Skip to main content

வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1-14




மூன்று மாத முற்றுகையைத் தாங்க முடியுமென்று வீரம் பேசிய கீர்த்தி,இனி மூன்று நாட்கள் கூடத் தாங்க முடியதென்பதைக் கண்டு கொண்டார்.அவர்களுடைய சினம் இளங்கோவின் மீது திரும்பியது. கொடும்பாளூர் இளவரசனாமே அவன்? சூறாவளியுடன் சேர்ந்த ஊழித்தீயைப் போல் அவன் நமது படைகளைப் பதைபதைக்க வதைத்து விட்டானே?

கீர்த்தி குறி தவாறது கூரம்பு எய்வதில் பெயர்பெற்றவர். பறக்கும் பறவைகளையும், பாயும் புலிகளையும், புதருக்குள் ஒளிந்துவிட்ட வனவிலங்குகளையும் அவருடைய அம்புகள் அநாயாசமாக வீழ்த்தியிருக்கின்றன.அப்படிப் பட்டவர் எத்தனையோ முறை இளங்கோவின் மேல் குறி வைத்து
அம்புகளை நாணேற்றினார். பலன்? அந்த இளைஞனோ ஒரு மனிதப் புயல்.அவன் ஏறியிருந்த கறுப்புப் புரவியோ கார்காலத்து மின்னல்.

மன்னர் மகிந்தருடன் ரகசிய ஆலோசனைகள் நடத்தி அவரை இரவோடு இரவாக எங்கோ ஓர் இடத்துக்கு அனுப்பி வைத்தார் கீர்த்தி.எஞ்சியிருந்த வீரர்களையும் அரண்மனைக்கா வலர்களையும் கூட்டிவைத்துக் கோட்டை மதில்களைக் காக்கும் ஏற்பாடுகளை மளமளவென்று கவனிக்கத்தொடங்கினார்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. கோட்டை வாயில்கள் திறக்கப் படவில்லை. அகழிப்பாலம் பொருத்தப்படவில்லை. சாவோடு உறவாடும் போர்க்களத்தின் பயங்கரமான பேரமைதியைக் கண்டு மலைத்து நின்றது கப்பகல்லகம் கோட்டை. காலை இளம் காற்றில் அதன் சோகப் பெருமூச்சுக் கலந்திருந்தது.

வில்லேந்திய வீரர்களும், தீப்பந்தங்களைச் சுழற்றி வீசும் திண்தோளர்களும் கோட்டைச் சுவர்களின் உச்சியில் வந்து குவியலாயினர். “யானைப் படையை முன்னால் அனுப்புவார்கள்; தீப்பந்தங்களை வீசி எறியுங்கள்” என்று கட்டளையிட்டிருந்தார் கீர்த்தி. யானைகள் திருப்பிக் கொண்டு சோழர்களின் சேனையை மிதித்து அழிக்க முற்படுமல்லவா?

ஆனால் இராஜேந்திர மாமன்னர் இதைப் போன்ற எத்தனைப் போர்க்களங்களைக் கண்டவர்; எத்தனை எத்தனை கோட்டைகளை வென்றவர்; சோழப் பேரரசின்குஞ்சரமல்லர்களோ தங்கள் யானைகளைக் காட்டுக்குள் திருப்பிப் பெரிய மரங்களை வேரோடு பெயர்த்துக் கொண்டிருந்தனர்.

கேடயம் தாங்கிய தரைப்படை வீரர்களை அணி வகுத்து அவர்களில் ஒரு பகுதியினரை முன்னால் அனுப்பி வைத்தார். எதிரிகளின் அம்புகள் அவர்கள் மீது பெருமழை பெய்யத் தொடங்கின. இதையே எதிர்பார்த்தவர்போல் மறுபகுதியினரைப் பின்னால் அனுப்பி, முதல் நாள் போரில் வீழ்ந்துபட்ட சடலங்களை ஒன்று திரட்டச் செய்தார்.

கோட்டை வாயிலுக்கு எதிரே கிடந்த அகழிப் பகுதியைத் தூர்ப்பதற்கு இதைத் தோண்டியவர்களின் சடலங்களே பெரிதும் பயன்பட்டன. சோழவளநாட்டின் புகழ் உயர்த்த வீரசுவர்க்கம் எய்தியவர்கள் கூடத் தங்கள் புகழ் உடம்பைக் கொண்டு சென்று பொய்யுடலை மெய்யான வெற்றிக்கு அடித்தளமாக்கினர். இன்னும் இரு தரப்பிலும் வீழ்ந்துபட்ட கரிகளையும் பரிகளையும்கூட வீரர்கள் விட்டு வைக்கவில்லை. அனைத்தும் அகழியை நிரப்புவதற்கு உதவின.

“பிற்பகலுக்குள் கோட்டைக் கதவுகளைத் தகர்த்த முடியுமா?” என்று வல்லவரையரிடம் கேட்டார் சக்கரவர்த்தி.

“ஆமாம், கோட்டைக் கதவுகளின் வேல்முனைகளில் பலகைகள் பாய்ச்சி, பின்னர் யானைகளை மோதவிட்டுத் தகர்த்தெறிய வேண்டியதுதான்.”

அகழியை ஒட்டி நின்ற வண்ணம் படையினருக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தான் இளங்கோவேள்.யானைகளின் உடல்களைப் புரட்டுவதற்கு அவ்வப்போது அவனும் கை கொடுத்தான்.

அவனையே பார்த்துவிட்டு வந்தியத்தேவர் பக்கம் திரும்பினார் மாமன்னர். “கொடும்பாளூர்ச் சிறிய வேளாரின் சாகசங்களை நான்கண்டதில்லை, கேள்விப்பட்டிருக்கிறேன். பூதி விக்கிரம கேசரியின் பராக்கிரமச்செயல்களையும் என் தந்தையார் கூறியிருக்கிறார். இளங்கோவை நேற்று நான் களத்தில் கண்டபோது அவர்களையெல்லாம் நினைத்துக் கொண்டேன்” என்றார்.

“பொறுப்பைக் கொடுத்தவுடன் போர்க்களத்தையே தனதாக்கிக்கொண்டான்” என்றார் வல்லவரையர்.

“சரி, நீங்கள் இருந்து கவனியுங்கள். நான் பின்புறக் கோட்டை வாசலின் நிலைமையைப் பார்த்து வருகிறேன்.”

ஐம்பது யானைகளுடன் இராஜேந்திரர் கோட்டையின் மேற்கு வாயிலை நோக்கிப் புறப்பட்டார். அவர் புறப்பட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம் கிழக்குவாயிலை நாடி நூற்றுக் கணக்கான யானைகள் வேருடன் பிடுங்கிய மரங்களோடு விரைந்தன. மதில்மேல் நின்ற ரோகணத்து வீரர்கள் தீப்பந்தங்கள் யாவற்றையும் முன்னரே எறிந்து விட்டமையால் அம்புகளையே நம்பும் நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

தூர்க்கப்பட்ட அகழி மீது அழுத்தமான பாதை உருவாகியது. வீரர் கூட்டம் விரைந்தோடி நூலேணிகள் வீசிக் கோட்டைமேல் ஏறியது. இறந்து விழுந்தவர்களைத் திரும்பி நோக்கப் பொழுதில்லை. கோட்டைக்காவலர்களைக் கொன்று குவித்த பின், அகழிப் பாலத்தையே மேல் இருந்து இறக்கிவிட்டார்கள் சோழ நாட்டு வீரர்கள்.

கதவுகளின் வேல்முனைகள் மழுங்கப்பெற்றன. மரப்பலகைகள் பொருத்தப்பட்டன. பாய்ந்தன, பாய்ந்தன, பாய்ந்தன ஈழநாட்டு வேழங்கள்!பாய்ந்தனர், பாய்ந்தனர், பாய்ந்தனர், தமிழ்நாட்டுக் காளைகள்!

மத்தகங்களால் களிறுகள் மோத, மரத் தூண்களால் காளைகள் மோதினார்கள். மத்தகம் மதம் சொரிய, சிறு கண்கள் செந்நீர் பாய்ச்ச, தந்தங்கள் முத்துதிர்க்கப் பொடிப் பொடியாகச் சிதறி வீழ்ந்தன கப்பகல்லகம் கோட்டைக் கதவுகள்.

வீரர்களின் வெற்றி ஆரவாரத்தை இனிச் செவிமடுக்க முடியுமா? அவர்களது ஆனந்த வெள்ளத்துக்கு இனி அணையிடை முடியுமா?

“வாழ்க, தமிழ்த் திருநாடு! வாழ்க, புலிக்கொடி!”
“வெல்க, வேங்கையின் மைந்தன்!”

இளங்கோவின் கரிய நிறப் புரவி தன் பிடரியை சிலிர்த்துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் உள்ளே தாவியது. அவனைப் பின்பற்றியது சிறுசூறாவளிப்படை. நேரே அரண்மனை வாயிலுக்குச் சென்று எதிர்த்தோரை மடக்கிவிட்டு உள்ளே சென்றான் இளங்கோ. அரச சபை காலியாகக் கிடந்தது. மந்திராலோசனை சபை மண்டபத்தில் யாரையுமே காணோம். மேல் மாடத்திலும் ஆள் அரவமில்லை. எங்கே மன்னர்? மகாவீரரென்று பெயர்பெற்ற கீர்த்தி எங்கே?

அரண்மனைக்குப் பத்து பாகத் தொலைவில் அந்தப்புர மாளிகை தனியே தென்பட்டது. அதைச் சுற்றிலும் பலமான பாதுகாவல் படை நின்றதால் மன்னர மகிந்தர் அங்கே இருக்கக்கூடும் என்று நினைத்தான் இளங்கோ.அவனுடைய வீரர்கள் காவலர்களை வளைத்துக் கொள்ளவே அவன் மட்டிலும் உள்ளே நுழைந்தான்.

முன்வாயிலைக் கடந்தவுடன் உள்வாயிலின் முன்னே ஓர் உருவம் நிற்தைக் கண்டான் இளங்கோ. அன்றைக்கு அவன் மீது வாளெறிந்த அதேசிறுவன். அவனுடைய துடுக்கும் மிடுக்கும் அப்படியே இருந்தன. இடக்கரத்தில்
கேடயமும், வலக்கரத்தில் சிறுவாளுமாகப் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருந்தான் அவன். பதினைந்து வயதுச் சிறுவனான அவனை அன்போடு தழுவிக் கொண்டு தட்டிக்கொடுக்க வேண்டுமென்று தோன்றியது இளங்கோவுக்கு. ஆனால் சிறுவனின் முகத்திலோ குரோதம் குமுறிக்கொண்டிருந்தது. அன்போடு தழுவிக் கொள்ளலாமென்றால் அந்த அன்பு நெஞ்சத்தின் ஆழத்தைத் தன் உடைவாளால் அளந்து பார்த்துவிடுவான் போலிருக்கிறதே!

“தம்பி! உனக்குத் தமிழ் தெரியுமா? மன்னர் எங்கே? அரசர் இங்கு இருக்கிறாரா?” என்று கேட்டான் இளங்கோ.

“மன்னரை ஏன் தேடுகிறாய்?” என்று கத்தினான் சிறுவன். “இதோ அவர் மகன் இருக்கிறேன், உன் வீரத்தை என்னிடம் காட்டு, பார்ப்போம்!”

மின்னலெனப் பாய்ந்து இளங்கோவின் மூக்கு நுனியைத் தொட்டது சிறுவனின் உடைவாள். ஒரு சொட்டு செவ்விரத்தம் அங்கே பவளம்போல் திரண்டது. விளையாட்டுப் பிள்ளையா; வினையாற்றும் வீரனா?

இளங்கோவேளுக்குச் சிறிது நேரம் அவனோடு வீர விளையாட்டு விளையாடிப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. வாட்கள் மோதின;கேடயங்கள் உராய்ந்தன. இளங்கோவேள் அவனுக்குச் சிரிப்பு மூட்டுவதற்காகப் பலவித வேடிக்கைகள் செய்து காட்டினான்.

ஆனால், விளையாட்டு வினையாகி, வேடிக்கை காட்டியவனுக்கே விபத்தைத் தேடித் தரும்போல் தோன்றியது. வயதுக்கு மீறிய வாட்பயிற்சி சிறுவனுக்கு. “சிரிப்பா காட்டுகிறாய்? சிதைத்து விடுகிறேன் பார், உன்தலையை” என்று கூறி, வாள் சுழற்றினான். விளையாட இனி நேரமில்லை.

அவன் வாளைத் தட்டிவிட்டு, தன் வாளையும் செருகிக்கொண்டு அவனை எட்டிப்பிடிப்பதற்காக ஓடினான் இளங்கோ. சிறுவனின் கால்கள் அசுர பலம் பெற்று முன்னே ஓடத் தொடங்கின. அங்குமிங்கும் போக்குக் காட்டிவிட்டு மிகச் சாதுரியமாக விரைந்தான் அவன். சிரிப்பும் பழிப்பும்
இப்போது சிறுவனிடமிருந்தே கிளம்பின!

“என்ன! என்னையா பழிக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்!” கோபத்தோடு இளங்கோ அலறி மேலே விழுந்து பற்றி இழுக்கப் போனான்.

“படார்” என்ற சத்தத்துடன் இளங்கோவின் வலது பக்கம் இருந்த அறைக் கதவு திறந்தது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள் வளைக்கரமொன்று விரைந்து வந்து அவன் வலது கரத்தைப் பற்றியது.

“அவனை இப்போது என்ன செய்து விடுவீர்களாம்?” என்று கேட்டுக்கொண்டே இளங்கோவின் குறுக்கே வந்து நின்று, வழி மறித்தாள் ஒரு பெண். பிடித்திருந்த கரம் மென்றளிர்க் கரம்தான்; ஆனால் பிடியோ இரும்புப் பிடி! சிறுவன் மீது அவனைப் பாயவிடாமல் வளைத்து நின்று முற்றுகையிட்டாள் அவள். இளங்கோவிற்குப் பேசுவதற்கே நா எழவில்லை.

“இதுதான் தமிழ்நாட்டு வீரமோ? உங்களுடைய வீரத்தைக் காட்டுவதற்கு இந்தப் பச்சைப் பாலகன்தானா அகப்பட்டான்?”

‘இப்போது நான்தான் உண்மையில் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறேன்’என்று சொல்லத் தோன்றியது அவனுக்கு. ஆனால் எப்படிச் சொல்வதென்று விளங்கவில்லை. அவளோ தன் வேல் விழிகளால் அவனைச் சுட்டெரிக்கிறாள்.

அன்றைக்குத் தூதுவனாக வந்தபோது அவனைத் துரத்திவந்த அதே வேல் விழிகள்; நேருக்கு நேர் நின்று அவனை இப்போது துளைத்தெடுக்கின்றன! இளங்கோ அப்பழுக்கற்ற வீரன்தான். என்றாலும் அவளை ஏறிட்டுப் பார்க்கும் துணிவு அவனுக்கு ஏற்படவில்லை. தன்னுடைய கரத்தை விடுவித்துக் கொள்ளும் சக்தியும் அவனிடம் இப்போது கிடையாது. அவன் செயலிழந்து போய் நின்றான்.

“சொல்லுங்கள், இதுதான் தமிழ்நாட்டு வீரமா?”

“மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று தடுமாறினான் இளங்கோ. “எங்கள் நாட்டுப் பெண்களுக்கு உங்களைப் போல் இவ்வளவு துணிவு கிடையாது.பிடியைச் சிறிது தளர்த்துகிறீர்களா?”

பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு, அந்தச் சிறுவன் அங்கே இல்லை என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டு அவன்கரத்திலிருந்து கரத்தை எடுத்தாள் அவள். கலகலவென்று அவள் சிரித்த சிரிப்பொலியோடு, அவளுடைய வெண்முத்துப் பல்வரிசை மல்லிகை மணம் சிந்தியது.

அந்தக் கிறக்கத்திலிருந்து அவன் விடுபட்டுச் சுய நினைவு பெறுவதற்குள், அவனை இதுவரையில் அலைக்கழித்த வீரச் சிறுவன் எங்கோ ஓடி மறைந்து விட்டான். ஒவ்வொரு இடமாக இளங்கோ தேடிவிட்டு ஏமாந்த போதும், அந்த வேல் விழியாள் ஒவ்வொரு முறையும் சிரிப்புதிர்த்துப் பரிகசித்தாள்.

பயமே கிடையாதா அவளுக்கு? அச்சத்தையே அறியாதவளா அவள்? அவளிடம் திரும்பிவந்து, “எங்கே அந்தச் சிறுவன்?” என்று சினத்தோடுகேட்டான் இளங்கோ.

அதற்கும் அவளுடைய மறுமொழி ஒரு மோகனச் சிரிப்புத்தான்.

தொடரும்






Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...