Skip to main content

அறத்துப்பால்-இல்லறவியல்-அன்புடமை-The Possession of Love-L’affection-71 - 80



அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். 71

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேனும் உண்டோ ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரே அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும்

எனது பார்வை:

நாங்கள் ஒருத்தரிலை அன்பு வைத்தால் அந்த அன்புக்கு வானமே எல்லையாயிருக்கும் . அப்படிப்படவருக்கு வாழ்கையில ஏதாவது சந்தோசமோ துன்பமோ நடந்திதுதெண்டால் எங்களை அறியாமலே கண்ணில தண்ணி வந்து வந்து எங்கடை அன்பை மற்றவைக்குக் காட்டிக்கொடுத்துப்போடும் .

And is there bar that can even love restrain? The tiny tear shall make the lover's secret plain.

Y a-t-il une targette pour cacher l’affection? Les douces larmes de ceux qui aiment (en voyant la douleur de l’être chéri) révèlent l’affection intérieure.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. 72

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழும் தன்னலக்காரராய் இருப்பர் . அன்புடையவரோ தம் உடம்பையும் பிறர் நலத்திற்காக ஈந்து மகிழும் இயல்புடையவராக வாழ்வர்

எனது பார்வை:

இதுக்கு நல்ல உதாரணமாய் எங்கடை அரசியல்வாதியளைச் சொல்லலாம் . ஏனெண்டால் இவைக்கு சனத்திலை உண்மையான அன்பு இல்லை . அதாலைதான் அவைன்ர பேரில எக்கச்சக்கம் சொத்துப்பத்து இருக்குது . ஆனால் எங்கடை மாவீரர்களும் , கரும்புலிகளும் தங்களை விட மக்களிலதான் கூட அன்பு வைச்சிருந்தவை . இந்தக் குறளுக்கு இதைவிட எனக்கு யோசிக்கத்தெரியேல .

The loveless to themselves belong alone; The loving men are others' to the very bone.

Tout ce que possèdent ceux qui n’aiment pas leur appartient ! chez ceux au contraire, qui aiment, tout appartient au prochain, jusqu’à leurs corps.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. 73

உயிரும் உடம்பும் தொடர்பு கொண்டு ஒன்றாயிருக்கும் உறவானது , அன்போடு பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

எனது அபிப்பிராயம்:

நீங்கள் ஒருத்தரிட்டை அன்பு வைச்சால் மட்டும் காணாது . அந்த அன்பாலை அவருக்கு நீங்கள் என்ன செய்யிறிங்கள் என்பதை வைச்சுத்தான் உங்கடை அன்பின்ரை பெறுமதி இருக்கும் . இது எப்பிடியெண்டால் லவ்வேர்ஸ் ஆளாழுக்கு எப்பிடியெல்லாம் தங்கடை அன்பைக் காட்ட நடந்துகொள்ளுவினம்,அதேமாதிரித்தான்.

Of precious soul with body's flesh and bone, The union yields one fruit, the life of love alone.

On dit que l’union de l’âme et du corps est un effet de l’affection. 

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 74

தொடர்புடையவரிடம் கொள்ளும் பற்று , தொடர்பு இல்லாதவரிடமும் விருப்பத்தைத் தரும். அவ் விருப்பம் யாவரும் இவர்க்கு நண்பர் என்று கூறத்தக்க அளவிற்கு சிறப்பைத் தரும்.

எனது அபிப்பிராயம்:

எங்களுக்கு ஒரு ஆசை இருக்கு . எல்லாரும் எங்களை நண்பனாய் பழகவேணும் , எங்களை மதிக்கவேணும் எண்டு. ஆனால் ஆசை மட்டும் இருந்தால் காணுமே ? முதல்லை நாங்கள் எங்கடை வீட்டிலை எல்லாரையும் நேசிக்க வேணும். அப்பிடிச் செய்தால் வெளிஆக்களை நேசிக்கவேணும் எண்ட விருப்பம் வரும். அப்பத்தான் எல்லாரும் எங்களை விரும்பி நட்பாக இருப்பினம். அதால வீட்டில நீங்கள் நேசிக்கிறதை வைச்சுத்தான் வெளிஆக்களும் உங்களை விரும்பி நட்பாக பழகுவினம்.

From love fond yearning springs for union sweet of minds; And that the bond of rare excelling friendship binds.

L’affection (envers l’épouse et las enfants) engendre le désir (d’aimer le prochain) et procure la gloire incommensurable de l’amitié. 

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75

இவ் உலகில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு அவர் அன்பு உடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்பர்.

எனது அபிப்பிராயம்:

ஒருத்தர் தன்ரை வாழ்கையிலை செய்யவேண்டிய ஒரே விசையம் , சொந்த விருப்பு வெறுப்பிலாத மானிடநேயம் ( அன்பு கொள்ளல் ) . இதை அவர் செய்யாட்டில் அவர் இருந்தும் ஒரு பிரையோசனமும் இல்லை , இடத்தை பிடிச்சுக் கொண்டிருக்கிறதுதான் மிச்சம் . எல்லாரிலையும் அன்புவைச்ச ஆள் எண்டால் எனக்கு உடனை ஞாபகம் வாறது ஒராள்தான் , அன்னை தெரேசா .

Sweetness on earth and rarest bliss above,These are the fruits of tranquil life of love.

La gloire que l’on acquiert au ciel est, dit-on, l’effet de l’affection que l’on a témoignée dans la vie familiale.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. 76

உண்மை அறியாதவர் சிலர் அன்பு அறத்திற்கே துணையானது என்பர். அறத்திற்கு மாறானவற்றைப் போக்குவதற்கும் அந்த அன்பே துணையாகும்.

எனது அபிப்பிராயம்:

ஒருத்தர் தான தறுமம் செய்ய மட்டும் அன்பு வந்து ஊக்கியாய் இருக்காது . மக்களை நேசிச்சு எங்கடை இனத்துக்காகப் போராட வெளிக்கிட்டு பெரிய வீரசாதனைகளைப் படைச்ச எல்லாப் போராளிக்குப் பின்னாலையும் இந்த அன்பு தான் ஊக்கியாய் இருக்கு. ஆனால் , உலக வரலாற்றில கறுத்த பக்கங்களை உருவாக்கின பல பேர்அரசர்கள் , சக்ரவர்த்திகள் அன்பினால் வந்த வீரச்செயல்களையா செய்தார்கள் எண்ட கேள்வியும் வந்து துலைக்குது.

The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain.

Les ignorants soutiennent que l’affection est la compagne seulement de la vertu; elle aide aussi à éviter le péché.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். 77

எலும்பு இல்லாத உடல் கொண்ட புழுக்கள் முதலியவற்றை வெயில் வருத்துவது காய்வது போல அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருந்துவார் .

எனது அபிப்பிராயம்:

ஆர் எந்தப்பெரிய கொம்பனாய் இருந்தாலும் , அவனுக்கு நியாயம் எண்டு ஒரு விசயம் தெரிஞ்சும் , அதைச் செய்யாமல் விட்டால் எண்டைக்காவது ஒரு நாள் அவன்ரை மனச்சாட்சி அவனை அரிச்சே கொண்டுபோடும் . உதாரணத்துக்கு , வெடிவால் முளைச்ச வயசில பெடிச்சி ஒண்டுக்கு கடலை போட்டு , அவளோடை இந்த ஊருலகமெல்லாம் சுத்தி ஒரு வாரிசையும் குடுத்துப்போட்டு , நல்ல கொழுத்த சீதனத்தோட பசையுள்ள ஒரு பார்ட்டியைக் கலியாணத்தை கட்டினவர் வாழ்க்கைல நூறு வீதம் சந்தோசமாய் இருப்பர் எண்டு நினைக்கிறியளே? அதுதான் இல்லை!!!!! அவற்ரை மனச்சாட்சி அவரை கொல்லும் கண்டியளோ .

As sun's fierce ray dries up the boneless things, So loveless beings virtue's power to nothing brings.

De même que le soleil consume les invertébrés, la vertu consume ceux qui n’ont pas d’affection.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. 78

மனதில் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்வது என்பது வலிய பாறை நிலத்தில் ஈரம் வற்றி உலர்ந்த மரம் தளிர்த்தாற் போன்றதாகும்.

எனது அபிப்பிராயம்:

கலியாணம் கட்டினால் ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் அன்பாயும் , நம்பிக்கையோடையும் வாழ்கையித் தொடங்கவேணும். குடும்பத்தில அன்பு இல்லாட்டி அது ஒரு வறண்ட ஒண்டுக்கும் உதவாத பாலைவனம் போல கிடக்கும். அதில ஏதாவது புல்லு பூண்டு முளைக்குமோ முளைக்காது . அப்பிடித்தான் குடும்பத்திலையும் அன்பில்லாட்டில் நடக்கும்.

The loveless soul, the very joys of life may know, When flowers, in barren soil, on sapless trees, shall blow.

La vie familiale, quand il n’y a pas d’affection dans le cœur, ressemble aux arbres désséchés du désert qui bourgeonnent.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79

உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு வெளியிலுள்ள மற்ற உறுப்புகளால் எந்தப்பயனும் உண்டாகாது.

எனது அபிப்பிராயம்:

"அன்பிலாப் பெண்டிர் இட்ட உணவு" எண்டு கொடிது வரிசையிலை எங்கடை தமிழ் பாட்டி ஔவையார் பாடியிருக்கிறா. ஒரு விசையத்தை அன்போட செய்யேக்கைதான் அது அழகாய் இருக்கும். அன்பில்லாமல் நீங்கள் எந்த செயலையும் செய்துபாருங்கோ, அசிங்கமாய் இருக்கும். இதிலை அதைத்தான் ஐயன் , அன்பை உடம்பின்ரை உறுப்புகளோடை கொண்டுபோய் இணைக்கிறார்.

Though every outward part complete, the body's fitly framed; What good, when soul within, of love devoid, lies halt and maimed?

De quelle utilité peuvent être les autres organes extérieurs à ceux qui n’ont pas d’affection dans le cœur.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. 80

அன்பின் வழி ஒழுகுவாருடைய உடம்புகளே உயிர் நிலைத்து வாழும் உடம்புகளாகும் ; அன்பில்லாதவர்க்குரிய உடம்புகள் எலும்பைத் தோலால் போர்த்து மூடி வைத்துள்ள வெற்றுடம்புகளேயாம்.

எனது அபிப்பிராயம்:

அன்பே சிவம் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கினம் . அன்பு இல்லாத ஆக்கள் இருந்தும் ஒண்டுதான், இல்லாட்டியும் ஒண்டுதான். இதையும் ஐயன் "தோல் மூடின எலும்புக்கூடு" எண்டு , அன்பிலாத ஆக்களை நக்கல் அடிக்கிறார் எண்டால் பாருங்கோவன்.

Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides within.

Le corps où s’épanouit est vivant, mais le corps sans affection est un squelette recouvert du derme.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம