Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-24

மாவாசைக்குப் பிறகு பத்துத் தினங்கள் சென்றன. இதற்குள் ரோகணத்தின் பல பகுதிகளுக்கும் சோழநாட்டு வீரர்கள், மன்னரையும் அமைச்சரையும் தேடுவதற்காக அனுப்பப்பட்டனர். ரோகணம் அவர்களுக்குப் புதிய இடம். சரியான சாலைகளும், புரவிகள் செல்லக்கூடிய பாட்டைகளும் அந்தப் பிரதேசத்தில் அருகியிருந்தன. தேடிச் சென்றவர்களில் பலர் சோர்ந்து திரும்பினர்! இன்னும் பலர் திரும்பவே இல்லை. அமைச்சர் கீர்த்தியின் முன்னேற்பாட்டால் மறைந்திருந்து தாக்கும் சிறு கூட்டத்தினர் அங்கங்கே தொல்லைகள் விளைவித்த வண்ணம் இருந்தனர்.

காடுகள், மலைகள், மடுக்கள், குகைகள், வனவிலங்குகளின்

மறைவிடங்கள் முதலியன நிறைந்த அந்தக் காட்டில் அவர்கள் தேடிச் சென்ற மனிதர்களும் அகப்படவில்லை; மணிமுடியும் அகப்படவில்லை.

இந்தப் பத்து நாட்களில் ஒரே ஒரு முறை ரோகிணி அரண்மனையைவிட்டு நகரத்துக்குள் சென்று வந்தாள். அவளுடைய பணிப்பெண்ணின் தகப்பனார் வீட்டிற்குச் சென்று வந்ததாக, இளங்கோவின் மூலம் வல்லவரையருக்குச் செய்தி கிடைத்தது. ரோகிணியின் நடவடிக்கைகளை

அவளுக்குத் தெரியாமல் கண்காணித்த இளங்கோ, அவள் சென்று வந்த வீட்டைச் சுற்றிலும் ஒற்றர் சிலரை நிறுத்தி வைத்தான். அந்தப்புரத்தின் வடக்குவாயில் மதிலில் ரோகிணி ஏற்படுத்தியிருந்த பாதையைப் பார்த்தபிறகு, அதைப் போன்ற மற்ற ரகசிய வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அரண்மனையைவிடச் சக்கரவர்த்தி தங்கியிருந்த

பெரிய மாளிகையே மிகவும் விசித்திர வழிகள் நிறைந்ததாக இருந்தது. அமைச்சர் கீர்த்தியின் உறைவிடமாக இருந்ததாம் அது. அந்த மாளிகையின் சுவர்களுக்குள்ளிருந்து சில பேழைகள்அகப்பட்டன. அவற்றில் எதற்குள்ளும் மணிமுடி இருக்கவில்லை. ஆனால் மணிமுடியைக் காட்டிலும் மிகவும் பொறுப்புள்ள பொருள்கள் கிடைத்தன.அமைச்சர் கீர்த்தியின் எதிர்காலத் திட்டமே அங்கிருந்த சில ஓலைச்சுவடிகளில் மறைந்திருந்தது.

ஓலைச்சுவடிகளைக் கைப்பற்றிய மாமன்னர் அவற்றைத் தமது அறைக்கு எடுத்துச் சென்று ஆராயலானார். படிக்கப் படிக்க அவரை வியப்பும்,திகைப்பும், பரபரப்பும் ஆட்கொள்ளத் தொடங்கின. அமைச்சர் கீர்த்தி கைதேர்ந்த ராஜதந்திரி என்பதும், துணிச்சலும் பேரார்வமும் கொண்ட வீரர் என்பதும் அவரது வழிகள் பயங்கரமானவை என்பதும் விளங்கலாயின.

வல்லவரையரையும் இளங்கோவையும் வரவழைத்து அவர்களுடன் அந்தஓலைச்சுவடிகள் தெரிவித்த செய்திகளைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.‘மணிமுடியைக் கைப்பற்றுவதோடு போராட்டம் ஓய்ந்துவிடப்போவதில்லை.

தொடர்ந்து போராட்டம் நடைபெற வேண்டிய நாடு ரோகணம்’ என்ற எண்ணம் மாமன்னரிடம் நன்கு பதிந்துவிட்டது.

இரவெல்லாம் தனித்திருந்து சுவடிகளைப் புரட்டியதால் இராஜேந்திரரின் கண்கள் கோவைப் பழங்களெனச் சிவந்திருந்தன. சிந்தனை செய்ததால் ஏற்பட்ட வெம்மை அவருடைய முகத்தில் படர்ந்திருந்தது.

வல்லவரையரைப் பார்த்து, “மாமா, நம்மில் யாருக்காவது அமைச்சர் கீர்த்தியும், சுந்தர பாண்டியரும் நெருங்கிய உறவினர்கள் என்பது தெரியுமா?”என்று கேட்டார்.

“என்ன!”

“ஆமாம், அவர்கள் இருவரும் மைத்துனர்கள்.”

“சுந்தரபாண்டியரின் தங்கையைக் கீர்த்தி மணந்திருக்கிறாரா?” என்று வியப்புடன் கேட்டார் வல்லவரையர்.

“இல்லை. கீர்த்தியின் தங்கை, சுந்தர பாண்டியரின் மனைவி. இந்த உறவு இன்று நேற்று ஏற்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாகத் திருமணம் நடைபெற்றிருக்கிறது.”

“தமிழர்களை அடியோடு வெறுக்கும் கீர்த்தியா தம் தங்கையை

சுந்தரபாண்டியருக்குக் கொடுத்திருப்பார்? என்னால் அதை நம்பவே முடியவில்லையே!”

சுந்தரபாண்டியர் கீர்த்திக்கு எழுதியிருந்த ஓலைகளை வல்லவரையரிடம் கொடுத்து, “இவற்றைப் பாருங்கள்: பகையிடத்தே உறவு கொள்வதென்பது நம்முடைய ராஜகுலப் பழக்கந்தான். அதையொட்டியே கீர்த்தியும் இப்படிச்

செய்திருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் இராஜேந்திரர்.

‘பகையிடத்தே உறவு கொள்வது பழக்கந்தான்’ என்ற மாமன்னரின் சொற்கள், தேன் துளிகளாகச் சுவை தந்தன இளங்கோவுக்கு. அப்படியென்றால் அவனுடைய சொந்த விஷயத்துக்கும் அது பொருந்துமல்லவா?

சுவடிகளைப் பர்த்த வல்லவரையர், “நம்பத்தான் வேண்டியிருக்கிறது, இந்த உறவை!’’ என்றார். “பாண்டியர்களின் உறவால் முதலில் நம்முடைய

வலிமையைச் சிதைத்துவிட்டு, அடுத்தாற்போல் அவர்களுக்குக் குழி பறிக்கவும்

வகை செய்திருக்கிறார் அமைச்சர் கீர்த்தி.”

“பாண்டியர்களுக்குரிய முடியை அவர்களிடம் கொடுக்கவில்லை. பெண்ணைக் கொடுத்திருக்கிறார்கள்! எல்லாம் விந்தையாயிருக்கிறது!” என்றான் இளங்கோ.

“விந்தையொன்றுமில்லை; இது ராஜதந்திரம்!” என்றார் இராஜேந்திரர்.“உரிமையைக் கொடுப்பது வேறு! பெண் கொடுப்பது வேறு. பார்க்கப்போனால் பெண் கொடுப்பது ஒரு வகையில் உரிமையைப் பறிப்பதாகும். ஏன்,வேங்கி நாட்டுக்கு நாம் கொடுக்கவில்லையா?”

வேங்கி நாட்டுப் பேச்சை மாமன்னர் எடுத்தவுடன் இளங்கோவுக்கு என்னவோ போலிருந்தது. அவன் முகம் சுருங்கியது. இராஜேந்திரரின் தங்கை சிறிய குந்தவையாரின் மகன் நரேந்திரன் இப்போது வேங்கி நாட்டு இளவரசன், அருள்மொழி நங்கைக்கு அத்தை மகன்!

‘கொடும்பாளூர் உறவு பரம்பரை பரம்பரையாக வந்த பழைய உறவு; இவர்களுக்கென்னவோ புதிய உறவின் நினைவுதான் அடிக்கடி வருகிறது!’என்று எண்ணிப் புழுங்கினான் இளங்கோ.

அப்போது வாயிற்கதவருகே பரபரப்போடு ஒரு வீரன் வந்து நிற்கவே அவனை அருகில் வரச் சொல்லி சைகை செய்தார் சக்கரவர்த்தி. ரோகிணியின் நடவடிக்கைகளைக் கவனிக்க இளங்கோவிடம் ஏவல் செய்த ஒற்றன் அவன்.

இரண்டு நாழிகைப் பொழுதுக்கு முன்னால் ரோகிணி நகரத்துக்குள் சென்ற செய்தி அவர்கள் அனைவருக்கும் தெரியும். முன்பு திரும்பியதைப்போல் இப்போதும் திரும்பி விடுவாள் என்றே இளங்கோஎண்ணியிருந்தான்.

“என்ன செய்தி?” என்றான் இளங்கோ.

“பணிப்பெண்ணின் வீட்டுக்குள்ளேதான் இன்றைக்கும் நுழைந்தார்கள். அவர்கள் சென்ற அரை நாழிகைக்கெல்லாம் பணிப்பெண்ணின் தகப்பனாரும் ஓர் இளைஞனும் ஒரே குதிரையின் வெளியில் கிளம்பினார்கள். குதிரைமேல்

சென்ற இளைஞனைப் பார்த்தால்-”

“இளவரசியைப்போல் தோன்றுகிறது. அவ்வளவுதானே?”

“ஆமாம்.”

நகரத்தைவிட்டுக் கிழக்கே செல்லும் ஓர் ஒற்றையடிப் பாதையில் அவர்கள் குதிரை திரும்பியதாகவும், அந்தப் பாதையைப் பற்றி அவன் விவரம் விசாரித்துக்கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தான்!

“புறப்படு; இளங்கோ!” என்று கட்டளையிட்டார் சக்கரவர்த்தி.

“இளங்கோவை அனுப்பிவிட்டு வாருங்கள்” என்று வல்லவரையருக்கும் விடைகொடுத்து அனுப்பினார்.

தொடரும்

















 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...