மூவர் கோயிலின் அர்த்தஜாமத்து மணியோசை கணீரென்று காற்றில்சுழன்று வந்து, கொடும்பாளூர் நகர மாந்தரின் மனத்தில் புனிதமானதொரு சலனத்தை எழுப்பத் தொடங்கியது.
மணியோசை கேட்ட மாமன்னர் தாம் சாய்ந்திருந்த கட்டிலிலிருந்து கீழே குதித்து, கோயிலின் பக்கம் திரும்பி நின்று பயபக்தியுடன் கரம் குவித்தார். மதுராந்தக வேளாரும், வல்லவரையர் வந்தியத் தேவரும் தங்கள்தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு, அவ்வாறே இறைவனுக்கு அஞ்சலி செலுத்தினர். “உணவு சித்தமாயிருக்குமே?” என்று கேட்டார் இராஜேந்திரர், அதுவரையில் மணியோசைக்காகக் காத்துக் கொண்டிருந்தவர் போல்.
மேல்மாடக் கூடத்தைவிட்டு மூன்று பெரியவர்களும் கீழே இறங்கி வந்தார்கள். அவர்களோடு சேர்ந்து உண்பதற்காக இளங்கோவேளும் பொறுத்துக் கொண்டிருந்தான். அவனைத் தமக்கு அருகில் உட்கார வைத்துக்கொண்டு கலகலப்பாகப் பேசிய வண்ணமே விருந்தைச் சுவைக்கத்தொடங்கினார் சக்கரவர்த்தி. விருந்து அற்புதமான விருந்து. முக்கனியும் தேனும் பாலுமாக இலை நிறைந்த அறுசுவைப் பண்டங்கள்.
இளங்கோவிடம் அவனுடைய நண்பனின் உணவு முடிந்ததா என்பது பற்றிக் கேட்டார் மாமன்னர். முன்னரே விருந்தினர் மாளிகைக்கு உணவனுடைப்பிவிட்டதாகக் கூறினான் இளங்கோ. “ஆம், உடன் வந்திருப்போரை முதலில் கவனிக்க வேண்டும்” என்றார் அவர்.
வீரமல்லனின் பேச்சைச் சக்கரவர்த்தி எடுத்தவுடன் இளங்கோவுக்கு உணவு இறங்கவில்லை. அதுவரை சுவை நிரம்பியிருந்த பண்டங்கள் அதன்பிறகு அவனுக்கு வேம்பாய்க் கசந்தன. ‘சே! நண்பன் ஒருவன் செய்யும் செய்கையா அது?’
பூங்காவிலிருந்து இளங்கோவும் அருள்மொழியும் திரும்பும்போது அவர்களை ஓர் உருவம் மறைந்து நின்று கண்காணித்ததல்லவா? அவன் வீரமல்லன்தான். அதை அப்போதே தெரிந்து கொண்டுவிட்டான் இளங்கோ. சிறிதளவு அவனுக்கேற்பட்டிருந்த சந்தேகமும், மேல்மாடத்து முற்றத்திலேறிப் பார்த்தவுடன் தீர்ந்துவிட்டது. அதை அவன் அருள்மொழியிடம் வெளியிடவிரும்பவில்லை. திருடனைப்போல் ஒளிந்து நின்று பார்த்துவிட்டு, நிழலில் பதுங்கிச் செல்பவனை எப்படி அவன் தன் நண்பனென்று அருள்மொழிக்கு அறிமுகம் செய்து வைப்பான்?
உணவு முடிந்தது. தாம்பூலம் தரித்துக்கொண்டார்கள். இளங்கோ சற்று ஒதுங்கி நின்றான்.
“அதிகாலையில் நீ இங்கிருந்து புறப்பட வேண்டும் இளங்கோ!”
“ஆகட்டும், சக்கரவர்த்திகளே!” “நகரத்து மலப்பகுதியில் உள்ள திருவெண்ணெயிலில் உனக்கு ஒரு வேலை இருக்கிறது, நானாதி திசையசை ஆயிரத்து ஐநூற்றுவரான வணிகர் தலைவர் ஜயவீர நாச்சியப்பருக்கு ஓர் ஓலை தருகிறேன். அதைச் சேர்ப்பித்து மாற்றோலை வாங்கிக்கொண்டு, கலசமங்கலத்தின்* வழியாகத் தஞ்சை மாநகருக்குப் போய்ச் சேர்.”
“தஞ்சைக்குச் சென்ற பிறகு?...” என்று, அடுத்த கட்டளையை எதிர்பார்த்தான் இளங்கோவேள்.
“காஞ்சி நகரிலிருந்து இராஜாதிராஜன் அங்கு வந்திருக்கிறான். அவனிடம் நீ கண்டு வந்த விவரங்களைச் சொல். சித்ரா பௌர்ணமி வரையில் அரண்மனைக்கு வெளியூரிலிருந்து விருந்தினர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களை வரவேற்று உபசரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நாளைக்கு மறுநாள் உறையூர் வழியாக நான் தஞ்சை வந்து சேர்வேனென்று இராஜாதிராஜனிடம் சொல்.”
வணிகர் தலைவரிடம் சேர்ப்பிக்க வேண்டிய ஓலை இளங்கோவுக்குக் கிடைத்த பிறகும் அவன் அங்கேயே தயங்கிக்கொண்டு நின்றான்.
“என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று கேட்டார் இராஜேந்திரர்.
“என்னுடைய நண்பனுக்குத் தங்களை தரிசிக்க வேண்டுமென்று வெகுநாட்களாக ஆவல்!”
“அதனாலென்ன? சித்ரா பௌர்ணமிக்குப் பிறகு ஒரு நாள் தஞ்சை அரண்மனைக்கே அவனை அழைத்துக் கொண்டு வா, பார்க்கிறேன்” என்றான். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவர்போல், “தஞ்சைக்குத் திரும்பியவுடன், முன்பு அவன் எந்தப் படையில் இருந்தானோ, அதே படையில்
*கலசமங்கலம் என்பது புதுக்கோட்டை நகரத்தின் முன்னாள் பெயர்.
அதைச் சேர்ந்த நார்த்தாமலைச் சரிவில் விளங்கியது தமிழ் வணிகர் தலைநகரான திருவெண்ணெயில்; செட்டியார்பட்டி என்ற பெயரில் சிற்றூரிலும் சிற்றூராக அது தன் பழம்பெருமையைச் சொல்லிக்கொண்டு நிற்கிறது இன்றைக்கு. சேர்த்து விடு, ஒரு வாரம் சென்று நீ அவனை மீண்டும் சந்திக்கலாம்” என்றார்.
இளங்கோவேள் தன் அன்னையாரிடம் சிறுபொழுது பேசிக்கொண்டிருந்து விட்டுப் படுக்கைக்குச் சென்றான். சக்கரவர்த்தியின் கூற்றிலிருந்து வரப்போகும் சில தினங்கள் மிகவும் முக்கியமான தினங்களாக இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது. தஞ்சை அரண்மனையில் பெரிய அதிகாரிகள் கூடி ஈழத்துக்குச்செல்வது பற்றி முடிவான திட்டங்கள் உருவாக்குவார்கள் போலும்!
இளங்கோவுக்கு உறக்கம் வரவில்லை. வீரமல்லனை நினைக்க நினைக்க அவனுடைய படுக்கை முள்ளாகக் குத்தியது. ‘உடனே போய் நேரில் அவனைக் கண்டித்து விட்டு வரவேண்டும்; இல்லாவிட்டால் இந்த இரவில் நமக்குச்சிறிதளவும் அமைதி கிடையாது.’
துள்ளி எழுந்து விருந்தினர் மாளிகையை நோக்கி விரைந்தான் இளங்கோ; படபடவென்று கதவைத் தட்டினான்.
“வீரமல்லா. வீரமல்லா!”
கதவு உடனே திறக்கப்படடது. இளங்கோவைக் கண்டு திடுக்கிட்ட வீரமல்லன், “என்ன இது நடுச்சாமத்தில் வந்து பயமுறுத்துகிறாய்?” என்றுகேட்டான். அவனைப் பார்த்தால் உறங்கி எழுந்தவன் போல் தோன்றவில்லை.
“யாரைப் பயமுறுத்துவதற்காக, நீ அங்கே பூங்காவுக்கு வந்தாய்?”
நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் கூர்ந்து நோக்கிக் கொண்டார்கள்.
வீரமல்லன் தன்னை மாற்றிக் கொண்டு “பயப்படாதே! நான் கண்டகாட்சியை யாரிடமும் சொல்லவில்லை!” என்றான் குறும்புத்தனமான சிரிப்பு அவன் கண்களில் கூத்தாடியது.
“ஏன் சிரிக்கிறாய்?” வீரமல்லனின் தோளைப் பற்றி உலுக்கியது இளங்கோவின் வலது கரம்.
“கையும் களவுமாக என்னிடம் நீ அகப்பட்டுக் கொண்டதை நினைத்துச் சிரிக்கிறேன். எங்கே நான் அதை வெளியிட்டு விடுவேனோ என்றுதானே நீ என்மேல் பாய்கிறாய்?”
“உன் செய்கை எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.”
“களவு நடக்கும் வேளை என்று எனக்குத் தெரியாது. நான் காவலாளியுமில்லை, ஒற்றனுமில்லை; காற்றாட உலவுவதற்காக அங்கேவந்தேன். கண் கொள்ளாக் காட்சியொன்றைக் கண்டேன்! என்மேல் என்ன தவறு?”
“என்னைக் கண்டவுடன் ஏன் மறைந்துவிட்டாய்?”
“மன்னித்துக்கொள், உங்கள் தனிமையைக் கலைக்க வேண்டாமென்று மறுவிநாடியே திரும்பினேன். நான் அங்கே குறுக்கிட்டிருந்தால் உன்காதலியின் முகம் சினத்தால் சிவந்திருக்காதா?”
“காதலி என்று மறுமுறை சொல்லாதே!” என்று கத்தினான் இளங்கோ.
“ஆயிரம் முறை சொல்வேன்!” என்று நகைத்தான் நண்பன். “இப்படிச் சொன்னதற்காகச் சோலைமலையில் என் நாக்கை அறுத்துவிடுவதாகத் துடித்தாய் அல்லவா? இந்தா இப்போது என் நாக்கை நீட்டுகிறேன்; துண்டித்துவிடு. உங்கள் களவொழுக்கத்தை நிலவின் சாட்சியாகக் கண்டு விட்டன என் கண்கள். இந்தக் கண்களையும் பிடுங்கி விடு!” என்று பரிகாசம்செய்தான்.
கள்வனைப் பிடிக்க வந்த இளங்கோவுக்குத் தன்னையே அவன் கள்வனாக மாற்றிவிட்ட உணர்ச்சி உண்டாயிற்று. வீரமல்லனிடமிருந்து எப்படியாவது நழுவிச் சென்றால்போ துமென நினைத்தான்.
வீரமல்லனுக்கோ ஒரே ஆனந்தம். உணவு கொண்டபின் பூங்காவுக்கு உலவும் நோக்கத்தோடு வந்ததாகச் சொன்னான். ஒரு விநாடி நேரம்கூட அங்கு நிற்கவில்லை என்று சாதித்தான். நண்பனுக்கு உதவும் பொருட்டேயாரும் காணாமல் ஒளிந்து திரும்பியதாகவும உறுதி கூறினான். அவனுடைய நல்ல எண்ணத்தை நம்புவதைத் தவிர இளங்கோவுக்கு வேறு வழியில்லை. வீரமல்லனின் பேச்சை மாற்றி, அவன் மனத்தைத் திருப்ப வேண்டிய நெருக்கடி இளங்கோவுக்கு ஏற்பட்டது.
“சக்கரவர்த்தி நம்முடைய பிரயாண விவரங்களைக் கேட்டார். கூறினேன்.” என்றான் இளங்கோ. மேலும் அரண்மனைக் கூட்டத்தில் நடந்தசில தகவல்களை அவனுக்குத் தெரிவித்தான். தெரிவித்து விட்டு, “முதலில் ஈழப்படை எடுப்பு நடக்கப் போகிறது; என்னையும் உடன் அழைக்கிறார் மாமன்னர்” என்று கூறினான்.
இதனால் வீரமல்லன் உற்சாகமடையவில்லை. “என்னைப் பற்றி அவர்களிடம் ஏதும் கூறினாயா?” என்று கேட்டான்.
“கூறினேன். சித்ரா பௌர்ணமிக்குப் பிறகு உன்னைச் சந்திப்பதாக வாக்களித்திருக்கிறார்கள். நானே அழைத்துச் செல்கிறேன்.”
“நாளைக்குப் பார்க்க முடியாதா?”
“விடிவெள்ளி முளைத்தவுடன் நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டும்”என்றான் இளங்கோ.
“என்னுடைய நண்பனோ கொடும்பாளூர் இளவரசன். என் தமையனாரோ சோழர்களுக்காகச் சாளுக்கியப் போரில் உயிர்த்தியாகம் செய்தவர். இருந்தும்கூட என்னால் இன்னும் பெரிய உடையாரின் அபிமானத்தைச் சம்பாதித்துக் கொள்ள முடியவில்லை.” வீரமல்லனின் பேச்சில் சலிப்புத் தட்டியது-
பரிவோடு வீரமல்லனின் கரத்தைப் பற்றினான் இளங்கோ. “பொறுத்திரு! காலம் வரும், உன் தமையனாரின் தியாகத்துக்காவே உங்களுக்கு வரியில்லாத வீடும் நிலமும் கொடுத்திருக்கிறார்கள். உன்னைப் படையில் சேர்த்து நூற்றுவர் படைத் தலைவனாகவும் உயர்த்தியிருக்கிறார்கள். இன்னும் எவ்வளவோ வாய்ப்புக்கள் உனக்கு வரப்போகின்றன.”
இதைக் காதில் போட்டுக் கொள்ளாத வீரமல்லன் “சரி! நீ போய்ப் படுத்துறங்கு!” என்று பேச்சைப் பாதியில் வெட்டினான். நண்பனின் மனப்போக்கில் வியப்பும் வேதனையும் அடைந்த இளங்கோ அவனைத் தனியே விட்டுத் தனியறைக்கு வந்தான். அரண்மனைப் படுக்கை அவனுக்கு ஆழ்ந்த அமைதியைக் கொடுத்தது. வீரமல்லன் உறங்கவே இல்லை.
அவன் கனவில் - இளங்கோவைக் கொடும்பாளூர் வீரர்கள் ஆரவாரம் செய்து வரவேற்கிறார்கள். மக்கள் திரண்டு வந்து அவனுக்கு வாழ்த்தொலி முழங்குகிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் அவனுக்கு ஏவலாட்கள்! பெரியஉடையார் இராஜேந்திரரே அவனை அணைத்துக் கொண்டு நடந்து சென்று அவனோடு அளவளாவி மகிழ்கிறார். இளவரசி அருள்மொழியோ இன்னும் ஒருபடி மேலே போய் விட்டாள். நிலவு பொழியும் பூங்காவில், அல்லிக்குளத்துத் தென்றலில், அவள் அவனோடு குலாவிச் சிரிக்கும் சிரிப்பு-கனவுகளுக்குப்பின் நினைவுகள் தொடர்ந்து தோன்றின.
‘ஆம். இளங்கோ அவளுடைய மென் தளிர் விரலை நீட்டச் சொல்லி, அதில் என்னவோ புதுமை அழகைத் தேடினானே? அவளுக்கு முன் வீரவாள் உருவிச் சூளைரைத்தானே?- என்னவோ அவளிடம் சபதம் செய்தானே?- யார் தடுத்தாலும் கேளாது, அவளையே மாலையிட்டு மணந்து கொள்வதாகத்தான் ஆணையிட்டிருப்பான்!- இவ்வளவும் செய்துவிட்டு என்னிடம் எதற்காகப் பொய் வேடம் போடுகிறான்?’
நாட்டுக்காக ஒற்றுப்பணி செய்யப்போன வீரமல்லன் தன் நண்பனுக்கே ஒற்றனாக மாறினானே தவிர, அதையும் சரிவரச் செய்யவில்லை. கண்களால் கண்டதுடன், அவர்களுடைய உரையாடலை ஒன்றிக் கேட்குமளவுக்கு, இன்னும் நெருங்கிப் போயிருக்கக் கூடாதா?
பாவம்! இளங்கோவின் கனவிலும் அருள்மொழி வரவில்லை, நினைவிலும் எட்டிப் பார்க்கவில்லை! அவனோ சஞ்சீவி பர்வதத்தை அநுமன் தூக்கிக்கொண்டு காற்றில் பறந்ததுபோல, ஈழத்திலிருந்து மணிமுடியை ஏந்திக் கொண்டு தஞ்சையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தான். அவன் கனவில்கீழே கடல், மேலே ஆகாயம், கையில் மணிமுடி.
விடிவெள்ளி முளைத்தது. கொடும்பாளூர்க் கொள்ளைத் தின்ற புதிய தினவோடு இரண்டு புரவிகளும் கோட்டை வாயிலை விட்டு வடக்கில் பறந்தன. பொழுது புலர்ந்து புள்ளினம் பாடும் வேளையில் இளங்கோவும் வீரமல்லனும் தெலுங்க குல காலபுரத்துக்கு வந்தார்கள். நார்த்தாமலை என்று இப்போது அழைக்கப்படும் நகரத்தார் மலையின் மற்றொரு பெயர் அது.
மலைப்பாங்கான பகுதியில் வந்து கொண்டிருந்த இளைஞர்களுக்குத் திருவெண்ணெயில் நகரத்தின் சிறு கோட்டை மதில்கள் தென்பட்டன.கோட்டை கட்டிக் குடியிருப்புக்கள் அமைத்துக் கொள்ளும் உரிமையும்,
தாங்களே சொந்தமாகக் காவல் வீரர்களை வைத்துக்கொள்ளும் தகுதியும் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவருக்கு உண்டு. சோழப் பேரரசின் பேராத ரவையும் நன்மதிப்பையும் பெற்றிருந்த வணிகர்கள் அவர்கள்.
வாயிற் காவலர்களில் ஒருவன், தூதுவர்களைத் தங்கள் தலைவரின் மாளிகைக்கு அழைத்துச் சென்றான். வழியில் தெரிந்த வீடுகள் ஒவ்வொன்றும் சின்னஞ்சிறு அரண்மனைகளை ஒத்திருந்தன. கடல் கடந்து வந்த செல்வத்தின் சின்னங்கள் அங்கு திரும்பிய பக்கமெல்லாம் தெரிந்தன. நகரின் மையத்தில் நின்றது, சமணர்களுக்காக அவர்கள் கட்டிக் கொடுத்த ஐந்நூற்றுவப் பெரும்பள்ளி. அதற்கடுத்தாற்போல் அவர்களுடைய சைவத் திருத்தலம்.
ஐயவீர நாச்சியப்பர் தமது அகமும் முகமும் மலர இளைஞர்களை வரவேற்று உபசரித்தார். அவருடைய உள்ளத்தைப் போலவே, உருவமும் பெரிதாக இருந்தது. இரட்டை நாடித் தேகம்; இனிப்பான பேச்சு. ஓலையைப் பெற்றுக் கொண்டு அவர் கூறினார்:-
“கீழைக் கடற்கரை நாடுகளிலிருந்து இப்போதுதான் நம்முடைய மரக்கலங்கள் திரும்பியிருக்கின்றன. மாப்பாளம், கடாரம், ஸ்ரீவிஜயம் முதலிய நாட்டரசர்கள் நமது சக்கரவர்த்திகளுக்கு வெகுமதிகள் அனுப்பியிருக்கிறார்கள். நானே நேரில் தரிசித்துவிட்டு, அவற்றைக் கொடுக்க விரும்பினேன். இந்தச் சமயத்தில் அவர்களுடைய அழைப்பு வந்திருப்பது என் பாக்கியந்தான்!”
வற்புறுத்தி அவர்களைக் காலை உணவு கொள்ளச் செய்தார் நாச்சியப்பர். தம்முடைய மாளிகைக் கூடத்தில் சேர்த்து வைத்திருந்த பிறநாட்டுக் கலைப் பொருள்களைக் காண்பித்தார். ஓலை கொண்டு வந்திருப்பவன்
கொடும்பாளூர் பெரிய வேளாரின் குமாரன் என்று தெரிந்து கொண்டவுடன், அவனிடம் நாட்டு நடப்புகளைப் பற்றியும் அளவளாவினார். இளங்கோவும் வீரமல்லனும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டார்கள்.
கலசமங்கலத்தின் வழியாகக் குதிரைகள் தஞ்சைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் திரும்பின. இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதிகளை ஆண்டு வந்த முத்தரையர்களின் நினைவு வீரமல்லனுக்கு வந்து
விட்டது. அவனுடைய முன்னோர்கள் அவர்கள். அவர்களுடைய பழம்பெருமையைப் பறைசாற்றத் தொடங்கிய வீரமல்லன், அவனை அறியாமல் சோழர்களுடைய ஆட்சியில் குறை கண்டுபிடிக்க முற்பட்டான்.
“பல்லவர்கள் காலத்தில் என் முன்னோர்கள் எவ்வளவு சிறப்போடு வாழ்ந்தார்கள் தெரியுமா? பல்லவர்களின் செல்லப் பிள்ளைகள் அவர்கள்,பல்லவரையர்கள் என்றே தாங்களும் பெயர் வைத்துக் கொண்டார்கள்.சோழர்கள் தஞ்சை மாநகரைக் கைப்பற்றியிருக்கா விட்டால், அவர்களுக்கு
நீங்கள் உதவி செய்திருக்கா விட்டால்......” வீரமல்லன் பெருமூச்சு விட்டான்.
இளங்கோவின் பொறுமை இதைக் கேட்டவுடன் பொடிப் பொடியாகத் தகர்ந்துவிட்டது.
“வீரமல்லா! உங்களைச் செல்லப் பிள்ளையாக மதித்த பல்லவர்களைத்தான் நீங்கள் திருப்புறம்பியம் போரில் காட்டிக் கொடுத்துவிட்டீர்கள். அவர்களுக்கு எதிராகப் பாண்டியர்களுக்கு நல்ல பிள்ளையாகமாறி, வளர்த்தவர்கள் மார்பிலே பாய்ந்தீர்கள்! வீழ்ச்சிக்கு முதற்காரணம் நீங்களே தான்! இதற்காகச் சோழப் பேரரசையோ எங்களையோ குறை சொல்லாதே!”
இளங்கோவின் சொல் சுருக்கென்று தைத்ததால் வீரமல்லனின் முகம் சுருகிவிட்டது. நண்பனின் முகச் சுருக்கம் காணப் பொறுக்காத இளங்கோ அவன் மனப்புண்ணை ஆற்றினான். “நண்பா! மறக்க வேண்டியதை மறந்துவிடவேண்டும். ஆயிரக்கணக்கான முத்தரைய வீரர்கள் இப்போது சோழர்களின் ஆதரவால் வளர்கிறார்கள். ஈராயிரம் பல்லவரையரைப் போன்ற பெருந்தனத்து அதிகாரிகளும் சேனைத் தலைவர்கள் பலரும் இன்று முத்தரையர்களல்லவா? நமக்குள் பிரித்துப் பேசாதே வீரமல்லா!”
நடுப்பகல் உணவும் ஓய்வும் சாலை வழியில் இருந்த ஒரு வழிப்போக்கர் விடுதியில் கிடைத்தன. மாலை நேரத்தின் மஞ்சள் வெய்யிலில் தஞ்சை மாநகரத்தின் பெரிய கோயில் கோபுரம் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது. அதன் உயரத்தில் அதைக் கட்டிமுடித்த இராஜராஜப் பெருந்தகையின் மன
உயரத்தைக் கண்டு களித்தான் இளங்கோவேள்.
November 20, 2012
தொடரும்
Comments
Post a Comment