Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல் நடுவு நிலைமை- Impartiality-La droiture-111-120



தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பால்பட்டு ஒழுகப் பெறின். 111

அறவழி நின்று பகை , நட்பு , நொதுமல் ( அயலவர் ) ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே நடுவுநிலைமையின் பயனாகும்.

எனது கருத்து :

இப்ப உள்ள நிலைமையில நடுநிலைமை என்றாலே பெரிய சர்ச்சைகுரிய விசையம். இந்த நடுநிலைமை மட்டும் எங்கடை இருண்ட வாழ்கையில வெளிச்சம் தரப்போகுதா என்ன ?

If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gain.

La vertu appelée droiture est la seule bonne Elle s’acquiert par l’accomplissement des devoirs, sans considération d’ennemis, d’étrangers ou d’amis. 

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற் ஏமாப்பு உடைத்து. 112

நடுநிலையிலிருந்து தேடி வைத்த செல்வம் இடையில் அழிந்து போகாமல் அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்.

எனது கருத்து :

நேரிய வழியில உழைச்சு வாற செல்வம் தான் நிண்டு நிலைச்சு அவற்ரை அடுத்த பரம்பரைக்கும் பயன்படும் எண்டு ஐய்யன் சொல்லுறார் .

The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure.

La fortune du Juste ne se dissipe pas; elle se transmet intacte à sa postérité.

நன்றே தரினும் நடுவு இகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். 113

நடுநிலை தவறி ஈட்டிய பொருள் நன்மையே தருவதாக இருந்தாலும் அதை அப்போதே கைவிடவேண்டும்.

எனது கருத்து :

இப்ப நான் சொல்லபோற விசையம் கொஞ்சம் வில்லங்கமானது, ஆனால் , மன்னிச்சுக்கொள்ளுங்கோ. 90 க்கு முதல் எங்கடையாக்கள் நாலைஞ்சு பேரில பேப்பர் போட்டு சோசல் காசு எடுத்த நேரம்.(டோல் மணி ) காசு அந்த மாதிரித்தான் வரும், ஆனால் பின்னால வந்த பிரச்சனையளை அவையள் யோசிக்கேல கடைசீல மாட்டுப் பட்டு டிப்போர்ட் ஆன ஆக்களும் இருக்கினம்.

Though only good it seem to give, yet gain By wrong acquired, not e'en one day retain!

Abandonner sur-le-champ la richesse acquise hors des règles de la Justice, quand bien même elle ne causerait que du bien.

தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்
சத்தால் காணப்ப படும். 114

இவர் நடுவுநிலையுடையவர் இவர் நடுவுநிலை இல்லாதவர் என்பவற்றை அவருடைய மக்களைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம் .

எனது கருத்து :

ஒருத்தர் நீதிமானா இல்லையா எண்டதை அவற்ற காலத்துக்குப் பிறகு வாற அவற்றை புகழும் பழியும் தான் முடிவு செய்யும். பண்டாரநாயக்கா + ஜே . ஆர் , தந்தை செல்வா + ஜீ ஜீ பொன்னம்பலம் ,இவையளைப் பாத்திங்களெண்டால் வித்தியாசம் தெரியும் .

Who just or unjust lived shall soon appear: By each one's offspring shall the truth be clear.

Quels sont les Justes et quels sont les hommes injustes? Ceci est mis en évidence par la présence ou l’absence des bons enfants. 

கேடும் பெருக்கமும் இல்அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி. 115

தீவினையால் கேடும் நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்பே அமைந்து உள்ளவையாகும் .அதை அறிந்து நடுவுநிலமை தவறாது இருத்தலே சான்றோருக்கு அழகாகும் .

எனது கருத்து :

தங்கடை தங்கடை வசதிக்கு நீதி எண்டு சொல்லுறவையை எப்பிடி சான்றோர் என்று ஏற்றுக் கொள்வது?

The gain and loss in life are not mere accident; Just mind inflexible is sages' ornament.

La misère et la prospérité sont le lot de tous; mais la gloire du Sage est de ne pas dévier, dans son cœur, des règles de l’équite.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின். 116

தன் உள்ளம் நடுநிலை தவறிப் பாவத்தை நினைத்தால் அது பின்னர் வரப்போகும் தீமைக்கு அறிகுறி என்று அறியவேண்டும் .

எனது கருத்து :

செய்யாத அட்டூளியம் எல்லாம் செய்தீச்சினம் இப்ப ஜெனீவாவில கணக்கு எண்ணிக் கொண்டிருக்குது.

If, right deserting, heart to evil turn, Let man impending ruin's sign discern!

Si la volonté de quelqu’un, déviant du chemin de la Justice, pense à commettre l’injustice, qu’il sache que c’est pour son malheur. 

கெடுவாக வையாது உலகம்; நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 117

நடுநிலை தவறாது அறவழி நடப்பவனுக்கு வரும் வறுமையைச் சிறந்த செல்வமாக அறிஞர்கள் அறிவார்கள் .

எனது கருத்து :

இந்தக் குறளைப் பாக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது. ஊருலகத்திலை இருக்கிற நியாயத்தை தான் நாங்களும் கேட்டம். ஆனால் உலகம் என்ன சொல்லீச்சுது? 

The man who justly lives, tenacious of the right, In low estate is never low to wise man's sight.

Le monde ne considère pas comme un mal la pauvreté de l’homme Juste.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி. 118

தன்னைச் சமனாகச் செய்து கொண்டு , பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல் அமைந்து ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும் .

எனது கருத்து :

அப்பிடியொரு நீதிபதியளையும் நடுநிலையாளரையும் நான் காணேல. இந்தப் பான் கீ மூன் எங்கடை பக்கத்து நாட்டுக்காறன் எல்லாரையும் எந்த அடைமொழிக்கை போடுறது? ஆக நடுநிலமை எண்டிறது தங்கடை நலன் சார்ந்து தான் அதின்ரை வியாக்கியானமும் மாறும் .

To stand, like balance-rod that level hangs and rightly weighs, With calm unbiassed equity of soul, is sages' praise.

Tels que la balance qui d’abord a les plateaux en équilibre et qui pèse ensuite le poids à elle confié, les sages n’inclinent d’aucun côte et c’est là, leur parure.

சொல்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின். 119

உள்ளத்தில் கோணுதல் இல்லாத பண்பைப் பெற்றிருந்தால் , சொற்களில் கோணுதல் இல்லாதிருந்தாலும் செப்பமாக உணரப்படும்.

எனது கருத்து:

இதுக்கு இலக்கணமாய் ஒருத்தர் இருந்தவர். ஆனால் இப்ப இல்லை எண்டு சொல்லீனம். கடவுளுக்குத் தான் வெளிச்சம் .

Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possess.

La justice est la droiture du langage: on l’acquiert par la constante stabilité de la volonté dans l’équité.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போல் செயின். 120

பிற பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால் அதுவே வாணிகம் செய்வோருக்கு உரிய நல்ல முறையாகும் .

எனது கருத்து:

கூப்பன் கடையில பாத்தமெண்டால் அரசாங்கம் ஏழைமக்களுக்கு தாற மா , சீனி , மண்ணெண்ணையில ஆயிரம் கோல்மாலுகள் செய்வினம். ஒருவகையில இவையளும் வியாபாரியள் தான். ஆனால் , அப்பிடியில்லாமல் கஸ்ரப்பட்ட சனத்தை நினைச்சால் இந்த எண்ணங்கள் வராது .

As thriving trader is the trader known, Who guards another's interests as his own.

Le commerce prospère aux marchands qui veillent sur le bien d’autrui comme sur le leur.




Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...