Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 1- 9-வாணிகம் வளர்த்த மண்-வீரம் விளைத்த மண்




மனிதர்கள் தங்கள் மனவலிமையையும் உடல் வலிமையையும் நம்பி வாழ்ந்த காலம் அது. திரை கடலோடித் திரவியம் சேர்ப்பதென்பது, தொலைதூரத்து நாடுகளின் போர்களங்களுக்குச் சென்று மீள்வதைப் போன்றது. கீழைக் கடலில் கிழக்கு நோக்கிப் புறப்பட்டால் எதிர்க்கரை காண்பதற்கு, வாரங்களல்ல-மாதங்கள் காத்திருக்க வேண்டும். மாநக்கவரம் தீவுகளில் சில தினங்கள் தங்கி மீண்டும் கிளம்பினால், ஒரே நீலக்கடல்,நீலவானம், திரும்பிய பக்கமெல்லாம் நீல நிறந்தான். சார்ந்த காற்று வீசத் தொடங்கும் காலங்களில்தான் பாய் மரங்களை அவிழ்த்துக் கொண்டு துடுப்புப் போடுவார்கள். சார்ந்த காற்று எதிர்க்காற்றாக மாறாதிருக்க வேண்டும்; கடல் அலைகள் மலைச் சிகரங்களின் உயரத்துக்கு எழும்பாதிருக்க வேண்டும். இன்னும் மறைந்து மோதும் கடற்பாறைகள்,

முதுகால் கலம் கவிழ்க்கும் திமிங்கிலங்கள், துள்ளித்தாக்கும் சுறா மீன்கள்,நள்ளிரவில் கொள்ளை கொள்ளும் கடற் கள்வர்கள்-இவ்வளவு தொல்லைகளையும் கடந்து செல்ல வேண்டும், கடந்து திரும்பவேண்டும்...இதில் நம் தமிழ்நாட்டு வணிகர்கள் என்றுமே சளைத்தவர்களல்லர்.

ஐயவீர நாச்சியப்பரைச் சேர்ந்தவர்கள் கடல் வாணிகத்திலும் தேர்ந்தவர்கள்; தரை வாணிகத்திலும் தேர்ந்தவர்கள். அவர்களுக்கென்று நாடுகள் தோறும் தனிக் குடியிருப்புகள், நகரங்கள் தோறும் விடுதிகள்,சொந்தக் கட்டுக்காவல் அனைத்தும் உண்டு.

திருவெண்ணெயில் நகரிலிருந்து நாச்சியப்பர் வந்து விட்டார் என்னும் செய்தியை மாமன்னரிடம் வந்து கூறினான் இளங்கோவேள்.வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்த வெகுமதிப் பொருள்களுடன் அவர் விருந்தினர் மாளிகையில் வந்து இறங்கியிருப்பதைத் தெரிவித்தான்.அவருடைய வரவுக்காகவே அவனை அரண்மனை வாயிலில் நிறுத்தியிருந்தார் சக்கரவர்த்தி.

“வெகுமதிப்பொருள்கள் மாளிகையிலேயே இருக்கட்டும். அவரைத்தனியாக அழைத்துக்கொண்டு நீயும் வந்து சேர்".

வணிகர் தலைவரை வரவேற்பதற்கு மாமன்னர் காட்டிய உற்சாகத்தைக் கண்டவுடன் சுற்றிலுமிருந்தவர்கள் வியப்பெய்தினார்கள். ‘மதுரையில் ஒரு புதுமாளிகையை ஏன் எழுப்பச் சொல்கிறார் சக்கரவர்த்தி!’ என்ற கேள்வியால் அவர்களிடம் சற்று முன்பு எழுப்பிய பரபரப்பு இப்போது அடங்கிவிட்டது.அவர்களுடைய கவனத்தை நாச்சியப்பர் பக்கமாகத் திருப்பிய சக்கரவர்த்தி,“ஐயவீர நாச்சியப்பரை உங்களுக்கு முன்னமேயே தெரியும். நமக்கு அவருடைய ஒத்துழைப்பும் இப்போது அவசியமாக இருக்கிறது. அதனால் அழைத்திருக்கிறேன்” என்றார். உள் வாயிலில்நு ழைந்துகொண்டே, “வணக்கம் பேரரசே! என்று கரம் கூப்பிவிட்டு, மற்றவர்களையும் வணங்கினார் நாச்சியப்பர்.

“வாருங்கள்!” என்று ஓர் ஆசனத்தைச் சுட்டிக்காட்டினார் மாமன்னர். பிறகு மற்றவர்களிடம் திரும்பி “காவியத் தலைவன் கோவலனின் வழிவந்தவர்கள் இவர்கள். பட்டினத்தடிகளைப் பெற்றெடுத்துச் சைவத்தையும்தமிழையும் வளர்த்திருக்கிறது இவர்களது பெருங்குடி!” என்றுபுகழ்ந்துரைத்தார்.

“இவற்றையெல்லாம்விட, தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாணிகம் செய்து வளர்கிறோம் என்பதே எங்களுக்குப் பெருமை!” என்றார் நாச்சியப்பர்.

வணிக நிலையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் கேட்டு விட்டு, “ஒருமுக்கியமான உதவி கோருவதற்காகவே உங்களை இங்கு வரவழைத்தோம்”என்றார் இராஜேந்திரர்.

“உதவியா! உதவி என்பது என் தகுதிக்கு மேற்பட்ட சொல் சக்கரவர்த்திகளின் கட்டளை எதுவோ, நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.”

“வெளி நாடுகளுக்குச் சென்றுள்ள மரக்கலங்களைத் தவிர இப்போது உங்களிடம் உள்ள மரக்கலங்களில் எவ்வளவு கலங்களை நீங்கள் சோழப்பேரரசுக்குக் கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கொடுத்து உதவவேண்டும். நான்கு மாதங்களில் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.”

“கடல் மல்லை, நாகை, விழிஞம், காந்தளூர் ஆகிய எல்லா நகரங்களிலுமாக இப்போது முப்பது பெருங்கலங்களும் பத்துப் பன்னிரண்டு சிறு கலங்களும் இருக்கின்றன. அவ்வளவையும் தாங்கள் எந்தத் துறைக்கு அனுப்பும்படிக்க ட்டளையிடுகிறீர்களோ, அங்கு அனுப்பி வைக்கிறேன்” என்று தயங்காது பதிலளித்தார் வணிகர் தலைவர்.

“நாகைப்பட்டினத்துக்கு அனுப்புங்கள்” என்று கூறினார் மாமன்னர். “இந்த இடைக்காலத்தில் அதனால் உங்களுக்கு வருவாய்க் குறைவு ஏற்படும். அதற்கு ஈடாக நம்முடைய தன பண்டாரத்திலிருந்து உங்களுக்குப் பொன் வழங்கச் செய்கிறேன். தயங்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.” “சக்கரவர்த்திகள் என்னை மன்னித்தருள வேண்டும்.”

“ஏன்?”

“பொன் வழங்குவதாகத் தாங்கள் கூறுவது தங்கள் பொன்னான மனத்தைக் காட்டுகிறது. நாங்கள் அதை ஏற்றுக் கொள்வது முறையாகுமா? நான்கு மாதங்களுக்கென்ன நான்கு ஆண்டுகளுக்கு எங்கள் கலங்கள் பேரரசின் கலங்களாகவே திகழட்டும். அது எங்கள் பாக்கியம்! நான்கு தலைமுறைகளுக்கான பொற்குவியலாய் எங்களிடம் நிறைந்திருக்கிறது.”

“எதையும் கணக்கோடும் முறையோடும் செய்பவர்கள் என்ற பெயர் உங்களுக்கு உண்டு. ஐந்நூற்றுவரான உங்கள் கூட்டத்தாரில் ஒருவர் மனமும் இதனால் நோகக்கூடாது. மற்றப் பெரிய தனக்காரர்களிடமும் கலந்து ஆலோசனை செய்யுங்கள். நாட்டின் வாணிகமும் இதனால் சீர்குலையக் கூடாது.”

“ஒரு போதும் இதனால் வாணிகம் தடைப்பட்டு விடாது” என்றார் நாச்சியப்பர். “மேலை நாடுகளிலிருந்து திரும்ப வேண்டிய கலங்கள் வேறு இருக்கின்றன. யவனம், கடாரம் முதலிய நாடுகளின் கப்பல்களையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். வணிகர் கூட்டமே இதனால் பெருமையுறும் சக்கரவர்த்திகளே!”

பொருள் கொடுக்காமல் கலங்களைப் பெற்றுக்கொள்வதில் சக்கரவர்த்திக்கு விருப்பமில்லை. அப்படிப் பெற்றுக் கொண்டால் அது அதிகாரத்தினால் பெற்றுக்கொண்டதற்கு ஒப்பாகும் என்று கருதினார்.

வணிகர் தலைவர் ஒரு வழியாக விட்டுக் கொடுக்க முன் வந்தார்.

“சக்கரவர்த்திகளின் கருத்து எனக்குப் புரிகிறது. அப்படியானால் ஒரே ஒரு பொற்கழஞ்சை நாங்கள் ஈடாகப் பெற்றுக் கொள்கிறோம்.”

“ஒரு பொற் கழஞ்சா!”

“ஒரு கோடிப் பொன்னுக்கு அது ஒப்பாகும்” என்றார் ஐயவீர நாச்சியப்பர். மன்னரும் மகிழ்ச்சியுற்றார். “ஐயவீரரே! வணிகரின் திறமை பெரும் பொருள் கொள்வதில்தான் வழக்கமாக வெளிப்படும். பொருள் வழங்குவதிலும் நீங்கள் திறமையாளர்கள். இருக்கட்டும். போர்க்கலங்களுடன் துணைக்கலங்களாக அவற்றில் உணவுப் பொருள்களையும் போர்க்கருவிகளையும் ஏற்றிச் செல்ல விரும்புகிறோம். கலங்களை இயக்கும் மீகாமன்களையும் துடுப்பினரையும் உடன் அனுப்புங்கள். மேலும் கலங்களைக் காப்பதற்கு எறி வீரர்களும் முனைவீரர்களும் தங்களிடம் இருப்பார்களே?”

“வேல் எறியும் முந்நூறு எறி வீரர்களும், வில்வளைக்கும் நானூறு முனை வீரர்களும் இப்போது இருக்கிறார்கள். துடுப்பு வலிப்பவர்கள் கூடச் சமயம் நேரும்போது வேல்வீசக்கூடியவர்கள்தாம். அனைவரையும் கலங்களுடன் அனுப்பி வைக்கிறேன்.”

மாமன்னர் தமக்குப் புன்புறம் அமர்ந்திருந்த திரு மந்திர ஓலை

நாயகத்திடம் திரும்பி, “ஓலை எழுதிக் கொடுத்து படைக் கணக்கரிடம் பதிவுசெய்து கொள்ளுங்கள்” என்று பணித்தார். பொன் தட்டில் பழம் பூ தாம்பூலம் முதலிய மங்கலப் பொருள்கள் வந்தன. அதில் ஒரு பொற் கழஞ்சு வைத்து மாமன்னர் வணிக மன்னரிடம் கொடுத்தார். எழுந்து நின்று இரு கரங்களையும் ஏந்திப் பெற்றுக் கொண்ட நாச்சியப்பர், கழஞ்சை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு அதைத் தனியே பத்திரப்படுத்தி வைத்தார்.

அடுத்தாற்போல் வணிகரின் ஆட்கள் வெளிநாட்டரசர்கள் அளித்த வெகுமதிப் பொருள்களை அங்கே கொண்டு வந்து வைத்தார்கள். வண்ண வண்ணப் பொம்மைகள், சின்னஞ்சிறு சிற்பங்கள், தங்கத்திலும் தந்தத்திலும் இழைத்த புத்தர்பிரானின் சிலை உருவங்கள் முதலியவை அவற்றில் இருந்தன. நவரத்தினங்கள் பதித்த பொன்னாபரணங்களுக்கும் குறைவில்லை. கடாரத்தரசர் சங்கிராம விஜயோத்துங்க வர்மனும் மற்ற அரசர்களும் கொடுத்தனுப்பியவை எனக் கூறினார் நாச்சியப்பர். ஆலோசனை முடிந்துவிட்டதால், அங்கு குழுமியிருந்தவர்கள்

அனைவரும் அவற்றை வியப்போடு பார்வையிட்டனர். இராஜேந்திரரும் கீழை நாடுகளின் கலை நுட்பத்தைப் பாராட்டினார். பிறகு தமது திருமந்திர ஓலைநாயகத்திடம் அவற்றை ஒப்புவித்து, “ஆபரணங்களைப் பெரிய உடையார் திருக்கோயிலுக்கும் பிறவற்றை நகரத்தின் கலைக் கூடத்துக்குமாகப் பிரித்துக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார். தமக்கென எதையும் எடுத்துக் கொள்ளாத அவரது பெரும் போக்கு வணிகர் தலைவரை பெருவியப்பில் ஆழ்த்தியது.சபை கலைந்து எல்லோரும் வெளியே வந்தபோது இராஜேந்திரர் நாச்சியப்பரை அருகில் அழைத்து “நாளைக்கு அதிகாரிகளின் பொதுச்சபைகூடுகிறது! அதில் கலந்து கொண்ட பிறகு நீங்கள் பிற்பகலில் ஊருக்குப் புறப்படலாம்” என்றார். சபை முடிந்தவுடன் அவரிடம் தனிமையில் சிலவிஷயங்கள் பேசவேண்டுமெனத் தெரிவித்தார்.

மறுநாள் சித்ரா பௌர்ணமி. சோழப் பேரரசின் உறுதிமிக்க தூண்களான இருக்குவேளிர்,பழுவேட்டரையர், வல்லவரையர், சம்புவரையர், பல்லவரையர், முனையரையர்,முத்தரையர், ராஜாளியார், பெருங்கொண்டார், படையாட்சியார் முதலிய பெருங்குடித் தோன்றிய அதிகாரிகள் அரண்மனைப் பொதுமண்டபத்தை அலங்கரித்திருந்தனர். கிரேக்க நாட்டுக் கருங்கற் சிலைகள் தங்களது வலியும் வனப்பும் தோன்ற அங்கே கொலுவீற்றிருப்பது போல் தோன்றியது. வேல்தாங்கிய வீர்கள் சபை மண்டபத்துக்கு எதிரே வழி நெடுகிலும் கம்பீரமாக

நின்று, வரும் கூட்டத்தினரில் வரக்கூடாதவர்கள் யாரும் நுழைந்து விடாதவாறு கண்காணித்துக் கொண்டிருந்தனர். வாழ்த்தொலி வானத்தைக் கிடுகிடுக்க வைக்க, சோழப் பேரரசின் சக்கரவர்த்தி தம் உடன் கூட்டம் புடைசூழ அரசவைக்குள் அடி எடுத்துவைத்தார். மேல் மாடத்திலிருந்த வண்ணம் பெண்கள் மலர்மாரி பொழிந்து இனிய மணத்தை எழுப்பினர். கதிரவனின் காலைப்பொன்னொளி தேங்கும்

முகமண்டலம், வீறுகொண்ட வேழத்தின் நடையழகு, நெடுதுயர்ந்த உருவத்தின் பரந்த மார்பகம் இவற்றைக் கண்ணுற்ற அதிகாரிகள் தங்கள் இமைப்பை மறந்து விட்டனர். செக்கச் சிவந்த செந்தாமரை மொட்டுக்களா கண்கள் பளபளக்கும் கருவிழிகள் பாதாளக் குகை வாயில்களா சபையினருக்கு வணக்கம் செலுத்திவிட்டு அரியாசனத்தில் அமர்ந்த மாமன்னர் சுற்றிலும் குழுமியிருந்தவர்களை ஒருமுறை ஊடுருவிநோக்கினார்.ஆயிரக்கணக்கான அதிகாரிகளையும் தனித்தனியே அவர் உற்று நோக்குவது போலிருந்தது அந்தப் பார்வை. பிறகு செங்கோலும் கரமுமாக எழுந்து நின்று தமது பேருரையைத் தொடங்கலானார்:

“தமிழ்ப் பெருமக்களின் அன்புக்குரிய தலைவர்களே! உங்கள்

அனைவரையும் இங்கு ஒன்றாய்க் காண்பது, இந்த நாட்டிலுள்ள பெருந்திரளான மக்கள் யாவரையும் சேர்த்துக் காண்பது போன்ற மகிழ்ச்சியைத் தருகிறது.எத்தனையோ காதத் தூரங்களிலிருந்தெல்லாம் வந்து குழுமியிருக்கிறீர்கள்.

இங்கு நான் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் இரண்டே இரண்டு குறட்பாக்களை மட்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்; குறள் கூறும்செய்தியை, நான் கூறிய செய்தியாகவும் ஏற்றுக்கொண்டு இந்த நாடு முழுவதும் பரப்புங்கள்!”

மாமன்னர் தமது செங்கோலை உயர்த்திக் காட்டி முழங்கினார்.

“வானோக்கி வாழும் உலகமெல்லாம் மன்னன்
கோல்நோக்கி வாழும் குடி”

“இந்தச் செங்கோல் என் கரத்தில் மட்டும் இருப்பதாக நினைக்காதீர்கள். இங்கு கூடியுள்ள ஒவ்வோர் உள்ளத்திலும் இது வேரூன்றி நிற்க வேண்டும்.நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றையும் இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் போதும்.
“வான்மழை பொய்யாத நாடு இது. அதைத் தேக்கி வைத்து இமயத்தைப்போன்ற செந்நெற்கதிர் குவிப்போம். இன்னும் அன்பை வளர்க்க அருங்கலைகளை அளவின்றிப்பெருக்குவோம். அறத்தை வளர்க்கப் பெருங்கோயில்கள் எழுப்புவோம்.

“இவ்வளவு ஆக்கப்பணிகளையும் நாம் செய்ய வேண்டுமானால், நம்மை அழிக்கக்கா த்துக்கொண்டிருப்பவர்களை நாம் வளர விடக் கூடாது. பேரரசுக்குள்ளேயும் வெளியேயும்சூழ்ந்து நிற்கும் புகைப்படலம் நாளுக்கு நாள் நம்மை அச்சுறுத்திக் கொண்டே வருகிறது. உட்பகையையும் வெளிப்பகையையும் களையும் நாள் தொடங்கி விட்டது. இனி நாம் களைப்படைந்தோ, உயிர் துறந்தோ கீழே விழும்வரையில், இந்தக் களையெடுக்கும் வேலை நிற்கப் போவதில்லை.

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களை
கட்டதனொரு நேர்.”

மாமன்னரின் முகம் உறுதியால் சிலையாகியது. சினத்தால் செம்பொன்னாகியது. வீரவேங்கையின் வெற்றித் திருமகன் சிம்ம கர்ஜனை செய்யலானார்.

“பயிர் விளைய வேண்டுமானால் களை பிடுங்கத் தான் வேண்டும்!தமிழ்க் குலம் வாழ வேண்டுமானால் அதை அழிக்கக் காத்திருப்பவரின் ஆணவத்தை நாம் அடக்கித்தான் தீரவேண்டும்! இனி நம் வாழ்வெல்லாம் ஒரே போராட்டந்தான்! தமிழ்க்குலம் தரணியில் வாழ்ந்த சுவடே தெரியாமல் அழிக்கக் காத்திருக்கும் பகைவர்களுக்கு இனிக் கெட்ட காலம் தொடங்கிவிட்டது.

“இனி சோழவள நாட்டின் ஒவ்வொரு வீடுமே இருவகைப் பாசறைகள்;ஒவ்வொரு ஊரிலும் இரண்டு வகைப் படை வீரர்கள்! ஒரு படை ஆக்கப்படை; கிணறுதோண்டி, குளம் வெட்டி, ஏரிகட்டி வரப்புயர்த்தி அது பயிர் வளர்க்கும். மற்றொரு படை அழிவுப்படை. நம்மை அழிக்க வரும் தீமைகளை அழிக்கும் படை நம் வாழ்வே இனிப் போராட்ட மென்பதையும் போராடச் சக்தியற்ற இனம் வேர்விட்டு வளராது என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.

“பொறுப்பு உங்களுடையது; அதிகாரம் உங்களது. இங்கு ஊர்ச்சபைத் தலைவர்களிலிருந்து நாட்டுத்தலைவர்களான சிற்றரசர் வரை கூடியிருக்கிறீர்கள்.உங்களுக்கும் ஒரு சொல்: இந்த நாட்டின் மக்கள் என்னுடைய சொந்தக்குழந்தைகள். அவர்களுக்குத் தீங்கு செய்தால் அது எனக்குச் செய்த தீங்காகும். அதுவே ராஜத்துரோகம்; பெரிய அதிகாரிகள் சுற்றிவந்து ஊர்ச்சபை கூடும்போது தலைவர்களின் போக்கில் தவறு கண்டால்,பயிரையே மேய்ந்த வேலிகளாக அவர்கள் கருதப்பட்டார்கள்.

“நம்முடைய போராட்டங்களில் நாம் வெற்றி பெற, நாம் வளம் பெற்றுவாழ இறைவன் பேரருள் புரிவானாக!,

மாமன்னரின் மணிமொழிகள் முடிந்த பின்னரும் அவை நெடுநேரம் ஒவ்வொருவர் செவிகளிலும் ஒலித்துக் கொண்டே இருந்தன. சபையைவிட்டு அரசர் பெருமான் சென்றபிறகு மெல்ல ஒவ்வொருவராகச் சிந்தனையில் ஆழ்ந்தபடியே எழுந்து சென்றனர்.

சபை கலைந்து நடுப்பகல் உணவும் முடிந்தது. வணிகர் தலைவர் ஐயவீர நாச்சியப்பர் விடைபெற்றுக் கொண்டு செல்வதற்காக மாமன்னரின் திருமுகம்காண விரும்பினார். அவரைத் தனியே வைத்துக் கொண்டு அரைநாழிகைப் பொழுது அவரிடம் அந்தரங்கமாக உரையாடினார் இராஜேந்திரர். “வணிகர் பொறுப்பின் சுமை ஏற்கனவே அதிகம். அதோடு நாடு காக்கும் பொறுப்பிலும் சிறு பகுதியை உங்களிடம் விட்டு வைக்க நினைக்கிறேன். உங்களைச் சேர்ந்தவர்கள் நாலா திசைகளுக்கும் செல்கிறார்கள். அவர்களில் சிலரோடு என் ஆட்கள் ஓரிருவரையும் நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.”

“பொன் விளையும் இந்த மண்ணுக்கு எங்களால் ஆகும் பணியைச்செய்ய எப்போதும் சித்தமாய்க் காத்திருக்கிறோம் சக்கரவர்த்திகளே!”

“உங்களை நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையைப் பெறக்கூடியவணிகர்கள் உங்களிடம் இருக்கிறார்களா!”

“பேரரசின் ஒற்றர்கள் ஒருவேளை மாறினாலும் மாறுவார்கள். சோழநாட்டின் சோற்றுக் கடனை நாங்கள் ஒரு போதும் மறக்கமாட்டோம்.”

“ஈழநாட்டுக்குப் புறப்படுவதற்குள் எங்கள் ஒற்றர் சிலரைத் தனித்தனியே உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். பாண்டிய சேர நாட்டு வணிகர்களிடம் அவர்களைப் பணியாற்றச் செய்யுங்கள். ஒரு ஒற்றனுக்கு மற்றொரு ஒற்றன் இருக்குமிடம் தெரிய வேண்டாம்.”

“சித்தம் சக்கரவர்த்திகளே!” சிரம்தாழ்த்திக் கரம் கூப்பி விடைபெற்றுக்கொண்டார் வணிக மன்னர்.

தொடரும்


November 20, 2012




Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில