Skip to main content

வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1-16




இளங்கோவின் குதிரை கோட்டை வாயிலை நெருங்குவதற்கு முன்பே அதை நன்றாக இழுத்து மூடிவிட்டார்கள். வல்லவரையர் வந்தியத்தேவர் நெருப்புப் பொறி பறக்கும் கண்களோடு அங்கு நின்றுகொண்டே வீரர்களுக்குப் பற்பல விதமான கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

“ஓடுங்கள்! அரண்மனையின் எல்லா வாயில்களையும் மூடச்சொல்லுங்கள்!” என்றார் சிலரிடம். “எதிரிகள் எங்கு தென்பட்டாலும் அவர்களை வளைத்துக் கொண்டு காவலில் வையுங்கள்!” என்றார். இன்னும்சிலரிடம், “நிலவறைப் பாதைகள், ரகசிய வழிகள், தப்பிச் செல்வதற்கான

மார்க்கங்கள் எங்கேயாவது தென்படுகின்றனவா என்று தேடிப் பாருங்கள்!”என்றார் மேலும் சிலரிடம்.
வல்லவரையரிடம் நெருங்கிப் பேசுவதற்கே அச்சமாக இருந்தது இளங்கோவுக்கு. நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில் வாயில் கதவுகளைத் திறக்கச் செய்வாரா அவர்? வீரர்களின் மத்தியில் புகுந்து தயங்கிக்கொணடேபோய் அவர் முன்னால் குதிரையிலிருந்து கீழே இறங்கினான் இளங்கோ.

“நீ எங்கு இங்கே வந்தாய்?” என்று வியப்புடன் கேட்டார் வல்லவரையர்.

“மகிந்தரின் மகனை யாரோ குதிரைமேல் தூக்கி வைத்துக் கொண்டு இந்த வழியாகச் சென்றார்கள். நம்முடைய வீரன் என்று நம்பி ஏமாந்து போய்விட்டேன். வாயிலைத் திறந்து விடச் சொல்கிறீர்களா?” என்றான் இளங்கோ.

“இதற்காக இந்த வேளையில் நீ அரண்மனையைவிட்டு வெளியே கிளம்பலாமா? உடனே திரும்பிப்போ! அரண்மனை அந்தப்புரம், அரசமாளிகைகள் எல்லாவற்றையும் நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும்.”

தயங்கிய வண்ணம் அங்கேயே நின்று கொண்டிருந்தான் இளங்கோ.

“எதற்காக நிற்கிறாய்? அரண்மனைக்குப்போ; இதோ நானும் வந்து விடுகிறேன்” என்றார் வல்லவரையர்.

“தாத்தா! என் கண்ணெதிரில் அவன் தப்பிவிட்டான், தாத்தா! அவனை எப்படியாவது பிடித்துக் கொண்டு திரும்புகிறேன். வாயிலைத் திறக்கச் சொல்லுங்கள்” என்று கெஞ்சினான் இளங்கோ.

“மன்னரே தப்பி ஓடிவிட்டாரென்று செய்தி வந்திருக்கிறது. அவருடைய மகனுக்காகக் கவலைப்படுகிறாயே” என்று வருத்தத்துடன் சிரித்தார் வந்தியத்தேவர். “இதோ பார், இந்த ரோகணமே ஒரு பெரிய எலி வளை.ஒளிந்து கொள்வதும் மறைந்து கொள்வதும் இந்த நாட்டுக்குப் புதிதல்ல. மெதுவாக அவர்களையெல்லாம் தேடிப்பிடித்துக் கொள்ளலாம். வா, நாம் போய் மற்றவர்களும் மறைந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்வோம்.”

இளங்கோவால் வல்லவரையர் சொல்லை மீற முடியவில்லை. இருவரும் ஒன்றாய்த் திரும்பினார்கள்.

அரண்மனைக்குள் நூற்றுக்கணக்கான வீரர்கள் நுழைந்து எங்கெல்லாம் சோதனையிட்டுப் பார்க்க முடியுமோ, அங்கெல்லாம் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு இடமாகச் சென்று எதையோ தேடிப் பார்ப்பதில் முனைந்திருந்தனர்.

“தாத்தா! இப்போது எதைத் தேடுகிறார்கள் இவர்கள்?”

“நாம் எதற்காக இங்கே படையெடுத்து வந்தோமோ, அதைத்தான் தேடுகிறார்கள்.”

“மணிமுடி தேடும் படலமா?” என்று கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரித்தான் இளங்கோ. “ஏன் தாத்தா ஓடி ஒளிந்து கொண்ட மகிந்தர் அதை எப்படி இங்கே வைத்து விட்டுப் போயிருப்பார்? மனிதர்களை ஒளித்துவைக்கவே மலைக் குகைகள் நிறைந்த நாட்டில், மணி முடிக்குத்தானா சிறுஇடம் கிடைக்காது!- தாங்கள் முன்பு என்னிடம் அப்படிக் கூறியிருக்கிறீர்கள்.”

“தேடிப் பார்த்துவிட வேண்டியது நம்முடைய கடமை” என்றார் வந்தியத் தேவர். “எங்கேதான் அதை வைத்திருக்கிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. கோட்டைக்கு வெளியில் இருப்பதைவிட அரண்மனைக்குள்வைத்திருந்தால், அதுவே அதிகப் பாதுகாப்பாகும் என்று அவர் நினைத்திருக்கவும் இடம் உண்டு அல்லவா?”

“எனக்கு என்னவோ அது இங்கே இருக்குமென்று தோன்றவில்லை.”

“தேடிப் பார்ப்பதிலும் தவறில்லை” என்று கூறிய வல்லவரையர் “வா, இவர்கள் இங்கே தேடிக் கொண்டிருக்கட்டும். நாம் அதற்குள் அந்தப்புரத்தில் போய்த் தேடி பார்த்து விட்டு வருவோம்” என்று அவனை அழைத்தார்.

அந்தப்புரம் என்ற சொல் இளங்கோவின் செவிகளில் விழுந்தவுடன் ஆயிரம் தேள்கள் அவனை ஒன்றாகக் கொட்டின! அந்தப்புரத்துக்குள் எந்தமுகத்தை வைத்துக் கொண்டு நுழைவது? அந்தப் பெண்ணின் முகத்தில் இனி எப்படிப் போய் விழிப்பது? கையும் களவுமாகக் கள்வனைப் பிடிப்பதுபோல் அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு வந்திருந்தால், அவள் முன் தன்வீரத்தை நிலை நாட்டியிருக்கலாம்! வெறும் கையுடன் அங்கே போய் நின்றால் அவள் புருவங்கள் நெரிய, வேல் விழிகளால் ஏளனமாகப் பார்ப்பாள்.பார்த்துக்கொண்டே கேலிச் சிரிப்புச் சிரிப்பாள். அந்தக் கண்களின் ஏளனத்தையும், முத்துப் பல் வரிசையின் கேலிச் சிரிப்பையும் எப்படிப் பொறுத்துக் கொள்வது?”

வேகமாக முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த வந்தியத்தேவர்,இளங்கோ தன்னுடன் வராததைக் கண்டு தயங்கி நின்று திரும்பினார். அவன் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்பதைக் கண்டார்.

“என்ன இளங்கோ இது?”

“தாங்கள் மாத்திரம் போய் வாருங்கள் தாத்தா. எனக்கு அங்கே வருவதற்குப் பிடிக்கவில்லை.”

“உன்னை யாரும் அங்கே பிடித்துக் கொள்ள மாட்டார்கள், வா!”

பரபரவென்று அவனுடைய கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு போனார் வல்லவரையர். அவன் தயங்கித் தயங்கிச் சென்றது அவருக்கு வியப்பைத் தந்தது. “காரணத்தைச் சொல், விட்டு விடுகிறேன்” என்றார்.

மென்று விழுங்கிக் கொண்டு, மேலும் கீழும் விழித்துக் கொண்டு,நடந்தவற்றை விவரமாகக் கூறினான் இளங்கோ. தன்னுடைய கரத்தைப்பற்றித் தடுத்து விட்ட பெண்ணின் மேல் அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.

“தாத்தா! எனக்கு இருக்கும் கோபத்தில், இப்போது நான் அவளைப்பார்த்தால், இரண்டு துண்டாக வெட்டிப் போட்டு விடுவேன். வேண்டாம்,நீங்கள் மட்டும் போய் வாருங்கள்.”

கிழவருடைய கடைக்கண்கள் குமரனின் முகத்தில் பதிந்து கேலிச்சிரிப்புச் சிரித்தன. “பெண்ணைக் கண்டு அஞ்சும் அளவுக்குக் கோழையா நீ?நமக்கு வேண்டியது மணிமுடி! வா, போகலாம்” என்று அவனை அழைத்துக்கொண்டு போனார். அந்தப்புரத்தில் ஒரு கூடத்தைச் சுற்றிலும் ஐம்பது வீரர்களுக்குமேல் காவல் நிற்பதைக் கண்டவுடன் அவருக்குத் திகைப்பு ஏற்பட்டது.

“இதென்ன இளங்கோ! பாவம், பெண்களை வீணாகப் பயமுறுத்துவதற்கா இப்படிச் செய்திருக்கிறாய்?”

“பெண்களுக்கிடையில் ஒரு பேயும் இருக்கிறது தாத்தா; நான் உங்களிடம் கூறினேனே, அவள் பெண்ணேயல்ல, மாய மோகினி!”

தாழிடப்பட்டிருந்த கதவைத் திறந்து கொண்டு இருவரும் கூடக்குக்குள் நுழைந்தார்கள். சுற்று முற்றும் பார்த்துவிட்டு இளங்கோ, “தாத்தா!” என்று அலறினான். அலறிவிட்டு, அங்குமிங்கும் ஓடினான். மூலை முடுக்குகளெல்லாம் சென்று ஆராய்ந்தான்.

அவனுடைய பதற்றத்தின் காரணம் விளங்கவில்லை. அறைக்குள்ளே மூன்று பெண்கள் இருந்தார்கள். அவர்களுடைய முகங்களை நன்றாக உற்றுப்பார்த்தான் இளங்கோவேள். பிறகு வெளியே ஓடி போர்க்காவல் காத்து நின்று கொண்டிருந்தவர்களிடம் கேட்டான்,

“அறைக்குள்ளிருந்த பெண்ணொருத்தியைக் காணவில்லையே, எங்கே அவள்?”

“கண்ணிமைக்காமல் காத்து நிற்கிறோம், இளவரசே. யாரும் இந்தக்கூடத்தை விட்டு வெளியில் வரவில்லை.”

“அந்த மாய மோகினி மாயமாய் மறைந்து விட்டாள் தாத்தா!”

இளங்கோவின் தலை ஏற்கனவே சுற்றத் தொடங்கிவிட்டது. இப்போது அத்துடன் வந்தியத் தேவரின் தலையும் சேர்ந்து கொண்டது. வாளிருக்க, வீரர்படை விழித்து நிற்க, அந்த வேல் விழியாள் எங்கே போனாள்?

தொடரும்

November 21, 2012

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...