Skip to main content

வேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 - 11



நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் தெற்குக் கடலில் அடிவானத்தை ஊடுருவிச் செல்பவைபோல் வரிசையாகக் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. நாகைப்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டபின் ஓர் இரவு கழிந்து, மறுநாள்
புலர்ந்துவிட்டது. இளஞ்சூரியனின் பொன்னொளியில் பாய்மரச் சேலைகள் அன்னப் பறவைகளின் வண்ணச் சிறகுகளைப் போல் படபடத்தன.

கடைசிக் கப்பலின் மேல் தளத்தில் நின்றவாறே உற்சாகப் பரபரப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் தென்னவன் இளங்கோவேள். குதூகலத்தால்ஆர்ப்பரித்துக்கொப்பளித்த பேரலைகள் அவன்மேல் நுரை முத்துக்களை வாரி இரைத்து விளையாட்டுக் காட்டின. மேலே நீலவானம் சுற்றிலும் நீல நீர்ப்பரப்பு; அவன் வாயில் கடற்காற்றுத் தந்த உவர்ப்புச்சுவை. சுறாமீன் குஞ்சுகள் ஆங்காங்கே நீரிலிருந்து மேலே எழும்பிக் குதித்து, மீண்டும் அலைகளில் துள்ளிப் புரண்டு நெளிந்தன.

இவையெல்லாம் இளங்கோவுக்கு புதிய அநுபவங்கள் மற்றொரு புதிய அநுபவமும் அவனுக்கு ஏற்கனவே கிடைத்திருந்தது. முதல் நாள் அவன் புறப்படும் வேளையில் அருள்மொழி அவனுக்குத் திலகமிட்டு அனுப்பி
வைத்தாளல்லவா? இப்படி அவள் தன் மென்விரலால் திலகமிட்டு அனுப்புவாளென்றால் தினமும் ஓர் போர்க்களத்துக்குச் செல்லலாமே.

‘காளாமுக சமயத்தைச் சேர்ந்தவர்கள் சில சமயங்களில் பெண்களையே கோயில்களில் வைத்து ஆதிசக்தியில் அவதாரங்கள் என்று வழிபடுவார்களாம்.நேற்று வரையில் அது எனக்கு விந்தைப் பழக்கமாகத் தோன்றியது. ஏன் வழிபட்டால் என்ன? அருள்மொழியும் அத்தகைய ஒரு பெண் தெய்வமல்லவா?மின்வெட்டும் நேரத்தில் என்னை ஆவேசமுறச் செய்துவிட்டாளே!’

மரப்படிகளில் சத்தம் கேட்கவே, இளங்கோ திரும்பிப் பார்த்தான். கப்பலின் கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்து கொண்டிருந்தார் வல்லவரையர் வந்தியத்தேவர். வந்தவர் அவனை உற்றுப் பார்த்துவிட்டு, தமக்குள் கேலிச் சிரிப்புச் சிரித்தார். அவனுக்கு அதன் காரணம் விளங்கவில்லை.

“இளங்கோ! ஏன், உன் நெற்றிப் பொட்டு இன்னும் அப்படியே இருக்கிறதே! நேற்று அருள்மொழி வைத்துவிட்ட பொட்டல்லவா இது?” “குளிக்கும்போது நான் நெற்றியை அழுத்தித்து டைக்கவில்லை”என்றான் இளங்கோவேள்.

“ஏதும் காரணம் இருக்குமா?”

“ஆம்; ஈழத்து மண்ணில் காலடி எடுத்து வைக்கும் வரையில் அதை நான் அழிக்கப் போவதில்லை.”

“அப்படியென்றால் அருள்மொழியின் விரல் உன் நெற்றியில் அழுத்தமாய்ப் பதிந்து விட்டதென்று சொல்!” வல்லவரையர் புன்னகை பூத்துவீட்டு, “அதனால்தான் உனக்குத் திடீரென்று ஆவேசம் வந்து விட்டதோ?” என்று கேட்டார்.

“போங்கள், தாத்தா!” என்று வெட்கத்துடன் கூறினான் இளங்கோ.

“அந்தக் காலத்தில் குந்தவையிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் போது எனக்கும் இப்படி ஆவேசம் வருவதுண்டு” என்று தமது அந்தக் காலத்துக் காதலை மறைமுகமாகத் தொடங்கினார் வந்தியத்தேவர்.

“தாத்தா! தாங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. வயதில் சிறியவரானாலும் நங்கையார் என் வணக்கத்துக் குரியவர். குந்தவை தேவியாருக்கும் தங்களுக்கும் இருந்த அன்போடு ஒப்பிடாதீர்கள்.”

“ஓ, அதுவும் நல்லதுதான், அப்படியானால் பிரிவுத் துயரம் உன்னை வாட்டப் போவதில்லை” என்று கூறி நகைத்தார் வந்தியத் தேவர். பிறகு தம்முடைய கிழவி தமக்கு விடைகொடுத்தனுப்பிய காட்சியை அவனிடம் வர்ணிக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. “உன் பாட்டியிருக்கிறாளே, மிகவும் பொல்லாதவள்! பெண்களும் போர்க்களத்தில் குதிக்கலாம் என்ற வழக்கம் இருந்திருந்தால், அவளும் என்னோடு ஒன்றாய் ஈழத்துக்குப் புறப்பட்டிருப்பாளாம்... வரமுடியவில்லையே என்று வருத்தப்பட்டு உருகி விட்டாள். அசாத்தியத் துணிவு அவளுக்கு!”

கலகலவென்று கம்பீரச் சிரிப்பொலி அவர்களுக்குப் பின்னாலிருந்து கேட்கவே வந்தியத்தேவர் தமது வாயை அத்துடன் மூடிக்கொண்டு அங்கிருந்து நழுவப் பார்த்தார். அங்கு வந்து நின்ற இராஜேந்திரர் அவரை விடவில்லை. “மாமா! அத்தையும் உங்களோடு போர்க்களம் புகுந்துவிட்டால் பிறகு அங்கே என்ன நடக்கும், தெரியுமா? இருவருமே எதிரிகளோடு வாட்போர் புரிவதை மறந்துவிட்டு, உங்களுக்குள்சொற்போர் தொடங்கி விடுவீர்கள். உங்கள் சண்டையைத் தீர்த்து வைப்பதற்கே எங்களுக்குப் பொழுதிருக்காது!”

மற்றவர்களைப் பரிகாசம் செய்வதில் வல்லவரான வல்லவரையர், தாமே நகைப்புக்கிடமாவதைக் கண்டவுடன் அந்த இடத்துக்கே புறமுதுகு காட்டிப் பின்வாங்கி விட்டார்.

நேரம் சென்றது. இளஞ்சூரியன் மெல்ல மெல்லக் கொடும் சூரியனாக மாறிக்கொண்டு மேலே வந்தான். பாய்மரச் சேலையின் நிழலில் கிடந்த ஆசனங்களில் மாமன்னரும் இளங்கோவும் வந்து உட்கார்ந்தார்கள்.

“இளங்கோ!” என்று அழைத்து, அவனைப் பார்க்காமல் எதையோ யோசனை செய்து கொண்டே அவனிடம் பேசினார் இராஜேந்திரர்.

“நூற்றுக்கணக்கான மரக்கலங்கள், பல்லாயிரக்கணக்கான வீரர்கள், மதிப்பிடமுடியாத உணவுக் குவியல், இன்னும் லட்சக் கணக்கான போர்க்கருவிகள் இவற்றோடு நாம் ஏன் இப்போது ஈழத்துக்குப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறோம் தெரியுமா?”

“தமிழ் மன்னன் ஒருவன் அங்கே விட்டு வந்த மணிமுடியை மீட்பதற்காக” என்றான் இளங்கோவேள்.

“பழைய முடி அது; நூறு ஆண்டுகளுக்கு முன்பு செய்ததாக இருக்கும். அல்லது அதைவிடப் பழையதாகக் கூட இருக்கலாம். வணிகர்களின் கணக்குப்படி அதை மதிப்பிட்டுப் பார்த்தால், நம்முடைய ஒரு மரக்கலத்தின் விலைக்குக்கூட அது சமமாகாது. அதை மீட்பதற்காக நாம் இவ்வளவு பொருட்சேதம், உயிர்ச்சேதம், காலவிரயம் செய்யலாமா? யோசித்துப் பார்!”

யோசிக்கத் தொடங்கிய இளங்கோவுக்குப் பெரும் குழப்பமே மிஞ்சியது. பாதி வழி தாண்டிய பிறகு மாமன்னர் ஏன் இப்படி மாறுபடப் பேசுகிறார் என்பது அவனுக்கு விளங்கவில்லை. “பெரிய சக்கரவர்த்தி இராஜராஜ அருள்மொழித்தேவர் தமது கடைசி நாளில் கூறிய மொழிகளை நினைத்துப் பாருங்கள், சக்கரவர்த்தி” என்றான் இளங்கோ. அதோடு அவன் தன் பெரியபாட்டனார் கொடும்பாளூர்ச் சிறிய வேளார் ஈழத்தில் உயிர் துறந்ததையும் நினைத்துக் கொண்டான்.

“என் தந்தையார் எதற்காகக் கூறினார் என்பதைச் சிந்தித்துப் பார்!”n இளங்கோவேள் சிந்தித்துப் பார்த்தான். “கோழைத் தனமாக எவனோ ஒரு பாண்டியன் தன்னுடைய நாட்டு மணிமுடியைப் பிறநாட்டு மன்னிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டான். அவனுக்கு அடைக்கலம் கொடுப்பதாக வாக்களித்தவர்கள். அவனுடைய சொந்த உடைமைகளைக் கூடத் தங்களுடையதாக எடுத்துக் கொண்டார்கள். இதற்காக இத்தனை போர்களா? இரண்டு பக்கங்களிலும் இது வரையில் எத்தனை எத்தனை வீரர்கள் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருப்பார்கள்? இனியும் அந்த முடி எத்தனை உயிர்களைக் காவு கொள்ளக் காத்திருக்கிறதோ?’

“என்ன, இளங்கோ! மறுமொழியைக் காணோமே?” என்று கேட்டு, அவன் சிந்தனையைக் கலைத்தார் மாமன்னர்.

“நம்முடைய புகழையும் பெருமையையும் நிலைநாட்டிக் கொள்ள நாம் தொடுக்கும் போர் இது” என்று எதையோ சொல்லி வைத்தான் இளங்கோ.

“ஆம், உண்மைதான்; அது தமிழ் மன்னனின் முடி என்பதுதான் முக்கியமான காரணம்” என்று சொல்லி விட்டு, மேலே கூறலானார் மாமன்னர்:

“மேலைச் சளுக்கர்கள் தமிழ்நாட்டைச் சூறையாடுவதற்கு எந்தக் கணத்திலும் காத்திருக்கிறார்கள். பண்போடு போர் செய்யும் முறை அவர்களிடம் கிடையாது. ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். பெண்டிரின் மானத்தைப் பறித்து அவர்களை அடிமைகளாக இழுத்துச்செல்வார்கள். வீரர்களை அங்க ஈனம் செய்து விளையாடுவார்கள். இன்னும் நினைத்துப் பார்க்க முடியாத இழி செயல்களையெல்லாம் அவர்கள் செய்யத்தயங்கமாட்டார்கள்.”

‘மேலைச் சளுக்கர்களும் இப்போது ஈழநாடு செல்வதற்கும் என்ன சம்பந்தம்’ என்று இளங்கோவேள் நினைக்கத் தொடங்கியபோது, மாமன்னர் மேலே தொடர்ந்து பேசினார்: “நம்முடைய மக்களை அவர்களைப் போன்ற வெறியர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமானால், நம்முடைய மண்ணில் பிறந்த ஒவ்வொருவர்க்கும் நாம் போராட்டச் சக்தியை ஊட்டவேண்டும், ஊக்கமும் உற்சாகமும் தரவேண்டும். மக்களின் எழுச்சியைக் கிளறி அவர்களுக்குப் புத்துயிர் தரும் சக்தி நாம் கொண்டுவரப் போகும் மணிமுடியிடமே இருக்கிறது!”

“என்ன?”

“ஆமாம், மணிமுடி என்பது வெறும் தங்கமோ, தங்கத்தில் பதித்த நவரத்தினக் கற்களோ அல்ல! ஒரு நாட்டின் அரசுரிமைச் சின்னம் அது. அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் இப்போது சோழப்பேரரசுக்குள்
இருக்கிறதென்றாலும், பாண்டியப்பகுதி மட்டும் இன்னும் தங்களிடமே இருக்கிறதென்று ரோகணத்தரசர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். நமக்குத் திரை செலுத்தும் மூன்று பாண்டியர்களும் அதை ஒப்புக்கொண்டு அதனால் பெருமை வேறு பேசுகிறார்கள். அந்த அரசுரிமைச் சின்னங்கள் நம்மிடம் வரும் வரையில் அப்படித்தான் அவர்கள் பேசுவார்கள்.”

“விந்தையாக இருக்கிறதே!” என்று நகைத்தான் இளங்கோ.

“இளங்கோ! மூன்று முறை போர் தொடுத்தும் நம்மால் அதைக் கொண்டுவர முடியவில்லையே என்ற தளர்ச்சி இன்னும் நமது மக்களிடையே பரவியிருக்கிறது. அந்தத் தளர்ச்சியை நீக்கித் தமிழர் கூட்டத்தைத் தலைநிமிர்ந்து நடக்கச் செய்யும் மந்திர சக்தி அந்த மணிமுடியிடம் தான் இருக்கிறது. அதை இங்கே கொண்டு வந்து விட்டால் தமிழ்நாடே அதனால் புதுவாழ்வு பெற்றுவிடும். ஒவ்வொரு தமிழ் மகனும் தன் தலையில் அதைச் சூடிக் கொண்டதைப் போல் பெருமை பெறுவான். பகையரசர் இச் செய்தி கேட்டு நடுநடுங்கிப் பதுங்குவார்கள். இந்தப் பரம்பரையையே பகையஞ்சாப் பரம்பரையாக மாற்றும் திறன் அந்த ஒரே ஒரு மணிமுடிக்கு இருக்கிறது இளங்கோ!”

வியப்பு மேலீட்டால் இளங்கோவின் வாய் அடைத்து விட்டது. சில விநாடிகளுக்கு முன்பு அவனுள் எழுந்த அரைகுறைச் சிந்தனைகளை நினைத்தபோது அவனுக்கேவெட்கமாக இருந்தது. மலைபோல் வீற்றிருந்த அநுபவத்தின் சிகரமான மாமன்னர் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்துப் பேசியதால் அவன் பெருமகிழ்ச்சி கொண்டான்.

“இளங்கோ! உன்னிடம் நான் இவ்வளவையும் விளக்கிச் சொல்வதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது” என்றார் சக்கரவர்த்தி.

இளங்கோ தன் தலையை உயர்த்தி அவர் முகத்தைப் பார்த்தான்.

“நீ தான் மன்னர் மகிந்தனிடம் தூது செல்லப் போகிறாய். தூதில் வெற்றி பெறாவிட்டால் வாள் முனையில் அவரைச் சந்திக்கப் படை நடத்திச் செல்பவனும் நீதான்!”

மெய் சிலிர்த்தது இளங்கோவுக்கு.

“முன்னரே என் தந்தையார் காலத்தில் என்னிடம் புறமுதுகு காட்டி ரோகணத்துக் காட்டுக்குள் நுழைந்தவர் அவர். அவருடைய படையில் இருப்பவர்களில் பலர் சேர பாண்டியப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் வீரர்கள். கோழையான மகிந்தருக்கு எதிராகவும், அவரைக் காக்கும் தமிழர்களுக்கு எதிராகவும் நான் வாள் பிடிக்க விரும்பவில்லை. பொறுப்பு உன்னுடையது. வல்லவரையர் உனக்குத் துணையாக நின்று வழிகள் சொல்வார்.”

மாமன்னருடைய மாண்பு ஒரு புறமும், தன்னிடம் அவர் கொண்டுள்ள நம்பிக்கை மறுபுறமும் இளங்கோவைப் பிரமிக்க வைத்தன. நன்றிப் பெருக்கால் அவன் கண்கள் கலங்கின. “மாபெரும் பாக்கியம் செய்திருக்கிறேன் சக்கரவர்த்திகளே! வெற்றிபெற வேண்டுமென்று இப்போதே ஆசீர்வதித்தருளுங்கள்!” என்று அவர் முன்பு மண்டியிட்டு வணங்கினான் இளங்கோ.

பகல் இரவாகி, மறுநாள் காலைப்பொழுது பலபலவென்று விடியத் தொடங்கியது. தெற்கு வான விளிம்பில் கூட்டம் கூட்டமாகக் கடற்பறவைகள் பறந்தன. பசுமையான திட்டைப் போல் ஏதோ ஒன்று தொலைதூரத்தில் தெரிந்தது. “அதோ பார், ஈழ மண்டலம்!” என்று இளங்கோவுக்குச் சுட்டிக் காட்டினார் இராஜேந்திரர்.

பரபரப்போடு இளங்கோவேள் வல்லவரையரிடம் ஓடிப்போய் “தாத்தா! இன்னும் என் நெற்றிப் பொட்டு அழிந்துவிடாமல் இருக்கிறதா, தாத்தா?” என்று கேட்டான்.

தொடரும்


November 20, 2012

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...