Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-12




முதற் கப்பலில் சென்ற கடற்சேனை மாதண்ட நாயகரான மாவலிவாணராயர், மற்ற மரக்கலங்களையும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தச் செய்துவிட்டு , மாமன்னரின் கட்டளைக்காகக் காத்து நின்றார். சக்கரவர்த்தியையும் வீரர்களையும் வரவேற்பதற்காக ஜனநாதமங்கலத்திலிருந்து ஈழத்துப் பிரதிநிதி தாழிகுமரனும் பெருங்கூட்டத்துடன் வந்திருந்தார்.

வரவேற்பு ஆரவாரங்களும், குதூகலக் குரல் ஒலிகளும், முரசுகளின் முழக்கங்களும் ஈழத்து யானைகள் துதிக்கைகளை வளைத்துத் தூக்கிப் பிளிறிய பிளிறல்களும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு ஒலித்தன. மாமன்னரின் சிரத்தில் மலர் தூவி, அவரை மண்டியிட்டு வணங்கி, அவருக்கு நல்வரவு கூறியது ஜனநாத மங்கலத்து மாளிகையின் கொம்பன் யானை.

“மாவலிவாணராயரே! சரிபாதிக் கப்பல்களைத் தெற்கே ரோகணத்துக் கடற்கரைக்குக் கொண்டுபோய்ச் சேருங்கள். எங்கெல்லாம் நங்கூரம் பாய்ச்சமுடியுமோ அங்கெல்லாம் பாய்ச்சி நிறுத்திவையுங்கள். நம்மை யாரும் எதிர்க்கத் துணியாதவரையில் நம்முடைய வீரர்களில் எவரும் ஆயுதங்களைத் தொடவேண்டாம். அமைதியா, போர்தானா என்பதைத் தெரிந்துகொண்டு உங்களுக்கு ஆள் அனுப்புகிறேன். அவசியமென்றால் தெற்கிலிருந்து நம் வீரர்கள் ‘கப்பகல்லகம்’ கோட்டையை நோக்கி முன்னேறலாம்.”

தாழிகுமரன் அனுப்பிவைத்த வழிகாட்டிகளை உடன் அழைத்துக் கொண்டு மாமன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகக் கடற்சேனைத் தலைவர் மீண்டும் தம் கலமேறினார். எஞ்சியிருந்த வீரர்களில் ஒரு பகுதியினர் அங்கேயே தங்க, ஏனையோர் ஜனநாதமங்கலம் நோக்கிப் புறப்பட்டார்கள்.

சிறிய மரக்கலங்களில் மாவலி கங்கை நதியின் வழியாகச்செல்வோரும் யானைகளிலும் புரவிகளிலுமாகத் தரை மார்க்கமாகச் செல்வோருமாகப் பெருந்திரளான வீரர்கள் கிளம்பினர். சோழநாட்டு இளம் காளையர்கள் நிறைந்த கூட்டத்தால் அந்த நகரமே பொங்கி வழிந்தது.

மறுநாள் கிழக்கு வெளுத்தது. ஜனநாதமங்கலத்து அரசமாளிகையிலிருந்து ஒரு முதியவரும் இளைஞன் ஒருவனும் தெற்கு நோக்கிக் குதிரைகளில் கிளம்பினார்கள். சாமந்த நாயகருக்குரிய ஆடைஅணிகள் வந்தியத் தேவரிடம் இல்லை. கொடும்பாளூர் இளவரசனுக்குள்ள அலங்காரங்கள் இளங்கோ விடம் இல்லை. எளிய உடைகளுக்குள்ளே பதுங்கியிருந்த இரு வலிய மனிதர்களும் ரோகணத்து மன்னர் மகிந்தரிடம் தூதுவர்களாகச் சென்றார்கள். குதிரைகள் விரைந்து சென்றபோது, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியவில்லை. வந்தியத்தேவருடன் ஒன்றாகச் செல்லும் போதுதான் அவருடைய இளமையை அவனால் கணக்கிட முடிந்தது. எப்போதாவது குதிரையின் வேகத்தைக் குறைத்து அவனிடம் பேச்சுக் கொடுப்பார். மீண்டும் அவனிடம் பந்தயத்திற்குச் சவால் விடுவது போல் அதனை விரட்டுவார். மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க அவரைப் பின்பற்றுவான் இளங்கோவேள்.

புரவிகள் சிறுநடை போட்டன. “ஏன் தாத்தா உங்கள் உருவத்தையே மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் வருகிறீர்கள்?” என்று கேட்டான் இளங்கோ. அவன் உடை மாற்றிக்கொண்டு வர, அவரோ தம் உருவத்தையே அடியோடு மாற்றிக் கொண்டிருந்தார்.

“எனக்கு இது பழக்கமான இடம்; மகிந்தருக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் என்னை இன்னாரென்று தெரியும். முதன் முதலில் இராஜராஜர் காலத்தில் வந்திருக்கிறேன். பிறகு இராஜேந்திரருடன் வந்து போர்க்களத்தில் அவர்களைச் சந்தித்திருக்கிறேன். என்னை இலேசில் மறந்திருக்க மாட்டார்கள் அவர்கள்!”

பயங்கரமான காடுகள் குறுக்கிட்டன; செங்குத்தான மலைகள் எதிர்ப்பட்டன; சிற்சில இடங்களில் அருவிகள் சீறிக்கொண்டு பாய்ந்தன. புரவிகளிலிருந்து கீழே குதித்துச் சில இடங்களில் கடிவாளங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தார்கள். “இந்தப் பகுதிக்குத்தான் மலையரதம் என்று பெயர். இந்த மலைநாடு குறுக்கே இருப்பது ரோகணத்துக்குப் பெரிய பாதுகாப்பு. ஒரு பக்கம் மலைகளும் மற்ற பக்கங்களில் கடல்களும் இருப்பதால், அவர்கள் காலங்காலமாக இங்கே மணிமுடியைப் பதுக்கி வைத்துக் கொண்டு நம்மைத் திருப்பி அனுப்புகிறார்கள்.”

“அரண்மனையில்தானே முடியை வைத்திருப்பார்கள்?” என்று கேட்டான் இளங்கோவேள்.

“யார் கண்டார்கள்? அரண்மனையிலும் இருக்கலாம், ஏதாவதொரு மலைக்குகையிலும் இருக்கலாம். அல்லது புத்த விஹாரங்களில் ஒன்றைத் தேடிப் பிடித்து அதற்குள் ஒளித்து வைத்தாலும் வைத்திருக்கலாம்.”

“புனிதமான புத்தர்பிரானின் ஆலயங்களை இது போன்ற காரியங்களுக்குப் பயன்படுத்தலாமா, தாத்தா?”

“இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டால் நான் எப்படிப் பதில் சொல்வேன்? பார்க்கப் போனால், அவர்களுக்கு மற்ற எல்லா இடங்களையும்விட மிகவும் பத்திரமான இடம் அதுதான்! நம்முடைய பேரரசோ மற்றவர்களுடைய சமயப் பழக்க வழக்கங்களில் தடையிடாது.

வழிபாடு நடக்குமிடம் என்று தெரிந்தால், காதவழி ஒதுங்கி நடக்கச் சொல்லி நம்முடைய வீரர்களுக்குக் கட்டளை. நம்முடைய பெருந்தன்மையை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டால் அதில் என்ன தவறு?”

“போங்கள், தாத்தா!” என்று சிணுங்கினான் இளங்கோ. “துறவிகளுக்கு ஒரு தொல்லையும் கொடுக்காமல் சோதனையிட்டுப் பார்க்க முடியாதா?”

“அடேயப்பா, என்ன துணிச்சல் உனக்கு!” என்று சிரித்தார் கிழட்டுத்தூதர். “பிறகு அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? ‘இந்தச் சோழ நாட்டுக் கிராதகர்கள் அரக்கர்களைப் போல் பாய்ந்து வந்து விஹாரங்களை இடித்தார்கள். துறவிகளை இம்சித்தார்கள்; புத்தர் பிரானுக்குச் சொந்தமான பொன்னையும் மணிகளையும் கொள்ளையடித்தார்கள்” என்றெல்லாம் கதை கட்டிவிடுவார்கள். பிறகு அந்தக் கட்டுக் கதைகளையே சரித்திர உண்மைகளாக்கி விடுவார்கள்.”

வழியில் தென்பட்ட மலைக்குகைக்குள் நுழைந்து ஆராய வேண்டுமென்ற துடிப்பு அப்போதே இளங்கோவுக்கு ஏற்பட்டது. வந்த வேலையை அவனுக்கு நினைவுபடுத்தி அவனைக் கட்டுப்படுத்தி அழைத்துக் கொண்டு போவதற்குள் கிழவர் பாடு பெரும்பாடாகி விட்டது. “இந்த இளமைப் பருவமே பொல்லாத பருவம்; எடுத்த காரியத்தை மறந்துவிட்டுக் குறுக்கே எங்கெங்கோ பாயப் போகிறாயே? பேசாமல் என் பின் வா.”

அவர் பின்னால் பேசாமல் அவனால் போக முடியவில்லை. வழியில் எதிர்பட்டவர்களிடமெல்லாம் அவர் தங்களைப் பற்றி வேறு வேறு கதைகள்சொல்லிக்கொண்டு போனார். வாள் வீசவேண்டிய நெருக்கடியான கட்டங்கள் சில ஏற்பட்டன. வாய் வீச்சினாலேயே அவற்றைச் சாமர்த்தியமாகத் தாண்டிக்கொண்டு போனார் கிழவர்.

“தூதுவர்கள் என்று உண்மையைச் சொன்னால் என்ன வந்துவிடும்?” என்று கேட்டான் இளங்கோ. “சொல்ல வேண்டிய இடத்தில்தான் உண்மையைச் சொல்ல வேண்டும்.”

வழியில் அவர் நடத்திச் சென்ற நாடகங்கள் அவனுக்கு வயிறுவெடிக்குமளவுக்குச் சிரிப்பை மூட்டின. அவர் விழித்த விழிப்பால் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவரைப் பின்பற்றினான்.

அன்றைய இரவை ஓர் மலைச்சாரல் பிளவில் கழித்து விட்டு, அடுத்தநாள் முற்பகல் கப்பகல்லகம் கோட்டை வாயிலுக்குள் நுழைந்தார்கள் இருவரும். அதற்கு முன்பாகவே அவனிடம் ஓலைகளைக் கொடுத்து, “நீதான்தூதுவன்; நான் உன்னோடு துணைக்கு வந்தவன், தெரிந்ததா? இனிமேல் நீதான் பேசவேண்டும்” என்றார். மேலும் அவனிடம் ரகசியமாக “அரண்மனைக் குள்ளேயும் வெளியேயும் கண்ணோட்டம் விட்டு, வழி வாயில்கள், சுற்றுச்சுவர்கள் முதலியவைகளைக் கவனித்துக் கொள், திரும்பவும் இங்கு வரவேண்டியிருந்தால் வழி தெரியாமல் விழிக்கக் கூடாது” என்றார்.

தூதுவர்கள் வந்திருக்கும் செய்தி காவலர்களின் வாயிலாக அரண்மனைக்குள் எட்டியது. மன்னர் மகிந்தர் உடனடியாக அதிகாரிகளைச் சபாமண்டபத்தில் கூட்டுவித்தார். தெற்குக் கடற்கரையை நோக்கிச் சோழநாட்டுக் கப்பல்கள் வந்துகொண்டிருக்கும் செய்தி அவருக்கு அன்று காலையில்தான் கிடைத்தது. இதனால் ஏற்கெனவே பரபரப்படைந்தவர் தூதுவர்களின் வருகை கேட்டவுடன் இடிந்து போய்விட்டார். என்றாலும் அவரது

மதியமைச்சர் கீர்த்தி அவருக்குத் துணிவூட்டினார். சபைக்குள் நுழைந்து வணக்கம் செலுத்தினார்கள் தூதுவர்கள். அரசவையை ஒட்டினாற்போல் இருந்த மேல் மாடத்தையோ அதில் நின்றுகொண்டு வேல் விழிகளாக தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த எழில்மங்கையையோ இளங்கோ கவனிக்கவில்லை. வல்லவரையர் அவளையும் அவளருகே சிறிய குத்து வாளுடன் நின்று கொண்டிருந்த சிறுவனையும் ஒரு கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டார்.

“சோழேந்திரசிம்மன் பரகேசரி இராஜேந்திர சோழர் அவர்களிடமிருந்து திருமுகம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று பணிவோடு ஓலையை நீட்டினான் இளங்கோவேள்.

அதைத் தமக்கருகே இருந்த அமைச்சரிடம் நீட்டினார் மகிந்தர். அமைச்சர் உரத்த குரலில் படிக்கலானார்:

“தொண்டை மண்டலம், சேர பாண்டிய மண்டலம், காவிரி மண்டலம், வடஈழ மண்டலம், பழந்தீவு பன்னீராயிரம் இவற்றுக்குச் சக்கரவர்த்தியான சோழ வளநாட்டு இராஜேந்திர உடையார், ரோகணத்து அரசர் ஐந்தாம்மகிந்தர் அவர்களுக்கு எழுதிய திருமந்திர ஓலை. ராஜசிம்ம பாண்டியன் தங்களுடைய முன்னோர்களிடம் விட்டுச் சென்ற மணிமுடி, இந்திர ஆரம்உடைகள் முதலிய அரசுரிமைப் பொருள்கள் தங்களிடம்இருப்பதாக அறிகிறோம். பாண்டிய நாடு சோழப் பேரரசுக்கு ஒடுங்கி விட்டதால் அதன் அரசுரிமைப் பொருள்கள் சோழப் பேரரசைச் சேர்ந்தவை. அவற்றைத் தாங்கள் எங்களிடம் கொடுத்து விடுவதே முறையாகும்.

“மேலும், பாண்டிய சேரச் சிற்றரசுகள் சோழப் பேரரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. அவற்றுக்குத் தாங்கள் ஆக்கம் தந்து எங்கள் உள் நாட்டின் அமைதியைக் குலைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

“அரசுரிமைப் பொருள்களைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். பேரரசுக்கு எதிரான செயல்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கலந்கொள்ளாதீர்கள். இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் தாங்கள் உடன்பட்டால்

தாங்கள் சோழப் பேரரசின் நண்பராக, ரோகணத்தின் அரசராக இருக்கலாம்.இல்லையேல் பின்விளைவுகளின் பொறுப்பைத் தாங்களே ஏற்க வேண்டிவரும்.”

“இல்லாவிட்டால் என்ன செய்துவிடுவீர்கள்?” என்று சீறினார் திருமந்திரஓலையைப் படித்த அமைச்சர் கீர்த்தி. மன்னர் தம் வாயைத் திறக்கவில்லை.

“உடன்பட்டால் ஈழத்தில் படை இறங்கியிருக்கும் ஒரு லட்சம் வீரர்களும் ரோகணத்தை வாழ்த்திக் கொண்டு திரும்பிச் செல்வார்கள்.இல்லையேல். . .”

“அவர்கள் ரோகணத்தை வீழ்த்திடுவார்களா?”

“மன்னரின் சித்தம் எதுவோ அதை மாமன்னரிடம் தெரிவிக்கிறேன்” என்று மகிந்தரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் இளங்கோ. அவருடைய நரம்புகளின் நடுக்கம் அவர் முகத்தில் தெரிந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு “ஒரு லட்சம் வீரர்களை இந்தச் சிறிய நாடு தாங்குமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள், அரசே! சோழவள நாட்டின் நானூறு கப்பல்கள் இப்போது இந்தத் தீவைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன” என்றான்.

மகிந்தர் அமைச்சரை நோக்கினார்.

“மூன்று முறை முயற்சி செய்து பார்த்தார்களே முடிந்ததா!- முடியாதென்று சொல்லுங்கள்” என்று மகிந்தரிடம் கூறினார் அமைச்சர். “மூன்று முறை பதுங்கிய வேங்கை, இப்போது பாய்ந்து முடியுடன் திரும்பப் போகிறது, அரசே!”

மன்னர் பதுங்க, மதியமைச்சர், “பாயட்டும், பார்ப்போம்” என்றார். “போர் முனையில் சந்திப்பதற்குச் சித்தமாகும்படி கூறினார் எங்கள் மாமன்னர்!” என்று கூறிவிட்டு, வணக்கம் செலுத்துவதற்காகத் தலை குனிந்து கரம் குவிக்கப் போனான் இளங்கோ. எதையோ கண்டு திடுக்கிட்டவர் போல் வல்லவரையர் இளங்கோவின் தோளைப் பற்றி அவனை அப்பால் தள்ளிவிட்டார். அவர் தள்ளிவிட்ட அதே நேரத்தில் மின்னலெனப் பாய்ந்து வந்தது ஒரு குத்துவாள். குறி, தவறாத குறி! இளங்கோ அங்கு நின்றிருந்தானானால் அவனுடைய பரந்த மார்பை ஊடுருவியிருக்கும் அந்தச் சிறு வாள். அருகிலிருந்த மரத் தூணில் ஒரு கீறலை ஏற்படுத்தி விட்டுக் கீழே விழுந்தது அது.

இளங்கோ, வாள் வந்த திக்கில் தலையை உயர்த்திப் பார்த்தான். மேல் மாடத்தின் கைப்பிடிச் சுவரருகே தெரிந்த இரண்டு வேல் முனைகள்தான் முதலில் அவன் கண்களில் பளிச்சிட்டன. வேல் முனைகளைப் போன்ற இருகூர் விழிகள் அவை. ‘அந்த வேல்விழியாள்தானா என்மேல் வாளெறிந்தவள்?

என்னிடம் என்ன கோபம் அவளுக்கு? தூதுவனை இந்த நாட்டில் மதிக்கும்பண்பு இதுதான் போலும்! வாளையும் எறிந்துவிட்டு, ஏன் அப்படிப் பயந்துவிழிக்கிறாள்? பரபரப்பைக் கொட்டுகிறாள் கண்களின் வழியாக?’

அவள் தன் அருகில் இருந்த ஒரு சிறுவனின் கரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, அவன் மீது சீறி விழத் தொடங்கவே, வாளெறிந்த குற்றம் அவளுடையதல்ல என்று தெரிந்து கொண்டான் இளங்கோ.

வேல்விழி வீசிய குற்றமே அவளுடையது! வாள் எறிந்த சிறுவன் அவளிடம் அகப்பட்டுக்கொண்டு திணறினான். இளங்கோவை அவன் பார்த்த பார்வையில் எரிதழல் கொழுந்து விட்டது. ‘பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவனா இவ்வளவு திறமையோடு வாள் வீசுகிறான்! அவன் விழிகளில் வீரம் துளும்புகின்றதே! என்று ரசிக்கத் தொடங்கினான் இளங்கோ.

“தம்பி! இது அரச சபை; போர் முனையல்ல. நான் தூதன், உன்பகைவனல்ல” என்று சிரித்தான் இளங்கோ.

“நாளைக்கு நீ என் எதிரிதானே?”

“பாவம்! நீ சிறு பிள்ளை! இந்தா, இந்தச் சிறு வாளை நீயே வைத்துக்கொள். பழம் நறுக்கி உண்ணலாம்!” என்று அதை எடுத்து லாவகமாக மேல் சுழற்றி வீசினான் இளங்கோ.

மேல் மாடத்திலிருந்து அந்தச் சிறுவன் அதை எட்டிப் பிடிக்கவே, இளங்கோவின் வியப்பு பதின்மடங்காகியது. திரும்பவும் எங்கே அவன்,இளங்கோவின் உயிரையே உண்ணும் பழமாக நினைத்து விடுவானோ என்ற
பயத்தில், அந்த வேல்விழியாள் அவனிடமிருந்து வாளைப் பறித்துக்கொண்டாள். வாள் முனை குடிக்கத் தவறிய உயிரையே, வேல்முனைகள் துளைக்கத் தொடங்கின. வேல்விழிகள் இரண்டும் தன்னையே தாக்கிப் பாய்ந்து
கொண்டிருப்பதாக நினைத்தான் இளங்கோ.

மெதுவாக வந்தியத் தேவர் அவன் காதருகில் சென்று “நீ வந்த வேலை முடிந்துவிட்டது இளங்கோ” என்றார்.

அவர்கள் வெளியே வந்தார்கள். “அரண்மனையில் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பார்த்து வைத்துக் கொள்ளச் சொன்னேனே” என்றார் வல்லவரையர் புன்னகையுடன்.

“ஆமாம், பார்த்தேன்” தடுமாறினான் இளங்கோ, வேல்விழிகளைப் பார்த்த நினைவில்.

தொடரும்

November 20, 2012




Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம