Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம் -பாகம் 1-20

ரோ
கணத்துப் பெண் எலி, தான் எந்த வளைக்குள்ளே புகுந்து வெளியேறப் பார்த்ததோ, அதே வளைக்குள் மீண்டும் நுழைந்து உள்ளே போக முயன்றது. “என் பின்னால் வாருங்கள்” என்று இளங்கோவை அழைத்துக் கொண்டே மதிலுக்கு அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்தாள். “நூலேணியில் ஏறிப் போகலாம், வா! என்றான் இளங்கோ.

“இந்த வழியில் போனால் என்ன?”

“வேண்டாம்; நீ முன்னே சென்றாலும் தொல்லை; பின்னால் வந்தாலும் தொல்லை. முன்னே சென்றால் எங்காவது இருளுக்குள் மறைந்து விடுவாய். பின்னால் வருவதும் நிச்சய மில்லை. இந்த நேரத்தில் நீ ஓடுவதும் நான் பிடிப்பதுமாக இருந்தால் நன்றாக இருக்காது. பேசாமல் நான் சொல்வதைக்கேள்.”

“இன்னும் என்னிடம் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையே?” என்றாள் ரோகிணி.

“எப்படி நம்புவது? நீ எங்கே புறப்பட்டாய் என்ற கேள்விக்கு இன்னும் உன்னிடமிருந்து மறுமொழி கிடைக்கவில்லை. உன் வரையில் நீ சாமர்த்தியமாக இருக்கும்போது என்னை மட்டும் ஏமாறச் சொல்லுகிறாயா?” “நீங்கள் ஒன்றும் என்னிடம் ஏமாற வேண்டாம்!” என்று சிணுங்கிக்கொண்டே அவனோடு சென்று அவன் சுட்டிக் காட்டிய நூலேணியில் மளமளவென்று ஏறினாள். இளங்கோவும் அவளைப் பின்பற்றினான்.

“ஆமாம்! நேர் வழியில் கதவைத் திறந்துகொண்டு வராமல் நீங்கள் ஏன் இப்படி வந்தீர்கள்?” என்று கேட்டாள் ரோகிணி.

“அதுவரையில் நீ பொறுத்துக் கொண்டா இருந்திருப்பாய்?”

“திரும்பும்போதாவது நேர்வழியில் போகலாமல்லவா? கீழே இறங்குகிறீர்களா? எனக்கு இதெல்லாம் வழக்கம் இல்லை” என்று பாதி தூரம் ஏறிய பிறகு, நூலேணியிலிருந்து கொண்டே கேட்டாள் ரோகிணி.

“இந்த வேளையில் நீயும் நானும் தனியாக நின்று கொண்டு கதவைத்தட்டினால் என்னுடைய கும்பகர்ணத்தாத்தா என்ன நினைப்பார் தெரியுமா?”

“கும்பகர்ணத் தாத்தாவா?”

“ஆமாம், உங்களுக்குக் காவலாகப் படுத்து உறங்குகிறாரே அவரைச் சொல்கிறேன். இலங்கைக்கு வந்த பிறகு அவரும்கும்பகர்ணனாகிவிட்டார். காவல் காத்துக் கொண்டிருந்த அழகைப்பார்த்தாயல்லவா?” நூலேணி மாடத்தைத் தொடும் இடத்துக்கு வந்தவுடன் ஒரே தாவில் மேலே ஏறிக்கொண்டாள் ரோகிணி. அங்கிருந்து கொண்டே முக்கால் பகுதிக்கு வந்துவிட்ட இளங்கோவைப் பார்த்து, “வீரரே! சிறிது நேரம் அப்படியே இருந்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்” என்றாள்.

”என்ன?”

“என்னை நீங்கள் நம்பவில்லையா! நான் நம்பக்கூடாதவள்தான். இதை இப்போது தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். ஏணியை இப்படியே கழற்றிவிடப் போகிறேன்!”

இதைக் கேட்டவுடன் இளங்கோவின் ஒரு கைப்பிடி தானாகவே, தளர்ந்தது. கீழே குனிந்து பார்த்தான். இருள் மூடிக் கிடந்த தரை, கிணற்றின் அடிவயிற்றைப்போல் அதல பாதாளமாகக் காட்டிசியளித்தது. கீழே விழுந்தால் தன்னை அடையாளம் கூடக் கண்டு பிடிக்க முடியாது என்று உணர்ந்தான்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டுச் சிரித்தாள் ரோகிணி.

‘கொலைச் சிரிப்பா அது; கொலைக்காரியா அவள்? ஐயோ, ஏமாறவில்லை என்று நினைத்துக்கொண்டே இவளிடம் ஏமாந்து போனோமே!’

“சொல்வதற்கு என்ன இருக்கிறது; கழற்றிவிடு! உன் பெயரைச் சொல்லிக்கொண்டே சாகிறேன். நீதான் இப்போது என் இஷ்ட தெய்வம்.”

அவனுடைய இஷ்டதெய்வம் சிறிது அவனுக்குப் பயம் காட்டிவிட்டு நூலேணியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டது. பிறகு அவன் மாடத்தை நெருங்கும் சமயத்தில் அவனுக்குத் தன் கையைக் கொடுத்து உதவி செய்தது. அவளுடைய கரம் மென்கரமென்றாலும் பொன்கரம். அத்தனை உறுதி இருந்தது அதில்.

“பயந்து விட்டீர்களல்லவா?” “உன்னைக் கண்டது முதலே எனக்கு உன்னிடம் பயந்தான்!”

சந்தடி செய்யாமல் படிகளில் இறங்கி அவர்கள் கீழே வந்தார்கள். வடக்கு வாயிலை நெருங்கியவுடன் ரோகிணி ஒரு கணம் அங்கே தாமதித்து,இடது புறத்துக் கல்யானையை அவனுக்குத் தெரியாமல் நோக்கினாள். அவள் அப்படிப் பார்ப்பதை இளங்கோவும் அவளுக்குத் தெரியாமல் கண்காணித்தான்.

“ஆமாம், நீங்கள் எப்போது என்னைக் கண்டுபிடித்தீர்கள்?”

அவள் எதற்காகக் கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட இளங்கோ, “மதில் சுவரில் யாரோ கன்னக்கோல் வைப்பதைப் போல் சத்தம் கேட்டது. விழித்துக் கொண்டு எட்டிப் பார்த்தேன். கால்கள் மட்டிலும் வெளியில் தெரிந்தன. தலையைக் கொய்து கொண்டு போய் மாமன்னரின் திருவடிகளில் வைப்பதற்காக ஓடோடியும் வந்தேன்” என்றான்.

“ஓ!” என்று சொல்லிக்கொண்டே ஓரக் கண்களால் திரும்பவும் யானையைக் கவனித்தாள் ரோகிணி. இளங்கோவுக்கு ஏற்கனவே நடந்த நடப்புகளில் ஒரு பாதி தெரியும். வல்லவரையர் அவன் கண்களில் படவில்லையே தவிர, ரோகிணியின் செய்கைகள் ஒவ்வொன்றைம் அவன் பின்பற்றி வந்தான். மதிலுக்கு வெளியே அவன் அவளுடன் பேசிக் கொண்டிருந்தபோதுகூட, அவன் மனம் அடிக்கடி யானையின் அடிவயிற்றை வட்டமிட முற்பட்டது.

“சற்று நேரம் இங்கே அமர்ந்து பேசிவிட்டுச் செல்வோமா?” என்றான் இளங்கோ.

“உங்கள் தாத்தா விழித்துக் கொள்ள மாட்டாரா?”

“மெதுவாகப் பேசுவோம்; அப்படியே விழித்துக் கொண்டாலும் பாதகமில்லை-உன்னிடம் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லப் போகிறேன்.”

“சீக்கிரம் சொல்லுங்கள்!” என்று யானைக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள் ரோகிணி. மெதுவான குரலில் பேசுவதற்காக அவனும் அவளருகில் நெருங்கி அமர்ந்தான்.

“இதோ பார், நீ ஈழநாட்டுப் பெண்; நான் தமிழ் நாட்டில் பிறந்தவன். இருந்தாலும் நமக்குள் பகைமையில்லை. விரோதமில்லை, வெறுப்பில்லை.” குபீரென்று கொட்டிச் சிதறுவது போல் வெளிவந்த சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் ரோகிணி. “பகையில்லாமல் தான் பல்லாயிரம் பேர் பட்டப்பகலில் உயிரை விட்டிருக்கிறார்கள் போலும்! உங்கள் உடைவாளைக் கேட்டுப் பாருங்கள், எத்தனை பேரின் இரத்தத்தை அது சுவைத்திருக்கிறது என்ற கதையைச் சொல்லும்.”

“குறுக்கே பேசாமல் முழுவதையும் கேட்டுவிட்டு பிறகு சொல்” என்று கூறினான் இளங்கோ.

“நாங்கள் நாடாசை பிடித்து ரோகணத்தைக் கட்டியாள வேண்டுமென்றபதற்காக இங்கே வரவில்லை. எங்களைச் சார்ந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள் இந்த மண்ணில் பலியாகியிருக்கிறார்கள். எங்களுக்கு உரிய பொருளை நாங்கள் கேட்கிறோம். எங்கள் நாட்டு மணிமுடி அது. அதைத் திருப்பிக் கொடுத்து விடுவதால் உங்கள் பெருமை சிறிதும் குறைந்து விடாது. நீங்கள் இன்னும் அதிகமான புகழ் பெறுவீர்கள். மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் நட்பும் துணையும் உங்களுக்கு என்றைக்கும் கிடைக்கும். மகிந்தரிடமே இந்த நாட்டை மீண்டும் ஒப்புவித்து விடுவோம். இன்னும். . . ”

“மேலே சொல்லுங்கள்! ஏன் நிறுத்தி விட்டீர்கள்?” என்றாள் ரோகிணி.

“இன்னும். . . இளவரசி!. . பகைமைக்குக் காரணம் இல்லாமல் நாம் பகைமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பாண்டியர்களுக்கும் ஈழநாட்டவர்களுக்கும் பரம்பரை பரம்பரையாய்த் திருமண உறவு வளர்ந்து வந்திருக்கிறது. அதே உறவு. . . உனக்குப் புரிகிறதா, ரோகிணி.”

“நீங்கள் பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான் ரோகணத்து மன்னர் மகிந்தருமல்ல. நீங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி இராஜேந்திரருமல்ல.”

“சக்கரவர்த்திகளின் கருத்தையே நான் இங்கு சொல்கிறேன். உன்னிடம் சொன்னால் உன் தந்தையாரிடம் நீ எடுத்துச் சொல்லாமல்லவா?”

தந்தையார் என்ற சொல்லைக் கேட்டவுடன் தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கினாள் ரோகிணி. “தந்தையாரின் நினைவை ஏன் இந்த வேளையில் கிளறுகிறீர்கள்? நீங்கள் கொடுங்கோலர்கள்! இரக்கச் சித்தமில்லாதவர்கள்! பழி பாவத்துக்கஞ்சாதவர்கள்!”

இளங்கோ திடுக்கிட்டான். ‘மன்னர் மகிந்தர்’ என்ற சொற்கள் அவள் வாயாலேயே வெளிவந்தன. ஆனால் ‘தந்தையார்!’ என்ற உறவு முறைச் சொல்லாக அது மாறியவுடன் இவளும் கணத்தில் மாறிவிட்டாளே!

“ரோகிணி என்ன இது?”

“தாயிடமிருந்து கன்றைப் பிரித்து வைப்பதுபோல் என்னை அவரிடமிருந்து பிரித்து விட்டு, என்னிடமே அவரைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை?”

“நாங்கள் பிரித்தோமா?”

“பேசாதீர்கள்” என்று சொல்லிவிட்டு இருப்பிடத்தை விட்டு எழப்போனாள் ரோகிணி. திரும்பவும் அவளைச் சுய நினைவுக்குக் கொண்டு வருவதற்குள் இளங்கோவின் பாடு பெரும்பாடாகப் போய்விட்டது. தந்தையின் மீது அவளுக்கிருந்த பாசம் தாய்ப்பாசத்தையும் மிஞ்சியது என்பதையும், ஒருவேளை அவள் தன் தந்தையிடம் போய்ச் சேருவதற்காகவே இரவோடு இரவாகப் புறப்பட்டிருக்கலாமென்பதையும் அவன் ஊகித்துக் கொண்டான்.

“ரோகிணி! உன் தந்தையாரிடம் உன்னைச் சேர்த்து விட வேண்டியது என் பொறுப்பு. இந்த ஒரு விஷயத்திலாவது நீ என்னை நம்பு. ஆனால், மணிமுடியைக் கைப்பற்றாமல் நாங்கள் இந்த மண்ணிலிருந்து நகர மாட்டோம். இந்த மண்ணோடு மண்ணாக நாங்கள் அனைவரும் மக்கி மடிந்தாலும் எங்கள் உறுதி இதில் தளரப் போவதில்லை. வீணாகப் பகைமையை வளரவிட்டுப் பிறகு நாங்கள் வெற்றி பெறுவதைவிட இப்போதே நீங்கள் மனமுவந்து அதைக் கொடுத்து விடுவது நல்லது. . . ரோகிணி! நினைத்தால், நீயே உன் அழகான கரங்களால் அதைக் கொடுத்து விடலாம்!”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” -ஒன்றும் புரியாமல் வினவுவது போல்விழித்தாள் ரோகிணி. இளங்கோவுக்கு யானையில் வயிற்றுக்குள் இருப்பது மணி முடிதான் என்ற எண்ணம் எப்படியோ ஏற்பட்டு விட்டது. அது தன் கையில் கிடைத்துவிட்டதாகவே அவன் முடிவு கட்டிக் கொண்டான். மணிமுடியைத் தேடி வந்தவனுக்கு அது இவ்வளவு எளிதில் கிடைத்துவிடவே அளவற்ற மகிழ்ச்சி யுண்டாயிற்று. அத்துடன் அவன் திருப்தியுறவில்லை. அவளுடைய பொன்வண்ணக் கரங்களால் அவளாகவே அதை எடுத்துக்கொடுக்கவேண்டும்! அப்படிக் கொடுப்பதற்குப் பிரதியாக மாமன்னரிடம் சொல்லி அவளை அவள் தந்தையாரிடம் சேர்ப்பிக்க வேண்டும்! தந்தையாரிடம் சேர்ப்பித்துவிட்டு பிறகு எல்லோருடைய சம்மதத்தையும் பெற்று அவளைக் கொடும்பாளூருக்கே அழைத்துச் சென்றுவிட வேண்டும்! ஆசைக்கோர் அளவேது? கற்பனைக் கனவுகளுக்கோர் கடிவாளமேது?

“ரோகிணி! இப்போதே நீ அதைக் கொடுப்பாயானால் எடுத்துக் கொடுக்கும் கரங்களை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். கொடுக்கும்கரங்களைப் பற்றி என் கண்களில் ஒற்றிக் கொள்வேன்!” என்றான் இளங்கோ.

“கொடும்பாளூர் இளவரசே! உங்கள் சித்தம் கலங்கிப் போயிருக்கிறதோ?” என்று துடுக்குத்தனமாகக் கூறினாள் ரோகிணி. “பலஇரவுகள் கண் விழித்துக் கனவு கண்டதால் நீங்கள் என்னவெல்லாமோ பேசுகிறீர்கள்?”

“எங்களுடைய நாட்டின் வீரர்களிடையே ஒரு பழக்கம் உண்டு. அதை மட்டும் கேட்டுவிட்டு உன் முடிவுப்படி செய்துகொள். அதைக் கேட்ட பிறகும் உன் மனம் மாறா விட்டால், உன்னுடைய அன்பு இவ்வளவுதான் என்பதை உணர்ந்து கொள்கிறேன்.”

“என்ன பழக்கம் அது?”

“இன்னது செய்வேன்; செய்யாவிடில் செத்து மடிவேன் என்று காளிகோயிலுக்குப் போய் சபதம் செய்துகொண்டு வருவார்கள்; செய்து முடித்தால் வெற்றி விழா நடக்கும். இல்லையேல் தங்கள் சிரங்களைத் தாங்களே அரிந்து கொண்டு தங்களைக் காளிதேவிக்குப் பலிதானமாக்கி விடுவார்கள் -நானும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். என்னுடைய நிலைமை,உனக்குப் புரிகிறதா, ரோகிணி?”

அவள் நீண்ட நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, அவளுடைய பார்வையிலிருந்து எண்ணங்கள் ஒன்றும் வெளிப்படவில்லை.இளங்கோவுக்கு இது பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. சற்று நேரத்துக்கு முன்பு அவள் நடந்து கொண்ட விதத்தையெல்லாம் தன் நினைவுக்குக் கொண்டு வந்தான், அவ்வளவும் வெறும் சாகசந்தானா? நடிப்புத்தானா? இன்னும் அவள் இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. யானையின் தந்தங்களைத் திருகிக் கழற்றவில்லை. உள்ளே இருக்கும் பேழையைத் தன் மென் கரங்களால் எடுத்து அவனிடம் நீட்டவில்லை.

‘காளிதேவின் சந்நிதில் உன்னை நீ பலிகொடுத்துக் கொண்டால் எனக்கென்ன வந்தது?” என்று அலட்சியமாக இருக்கிறாள் போலும்! என்ன இருந்தாலும் வேற்று நாட்டுப் பெண், வேற்று நாட்டுப் பெண்தான்.

“நேரமாகிறதே!” என்றாள் அவள். வெறுப்பு நிறைந்த நெஞ்சோடு அவளைக் கூடத்துக்குள் அழைத்துக்கொண்டு போய்விட்டுக் கதவைத் தாழிட்டான். வல்லவரையர் முன் போலவே அப்போதும் உறங்கும் கோலத்தில் இருந்தார். கசப்புடன் சிறுபொழுதைவடக்கு வாயில்படிகளில் கழித்துவிட்டு, மெல்ல மெல்லக் கல்யானையின் அடிவயிற்றைத் திறந்து பார்த்தான் இளங்கோ. அடிவயிற்றுக்குள்ளேயிருந்த சிறு அறை இப்போது வெற்றிடமாக இருந்தது. நன்றாகத் தேடினான், துழாவினான், ஒன்றையும் காணோம்!

தொடரும்


Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம