Skip to main content

வேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-17




கூடத்தின் கதவைத் திறந்துகொண்டு அவனும் வந்தியத் தேவரும் உள்ளே நுழைந்தபோது, அதற்குள் மூன்று பெண்மணிகள் இருந்தனர். ஒவ்வொருவராக அந்த மூவரையும் உற்றுப் பார்த்தான் இளங்கோ. அவர்களில்ஒருத்திகூட அந்த மாயமோகினியைப்போல் இல்லை.

“முன்பு இதற்குள் எத்தனை பேர்கள் இருந்தார்கள் தெரியுமா?” என்றுகேட்டார் வல்லவரையர்.

“வெளியில் நின்று கொண்டே அவளைப் பிடித்துத் தள்ளினேன், தாத்தா! நான் உள்ளே நுழைந்து சென்று பார்க்கவில்லையே?” என்று பதறினான் இளங்கோவேள்.

அங்கிருந்த மூவரில் ஒருவர் பட்டமகிஷி என்பது அவளுடைய தோற்றத்தால் விளங்கியது. அரசிக்கு உரிய ஆடை அணிகள் அவரை அலங்கரித்திருந்தன. குனிந்த தலை நிமிராமல் சோகமே உருவாகக் கண்ணீர்உதிர்த்துக் கொண்டிருந்தார் அவர். வல்லவரையரையும் இளங்கோவையும்அவர் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை.

பட்டமகிஷியின் காலடியில் உட்கார்ந்து தலைவிரி கோலமாக அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் மற்றொரு மாது. மகிஷியைப் போலவே நடுத்தர வயதிருக்கும் அவளுக்கு. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய அலங்காரங்கள் ஏதும் அவளிடம் இல்லை. முகத்தைத் தூக்கி வெறுப்புடன் அவள் இளங்கோவை ஒரு முறை பார்த்துவிட்டு உடனே திரும்பிக் கொண்டாள். மறுமுறை பார்க்கக்கூடிய முகமாக அது! இல்லை. நெற்றியிலும்கன்னங்களிலும் சுருக்கங்கள் கோடிட்டிருந்தன. கண்களுக்குக் கீழே இரு கருவளையங்கள்; கண்களோ ஒன்றரைக் கண்கள்!

அந்த ஒன்றரைக் கண்களைக் கண்டு திகைப்புற்ற இளங்கோ தன்இரண்டு கண்களையும் மூன்றாவதாக நின்ற பணிப்பெண்ணின் பக்கம்திருப்பினான். பதினைந்து பதினாறு வயதிருக்கும் அவளுக்கு. மிரள மிரள விழித்துக் கொண்டே அவள் நடுநடுங்கினாள்.

அவளிடம் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்துப் பார்த்தான் இளங்கோ. அவன் பேசிய தமிழ் அவர்களுக்குப் புரியவில்லை. அவள் பேசிய சிங்களம் அவனுக்கு விளங்கவில்லை. வல்லவரையருக்குச் சிங்களம் நன்றாகத்தெரியும். என்றாலும் அவள் பயத்தால் ஏதோதோ உளறிக்கொட்டினாளே தவிர, உண்மை அவளிடமிருந்து வெளிவருவதாயில்லை.

மற்ற பெண்களிடம் கேட்பதிலும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள் அவர்கள். நிலவறைப் பாதைகள் எங்காவது தென்படக் கூடுமென்றும் தேடிப் பார்த்தான் இளங்கோ. தரை, சுவர்கள், மேல் தளம்எங்கெல்லாமோ அவன் கண்ணோட்டம் விட்டான். எங்குமே ரகசியப் பாதை இருப்பதற்கான சுவடு தென்படவில்லை.

“சரி இளங்கோ! அவள் போனால் போகட்டும்; வந்த வேலையைக்கவனி” என்று அவன் காதருகில் மெதுவாய்ச் சொன்னார் வல்லவரையர். பெண்ணைத் தேடிக் களைத்தவன் அடுத்தபடியாக அரசுரிமைப்பொருள்களைத் தேடுவதில் முனைந்தான்; அவனும் வல்லவரையருமாகச்சேர்ந்து பிறைகள், மாடங்கள், கூடத்தின் மூலைமுடுக்குகள் முதலிய இடங்களைச் சோதனையிட்டார்கள்.

பட்டமகிஷி உட்கார்ந்திருந்த ஆசனத்துக்கு வலதுபுறம் ஒரு பெரிய மரப்பேழை இருந்தது. பூட்டிக்கிடந்த அதைத் திறப்பதற்காகப்பணிப்பெண்ணிடம் திறவுகோலைக் கேட்டார் வந்தியத்தேவர். பணிப்பெண்பயந்துகொண்டே பட்டமகிஷியை நோக்கினாள். மகிஷியோ கீழே குனிந்து தம் ஆசனத்துக்கு அடியில் கிடந்த திறவுகோலைத் துழாவி எடுக்கப் போனார்.

சீறிக்கொண்டு அரசியின் கரங்களைப் பற்றினாள், அவருக்கு அருகில்இருந்த அந்த ஒன்றரைக் கண் மங்கை. பேழையின் சாவியை அரசியின்கையிலிருந்து பற்றிப் பிடுங்கிக் கொள்ளப் பார்த்தாள். அவளை மெல்ல ஒதுக்கித் தள்ளிவிட்டுச் சாவியை வல்லவரையரிடம் வீசி எறிந்தார்கள் மகிஷி.

“சுக்கிராச்சாரியின் கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா, தாத்தா?” என்று கேட்டுச் சிரித்தான் இளங்கோ. “கொடுத்ததைத் தடுக்கப் போனதால்அவருக்கு ஒற்றைக் கண் போய் விட்டதாம். இவளுக்கு ஏற்கனவே ஒன்றரைக்கண். அதாவது பத்திரமாக இருக்க வேண்டாமா?”

வல்லவரையர் பேழையைத் திறந்தார். அரை ஆள் உயரத்துக்கு மேல்இருந்த அதற்குள் ஒரு பக்கம் சிறு அறைகளில் பொன்னாபரணங்கள்பளிச்சிட்டன. விலை உயர்ந்த வண்ண வண்ணப் பட்டாடைகள் மறுபக்கம்
குவிந்திருந்தன. அவ்வளவும் பெண்களின் உடைகள், ஆபரணங்கள், அணிகள்.

இவற்றைத் தன் கரத்தால் தொடுவதற்கத் தயங்கிய இளங்கோ பரிதாபமாக வல்லவரையரின் முகத்தைப் பார்த்தான். அவரும் கிழவனாலும் ஆண்பிள்ளையல்லவா? பேழையின் மூடியைத் தாங்கிக் கொள்ளும்பாவனையில் அந்த வேலையிலிருந்து விலகிக்கொண்டு, “உம், ஆகட்டும்; தேடிப் பார்” என்று இளங்கோவுக்குக் கட்டளையிட்டார்.

“ஆபரணங்களை எடுத்து நீயே வைத்துக்கொள்” என்று சொல்லுவதுபோல் அந்தப் பெண் பிள்ளையின் முன்னால் வீசினான் இளங்கோ. உடைகளைக் கையால் தொடாமல் தன் உடைவாளால்ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் போட்டான். ‘என் விருப்பத்துக்கு மாறான வேலையைச் செய்யச் சொல்கிறீர்களே?’ என்று அவன் விழிகள்வல்லவரையரிடம் கெஞ்சின. அதற்குள் தம் விழிகளாலேயே, ‘என்ன செய்வது? பேழைக்குள் ஒரு வேளை மணிமுடி இருந்தாலும் இருக்கலாம் அல்லவா; நன்றாய்த் தேடிப்பார்!” என்று பதில் அளித்தார்.

ஆடை அணிகளைத் தவிர, இன்னும் பெண்களுக்கு வேண்டிய பலவகை அலங்காரப் பொருள்களும் அதற்குள் தென்பட்டன. வாசனைத் திரவியங்கள், மைச் சிமிழ்கள், வண்ணச் சாந்துகள், வாடின பிறகும் வாசம் உமிழும் மகிழம்பூமாலைகள் இன்னும் என்னென்னவோ விசித்திரப் பொருள்கள்.

இளங்கோ பாதிப் பொருள்களை வெளியேற்றுவதற்குள் சலிப்படைந்து விட்டான். “நீங்கள் தேடிப்பாருங்கள், தாத்தா! நான் சிறிது நேரம் பேழையின்மூடியைப் பிடித்துக் கொள்கிறேன்’’ என்று கூறிவிட்டு மூடியைப் பற்றிக்கொண்டான்.

வல்லவரையர் பெட்டிக்குள்ளே குனியப்போகும் சமயத்தில் திடீரென்று ஒரு பெண்புலி உறுமத் தொடங்கியது. அந்த ஒன்றரைக் கண் மங்கை இன்னும்தன் முகத்தைக் கோரமாக வைத்துக்கொண்டு கீச்சுக் குரலில் கத்தினாள்.

“நீங்கள் தேடுகிற பெண்ணை நாங்கள் ஒன்றும் பேழைக்குள் போட்டு மூடி வைக்கவில்லை. வேறு ஏதாவது வேலை இருந்தால் போய்ப் பாருங்கள்.”

“இதுதான் எங்கள் வேலை” என்றான் இளங்கோ.

“வெட்கமாக இல்லை உங்களுக்கு? இதுதானா வீரர்களின் லட்சணம்? பெண் பிள்ளைகள் இருக்குமிடம் தேடிப் பகல் கொள்ளையிடவா வந்திருக்கிறீர்கள்! இருங்கள் உங்கள் சக்கரவர்த்தியிடம் உங்களைத் தண்டிக்கச்
சொல்லுகிறேன்.”

இளங்கோ இப்போது நன்றாக அவள் முகத்தை ஊடுருவி நோக்கினான். அவள் குரலைத் தெளிவாக உற்றுக் கேட்டான். வியப்பால் அவன் முகம்மலர்ந்தது.

அவளுடைய விகாரமான முகத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த சந்திரவதனம் இப்போது தான் குளுமை நிறைந்த கிரணங்களைச் சிறிது சிறிதாக வீசத் தொடங்கியது. அவளுடைய கீச்சுக் குரலுக்குப் பின்னால்ஒளிந்து கொண்டு ஒரு பூங்குயில் இன்னிசைப் பண்ணொலித்தது. அவளுடைய ஒன்றரைக் கண்கள்-கண்களா அவை!

இளங்கோ வல்லவரையரிடம் தன் கண்களால் எதையோ மிகவும்ரகசியமாகத் தெரிவித்தான். கிழவரின் கண்களும் அவன் கூற்றைப் புரிந்து கொண்டவைபோல் சுருங்கிச் சிரித்தன.

இதற்குள் அவள் சூறாவளியெனச் சீறிக்கொண்டெழுந்து விட்டாள்! நெருப்புத் துண்டுகள்போல் சுடு சொற்கள் காற்றில் பறந்து வந்தன. “இங்கிருந்து உடனே போய்விடுங்கள்! இதெல்லாம் அநியாயம், அக்கிரமம், அதர்மம்! போகிறீர்களா, இல்லையா?-போங்கள்; போய்விடுங்கள்!”

அவளுடைய பேய்க் கூச்சலைக் கேட்டு வந்தியத்தேவரே கதிகலங்கிவிட்டார். நிலைமை விபரீதமாகப் போய்விடும் என்று அஞ்சி, “வா,இப்போது போய்விட்டு, மறுபடியும் திரும்பி வருவோம்” என்று இளங்கோவை அழைத்தார்.

“இவளுக்கப் பயந்து கொண்டா வரச்சொல்கிறீர்கள்? முடியவே முடியாது!இருங்கள், நொடிப்பொழுதில் நானே பேழை முழுவதையும் தேடிப்பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்.”

இளங்கோ பேழையின் பக்கமாகத் திரும்புவதற்குள், ஏற்கனவே வெளியில்எடுத்துப் போடப்பட்ட ஆபரணங்கள் மீண்டும் அதற்குள் வந்து விழுந்தன. தொடர்ந்தாற் போல் துணிமணிகளையும் எடுத்து வீச முற்பட்டான் அவன். இளங்கோவின் மீது முதலில் அணிகளும், பிறகு ஆடைகளும் வந்து விழத்தொடங்கின.

தோல்வியை ஒப்புக் கொள்வதைத் தவிர இளங்கோவுக்கு வேறு வழியில்லை. வல்லவரையர் அவன் தோளைப் பற்றி வெளியே அழைத்துக் கொண்டு வந்தார். அவனை நிதானமாக நடந்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.

“தாத்தா! அந்தப் பேழைக்குள்தான் மணிமுடி இருக்கிறது. அது வேறெங்கும் போகவில்லை. அவள் துடிக்கும் துடிப்பைப் பார்க்கும்போதே தெரியவில்லையா?”

வல்லவரையர் சிரித்தார். “மணிமுடி இருக்கிறதோ இல்லையோ, நீ தேடிவந்த பெண் இங்கேதான் இருக்கிறாள், மிகவும் பொல்லாதவள்தான்!”

“அதே பெண்தான் இவள் என்பதை முதலில் நம்பவே முடியவில்லை,தாத்தா!”

“இதோ பார், இப்போதைக்கு நீ அவளைத் தெரிந்து கொண்டதாகக்காட்டிக்கொள்ள வேண்டாம். அந்தப் பேழையில் ஏதாவது இருந்தாலும் அதை நாம் மெதுவாய்க் கைப்பற்றிக் கொள்ளலாம். அதுவரை சிறிது பொறுமையாக இரு.”

அரண்மனைக்கு மறுபுறத்திலிருந்த பெரிய மாளிகையில் சக்கரவர்த்தி வந்து இறங்கியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி வந்தது. இளங்கோவை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு, விரைந்தார் வந்தியத்தேவர். ஒரு நாழிகைப்பொழுதை அவரும் மாமன்னரும் அந்தரங்க ஆலோசனையில் கழித்தனர்.
பிறகு மாளிகையை விட்டு வெளியில் வந்தார் வல்லவரையர்.

அன்றைக்கு அமாவாசை. பொழுது கழிந்து எங்கும் இருள் படர்ந்து கொண்டிருந்தது. சுவர்களிலும் தூண்களிலும் இணைக்கப்பட்டிருந்த தீவர்த்திகளை ரோகணத்து வீரர்கள் ஏற்கெனவே அகற்றிவிட்டிருந்தனர். புதிய பந்தங்களைப் பொருத்தி இருளை விரட்டச் செய்து விட்டு, காவலர்களை
விழிப்புடன் இருக்கச் செய்தார்.

“அரண்மனை, பெரிய மாளிகை, கோட்டை மதில்கள் இவற்றில் பலமான காவல் போடுங்கள்; இப்போது அந்தப்புரத்தில் காவல் காத்து நிற்பவர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்” என்று காவலர் தலைவனிடம்கூறிவிட்டு இளங்கோவிடம் வந்தார் வல்லவரையர்.

அவருடைய கட்டளை இளங்கோவுக்கு வியப்பூட்டியது. ‘எதற்காக அந்தப்புரத்துக் கட்டுக் காவலைக் கலைத்து அனுப்பிவிடுகிறார் இவர்?’

“அரண்மனைப் பெண்களை அச்சுறுத்தும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் வீரர்களை நிறுத்த வேண்டாமென்று மாமன்னர் கருதுகிறார்” என்றார் வந்தியத்தேவர். “நீயும் நானும்தான் மிகவும் விழிப்போடிருக்க வேண்டும். பட்ட மகிஷியை இங்கு விட்டுச் சென்றிருப்பதால், வெளியில் இருப்பவர்கள் எப்படியாவது அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள முயல்வார்கள். மன்னர் மகிந்தரோ, அமைச்சர் கீர்த்தியோ இப்போது அமைதியுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் அனுப்பும் ஒற்றர்களை எதிர்பார்த்து நாம் எதற்கும் சித்தமாக இருக்க வேண்டும்.”

“இந்தப் பெண்களையும் அவர்கள் தம்மோடு அழைத்துக் கொண்டு போயிருந்தால் நமக்குத் தொல்லைகள்கு றைந்திருக்கும் அல்லவா?” என்றான்இளங்கோ.

“தொல்லை கொடுப்பதற்குத்தானே இந்த வழியைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்-ரோகணத்து மக்களுக்கு நம் மீது வெறுப்பை வளரச்செய்வதற்கென்றே இப்படிச் செய்திருக்கிறார்கள். பட்டமகிஷியை நாம்கொ டுமைப்படுத்துகிறோம் என்ற வதந்தியை வெளியே பரப்ப வேண்டாமா? நமக்கு எதிராக உணர்ச்சியைக் கிளறிவிடுவதற்கு அவர்களுக்குக் காரணம்வேண்டாமா?”

“அமைச்சர் கீர்த்தி பெரிய ராஜதந்திரிதான்” என்றான் இளங்கோ.

“யார் கண்டார்கள்? உன் கண்ணெதிரே மன்னர் மகிந்தரின் மகனைக்கடத்திக்கொண்டு சென்றவர் அவராகவே இருக்கலாம்.”

“என்ன?”

இளங்கோவின் திகைப்பு நீங்குவதற்குள், மற்றொரு வியப்புத் தரும்செய்தியை வெளியிட்டார் அவர்.

“இளங்கோ! உன்னிடமிருந்து தப்பி ஓடியவன் மகிந்தரின் மகன் காசிபன். அவனைக் கடத்திச் சென்றவர் கீர்த்தி, அவன் தப்புவதற்கு உடந்தையாக இருந்தவள் மன்னரின் மகள் ரோகிணி!”

“தாத்தா!”

“வியப்படையாதே; நீ சாதாரணப் பெண்ணிடம் ஏமாறவில்லை, இளவரசியிடம் தான் ஏமாந்திருக்கிறாய்.”

வல்லவரையர் அருகில் இல்லாதிருந்தால் மின்னலைப் போல்
கூடத்துக்குள் நுழைந்து, அவளை வெளியே இழுத்து வந்து, அவள் வேஷத்தைக் கலைத்திருப்பான் இளங்கோ. அவள் எதற்காக ஒன்றரைக் கண்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்? ஏன்இப்படியெல்லாம் அவள் தன்னைத் தானே அவலட்சணப் படுத்திக்கொண்டிருக்கிறாள்? முன்பே தெரியாமல்போய்விட்டதே. இளவரசி ரோகிணியா அவள்! இதற்குப் பிறகு இளங்கோ அடித்து வைத்த கருங்கற் சிலையாக மாறிவிட்டான். அவனுடைய நினைவு எங்கேயோ பறந்து கொண்டிருந்தது. வல்லவரையர் இளைஞனின் மனநிலையைக் கண்களால் அளந்துவிட்டுப் புன்னகை பூத்தார்.

“என்ன இளங்கோ, இது? நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்?”

“ஒன்றுமில்லை, தாத்தா!”

“ஒன்றுமில்லை என்ற சொல்லில்தான் எல்லாம் இருக்கிறது! உன் வயதுப் பிள்ளைகள் ‘ஒன்றுமில்லை’ என்று சொல்வது ஆபத்தின்ஆரம்பமாயிற்றே தெரியுமா?”

ஓரக்கண்களால் கிழவர் இளைஞனை நோக்க, இளைஞன் அந்தக் கண்களின் பரிகாசத்தைத் தாங்க முடியாமல் தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.

தொடரும்


November 21, 2012

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...