இளங்கோவுக்கு இப்போது மரணதண்டனை. வீரன் கோழையிடம் அகப்பட்டுக் கொண்டான். மறைந்து வாழும் மன்னர் மகிந்தரின் ஆணை அவன் உயிரை ஊசலாடச் செய்தது. மயங்கி விழுந்த ரோகிணி சில விநாடிகளில் சுய உணர்வு பெற்று, இளங்கோவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். இளங்கோ அவளைப் பார்க்காமல் குகைக்கு வெளியே நிலவில் முழுகியிருந்த மலைச்சாரலை ஊடுருவிக் கொண்டு நின்றான். மன்னரின் காவலர்கள்
அவனைக் கயிற்றால் இறுக்கிப் பிணைப்பதில் சுறுசுறுப்பாக முனைந்து நின்றனர். காவலர்களின் தலைவனான விஜயபாகு அவன் கரங்களை உடலோடு சேர்த்துவைத்துக் கட்டினான். மலை மீதிலிருந்து உருட்டிவிட்ட பிறகு, கீழே விழும்போது கரத்தால் எதையாவது எட்டிப் பிடித்துப் பற்றிக்கொண்டு அவன் உயிர் பிழைத்துவிடக் கூடாதல்லவா!
ஒரு முறையேனும் தன் பக்கம் முகத்தைத் திருப்பித் தன் கண்களைச் சந்திக்கமாட்டானா என்று ஏங்கினாள் ரோகிணி. விநாடிக்கு விநாடி அந்த ஏக்கம் அதிகரித்துத் துடிப்பாக மாறியது. வாய் திறந்து அவள் பேசாவிட்டாலும், அவள் கண்கள் பேசின.
‘கொடும்பாளூர் இளவரசே! இருந்திருந்தும் நான்தானா உங்கள்
உயிருக்கு எமனாக வந்து வாய்க்க வேண்டும்? நீங்கள் தாம் அந்த ஒற்றரென எனக்குத் தெரியாமல் போய்விட்டதே? தெரிந்திருந்தால் ஒருக்காலும் இவ்வளவு தூரம் நடந்திருக்காது இளங்கோ! உங்களுடைய மரண தண்டனை நிறைவேறுவதற்குள் என்னுடைய நெஞ்சம் வெடித்துச் சிதறிவிடும் போலிருக்கிறது. என்னைச் சற்று திரும்பிப் பார்க்க மாட்டீர்களா? நான் வேண்டுமென்றே உங்களைக் காட்டிக் கொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்களா?’
ரோகிணியின் கண்கள் பேசிய பேச்சைக் கவனிக்கும் நிலையில் இல்லை இளங்கோ. இனியும் தப்பிச் செல்வதற்கு ஏதாவது மார்க்கம் இருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன். ஒரு வழியும் தோன்றவில்லை. நின்ற
நிலையிலிருந்து அணுவளவு முன் பின் அசைந்தாலும், அவனைக் குத்திக் கிழிப்பதற்குக் கொடுவாள்கள் கூர்முனையைக் காட்டிக் கொண்டு நின்றன.
மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பது ஒன்றுதான் கடைசி வழி. உயிரை ஒரு பொருட்டாக அவன் என்றுமே மதித்ததில்லை. ஆனால் அந்த உயிருக்குள் இப்போது ஒரு மாபெரும் ரகசியம் மறைந்துகொண்டிருக்கிறதே! மணிமுடியின் இருப்பிடத்தை மாமன்னரிடம் சொல்லிவிட்டுச் சாக முடியாதா? அதற்குப் பிறகு ஒரு முறையல்ல; ஓராயிரம் முறை அவன்சா வதற்குச் சித்தமாயிருந்தான்.
“விஜயபாகு! இவனை இழுத்துச் செல்” என்று காவலர் தலைவனிடம் கட்டளை இட்டார் மகிந்தர். “வீரர்கள் எல்லோருமே இவன் பின்னால் சென்று வாருங்கள், மிகவும் பொல்லாதவன்; தப்பி ஓடிவிடுவான்.”
“ரோகணத்து அரசர் அவர்களே! தங்களிடம் கடைசியாக ஒரு
முக்கியமான செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்” என்றான் இளங்கோ.
“என்ன?”
“அமைச்சர் கீர்த்தியின் ரகசிய ஓலைகள் எங்கள் சக்கரவர்த்திகளுக்குக் கிடைத்திருக்கின்றன. அவருடைய திட்டங்களில் தங்களுக்குப் பங்கு இருக்குமோ என சக்கரவர்த்திகள் சந்தேகப்படுகிறார்கள். சோழ
சாம்ராஜ்யத்தின் மணிமுடியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, சக்கரவர்த்திகளின் விருப்பத்துக்கு இணங்கினால் தாங்கள் இனிமேல் இந்தக் காட்டில் மறைந்து வாழ வேண்டுமென்பதில்லை.”
கீர்த்தியின் ரகசிய ஓலைகளைப் பற்றிய செய்திகளைக் கேட்டவுடன் மகிந்தரின் முகத்தில் அச்சம் படர்ந்தது. ஒரு கணம் யோசனை செய்தார்.பிறகு தமது பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீ இப்போது தூதுவனில்லை; உளவு பார்க்க வந்தவன். உன் கடைசி விருப்பம் ஏதாவது இருந்தால் சொல்; எனக்கு யோசனைகள் சொல்லித் தர வேண்டாம்.”
“கடைசி விருப்பமா?” சிரித்துக்கொண்டே ரோகிணியைத் திரும்பிப் பார்த்தான் இளங்கோ. அந்தப் பார்வை ரோகிணியின் இதயத்தைப் பிளந்தெடுத்து முறுக்கிப்பிழிந்தது. ‘என்னைப் பார்க்க வேண்டுமென்பது தான் இவருடைய கடைசி விருப்பமா? இதுவரையில் என்னை அலட்சியம் செய்தவர்
இப்போது எதற்காக என்பக்கம் திரும்பிச் சிரிக்கிறார்?’ என்று நினைத்தாள்அவள்.
“ஆமாம், கடைசி விருப்பமும் ஒன்று இருக்கிறது” என்றான் இளங்கோ.“வெற்றியை எட்டிப்பிடிக்கும் தறுவாயில் நான் இடறி விழுந்து இறந்து விட்டேன் என்ற செய்தியை எங்கள் சக்கரவர்த்திக்குத் தெரியப்படுத்தவேண்டும். ‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்று ஆசி கூறி அனுப்பிய என் தந்தையாருக்கு அவர் எனக்கு ஏற்பட்ட முடிவைத் தெரிவித்து விடுவார்.”
மன்னர் மகிந்தரிடம் அவன் இந்த விருப்பத்தை வெளியிடவில்லை;யாரிடம் வெளியிடுகிறான் என்று ரோகிணி புரிந்து கொண்டுவிட்டாள். ‘அவன்மரணத்துக்குக் காரணமாக இருக்கும் தன்னிடமே இந்த வேண்டுகோள் விடுக்கிறானா?’
மகிந்தரின் முகத்தில் பரிகாசம் தாண்டவமாடியது. . . “உனக்கு நான்தண்டனையளித்த செய்தி உன் சக்கரவர்த்திக்கு எட்டவேண்டுமென்று பார்க்கிறாயா? ஒற்றா! நீ மிகவும் தந்திரசாலி தான். ஆனால் உன்னுடைய இந்த விருப்பம் ஒருக்காலும் நிறைவேறப் போவதில்லை.” படைத்தலைவன் விஜயபாகுவை நோக்கித் தலையசைத்தார் மன்னர் மகிந்தர்.
குகையிலிருந்து இளங்கோவை இறக்கிவிட்டு அவனை நடத்திச் சென்றார்கள் காவலர்கள். கொடும்பாளூர் இளவரசன் என்ற பெயரே அவர்களுக்கு இதுவரையில் சிம்மசொப்பனமாக இருந்ததால் அவனை ஒழித்துக்கட்டுவதில் எல்லோருக்குமே இப்போது பேரானந்தம். காவலர்களில் ஒருவன்கூடக் குகையில் பின் தங்கவில்லை.
மகிந்தர் தமது படுக்கையில் அமர்ந்திருந்தார். வைத்த கண் வாங்காமல் இளங்கோ சென்ற திசையைப் பார்த்துக் கொண்டு குகையின் விளிம்பில் ரோகிணி நின்றாள். குகைக்கு வெளியே ஒரு பாறையில் கந்துலன் மட்டிலும் தனியாக அவர்களுக்குக் காவலாக உட்கார்ந்திருந்தான்.
“ஏனப்பா, இந்த ஒற்றனுக்குத் தண்டனையளித்த செய்தி அவனைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிந்தால் என்ன” என்று தன் தந்தையிடம் கேட்டாள் ரோகிணி.
“தெரிந்தால் என்னவா! சாதாரண ஒற்றனா இவன்? அந்தச்
சக்கரவர்த்தியின் வலதுகரமே இவன்தானாம்; இவனை நாம் தண்டித்திருப்பது தெரிந்தால் அவர்கள் நம்மைச் சும்மா விடுவார்களா? நாளைக்கே நம்மைப் பழிக்குப்பழி வாங்கிவிட மாட்டார்களா? பிறகு உன் தாயாரின் கதி என்ன ஆகுமோ? தெரியாது. நம்மைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே அவர்களிடம்
அகப்பட்டு என்ன பாடுபடுவார்களோ; தெரியாது.”
“அப்படியானால் மரண தண்டனை அடைந்தவனின் கடைசி ஆசையைக்கூட நம்மால் நிறைவேற்ற முடியாதென்று சொல்லுங்கள்.”
“ரோகிணி!” என்று அதட்டிவிட்டு, “விளையாட்டுப் பெண்ணைப்போல் நீ பேசுகிறாயே! அவனுடைய கடைசி ஆசைதான் நம் கடைசி முடிவு. பிறகு நாம் நிர்மூலமாகி அழிந்துவிடுவோம்” என்று கூறினார் மகிந்தர்.
தொலை தூரத்தில் தெரிந்த அந்தச் சிறிய கூட்டம் ரோகிணியின் பார்வையிலிருந்து மறையத் தொடங்கியது. இளங்கோவும் இந்த உலகத்திலிருந்தே மறைந்துவிடப் போகிறானா? ஏதாவது அதிசயங்கள் நடந்து அவன் உயிர் பிழைக்கக் கூடாதா என்று ஏங்கினாள் ரோகிணி. அவளுடைய இரு கண்களும் குளங்களாக மாறின. கண்ணீர் பெருக்கிப் பயனில்லை. அதிசயங்கள் தாமாக நடப்பதாகவும் தோன்றவில்லை. ஒவ்வொரு கணத்திலும் அவன் மரணத்தை நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். தன் தந்தைக்குத் தெரியாமல் கண்ணீரை மெல்லத் துடைத்துவிட்டுக் கொண்டாள் ரோகிணி.
காவலர்களுக்கு மத்தியில் ஏறுநடை போட்டுச் சென்ற இளங்கோவின் மனம் அவனது உயிரிலும் மேலான ஒரு கடமையை நினைத்துக் கலங்கியது.உயிருக்காகக் கலங்கவில்லை அது மணிமுடியின் இருப்பிடத்தை மாமன்னரிடம் தெரிவிக்காமல் மாண்டு மடிய வேண்டியிருக்கிறதே!
‘மலைச்சாரலில் வீசிக் கொண்டிருக்கும் மென்காற்றே! நீ எனக்காக ஒரு பேருதவி செய்வாயா? மாமன்னர் இராஜேந்திரரிடம் தூது சென்று, என் மனத்திலிருக்கும் பொக்கிஷத்தை இறக்கி வைப்பாயா? இளங்கோ எந்த இடத்தில் இறந்து விழுந்தானோ, அந்த இடத்துக்கு வெகு அருகில்தான் ஒரு சுனைக்குள்ளே உள்ள சிறு குகையில் நாங்கள் தேடி வந்த தமிழ்நாட்டுச் செல்வம் இருக்கிறது என்பதைத் தெரிவிப்பாயா?’
பிறகு தன்னைத்தானே நினைத்துப் பரிகசித்துக் கொண்டான் இளங்கோ.‘ஹு ம்! ரோகணத்து இளவரசியே என்னைக் காட்டிக் கொடுத்து விட்டபோது,இந்த நாட்டில் வீசும் காற்றாகிய நீயா எனக்கு உதவி செய்யப்போகிறாய்! உன்னிடம் போய் நான் கெஞ்சிக் கேட்கிறேன் பார்!’
வேகமாக நடந்து கொண்டிருந்தவன் திடீரென்று நின்று “அகாலமரணமடைந்தவர்கள் ஆவிகளாக மாறுவதுண்டல்லவா?” என்று காவலர் தலைவனிடம் கேட்டான். இதைக் கேள்வியுற்றவுடன் சுற்றியிருந்த சிலர் வெலவெலத்துப் போனார்கள்.
“இப்படிச் சொல்லி எங்களைப் பயமுறுத்தப் பார்க்கிறாயா?” என்று திருப்பிக் கேட்டான் விஜயபாகு.
“அவனுக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது. உளறுகிறான்!” என்று கூட்டத்தில் யாரோ முணுமுணுத்தார்கள். ஏச்சும் பேச்சும் எக்காளச் சிரிப்பொலியும் அதைத் தொடர்ந்து வெளிவந்தன.
“உன்னுடைய பிசாசுஎங்களை ஒன்றும் செய்துவிடாது; எங்களுக்கு மந்திரமும் தெரியும்” என்றான் ஒருவன். ‘அப்படியானால் நான் இறந்தவுடன் ஆவியாக மாறி மணிமுடி இருக்கும் இடத்தை மாமன்னருக்கு அறிவித்து விடுவேன். கூடுமானால் அதை எடுத்துக்கொண்டே போய் அவரிடம் கொடுத்துவிடுவேன்’ என்று உறுதி செய்து கொண்டான் இளங்கோ. இந்த முடிவுக்கப் பிறகு அவனுடைய நடையில் தனியாக ஒரு மிடுக்கு இருந்தது.
குகைக்குக் கிழக்கே ஒரு மூலையில் கூர்மையாக நீட்டிக் கொண்டு நின்றது ஒரு பெரிய பாறை. அதன் மேலேறிச் சென்றார்கள் காவலர்கள், உற்சாகத்துடன் இளங்கோ அதன் விளிம்பை நோக்கி வந்தான். அவர்கள் தன்னைப் பிடித்துத் தள்ளும்வரையில் எதற்காகக் காத்திருக்க வேண்டும்? தானாகக் குதித்து விட்டால் என்ன?
ஒரு கணம் கண்களை மூடித் தன்னைப் பெற்றெடுத்த தங்கத் தமிழ்த் திருநாட்டுக்குத் தன் இறுதி வணக்கத்தைச் செலுத்தினான். வெற்றி அல்லது வீரமரணம் என்று காட்டிக்கொடுத்த தந்தையாரையும், கண்ணீருடன் வழி அனுப்பிய அன்னையாரையும், நினைத்துக்கொண்டான். நெற்றியிலே திலகமிட்ட பெண் திலகம் அருள்மொழி நங்கையை அப்போது அவனால் மறக்க முடியவில்லை.
“வாழ்க! சோழ வளநாடு! வாழ்க வேங்கையின் மைந்தன்!” என்று தன் உயிரனைத்தையும் சேர்த்து விண்ணதிர வாழ்த்தொலி எழுப்பினான் இளங்கோ.
அதன் எதிரொலியைக் கிழித்துக்கொண்டு, மற்றொரு குரல் ஒலி திடீரென்று குன்றின் உச்சியை நாடிப் பறந்துவந்தது ஆம். அதிசயம் ஒன்று அந்த வேளையில் நடக்கத்தான் செய்தது! ரோகிணி ஏங்கி எதிர்பார்த்த அதிசயந்தானா அது?
“விஜயபாகு! நிறுத்து! நிறுத்து!”
மன்னர் மகிந்தரின் குரலைக் கேட்டவுடன், இளங்கோவைத் தடுத்து நிறுத்திப் பரபரவென்று பின்னால் இழுத்தான் விஜயபாகு. காவலர்கள் அனைவரும் ஏமாற்றத்துடனும் ஒன்றும் புரியாமலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு திகைக்கலானார்கள். “தண்டனையை நிறைவேற்றாதே!” என்று திரும்பத் திரும்பக் குரல் கொடுத்தபடியே இருளில் தட்டுத் தடுமாறி ஓடி வந்து கொண்டிருந்தார் மன்னர். இளங்கோவைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு வரச் சொல்லிவிட்டு, விஜயபாகுவும் விரைந்து கீழே இறங்கி வந்தான்.
“அரசே என்ன இது!”
மகிந்தருக்குக் கைகால்கள் விளங்கவில்லை. அவர் பதறினார்; பதைபதைத்தார்; நடுநடுங்கினார். “மற்றொரு ஒற்றன்வந்திருக்கிறான்; விஜயபாகு! மற்றொரு ஒற்றன்!”
“அதனால் என்ன? எதற்காக நாம் இதை நிறுத்த வேண்டும்?”
“விஜயபாகு! உனக்கு ஒன்றுமே தெரியாது. பகைவர்களுக்குச் செய்தி எட்டினால் பிறகு பட்டமகிஷியைப் பழி வாங்கி விடுவார்கள்! ரோகணத்தையே சூறையாடி விடுவார்கள்.”
இதற்குப் பிறகும் மன்னர் வாளாவிருக்கவில்லை. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்துக் கொண்டே விநோதமான முறையில குரல் கொடுக்கலானார். அருகே விஜயபாகு நிற்கும்போதே தூரத்தில் நிற்பவர்களிடம் கூறுவதுபோல் சத்தமிட்டார். “தண்டனையை நிறைவேற்ற வேண்டாம்! அவனை அழைத்துக் கொண்டு வாருங்கள்! தண்டனையை நிறைவேற்ற வேண்டாம்.”
அச்சம் மிகுதியினால் இப்படி அவர் அவதியுறுகிறார் என்று நினைத்து விஜயபாகு, “அரசே! தங்களுடைய முதற்குரலைக் கேட்டவுடன் நாங்கள் கட்டளைக்குப் பணிந்து விட்டோம் அப்படியிருக்கும்போது...” என்று தயங்கியபடியே கூறினான்.
காரணத்துடன்தான் அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்பது அவனுக்கு மறு கணத்திலேயே விளங்கி விட்டது. மகிந்தர் விஜயபாகுவை அருகில் அழைத்து அவன் காதுகளில் மெல்லக் கூறினார்;
“புதிய ஒற்றன் இப்போதுதான் குகைக்குள்ளிருந்து எங்கோ தப்பிச் சென்றிருக்கிறான். கொடும்பாளூர் இளவரசனை நாம் கொல்லவில்லை என்பது அவனுக்குத் தெரிய வேண்டாமா? அவன் காதுகளில் விழவேண்டுமென்றுதான் உரத்துக் கூவுகிறேன்.”
இதைக்கேட்ட விஜயபாகும் அடித் தொண்டையால் கத்தி, தன்னுடைய வீரர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கலானான். “அவனைப் பத்திரமாகக்குகைக்குள் அழைத்துக் கொண்டு செல்லுங்கள், அவனுக்கு ஒரு துன்பமும் கொடுக்கவேண்டாம்!”
குகையில் வாயிலில் நின்றுகொண்டிருந்த ரோகிணி, இளங்கோவை வரவேற்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தவள் போல், அவன் வரவைக் கண்டவுடன் அவனை நோக்கி ஓட்டமும் நடையுமாகக் குதித்து வந்தாள். அவளுடைய விழிகள் இரண்டு அமாவாசை இரவின் விண்மீன்களெனப் பிரகாசித்தன.
மகிந்தர் விஜயபாகுவை அணுகி, “வீரர்கள் சிலரை அனுப்பி அந்த மற்றொரு ஒற்றனையும் தேடிப் பிடிக்கச் சொல்” என்றார். “அவன் கிடைத்துவிட்டால் இருவருக்குமாகச் சேர்த்து மரண தண்டனை விதித்து விடுவோம். அவன் கிடைக்காவிட்டால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.”
மற்றொரு ஒற்றனைப் பற்றிய பரபரப்பான செய்தி இளங்கோவின் காதுகளுக்கும் எட்டியது. யார் அந்த ஒற்றனென்று அவனுக்குத் தெரியவில்லை. ரோகிணிக்குத் தெரிந்திருக்கக் கூடுமென்று நினைத்தான் இளங்கோ. ஆனால் அவனும் அவளிடம் கேட்கவில்லை; அவளும் சொல்லவில்லை. ஒரு வேளை, வல்லவரையர் வந்தியத்தேவர் அங்கு வந்திருக்கக்கூடுமோ என்று ஐயமுற்றான்.
தொடரும்
Comments
Post a Comment