"வன்முறைக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்கின்ற பக்குவம் நம் சமுதாயத்தில் எத்தனை பேருக்குண்டு?"-கேஷாயினி எட்மொண்ட்
இலங்கையின் மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பைச் சேர்ந்த கேஷாயினி எட்மண்ட் ‘மீரா’ என்ற புனைபெயரில் தமிழ் இலக்கியவெளியில் அறிமுகமானவர். , யங் ஏசியா ஊடகநிறுவனத்தில் தயாரிப்பாளராக பணியாற்றிய மீரா தற்போது பெண்ணியம் இணையத்தின் ஆசிரியர்களுள் ஒருவராகவும், சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார். திரைப்பட மற்றும் ஊடக கல்லூரியில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ள மீரா பல்கலைக்கழகத்தில் கட்டிடப்பொறியியல் மாணவியாக கல்விகற்று வருகின்றார். இசை, கவிதை எழுதுதல், சமூக நோக்கு ,ஊடகம் போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் பன்முக ஆற்றல் உள்ள இளைய படைப்பாளிகளில் மீரா தனிமுத்திரை பதிக்கின்றார். மீரா பெண்ணியவாதியாகவே எம்மிடையே அவதானிக்கப்பட்ட ஒருவராக இருக்கின்றார்.
மீராவை நேர்காணலுக்கு அணுகியபொழுது பலத்த வேலைப்பளுக்களிடையே மகிழ்சியுடன் சம்மதம் தந்து இலக்கியம் பெண்விடுதலை சமூக நோக்குகள் என்று தனது எண்ணங்களை உங்களுடன் பகிருகின்றார்.
கோமகன்
0000000000000000000000000000000
மீராவை எப்படி அறியலாம்?
ஊடகம், கலை, பொறியியல் துறை என பன்முகம் இருந்தாலும் ‘ஊடகவியலாளர்’ என்று அறிமுகப்படுத்தி கொள்ளும் போது தான் என்னுள் கம்பீரமாக உணர்கின்றேன். என்னை சாதாரண ஒருத்தியாக சகதோழியாக வெறும் ‘மீரா’வாகத்தான் அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
மீரா என்ற புனைபெயர் எப்படியாக உங்களைத் தொற்றிக்கொண்டது?
சிறுவயதிலேயே பேனை மீது காதல் ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் தான் ஆரம்ப கல்வியை கற்று வந்தேன். இப்பாடசாலை அருட்சகோதரிகளால் நடாத்தப்படுகின்றதொரு பாடசாலை. நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. ஒரு முறை குறுக்கெழுத்து போட்டியில் பரிசுபெற்றவர்கள் பெயரில் என் பெயர் வெளிவந்த போது என் அதிபர் என்னைக் கூப்பிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் படி அறிவுரை வழங்கினார். கூடவே என் படைப்புக்கள் கவிதை, கட்டுரை என மென்படைப்புகளாகவன்றி அரசியலையும் தொட்டதால் என் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. எழுத்தின் மீதான தாகம் அதேவேளை எதிர்பினை சமாளிப்பதற்கான உத்தி என சிந்திக்க தொடங்கியதுடன் என் படைப்புக்களை யாரும் அறியா வண்ணம் வெளியிட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.
பாரதி கவிதைகளால் என்னை எந்தளவிற்கு ஈர்த்தானோ அதைவிட கண்ணன் மீது அந்த பதின்மவயதிலேயே ஒருவித மயக்கமிருந்தது. நான் கத்தோலிக்க மதத்தினை பின்பற்றுபவள் என்றாலும் என் மேசை மீது கண்ணன் எப்போதுமிருப்பான். கண்ணன் எனும் போது முதலில் நம் சிந்தனையை தொடுபவள் மீரா தானே. ஆக ‘மீராபாரதி’ என்கின்ற பெயரில் சில படைப்புகள் எழுதினேன். பின்னர் அதே பெயருடைய படைப்பாளி இருப்பதை அறிந்தவுடன் பெயரை உடைத்து பாரதி, மீரா என வெவ்வேறு பெயரில் எழுதினேன். பின்னர் மேலும் பல புனைப்பெயர்களில் எழுதினேன், எழுதுகின்றேன். ஆனால் மீரா மட்டும் நிலைத்து விட்டது.
இன்னொரு வகையில் பார்க்கப் போனால் கண்ணனின் மீது கண்ணனின் மீராவிற்கு இருந்த பிடிவாதமான காதல் போல் இந்த மீராவும் ஒருவகையில் பிடிவாதக்காரிதான். ஆனால் என் காதல் எழுத்தின் மீதானது.
உங்கள் வீட்டில் எந்தக்கண்ணோட்டத்திலான எதிர்ப்புகள் வந்தன?
முதலில் அம்மா என்னை ‘இந்த வயதில் இவை தேவையில்லை’ என்று அன்பாக சொல்லிப் பார்த்தார். பின்னர் அதையே கண்டிப்பாக சொன்னார். என் வீட்டவர்களைப் பொறுத்தளவில் நான் எழுதுவதால் ஏதும் பாதிப்பிற்குள்ளாவேனோ என்கின்ற பயமும் படிப்பில் கோட்டை விட்டுவிடுவேனோ என்கின்ற கவலையுமே இவற்றிற்கு காரணம். என்னுடைய வயதிற்கு மீறிய முதிர்ச்சியை விரும்பவில்லை அல்லது அவர்களுக்கு அதனை ஏற்றுக்கொள்வது கடினமாயிருந்திருக்கலாம்.
இந்த இளையவயதில் எழுத்தும் இசையும் உங்களை ஈர்த்ததின் பின்புலங்கள் என்ன?
என் குடும்பத்தில் அநேகர்களுக்கு வீணை நன்றாக வாசிக்க தெரியும். என் பெரிய தாத்தாவும் ஒரு கலைஞன், முன்னர் எங்கள் யாழ்ப்பாணத்து வீட்டில்; வீணை இசையும் சலங்கை ஒலியும் அதிகாலையிலேயே ஒலிக்க தொடங்கிவிடும் என அம்மா அடிக்கடி சொல்லுவார். அதே போல என் தாயாரும் நாவல் பிரியை. நான் வயிற்றில் இருக்கும் போது நிறைய வாசித்ததாகக் கூறுவார். அது மட்டுமல்ல எனக்கு ஐந்து வயதாயிருக்கும் போதே பரதமும், வீணையும் பயிற்றுவித்தல் ஆரம்பமாகிவிட்டது. பின்னர் உயர்தர கணிதப்பிரிவுக்கு வந்த பின் பரதம் நின்றுவிட்டாலும் வீணையும் பாட்டும் இன்றும் தொடர்கின்றன. சிறுவயது முதலே நிறைய வாசிப்பேன். ஆக எழுத்தும் இசையும் நான் கருவில் கற்கத்தொடங்கியதாகவே நினைக்கன்றேன்.
ஈழத்து அல்லது புலம்பெயர் தமிழ் இலக்கியத்திலே பெண்களின் பங்களிப்பு என்பது எந்தளவு தூரத்துக்கு வளர்ச்சி நிலையை அடைந்துள்ளதாக எண்ணுகின்றீர்கள்?
ஈழத்து இலக்கியங்களில் முன்னரை விடவும் பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றாலும் பங்களிப்பு என்னளவில் குறைவாகவே உள்ளதாக கருதுகின்றேன். எண்ணிக்கை என்பதற்கும் - பங்களிப்பு என்பதற்கும் வேறுபாடு இருக்கின்றது. ஆனால் புலம்பெயர் இலக்கியங்களில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தான் கூறவேண்டும். பல பேசா பொருள்கள் பேசு பொருளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக எந்தவகையான பேசா பொருள்கள் பேசு பொருளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன?
முன்னர் எம்முடைய சமூக கட்டமைப்புக்குள் வெளிவராதிருந்த வீட்டு வன்முறைகள், பாலின உரிமைப்போராட்டங்கள், மூன்றாம் பாலினர் குறித்த விடயங்கள் போன்றவை இப்போது தான் படைப்புகளில் வெளிவர ஆரம்பித்திருக்கின்றது.
ஈழத்து இலக்கியங்களில் பெண் படைப்பாளிகளினது பங்களிப்புகள் குறைந்துள்ளதாகச் சொல்கின்றீர்கள், இதற்கான காரணங்கள் என்ன?
மூன்று தசாப்தகால ஈழப்போரானது பல இலட்சம் இளைஞர்களை காவுகொண்டது மட்டுமல்லாது பலரை புலம்பெயரவும் செய்திருக்கின்றது என்பது உண்மை. இந்தப்புலப்பெயர்வானது பின்னர் எவ்வாறான சமூக தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது என்றால், என் சமவயது பெண்களையும் திருமண உறவின் மூலம் இன்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு வழிகோலியிருக்கின்றது. இவ்வாறான சமூகத்தாக்கம் ‘ஈழத்து இலக்கிய வீழ்ச்சி’ க்கும் ‘புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி’ க்கும் தளமமைத்துக் கொடுத்துள்ள பிரதான காரணியாக நான் பார்க்கின்றேன்.
உங்களுடைய கவிதைகள் எதைத்தான் அதிகம் பேசவிரும்புகின்றன?
அதிகமான என் கவிதைகள் என் கோபங்கள் அல்லது கவலைகளின் வெளிப்பாடுகளே. இவை சொற்கள் கோர்க்கப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. பேருந்து ஜன்னல் ஓரங்களிலும், வீட்டில் மாமரத்தின் கீழும் அமர்ந்து கிறுக்கியவை. எழுதப்பட்ட இடங்களை கொண்டே சொல்லிவிடலாமே…. பெரும்பாலானவை சமூகத்தின் மீதான என் தார்மீக கோபத்தின் கிறுக்கல்கள்.
எப்படியான கோபங்கள் சமூகத்தின் மீது உண்டு?
பேருந்தின் ஓரத்தில் இடம்பிடிக்க மற்றவர்களை தள்ளிக்கொண்டு ஏறிவிட்டு வெற்றிலை எச்சிலை வீதியில் துப்புகின்ற தனி நபர்கள் தொடக்கம், ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்பட்டவுடன் அவள் வெளியில் சென்ற நேரம், அவளது உடை குறித்து விமர்சித்து பழியை அவள் மேலேயே திருப்புகின்ற இந்த சமூகம் வரை என்று இவர்கள் அனைவர் மீதும் எனக்கு அதீத கோபம் உண்டு.
கவிதையின் மொழியானது எப்படியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்?
நிர்வாணமானதாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். மறைத்தல், பூசிமெழுகல் இன்றி அப்படியே படைப்பாளியின் உணர்வினை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
‘கவிதையின் மொழியானது நிர்வாணமாக இருக்கவேண்டும்’ என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் ஒரு கவிதைக்கு படிமங்களோ இல்லை அழகியல் சொல்லாட்சிகளோ தேவையில்லை என்று சொல்கின்றீர்களா?
படிமங்கள், அழகியல் என்பதெல்லாம் நாம் அணியும் உடைகளையும் நகைகளையும் போன்றவையே. இவை பொருந்துகின்றதா, எம்மை அலங்கரிக்கின்றனவா என்பதெல்லாம் எம் பார்வையை பொறுத்தது. அவைகள் நாமே உருவாக்கிக்கொண்டவை. ஆனால் ‘நிர்வாணம்’ என்பது உருவாகியது. ஆதியின் வடிவம். இதே சித்தாந்தந்தான் கவிதைக்கும். என்னளவில் கவிதைக்கு நாமே சேர்த்துக்கொள்பவையே இந்த அழகியலும் படிமங்களும். விரும்பினால் சேர்க்கலாம் இல்லாதுவிடின் நிர்வாணமானதாக……….அதனதன் சுயத்துடன் எழுதிவிட்டுப்போகலாம். என்னளவில் நிர்வாணங்களே படைப்புகளுக்கு அழகு.
துவக்குகள் முழங்கிய பொழுது இருந்த பேனாக்களுக்கும் இப்பொழுது இருக்கின்ற பேனாக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை எவ்வாறு புரிந்து கொள்கின்றீர்கள்?
துவக்கு இருந்த பொழுது ஒரு சில பேனாக்கள் தான் எழுதின. அவற்றுள் ஒருபக்க சார்புகள் பெரும்பாலும் இருந்தன. ஆனாலும் விடயங்கள் ஆதாரபூர்வமானதாக ஆக்கபூர்வமானதாக இருந்தது. அநேக பேனாக்கள் குருதி எனும் மை கொண்டு எழுதின. இன்று எல்லாப் பேனாக்களும் எழுதுகின்றன, எல்லாவற்றையும் எழுதுகின்றன. தரம் பிரித்தலும், உண்மையறிதலும் கடினமாயிருக்கின்றது. இதில் சமூக ஊடகங்கள் முக்கியமானவை. முக்கியமாக சுயம் குறித்த எழுத்துக்கள் அதிகரித்துள்ளன. அடுத்த பக்கமாக பார்க்கும் போது முன்னர் எல்லாப்பக்கத் ‘தணிக்கை’களையும் கடந்து வந்த எழுத்துக்கள் இன்று தண்ணீர்பாடாக வருகின்றன. இன்னுமொரு விடயம் நானறிந்த மட்டில் அரசினதும் சரி, புலிகள் பற்றியும் சரி இருபக்க அலசல்களும் கொண்ட எழுத்துக்கள் துவக்குகள் முடங்கிய பின்னரே அநேகமாக வெளிவந்துள்ளன.
ஆனால் அப்படி வெளியாகிய எழுத்துக்களும் இன்று நம்பகத்தன்மையில்லாது கேள்விகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உட்படுகின்றனவே?
சரித்திரத்தின் எந்த காலகட்டத்திலும் மந்தைகள் போல் ஒரே திசையில் நகர்ந்தவர்களை விட புதிய கருத்துக்கள், உண்மைகள்தான் அதிக சர்ச்சைகளை, விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. இன்று நாமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நாம் விமர்சனங்களை கையாளத் தெரியாத சூழலில் வளர்க்கப்பட்டவர்கள் அல்லவா? விமர்சனங்கள் என்கின்ற பெயரில் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடுவதும், பிழைகளை மூடிமறைக்க சொல்லப்பட்டதெல்லாம் பொய்கள் என பிரசாரங்களை மேற்கொள்வதும், ஒருவர் நமக்கு பிடித்தவர்களை நம் ஒத்த கருத்துக்களை கூறும் போது கூட்டு சேர்ந்து விட்டு பின்னர் முரணான கருத்தினை சொல்லும் போது அவரை எதிர்முனையில் நின்று திட்டித்தீர்ப்பதும், சுயங்களை விமர்சிப்பதும் நமக்கு ஒன்றும் புதியவையல்லவே.
அண்மைக்காலங்களில் விமர்சனங்கள் என்கின்ற பெயரில் ஒருவருடைய படைப்பை இன்னொருவர் புகழ்வதும் பின்னர் புகழ்ந்த நபரின் படைப்பை முன்னவர் புகழ்வதும் முகநூல் ‘போலி விமர்சனங்க’ளால் நிரம்பி வழிகின்றது. இப்படி புகழ்ந்து எழுதுவதால் மட்டும் இவை சிறந்த படைப்புக்கள் ஆகிவிடுவதுமில்லை. கேள்விகளும் சர்ச்சைகளும் வரவேண்டும். இதன் மூலம் குறித்த விடயம் அலசப்பட வேண்டும். என்ன தான் முட்டி மோதினாலும் உண்மைகள் மட்டும் காலங்கடந்து வாழும் என்பதே யதார்த்தம்.
பெண் விடுதலை என்பது எப்படியாக இருக்க வேண்டும்?
என்னளவில் பெண் இன்னும் விடுதலை அடையவில்லை என்றுதான் தோன்றுகின்றது. தளங்கள் மாறுபடுகின்றனவே தவிர அடிமைப்படுத்தல்கள் தொடர்கின்றன என்றும் தோன்றுகின்றது. இதற்கு ஆணாதிக்கம் காரணம் என்று சொல்லமாட்டேன். பெண் போராட்டங்கள் தொடர்பான தவறான புரிதல்கள், பார்வைகள், ‘பெண் விடுதலை’ என்கின்ற பெயரில் ஆண்கள் செய்கின்ற தவறுகளை ஏட்டிக்கு போட்டியாக செய்தல் போன்றவையும் காரணமாகின்றன என்பது என் கருத்து.
எந்தவகையில் பெண் விடுதலையின் தளங்கள் மாறுபடுகின்றன?
முன்னர் வீட்டிற்குள் பெண்ணானவள் சிசுவாக, பருவப்பெண்ணாக, மனைவியாக வன்முறைக்குட்படுத்தப்பட்டாள். பின்னர் கல்விக்காக போராடினாள். ஊதியத்திற்காக போராடினாள். ஆனால் இன்றோ பகிரங்கமான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடுகின்றாள். அரசியல் உரிமைகளுக்காக போராடுகின்றாள். இவ்வாறாக போராட பிறந்த பாலினமாக இருக்கின்றாள். கருவறையில் கருக்கொள்ள போராடியவள் இன்று உலக அரங்கில் தன்னை நிறுத்திக்கொள்ள போராடுகின்றாள். இங்கு கருவறை, வீடு, வீதி என தளங்கள் தான் மாறுபடுகின்றனவே தவிர போராட்டமென்பது தொடர்ந்துகொண்டு தானிருக்கின்றது.
தாயகத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள் நடைபெறும் பொழுது கள்ள மௌனம் சாதிக்கும் பெண்ணிய அமைப்புகள், அற்ப விடயங்களுக்காக பொதுத்தளங்களைப் பரபரப்பாகுவது பற்றி உங்கள் நிலைப்பாடு எப்படியாக இருக்கின்றது?
‘கள்ள மௌனம்’ என்கின்ற சொல்லாடல் மிகவும் தவறானது. இன்று பெண்கள் பல்வேறு தளங்களில் பிரச்சினைகளை, வன்முறைகளை எதிர்நோக்குகின்றனர். இத்தகைய பலதரப்பு பிரச்சினைகளை பல்வேறுப்பட்ட பெண் அமைப்புக்கள் கையாள்கின்றன. சில நேரங்களில் ‘பெண்’ என்கின்ற பொதுமைக்காகவே ஒன்றிணைகின்றவே தவிர ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு தளத்திலான போராட்டங்கள் உண்டு. இப்படியிருக்கும் போது சிலநேரங்களில் குறிப்பிட்ட வரையறையை தாண்டி செயற்பட முடியாதபோது ‘வலியுடனான மௌனம்’ தான் சாதிக்க வேண்டியிருக்கின்றதேயன்றி ஒதுக்குதல், புறந்தள்ளல் என்பதல்ல அதன் அர்த்தம்.
அடுத்தது பல வேளைகளில் உள்ளக போராட்டங்களை தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு நம் சமூக கட்டமைப்பும் ஒரு காரணம். உதாரணத்திற்கு பாலியல் கொடுமைக்குள்ளான ஒரு பெண் குழந்தை குறித்து பகிரங்க போராட்டம் நிகழ்த்த முடியுமா? நாளை அதன் எதிர்காலம் என்ன? வன்முறைக்காளான பெண்ணைத் திருமணம் செய்கின்ற பக்குவம் நம் சமுதாயத்தில் எத்தனை பேருக்குண்டு? சில முகநூல் போராளிகள், அட்டைக்கத்தி போராளிகளை கொண்டு முழு பெண்ணிய அமைப்புக்களையும் பொதுமைப்படுத்திட முடியாது.
ஆனால் இதே வலியுடனான மௌனம் என்பது நடக்கின்ற அநியாயங்களை ஆதரிப்பது போல் அமைந்துவிடும் அபாயம் இருக்கின்றதல்லவா?
உண்மை. சில நேரத்து யதார்த்தமும் அது தான். ஆனால் இந்த விடயத்தில் இறந்த காலங்களை விடவும் எதிர்காலம் என்பது முக்கியமல்லவா? அதிலும் இன்னுமொருவருடைய சுயத்தினை, வலியை, உளவியல் விடயங்களை அவதானமாக கையாள வேண்டியுள்ளது. இன்னும் பல சந்தர்ப்பங்களில் வன்கொடுமைக்குக் காரணமான நபர்களைத் தெரிந்திருந்தும் அவர்களை ஏதும் செய்யமுடியாத கையாலாகாத தருணங்களிலும் இந்த வலியுடனான மௌனங்களோடுதான் கடக்க வேண்டியிருக்கின்றது. இது மிகப்பெரிய அபாயகரமான நிலையும் கூட. இதில் தங்கள் பதவி பலம், பணப்பலம், அரசியல் பலத்தினை உபயோகித்து பெரும்பாலானோர் தப்பித்துக்கொள்கின்றனர். ஆனால் போராடுகின்ற நாமும் இதே சமூகத்தில்தானே இருக்கின்றோம். சட்டம், அதிகாரங்களுக்கு அமைந்தொழுக வேண்டிய நியதி எமக்கும் உண்டல்லவா? அபாயம் என்று தெரிந்ததும் மௌனிக்கதான் வேண்டியுள்ளது.
அண்மையில் தாயகத்தில் நடைபெற்ற சர்வதேச பிரபல பாடகரின் நிகழ்வில் ஒருசில பெண்கள் தங்கள் உள்ளாடைகளைக் கழற்றி எறிந்து தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தியதால் பெரும் சர்ச்சைகள் கிளம்பின. இதில் உங்கள் பார்வைதான் என்ன?
என் பார்வையில் இதை பால் ரீதியில் நோக்காது யார் செய்திருந்தாலும் பிழை தான். இச்செயலை பலர் சமூக ஊடகங்களில் நியாயப்படுத்தி எழுதியிருந்ததை என்னால் ஏற்கமுடியாது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த உள்ளாடைகளை தான் களைந்து வீசவேண்டும் என்பதில்லை. பொது இடத்தில் எப்படி நடந்துகொள்வதென தெரியாத சிலரது பண்பற்ற செயலாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
நீங்கள் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்கின்றீர்கள். நீங்கள் உட்பட வேற்று மதத்தவர்களில் ஒரு சிலர் தங்கள் படைப்புகளிலே குறிப்பாக கவிஞர்கள் தங்கள் சொந்தப்பெயரை அடையாளப்படுத்தாது சுத்த தமிழ் பெயரில் வருவதன் காரணம்தான் என்ன?
என் சமயம், என் பெயர் எல்லாம் என்னவர்களால் கொடுக்கப்பட்ட அடையாளங்களே. என் புனைபெயர்களையாவது எனக்கு பிடித்த வகையில் தேர்ந்தெடுத்துள்ளேன். இதில் தமிழ் பெயர்கள் மட்டுமல்ல பல வேற்றுமொழி பெயர்களிலும் எழுதியுள்ளேன்.அடுத்த விடயம் படைப்புகளுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லையே. மதம் என்பது என்னளவில் நம்பிக்கை மட்டுமே. இதையே வேறு படைப்பாளிகளும் நினைத்திருக்க கூடும்.
‘படைப்புக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்று சொல்கின்றீர்கள்’ ஆனால் இஸ்லாமிய அடிப்படைத்தீவிரவாதம் படைப்பாளர்களது கருத்து சுதந்திரத்துக்கு வேட்டு வைக்கின்றதே ? பல படைப்புகள் அவர்களால் தடை செய்யப்படுகின்றதே ? இவற்றிற்கு பயந்து வேறு தமிழ் புனைபெயர்களில் வரலாமல்லவா?
நான் சொன்ன தொடர்பு படைப்பிற்கும் புனைப்பெயர்களுக்குமான தொடர்பே அன்றி மதகொள்கைகளுக்கும் படைப்புகளுக்குமான சம்பந்தத்தினை குறித்தல்ல. படைப்புக்களின் ஆரம்ப கட்டங்களே மதத்தினை அடிப்படையாக கொண்டு தானே தோற்றம் பெற்றன. நிச்சயம் புனைப்பெயர்கள் என்பது அச்சங்களின் அடிப்படையில் உருவானவைதான். பின்னான காலங்களில் வேண்டுமாயின் அது விருப்பங்களின் அடிப்படையில் அல்லது அழகியலின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். இஸ்லாமிய அடிப்படைத்தீவிரவாதம் மட்டுமல்ல இன்னும் பல இயக்கங்கங்கள், அரசாங்கங்கள் பலரது கருத்து சுதந்திரங்களுக்கும் வேட்டு வைத்துக்கொண்டு தானிருக்கின்றன. ஈரானிய கவிதைகளில் பெரும்பாலானவை இன்றும் கூட பல பெண்களால் ஆண்களின் புனைப்பெயரில் தான் எழுதப்படுகின்றன. எத்தகைய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளதோ அதன் பக்கம் சார்ந்து புனைப்பெயர்களை தேர்ந்தெடுக்கும் போது அழுத்தங்களை குறைக்கலாம்.
இக்கேள்வியில் தொடுக்கப்பட்டுள்ளதை போன்று அழுத்தங்களை குறைப்பதற்காக தமிழ்ப் புனைப்பெயர்களை தேர்ந்தெடுத்திருக்க கூடும். இதில் இன்னுமொரு ஆபத்தும் உள்ளது. சில தேவையற்ற பிரசாரங்களுக்குக்கூட முகந்தெரியா நபர்கள் குறிப்பிட்ட சமூக, பாலின, சமய புனைப்பெயர்களை பயன்படுத்த வாய்ப்புண்டு.
‘இன்று இலக்கிய வெளியில் பல கவிதாயினிகள் வந்துவிட்டார்கள். அவர்களின் கவிதைகளின் பாடுபொருளில் ஆணியமே அதிகமாக இருக்கின்றது’ என்று கவிதாயினிகளே ஓர் குற்றச்சாட்டை வைக்கின்றார்கள் இதுபற்றிய உங்கள் பார்வைதான் என்ன?
இன்றைய போராட்டமே எமக்கான உரிமைகளை பெறுவது தானே. இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள், பெண்ணுக்கெதிரான வன்முறைகளை புரிபவர்களுள் பெரும்பாலானோர் ஆண்களாயிருக்கும் போது எமது போராட்டம் அவர்களை நோக்கியதாக்தானே இருக்கும். ‘இலக்கியம்’ என்பது காலக்கண்ணாடி எனில் அதில் இன்றைய நிலையில் ஆணியம் தானே இருக்க வேண்டும். இதில் ஆச்சர்யம் எதுவுமில்லையே.
பொதுவாகவே கவிதாயினிகள் தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை தர்க்கபூர்வமாகவோ இல்லை உணர்வு பூர்வமாகவோ எடுக்காது வெறும் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகின்றார்கள் என்றவோர் குற்றச்சாட்டு உண்டு. இதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
இந்த குற்றச்சாட்டினை நான் மறுக்கின்றேன். இன்றைய பெண் வெறும் உணர்ச்சிபூர்வமானவள் அல்ல. பரந்த அறிவும்; விமர்சனங்களைத் தர்க்கபூர்வமாக கையாளும் திறனும் கொண்டவள். ஆனால் அடுத்தவர் வைக்கின்ற விமர்சனங்கள் எல்லை மீறும் போதும் பொதுவெளியில் சுயங்கள் விமர்சிக்கப்படும் போதும் அது சிலவேளைகளில் உணர்ச்சிபூர்வமான கையாள்தலைத் தூண்டுகின்றது. ஆனால் இந்நிலை இன்று அரிதே. சில உதாரணங்களை கொண்டு ஒரு விடயத்தினை பாலின பொதுமைப்படுத்தலாக்கமுடியாது.
இன்றுள்ள ஒருசில கவிதாயினிகள் பெண் அல்லது ஆண்களினது அந்தரங்க உறுப்புகளை வைத்து கவிதைகளைப் புனைகின்றார்கள் இதில் உங்களுடைய புரிதல் எப்படியாக இருக்கின்றது?
பெண்ணினது அந்தரங்க உறுப்புகள் குறித்து எத்தனை செய்யுள்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பெண்ணினது மார்பகங்களை எத்தனை கவிஞர்கள் ஒப்பிட்டுக் கவி படைத்துள்ளார்கள். ஆண் படைப்பாளி பெண்ணின் அந்தரங்கங்களை வைத்து கவிதை இயற்றும் போது பெண் எதிர்பாலினரது அந்தரங்க உறுப்புக்களை வைத்துப் புனைவதில் என்ன தவறு?
படைப்பிலக்கியத்திலே ஓர் பெண்ணானவள் தன்னைப்பற்றிய வெளிப்பாட்டினை வெளிப்படுத்துவதற்கும், அதே வெளிப்பாட்டை ஓர் ஆணானவன் பெண்ணைப் பற்றிய வெளிப்பாட்டினை வெளிப்படுத்தலுக்கும் ஏதாவது ஒற்றுமை வேற்றுமைகளை உணருகின்றீர்களா?
நிச்சயம், ஒற்றுமையை விட வேற்றுமைகள் தானதிகம். என்னதான் ஆண் படைப்பாளி பெண் உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் அதில் நூறுவீத உணர்வு வெளிப்பாடு சாத்தியமிருப்பதில்லை. மென்மையான சொல்லாடலில் பெண் படைப்பாளிகள் வெளிப்படுத்தி விடுகின்ற ஆழமான கருக்களை ஒரு ஆணால் வெளிப்படுத்திவிட முடியாது. இது எப்படியென்றால் காயம் பட்டவர் கதறுவதற்கும் பார்த்துக்கொண்டிருப்பவர் பரிதாபப்படுவதற்குமான இடைவெளி போன்றது.
பெண்கள் மீதான அதுவும் குறிப்பாக ஈழவிடுதலைக்காகக் களமாடிய பெண்போராளிகள் மீதான உடலரசியல் வைக்கும் ஆண் படைப்பாளிகள் பற்றிய உங்கள் மதிப்பீடு எப்படியாக இருக்கின்றது?
கலாச்சாரமாகட்டும், கற்பு என்கின்ற கற்பிதமாகட்டும், போராகட்டும் எதிலும் ‘பெண்னணுடல்’ தான் அரசியலாகின்றது. ஒரு பெண்ணை தாக்குவதற்கு கடைப்பிடிக்கின்ற சுயம் பேசல், உடை விமர்சனம், நெருங்கிய நபருடன் இணைத்துப் பேசல் போன்று இந்த வரிசையிலானதொன்றே ‘உடலரசியல்’. மற்றையவற்றினை விடவும் ‘உடல்’ என்கின்ற புள்ளியில் தாக்கும் போது அல்லது உடலரசியல் பேசும்போது அது எல்லாவற்றினையும் விட உள, சமூக தாக்கங்களை ஏற்படுத்திவிடுகின்றது. இலகுவாக குறிப்பிட்ட பெண் மட்டுமல்ல அவள் மட்டத்து பெண்களனைவரதும் அடையாளமாகியும் போய்விடுகின்றது. இதைக் காலங்காலமாக பொதுதளத்திற்கு வருகின்ற பெண்கள் அனைவரும் எதிர்கொண்டுதான் வந்துள்ளார்கள். இதில் பெண்போராளிகளின் மீதான உடலரசியலில் வியப்பேதுமில்லை.
எப்படி ஒரு போரில் இராணுவத்தால் பெண்ணுடல் வன்முறைக்குட்பட்டு குருதியில் தோய்க்கப்படுகையில் என்னுள் கோபம் கிளர்ந்தெழுகின்றதோ அதனை விடவும் ஒருபடி அதிகமான தார்மீகக்கோபம் பெண்போராளிகள் மீது உடலரசியல் செய்கின்ற படைப்பாளிகள் மேலுமுண்டு. வன்முறை செய்கின்றவனுடைய ஆணுறுப்பிற்கும் இவர்களது கையிலுள்ள பேனாக்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.
அண்மையில் அகரமுதல்வன் எழுதிய ‘சாகாள் ‘ என்ற கதை சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்ததே. இதுபற்றிய உங்கள் மதிப்பீடுதான் என்ன?
என் மதிப்பீட்டினைச் சொல்வதற்கு முன் அகரமுதல்வன் போன்றவர்களை வளர்த்துவிட்ட இந்த சமுகம்மீதுதான் என் முதல் பார்வையை வைக்க விரும்புகின்றேன். தமக்குப் பிடித்த மாதிரி எழுதியபோது தலையில் வைத்தாடியவர்கள் தற்போது ‘பெண் உடல்’என்கின்ற போது அவரைத் தடால் என்று கீழே போட்டு விட்டார்கள். இது போராளிகள் மீது வைக்கப்பட்டதால் என்பதல்ல எந்தப் பெண்மீது வைத்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பார்கள். ஆனால் இன்று அகரமுதல்வனை விமர்சிப்பவர்கள் எல்லாம் ‘சாகாள்’ இன் கருத்துணர்ந்து அதன் தார்ப்பரியம் உணர்ந்துதான் விமர்சிக்கின்றார்கள் என்று நினைத்தால் அதனைவிட மடமை வேறில்லை. எப்படி நம் தமிழ் பெண்கள்பற்றி அதுவும் கற்பு (இதன் அர்த்தம் கூட தெரியுமோ என்னவோ) குறித்துப் பேசலாம் என்கின்ற ஆவேசமே தவிர வேறில்லை.
‘சாகாள்’ என்னளவில் அகரமுதல்வன் இதை எழுதுவதற்கும் முன்வைப்பதற்கும் என்ன அரசியலை கொண்டிருந்தாரோ தெரியாது ஆனால் அதில் வருகின்ற சிவகாமிகள் பலரை நானும் என் ஊடக அனுபவத்தில் சந்தித்திருக்கின்றேன். இத்தகைய சிவகாமிகளை விபரிப்பதை விடவும் அல்லது விபரிப்பதன் மூலம் ஒட்டுமொத்த பாலினரது எதிர்காலத்தினை கேள்வியாக்குவதை விடவும் மௌனித்திருந்திருக்கலாம். அதேபோல் ‘சாகாளை’ வாசித்து விமர்சிப்பதை விடவும் அகரமுதல்வனுடன் சொற்போர் புரிவதை விடவும் ஓரினத்திற்காக போரிட்டவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் என்ன செய்திருக்கின்றோம் என்று எம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள ‘சாகாள்’ கேள்வியெழுப்புவாள் எனின் அவள் என்றும் சாகாள்.
வினாவின் ‘ சாகாள் பற்றிய மதிப்பீடு’ என்பதை விடுத்து இதை மௌனமாக தாண்டுவதுடன் ‘சிவகாமியை ஏற்க தயாராக இருக்கின்றோமா’ என்கின்ற வினாவினை மட்டும் ஒவ்வொருவர் மனதுள்ளும் எழுப்பிக் கடக்கின்றேன்.
யுத்தகாலத்தின் பின்னர் தமிழர் தாயகத்தில் ‘கலாச்சார சீரழிவுகள்’ பெருகி விட்டன என்று புலம் பெயர்ந்தவர்கள் ஓர் பாரிய குற்றச்சாட்டை தாயகத்தில் இருப்போர் மீது வைக்கின்றார்கள். இது குறித்த உங்கள் பார்வைதான் என்ன?
இதனை நானறிந்த வகையில் எந்தப் புலம்பெயர்ந்தவர்களும் பகிரங்கமாக முன்வைக்கவில்லை. ஒருவேளை அவர்கள் அப்படியொரு கேள்வியெழுப்பியிருந்தால் புலம்பெயர்ந்தவர்கள் இக்குற்றச்சாட்டினை முன்வைப்பதற்கு தகுதியானவர்களா என்றதொரு கேள்வி என்னிடமிருக்கின்றது. ‘காலாச்சாரம்’ என்பது காலத்திற்கு காலம் மாற்றமடைகின்றதொன்றுதானே. இங்கு வேட்டி, சேலை கட்டியவர்கள் அங்கு போயும் இதையே அணிகின்றார்களா? முன்னர் சமுதாயத்திற்காக வெளியில் தங்கள் குடும்ப பிரச்சினைகளை சகித்து வாழ்ந்தவர்கள் இன்று சிறு சிறு விடயங்களுக்கும் விவாகரத்து வாங்கவில்லையா? முன்னர் வெள்ளி தோறும் கோயில் போனவர்கள் இன்று வருஷத்தில் இரு முறைகளாவது போகின்றார்களா? இல்லையே… வேலைப்பளு, நவீன மாற்றங்கள் நமது பழக்கங்களையும், கலாச்சாரங்களையும் தீர்மானிக்கின்றன. அப்படியிருக்கும்போது யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள், கல்வி வளர்ச்சிகள் சிலது பழக்கங்கங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதனை ‘கலாச்சார சீரழிவு’ என கொள்வது தவறு.
ஒருவேளை அவர்கள் உறவுநிலைப் பிறழ்வுகளைக் கலாச்சார சீரழிவு என மேற்கோள்காட்டின் அது இங்கு மட்டுமல்ல புலம்பெயர் சமூகத்திலும் தானுள்ளது. மற்றும்படி தாயகத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை மறுக்க முடியாததொன்று. இதற்கு போருக்குப் பின்னரான உளவியல் தாக்கங்கள், திடீரென ஏற்பட்டுள்ள கட்டுப்பாடற்ற சூழல் போன்றவற்றினையும் குறிப்பிடலாம். ஆனால் அதற்காகக் ‘கலாச்சார சீரழிவு’ என்கின்ற சொற்றொடரை பாவிப்பது அதீதம்.
ஆனால் வடக்கு கிழக்கிலேயே அதிகமான மதுபாவனை நுகர்வோர்களும் அதிக கருச்சிதைவுகளும் நடந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றனவே?
மறுக்க முடியாத உண்மை. இதில் கலாசாரம் எங்கே சீரழிகின்றது. எம் சமுகத்தில் இவை பற்றிய பார்வை எப்படி இருக்கின்றது என்பதைத்தான் முதலில் ஆராய வேண்டுமேதவிர இவற்றைக்கொண்டு கலாசாரம் என்கின்ற ஒன்றினை எடைபோட்டிட முடியாது. இவை சீரழிவல்ல எம் சமுதாய வளர்ச்சியின்மை. நம் திரைப்படங்களாகட்டும், படைப்புகளாகட்டும் குடிப்பவர்களைக் கதாநாயகர்களாகத் தான் காட்டுகின்றது. போதாதற்கு உடல் வெப்ப சீர்படுத்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘மதுபாவனையை’ காதல் தோல்வியின் அடையாளமாக, தாம் புரிந்த வன்முறைகளிலிருந்து தப்புவதற்கான சாட்டாக, வெற்றிக்களிப்புகளின் உச்ச வெளிப்பாடாக ஆக்கிக்கொண்டவர்கள் நாம்தானே. அதே போல் ‘கருச்சிதைவு’ என்கின்றோமோ அந்த கரு என்கின்றதைச் சிதைக்காமல், கருக்கொள்ளாமல் இருப்பதற்கான பாதுகாப்பு முறைகளைக் கற்பித்துக்கொடுக்காமல், அல்லது அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் ‘பாலியல் கல்வி’யை ஏதோ பாதகச்செயல் போன்ற பார்வை பார்க்கின்றவர்கள் நாம். இப்படி அடிப்படையான கருத்துக்களை விதைத்து விட்டும், சரியான முறையில் இளையவர்களை வழிநடத்தாமல் விட்டுவிட்டும் இன்று அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை கொண்டு அதைக் ‘கலாசாரச் சீரழிவு’ என்போமாகில் நம்மை விட முட்டாள்கள் வேறில்லை. இங்கு விளைவுகளை புள்ளிவிபரங்களாக சேகரிக்க தெரிந்த நமக்கு இவற்றினை தீர்ப்பதற்கான ஆரம்பப் புள்ளியை இடத்தெரியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
தாயகத்தில் வேலை செய்கின்ற இடங்களில் பெண்களின் நிலை எப்படியாக இருக்கின்றது?
இங்கு நீங்கள் வினவியுள்ள ‘தாயகம்’ என்பது ஈழத்தினை மட்டுமன்றி முழு இலங்கையையும் குறிப்பிடுவதாக கொண்டு இதற்கு விடையளிக்க விரும்புகின்றேன். அலுவலகங்களில் நடைபெறுகின்ற வன்முறைகளில் சொல்லப்பட்டவைகளை விடவும் சொல்லப்படாதவை அதிகம். பேருந்தில் ஒருவர் உரசினால் உரத்த குரலில் ஏசுவதற்கே கூசுகின்ற ஒரு சமூகத்தினைத்தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோமே. அப்படியே கத்தினாலும் உரசினவரை விட்டுவிட்டு உரசுப்பட்ட பெண்ணைப் பார்வைகளால் சுடுகின்றவர்கள் அல்லவா நம்மவர்கள். இந்த விடயத்திற்கே இப்படியெனும்போது அலுவலக வன்முறைகளை ஒரு பெண் வெளியில் சொன்னால் அதை எத்தகைய கண்கொண்டு பார்ப்பார்களோ என பயந்து சொல்லாமலேயே சகித்து வாழ்பவர்கள் அதிகம். வெளியில் சொல்லிவிட்டாலும் அப்பயொன்றும் தண்டனைகள் விஷமிகளுக்கு கொடுக்கப்பட்டு விடுவதில்லை. ஏன் சொன்னாய் சமாளித்துப்போ என்கின்ற நண்பர்களும், வேலை தேவையில்லை வீட்டிலிரு என்று சொல்கின்ற குடும்பங்களும், உனக்கு குறிப்பிட்ட நபருடன் தொடர்பிருக்கின்றது அது வெளியில் தெரிந்தவுடன் நடிக்கின்றாய் என்று சொல்கின்ற மேலிடங்களுந்தான் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சுற்றியுள்ள சமூகம். இதைத்தாண்டி ஊடகத்திற்கு போனாலும் பாதிக்கப்பட்டவள்பற்றி விரிவாகவும் வன்முறை புரிந்தவர்களை ஒரு வரியிலும் சொல்லிவிட்டுப் போகின்றவையாக தான் பெரும்பாலான ஊடகங்களிருக்கின்றன.
இவ்வளவு ஏன் ‘வன்முறை’ குறித்து கொட்டையெழுத்தில் முன்பக்கத்தில் பிரசுரிக்கின்ற பத்திரிகை நிறுவனங்கள், ஊடகங்களில் கூட பெண்கள்களுக்கு வன்முறைகள் இழைக்கப்பட்டுக்கொண்டு தானிக்கின்றன.
தாயகத்தில் உள்ள இன்றைய தலைமுறை பெண்கள் அடிப்படைச் சிந்தனைகளில் உச்சநிலை அடைந்திருக்கின்றார்களா?
பெரும்பாலானவர்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றுதான் கூறவேண்டும். இன்றையவர்கள் தம்முடைய பிரச்சினைகளை அணுகுவதற்கான வழிமுறைகளை தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுக்குப்போதிய விழிப்புணர்வும் அளிக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றது.
பெண்ணுக்கு எதிரியாக யாரை அடையாளப்படுத்துகின்றீர்கள்?
முதல் எதிரியே அவளுக்கு அவள்தான். உளரீதியான உறுதியின்மை, எதிர்த்து போராடப்பயப்படுதல் அல்லது இன்னொருவர் தன்னை பாதுகாக்கக்கூடும் என்கின்ற மனநிலையைத் தன்னுள் வளர்த்துக் கொள்ளல் என்பன அவளுக்குள்ளேயே அவள் உருவாக்கி வைத்திருக்கின்ற எதிரி. இதை கட்டுடைத்து வெளிவந்தாலே போதுமானது. அடுத்தவரை குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை.
இளையவரான உங்களின் பார்வையிலே பெண்ணியம் பற்றிய புரிதல்தான் என்ன?
‘ஆதிகாலத்தில் வேட்டையாடி மனிதன் வாழும் போது மாதவிடாய் நாட்களில் பெண்ணைக் குகைகளில் விட்டுச்செல்வான். காரணம் குருதிப்பெருக்கின்போது ஏற்படும் வாடையில் மிருகங்கள் தங்களது இருப்பிடங்களை அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக. வீட்டில் விடப்பட்ட பெண் குழந்தைகளைப் பராமரிக்க ஆரம்பித்தாள்.’ இப்பகுதியை எங்கோ வாசித்ததாக ஞாபகம். இது அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதான விடயமுங்கூட. பின்னர் இதன் விளக்கம் புரியாமல் அல்லது வழமையை மாற்றிக்கொள்ள முடியாமல் போனமை ஒருவேளை பெண்ணுக்கு வீடும் ஆணுக்கு வெளியும் என்று ஆகியிருக்க கூடும். ஆனால் அதுவே பெண்ணடிமைத்தனத்திற்கு வித்திட்டிருக்குமோவென எண்ணத்தலைப்படுகின்றது. இவ்வாறு பல விடயங்கள் உண்டு. இதைப் புரிந்து பெண்ணுக்கும் ஆணுக்கு நிகரான உரிமை உண்டு என நிலைநாட்டுவதே என்னளவில் பெண்ணியம்.
அதற்காக என்னைச் சுற்றியுள்ள ஆண்கள் செய்கின்ற தவறுகளை நானும் பெண்ணியம் என்கின்ற பெயரில் செய்துவிடக்கூடாது என்கின்ற விடயத்தில் மிகவும் உறுதியாகவிருக்கின்றேன். அடுத்த விடயம் பெண்ணியம் பேசுகின்றோம் என்கின்ற ரீதியில் ஆண் பாலினத்தவர் மீதான காழ்ப்புணர்வினை வளர்த்தலிலும் எனக்கு உடன்பாடில்லை. வாழ்க்கை என்பது தனித்திருத்தல் அல்லவே. நாம் ஏதோவொரு வகையில் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றோம். இச் சார்ந்திருத்தல் என்பது அடிமைப்படுத்தல் ஆகிடக்கூடாது. அதேபோல் ஒரு பிரச்சினையை இருபக்கத்திலிருந்தும் ஆராய்ந்து பாலின வேறுபாடின்றி அணுகவேண்டும். பெண்களில் மாற்றத்தினை ஏற்படுத்திச் சீர்செய்வதும் பெண்ணியம் தான். வெறும் எதிர்பாலினர் மீதான குற்றஞ்சாட்டல் அல்ல.
ஆனால் எதிர்பாலினர் மீதான அதிக குற்றச்சாட்டுக்கள்தானே இன்று அதிகரித்துள்ளன?
இதில் ஏதும் கணிப்பு தவறில்லையே…..….. நூறில் தொண்ணூற்றொன்பது பெண்கள் ஏதோவொரு வகையில் வன்முறைக்குட்படும் இன்றைய நிலையில் இது சாத்தியமே. வீட்டில் தொடங்கி அலுவலகம்வரை எதிர்ப்பாலோரது வன்முறைகள் இல்லாமலில்லை. ஆனால் அவர்களை மட்டுமே வன்முறைக்கு மேற்கோள் காட்டுவதைத்தான் நான் சாடுகின்றேன். எல்லாவற்றிற்குமே இரு பக்கங்கள் உள்ளன. அந்த இரு பக்கங்களையும் நோக்க வேண்டும் என்பதே வாதம்.
மூன்றாம் பால் இனத்தவர் மீதான உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?
‘மூன்றாம் பால்’என்கின்ற சொற்பிரயோகமே தவறு என்பது என் வாதம். ‘மூன்றாம் பாலினர்’என்பது திருநங்கை, திருநம்பிகளை குறிப்பிடின் முதலாம் பாலினர் யார்? இரண்டாம் பாலினர் யார்? பால் சமத்துவத்திற்காக போராடுகின்ற இன்றைய நிலையில் பாலினத்தரப்படுத்தல் தேவையற்றதொன்று.
என்னளவில் இவர்கள் குறித்து விழிப்புணர்வு எம் சமூகத்திற்கு இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றது. இவர்களது உடல், உள மாற்றங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்களும் கடவுளின் படைப்பே. இவர்கள் மீதான தவறான பார்வையினால் இவர்களை இவ்வளவு காலமும் முடக்கிவைத்து விட்டோம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
மாற்றுப்பால் திருமணத்தை நீங்கள் வரவேற்கின்றீர்களா?
இது குறித்தான இருவித பார்வைகள் எனக்குண்டு. விஞ்ஞான பூர்வமான பார்வையில் இது அவர்களது உள, உடல் தேவையை பொறுத்தது. ஆனால் இன்னொரு பார்வையில் இத்தகைய திருமணங்களால் குடும்பம் என்கின்ற கட்டமைப்பு உடைபடக்கூடும்.
இன்றுள்ள வாழ்வியலில் சட்டப்படி திருமணம் செய்யாது ஆண்களும் பெண்களும் ஒன்றாக வாழ்வது சாதாரணமாகி வருகின்றது. இதுபற்றிய உங்கள் பார்வை என்ன?
இத்தகைய வாழ்வியலில் பொருளாதார, சமூக ரீதியான அனுகூலங்கள் உண்டு. தனிமனித சுதந்திரத்திற்கும் இத்தகைய வாழ்வியலில் நிறைய சுதந்திரங்கள் உண்டு. ஆனால் என் பார்வையில் இத்தகைய சுதந்திரங்கள், சட்டரீதியற்ற உறவுமுறைகள் சில தாக்கங்களை பிற்காலங்களில் ஏற்படுத்துகின்ற நிலைமை காணப்படுகின்றது. இதில் மிக முக்கியமானதொரு விடயமாக குழந்தை பெறுதல் மற்றும் வளர்த்தல் தொடர்பான நடைமுறை, சட்டசிக்கல்கள் என்பவற்றினை குறிப்பிடலாம்.
நீங்கள் ஓர் ஊடகவியலாளராக தாயகத்தில் இருக்கின்றீர்கள். உங்களால் இந்த துறையில் சுதந்திரமாக இருப்பதாக உணர முடிகின்றதா?
இதற்கு ‘இல்லை’ என்று சொல்லிவிட்டால் அது என் தோல்வி என்று தான் பார்க்கின்றேன். 30 வருட போரை சந்தித்த ஒரு நாட்டில் ‘ஊடகசுதந்திரம்’ என்பது அவ்வளவு இலகுவாக இருக்காது. ஊடகவியலாளராக பணிபுரியும்போது பலவற்றினையும் எதிர்நோக்க வேண்டும் என்று அறிந்து கொண்டுதான் இதனை நேசிக்க ஆரம்பித்தேன். ஒரு வகையில் இவ் எதிர்ப்புக்களை அடைவுகளாக கொண்டுதான் செயற்படுகின்றேன். ஆனால் நான் ‘பெண் ஊடகவியலாளர்’ அல்லது ‘தமிழ் ஊடகவியலாளர்’ என்கின்ற பார்வையில்தான் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.
ஊடகவியல் துறையில் பெண் என்ற காரணத்துக்காக உங்கள் நிலைப்பாடுகள் மறுதலிக்கப்பட்டிருக்கின்றவா?
ஆம். இதற்கு ஒரு உதாரணமாக நான் செய்தியாசிரியர் தேர்வுக்கு சென்றிருந்த போது அவர்கள் என்னை மறுத்தமையைக் குறிப்பிடலாம். இப்படி பல கசப்பான உதாரணங்கள் உண்டு. இரவில் பெண் பணிபுரியக்கூடாது, பாதுகாப்பு குறைவு, என பலவற்றினைக் காரணமாக அவர்கள் அடுக்குகின்றார்கள்.ஒரு ஊடகவியலாளருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஊடகநிறுவனங்கள் எப்படி நாட்டின் நாலாவது தூணாகப் போகின்றது என்கின்ற கேள்வியும் எனக்குண்டு.
‘தமிழ் ஊடகவியலாளர்’ என்கின்ற பார்வையில் தான் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றதாக சொல்கின்றீர்கள். குறிப்பாக எப்படியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றீர்கள்?
சிறுபான்மையினரது பிரச்சினைகளை யாரெல்லாம் வெளியில் கொண்டு வருகின்றார்களோ அவர்களை தீவிரவாதிகளாக பார்க்கின்ற மனப்பாங்கு அநேகர்களிடம் இருக்கின்றது. இது இலங்கைக்கும் பொருந்தும். இந்நிலையில் அடக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழினத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற அல்லது வெளிக்கொண்டு வந்த ‘தமிழ் ஊடகவியலாளர்’எத்தகைய அழுத்தங்களை கடந்திருப்பார்கள் என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியது. அடுத்தது மொழிப் பிரச்சினை. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பெரும்பான்மையினத் தலைவர்கள் மற்றும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், இராணுவத்தினரிடமிருந்து தப்புவதற்கும் மொழி தெரிந்திருக்க வேண்டும். இது அடுத்த சவால். இதனை விடவும் ‘தமிழ் ஊடகப்பெண்கள்’ குறித்த சமூகப் பார்வை. எந்த ஈழத்தமிழ் ஊடகத்திலாவது பெண் ஆசிரியர்கள் இருக்கின்றார்களா? பொதுவெளிக்குப் பெண் வந்துவிட்டாலே அவளைத் தாறுமாறாக விமர்சிப்பதில் எம்மவர்களது பங்கு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலை ஆங்கில ஊடகங்களிலோ அல்லது சிங்கள ஊடகங்களிலோ ஒப்பீட்டளவில் குறைவு. ஆக ‘தமிழ் ஊடகவியலாளர்’ என்றாலே சவாலானதொரு விடயம் தானே ?
போர் இருந்த பொழுதும் இல்லாத பொழுதும் ஊடகசுதந்திரமானது குறிப்பிடும்படியான மாற்றங்களைக் கண்டுள்ளதா?
இன்றைய ஊடகசுதந்திரத்தின் வளர்ச்சியை காட்டுவதற்கு ‘புனைப்பெயர்’ என்கின்ற குணங்காட்டியைக் குறிப்பிடலாம். முன்னர் பலர் அழுத்தங்கள் காரணமாக புனைப்பெயரில் எழுதினார்கள் இன்று அநேகர்கள் தம் சொந்தப்பெயரில்தான் எழுதுகின்றார்கள். மாற்றங்களை புரிந்துகொள்ள இதுவே போதுமானது.போர் இருந்த பொழுது ஒரு பகுதியினர் மட்டுமே வெளிக்கொணர நினைத்த விடயங்களை இன்று பலரும் பகிரங்கமாக முன்வைக்கின்ற அளவு ஊடகசுதந்திரம் மாற்றமடைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் முன்னரைவிட இப்போதெல்லாம் இருபக்கத்தவறுகளும் விமர்சிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு போர் இருந்தபோது விடுதலைப்புலிகளை விமர்சித்தவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. அரசாங்கத்தினை விமர்சித்தவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இன்று இந்நிலை இல்லை. இதற்கு சமூக ஊடகங்களின் வளர்ச்சியுமொரு காரணம்.
ஒரு காலகட்டத்தில் சாதீய அடக்கு முறைகளில் இருந்து மீளுவதற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்த பலர் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறினார்கள் .ஆனால் இன்றோ சாதிய அடக்குமுறையானது கிறிஸ்தவ சமூகத்தையும் விட்டுவைக்கவில்லை என்றவோர் குற்றச்சாட்டு உண்டு. இந்த விடயத்தை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?
‘தாழ்த்தப்பட்ட சமூகம்’ யார் தாழ்த்தினார்கள்? ஏன் தாழ்த்தினார்கள்? என்பதற்கே எமக்கு விடை தெரியாது. நானறிந்த வகையில் பதவிகளுக்கு ஆசைப்பட்டுத்தான் மதம் மாறினார்கள் என்று அறிந்திருக்கின்றேன். ஒருவேளை ஒரு சிலர் தவிர ஏனையவர்கள் பக்தியினாலும் மாறியிருக்க கூடும். இவ்வாத பிரதிவாதங்கள் எதுவுமே உறுதிப்படுத்தப்பட்டவையல்ல. அடுத்தது கிறீஸ்தவத்தில் நம்பிக்கை அல்லது கொள்கை அடிப்படையில் தான் பிரிவுகள் உண்டே தவிர சாதியம் இருப்பதாக தெரியவில்லை.
கிறிஸ்தவத்தில் நம்பிக்கை அல்லது கொள்கை அடிப்படையில் தான் பிரிவுகள் உண்டே தவிர சாதியம் இருப்பதாக தெரியவில்லை. என்று சொல்கின்றீர்கள் ஆனால் இதுவரையில் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவில் இருந்து யாரும் கிறிஸ்தவ மடாலயங்களின் ஆயர்களாக வரவில்லையே?
இந்த வினாவிலேயே குழப்பம் இருப்பதாக படுகின்றது. வடக்கில் இன்றுங்கூட சாதிப்பிரிவினைகள் உண்டெனினும் கிழக்கில் சாதியப்பிளவுகள் இல்லை. அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம்வரை கிழக்கில் சாதியடிப்படையில் எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை. இது முதலாவது விடயம். அடுத்தது கிறிஸ்தவத்தினை பொறுத்தளவில் இறுதி முடிவுகளை எடுப்பவர் போப் ஆண்டகை அவர்கள். இது ஆயர்களின் நியமனங்கள் உட்பட அனைத்திற்கும் பொருந்தும். அப்படியிருக்கும் போது ஆயர் தெரிவிலும் சாதியம் இருக்கின்றது என்பதை ஏற்கமுடியாது. ஆனால் சில ஆயர்கள், குருக்கள் சாதிப்பிரிவினை அடிப்படையில் இயங்குவதாக அறிந்திருக்கின்றேன். ஆதாரங்கள் இல்லை. அத்துடன் இது அவர்களது தனிப்பட்ட தீர்மானங்களின் வெளிப்பாடே தவிர கிறிஸ்தவத்தின் நிர்வாக அமைப்பின் வெளிப்பாடல்ல.
‘அண்மையில் குட்டி ரேவதி, நிர்மலா, கொற்றவை, அர்ச்சனா போன்ற பெண்ணியஎழுத்தாளர்கள் ‘நாம் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் ஆனால் சாதிப்படுகொலைகளைக் கண்டிக்கின்றோம்’ என்று ஓர் நிலைத்தகவலை சமூக வலைத்தளங்களில் பரவிட்டார்கள். ஆனால், இது சாதீயம் மீதான அவர்களது பார்வையை கேள்விக்குட்படுத்துகின்றதே?
நானும் இத்தகவலை பதிவிட்டு ‘எது உயர்சாதி? யார் ஆதிக்கசாதி?’ எனக் கேட்டிருந்தபோது கொற்றவை இதற்கு ‘இதன் முழுவிளக்கம் தெரியாமல் குறிப்பிட்ட இணையதளம் தம்மை அணுகி தங்களது பெயரையும் இணைத்து கொள்ளவா? என கேட்டபோது தாங்கள் சம்மதித்ததாகவும் அதன் பிறகு இந்நிலைத்தகவலைப் பார்த்ததாகவும் இது குறித்து தாங்கள் வினவியதற்குத் தளப்பொறுப்பினர் பகிரங்க மன்னிப்பு கோரியதாகவும் அதை அகற்றும் படியும் தெரிவித்ததுடன் ஏன் தன்னிடம் இது குறித்து வினவவில்லை’ என்றும் கேட்டிருந்தார். இது குறித்த விளக்கத்தில் என்னளவில் குழப்பங்கள் பலவுண்டு.
நான் உயர் சாதியினை அல்லது ஆதிக்க சாதியினை சேர்ந்தவள், நான் ஆணவக்கொலையை கண்டிக்கின்றேன்’ என சொல்வதைவிட ‘நான் சாதியற்றவள்…’ என்று தொடங்கி முடித்திருந்திருக்கலாம். எதுவாகினும் தன்னைத் தானே உயர் அல்லது ஆதிக்கம் எனமுன்ன்னர் எது உயர்? எப்படி உயர்வாக முடியும்? என்று அலசவேண்டும். இதையும் தாண்டி அவர்கள் அப்படியொரு பதிவிற்கு சம்மதமளித்திருப்பின் அது ‘படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்’ என்கின்ற விடயம் போன்றதே.
ஈழத்து அரசியல் நிலைப்பாடுகள் பெண்விடுதலைக்கு எத்தகைய பங்களிப்பினை வழங்கிஇருக்கின்றன?
ஈழத்து அரசியல் ஆகட்டும் இலங்கை அரசியலாகட்டும் ஏன் எந்த நாட்டு அரசியலாகட்டும் பெண்விடுதலைக்கான பங்களிப்பிளை அதுவாக வழங்கிவிடவில்லை, வழங்கப்போவதுமில்லை. போராடித்தான் வாங்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் ஓரளவு சமவுரிமை அரசியலில் கிடைத்திருக்க கூடும் என்பது என் வாதம். ஆயுதப் போராட்டத்திலேயே சமவுரிமையை பெண்களுக்கு வழங்கியவர்கள் அல்லவா? ஆனால் இன்றைய அரசியல் தலைவர்கள் அப்படியொன்றும் தாமாகவே தரும் நிலைப்பாட்டில் இல்லை. இதற்கு அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவை நல்லதொரு உதாரணம். ஒரு பெண் பிரதிநிதி கூட அவ்வமைப்பில் இல்லை. போருக்கு பின்னர் தமிழ் சமூககட்டமைப்பினை பொறுத்தளவில் அதிகம் பெண்களே இருக்கின்றபோதும் ஒரு பிரதிநிதி அங்கில்லை என்பதே போதுமே நம் ஈழத்து தமிழ் அரசியலில் பெண்களின் பங்களிப்பைப்பற்றிப் புரிந்துகொள்வதற்கு. இதற்கு மேல் இலங்கை அரசியலை ஆராயாமலே முடிவுக்கு வரலாம்.
பிரதிநிதிகளே இல்லாதபோது அல்லது மிக சொற்பமாக இருக்கும் போது இவர்களது அரசியல் அமைப்புக்கள் எப்படி பெண்விடுதலைக்கு பங்களிப்பினை வழங்கப்போகின்றன?
தமிழ் முஸ்லிம் முரண்கள் பற்றிய உங்கள் அவதானம் என்ன?
‘முரண்கள்’ என்று முதல் ஆராய்வதை விட முரண்களுக்கு முன்னரான நிலையை சிறிது அலச நினைக்கின்றேன். எனக்கு இரு தலைமுறைகளுக்கு முந்தின குடும்ப உறவினர்கள் பேசும்போது அவர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக முஸ்லிம் நபர்கள் தானிருந்திருக்கின்றார்கள். அவர்களுள் தனிநபர் என்கின்றதையும் தான் குடும்ப நட்பு என்கின்ற ரீதியில்தான் உறவுகள் இருந்திருக்கின்றன. அடுத்த தலைமுறையில் இருந்துதான் பிரச்சினைகள் ஆரம்பித்திருக்கின்றன. இதையே அரசியல் ரீதியாக பார்க்கும்போது முன்னர் எமக்குப் பொதுஎதிரி ‘ஆங்கிலேயர்’ இக்கால கட்டத்தில் எம்முள் பிணைப்பு இருந்திருக்கின்றது. பின்னர் அதுவே நமக்குள் பிளவுகளாக வெடித்திருக்கின்றது. எனக்கு இது ‘அடையாளத்தினை முன்நிறுத்தல்’ என்கின்ற அடிப்படையிலானதொரு பிளவாகவேபடுகின்றது.
இன்று ஏற்பட்டுள்ள தமிழ் - முஸ்லிம் பிளவுகளுக்கான கீறல்கள் எங்கே, எப்படி உருவாகின என அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுண்டு. சிறுபான்மையினர் பிளவுபடும்போது அது பேரினவாதிகளுக்கு களமமைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. பலர் இதை வைத்துத்தான் அரசியலும் செய்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் - முஸ்லிம் உறவுகள் பலப்படும் போது அது தமிழ் - முஸ்லிம் - சிங்கள உறவு என விரிவடைவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும். 1948 ற்கு முன் எப்படி எமக்கு பொது எதிரி இருந்ததோ அதைப்போல் இன்று ‘பொது எதிரிகள்’ காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
சமகாலத்தில் ஒரே தாய் மொழியை கொண்ட இவ்விரு இனங்களின் முரண்கள் எந்த அளவுக்கு நீர்த்துப்போய் உள்ளன?
இங்கு ‘ஒரே தாய்மொழி’ என்பது பிழை என்றே எண்ணுகின்றேன் .முஸ்லிம்கள் மத்தியகிழக்கினரின் வம்சாவழிகள் அவர்களது தாய்மொழி அரபு. ஆனால் இணைந்து வாழ்தலுக்கான பொதுமொழிதான் தமிழ். ஆக ‘ஒரே மொழி பேசும்’ என்று திருத்திக்கொள்ள வேண்டும். தமிழ் - முஸ்லிம் இன முரண்கள் பின்னரான நல்லிணக்கம் இவற்றிற்கு கிழக்கிலங்கையை உதாரணமாக கொள்ளலாம். 90 காலப்பகுதிகளில் தமிழ் - முஸ்லிம் கலவரம் வெடிப்பதற்கு முன் இரு இனவீட்டு விசேடங்களிலும் இரு பக்கத்தினரும் பங்கெடுப்பர். பொங்கலை முஸ்லீம்களும் வட்டிலப்பத்தினை தமிழர்களும் ருசித்த நாட்கள் இருந்தன. அயலவர்களாக இருந்தவர்கள் 90 இன் பின்னர் தனித் தீவுகளாகிவிட்டிருந்தனர். மட்டக்களப்பு நகரத்தின் ஒரு பக்கத்தில் காத்தான்குடி மறு பக்கம் ஏறாவூர் நடுவில் மட்டு நகர். பிளவின் பின்னர் ஏற்பட்ட கட்டமைப்பு இது. இன்று இரு இனத்தவர்களுக்குமிடையில் சுமுக உறவு நிலவுகின்றது. ஆனாலும் ஒருவித இடைவெளி நிலவியபடிதானிருக்கின்றது. இது வெளிப்பார்வைக்குத் தெரியாவிடினும் மனதளவில் தொடர்கின்றது.
உறவுகள் என்றும் கண்ணாடி பாத்திரம் போன்றவை. கீறல் விழும்வரை உபயோகிக்கலாம். வெடிப்பு வந்த பின்னர் வேண்டுமாயின் ஒட்டி வைத்து அழகு பார்க்கலாமே தவிர மீண்டும் பாவிப்பது கடினம். இது போலத்தான் இன்றும் கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவுகள் தொடர்கின்றன. சிறு அழுத்தம் கூட வெடிப்பை உருவாக்கலாம்.
வடக்கில் இருந்து ஒரே இரவில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
இதற்கு வெளியேற்றியவர்கள், அவர்களது பிரதிநிதிகள், விமர்சகர்கள், ஆதரவாளர்கள் என பலர் பலவித வாத பிரதிவாதங்களை அன்றிலிருந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் இந்த வெளியேற்றத்தினை பற்றி முஸ்லிம் குடும்பங்களுடன் சேர்ந்து பழகிய ஒரு தனிமனிதனை அல்லது மனுஷியைக் கேட்டுப்பாருங்கள் தங்களது கண்டனங்களை தான் தெரிவிப்பர்கள். இதையே தான் ஒரு மனுஷி என்கின்ற ரீதியில் நானும் பார்க்கின்றேன். ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும் ஒரு தனிமனிதனைக்கூட அவன் பரம்பரையாக வாழ்ந்த இடத்திலிருந்து வெளியேற்றியது, அதுவும் ஆயுத முனையில் வெளியேற்றியது மகா தவறு. இதை யாரும் நியாயப்படுத்தினால் நானும் அவர்களிடம் தமிழர்களை இராணுவம் வெளியேற்றியதும் சரி என்றுதான் வாதிடுவேன். இன்று காணிப்பிரச்சினைகள், நில அபகரிப்புக்கள் குறித்து எழுதும்போது நானும் என்னை கேட்டுச் சுயபரிசோதனை செய்து கொள்கின்றேன். இது குறித்த போராட்டங்களை அரசுக்கெதிராக முன்னெடுத்து ‘எம் காணிகளை விடுவியுங்கள்’ என்கின்ற பதாகைகளை காணும் போது நானும் என்னுள் சிரித்துக் கடக்கின்றேன் என்று வடக்கில் முஸ்லிம்களது காணிகளைத் திருப்பி கொடுக்க போகின்றோம் என்று நினைத்த படி….
தமிழ் இலக்கியப் பெருவெளியில் உங்கள் பேனாவுக்கென்று தனிப்பட்ட மொழி ஏதாவது இருக்கின்றதா?
நண்பர்கள், சக எழுத்தாளர்கள் என்னிடம் பேசியமட்டில் என் எழுத்துக்கள் காரமானதாகவும் நிர்வாணமானதாகவும் இருப்பதாகப் பல முறை கூறியிருக்கின்றார்கள். என்னளவில் எதையும் இணைக்காமல் அதனதன் உள்ளடக்கங்களுடன் எழுதுகின்றேன். என்னுடைய அம்மா அடிக்கடி என்னிடம் ஒரு சம்பவம் முடிந்தவுடன் அது குறித்து கோபத்துடன் எழுதாமல், ஆறஅமர எழுதும் படி கூறுவார். காரணம் எழுத்து காரமாக இருக்கின்றதாம். ஆனால் எனக்கும் நினைத்ததை எழுதுகின்றேன் என்கின்ற திருப்தி மட்டும் என்றும் உண்டு. எழுதி முடித்த பின் இதைவிட மென்மையாக எழுதியிருக்கலாம் அல்லது சில சொற்களைத் தவிர்த்திருக்கலாம் என்று வருந்திய நாட்கள் அதிகம்.
ஜீவநதி -இலங்கை.
10 சித்திரை 2016
Comments
Post a Comment