Skip to main content

வேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 -26


உணவு முடிந்த பிறகு ரோகிணியும் கந்துலனும் தனியே விலகிச் சென்று, அந்தப் புதிய மனிதனைப் பற்றி அந்தரங்கமாகச் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். தாங்கள் யார் என்பதை இன்னும் அவனிடம்வெளியிடவில்லை. அவனும் அவர்களை அந்த விஷயத்தில் வற்புறுத்தாமல்விட்டுவிட்டான்.

ஆனால் மற்றொரு விஷயத்தில் அவன் பிடிவாதமாக இருந்தான். இரவில் அவர்கள் தனிவழி செல்வது அவனுக்குப் பிடிக்கவில்லையாம். அதை அவன் அனுமதிக்க மாட்டானாம்! அங்கேயே தங்கிவிட்டுப் பொழுது புலர்ந்தவுடன் போகலாம் என்றான். அப்படி இல்லாமல் உடனே கிளம்ப வேண்டுமென்றால் தன் துணை அவர்களுக்கு மிகவும் அவசியமென்று கட்டாயப்படுத்தினான். அமைச்சரின் ஆணைப்படி அவன் தன் கடமையை நிறவேற்றாவிட்டால் அதனால் அவன் தலையே போய்விடுமாம்.

“என்ன சொல்கிறீர்கள் இளவரசி? நம்மைத் துரத்துகிறவர்களிடமிருந்து தப்பினாலும் நம்மைக் காப்பாற்றுகிறவர்களிடமிருந்து தப்பமுடியாது போல்இருக்கிறதே! பகலில் போவதென்றால் இவன் தொல்லை இருக்காது. ஆனால்பகைவர்கள் அதற்குள் நம்மைப் பிடித்து விடுவார்கள்.”

“நாம் இப்போதே போக வேண்டும்; ஆனால் இவனை
அழைத்துக்கொண்டும் போகக்கூடாது” என்றாள் ரோகிணி. “நம்மைச்சேர்ந்தவனாக இருந்தாலும் எனக்கென்னவோ இவனைப் பார்த்தால்நல்லவனாகத் தோன்றவில்லை-அடிக்கடி என்னை உற்றுப்பார்த்து அசட்டுச்சிரிப்புச் சிரிக்கிறான். என் குரலிலிருந்து என்னைப் பெண்ணென்று தெரிந்து கொண்டால் பிறகு எப்படி நடந்து கொள்வானோ தெரியாது. இளவரசி என்று தெரிந்தாலும் அவனுக்குச் சிறிது அச்சம் இருக்கும். அது தெரியாதபோது அவனால் எனக்குத் துன்பம் வராதென்பது என்ன நிச்சயம்?”

கந்துலன் யோசனை செய்தான்.

“வேண்டாம் கந்துலா! நாமே விரும்பாதபோது நமக்கு வலிய வந்து உதவி செய்பவர்களை நாம் எளிதில் நம்பி விடக்கூடாது” என்றாள் ரோகிணி.

‘இவனை உறங்கும்போதே தீர்த்துக் கட்டியிந்தால் இவ்வளவு தொல்லை நமக்கு இல்லை! இப்போது இவனை என்னதான் செய்வது?

ரோகிணியின் மூளை துரிதமாக வேலை செய்தது. கந்துலனின் காதருகில்சென்று தன் யோசனையைத் தெரிவித்தாள். கந்துலனின் முகம் அதைக்கேட்டதும் மலர்ந்தது. ரோகிணியை அழைத்துக் கொண்டு திண்ணையோரத்தில் உட்கார்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த வீரனிடம்வந்தான்.

“நண்பா! தம்பிக்கு இந்த நேரத்தில் புறப்படப் பயமாக இருக்கிறதாம். ஒரு தூக்கம் போட்டுவிட்டு விடிவெள்ளி கிளம்பும் நேரத்தில் புறப்படலாமென்கிறான். நீ சற்று மறந்து விடாமல் எங்களை அந்த வேளையில்எழுப்பிவிடு.”

“இதுதான் நல்ல யோசனை!” என்று மற்றொரு கொட்டாவி விட்டான்வீரன். “நானும் உங்களோடு இப்படிச் சிறிது தலையைச் சாய்க்கிறேன். ஒருவேளை நானே அயர்ந்து தூங்கிவிட்டாலும் என்னை எழுப்பி ஒருவார்த்தை சொல்லிக் கொண்டு போய்ச் சேருங்கள்.”

அடுத்தாற்போல் “வாழ்க மகிந்தர்! வாழ்க ரோகணம்” என்று
கூறிக்கொண்டே, அவன் தன் கட்டையைக் கீழே சாய்த்து விட்டான்.மற்றவர்களும் திண்ணையோரத்தில் தங்களை முடக்கிக் கொண்டார்கள்.

ஒரு நாழிகை சென்றது; இரண்டாவது நாழிகையும் ஊர்ந்தது. கந்துலன்சந்தடி செய்யாமல் எழுந்து, அந்த வீரனின் வயிற்றைப் பார்த்துத் தன்உடைவாளைப் பாய்ச்சுவதற்காக மெல்ல அதை உறையிலிருந்து உருவப்போனான். ரோகிணியின் கரம் அதைத் தடுத்தி நிறுத்தி, ‘தூங்குகிற புலியை எழுப்பித் தொலைக்காதே’ என்பது போல் அவனுக்கு எச்சரிக்கை செய்தது.

பிறகு இருவரும் மெல்லத் திண்ணையிலிருந்து நழுவிக் காட்டுக்குள்புகுந்தார்கள். கூப்பிடுதூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது அந்த வீரன்அதே இடத்தில் கிடந்தான்.

“நல்ல சமயத்தில் உன்னைத் தடுத்தேன். நீ வாளை உருவிய
சத்தத்தைக் கேட்டு அவன் விழித்துக் கொண்டிருந்தால் உன் கதி என்ன ஆகியிருக்குமோ? சிறந்த வீரன் என்பது அவன் தோற்றததைப் பார்த்தாலே தெரியவில்லையா!” என்றாள் ரோகிணி.

“வீரனாம் வீரன்! தூங்குமூஞ்சி! சோற்றுக்குடுக்கை!” என்று கூறிக்கலகலவென்று நகைத்தான் கந்துலன்.

“சரி, நீ வாயை மூடிக்கொண்டு பேசாமல் வா” என்று அவனை
அடக்கினாள் ரோகிணி.

அதிகமாகப் பேசுவதற்கும் பேச்சைக் கேட்பதற்கும் அவளுக்கு
அப்போது பயமாக இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் மரங்களும்குன்றுகளும் பேய் பிசாசுகளாகவும் பூதங்களாகவும் நின்று கொண்டிருந்தன. வளர்பிறை நிலவு இருள் சூழ்ந்த இடங்களைத் திட்டுத் திட்டாக எடுத்துக்காட்டி அவள் அச்சத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆந்தைகள் ஒருபுறம் அலறிக்கொண்டே சல்லாபம் புரிந்தன. கோட்டான்கள் மறுபுறம் கூவிக்கொண்டே கொஞ்சிக் குலாவின. சின்னஞ் சிறு வனவிலங்குகளின் கும்மாளத்துக்கும் குதூகலத்துக்கும் வேறெந்த நேரமும்கிடைக்கவில்லை போலும். புதர்களுக்கிடையில் நெருப்புத் துண்டங்களைப்போல் தெரிந்த அவைகளின் விழிகளைக் கண்டு ரோகிணி வேர்த்து விதிர்விதிர்த்தாள்.

தைரியம் சொல்லிக் கொண்டே அவளை அழைத்துக் கொண்டு
நடந்தான் கந்துலன். தன் தந்தையை சந்திக்க வேண்டுமென்ற ஆசைமட்டிலும் அவள் மனத்தில் இல்லாதிருந்தால் அவளுடைய உடலை மட்டுமே கந்துலன் மகிந்தரிடம் தூக்கிக் கொண்டு சென்றிருப்பான்; அத்தனை பயம்ரோகிணிக்கு. அவள் துணிவுள்ள பெண்தான்; துடுக்குத்தனமும் தைரியமும் அவள்உடன் பிறந்தவைதான். ஆனால் அவையெல்லாம் அரண்மனைக்குள்அவளுக்கு உதவி செய்தன. மனிதர்களிடம் அவள் துணிவுடன் பழகத்தெரிந்தவள். இயற்கையுடன் ரோகிணி ஒன்றிப் பழகியதில்லை. இரவு நேரத்துக்கானகத்தின் அச்சம் நிறைந்த அதிசயங்கள் அவளுக்குப் புதுமையானவை; புதிரானவை.

ஒருபுறம் வானத்தை முட்டிக்கொண்டு சரிவாக நீண்டுபடுத்துக் கிடந்தது ஒரு மலை. அதன் அடிவாரத்துக்குச் சென்றவுடன், “இளவரசி ! இனி நீங்கள்உடை மாற்றிக் கொண்டு இளவரசியாகவே என்னுடன் வரலாம். நம்முடைய வீரர்கள் நடமாடும் இடம் வந்துவிட்டதால், வேற்றுடையில் இருந்தால்தான்ஆபத்து” என்றான் கந்துலன்.

இளைஞனாக இருந்த ரோகிணி சிறு பாறைக்குப் பின்னால் மறைந்து மறுவிநாடியில் புத்தம் புது மலராய் மனங்கவரும் மங்கையாய் வெளியில்வந்தாள். மலையடிவாரத்திலிருந்த பிளவின் வழியாக அவர்கள் விரைந்து சென்றனர். அப்படியும், மலையின் அடிவயிறான குகை அவர்கள் கண்களில்படுவதற்கு ஒரு நாழிகை ஆயிற்று.

“அதோ பாருங்கள். அங்கே?”

கந்துலன் சுட்டிக் காட்டிய திசையில் பாறைகளுக்கும் செடிப்
புதர்களுக்கும் மத்தியில் சிறிய பிளவொன்று தென்பட்டது. தீவர்த்தியின்வெளிச்சமோ, விளக்கு வெளிச்சமோ ஏதோ ஒன்று அதற்குள்ளிருந்த இருளைமெல்ல ஒதுக்கிக் கொண்டிருந்தது. பத்துப் பதினைந்து வீரர்கள் அதற்குக் கீழே பாறைகளின் மேல் உட்கார்ந்திருந்தனர்.

குகை சற்று உயரத்தில் இருந்ததால் சிறு பாறைகளை அதற்குப்
படிகளைப்போல் அடுக்கியிருந்தார்கள். படிகளின் ஓரத்தில் காணப்பட்ட மரஏணி கந்துலனின் கண்களுக்கு அந்த நேரத்தில் புலப்படவில்லை.

“வாழ்க மகிந்தர்! வாழ்க ரோகணம்!” என்று தொலைவில் நின்று கொண்டே குரல் கொடுத்தான் கந்துலன். வீரர்கள் உருவிய வாட்களுடன் விரைந்தோடி வந்து கந்துலனையும் ரோகிணியையும் வளைத்துக் கொண்டு நின்றார்கள். கந்துலனை இனம் கண்டு கொண்ட ஒருவன், அந்த நேரத்தில் அப்படிக் குரல் கொடுத்ததற்காக அவனைக் கடிந்து கொண்டான். ரோகிணியை உற்றுப் பார்த்த பிறகு வீரர்கள்அனைவருமே மூச்சுவிடக்கூட மறந்துவிட்டார்கள். இளவரசி என்பதால்அவர்களுக்கேற்பட்ட பணிவும் மதிப்பும் ஒரு புறம் இருக்க, அவளுடைய கண்களில் கலந்தொளித்த காந்த சக்தி அவர்களை அப்படியே நிலை குலையவைத்தது.

“அரசரிடம் செல்ல வேண்டும்” என்று மிடுக்குடன் கூறினாள் ரோகிணி.

“சித்தம், இளவரசி!” வழி காட்டுவோரும் புதர்களை விலக்குவோரும், பக்கத்திலும் பின்புறமுமாக நின்று அழைத்துச் செல்வோருமாகக் குகைக்கு முன்னால் காவல் புரிந்த அனைவருமே அவளைச் சூழ்ந்து கொண்டு விட்டனர். ஒருவன் மட்டிலும் மன்னரிடம் செய்தியைத் தெரிவிப்பதற்காக முன்னால் விரைவாக ஓடினான். இந்தக் குழப்பம் நிறைந்த காட்சியை தொலைதூரத்தில் மிகவும்ஆபத்தான நிலையிலிருந்து கொண்டு, திரும்பிப் பார்த்தது மற்றொரு உருவம்.நாற்சந்திச் சாவடியில் அவர்களைச் சந்தித்த வீரன் அவன். மலைச் சரிவோடு சரிவாக ஒன்றி அவன் குகையின் பின்புற வாயிலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய நெஞ்சு பாறையில் உராய்ந்தது; கைப்பிடி நழுவியது;கால்கள் தடுமாறின. பற்றிக்கொண்ட செடி கொடிகள் கையோடு வந்தன.என்றாலும் அவன் தன் முயற்சியை விடவில்லை. மலை குலைந்தாலும் மனம்குலையாதவனைப்போல் சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டிருந்தான்.நூலிழை அளவு சறுக்கினாலும் மரணந்தான். எண்ணிப் பார்க்க எலும்புத்துண்டு கிடைக்காது. மறுபடியும் அவன் கீழே திரும்பிப் பார்த்தான்.

குகைக்குள்ளே உறங்கிக் கொண்டிருந்த மன்னருக்கு இதற்குள் செய்தி எட்டிவிட்டது போலும். தந்தையென்ற உணர்ச்சி அவரைப் பற்றிக் கொள்ளவே, ஓடோடி வந்து அவர் தம்மகளைக் கட்டிக்கொண்டார். பேசுவதற்கு நா எழவில்லை. விம்மினார்; தேம்பினார்; குலுங்கினார்; பதறினார்.

“அப்பா! அப்பா!” என்று ரோகிணியின் உருக்கம் நிறைந்த குரலால்வானை முட்டிய அந்த மலையே நடு நடுங்கி நெகிழ்ந்து கொடுத்தது.

கன்றைப் பிரிந்த பசு கதறுவதுண்டு. பசுவைப் பிரிந்த கன்று
பரிதவிப்பதுண்டு, தந்தையைப் பிரிந்த மகள் இப்படியும் தவித்துப் புலம்புவது உண்டா?

இதற்குள் குகையின் பின்புறத்தை அடைந்துவிட்ட வீரன் அந்தக்குரலின் தாக்குதல் தாங்காமல் தன் கண்களின் ஓரத்தில் கசிந்த இரு சொட்டு நீர் மணிகளைத் தன் புறங்கையால் துடைத்து விட்டுக் கொண்டான்.

தந்தையும் மகளும் மட்டுமே குகைக்குள் நுழைந்தனர். பெரிய மண்சட்டி ஒன்று அகல் விளக்காக மாறி அங்கு ஒளி அளித்தது. குவியல்குவியலாக ஆயுதங்கள், சமையலறைப் பொருள்கள், துணிமணிகள் முதலியவை அங்கே தாறுமாறாகக் கிடந்தன. நல்ல நாட்களில் சாதாரணப் போர் வீரன்படுக்கத் தயங்கும் எளிய படுக்கை ஒன்றில் மகிந்தர் போய் உட்கார்ந்தருந்தார்.

குகையைச் சுற்றிப் பார்த்த ரோகிணி, அதே கண்களால் தன்
தந்தையாரின் முகத்தையும் உற்றுப் பார்த்தாள். இருளில் அதை முன்பு சரியாகப் பார்க்க முடியவில்லை. முகமா அது? முடிதாங்கி ரோகணத்தை ஆட்சி செய்த மன்னர்தாமா அவர்? ரோகிணியின் தந்தையா அப்படி நிறம்மாறி, உருமாறி குகைவாழ் எலும்புக் கூடாய் காட்சி தருகிறார்?-ரோகிணியின்தலை சுழன்றது. “அப்பா! இனிமேல் என்னால் உங்களை விட்டுப் பிரியவே முடியாது அப்பா! நான் இங்கேயே உங்களுடன் தங்கிவிடப் போகிறேன். என்னை இனி எங்குமே போகச் சொல்லாதீர்கள் அப்பா!”

தந்தையின் மடியில் படுத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்ரோகிணி. எப்படி அவளைத் தேற்றுவதென்று தெரியாமல், அன்போடு அவள்தலையை வருடிக் கொண்டிருந்தார் மகிந்தர். சொட்டுச் சொட்டாய் அவரது கண்ணீர் ரோகிணி மீது விழுந்து சிதறியது.

“ரோகிணி! பகைவர்களாக இருந்தாலும் பண்பு உள்ளவர்களாயிற்றே சோழர்கள்? உனக்கு அங்கு இருப்பதில் குறைவொன்றும் இருக்காதே,

அம்மா!”

“பேசாதீர்கள், அப்பா! இந்த நிலையில் நீங்கள் இருப்பது
தெரிந்திருந்தால் இதற்குள் பட்டினிகிடந்தே செத்துப் போயிருப்பேன்.”

“நீ இந்த இடத்தில் ஒருநாள் கூடத் தங்க முடியாது மகளே! பெண்கள்இருப்பதற்கு ஏற்ற இடமில்லை இது. திரும்பிப் போகத்தான் வேண்டும்.”

“அப்பா!” என்று சோகத்துடன் கத்தினாள் ரோகிணி. “திரும்பிப்
போவதற்கு ஒரே இடம்தான் இருக்கிறது. அந்த லோகத்துக்கு நீங்களே என்னை உங்கள் கையால் அனுப்பி விடுங்கள். வேறு எங்குமே நான்போகமாட்டேன் போகவே மாட்டேன்!”

முட்டி மோதிக்கொண்ட ரோகிணி தன் உணர்ச்சிப் பெருக்கிலிருந்து மீள்வதற்குச் சில விநாடிகள் சென்றன. மகிந்தர் தமது மகிஷியைப் பற்றியும், மைந்தன் காசிபனைப் பற்றியும் அவளிடம் விசாரித்தார். அதுவரையில்காசிபனை மறந்திருந்த ரோகிணிக்கு அவர் கேள்வி தூக்கி வாரிப் போட்டது.

“காசிபனைப் பற்றி என்னிடம் கேட்கிறீர்களே! அவனைப் பற்றி
நானல்லவா உங்களிடம் கேட்க வேண்டுமென்றிருந்தேன், எங்கே அவன்?”

“என்னது?”

“அன்றைக்கே அமைச்சர் கீர்த்தி அவனை அழைத்துக் கொண்டு வந்துவிட்டாரே! அவனை அவர் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கவில்லையா?”

இந்தச் சமயத்தில் குகையின் பின்புறத்தில் இலேசாக ஏதோ சத்தம்கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்த ரோகிணிக்கு இருளில் ஒன்றும்தெரியவில்லை. தன் தந்தையின் முகத்தைப் பரபரப்புடன் நோக்கினாள்.

காசிபனின் இருப்பிடம் அவருக்கே தெரியாதா?

நீண்ட நேரம் பேசாதிருந்த மகிந்தர், “கீர்த்தி எதையும் முன்
யோசனையுடன்தான் செய்திருப்பார். காசிபன் எங்கு இருந்தாலும் பத்திரமாக இருப்பான். அவனைப் பற்றி நீ கவலைப்படாதே, ரோகிணி!” என்றார்.

“அவன் இருப்பிடத்தை அவர் உங்களிடம் கூடவா சொல்லக் கூடாது?”

அதே கேள்வி அவருடைய மனத்திலும் எழாமல் இல்லை. மெல்லச்சிரித்து அதை மறைந்துவிட்டு, “காரணம் இல்லாமல் அவர் செய்திருக்க மாட்டார். மேலும் இந்தக் காலத்தில் நாங்கள் ஒருவரையொருவர் சந்திப்பதே கஷ்டமாக இருக்கிறது. ஓலைத் தொடர்புகூட வைத்துக் கொள்ள முடிவதில்லை” என்றார். “இந்தக் கவலையை உன் மனத்தைவிட்டே அகற்றிவிடு ரோகிணி! எனக்கு இந்த நாட்டின் முடி கிடைக்காவிட்டாலும் என்மகனுக்கு அதைச் சூட்டிப் பார்த்துவிட்டுத்தான் அவர் உயிர் துறப்பார்.”

“வேற்று நாட்டு மணிமுடியை அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டால், நாடு நாளைக்கே நம்முடையதாகி விடும்” என்றாள் ரோகிணி.

“உங்களுடைய முடி இப்போது என்னிடம் தான் இருக்கிறது. சக்கரவர்த்தி அதை என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.”

அலட்சியமாகச் சிரித்தார் மகிந்தர், “நீ சிறு பெண். உனக்கு இந்த விவகாரமெல்லாம் தெரியாது. நண்பர்களின் துரோகத்தைக்கூட நம்பலாம்; பகைவர்களின் தாராளத்தை நம்பவே கூடாது. பெண்களிடம் அவர்கள்காட்டும் பெருந்தன்மையை வைத்துக்கொண்டு, நீ மற்ற விஷயங்களிலும்அவர்களை நல்லவர்களென்று நினைக்கிறாய். அது தவறு, ரோகிணி!”

மணிமுடியைப் பற்றி பேச்சு வந்தது...

“அப்பா! நகரத்தின் புத்த விஹாரம் முழுவதும் அவர்கள் தேடிப்
பார்த்து விட்டார்களாம். கிடைக்கவில்லையாம். அங்கிருந்த மணிமுடிவேறெங்கு போயிருக்கும்?”

“அங்கும் தேடிப்பார்த்துவிட்டார்களா? இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்துதான் முன்பே அதை வேறிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டோம்

தேடட்டும், தேடட்டும், நன்றாகத் தேடிப் பார்க்கட்டும்!” துன்பத்தைக்கூட, மறந்து வாய்விட்டுச் சிரித்தார் மன்னர் மகிந்தர்.

“அது எங்கே அப்பா இருக்கிறது?”

“உனக்கு ஏன் ரோகிணி இந்தப் பொறுப்பெல்லாம்? ஆண்களாகிய எங்களுக்கு அதை விட்டுவிட்டு, நிம்மதியாக இரு!”

“அரசரையே மந்திரி நம்பாத நாடு இது! இந்த நாட்டில் மன்னர் தமது மகளை நம்பாததில் என்ன வியப்பு? நீங்கள் என்னிடம் இனி எதையுமே சொல்லவேண்டாம், அப்பா!” என்று பிணங்கினாள் ரோகிணி.

ரோகிணியின் முதல் வாக்கியம் சுருக்கென்று பாய்ந்து ஊடுருவியது மன்னரின் மனத்தை. ஏற்கெனவே காசிபன் மறைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்றிருந்தவரை ரோகிணி தன் சுடுசொல்லால் மேலும் நோகச்செய்துவிட்டாள். அதுவரையில் மன்னராக இருந்தவர் இதைக் கேட்டவுடன்மனிதராக மாறினார்; தந்தையாகி விட்டார்.

கோழையாக இருந்தாலும் மகிந்தர் ராஜதந்திரத்தில் அப்படியொன்றும்சளைத்தவரல்லர். ஆனால் ராஜதந்திரமும் சில வேளைகளில்தனக்குரியவரிடமே தந்திரம் செய்து தப்பி விடுகிறதே!

மகிந்தர் சுற்றுமுற்றும் உற்று நோக்கிவிட்டு, மிகவும் ரகசியமாக, “இந்த மலையின் மறு பக்கத்திலுள்ள முதலைச் சுனை உனக்குத் தெரியுமா, ரோகிணி?” என்று தொடங்கி, அதன் இருப்பிடத்தை அவளிடம்விளக்கமாகவே சொன்னார்.

குகையின் பின்புறம் மறைந்துகொண்டிருந்த வீரனுக்கு அவன் இருந்த இடத்திலேயே இருந்தால், இந்த ரகசியம் அவ்வளவு எளிதாகக் கிடைக்குமென்று தோன்றவில்லை. காதில் விழாததூரத்தில் இருந்து கொண்டல்லவா அவர்கள் பேசினார்கள்? தன் செவிகளைத்தீட்டிக் கொண்டு மெல்ல மெல்ல மகிந்தரின் முதுகுப் புறத்திற்கு நகர்ந்து

வந்தான் அவன். ஒன்றையும் விடாமல் கேட்டான். திரும்பிப் போக முயன்றான்.

இன்னும் ஒரு கணம், மின் வெட்டும் நேரம். அவன் ரோகிணியின்கண்களில் படாமல் இருந்திருக்கக் கூடாதா?

நிழலுருவத்தைக் கண்டு திடுக்கிட்ட ரோகிணி, அதைத் தன் தந்தையிடம்காட்டிக் கொள்ளாமல், “இருங்களப்ப, இதோ வந்துவிடுகிறேன்!” என்று சொல்லிக் கிளம்பினாள். விரைந்து சென்ற அவளிடமிருந்து அவனால்

தப்பமுடியவில்லை. குகையின் திருப்பத்தில் அவர்கள் இருந்ததால் மகிந்தரும்திரும்பிப் பார்த்துவிட்டுச் சும்மா இருந்தார்.

நாற்சந்திச் சாவடியில் ரோகிணியைச் சந்தித்த அதே வீரன் அங்கு நின்றுகொண்டிருந்தான். “அப்பா! ஒற்றனப்பா! ஒற்றன்! ஓடி வாருங்கள்!” என்று தன் பலங்கொண்ட மட்டும் கூவினாள் ரோகிணி.

மறுகணத்தில் அவள் எதிர்பாராத ஒரு பேரதிசயம் அங்கே நடந்தது. அந்த ஒற்றன் தன் தாடியை விலக்கி அவளிடம் தன் முகத்தைக் காட்டிவிட்டு,மீண்டும் அதைப் பொருத்திக்கொண்டான். கொடும்பாளூர் இளவரசன் அவன்! பொல்லாத வீரன். தென்னவன் இளங்கோவேள் அவன்!

“ஆ!” என்று அலறிக்கொண்டு, ரோகிணி தரையில் மயங்கிவிழுவதற்குள்பத்துப் பன்னிரண்டு வீரர்கள் இளங்கோவை உருவிய வாட்களுடன்சூழ்ந்துகொண்டனர். மலைக் குகையின் பின்புறப் பாதை எளிதில் தப்பிச்செல்லக்கூடிய பாதையாக இல்லை. வீரர்களிடம் கூட அவன் வாள் வீசித் தன்சாகசத்தைக் காட்டியிருக்க முடியும். ஒருவேளை தப்பிச்செல்ல மார்க்கம்கிடைத்திருந்தாலும் கிடைத்திருக்கும்.

ரோகிணி மயங்கி விழுந்ததைக் கண்ணுற்ற இளங்கோ செயலற்ற சடப்பொருளானான். கரங்களைப் பற்றினர் சிலர்; கால்களைப் பற்றினர் சிலர்; கட்டிப் பிடித்தனர் சிலர்; பற்றி இழுத்தனர் சிலர். விளக்குச் சட்டியை அவன் முகத்துக்கெதிரே தூக்கிப் பிடித்த மன்னர்அ தை அருகில் இருந்தவனிடம் கொடுத்து விட்டுத் தம் ஆத்திரம்தீரும்வரையில் அவன் முகத்தில் அறைந்தார்.

அவருக்குத் தமது மகள்மீது ஆத்திரம். ரகசியத்தைக் கேட்டுத்
தொலைத்தாள் அல்லவா! அந்த ஒற்றன் மீது ஆத்திரம். அதைத் தெரிந்து கொண்டானல்லவா? மகள் மீதிருந்த ஆத்திரத்தையும் சேர்த்து வைத்து அவன் முகத்தில் காட்டினார்.

மயங்கிக்கிடந்த ரோகிணி அறையும் சத்தத்தைக் கேட்டுச் சுயஉணர்வு பெற்றாள். தன் தந்தையின் மூர்க்கத்தனத்தைத் தடுக்கவேண்டுமென்று அவளுடைய நரம்புகள் அனைத்துமே துடித்தன. ‘ஐயோ! அவரை ஒன்றும்செய்யாதீர்கள். என்னுடைய ஒரு துளி ரத்தத்துக்காக அவர் தவித்த தவிப்பு எனக்குத்தான் தெரியும். அவரை விட்டுவிடுங்கள்!’ என்று அலறத்தோன்றியது.

மகிந்தரின் முகம் பழுக்கக் காய்ச்சிய இரும்பைப்போல்சி வந்திருந்ததைக் கண்டவுடன் அவளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

ஒற்றனுக்கு உறுதுணையாக இருந்ததாக அத்தனை வீரர்களும் அவளுக்கு எதிரே திரும்பிவிடுவார்கள்.

ஒற்றனின் பொய் மீசையும் தாடியும் மன்னரின் கையோடு வந்துவிட்டன. அவனுடைய வேஷம் கலைந்தது. பல குரல்கள் ஒன்றாக எழுந்தன.

“கொடும்பாளூர் இளவரசன்!”

மகிந்தரின் மனத்திலே நெருப்புப் பற்றிக் கொண்டது. “நீதானா அவன்?”

என்று கேட்டுவிட்டு, மகளிடம் திரும்பி, “ரோகிணி! இவனை நீ
அரண்மனையில் பார்த்திருக்கிறாயா? இவனை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“இவரை...இல்லை.... இவனை.... எனக்குத் தெரியாதப்பா!”

ரோகிணியின் கண்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய புன்னகையின்மின்கீற்று ஒன்று இளங்கோவின் இதழ்க் கோணத்தில் எட்டிப் பார்த்தது.

“இவன் தெரிந்துகொண்ட ரகசியம் இவன் உயிரோடு போய்த்
தொலையட்டும்!” என்றார் மன்னர் மகிந்தர். “இவனை நன்றாகக் கட்டி இப்போதே மலை உச்சியிலிருந்து உருட்டிவிடுங்கள்.”

மன்னர் விதித்த மரணதண்டனையைக் கேட்டு ரோகிணி மீண்டும்மயங்கினாள்.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம