Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1- 6-வாளின் மேல் ஆணை





பூங்காவின் மையமண்டபத்துக்கு அடுத்தாற் போலிருந்த சின்னஞ்சிறு செய்குளம் அல்லிக் கொடிகளால் நிரம்பி வழிந்தது. எதிரிகளின் மார்பில் தோய்ந்து குருதி குடித்த வேல்முனைகளைப் போன்று செவ்வல்லி மொட்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குத்திட்டு நின்றன. அந்தச் செய்குளத்தின் மேல்புறத்தில் பத்துப் பதினைந்து வாழை மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன.

குலை தள்ளி நின்ற சேரநாட்டுச் செங்கதலியின் பட்டை ஒன்றை வெட்டியிழுத்தான் இளங்கோ. அதை எடுத்து நறுக்கிக் கொண்டு திரும்புவதற்குள் அருள்மொழியே குளத்தருகில் வந்து விட்டாள். அல்லிக்கொடிகளிடையே பளிங்கெனத் தெளிந்து நின்ற நீர்ப்பரப்பில் அவளுடைய உருவம் அற்புதமான புத்தெழிலுடன் பிரதிபலித்தது. மெல்ல அந்தச் செய்குளத்தின் கரைமீது அமர்ந்து அல்லிக் கொடிகளிடையே துள்ளித்திரியும் கெண்டை மீன்களை வேடிக்கை பார்த்தாள் அருள்மொழி.

“எங்கே, இப்படிச் சற்று உங்கள் விரலை நீட்டுகிறீர்களா, இளவரசி?” வினயமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளுக்குச் சிகிச்சை செய்வதற்காக அவள் முன்னே மண்டியிட்டு உட்கார்ந்தான் இளங்கோ. அவனுடைய முரட்டுக்கரங்களால் பிழியப் பெற்ற வாழைச்சாறு, அவளது மென் விரலில் தேனாகச் சொரிந்து கொண்டிருந்தது. அங்கே வீசிக் கொண்டிருந்த நிலவுக் கதிர்கள் திரண்டுவந்து திரவப் பொருளாக மாறி தன் கரத்தின் மீது பொழிவதைப்போல் உணர்ந்தாள் அருள்மொழி. விரலிலே படாத சூட்டுக்கு அவன் செய்த மருத்துவம் அவள் நெஞ்சில் சுட்ட நெருப்பின் கொடுமையைத் தணித்தது.

அருள்மொழிக்கு அவனுடைய அறியாமையைக் கண்டு சிரிக்கத்தோன்றியது. ஆனால் அந்த அறியாமையே தனக்கு அருமருந்தாக அமைந்துவிட்டபோது அவளால் சிரிக்க முடியவில்லை. தன்னை மறந்து தன்விழிகளை உயர்த்தி அவன் முகத்தை முழுமையாகப் பார்த்தாள். ஆனால் அவனோ அவளைக் கவனிக்கவில்லை-இளவரசிக்கு நோய் தீர்க்கும் பாக்கியம் கிடைத்த அரண்மனை மருத்துவனின் பெருமை அவனுக்கு!

“மருந்து மூலிகையும் கூடத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே!”

“வைகறையில் துயில் எழுந்தவுடன் பாருங்களேன்!” என்று பூரிப்போடுகூறினான் இளங்கோ. “இங்கே விரலால் நீங்கள் வீணையை மீட்டிக்கொண்டு உதயகீதம் பாடப் போகிறீர்கள்.”

அருள்மொழியின் இதயவீணை அதற்காக வைகறை வரையில் காத்திருக்கவில்லை. அப்போதே அவள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஓர்இன்பகீதம் எழுப்பத் தொடங்கியது. ‘ஐயா, கொடும்பாளூர் மருத்துவரே!உங்கள் தந்தையார் நாவினால் சுட்ட புண்ணை நீங்கள் உங்கள் அறியாமையால் ஆற்றி விட்டீர்கள். உங்களுடைய குழந்தை மனத்தை நினைக்க நினைக்க எனக்குச் சிரிப்புத்தான் பொங்கி வருகிறது. அந்தச் சிரிப்பையே பாட்டாக்கி, என் இதய வீணையில் சுருதி சேர்த்து, இதே அமுத நிலவில் உங்களுக்குப் பாடிக் காட்டட்டுமா?’

அருள்மொழி அழுத்தக்காரி. அவளையும் மீறி எழுந்த எண்ணங்களை அதே விநாடியில் கடிவாளம் போட்டிருந்தாள். அவளுக்கு அந்த இடத்தைவிட்டு உடனே அகன்று விடவேண்டுமென்றும் தோன்றியது. அந்த இடத்தில் இரவு முழுவதும் தங்கிவிட வேண்டுமென்றும் தோன்றியது.

“நீங்கள் தேடிவந்த தனிமை என்னால் கலையக்கூடும். நான் சென்று வரட்டுமா?” என்று உட்கார்ந்த இடத்தை விட்டு எழுதிருக்காமலே அவனிடம் கேட்டாள் அருள்மொழி.

“நான் பெற்ற பேற்றை யாரிடமாவது சொல்லிப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. யாரும் கிடைக்காததால் தனிமையை நாடிவந்தேன்-என் மனம் இப்போது மகிழ்ச்சியால் பொங்குகிறது இளவரசி!”

“ஓ அப்படியானால் அதில் நானும் பங்கு கொள்ளலாமோ?”

உச்சி குளிர்ந்து விட்டது இளங்கோவுக்கு. “ஈழ நாட்டுப் போர்க்களத்துக்கு என்னையும் உடன் அழைத்துச் செல்வதாக வாக்களித்திருக்கிறார் சக்கரவர்த்தி! நீயும் வருகிறாய் என்று அவர் என்னிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார்! இதைவிடப் பெரிய வாய்ப்பு வேறு என்ன இருக்கிறது?”

“ஈழநாடு உங்களைப் போன்றவர்களுக்கு எளிதான இடமல்லவே!”என்றாள் அருள்மொழி.

“எளிதாக இருந்தால் அதை ஒரு வாய்ப்பாக மதிப்பேனா நான்! இதற்கு முன்பு மூன்று முறை படையெடுத்துச் சென்று முடிக்காமல் திரும்பிய காரியத்தை முடிக்கப்போகிறோம் இப்போது! மண்ணாசைக்காகத் தொடங்கப் பெறும் போரல்ல இது. மானங்காக்கப் புறப்படுகிறோம் இளவரசி.”

ஈழநாட்டில் தான் செய்யப்போகும் வீர தீரச் சாகசங்களை அவளிடம் வர்ணிக்கத் தொடங்கினான் இளங்கோ. தன் வலிமையையும் சோழமண்டலத்திலுள்ள பல்லாயிரம் வீரர்களின் வலிமையையும் அவளிடம் விளக்கினான். இராஜராஜ சோழரின் பிரிவுக்குப்பின், கடந்த மூன்று

ஆண்டுகளாகவே எண்ணற்ற வீரர்கள் அதற்காகத் துடித்துக் கொண்டிருப்பதைக் கூறி, ‘கட்டளை பிறக்கப் போகிறது; கப்பல்கள் கடல்நீரைக் கிழித்துக் கொண்டு பாயப் போகின்றன!’ என்று குதித்தான். கதைகள் கேட்கும் குழந்தையின் குதூகலத்தோடு அருள்மொழி அவன் பேச்சை உற்றுக்கேட்டாள். இதனால் உற்சாகம் அடைந்த இளங்கோ மேலே கூறினான்.

“தேவி, பெரிய வேளாருக்கு நான் மகனாய்ப் பிறந்திருப்பதே பெரும்பாக்கயம்! அவர் சற்று முன்பு எனக்கிட்ட கட்டளையை எண்ணி எண்ணி நான் இறுமாப்படைகிறேன். ‘வெற்றியோடு திரும்ப வேண்டும். இல்லா விட்டால் வீரமரணம் எய்தவேண்டும்!’ இதுவல்லவோ என் தந்தையாரிட்ட வீரக் கட்டளை! என் தலையைக் கொடுத்தாவது தமிழனின் தலைமுடியை மீட்பேன். முடிதிரும்பாமல் என் உயிர் திரும்பாது.”

“இளவரசே!” என்று பதறினாள் நங்கை அருள்மொழி. அவளுடைய பதற்றம் அவன் செவிகளில் ஏறவில்லை. உடைவாளை உருவி உயரேதூக்கினான் இளங்கோ. அவன் கண்கள் அந்த வாளின் கூர்முனைகள் போல பளிச்சிட்டன.

“இந்த வாளின் மேல் ஆணை! வெற்றி, அல்லது வீரமரணம்!”

விண்ணை நோக்கி உயர்ந்த அவன் வலது கரம் ஆவேசத்தால் நடுங்குவதைக் கண்டாள் அருள்மொழி. அதைப் பற்றியிழுக்க அவள் கரங்கள் இரண்டும் துடித்தன. ஆனால் அவள் தன்னை அடக்கிக் கொண்டாள்.

“போதும் உங்கள் வீரம்!” என்று சீறினாள் அருள்மொழி.

“கொடும்பாளூர்ப் பெரிய வேளார் உங்களுக்கு அளவுக்கு மீறிவெறியூட்டிவிட்டார். கொடுஞ் சொல் சொல்வதும் கொடுஞ் செயல் புரிவதுமே உங்கள் குலவழக்கம்!”

வாளை உறைக்குள் போட்டுக் கொண்டே, “கடமையைக் கொடுமையென்று கூறாதீர்கள், தேவி!” என்றான் இளங்கோ நிதானமாக.

“உங்கள் கடமையை யாரும் மறுக்கவில்லை. நீங்கள் எத்தனை போர்க்களங்களுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். வெற்றிமேல் வெற்றியாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், முதல் போர்க் களத்துக்குச் செல்லும் நீங்கள் அதையே கடைசிப் போர்க்களம் என்று நினைத்து விடாதீர்கள். வெற்றி பெறவும் வேண்டும்; திரும்பி வரவும்வேண்டும். உயிரைத் துரும்பாக்கி அதை மாற்றானின் உடைவாளால் ஒடிக்கச் சொல்லுவதுதான் வீரமா?”

கண்கள் கலங்கிப் போய்விட்டன அருள்மொழிக்கு.

“கோழைத்தனந்தான் வீரம் போலும்!”-கலகலவென்று நகைத்து விட்டான் இளங்கோ.

“என்ன சொன்னீர்கள்?-இந்தச் சோழ மண்டலத்தின் சக்கரவர்த்தி இராஜேந்திரர் கோழையா? அவர் தந்தையார் இராஜராஜ அருள்மொழித்தேவர் கோழையா?”-அருள்மொழி கேட்டாள்.

“அபசாரம் தேவி! அபசாரம்.”

மாமன்னரின் மகள் கூறலானாள்:

“அவர்கள் இருவரும் எத்தனை எத்தனை போர்க்களங்களைக் கண்டிருக்கிறார்கள்! நம்முடைய பாட்டனார் அருள்மொழித்தேவர் தமது முதற் போரிலேயே வீர சொர்க்கம் புகுந்திருந்தால் இந்தச் சோழ மண்டலம் இப்படி உயர்ந்திருக்குமா? அவருடைய ஒரே புதல்வனான என் தந்தையாரும் போர்த் தந்திர முறைகளைக் கையாளாதிருந்தால் இதுவரை இந்த மண் நமக்கு மிஞ்சியிருக்குமா? ஈழத்துக்குப் புறப்படுவதற்காக மார் தட்டுகிறீர்களே, இதற்கு ஊக்கம் கொடுத்த சக்கரவர்த்தி ஏன் உங்கள் தந்தையாரைப்போல் முரட்டுத்தனமாகப் பேசவில்லை? கொடும்பாளூர் இளவரசே! இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; விவேக மற்ற வீரத்தால் வெற்றிப்பாதை அடைபட்டுப் போனாலும் போகும் நமக்கு வீரமும் வேண்டும், விவேகமும் வேண்டும்!”

“ஆஹா! பெரிய குந்தவையாரின் வளர்ப்பே வளர்ப்பு” என்று

அருள்மொழியை வளர்த்த பெருமைகளைத் தனக்குள்பா ராட்டி மகிழ்ந்தான் இளங்கோ. சின்னஞ்சிறு வண்ணச் சிற்பமாக அப்போது அருள்மொழியை மதிப்பிட அவனால் முடியவில்லை. அளப்பரிய அழகுடன் அறிவையும் ஆற்றலையும் சேர்த்துப் பார்த்தான். அந்த அறிவை அவளுக்கு அளித்த பெரிய குந்தவையாரை நினைத்து வியந்தான்.

பெரிய குந்தவையார் வீரவேங்கையான இராஜராஜரின் தமக்கையார்.வல்லவரையர் வந்தியத் தேவரின் பெருந்தேவி வேங்கையின் மைந்தன் இராஜேந்திரரின் வளர்ப்புத் தாயாரும் அவரே. இராஜேந்திரரின் மக்களும் அந்தப் பெருமகளின் அன்பணைப்பாலும் அறிவுவளத்தாலும் உரம் பெற்று வளர்ந்தவர்களே.

அருள்மொழியிடம் அந்த அம்மையாரின் அறிவுத் தெளிவைக் கண்டு வியந்த இளங்கோ, தன் வியப்பு அடங்கியவுடன் அருள்மொழியிடம் கேட்டான். “சாதாரணப் போர் வீரனின் உயிரைவிட வேந்தனின் உயிர்உயர்ந்ததென்று நினைக்கிறீர்களா?”

“வேந்தனின் உயிர் இருக்கட்டும், படைவீரனின் உயிரைவிடப்

படைத் தவைனின் உயிருக்கு என்ன வலிமை தெரியுமா?- ஒரே ஒருபடைத்தலைவனின் வீரச்சாவு ஓராயிரம் படைவீரர்களின் மனச்சோர்வு! வீரர்களை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி அவன். ஏன், உங்கள் பெரியபாட்டனார் கொடும்பாளூர் சிறிய வேளாரின் கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன் - அவருடைய பிரிவால் மனமுடைந்து போன பராந்தக

சுந்தர சோழச் சக்கரவர்த்தியே ஈழத்திலிருந்து பாதியில் திரும்பி வரவேண்டியதாயிற்று.”

இளங்கோவேள் சிந்தனையில் ஆழ்ந்தான். ‘வீரமும் வேண்டும்; விவேகமும் வேண்டும்’ என்ற சொற்கள் அவன் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன. மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் வெற்றிக்கே மூலகாரணமான சொற்களல்லவா அவை? வீரரும் விவேகியுமான இராஜேந்திரர்
பொறுப்பேற்றிருந்தார். அவர் ஆட்சியில் விவேகிகள் வீரர் களைப்போற்றினார்கள். வீரர்கள் விவேகிகளை மதித்தார்கள்.

சிந்தனையிலிருந்து விடுபட்ட இளங்கோ, அதைத் தூண்டிவிட்ட அருள்மொழியை நோக்கி நன்றிப் பெருக்குடன் புன்னகை பூத்தான்; அவள் அப்போது அவனைப் பாராமல் வானத்தில் மிதந்த நிலாவை வெறித்துநோக்கிய வண்ணம் எங்கோ தன் நினைவை அலைய விட்டிருந்தாள்.

“நங்கையாரே?” என்று மெல்லக் குரல் கொடுத்தான் இளங்கோவேள்.அருள்மொழியின் கனவு கலைந்தது. திடுக்கிட்டுத் திரும்பினாள். அருள்மொழி நங்கையான அவளை இளங்கோ எப்போதாவதுதான் ‘நங்கையாரே’ என்று அழைப்பான். அவன் அழைத்தவிதமும், அவன் குரலின் கனிவும் அவளை சிலிர்க்கச் செய்தன.

“என்ன?”

“நான் ஈழத்துக்குப் புறப்படப் போகிறேன் என்பதாலோ என்னவோ, நீங்கள் என்றுமில்லாதபடி என்மீது அளவற்ற அன்பைச் சொரிகிறீர்கள். என்னுடைய சொந்த நலனில் நீங்கள் கொண்டிருக்கும் பற்றுதலுக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்துவது? உங்களைப் பெற்றெடுத்த சக்கரவர்த்தி பாக்கியம் செய்தவர்!”

“என்ன சொல்கிறீர்கள். உங்களுடைய சொந்த நலனில் நான் பற்றுதல் கொண்டிருக்கிறேன் என்கிறீர்களா?” என்று அவனையே திருப்பிக் கேட்டாள் அருள்மொழி. கேட்டுவிட்டு “சோழ மண்டலத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றுதலாக அதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களைப் போன்ற அரசர்களும், அதிகாரிகளும் மக்களும் செலுத்தும் கடமையினால் தானேசக்கரவர்த்தி இத்தனைப் பெரிய சுமையைக் கவலையின்றிச் சுமக்கிறார்” என்றாள்.

அருள்மொழி அவனிடம் ஏதும் தனியாக அன்பு செலுத்தவில்லை என்றும், நாட்டுக்காக உழைப்பவன் என்ற முறையில் அவனை மதித்ததாகவுமே அவன் எடுத்துக் கொண்டான். அவள் கடைசியாகக் கூறிய சொற்களை அவன் அப்படியே நம்ப வேண்டியிருந்தது. சிறிது கூடச் சந்தேகத்துக்கிடமின்றி அவன் நம்பவும் செய்தான்.

அதனால் ஏற்கனவே அவளிடம் கொண்டிருந்த மதிப்பு அவனுள் இருமடங்காக உயர்ந்தது. ‘நாட்டுப் பற்று என்பது சோழவள நாட்டுப்பெண்மணிகளின் இரத்ததில்கூட இவ்வளவு தூரம் ஒன்றிக் கலந்திருக்கிறதே?’ அருள்மொழியோ அவனிடம் தன்னுடைய பற்றற்ற வெளித் தோற்றத்தைக் காண்பித்துவிட்டு, பற்றுதலால் அவனுக்காக நெகிழ்ந்துருகிய உள்ளத்தைத் தன்பால் பற்றி இழுக்கத் தொடங்கினாள். பாகாய் உருகும் உள்ளத்தைப் பாறையாய் மாற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தாள். அவள் தனக்குள்ளே செய்து கொண்டிருந்த ரசவாத வித்தைகள் இளங்கோவுக்குப் புலனாகவில்லை.

அவன் வீரன்-அவள் . . .?

“நாழியாகி விட்டதே!” என்று கூறிக்கொண்டு வேகமாக அவ்விடத்தைவிட்டு எழுந்தாள் அருள்மொழி. இளங்கோவும் அவளைப் பின்பற்றி நடந்தான்.

மைய மண்டபத்தைத் தாண்டிச் சிறிது தூரம் அவர்கள் நடந்த பிறகு,இளங்கோவுக்குத் தன் இடதுபுறம் முல்லைப்பந்தலுக்குப் பக்கத்திலிருந்து ஏதோ ஓர் உருவம் விரைந்து செல்வதைப் போல் தோன்றியது. சட்டென்று திரும்பிப் பார்த்தான். அவன் விழிகள் கூர்மை யாகின. கூர்மையான விழிகளில் கொப்பளிக்கும் சினம் குடிகொண்டுவிடப் பார்த்தது.

திடுக்கிட்டு நின்றுவிட்ட இளங்கோவைப் பார்த்து, “என்ன அது?” என்றுசிறிது திகிலுடனே கேட்டாள் “ஒன்றுமில்லை” என்று அவளிடம் கூறியவன் அப்படி ஒரு சிறு பொய்யை அவளிடம் சொல்ல வேண்டி வந்ததற்காகத் தன்னை நொந்து கொண்டே நடந்தான்.

அருள்மொழி அந்தப்புரத்திற்குச் சென்றாள்.இளங்கோ மேல்மாடத்தின் நிலா முற்றத்துத் தூண் அருகில் நின்ற வண்ணம் பூங்காவிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த உருவத்தையே உற்று நோக்கினான்.

தொடரும்

17/11/2012

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...