Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-23


பெ
ரும்பிடுகு முத்தரையரின் பரட்டைத் தலை, கோழி முட்டைக் கண்கள்,மண்டையோடு முகம் இவற்றைச் சாதாரண நிலையில் பார்த்தாலே, பார்ப்பவர்களின் மனம் நடுங்கும். இப்போதோ அவர் சிறுத்தையெனச்சீறிக்கொண்டு நின்றார். அவர் நிலையில் அவரைப் பார்த்த இளம் வணிகனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. முத்தரையர் தமது மகள் திலகவதி கொண்டு வந்து கொடுத்த வாளை வணிகனிடம் நீட்டிவிட்டுத் தமது வாளை உயர்த்தப் போனார்.

“ஐயா! தயவுசெய்து சற்றுப் பொறுத்து நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பிறகு உங்கள் சித்தப்படி செய்யுங்கள். நான் உங்கள் வீடுதேடிக் கொள்ளையிட வரவில்லை. கன்னம் வைக்க வரவில்லை. தெருவழியே பொருள் கூவி விற்றுக்கொண்டிருந்த என்னை இந்த அம்மணிதனை கூப்பிட்டார்கள்” என்றான் வணிகன்.

“ஆமாம் அப்பா! அத்தையாரும் நானும்தான் இவனை அழைத்தோம்” என்றாள் திலகவதி. அவளுடைய அத்தையார் தம் தம்பதியின் சினத்தைக்கண்டவுடனேயே வீட்டின் பின்கட்டுக்குச் சென்று பதுங்கி விட்டார்.

திலகவதி இப்படிச் சொல்லிவிட்டு அந்த வணிகன் கொண்டு வந்த பட்டாடைகளில் தன் மனத்தைப் பறிகொடுக்கலானாள். ஒவ்வொரு சேலையாக எடுத்துத் தன் வண்ண மேனியுடன் இணைத்து வைத்து, முதலில் உதட்டைப்பிதுக்குவதும், பிறகு ஆனந்தப்படுவதுமாக செய்து கொண்டிருந்தாள். “அப்பா!இப்படிச் சற்றுப் பாருங்களேன்! இந்தக் கலிங்கத்தை நான் கட்டிக் கொண்டால்நன்றாக இருக்குமா?”

அவர் தமது மகளின் கலைச்சுவையை ரசிக்காமல், தான் விழுங்கப்போகும் கன்றுக்குட்டியை மோப்பம் பிடிக்கும் சிறுத்தையைப் போல்,வணிகனை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தார்.

“அம்மணி! உங்கள் தந்தையார் பொன் கொடுத்துப் பொருள்வாங்குவதற்குப் பதிலாக, என்னைக் கொன்று விட்டு இவைகளைக் கவர்ந்துகொள்ள நினைக்கிறார் போலும்! உங்கள் கலைச்சுவை இவரிடம் கொலைச்சுவையைத் தூண்டி விடுகிறது தாயே!”

“யார் நீ?” என்று உறுமினார் பெரும்பிடுகு முத்தரையர்.

“நான் கொண்டுவந்திருக்கும் பொருளைப் பார்த்தால் தெரியவில்லையா?

ஆடை அங்காடிக்கார மெய்யப்பரிடம் வேலை பார்க்கிறவன் நான் ஐயா! நான் உங்கள் கையால் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் மெய்யப்பர் அவருடைய பொருள்களை எடுத்துக்கொண்டு நான் எங்கோ ஓடிப்போய் விட்டதாக நினைப்பாரே என்றுதான் அஞ்சுகிறேன்.”

சரேலென முத்தரையனின் வாள் முனை அவன் மூக்கு நுனியைப் பதம்பார்க்கத் தொடங்கியது. தற்காப்புக்காக அவனும் பளீரென்று தன் வாளை ஓங்கினான். அவ்வளவு தான்! இருவரும் தங்கள் கைவரிசைகளைக் காட்ட முனைந்து விட்டனர்.

வணிகனின் வாட்கலையுணர்ச்சி அவனையறியாது அவனை ஆட்கொண்டு விட்டது. அலட்சியமாக வாள் வீசப் புகுந்த முத்தரையர் இவ்வளவு கடுமையான எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. ஆகவே, முழுமூச்சுடன் தமது வல்லமையைக் காட்டலானார். வணிகனும் சளைக்கவில்லை.தன் உயிரை அவன் காத்துக் கொள்ள வேண்டாமா? அந்த ஆவேசப்பரபரப்பில் அவன் அவரைப் பம்பரம்போல் ஆட்டி வைக்கலானான்.வணிகன் உடையில் வந்திருக்கும் வாள்வீரனா அவன்! திலகவதிமுதலில் அவனுக்காக அநுதாபப்பட்டாள். அப்போது அவள் தந்தையின் கைஓங்கியிருந்தது. அடுத்தாற்போல் அவன் திறமையைக் கண்டு வியந்தாள்.இருவரும் சரிசமமாக நின்றனர். பிறகு அவன் ஆவேசத்தைக் கண்டுதுணுக்குற்றாள். இப்போது தன் தந்தையாரின் உயிருக்காக அஞ்சி நடுங்கவேண்டிய கட்டம் அவளை விரைந்து நெருங்கிக் கொண்டிருந்தது.பதறிக் குடல்நடுங்கிப் போனாள் திலகவதி.

“நிறுத்துகிறீர்களா அல்லது நான் வந்து குறுக்கே விழுந்துமடியட்டுமா?” என்று அலறிக்கொண்டே அவர்களுக்கு மத்தியில் பாய்ந்தோடிவந்தாள்.

இந்தக் கணத்தில் வாள் பிடித்திருந்த முத்தரையரின் கரம் சிறிதுநடுங்கியது. அந்த நடுக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தன்பலமனைத்தையும் ஒன்று திரட்டி, அவர் வாளைத் தாக்கினான் இளைஞன்.வெகு தூரத்தில் போய் விழுந்தது அது. உடனே தன் வாளையும் அதனுடன்ஒன்றாக வீசி எறிந்துவிட்டு, வெறுங்கரத்துடன் அவர் முன்னால் நின்றான்.முத்து முத்தாகக் கொப்பளித்திருந்த வேர்வையைத் துடைத்து விட்டுக் கொண்டே, துணிந்து குறுக்கே விழப்போன திலகவதியைப் பார்த்துச்சிரித்தான் அவன்.

“அம்மணி! ஆபத்து என் பக்கத்திலிருந்தபோது தாங்கள்ஆத்திரப்பட்டுக்கொண்டு தடுக்க வரக் காணோமே? என்னையும் என் தாயார்பத்து மாதம் சுமந்துதானே பெற்றிருப்பார்கள்?” என்று கேட்டான்.

அவனுடைய சொற்கள் அவளைச் ‘சுருக்’கெனத் தைத்திருக்க வேண்டும்.அதற்காக வருந்துகிறவள் போல் இரக்கம் நிறைந்த விழிகளால் அவனைஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள். வாள் வீச்சில் அவன் வெளிப்படுத்தியசாகசங்கள் அவனைப் பற்றிய மதிப்பை அவளிடம் உயர்த்திருந்தன.இடிந்துபோய் நின்று கொண்டிருந்த தன் தந்தையின் கைகளை மெல்லப்பற்றிக் கொண்டே “இவனைப் பார்த்தால் அப்படியொன்றும் தீயவனாகத் தோன்றவில்லையே! ஏனப்பா இவன் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம்?”என்று கொஞ்சும் குரலில் கேட்டாள்.

“தோற்றத்தைக் கண்டு ஏமாந்துவிடாதே, மகளே!” என்று சொல்லித்தம்முடைய நெற்றியைச் சுளித்து உதட்டைக் கடித்தார் முத்தரையர். “இந்தப்புடவைகளை உடுத்திக்கொண்டு இவன் பெண்ணாக மாறினாலும் மாறுவான்.”

இளநகை செய்துகொண்டே தன் அரும்பு மீசையை முறுக்கிவிட்டான்வணிகன். “ஐயா! நீங்கள் வீணாக ஒரு ஆண் மகனை அவமானப்படுத்துகிறீர்கள். கொலையைக் கூட நான் பொறுத்துக் கொள்வேன்.ஆனால் பெண்ணாக மாறும் பித்தன் என்று சொல்லும் இந்தப் பழியைஎன்னால் பொறுக்க முடியாது.”

“திலகவதி! இந்தக் கணுக்கால் காயம் நினைவில் இருக்கிறதா?” என்றுதம்முடைய வலது காலை மகளுக்குச் சுட்டிக்காட்டினார் அவர். “வளைஎறியைவீசிவிட்டு ஒருவன் குதிரையிலேறித் தப்பித்துக்கொண்டு ஓடினான் என்றுஉன்னிடம் சொல்லவில்லையா? அவன்தான் இவன்! இவன் சோழ நாட்டுஒற்றன்! இந்தப் பாண்டி நாட்டுக் கொல்லன் வீட்டுக்கே ஊசி விற்க வந்திருக்கும் இவன் மெய்த்துணிவைப் பார்த்தாயா?”

வினைச் சிரிப்புச் சிரித்தபடியே “ஒற்றா! உன் திறமையைப்பாராட்டுகிறேன். வீரத்தையும் மெச்சுகிறேன். ஆனால் உன் வேஷத்தைக்கலைத்துவிடு!” என்று கூறினார்.அவரையும், தன் தந்தயின் கால் தழும்பையும் மாறி மாறிப் பார்த்துமருண்ட திலகவதி, “அடப் பாவி!” என்று சொல்லிக் கொண்டு,அவனைவிட்டுச் சிறிது விலகிப் போய் நின்றாள்.

பளீர்பளீரென அந்த வணிகனின் நரம்புகளனைத்தும் ஒரு விநாடிசுண்டி இழுத்தன. மறுவிநாடிக்குள் தன்னைச் சமாளித்துக் கொண்டு, மிகுந்தஅநுதாபம் கொண்டவன் போல் அவன் நடிக்கலானான்.

“ஐயா நீங்களா அது? அப்படியென்றால் நீங்கள் என்னைத் தண்டிக்கவந்தது சரிதான். எனக்கு உங்களை அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. அன்றொரு நாள் நான் கொடுத்த துன்பத்துக்காக இன்றைக்குநீங்கள் என்னை மன்னிக்கவேண்டும்” என்று பதறினான் வீரமல்லன். ஆம் வீரமல்லனேதான்!

“வேஷம் கலைந்துவிட்டது, பார்த்தாயா?” என்று மகளைப் பார்த்து முறுவலித்தார் முத்தரையர்!

“வேஷம் என்று இன்னொருமுறை சொல்லாதீர்கள். என்னுடையமுந்தையப் பிறவி வாழ்க்கையில் நடந்ததை நீங்கள் இன்றைக்குப்பேசுகிறீர்கள். அப்போது அது என் கடமையாக இருந்தது; செய்தேன்.இப்போது அதற்காக வருந்துகிறேன்” என்றான் அவன். “நான் இப்போதுபடை வீரனில்லை. சோழர்களுடைய படையில் எனக்குள்ள மதிப்பைக்கொடுக்காத போது நான் ஏன் அங்கிருக்க வேண்டும்? சோழவள நாட்டுக்கேதலை முழுக்குப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.”

‘இதையெல்லாம் நான் நம்பக்கூடியவனா? கதைக்கிறாயே, தம்பி!’ என்றுகூறுவதுபோல் ஏளனமாக விழித்தன முத்தரையரின் கண்கள். “நீங்கள் நம்பினால் நம்புங்கள்; நம்பாவிட்டால் போங்கள், என்னுடைய பழைய புண்ணைக் கீறிவிட்டீர்கள், அதனால் என்னுடைய ஆத்திரத்தை உங்களிடம் கொட்டி ஆற்றிக் கொள்ளுகிறேன். வீரனாக இருந்த வீரமல்லன் என்றைக்கோ இறந்துபோய்விட்டான். வீரர்களுக்கும் வீரத்துக்கும் சோழ நாட்டு அதிகாரிகளிடம் மதிப்பு ஏது?”

பெருமூச்சு விட்டுக்கொண்டே மேலே தொடர்ந்தான் வீரமல்லன்.

“ஈழநாட்டுப் போருக்குச் செல்லவேண்டுமென்று துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய உணர்ச்சியையும் ஆற்றலையும் அவர்கள்மதிக்கவில்லை. பிறகு எதற்கு அவர்களிடம் அடிமைச் சேவகம் செய்யவேண்டும்? வீரன் என்ற பெயர் சுமந்து வீணாகத் திரிவதைவிட, வணிகன்என்ற பெயரையும் வண்ணப்பெண்களுக்கு ஆடையையும் சுமக்கலாமல்லவா?”

அவனுடைய குரலின் அடித்தளத்தில் மறைந்துகிடந்த சிறு துளிஆத்திரம் எப்படியோ அவர் கவனத்தைக் கவர்ந்துவிட்டது! ‘மெய்போல்தோன்றுகிறதே!’ என்று அவர் உன்னிப்பாகக் கேட்கலானார்.

“ஐயா! நீங்கள் யாரோ, நான் யாரோ, முன்பின் தெரியாதவர்கள். ஒருவகையில் பார்த்தால் பழைய பகைவர் என்றுகூடச் சொல்லலாம்.அப்படியிருந்தும் நீங்கள் எதற்காக என் வீரத்தைத் தாராளமாகப்பாராட்டினீர்கள்? சோழ நாட்டில் இது கிடைக்காததால் பாண்டி நாட்டுக்குப்புகலிடம் தேடி ஓடிவந்தேன். வணிகர் மெய்யப்பர் என்னை வளர்ப்புமகனைப்போல் கவனிக்கிறார். வாள் பிடிக்கும் கரம் நூல் பிடிப்பதால் என்னகுறைந்துவிட்டது? இந்த வேலை போதும் எனக்கு.”

முத்தரையர் அவனை நம்பவும் இல்லை; நம்பாமலும் இல்லை.மனத்தராசு இரு புறமும் ஆடிக்கொண்டிருக்க “மெய்யப்பரின் ஆள்என்பதால் உன் சொல்லை மெய்யென்று நம்பச் சொல்கிறாயா?” என்றுகேட்டார்.

“பொய்யாகவே இருந்து விட்டுப் போகட்டும்; எனக்குப் பொழுதாகிறது!”என்று அவசரப்பட்டான் அவன். “அம்மணிக்குப் பிடித்திருந்தால் துணிகளை எடுக்கச் சொல்லிப் பொன் கொடுங்கள். இந்தத் துணிகளுமே பொய் என்றால் எனக்கு விடை கொடுத்து அனுப்புங்கள். இன்னும் நாலு இடங்களுக்குப் போய்ப் பார்த்துவிட்டு நான் அங்காடிக்குத் திரும்பவேண்டும்.”

“மூட்டையை எடுத்துக்கொண்டு உள்ளே வா!” என்று சொல்லிவிட்டுமுன்னால் சென்றார் வீட்டுக்காரர்.உள்ளே போனால் வெளியே வரமுடியுமா என்ற சந்தேகத்துடன்தயங்கிக்கொண்டே நுழைந்தான் வீரமல்லன். வீட்டுக்குள் அவனுக்கு உபசாரமும் நடந்தது; வியாபாரமும் நடந்தது. தனக்குப் பிடித்த ஆடைகளைத்தேர்ந்தெடுத்துக் கொண்டு, “நாளை மறுநாள் இந்தப் பக்கமாக வந்தால் புதுவிதமாக கச்சைகள் கொண்டு வருகிறீர்களா?” என்றாள் திலகவதி.வருவதாக அவனும் தலையாட்டி வைத்தான்.பொருளுக்குரிய பொன்னைக் கொடுத்துவிட்டு, “திலகவதி! தம்பிக்கு மோர் கொண்டு வா, வாள் வீசிக் களைத்திருக்கிறான்” என்று சொல்லி அருகிலிருந்த அறைக்குள் சென்றார் முத்தரையர்.

“பயந்தவர்போல் காணப்படுகிறீர்களே! கொழுமோர் காய்ச்சிக்கொண்டுவரட்டுமா?” உள்ளே சென்று வந்து குளிர்ந்த மோர் நிறைந்த வெண்பொற்கலத்தை நீட்டினாள் அவள். அவளுடைய குளிர்ந்த மேனியின் அழகையும் அந்த மோரையும் ஒன்றாகப் பருகினான் வீரமல்லன். அவள் பேச்சில் திடீரென ஏற்பட்ட மரியாதை, அவன் உள்ளமெல்லாம் குளிரச்செய்தது.

அதற்குள் அறைக்குள் சென்று திரும்பி வந்த முத்தரையர் அவனிடம் ஒரு பொருளைக் கொண்டு வந்து கொடுத்தார். “இந்தா உன்னுடைய ஆயுதத்தை நீயே வைத்துக்கொள்!” வீரமல்லன் அவர் மீது எறிந்த பழையவளை எறி அது.

வளை எறியைக் கண்ட வீரமல்லன் திடுக்கிட்டுத் திகைத்தான். அதன்மீது தன் கோபத்தைக் காண்பிக்கும் முறையில் அதை இரண்டாகஒடிக்கப் போனான்.

“வீணாகச் சிரமப்படாதே தம்பி! உன்னால் அதை முறிக்க முடியாது.”

வளை எறிய முறிப்பதென்பது எளிதான காரியமல்லதான். ஆனால்அவன் அதை முறிக்காமல் விடுவதாக இல்லை. தன் மூச்சை அடக்கி அதன் இரண்டு முனைகளையும் வளைக்க முயன்றான்! அந்த முயற்சியில் அவனது நெற்றி நரம்புகளும் கரங்களின் நரம்புகளும் புடைத்தெழுந்தன. நறநறவென்று பற்களைக் கடித்துக்கொண்டே அதனிடம் தன் வலிமையைப் பணயம் வைத்தான். படீரென்று சத்தத்துடன் அது இரண்டு துண்டுகளாக ஒடிந்து விழுந்தது.

இராமன் வில்லை வளைத்து முறித்தபோது சீதை எவ்வளவு ஆனந்தப்பட்டாளோ தெரியாது. ஆனால் திலகவதியின் ஆனந்தம் அதில் சிறிதளவும் குறையவில்லை. முத்தரையரும் இளைஞனின் தோள் வலிமையைக் கண்டு தமக்குள் வியக்கலானார்.

“அம்மணி! உங்கள் தந்தையாருக்கு அபசாரம் செய்த இந்த வளைஎறிஇனி என்னிடம் இருக்க வேண்டாம். இதைக் கொண்டுபோய் அடுப்பில் போடுங்கள்!”

வாங்கிக்கொண்டு உள்ளே போனவள் அதை அடுப்பில் போடாமல் தன் மார்பகத்துடன் அணைத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டாள். பிறகு தன் அத்தையாருக்குத் தெரியாமல் பத்திரப்படுத்தினாள். பின்னர் அவனைப்பார்த்துக்கொண்டே திரும்பிவந்தாள்.

“முத்தரையரே!” என்று யாரோ வாசலிலிருந்து வீட்டுக்காரரை அழைக்கும் குரல் கேடடது.

“யாரது?” என்று கேட்டுக்கொண்டு துள்ளியெழுந்தான் வீரமல்லன். கலகலவென்று சிரித்துவிட்டு, “அப்பாவைக் கூப்பிட்டால் நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள்!” என்றாள் திலகவதி.

“நீங்களும் முத்தரையர்களோ?” தெரியாதவன் போல் கேட்டான் வீரமல்லன்.

“நீங்கள்?”

“நான் வீரமல்ல முத்தரையன்.”

“என்ன!”-ஏக காலத்தில் தந்தையும் மகளும் சேர்ந்து எழுப்பியவியப்பொலி அவன் எதிர்பார்த்த வெற்றியைத் தந்துவிட்டது. தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் அவன்.

விடைபெற்றுக் கொண்டு வீரமல்லன் புறப்பட்டபோது, அவனை அங்கு அடிக்கடி வந்து போகுமாறு கூறினார் பெரும்பிடுகு முத்தரையர். அவன் கொண்டு வருவதாகச் சொன்ன புதிய துணிச்சுமை மலர்ச்சுமைபோல் இலேசாகமாறியது. மனத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு விரிசலுடன் அவன் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிச் சென்றான்

தொடரும்


 
 
 
 

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...