Skip to main content

வேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 1 -22


ண்ணகி என்ற கற்புக்கரசியின் கணவனைக் கள்வனென்று கூறித் தண்டனை விதித்த காரணத்தால், உண்மை உணர்ந்தபின், “யானோ அரசன்?

யானே கள்வன்!” என்று அரற்றி, மறுகணமே மாண்டு மடிந்த நீதிமுறை வழுவாக நெடுஞ்செழியன் ஆண்ட மதுரைமாநகரத்தில் இராஜேந்திரரின் கட்டளைப்படி மாபெரும் புதுமாளிகை ஒன்று உருவாகத் தொடங்கியது. பாண்டிப் பகுதி மாதண்ட நாயகர் சேனாபதி கிருஷ்ணன் ராமன் தாமே முன்னின்று மாளிகை வேலைகளைக் கவனித்தார். இந்தச் செய்தியைத்தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மூன்று பாண்டியர்களும்

மக்கள் மனத்தில் வெறுப்பைக் கிளறிவிட முற்பட்டனர். ‘வட தேசத்துச் சோழமன்னர் தென்பாண்டி மக்களை அடிமைப் படுத்துவதற்காகப் புது மாளிகை எழுப்பி வருகிறார். பாண்டியர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிப்பதற்காக அவர் செய்யும் சூழ்ச்சியின் முதல்படி இது!”

தஞ்சைத் தலைநகரிலிருந்து அந்தப்பகுதியின் மாதண்ட நாயகர் ஈராயிரம் பல்லவரையரை மதுரைக்கு அழைத்திருந்தார் சேனாபதி கிருஷ்ணன்ராமன். இருவரும் கலந்து மக்களிடையே பரவி வரும் வெறுப்பு உணர்ச்சியைத் தடுப்பதற்காக ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். சோழப்பேரரசின் பழைய மாளிகையில் மந்திராலோசனை நடைபெற்றது.

“பல்லவரையர் அவர்களே! ஈழநாட்டுக்கு நம்முடைய பெரும்படை சென்றிருக்கும் இச்சமயத்தில், நாட்டில் ஆங்காங்கே கலவரங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். சிற்சில இடங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி இவை நடந்திருக்கின்றன. சுந்தர பாண்டியனுக்குத்தெரியாமல் இவை நடந்திருக்கின்றன என்று நான் நம்பவில்லை.”

“தங்களுடைய மக்களிடம் தாங்களே பீதியைக் கிளப்புவதால் அவர்களுக்கு என்ன பலன்?” என்று கேட்டார் ஈராயிரம் பல்லவரையர்.

“சோழப் பேரரசு பலம் குன்றி வருகிறது என்ற தவறான எண்ணத்தைப் பரப்புவதற்கு இந்தச் செயல்கள் துணை செய்கின்றன. பாண்டியர்களிடம் முழு அதிகாரமும் இருந்தால் இப்படி நடக்காதென்று கூறிக் கொள்ளலாமல்லவா!”

“தஞ்சைக்குச் செய்தி அனுப்பி மேலும் பத்தாயிரம் வீரர்களை வரவழைப்போம். நெடுஞ்சாலைகள் தோறும் கடுமையான காவலுக்கு ஏற்பாடு செய்யுங்கள். திறமையற்றவர்கள் நாமல்ல, அவர்கள்தாம் என்பதை நம்முடைய செயலால் மக்களுக்கு அறிவிப்போம்.”

வாயிற்காவலன் வந்து சேனாபதி கிருஷ்ணன் ராமனுக்கு முன்னால் வணங்கி நின்றான். “மதுரையம்பதியின் அரசர் சுந்தரபாண்டியர் தங்கள் திருமுகம் காண வந்திருக்கிறார்கள்.”

ஈராயிரம் பல்லவரையரும் சேனாபதி கிருஷ்ணன் ராமனும் ஒருவரையொருவர் பொருள் நிறைந்த பார்வையில் பார்த்துக் கொண்டார்கள்.

“வாயிலுக்குச் சென்று அவரை வரவேற்போம்” என்றார் கிருஷ்ணன் ராமன்.

இரட்டைப் புரவிகள் பூட்டிய ரதத்திலிருந்து இறங்கி வந்தார் சுந்தரபாண்டியர். நடுத்தர உயரமும் நீண்ட முகமும் கொண்டிருந்த அவரது கண்கள் சிவந்திருந்தன. அந்தக் கண்களில் செருக்கும் அதிகாரப் பற்றும் கலந்திருந்தன. அவருக்கு அடுத்தாற்போல் பரட்டைத்தலையும் எலும்புக் கூடுமாகமற்றொரு மனிதர் இறங்கினார். அவரது மேலங்கிகள் தொளதொளவெனத்தொங்கின. கண்கள் பெரிய பெரிய கோழிமுட்டைக் கண்கள். சோலைமலைச் சாலையில் வெகு நாட்களுக்கு முன்பு நாம் சந்தித்த உருவம் அது. மேலாடையின்றி மிக எளிய தோற்றத்தில் வயலில் உழும் குடியானவனைப்போல் தோன்றிய அதே உருவம்தானா? வீரமல்லனின் வளைஎறியின் வேகம் தாங்காது வீறிட்டு அலறிய அந்த மனிதர்தானா இவர்!

“வாருங்கள், சுந்தர பாண்டியரே! வரவேண்டும் பெரும்பிடுகு முத்தரையரே” என்று முகமன் கூறி, வருகை தந்த இருவரையும் அங்கிருந்த இருவரும் ஒரே குரலில் வரவேற்றனர்.

சேனாபதி கிருஷ்ணன் ராமனுக்கு அருகில் நின்ற ஈராயிரம் பல்லவரையரைக் கண்டவுடன் வந்தவர்கள் இருவரும் ஒருகணம் வாயடைத்து விட்டனர். பல்லவரையரின் தோற்றமே பயங்கரமான தோற்றம். அதிலும் அவர் தம் உணர்ச்சியை மறைக்கத் தெரியாதவர். அவருடைய முகத்திலிருந்து எழுந்த வெறுப்பு, வந்தவர்களை நெருப்பெனச் சுட்டுவிட்டது போலும்.

உள்ளே வந்து ஆசனத்தில் அமர்ந்துகொண்டே, “இன்றைக்கு எனக்கு எதிர்பாராத பாக்கியம் கிடைத்திருக்கிறது. இருவரையும் ஒன்றாகச்சந்திக்கிறேன்” என்றார் சுந்தர பாண்டியர். “தாங்கள் எப்போது வந்தீர்கள், பல்லவரையரே?”

“இன்றுதான் வந்தேன்; நானும் இந்தச் சந்திப்பால் மகிழ்கிறேன்”

என்றார் ஈராயிரம் பல்லவரையர்.

“வீட்டில் எல்லோரும் நலந்தானா மாமா?” என்று கேட்டு, அவரிடம் உறவு கொண்டாட முயன்றார் பெரும் பிடுகு முத்தரையர்.

“பல்லவரையருக்கும் எங்களுக்கும் பழங்காலத்து உறவு” என்று என்றைக்கோ விட்டுப்போன உறவை இன்று தொட்டுக் காட்டினார் முத்தரையர்.

“பழங்காலத்தில் உறவென்றால், இக்காலத்தில் பகையா?” என்று கேட்டுச் சிரித்தார் பல்லவரையர். அவர் முத்தரையரை நோக்கிய நோக்கில், ‘உதட்டில் உறவும் உள்ளத்தில் கள்ளமும் வேண்டாம்’ என்ற மறைமுகமான எச்சரிக்கை இருந்தது. தாங்கள் வந்த காரணத்தை வெளியிட்டார் சுந்தர பாண்டியர்:

“பெரிய மாளிகை ஒன்று எழுப்பிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தங்களுக்கு இந்த மாளிகை போதவில்லையென்றால், என்னுடைய

மாளிகைகளில் ஒன்றை விட்டுக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். சோழப்பேரரசு விரும்பினால் என் அரண்மனையையே கட்டளையிட்டுப்பெற்றுக் கொள்ளலாம்.” “அதனாலென்ன? தாங்கள் மனமுவந்து இவ்வளவு தூரம் கூறியதே பெரியது” என்றார் சேனாபதி. “சக்கரவர்த்திகள் கட்டளை இட்டார்கள்;நாங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம்.”

“காரணத்தை நான் அறியலாமா?”

“மாமன்னரின் மனத்தில் இருப்பதை நாங்களே அறியோம்” என்றார் பல்லவரையர். “அவர்கள் இட்ட பணியைச் செய்யக் காத்துக் கிடப்பவர்கள் நாங்கள். ஈழத்திலிருந்து அவர்கள் திரும்பியவுடன் காரணம் தெரியலாம்.”

இதைக் கேட்ட பெரும்பிடுகு முத்தரையரின் முகத்தில் ஏளனச் சிரிப்பொன்று தோன்றி இருந்தவிடம் தெரியாமல் ஒளிந்து கொண்டது.‘சோழர்கள் இட்ட பணியைச் செய்யப் பல்லவரையர்கள் காத்துக் கிடப்பதாம்!அவமானம்!’

“அடுத்தாற்போல் ஒரு முக்கியமான விஷயம்” என்று தொடங்கினார் சுந்தரபாண்டியர்: “நாட்டில் திடீரென்று அங்கங்கே கலவரங்கள் அதிகரித்து வருகின்றன. கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கொலைகளும்,கொள்ளைகளும் பெருகி வருகின்றன.”

“அதற்காக?” என்று குறுக்கிட்டார் பல்லவரையர்.

“பதினையாயிரம் காவல் வீரர்கள் இருந்தால் நிலைமையை ஒருவாறு கட்டுப்படுத்தலாம். எங்கள் மூவருக்கும் ஐயாயிரம் வீரர்கள் வீதம் தேவைப்படுகிறார்கள். பேரரசின் அநுமதி பெற்றுப் பாண்டிய நாட்டு இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்கலாமா என்று ஆலோசிக்கவே இங்கு வந்தேன்.”

“பதினையாயிரம் வீரர்கள்தானே? புதிதாகச் சேர்த்துப் பயிற்சியளிக்கும்

சிரமம் தங்களுக்கு எதற்கு? பத்து நாட்களுக்குள் வீரர்கள் இங்கு வந்து சேருவார்கள். நாங்களே பிரித்து உடனடியாக அனுப்பி வைக்கிறோம்.”

சுந்தரபாண்டியர் இதைக் கேட்டவுடன் அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குச் சில விநாடிகள் சென்றன. இடியோசை கேட்ட நாகமென நடுங்கினார் முத்தரையர். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட போது, நான்கு விழிகளும் வெளியே பிதுங்கிச் சுழன்றன. அவர்கள் விடைபெற்றுக் கொண்டு எழுந்தார்கள். குதிரைகளின் குளம்பொலியும் ரதத்தின் சக்கரங்களின் ஓசையும் மறைந்த பிறகு “பார்த்தீர்களா, சேனாபதி! கலவரங்கள் நடப்பதற்கு மேலும் சில காரணங்கள் உண்டென்பதைத் தெரிந்து கொண்டீர்களா?” என்றார் பல்லவரையர். “நம்மை எதிர்த்துப் போராடுவதற்குப் படைபலம் தேவையாக இருக்கிறது. நம்மிடம் அனுமதி கேட்டுப் பார்க்கிறார்கள். ரகசியமாக ஒருபுறம் படை திரட்டிக் கொண்டே, பகிரங்கமாக மறுபுறம் பத்து மடங்கு சேர்ப்பதற்காக இப்படி ஒரு கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள்.

துணிவைப் பார்த்தீர்களா?”

பல்லவரையர் சிரித்த பயங்கரச்சிரிப்பு, அந்தப் பழைய மாளிகையைக் கிடுகிடுக்க வைத்தது. சுந்தர பாண்டியருடன் சேனாபதி கிருஷ்ணன் ராமனைக் கண்டு திரும்பிய பெரும்பிடுகு முத்தரையர் அன்று பிற்பகல் தமது சிறிய மாளிகையின் வெளிவாசலுக்குள் நுழைந்தபோது, அங்கே தமது மகள் திலகவதியும் தமக்கையாரும் ஒரு வணிகனிடம் பட்டாடைகள் வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். நாடுதோறும் மூட்டைகள் சுமந்து பட்டாடை

களையும் பஞ்சுத் துணிகளையும் விற்பனை செய்யும் நாடோடி வணிகன் ஒருவன் அவர்களிடம் தன் ஆடைகளின் பெருமையை விளக்கிக்கொண்டிருந்தான்.

“அம்மணி! காஞ்சி, கலிங்கம், உறையூர் இவற்றில் எது வேண்டும்?”

“ஏனப்பா, பாண்டி நாட்டுத் துணிகள் ஏதும் உன்னிடம் இல்லையா?”

என்று கேட்டுக்கொண்டே, எதேச்சையாக அவனைத் திரும்பிப் பார்த்தார் பெரும்பிடுகு முத்தரையர். வணிகனின் கண்களும், அவர் கண்களும், சந்தித்துக் கொண்டன. அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் வணிகனின் கரத்திலிருந்த கலிங்கம் அவனையறியாதபோது கீழே நழுவி விழுந்தது.

“பாண்டிய நாட்டுக் கச்சைகளும், வெண் பட்டாடைகளும் இருக்கின்றன.

தாங்களும் வந்து பார்க்கிறீர்களா?”

“பார்க்கிறேன், பார்க்கிறேன், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!”

என்று ஏளனமாகக் கூறினார் முத்தரையர். தனது தந்தையின் குரலில் தொனித்த பரிகாசத்தைக் கண்டு மருண்டுஒதுங்கினாள் திலகவதி. முத்தரையரின் உடைவாள் மின்னலெனப் பாய்ந்து வந்து வணிகனின் புறமுதுகில் குத்திட்டு நின்றது.

“அப்பா! என்ன இது?”

குனிந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்த இளம் வணிகன் இதைச்

சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. “என்ன ஐயா இது அக்கிரமம்! நிராயுதபாணியாக வந்திருக்கும் வணிகனைக் கொல்லப் பார்க்கிறீர்கள்! பாண்டிய நாடு இவ்வளவு பொல்லாத நாடென்று தெரியாமல் போய்விட்டதையா?” என்று அலறினான் அவன்.

“யார் நீ உண்மையைச் சொல்?”

“அம்மணி! நீங்கள் சொல்லுங்கள் அம்மணி! யார் இவர்?”

வணிகனின் முதுகை முள்ளெனக் குத்தியது வாள் முனை.

“ஐயா! என்னைப் பார்த்தால் தெரியவில்லையா? நான் வணிகனய்யா? அப்படி என்னைக் கொல்வதென்றால் மார்பில் குத்திக் கொன்று விடுங்களையா! புறமுதுகில் வாள் பாய்ச்சுவது உங்களுக்கே அழகாயிருக்கிறதா? ஐயா ஐயா! அம்மணி! நீங்களாவது தடுத்து நிறுத்தக்கூடாதா?”

“திலகவதி உள்ளே சென்று ஒரு வாளை எடுத்துக் கொண்டு ஓடிவா!”

கால் சதங்கைகள் ஒலிக்க, அவள் ஓடும் அழகைக் கண்ட வணிகனுக்கு, ஒரு கணம் தன் உயிரை உறிஞ்ச வந்த ஆபத்துக்கூட மறந்துவிட்டது.

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...