Skip to main content

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140



ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். 131

ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .

எனது கருத்து:

ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும். இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது

Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.

Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை. 132

வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .

எனது கருத்து:

எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது. ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை. அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க வேண்டிவரும் எண்டு இந்தக்குறள் சொன்னாலும் இதையே உயிர்மூச்சாய் கொண்டு இருந்த எங்கடை போராட்டத்துக்கு என்ன நடந்தது

Searching, duly watching, learning, 'decorum' still we find;Man's only aid; toiling, guard thou this with watchful mind.

Examinez, cherchez à connaître, en contenant votre volonté, vous decouvritrez à la fin que la moralité est votre seule compagne (pour le ciel). Donc, gardez la, même au prix des souffrances.

ஒழுக்கம் உடைமை குடிமை ; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 133

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.

எனது கருத்து:

இந்தக் குறளாலாலை ஐயன் சாதிக்கு ஒரு புது இலக்கணம் தாறார். ஒருத்தர் குறைஞ்ச சாதிலை பிறந்தாலும் நல்ல ஒழுக்கமானவாராய் இருந்தால் உயர்சாதியாய் போற்றப்படுவாராம். ஆனால் உயர்சாதீலை பிறந்து ஒழுக்கம் இல்லாட்டி குறைஞ்ச சாதியாய் மதிப்பினமாம். ஆக சாதி எண்டுறது ஒருத்தற்ரை ஒழுக்கத்திலைதான் இருக்கிது .

Decorum's' true nobility on earth;'Indecorum's' issue is ignoble birth.

La moralité dénote l’homme de race; l’immoralité place l’homme dans la classe inférieure.

மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். 134

கற்ற வேதத்தை மறந்தால் மீண்டும் அதை ஓதிக் கற்றுக் கொள்ளலாம் . ஆனால் வேதம் ஓதுவானுடைய குடிப்பிறப்பு ஒழுக்கம் குன்றினால் கெடும் .

எனது கருத்து:

ஐயர் மந்திரத்தை மறந்தால் பேந்து படிக்கலாம். ஆனால் ஐயர் ஒழுக்கம் தவறினால் அவர் கேடுகெட்ட சாதி எண்டு ஐய்யன் சொன்னாலும் , இப்ப புலத்தில இருக்கிற ஐயர்மாரைப் பாத்தால் ஐயன் தன்ரை ஐடியாவை மாத்தியிருப்பார்.

Though he forget, the Brahman may regain his Vedic lore;Failing in 'decorum due,' birthright's gone for evermore.

Le brhame, s’il oublie les vêdas, peut les réétudier, mais s’il manque à la moralité, il perd sa caste.

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம்இலான்கண்உயர்வு. 135

பொறாமை உடையவனிடத்தில் செல்வம் நில்லாதது போல , ஒழுக்கம் கெட்டவனித்தில் உயர்வாகிய பெருமை நில்லாது.

எனது கருத்து:

எரிச்சல் பிடிச்ச ஆக்களின்ரை சீவியத்தையும் , ஒழுக்கங்கெட்ட ஆக்களின்ரை சீவியத்தையும் உயர்வான வாழ்கையா எடுக்கேலாது. ஆனால் அவைன்ர சீவியம்தான் இப்ப கொடிகட்டிப் பறக்கிது .

The envious soul in life no rich increase of blessing gains,So man of 'due decorum' void no dignity obtains.

Pas d’enrichissement pour l’envieux: de même pas d’élévation pour l’homme sans mœurs. 

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்; இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 136

ஒழுக்கம் தவறுவதால் குற்றம் உண்டாவதை அறிந்து , மனவலிமையுடைய சான்றோர் ஒழுக்கத்திலிருந்து ஒரு போதும் பிறழ மாட்டார்கள் .

எனது கருத்து:

ஒழுக்கம் இல்லாட்டி தங்களை கேடுகெட்ட சாதியெண்டு சனம் காறித்துப்பும் எண்டு மனசை கட்டி ஆண்டவைக்குத் தெரிஞ்சதாலதான் அவை எந்தக்கஸ்ரம் வந்தாலும் ஒழுக்கத்தை விடேலை. 

The strong of soul no jot abate of 'strict decorum's' laws,Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.

Ceux qui, sachant que dévier des bonnes mœurs crée le péché, ne s’écartent pas de la bonne conduite. sont ceux qui ont la force de la volonté.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. 137

நல்லொழுக்கத்தால் யாவரும் உயர்வடைவர் . ஒழுக்கம் தவறுவதால் தாம் அடையக்கூடாத பெரும் பழியையே அடைவர்.

எனது கருத்து:

ஒழுக்கமாய் இருக்கிறவையை சனம் எப்பவுமே மதிக்கும் , மரியாதை குடுக்கும். அதே ஆக்கள் தலைகீழாய் ஒழுக்கமில்லாமல் இருந்தால் சனம் ஏன் நாயே எண்டுங் கேளாதுகள் .

Tis source of dignity when 'true decorum' is preserved;Who break 'decorum's' rules endure e'en censures undeserved.

Par les bonnes mœurs, on obtient l’honneur; c’est l’ignominie qui attend ceux qui s’en écartent.

நன்றிக்கு வித்துஆகும் நல்லொழுக்கம் ; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். 138

நல்லொழுக்கம் ஒருவனுக்கு அறத்திற்குக் காரணமாகி நிற்கும் . தீய ஒழுக்கம் இம்மை மறுமை ஆகிய இரண்டிலும் துன்பத்தையே தரும் .

எனது கருத்து:

நல்ல ஒழுக்கமானவை எதைச் செய்தாலும் தொட்டதெல்லாம் துலங்கும் .ஒழுக்கமில்லாதவை நல்லதைச் செய்தாலும் கெட்டபேரைத்தான் அவைக்கு குடுக்கும் .

'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yield eternally.

Les bonnes mœurs sont les semences de la vertu, les mauvaises causent toujours la douleur. 

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 139

மறந்தும் தீமையான சொற்களை தம் வாயினால் கூறுதலாகிய செயல்கள் நல்லொழுக்கம் உடையவர்க்கு இயலாதனவாகும் .

எனது கருத்து:

நல்ல ஒழுகத்தை தங்கடை வாழ்க்கையில கொண்டிருக்கிறவை மறந்தும் தங்கடை வாயாலை கெட்ட சொல்லுகளை சொல்லமாட்டினம் எண்டு ஐயன் சொன்னாலும் , இந்தக்காலத்தில ஆக்களை காணுறதே குதிரைக்கொம்பாய்க் கிடக்கு.

It cannot be that they who 'strict decorum's' law fulfil,E'en in forgetful mood, should utter words of ill.

Même quand ils s’oublient, il est impossible aux gens de bonnes mœurs de proférer des paroles blessantes.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவுஇலா தார். 140

உலகிலுள்ள உயர்ந்தவர்களோடு ஒத்து ஒழுகுதலை அறியாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரேயாவர் .

எனது கருத்து:

ஒழுக்கம் இல்லாதவை என்னதான் படிச்சு கிழிச்சிருந்தாலும் ஐஞ்சுசதத்துக்குப் பிரையோசனமில்லாத மோடையங்கள்.

Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well.

Ceux qui ne savant pas conformer leur conduite au monde, sont des ignorants, bien qu’ils aient beaucoup appris.










Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம