங்கோ பேந்து உங்களைத் தான் சனம் தூக்கிப் பிடிக்கும். இது என்ரை அனுபவம் .
As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best.
Ainsi que la terre supporte ceux qui la fouillent, supporter ceux qui vous offensent est la première des vertus.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. 152
பிறர் தமக்குத் துன்பம் செய்தால் அவர்செய்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்க . அதனை அப்போதே மறந்து விடல் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் மிகவும் மேலானதாகும் .
எனது கருத்து:
ஒருத்தர் ஒராளுக்கு ஏதாவது தெரிஞ்சு தெரியாமல் கெட்டதைச் செய்து போட்டால் அதையே வாழ்நாள் முழுக்க நெஞ்சிலை வைச்சு அறுக்கிற ஆக்களும் ஊர் உலகத்தில இருக்கினம் . இவையளைப்போலை இல்லாமல் உடனையே அந்தக் கெட்ட செயலை மறந்தியள் எண்டால் உங்களைச் சுத்தியே ஒரு கூட்டம் இருக்கும் .
Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise;
Il est bien de supporter toujours l’injure, mieux de l’oublier.
இன்மையுள் இன்மை விருந்துஓரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. 153
வறுமையுள் வறுமையாவது விருந்தினரைப் பேணாமல் நீங்குதல் , அதேபோல் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவரைப் பொறுத்தல் என்பதாகும் .
எனது கருத்து :
கஸ்ரத்துக்குள்ளையே (வறுமை ) செரியான கஸ்ரம் வீட்டுக்கு வாற சனத்தை வரவேற்று உபசரிக்காமல் இருக்கிறதுதான் . இதைப்போலைதான் உண்மையான நேர்மையான மன உறுதி என்னவெண்டால் ,ஆரும் மண்டைப் பிழையான ஆட்கள் உங்களுக்குக் கெட்ட வேலையள் செய்தால் பொறுத்துப் போங்கோ எண்டு நான் விளங்கிக்கொண்டாலும் , " குட்டக் குட்டக் குனியிறவனும் மடையன் , குனியக் குனியக் குட்டிறவனும் மடையன் " எண்ட சொலவடையும் மண்டையில ஒரு பக்கத்தில இடிக்கிது .
The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart.
Refuser l’hospitalité est la misère des misères souffrir le mal fait par ignorance est la force des forces.
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி ஒழுகப் படும். 154
ஒருவன் நற்குணங்கள் நிறைந்திருக்கும் நிலையில் இருந்து நீங்காதிருத்தலை விரும்புவனாயின் அவன் பொறையுடைமையைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும் .
எனது கருத்து :
நீங்கள் சில பேரைப் பாத்தியள் எண்டால் நல்லாய்ப் படிச்சு பேருக்குப்பின்னால ஐஞ்சாறு பட்டங்களைக் கொழுவி வைச்சிருப்பினம். கதையளும் சாதாரணப்பட்ட ஆக்களாலை விளங்கேலாது. ஆனால் அவையை நல்ல வடிவாய் கூர்ந்து பாத்தால் அவைக்கும் பொறுமைக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. ஒருத்தர் அறிவாளியாய் மட்டும் இருந்தால் காணாது செரியான பொறுமைசாலியாயும் இருக்கவேணும் .
Seek'st thou honour never tarnished to retain; So must thou patience, guarding evermore, maintain.
Qui désire la perfection, garde et converse sa patience.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 155
தங்களுக்குத் தீமை செய்தவரைத் தண்டிப்பவரை உலகம் மதிக்காது; தீமையைப் பொறுத்துக் கொண்டவரையே பொன்போல் மதித்துப் போற்றும்.
எனது கருத்து :
உங்களுக்கு ஆராவது கெட்வேலையள் செய்தால் பொறுத்துக் கொள்ளுங்கோ , சனம் உங்களைத் தங்கத்துக்குச் சமனாய் வைச்சுக் கொண்டாடும் . மாறி நீங்களும் ஏட்டிக்கப் போட்டியாய் கேம் கேக்க வெளிக்கிட்டியள் எண்டால் சனம் உங்களைச் சொறிநாயை விடக் கேவலமாய் மதிக்கும் . வசதி எப்பிடி ?
Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized.
On n’estime pas ceux qui vengent les injures mais on honore dans son cœur et sans cesse comme de l’or, ceux qui les supportent.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ். 156
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்கு ஒரு நாளைய இன்பமும் , அத்தீமையைப் பொறுத்தவருக்கு உலகம் அழியும் அளவும் புகழும் உண்டாகும்
எனது கருத்து :
இந்தக் குறள் எனக்குப் பிடிச்சதில ஒண்டு . உங்களுக்குஆராவது கெட்ட வேலையள் செய்து அவையளைத் தண்டிச்சியள் எண்டால் நீங்கள் அண்டைக்கு மட்டுந்தான் அதை நினைச்சு சந்தோசமாய் இருப்பியள். ஆனால் அவயளை நீங்கள் மன்னிச்சு விட்டியள் எண்டால் அதால உங்களுக்கு வாற புகழ் உலகம் அழியும் வரைக்கும் இருக்கும். எது வேணும் ஒரு நாள் சந்தோசமோ அல்லது அழியாத புகழோ?
Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass away.
La vengeance est le plaisir d’un jour, la gloire acquise par le pardon des offenses dure jusqu’à la fin du monde.
திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று. 157
தகுதியில்லாதவற்றைத் தனக்குச் செய்தால் அதனால் துன்பம் அடைந்து , அறம் அல்லாதவற்றை நாம் அவர்களுக்குச் செய்யக்கூடாது.
எனது கருத்து :
எந்தப் பெரிய பிழையை ஒருத்தர் உங்களுக்கு செய்தாலும் அதே பிழையை நீங்களும் அவரக்குச் செய்யிறபொழுது அவர் எப்படி மனம் வருந்துவார் எண்டு நினைச்சு நடைமுறைக்கு ஒவ்வாத வேலையளை செய்யாமல் இருக்கிறது நல்லது.
Though others work thee ill, thus shalt thou blessing reap;Grieve for their sin, thyself from vicious action keep!
Il vaut mieux supporter une cruelle injure qui faire à l’offenseur le contraire de la vertu.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியால் வென்று விடல். 158
மனத்தில் செருக்கினால் வரம்புகடந்த தீச்செயல்களை ஒருவர் தம் பொறுமையாகிய தகுதியினால் வெல்லுதல் வேண்டும்.
எனது கருத்து :
தான் எண்ட ஆணவம் கூடி மண்டைக்கனத்தால எங்களுக்கு கெட்ட வேலையள் செய்யிறவையை எங்கடை பொறுமை என்ற பண்பாலை நீண்ட கால நோக்கத்தில வெல்லலாம். அந்த நேரம் இந்தப் பொறுமை எண்டது ஒருக்காலும் தோல்வியாய் இருக்காது அதுதான் உண்மையான வெற்றி . ஆனாலும் எங்கடை விடுதலை போராட்ட விசையத்தில இந்தக்குறள் வேலை செய்யேலை.
With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail.
Il faut vaincre par la digne patience, ceux qui offensent par orgueil.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159
தீய வழியில் ஒழுகுபவர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர் , துறவிகளைப் போலத் தூய குணமுடையவராவார் .
எனது கருத்து :
ஒருத்தர் தாற சுதந்திரத்தின்ரை எல்லையை மீறி குரங்குக்கதையள் கதைக்கிறவையின்ரை கதையளைப் பொறுத்துக் கொள்ளுறவை ஒரு பரிசுத்தமான துறவியளக்குச் சமனாக இருப்பினம் .
They who transgressors' evil words endure With patience, are as stern ascetics pure.
Ceux qui supportent les paroles ‘méprisables de ceux qui marchent hors la voie du bien ont la pureté du cœur, comme ceux qui ont renoncé au monde.
உண்ணாது நோற்பார் பெரியர் ; பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160
அயலார் தம்மைப் பற்றிக் கூறும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கு, பட்டினி கிடந்து தவம் புரியும் துறவிகள் கூட ஈடாக மாட்டார்கள் .
எனது கருத்து :
பொறுமை எண்டதுதுக்கு இந்தக் குறள் தான் சிகரம் என்பது எனது கருத்து. நாள்க்கணக்காய் வயித்தைக் காயப்போட்டுக் கடுமையாய் விரதம் இருக்கிறவையை விட பொறுமையை காக்கிறவைதான் முதல் தரத்திலை வைச்சு போற்றப்படுவினம் .
Though 'great' we deem the men that fast and suffer pain, Who others' bitter words endure, the foremost place obtain.
Ceux qui se mortifient par le jeûne et supportent leur maladie sont grands incontestablement; mais ils ne viennent qu’après ceux qui supportent les paroles méprisables des autres.
Comments
Post a Comment