Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-30


மன்னர் மகிந்தர் தாமாகவே நகரத்துக்குத் திரும்பி விட்டார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி மூலைமுடுக்குகள் தோறும் காற்றெனப் பரவியது. தெருக்களில் அங்கங்கே பலர் கூடி நின்று தாங்களே அந்தக் காட்சியை நேரில் கண்டவர்கள்போல் பேசிக் கொண்டனர். போரினால் ஏற்பட்டிருந்த மனக்கசப்பும், அதையொட்டிய நகரத்தில் நிலவிய அச்சம் கலந்த அமைதியும், இச்செய்தி கிடத்தவுடன் எங்கோ சென்று மறைந்தன.

இராஜேந்திரரே நேரில் வருகை தந்து மன்னர் மகிந்தரைச் சகல மரியாதைகளுடன் வரவேற்றாராம். மாமன்னரும் மன்னரும் ஒருவரையொருவர் அன்போடு தழுவிக் கொண்டார்களாம். அவர்களுடைய சந்திப்பைக் கண்டவர்களுக்கு ‘பகை நாட்டரசர்களா இவர்கள்? என்ற வியப்பு ஏற்பட்டதாம். நெடு நாட்கள் பிரிந்திருந்த நெருங்கிய நண்பர்களென ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டார்களாம்! இன்னும் இவை போன்ற பற்பல நல்ல செய்திகள் நகருக்குள் உலவின. காற்றுவாக்கில் நகரத்துக்குள் பரபரப்பைப் பரப்பிய இந்தச் செய்திகளில் ஒரு பகுதி மட்டிலும் உண்மை. சக்கரவர்த்தி இராஜேந்திரைப் பற்றிய வரையில் அவர்கள் நடந்ததைத்தான் கூறினார்கள். ஆனால் மன்னர் மகிந்தர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது அவர்களில் யாருக்கும் தெரியாது.

“வாருங்கள், மகிந்தரே! உங்கள் அரண்மனை உங்களுக்காகவே காத்திருக்கிறது” என்று சொல்லித் தழுவியபடியே அவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் இராஜேந்திரர்.

மகிந்தர் மாமன்னரை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அவரது முகத்தில் பீதியும் நடையில் தயக்கமும் காணப்பட்டன! வரவேற்புக்குப் பதிலாக மகிந்தர் வணக்கம் செலுத்திப் புன்னகை செய்தாரென்றாலும், அந்த வணக்கம் வணக்கமாகவும் இல்லை. புன்னகை புன்னகையாகவுமில்லை.

கூப்பிய கரங்களுக்கிடையில் தென்பட்ட ஓலை நறுக்கை மகிந்தர் சட்டென்று தமது மடியில் செருகி மறைத்துக் கொண்டார். இராஜேந்திரரின் கண்கள் இதைக் கவனிக்கத் தவறவில்லை. என்றலும் அவரது தயக்கத்தை மாற்றுவதற்காக அவரோடு கலகலப்பாகப் பேசிக்கொண்டு வந்தார்.

தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அச்சமும் அவரை இப்படிக் கலக்கமுறச் செய்கின்றனவோ என்று தோன்றியது இராஜேந்திரருக்கு. அப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருந்தால் அதைப் போக்கிவிட வேண்டுமென்றபதற்காக அவருடன் சரளமாகவே பழக முற்பட்டார். ஆனால்,மகிந்தரால் இராஜேந்திரருடன் சரிசமமாகப் பழக முடியவில்லை. அவருக்கும் சக்கரவர்த்திக்கும் இடையில் ஏதோ ஒன்று குறுக்கே நின்று கொண்டிருந்தது.

அந்த ஓலை நறுக்குத்தான் அப்படிக் குறுக்கே நிற்கிறதா? அரண்மனைக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த வரவேற்பு ஏற்பாடுகள் மகிந்தரையே மலைக்க வைத்தன. பெண்மணிகள் வண்ணமலர் தூவி வாழ்த்துப் பாடினார்கள். இன்னிசைக்கலைஞர்கள் பலவகை வாத்தியங்களுடன் பண்ணிசைத்தார்கள். எங்கு திரும்பினாலும் தீவர்த்திகள் ஒளி சிந்தி இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன. அப்போது விளக்கு வைக்கும் நேரம்.

தோல்வியுற்றுப் போய் ஓடி ஒளிந்த சிற்றரசருக்கா இவ்வளவு சிறப்பான வரவேற்பு! விருந்தினராக வரும் சக்கரவர்த்தி ஒருவருக்கு அவருக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் கொடுக்கும் சிறப்பைப் போலல்லவா இது இருக்கிறது. மன்னர் மகிந்தர் இதனால் மனம் மகிழவில்லை! அவரது அச்சம் மனத்தின் ஆழத்துக்கே சென்றுவிட்டது.

தாம் வசித்து வந்த பெரிய அரண்மனையில் சக்கரவர்த்தி தங்கியிருக்கக்கூடும் என்று நினைத்த மகிந்தர், அது வெற்றிடமாக இருப்பதைக் கண்டவுடன் திகைத்துப் போனார். “அமைச்சரின் மாளிகைதான் என் இருப்பிடம்; நீங்கள் இங்கு தங்கிச் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்”என்றார் இராஜேந்திரர். “பட்டமகிஷி பிரிவுத் துயரத்தால் வருந்திக் கொண்டிருப்பார். அவரது துயரத்தை முதலில் அகற்றுங்கள். மீண்டும் உணவு கொள்ளும்போது நாம் சந்தித்து உரையாடலாம்.” இப்படிக் கூறி அவரைஅரண்மனைக்குள் அனுப்பி விட்டு விடைபெற்றுக் கொண்டார் மாமன்னர்.

அந்தப்புரத்திலிருந்து அரண்மனைக்கு வந்திருந்த மகிஷி தமது கணவரையும் புதல்வியையும் கண்டவுடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். அடுத்தாற்போல் அவரது கண்கள் புதல்வன் காசிபனைத் தேடிப்பார்த்து ஏமாந்தன. மகிந்தர் அவரைத் தேற்றுவதற்காக நடந்த நடப்புக்களைக் கூறலானார்.

சிறிது நேரம் சென்றது. தீராத குழப்பத்துடன் மன்னர் மகிந்தர் தமது இருக்கையில் சாய்ந்தார். அவர் எதை மறந்துவிட விரும்பினாரோ அதை நினைவூட்டி விட்டாள் ரோகிணி.

“ஏன் அப்பா...! நகரத்தின் எல்லைக்கு வரும் வரையில் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தீர்களே. பிறகு திடீரென்று என்ன நேர்ந்துவிட்டது? அந்த ஓலையில் எழுதியிருப்பதை எனக்குச் சொல்லமாட்டீர்களா, அப்பா?”

“ரோகிணி! வீணாக எனக்குக் கோபமூட்டாதே?” என்று அவள் மீது எரிந்து விழுந்தார் மகிந்தர். “குகையில் உன்னிடம் சொன்ன ரகசியம் என்ன ஆனது தெரியுமா?”

இப்படிக் கேட்டவர் நினைவாகத் தனது மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். கரத்தில் அந்த ஓலை நறுக்குத் தட்டுப்படவில்லை; திடுக்கிட்டு எழுந்தார். தரையில் சுற்றிப் பார்த்தார்; ஆடைகளை உதறிக் கொண்டு பதறினார். அந்தச் சிறு ஓலை எங்கோ மாயமாய் மறைந்து போய்விட்டது.

தந்தையாரும் மகளும் தீவர்த்தி வெளிச்சத்தில் அதை எங்கெல்லாமோ தேடினார்கள். துணையாகக் கந்துலனும் ஓடிவந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான். அரண்மனைக்கு வெளியிலும், நடந்து வந்த பாதையெங்கும் தேடிப்பா ர்த்துவிட்டார்கள். அந்த ஓலைக்குச் சிறகு முளைத்து விட்டது போலும்!

மாமன்னருடன் மகிந்தர் நடந்து வந்தபோது மாமன்னரின் கண்கள் வல்லவரையரின் கண்களை நோக்கியதையும், வல்லவரையரின் இடதுகரம் மெல்ல மகிந்தரின் இடுப்பருகில் சென்றதையும் யாருமே கவனிக்கவில்லை. தந்தையும் மகளும் அப்போது கோலாகலமான வரவேற்பின் ஆர்ப்பாட்டத்தில்
முழுகியிருந்தார்கள்.

மாமன்னர் இராஜேந்திரர் அந்த ஓலையை விளக்கின் அருகில் எடுத்துச் சென்று அப்போது படித்துக் கொண்டிருந்தார். படித்துவிட்டு வல்லவரையரிடம் நீட்டினார்! “மகிந்தர் ஏன் குழம்பித் தவிக்கிறார் என்பதற்கு விடை இதில் இருக்கிறது, மாமா!”

ஓலையின் வாசகம் இதுதான்.

“பகைவருடன் நட்புறவு கொள்ளவேண்டாம். அவர்களுடைய நிபந்தனைகளுக்கு நானும் தங்கள் குமாரன் காசிபனும் கட்டுப்படமாட்டோம். எங்களையும் இந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டாமென்று எச்சரிக்கிறேன். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள்.

இங்ஙனம்,
கீர்த்தி”

ஓலையை மாமன்னரிடம் திருப்பிக் கொடுத்த வல்லவரையர், “இன்னும் இளங்கோ திரும்பி வரவில்லையே!” என்று கவலையுடன் கூறினார்.

“மகிந்தரின் வரவைக் கூறிய தூதுவன், அவன் ஏற்கனவே திரும்பிவிட்டதாகக் கூறினானே! ஒரு வேளை அது பொய் மொழியாக இருக்குமோ?”

“எதையும் நம்புவதற்கில்லை. ஆட்கள் சிலரை அனுப்பி அவனைத் தேடிப் பார்க்கச் சொல்லட்டுமா? நேற்று நடுப் பகலில் புறப்பட்டவன் இன்னும் வரவில்லை என்றால்...”

“பொறுத்துக் கொள்ளுங்கள்; உணவு கொள்ளும் வேளையில் மகிந்தரிடம் பேசிப் பார்க்கிறேன்” என்று கூறினார் இராஜேந்திரர்.

மகிந்தர் தம்மால் முடிந்த மட்டும் ஓலையைத் தேடிப் பார்த்துவிட்டு, அது கிடைக்காதென்று தெரிந்தவுடன் “போனால் போகட்டும் மிகச் சிறியவிஷயம்” என்று ரோகிணியிடம் மழுப்பிவிட்டார். மகளை ஏமாற்றிய அவரால், தம்மையே ஏமாற்றிக் கொள்ள முடியவில்லை. அந்தச் செய்தியை மறந்துவிடாமல் செய்தி தந்த ஓலையை மறந்துவிடப் பார்த்தார்.

இந்தச் சமயத்தில் கந்துலன் அவரிடம் கொடும்பாளூர் இளவரசன் இன்னும் கப்பகல்லகத்துக்குத் திரும்பி வந்து சேரவில்லை என்பதைத் தெரிவித்தான்.

“அந்த மற்றொரு ஒற்றன் என்ன ஆனான்?” என்று கேட்டார் அவர்.

“அவனைப் பற்றியும் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாருமே இங்கு வரவில்லை என்று தோன்றுகிறது” என்றான் கந்துலன்.

ரோகிணியின் முகம் இதைக் கேட்டவுடன் வெளுத்தது. ‘இங்கே திரும்பிவராமல் இளங்கோ வேறெங்கு போனார்?’

“அப்பா! அந்த ஒற்றர்கள் நேரே முதலைச் சுனைக்குப் போயிருக்கலாமல்லவா? அவர்கள் மணிமுடியை எடுத்துக் கொண்டு வருவதற்காகப் போனாலும் போயிருப்பார்கள்?”

மகிந்தரின் முகத்தில் குழப்பம் மறைந்து தெம்பு பிறந்தது. பரிகாசமாகத் தம்முடைய மகளைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “அப்படிப் போயிருந்தால் அது நம்முடைய அதிர்ஷ்டந்தான்!” என்றார். “ஒருவனோ இரண்டு பேர்களோ போய்ச் சாதிக்கக்கூடிய காரியமில்லை அது. போனவர்கள் திரும்பிவரப்போவதில்லை. சாகவேண்டுமென்று அவர்கள் தலையில் எழுதியிருந்தால்,நம்மிடமிருந்து தப்பிவிட்டால் மட்டும் போதுமா? மணிமுடியை அவர்கள் தேடிப் போகவில்லை; மரணத்தைத் தேடிக் கொண்டுதான்
போயிருக்கிறார்கள்?!”

ரோகிணியின் வதனத்தில் இருள் கவிந்ததைக் கண்ணுறாமல் மகிந்தர்தொடர்ந்து கூறினார்:

“ரோகிணி! அந்த ஒற்றர்கள் நேரே சுனைக்குச்சென்றிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாமல் போய் விட்டது. தெரிந்திருந்தால் நாம் இங்குவந்திருக்க வேண்டியதில்லை. இதுவரையில் நடந்தது சரி. இனிமேல்தான் அதிக விழிப்போடிருக்க வேண்டும்; சுனையைப் பற்றி நாம் இவர்களிடம் மறந்துகூட வாய் திறக்கக்கூடாது. அடுத்தாற் போல், எவ்வளவு விரைவில்
நாம் இந்த இடத்தைவிட்டுக் கிளம்ப முடியுமோ அவ்வளவு விரைவில் கிளம்பவேண்டும்.”

“அம்மாவை விட்டுவிட்டா?” என்று கேட்டாள் ரோகிணி.

“இல்லை; அவளையும் அழைத்துக்கொண்டுதான்!”

“நம்மை இவர்கள் இனி எப்படி வெளியில் செல்ல அனுமதிப்பார்கள்?”

“அவர்களுடைய அனுமதியை எதிர்பார்த்தால் அது இந்தப் பிறவியில் கிடைக்காது. நாமாக முயற்சி செய்ய வேண்டியதுதான்.”

“தங்கள் சித்தப்படியே செய்யலாம், அப்பா! முதலில் ஒற்றர்கள் திரும்பி வருகிறார்களா இல்லையா என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு முறை அவசரப்பட்டு நாம் இங்கு வந்தது போதும். திரும்பவும் அதே தவறைச் செய்ய வேண்டாம்.”

“உன் யோசனையும் சரிதான்” என்று சொல்லிவிட்டு மௌனத்தில் ஆழ்ந்தார் மன்னர் மகிந்தர்.

ரோகிணியின் யோசனை சரியானதாக இருந்தாலும் அதை அவள் வேறு காரணத்துக்காகச் சொல்லி வைத்தாள். இளங்கோவின் நிலை என்ன ஆயிற்றென்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் உயிருடன் திரும்புவானா மாட்டானா என்ற முடிவு அவளுக்குத் தெரிந்தாக வேண்டும். முடிவு வேறுவிதமாக இருந்தால்கூட அதற்காக அவள் தன்னை வாழ்க்கை முழுவதும் வாட்டி வைத்துக் கொள்ளாமாட்டாள். அனுதாபம் மிகுதியால் அவளுக்குக்கண்ணீர்ப் பெருகலாம். அதைத் துடைத்துக்கொண்டால் துன்பம் பிறகு குறைந்து போகும்.

ஆம்; அவள் இளங்கோவை மரண தண்டனையிலிருந்து முதல் நாளிரவு காப்பாற்றினாள் என்றால், அதற்குக் காரணம் உயிருக்கு உயிரான நேசமென்று கூறிவிடமுடியாது. தன்னால் அவனுக்கு அந்தக் கதி வரக்கூடாதென்று மட்டிலுமே அவள் துடித்தாள். அவளிடம் அவன் கருணை காட்டினான்; அவளும் செய்நன்றி மறக்கவிரும்பவில்லை, அவ்வளவுதான்.

இரண்டுங் கெட்ட நிலையில் கிடந்து அடித்துக் கொள்ளத் தொடங்கியது ரோகிணியின் மனம். அவன் தன் முயற்சியில் வெற்றி பெறுவதும் அவளுக்குப்பிடிக்கவில்லை. உயிர் இழப்பதும் பிடிக்கவில்லை. வெற்றி பெற்றானென்றால் அது அவளுடைய நாட்டின் விருப்பத்திற்கு எதிராகச் செய்த செயலாகும்...விழுந்துவிட்டானென்றால் அவனைப்போல் மற்றொருவனைக் காண்பது அரிதினும் அரிது. எளிதில் மறந்துவிடக்கூடியவனாக அவனும் அவளிடம் நடந்து கொள்ளவில்லையே.

உணவு வேளையில் இராஜேந்திரரும் வல்லவரையரும் மகிந்தரின் அருகிலிருந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டே உணவு கொண்டனர். தாம்பூலம் தரித்துக்கொண்ட பின்னர் மாமன்னர் சுற்றிலும் நின்றுகொண்டிருந்த பணியாட்களை ஒருமுறை பார்த்தார். அவர்கள் அனைவரும் விலகிச் சென்றவுடன் மூவருக்கும் தனிமை கிடைத்தது.

“கொடும்பாளூர் இளவரசன் இன்னும் இங்கு வந்து சேரவில்லை...” என்று தொடங்கினார் வல்லவரையர்.

“அந்த இளைஞனை நான் முதலில் ஒற்றனென்று நினைத்துத் துன்புறுத்தியதென்னவோ உண்மைதான். பிறகே அவன் தங்கள் தூதுவனென்றுதெரிந்தது. மரண தண்டனை விதித்த பின்பு அதை மாற்றி அவனை மன்னித்துவிட்டேன்.”

நாடற்ற மன்னருக்குத் தண்டனை விதிக்கும் அதிகாரமா? என்று நினைத்த வல்லவரையர், “மரண தண்டனையா?” என்று பதற்றத்துடன் கேட்டார். இராஜேந்திரரின் விழிகள் மகிந்தரின் முகத்தில் பதிந்திருந்தன.

“மன்னித்து விட்டேன் என்று நான் கூறவில்லையா?”

“இது மெய்தானா?” என்ற மெதுவாகக் கேட்டார் மாமன்னர்.

“ரோகணத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். என்னால் அவனுக்கு ஒரு தீங்கும் நேரவில்லை. பொழுது விடிவதற்கு முன்பே என்னை விட்டுக்கிளம்பி வந்தான்.” மகிந்தரின் குரல் அச்சத்தால் நடுங்கியது.

“மாமா!” என்று வல்லவரையரின் பக்கம் திரும்பினார் சக்கரவர்த்தி. “உடனடியாக வீரர்கள் சிலரை அனுப்பி இளங்கோவைத் தேடிப் பார்க்கச்சொல்லுங்கள்.”

பின்னர் மகிந்தரைப் பார்த்து, “இரவில் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்; நாளைக்கு மற்றவற்றைப் பற்றிப் பேசலாம்” என்றார்.

இளங்கோவைத் தேடப் பத்துப் பன்னிரண்டு குதிரை வீரர்கள் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியே கிளம்பினார். மகிந்தர் எந்த வழியாக நகரத்துக்கு வந்தாரோ அதே பாதையில் அந்த வீரர்களுடைய குதிரைகளும் விரைந்து சென்றன.

தொடரும்









 
 
 
 
 
 
 

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...