Skip to main content

பார்த்திபன் கனவு - புதினம் -77 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 40 -கனவு நிறைவேறியது



நல்ல சுபயோக, சுப லக்கினத்தில் விக்கிரமன் சோழ நாட்டின் சுதந்திர அரசனாக முடிசூட்டப்பட்டான். அவ்விதமே சுப முகூர்த்தத்தில் விக்கிரமனுக்கும் குந்தவிக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகு விக்கிரமன் நரசிம்மப் பல்லவரிடம் சென்று அவருடைய ஆசியைக் கோரியபோது, சக்கரவர்த்தி, "குழந்தாய்! எக்காலத்திலும் பார்த்திப மகாராஜாவின் புதல்வன்' என்னும் பெருமைக்குப் பங்கமில்லாமல் நடந்துகொள்வாயாக, அதற்கு வேண்டிய மனோதிடத்தைப் பகவான் உனக்கு அருளட்டும்" என்று ஆசீர்வதித்தார். அவ்விதமே குந்தவி அருள்மொழித் தேவியை நமஸ்கரித்தபோது, "அம்மா! உனக்குச் சகல சௌபாக்கியங்களும் உண்டாகட்டும். 'நரசிம்ம சக்கரவர்த்தியின் திருமகள், பார்த்திப மகாராஜாவின் மருமகள்' என்னும் பெருமைக்கு உரியவளாக எப்போதும் நடந்துகொள்" என்று ஆசி கூறினாள்.

விக்கிரமனும், குந்தவியும் உறையூர் சிங்காதனத்தில் வீற்றிருந்த போது, சோழ வளநாடு எல்லாத் துறைகளிலும் செழித்தோங்கியது. மாதம் மும்மாரி பொழிந்து நிலங்கள் மூன்று போகம் விளைந்தன. கிராமந்தோறும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டன. சிற்பம், சித்திரம் முதலிய கலைகள் சிறந்தோங்கின. திருமகளும் கலைமகளும் காவேரி நதிக்கரையில் கைகோத்துக் குலாவினார்கள்.

ஆனாலும், பார்த்திப மகாராஜாவின் கனவு விக்கிரமனுடைய காலத்தில் பூரணமாக நிறைவேறவில்லை. சூரியனுக்குப் பக்கத்தில் மற்றக் கிரகங்களெல்லாம் ஒளி மங்கிவிடுவதுபோல் காஞ்சி நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தியின் மகிமையானது விக்கிரமனுடைய புகழ் ஓங்குவதற்குப் பெரிய தடையாயிருந்தது.

பார்த்திப மகாராஜாவின் வீரமரணமும், விக்கிரமனுடைய வீரச் செயல்களும் கூட மாமல்லரின் புகழ் மேலும் வளர்வதற்கே காரணமாயின.

நரசிம்மவர்மருக்குப் பின்னரும் வெகுகாலம் பல்லவர் பெருமை குன்றவில்லை. சோழநாடு ஒரு குறுகிய எல்லைக்குள் கட்டுப்பட்டுத்தான் கிடந்தது. ஆனால், விக்கிரமனும் அவனுடைய சந்ததியர்களும் பார்த்திப மகாராஜாவின் கனவை மட்டும் மறக்கவில்லை. வழிவழியாக அவரவர்களுடைய புதல்வர்களுக்குப் பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றிச் சொல்லி, உறையூர் சித்திர மண்டபத்தில் தீட்டியிருந்த பார்த்திப மன்னரின் கனவுச் சித்திரங்களைக் காண்பித்து வந்தார்கள்.

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சோழ நாட்டின் வீரசிம்மாசனம் ஏறிய இராஜராஜ சோழன், அவனுடைய புதல்வனான இராஜேந்திர சோழன் - இவர்களுடைய காலத்திலேதான் பல்லவர் பெருமை குன்றிச் சோழ நாடு மகோன்னதமடையத் தொடங்கியது. சோழநாட்டு வீரர்கள் வடக்கே கங்கை வரையிலும், தெற்கே இலங்கை வரையிலும், கிழக்கே கடல்களுக்கு அப்பாலுள்ள கடாரம் வரையிலும் சென்று வீரப்போர் புரிந்து புலிக்கொடியை வானளாவப் பறக்கவிட்டார்கள். புலிக்கொடி தாங்கிய கப்பல்களில் சோழநாட்டு வீரர்கள் கடல்களில் நெடுந்தூரம் பிரயாணம் செய்து சாவகம், புஷ்பகம் முதலிய தீவுகளைக் கைப்பற்றிச் சோழர்களின் ஆதிக்கத்துக்கு உட்படுத்தினார்கள். சோழவள நாடெங்கும் அற்புதமான கோயில்களும், கோபுரங்களும் சோழ மன்னர்களின் வீரப் புகழைபோல் வானளாவி எழுந்து, அக்காலத்திய சோழ சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்துக்கு அழியாத ஞாபகச் சின்னங்களாக இன்றைக்கும் விளங்குகின்றன. இவ்வாறு, பார்த்திப சோழன் கண்ட கனவு, அவன் வீர சொர்க்கம் அடைந்து முந்நூறு வருஷங்களுக்குப் பிறகு பரிபூரணமாக நிறைவேறியது.

கல்கியின் பார்த்திபன் கனவு முற்றிற்று

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...