Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம் -பாகம் 1 -15




கப்பகல்லகம் கோட்டை கலகலத்துவிட்டது. முற்றுகை முறிந்து விட்டது. முடிமன்னர் மாயமாய் மறைந்து போனார். அரண்மனையோ அலறித்தவிக்கிறது. இந்நிலையில் வெற்றி கொண்டுவிட்ட வேற்று நாட்டு இளைஞனின் முன்பு நின்று கொண்டு, கலகலவென்று அலட்சியமாகச் சிரிக்கிறாள் ஓர் இளம்பெண். இத்தனைத் துணிவு அவளுக்கு எங்கிருந்து வந்தது. இவள் என்ன,பெண்தானா?

வியப்படைய வேண்டிய இளங்கோ அவளைக் கண்டு வெறுப்படைத்தான்; வேதனையுற்றான்.

மன்னர் மகிந்தரைத் தேடிப் பிடித்து மாமன்னரின் முன்பு நிறுத்துவதற்காக ஓடோடியும் வந்தவன் அவன். மன்னரைத்தான் காணமுடியவில்லை; மைந்தனையாவது கைப்பற்றியிருக்கலாமே! வினையாற்ற வந்த
இடத்தில் அந்தச் சிறுவனுடன் விளையாட்டு எதற்கு!

“சே, சே! பெருத்த அவமானம்!” என்று தன்னையே நொந்துகொண்டு,தனக்கெதிரில் நின்றவளை ஏறிட்டுப் பார்த்தான். அவளுடைய இதழ்க் கோணத்தில் நெளிந்த சிரிப்பின் சுவடு அவன் ஆத்திரத்தைக் கிளறிவிட்டது. ‘இந்தச் சாகசக்காரி மட்டிலும் என் கரத்தைப் பற்றித் தடுத்து நிறுத்தியிராவிட்டால். . .?’

“எங்கே அவன்?” என்று அவளிடம் உறுமினான் இளங்கோ. “அவன் இருப்பிடத்தைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நான் உன்னைச் சும்மாவிடப்போவதில்லை”

“ஓ! என்னையா கேட்கிறீர்கள்? நன்றாய்த் தேடிப் பாருங்கள். அவன் கிடைக்காவிட்டால் நானும் உங்களை இலேசில் விடப்போவதில்லை.”

அவளிடம் கேட்டுப் பயனில்லை என்பதைக் கண்ட இளங்கோ, தன்னை ஏமாற்றி விட்டுச் சென்ற சிறுவனைத் தேடி அங்குமிங்கும் அலைந்தான்,கிடைக்கவில்லை. பிறகு மேல்மாடத்துக்குச் செல்லும் பாதையில் ஏதோ
காலடிச் சத்தம் கேட்டதால் தயங்கி நின்றான். மாடத்துக்குச் செல்லும் கதவுஉட்புறம் தாளிடப்பட்டிருந்தது. கதவிடுக்கில் காது கொடுத்துக் கேட்டான்.சந்தேகமில்லை; யாரோ பரக்கப் பரக்க மேலே ஓடிக் கொண்டிருந்தார்கள்.

சுற்றுமுற்றும் தேடி, மூலையில் கிடந்த ஓர் இரும்பு உலக்கையை எடுத்துக்கொண்டு வந்தான் இளங்கோ. வெறிகொண்டவனைப் போல் கதவில்மோதி அதை இரண்டாகப் பிளந்தான். வாயிலுக்குள் அவன் நுழைந்த மறு
விநாடியில் அந்தப் பெண்ணின் உருவமும் அதற்குள் தலைகொடுத்தது.இளங்கோவுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

“எதற்காக இங்கே வருகிறாய்?” என்று கத்தினான். அவன் பதில்
அளிக்காமல் அவனை முந்திக்கொண்டு மேலே வேகமாகச் சென்றாள்.

“பெண்ணைப் பார், பெண்ணை ! மறுபடியும் என்னைத் தடுக்க
வந்தாயோ. . . ?”

“நீங்கள் ஒன்றும் என்னைப் பார்க்க வேண்டாம், பையனைப் பார்த்துத் தேடுங்கள்!”

அவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் படிகளில் பாய்ந்தான். படிகளில் இப்போது யாரையும் காணவில்லை. அதன் மேல் பக்கத்துக் கதவு வெளிப்புறம் தாளிடப்பட்டிருந்தது! அந்த இரும்பு உலக்கையைக் கையோடு எடுத்துக்கொண்டு
வந்திருக்கக் கூடாதா?

சுட்டெரித்து விடுவதைப்போல் அவளை நோக்கினான் இளங்கோ.

“கோபித்துக் கொள்ளாதீர்கள். இருங்கள். நானே கீழே இறங்கிச் சென்று அந்த உலக்கையை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்றாள் அவள்.மறுகணம் அவள் கால்களின் சிலம்பொலி ‘கலகல’வென்று நகைத்து மறைந்தது.

போனவள் போனவள்தான்! வேண்டுமென்றே தாமதம் செய்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு வெகுநேரமாகவில்லை. இரண்டே எட்டுக்களில் பாதிப் படிகளைத் தாண்டிவிட்டான். அப்போது அவன் எதிரில்
உலக்கையைத் தூக்க முடியாமல் சுமப்பவளைப் போல் பாவனைசெய்துகொண்டு வந்து சேர்ந்தாள் அவள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றாள்.

“அத்தனையும் சாகசம்!” வெடுக்கென்று அவளிடமிருந்து பிடுங்கி,“அத்தனையும் நடிப்பு! அத்தனையும் வேஷம்! அத்தனையும் பொய்!” என்று சொல்லிக்கொண்டே ‘மடார் மடார்’ என்று கதவில் சாத்தினான். அவளுடைய
தலையைப் பிளப்பதாக நினைத்துக் கொண்டு கதவைப் பிளக்க முயன்றான்.

“நிறுத்துங்கள்! போனால் போகிறதென்று உதவி செய்ய வந்தால் என்னைத் திட்டவா செய்கிறீர்கள்?” என்று அவன் கவனத்தைத் திருப்பமுயன்றாள் அவள். “நான் ஒன்றும் உங்களைப்போல் முரட்டு ஆண்பிள்ளையில்லை, அதை ஒற்றைக்கையால் தூக்கிக்கொண்டு ஓடிவருவதற்கு.”

“நீ இங்கிருந்து போய்விடு!” என்று சீறினான் இளங்கோ. “அப்போது என்னைத் தடுத்தாய்; இப்போதும் என்னிடம் பேச்சுக் கொடுத்துத் தடுக்கப்பார்க்கிறாய். கோபத்தில் கதவோடு கதவாய்ச் சேர்த்து உன்னையும் நொறுக்கித் தள்ளிவிடுவேன்.
போய்விடு.”

அவள் போகவில்லை.

கதவு கலகலத்து விழுந்தது. மேல் மாடத்தில் திறந்த வெளியைத்தொடும் பாதை அது. விரைந்தோடி, மாடத்தில் கைப்பிடிச் சுவருக்கு வந்து,கீழே எட்டிப்பார்த்தான். அங்கே ஒரு நூலேணி தொங்கிக் கொண்டிருந்தது.அதன் கீழ்நுனி வரையில் இறங்கிவிட்ட சிறுவன், இளங்கோவைக் கண்டவுடன்
பதறிப்போய்க் கீழே குதித்தான். தரையில் நின்றுகொண்டு மேலே பார்த்துப்பழிப்புக் காட்டினான்.

இளங்கோவின் நெஞ்சு குமுறியது. குத்து வாளெறிந்து அவனை நொடிப்பொழுதில் குற்றுயிர், குலைஉயிர் ஆக்கி விடலாம். மகாபாவம்!பெண்கள், குழந்தைகள், முதியோரைத் துன்புறுத்துவது வீரனின் இலட்சணமல்ல.

நல்லவேளை புலிக்கொடி தாங்கிய சோழநாட்டுக் குதிரை வீரன் ஒருவன் அந்தச் சிறுவனை நோக்கித் தன் குதிரையைத் திருப்பிக் கொண்டு வந்தான்.சிறுவன் முதலில் தயங்கினான். பிறகு அந்த வீரன் அவனிடம் ஏதோ சொல்லவே, தானாகச் சென்று குதிரையின் அருகில் நின்றான். அவனைக் குதிரையில் ஏற்றித் தனக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு, மாடத்தின் உச்சியைத் திரும்பிப் பார்த்தான் வீரன்.

வீரனின் முகம் இளங்கோவுக்குச் சரியாகத் தெரியவில்லை.
பல்லாயிரக்கணக்கான சோழநாட்டுக் குதிரை வீரர்களில் அவனும் ஒருவன் போலும்!

“சேவகா!” என்று கூலி அழைத்து, “சிறுவனை நேரே அரண்மனைக்குக் கொண்டு போ; சாமந்த நாயகர் வல்லவரையரிடம் சேர்ப்பிக்கச் சொல்” என்று கட்டளையிட்டான். மகிந்தரின் மகன் அந்தச் சிறுவன் என்பதையும் தெரிவித்தான்.

“சித்தம் இளவரசே!” என்று அடித்தொண்டையால் கத்தினான் குதிரைவீரன். அவனுடைய குரலைக் கேட்டவுடன்இளங்கோவிற்கு அருகில் நின்றவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

குதிரைமேல் அமர்ந்திருந்த சிறுவன் அந்தப் பெண்ணிடம் கைகாட்டி,“நீயும் வா” என்று தன் தாய் மொழியில் கூவி அழைத்தான். அவள் அதற்குப்பதில் அளிக்கவில்லை. பயத்துடன் தன் இடதுகையால் வாயைப் பொத்திக்
கொண்டு, “நீ போ; என்னைக் கூப்பிடாதே” என்று சொல்வதுபோல சைகைகாட்டித் துரிதப்படுத்தினாள்.

குதிரைவீரன் உடனே கிளம்பவில்லை. கடிவாளத்தை இறுக்கிப்
பிடித்துக்கொணடே மேலே நின்ற பெண்ணை ஏறிட்டுப் பார்த்தான்.இளங்கோவுக்குக் கோபம் வந்து விட்டது. பெண்ணின் அழகைக் கண்டுரசிக்கும் நேரமா இது? சோழ நாட்டு வீரனா இப்படிச் செய்கிறான்? தன்னருகில் அவள் நிற்பதைக் கண்டு ஏதேனும் ஐயமெழுந்து விட்டதா
அவனுக்கு?

“விரைந்து போ” என்று பதறினான் இளங்கோ. பிறகு தன்னருகே
நின்றவளை நோக்கி, “தயவு செய்து நீ கீழே போக மாட்டாயா?” என்று கெஞ்சுவது போல் கேட்டான்.

அப்படி அவன் கேட்ட சமயத்தில் அவளுடைய கரங்கள் அவனுக்குத் தெரியாமல் நூலேணியை மாடத்திலிருந்து கழற்றிக் கீழே நழுவ விட்டுக்கொண்டிருந்தன. அதைக் கவனிக்காத இளங்கோ அங்கிருந்து திரும்பி நடக்கவே அவளும் அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவனைப் பின்பற்றினாள்.

இரண்டு பாக தூரம் இருவரும் நடந்திருப்பார்கள். திடீரென்று அவனைப் பார்த்துக் கலகலவென்று நகைத்தாள் அவள். விடாமல் சிரிக்கத் தொடங்கினாள். ஏன் இப்படிச் சிரிக்கிறாள் என்று அவனுக்கு விளங்கவில்லை. பித்துப் பிடித்த பெண்ணா என்ன!

“எதற்காகச் சிரிக்கிறாய்?” என்று கேட்டான் கோபத்தோடு.

“ஏன் உங்கள் சோழ நாட்டுப் பெண்களுக்கு அழத்தான் தெரியுமோ?”

இளங்கோவுக்கு எரிச்சல் ஒருபுறம், வியப்பும் திகைப்பும் மறுபுறம். அலறிப் புடைத்துக்கொண்டு அழுது புலம்ப வேண்டிய நேரத்தில் இவளால் எப்படிச் சிரிக்க முடிகிறது?

“யார் நீ?” என்று கேட்டான்.

“சொல்லட்டுமா, நான் இந்த அரண்மனைப் பணிப்பெண். இப்போது உங்களிடமிருந்து தப்பிச் சென்றிருக்கிறானே அந்த இளவரசனை வளர்ப்பவள்.”

இளங்கோவின் உச்சித் தலையில் அவள் இரும்புலக்கையைச் சுழற்றி வீசியது போலிருந்தது! “என்ன? நீ என்ன சொல்கிறாய்? என்னிடமிருந்து இளவரசன் தப்பிச்சென்று விட்டானா?”

சூறாவளியெனச் சுழன்று மாடத்துச் சுவரருகே போய் நின்றான் இளங்கோ. கீழே குனிந்து பார்த்தான். வலது கைப்புறமிருந்த அரண்மனைப்பக்கம் நோக்கினான். குதிரை வீரனையோ அந்தச் சிறுவனையோ அந்தப்
பக்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை.

“அதோ, அங்கே பாருங்கள்!” அவனுடைய இடது கைப்புறம் சுட்டிக்காட்டினாள் அவள்.

கோட்டை மதிலின் பின்புறத்து வாயில் தொலைதூரத்தில் தெரிந்தது.அந்த வாயிலும் இதற்குள் திறக்கப்பட்டு விட்டதால், அங்கு ஒரே கூட்டமும் குழப்பமுமாகத் தோன்றியது.

சிறுவனை ஏற்றிக்கொண்டிருந்த குதிரைவீரன் அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தான். நொடிப்பொழுதில் முற்றிலும் மறைந்தே போய்விட்டான்.

அவளைத் திரும்பி நோக்கி, “யார் அவன்?” என்று கர்ஜித்தான்
இளங்கோ.

“ஏன், சோழநாட்டு வீரன் என்று அவனுடைய உடையையும்,
கொடியையும், பார்த்தால் விளங்கவில்லையா?” என்று அவனையே திருப்பிக்கேட்டுவிட்டு, “நகரத்துக்குப் புதியவனாக இருப்பதால் அரண்மனை இருக்குமிடம் தெரியாமல் அலைகிறான் போலும்” என்றாள்.

நன்றாக ஏமாற்றிவிட்டாள் என்பதைக் கண்டு கொண்ட இளங்கோ,இறங்கிச் சென்று அந்த வீரனைத் துரத்துவதற்காகத் துடிதுடித்தான். படிகளில் இறங்கிச் சுற்றி வளைத்துக் கொண்டு ஓடுவதென்றால் தாமதமாகும். மாடத்துச்சுவரில் தொங்கிய நூலேணியைத் தேடினான். அதை அங்கே காணவில்லை.

“எங்கே நூலேணி?”

“என்னைக் கேட்கிறீர்கள்?” சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கிக்
கொண்டாள் அந்தப் பெண்.

பிறகு அவனோடு சேர்ந்து தேடுவதைப்போல் தேடி விட்டு, “அதோ பாருங்கள். கீழே கிடக்கிறது” என்று தரையைச் சுட்டிக்காட்டினாள். “நான்போய் எடுத்துக்கொண்டு வரட்டுமா?” என்று கூறிக்கொண்டே மாடிப்படிகளில் இறங்கி ஓடுவதற்குச் சித்தமானாள்.

‘இவளைச் சித்திரவதை செய்து இந்த மாடத்தின் மீதிருந்தே கீழே தூக்கி எறிந்தால் என்ன? செய்வதெல்லாம் செய்துவிட்டு இவளும் தப்பி ஓடப்பார்க்கிறாளா?’ ஓடத் தொடங்கிய அவளை இளங்கோ தாவிச் சென்றுபற்றினான்.

எந்தக் கரத்தினால் அவனைப் பிடித்து நிறுத்திச் சிறுவனை தப்பவிட்டாளோ, அந்தக் கரத்தைப் பிடித்து அவளைப் பரபரவென்று படிகளில் இழுத்துக் கொண்டு வந்தான். அவள் எழுப்பிய கூக்குரலையும் போட்ட கூச்சலையும் அவன் பொருட்படுத்தவில்லை. கீழே வந்து எந்தக் கூடத்துக்
குள்ளிருந்து அவள் வெளிப்பட்டாளோ அதே கூடத்துக்குள் தள்ளி வெளியேதாழிட்டான்.

கூடத்தில் ஏற்கனவே சில பெண்கள் அழுது புலம்பி அரற்றிக்
கொண்டிருந்தார்கள். தேம்பலுக்கிடையில் வேறொரு பெண்மணியின் குரல் மெல்ல எழுந்தது. “ரோகிணி? வந்தாயா மகளே; காசிபன் எங்கே? இந்தக் கிராதகர்களின் கண்ணில் நீ பட்டுவிடக் கூடாதென்று கூறினால் கேட்கவே மாட்டேனென்கிறாயே?”

மேற்கொண்டு இளங்கோ அங்கே நிற்கவில்லை. வீரர்கள் சிலரை அழைத்து, “இந்தக் கூடத்தைச் சுற்றிலும் பலமான காவலுக்கு ஏற்பாடு செய்யுங்கள், ஐம்பது வீரர்களை நிறுத்தி வையுங்கள்” என்று கட்டளையிட்டுவிட்டு, வெளியில் விரைந்து சென்றான்.

அவனுடைய கறுப்புக் குதிரை கப்பகல்லகம் அரண்மனையின்
பின்புறத்துக் கோட்டை வாயிலைக் குறி வைத்துப் பாய்ந்து சென்றது.

தொடரும்


November 20, 2012


Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...