Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம் -பாகம் 1-18


ந்தப்புரத்துப் பெண்களுக்காக அனுப்பப்பெற்ற உணவைப் பட்டமகிஷியும் பணிப்பெண்ணும் முதலில் உண்ண மறுத்துவிட்டார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தி உண்ணச் சொல்லிவிட்டுத் தானும் தாராளமாக அதில் பங்கெடுத்துக் கொண்டாள் அந்த ஒன்றரைக் கண் அழகி.

வந்தியத்தேவர் பட்டமகிஷியிடம் சென்று ஆறுதல் கூறி அச்சத்தை விலக்க முயன்றார். “எப்போதும்போல் தாங்கள் அந்தப்புரத்துக்குள் நடமாடலாம். தங்களுடைய ஏவலுக்கு ஆட்கள் வேண்டுமானால் தடையின்றிக் கேளுங்கள். அந்தப்புரத்தைச் சுற்றியிருந்த காவலை இப்போது அறவே அகற்றிவிட்டோம். தங்களுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

பட்டமகிஷி மறுமொழி ஒன்றும் கூறவில்லை. ‘காவலை அறவே அகற்றிவிட்டோம்’ என்ற வல்லவரையரின் வார்த்தைகளை மாறுவேடத்திலிருந்த பெண்மணி உற்றுக் கேட்டுக் கொண்டாள். அவளுடைய சிரத்தையை வல்லவரையரும் புரிந்துகொண்டார்.

உரத்த குரலில் வீரர்களுக்கு உத்தரவுகள் பிறந்தன. “அந்தப்புரத்தை என்னிடம் விட்டு அரண்மனையின் பிரதான வாயில்களுக்குச் செல்லுங்கள்” என்று காவலர்களுக்குக் கட்டளையிட்டு, ‘இளங்கோ! நீயும் அரண்மனைக்குள் போய்விடு!” என்று கண்களால் ஏதோ சமிக்ஞை செய்தார் வந்தியதேவர்.

“உறக்கம் என் கண்களைச் சுற்றுகிறது, பேசாமல் சிறிதுநேரம் அயர்ந்து படுக்க வேண்டும்; இங்கே கூட்டம் போடாதீர்கள்” என்றார்.

கூடத்திற்கு வெளியே தாழ்வாரத்தில் வல்லவரையருக்குப் படுக்கை சித்தமாகியது. இளங்கோ இன்னும் அவ்விடத்தை விட்டுப் போகாமல் நிற்கவே, போய்விடும்படி மீண்டும் அவனுக்குச் சைகை செய்தார்.

அவன் அவரிடம் நெருங்கி வந்து, “தாத்தா! அந்தப் பெண்ணிடம் ஏமாந்து விடாதீர்கள். பெரிய மாயக்காரி அவள்” என்றான்.

“எனக்கோ வயதாகிவிட்டது; பெண்களிடம் ஏமாறுகிற பருவம் எனக்கில்லை. இரண்டு பெண்களிடம் ஏமாந்து, அவர்களிடமிருந்து தப்புவதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். விழிப்போடு இருக்க வேண்டியவன் நீதான். வாலிபப் பருவம் வகை தெரியாத பருவம்; கவனமாக இருந்துகொள்.”

அவரிடமிருந்து நழுவி, அரண்மனைக்குச் செல்லும் திசையில் வேகமாக நடைபோட்டான் இளங்கோ. கிழவர் தம்முடைய தேகத்தின் இரும்புச் சதைகளைச் சற்றே தளர்த்திவிட்டுப் படுக்கையில் சாய்ந்தார். இளைஞன் நடப்பதையும் கிழவர் படுப்பதையும் இரண்டு விழிகள் கூடத்தின் சாளரத்தின் வழியே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தன.

நாழிகை சென்றது. நகரத்துக்கு வெளியே இரத்தப் போர்வை போத்திக் கொண்டு உறங்கிய போர்க்களத்தின் பக்கத்திலிருந்து நானாவித ஒலிகள் எழுந்தன. ஆந்தைகளின் அலறல்; கோட்டான்களின் கூவல்; குள்ளநரிகளின் ஊளை-இப்படிப் பலவித சத்தங்களின் பயங்கரக் கூட்டுக் களியாட்டம் அங்கே நடந்து கொண்டிருந்தது.

இந்த ஒலிகளுடன் வல்லவரையர் உறக்கத்தில் எழுப்பிய குறட்டை ஒலியும் சேர்ந்து கொண்டது. அந்த ஒலியையே தமக்குத் தாலாட்டாக வைத்துக் கொண்டு, அந்த வயது சென்ற குழந்தை ஆழ்ந்த நித்திரையை அரவணைத்துப் பார்த்தது போலும்!

கூடத்துக்குள் இருந்த பெண்களுக்கு ஏற்கனவே உறக்கம் வந்தபாடில்லை. அவர்களை நெருங்கி வந்த நித்திரா தேவியையும் விரட்டியடித்துக் கொண்டிருந்தார் வந்தியத்தேவர். கூடத்துக்குள் சிறிது நேரம் பெண்கள் கசமுசவென்று பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. பிறகு நின்று விட்டது.

மெல்ல அடிமேல் அடிவைத்து வெளியில் வந்தது ஒரு பெண்ணுருவம். கண்ணுக்கொடிய தூரம் வரை நாலா பக்கமும் திரும்பிப் பார்த்தது. தீவர்த்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளி சிந்திக்கொண்டிருந்தன. வெகுதூரத்தில் அரண்மனைக்கு அப்பால் காவலர்கள் குறுக்கும் நெடுக்கும்நடந்து கொண்டிருந்தார்கள்.

‘அந்தப்புரத்துக்குக் காவல் இல்லை என்பது மெய்தான்’ என்று எண்ணிக் கொண்டாள் அவள். ‘காவல் காப்பதாகப் பெயர் செய்துவிட்டு, குறட்டை விட்டுக்கொண்டு விழுந்து கிடக்கிறது இந்தக் கட்டை; குறட்டையொலி இல்லாவிட்டால் இதற்கு உயிர் இருப்பதாகவே சொல்ல முடியாது.’

வானவெளியெங்கும் நட்சத்திரப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. வானம் ஒரு புதுப் பொலிவுடன் விளங்கியது.

திரும்பவும் கூடத்துக்குள் நுழைந்து, தலையை முக்காடிட்டு மறைத்துக் கொண்டு இரண்டு கைகளாலும் எதையோ தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தது அந்த உருவம். சத்தம் செய்யாமல் கதவைச் சாத்தியது. வந்தியத்தேவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அடி மேல் அடி வைத்துதாழ்வாரத்தை ஒட்டியிருந்த முற்றத்தில் இறங்கி நடந்தது.

வந்தியத்தேவரின் விழிகள் திறந்தன. அவருடைய கடைவாயில் ஒரு புன்னகை நெளிந்து மறைந்தது. குறட்டை விட்டுக் கொண்டே எழுந்து சென்று கூடத்தின் கதவைத் தாழிட்டார். தூணின் மறைவில் நின்று தம் பார்வையை அந்தப் பாவையின் பின்னால் செல்லவிட்டார்.

அந்தப்புரத்தின் கூடத்தை அடுத்து விசாலமான முற்றமும், அதற்கு அப்பால் மேல்மாடமுள்ள மற்றொரு கூடமும் இருந்தன. எதிர்ப்புறத்துக் கூடத்துக்குச் செல்லாமல் அவள் முற்றத்தைக் கடந்து வடக்கு வாயிலை நோக்கி நடந்தாள். வல்லவரையரின் உருவமும் இருளோடு இருளாக அவளைப் பின்பற்றிச் செல்லத் தொடங்கியது.

வடக்கு வாயில் கதவுகள் இருபுறமும் தாழிட்டுப் பூட்டப் பட்டிருந்தன. வாயிற்படிகளின் ஓரங்களில் பக்கத்துக் கொன்றாக நின்று கொண்டிருந்த கல் யானைகளை ஒருகணம் உற்றுநோக்கினாள் அவள். இடதுபக்கத்து யானையின் அருகில் சென்று அதன்மேல் தான் சுமந்து வந்த சதுரமான பேழையை வைத்தாள். பிறகு யானையின் தந்தங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எடுக்கலானாள்.

யானை தன் துதிக்கையை மேலே வளைத்துத் தூக்கிக் கொண்டிருந்தது. தந்தங்களை எடுத்த பிறகு, தகடு போன்ற ஒரு கருங்கல் மூடியை யானையின் கழுத்துப்புறத்திலிருந்து மெல்ல அகற்றினாள். குடைவரைக் கோயிலைப் போன்று யானையின் வயிற்றுக்குள்ளே வெற்றியிடம் இருந்தது. முதுகின் மேலிருந்த பேழையை யானையின் அடி வயிற்றுக்குள் பத்திரமாக வைத்தாள். மீண்டும் தந்தங்கள் பொருத்தப்பட்டன.

திரும்பி வந்துவிடுவாள் என்று எதிர்பார்த்தார் வல்லவரையர். ஆனால், வடக்கு வாயில் கதவுகளின் அருகில் சென்று அவற்றைத் தடவிப் பார்த்தாள். இடதுபக்கத்துப் பெரிய கதவுக்குள் ஓர் ஆள் புகுந்து செல்லக்கூடிய சிறிய கதவு ஒன்றிலிருந்தது. அந்தக் கதவும் பூட்டியிருக்கவே, படிகளின் இறங்கி மதிலின் ஓரமாகவே நடக்கலானாள். இப்போது கல்யானை வல்லவரையருக்கு மறைவிடம் கொடுத்தது. மதிலின் ஓரமாக அவள் எங்கே போகிறாள் என்பதைக் கவனித்தார்.

கீழே கருங்கல்லும், மேலே செங்கல் சுதையாலும் ஆன புதிய மதில் சுவர் அது. கரடுமுரடாக இருந்த கருங்கல் பகுதியை தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டே நடந்தாள் அவள். சிறிது தூரம் சென்றவுடன் அடையாளம் கண்டு கொண்டவளைப் போல் சட்டென்று நின்றாள். நன்றாகச் சோதனை செய்து, நிச்சயம் செய்துகொண்டவளைப் போல் அங்கு மண்டியிட்டு உட்கார்ந்தாள்.

முழங்கால் உயரத்தில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த நீண்ட கருங்கல்லை அவளுடைய கரங்கள் அசைக்கத் தொடங்கின. வல்லவரையருக்குச் சிரிப்பு வந்தது. ‘பெண்ணுக்கு ஆத்திரம் வந்துவிட்டால் இப்படிக் கூடச் செய்வாளா? அவளுடைய வலிமையென்ன? - மதில் சுவரில் பதிந்திருக்கும் கல்லின் கனமென்ன? -சுண்டெலி, மலையைச் சுரண்டி அசைத்து விடவும் பார்க்கிறதே!’

அவள் ஆத்திரத்தோடு எதையும் செய்யவில்லை. அறிவின் துணைகொண்டுதான் மதிலோடு போராடினாள். அவளுடைய அறிவுக்குப் பணிந்து கொடுத்துக் கொண்டிருந்தது மதில். எந்தக் கல்லை அவள் பற்றிக் கொண்டு அசைத்தாளோ அது அசைந்து கொடுப்பதை வல்லவரையோ தம்முடைய கண்களால் கண்டார்.

சிறிது நேரம் அதனுடன் போராடிய பிறகு, மெல்ல மேலே அதை வெளியே இழுத்து, சத்தம் செய்யாதபடி அதைச் சரிவாகக் கீழே இறக்கினாள். நீண்ட சதுரமான முழுக்கல் இல்லை அது; கல்லைப்போல் தோற்றமளித்த ஒரு தகடுகல்லால் செய்யப்பட்டதோ அல்லது மரத்தால் செய்யப்பட்டுச் சாயம் பூசப்பெற்றதோ?

இனியும் பொறுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை என்று தோன்றியது அவருக்கு. இதற்குள் மேல்மாடக் கூடத்தில் ஏதோ ஓசை கேட்கவே, அந்தப்பக்கம் அவருடைய கவனம் திரும்பியது. ஒரு கணம் யோசனை செய்தார் வல்லவரையர். இவளைக் கண்காணிப்பதா? அல்லது மேல் மாடத்துக்குச்

சென்று பார்ப்பதா?

என்ன சத்தம் அது?

மேல் மாடத்துக்கு ஏறி வருவதற்குள் அங்கே எழுந்த ஒலி முற்றிலும் அடங்கிவிட்டது. எந்தத் திசையில் திரும்பித் தேடுவதென்று அவருக்கு விளங்கவில்லை. மாடத்துச் சாளரத்தின் வழியாக மதில்சுவரை எட்டிப்பார்த்தார். பெண்ணின் உடல் மட்டும் வெளியே தெரிந்தது! தலை மதிலுக்குள் போய்விட்டது.

சிறிது சிறிதாக அவளுடைய உடலும் மறையவே, வல்லவரையரின் கைகால் பதறத் தொடங்கின. பெரிய பெரிய போர்க்களங்களையும், அவற்றில் வீரசாகசம் புரிந்தவர்களின் பேராற்றல்களையும், நேரில் கண்டவர் வல்லவரையர். அவற்றையெல்லாம்விட இந்தப் பெண்மணியின் விசித்திரமான துணிவு வியப்பைத் தந்தது.

நொடிப்பொழுதில் அவர் அவளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஓங்கி ஒருமுறை கையைத் தட்டினால், ஒன்பது வீரர்கள் சிட்டெனப் பறந்துவந்து கூடியிருப்பார்கள். அவர் எழுப்பும் குரலுக்கே அவளை மயங்கி வீழ்த்திவிடும் சக்தி உண்டு.

இவற்றில் எதையும் வல்லவரையர் செய்யவில்லை. ‘இளங்கோவை மட்டுமாவது அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம்’ என்று ஒரே ஒரு கணம் நினைத்தார். அடுத்த கணத்தில் அந்த நினைவும் மறைந்தது. ‘அவனுடைய துடிப்பால் காரியம் கெட்டுப் போய்விட்டால்?’

இளங்கோவை அவர் அரண்மனைக்கு அனுப்பவில்லை. அரண்மனைக்குச் செல்வதாகப் போக்குக் காட்டிவிட்டு அருகிலேயே மறைந்திருந்து கண்காணிக்கச் சொல்லியிருந்தார். காவல் காக்க வேண்டியவன் காதல் கனவு கண்டு கொண்டிருக்கிறான் போலும்! பாவம் சிறுபிள்ளை!

நினைத்துக் கொண்டு நிற்க நேரமில்லை அவருக்கு. இதற்குள் ரோகணத்துப் பெண்ணெலி தான் தேடிவந்த வளைக்குள் நன்றாகப் புகுந்து கொண்டது. கீழே இறங்கிப் போய் மதிலோடு மதிலாக ஒட்டிக்கொண்டு நகர்ந்தார். பிளவுக்கு அருகில் சென்று, மெல்லக் கீழே குனிந்து உள்ளே நோக்கினார்.

முதலில் இருளில் ஒன்றுமே தெரியவில்லை. பிறகு அவள் உருவம்

குப்புறப் படுத்தபடியே ஊர்ந்து செல்வது மங்கலாகத் தெரிந்தது. தம்மை அவள் கவனித்து விடக்கூடாதென்பதற்காகச் சிறிது நேரம் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒதுங்கி நின்றார்.

வெளிப்புறத்துப் பாறைத் தகட்டை அவள் அசைக்கும் ஓசை கேட்டது. களைப்பின் மேலீட்டால் சில விநாடிகள் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் அசைத்தாள். சரசரவென்று அந்தத் தகடு வெளியில் சரியும் சத்தம் கேட்டது. இப்போதுகூட அவர் அவளைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை. இதைப்போல் இன்னும் எத்தனை ரகசியப் பாதைகளை அவள் கடந்து செல்லப் போகிறாள்? அந்தப் பாதைகள், அவள் போக விரும்பிய இடம், அதன் காரணம் அவருக்குத் தெரிந்தாக வேண்டும்.

இரண்டாவது முறையாக அந்த வழியே உற்றுப் பார்த்த வல்லவரையரின் விழிகள் சுழலத் தொடங்கின! சரிந்து விழுந்த மதில் சுவரின் தகடுகளைப்போல் அவர் திட்டங்கள் மனத்திற்குள் மளமளவென்று சரிந்தன. பெண்ணெலி பெரிய எலிதான் போலும்!

பிளவுக்கும் அப்பால் மின்னலைப்போல் இரண்டு கால்கள் தோன்றி மறைந்தன. ஆனால் வல்லவரையரின் கண்கள் அவற்றைக் கண்டு விட்டன. ‘இவளுடைய வரவை எதிர் பார்த்துக்கொண்டு யாரோ சுவருக்கு வெளியில் சித்தமாகக் காத்து நிற்கிறார்களே!’

அவளைப் பின்பற்றி அப்போதே அந்தப் பாறைக்குள் நுழைந்துவிடத் துடித்தார் வல்லவரையர். பனைமரத்தில் பாதி இருந்த அவரது உயரமும் அவருடைய உறுதிபெற்ற உடற்கட்டின் சுற்றளவும் அவரைச் சற்றே தயங்கவைத்தன.

நுழைந்து விடலாம்; ஆனால் வெளியில் நிற்கும் உருவத்தை எதிர்த்துத் தாக்குவதற்கோ, தற்காப்புடன் அவர்களைப் பின்பற்றுவதற்கோ ஏற்ற வழியில்லை அது. மேலும், இந்த நள்ளிரவில் ஓர் இளம் பெண்ணைப் பின்பற்றிச் சென்று பிடிப்பதென்றால் அது அவருடைய பெருமைக்குச் சோதனை தரும்விஷயம்தான். அவள் கூச்சலிடத் தயங்கமாட்டாள்; பழி வாங்குவதற்கு அஞ்சமாட்டாள். மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் சாமந்த நாயகர்,முதுமையின் எல்லை கண்ட பெரியவர், ஒரு சிறுமியின் முன்பு தலைகுனிந்து நிற்பதா?

வந்த வழியே திரும்பிச் சென்று, கீழ் வாயிலைத் திறந்து கொண்டு, சந்தடியில்லாமல் வெளிப்புறத்துக்கு வந்தார் வந்தியத்தேவர். அங்கே நிற்பது ஓர் ஆண் உருவம் என்று மட்டிலும் தெரிந்தது. அமாவாசை இருளில் வேறொன்றும் சரியாகத் தெரியவில்லை. வலது கரத்தால் உடைவாளை இறுகப் பற்றிக் கொண்டே, சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு நகர்ந்தார்.

மதிலைவிட்டு வெளியே வந்த அந்தப் பெண், திடுக்கிட்டு அதே இடத்தில் நின்றுவிட்டாள். வெளியே நின்ற ஆண்மகனை அவள் எதிர்பார்க்கவில்லை போலும்! அவளை நெருங்கிச் சென்று அவளுடன் நேருக்கு நேர் நின்று, தன் உடைவாளை மெல்ல உருவினான் அவன். அதைக் கண்டவுடன் வல்லவரையரின் நெஞ்சம் ஒரு கணம் நின்றுவிட்டுப் பிறகு துடித்தது.

முதலில் தன் உடைவாளால் அவள் முகத்தை மறைத்திருந்த மென்திரையை விலக்கினான் அவன். அடுத்தாற்போல் அவனுடைய வாளின் கூர்முனை அந்தப் பெண்ணின் கழுத்தை நோக்கிச் செல்வது போல் வல்லவரையருக்குத் தோன்றியது.

‘ஆ!’ என்று எழுந்தது அந்தப் பெண்மணியின் தீனக் குரல். அங்கே மூடியிருந்த கனத்த இருளைக் கிழித்துக் கொண்டு அது வல்லவரையரின் செவிகளை எட்டியது.

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...